Sunday, May 10, 2020



ஸ்ரீ சைலம்
[மயிலைகிழார் – இளமுருகனார்]

ஸ்ரீ சைலம் என்ற தலம் 1563 அடி உயரமுள்ள மலைமீது வடநாட்டில் கர் நூல் (= கருநில) ஜில்லாவில் தேவார முதலிகள் மூவராலும் பாடப்பெற்றுத் திருப்பருப்பதம் என்ற பெயரோடு விளங்குகின்றது. சிவராத்திரியன்றும் சில தினங்கள் முன்னும் பின்னும் பல்லாயிரக் கணக்கான் மக்கள் இத்தலத்தில் வழிபாடு செய்கின்றனர். இவர்களுள் கன்னாமொழி பேசுவோர் தொகை நூற்றுக்குத் தொண்ணூறிருக்கும். இவர்களனைவரும் இலிங்கதாரிகளான வீர சைவ சமயத்தினர். இவ்வாண்டில் திருவாளர்கள் - இராவ்பகதூர் சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியார், இராவ்பகதூர் க. அரங்க சாமி முதலியார், திருமயிலை கபாலீச்சரம் தருமகர்த்தர் (திரு பொ. சுந்தரமூர்த்தி முதலியார்) ஆகிய நண்பர்களோடு இத் தலத்தைத் தரிசிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது.

சென்னையிலிருந்து பம்பாய் மெயிலில் புறப்பட்டுக் குண்டக்கல் ஜங்ஷனையடைந்து அங்கிருந்து வண்டிமாறி நந்தியால் ஸ்டேஷனுக்குச் சுமார் நண்பகல் பதினெட்டு நாழி கைக்குச் சென்றோம். சென்னைக்கும் நந்தியாலுக்கும் 367 மைல் தூரம். மூன்றாம் வகுப்பு மெயில் சார்ஜ் ரூ 7 - 7 - 0 ஆகின்றது. நந்தியாலில் முழுக்கு, வழிபாடு, உணவு முத லியவற்றை முடித்துத் தனியாக ஒரு மோட்டார்கார் ஏற்படுத்திக்கொண்டு மாலை 4 1/2 மணிக்குப் புறப்பட்டோம். நந்தியாலிலிருந்து ஆத்மகூருக்கு 32 மைல் தூரமுள்ளது. நந்தியாலில் ஒரு பெரிய ஏரியிருப்பதால் நன்செய்ப் பயிர் செழிப்பாயிருக்கிறது. பிறகு வழிநெடுகப் புன்செய்ப் பயிரே காணப்படுகிறது. பருத்தி, கம்பு, சோளம் முதலியன முக்காற் பங்கு வழியிலும், பிறகு ஆத்மகூருக்கு அருகில் உலர்ந்த காடும் காணப்படுகின்றன. ஆத்மகூரிலிருந்து மேற்கே கர்நூலுக்கும், கிழக்கே ஸ்ரீ சைலத்துக்கும் வழிகள் பிரிகின்றன. ஆத்மகூரிலிருந்து ஸ்ரீசைலம் போகும் வழியெல்லாம் வெறுங்காடு. நெடுந்தூரத்துக் கிடையிடையே ஒவ்வொரு சிற்றூர் தோன்றும். சிற்றூர் என்றால் காட்டில் வசிக்கும் வேடர்களின் குடிசைத் தொகுதியே தவிர பிறிதல்ல. ஆத்மகூரிலிருந்து 12 மைல் சென்றால் நாகலூடி என்ற இடம். இதுவரையில் சமமான பூமி. நாகலூடியிலிருந்து 5 மைல் தொலைவிலுள்ள ரொல்லபெண்டா வரையில் மலைச் சரிவில் ஏற்றமான பாதை மிகக் குறுகலாகவுள்ளது. ரொல்ல பெண்டாவிலிருந்து 8 மைல் தொலைவில் பெத்த செருவு (= பெரிய ஏரி) என்ற இடமுள்ளது. இந்த 8 மைல் வழியும் சிறிது செங்குத்தான வளைவுகள், ஏற்றம், இறக்கம்,கணவாய்க் குறுவழி முதலியன நிரம்பிய மலைப்பாதை (Ghat Section) ஆகும். இரண்டு பக்கங்களிலும் சந்தன மரங்களும் மூங்கில் மரங்களும் அடர்ந்துள்ளன.

நூற்றுக் கணக்கான மாட்டு வண்டிகளைக் கடந்து இக்குறுகிய வழியிற் செல்ல வேண்டியிருந்தமையால் நாகலூடியிலிருந்து பெத்த செருவுக்கு (13 மைல்) போக ஏறக்குறைய 7 மணி நேரம் ஆயிற்று. இரவு இரண்டு மணிக்குப் பெத்த செருவில் கர்நூலிலிருந்து வந்த நண்பர்களைக் கண்டோம். பெத்த செருவில் காட்டிலாகா (Forest Department) அதிகாரிகட்குப் பல விடுதிகள் உண்டு. பெரிய கொட்டகைகள் கட்டி ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவசமாகச் சோறு போடுகிற தருமம் மிகுதியாக நடக்கிறது. இவ்விடத்தில் வேறு வழியில் உணவு கிடைப்பது மிகமிகக் கடினம். இவ் வாண்டில் மழையின்மையால் பெத்த செருவில் எரி நிறைக் கனைய செல்வம் ஒரு சிறிதுமில்லை. குடிப்பதற்கும் தண்நீர் கிடைப்பதரிதாயிற்று. “நீள்ளு லேவு” என்ற கூக்குரல் வழி முழுவதும் கேட்டது.

மறுநாட் காலையில் மலையேறப் புறப்பட்டோம். பெத்த செருவிலிருந்து ஸ்ரீ சைலம் திருக்கோயிலுக்கு 9 3/4 மைல். இதில் முதலில் ஒரு மைல் தூரம் மோட்டார் செல்லும். பிறகு எல்லாம் கறடு முறடான படிகளுள்ள ஏற்றமான வழி. ஆறு மைல் சென்றால் பீமினி கொளனு என்ற ஒரு சிறு ஓடையைக் காணலாம். இதில் முழங்காலளவு தண்ணீர் தேக்கமாகவும் கலக்கமாகவும் உள்ளது. இங்கிருந்து ஒரு மைல் தூரம் மிக மிகக் கடினமான செங்குத்தான வ. இஃதே ஸ்ரீசைல யாத்திரையில் கடுமையான பகுதி. இவ் வழியின் இறுதியில் கைலாசத்வாரம் என்று ஒரு மிகச் சிறிய அரைகுறையான கோபுர வாயில் உள்ளது. இங்கே ஜில்லா போர்டு அதிகாரிகள் இரண்டு தண்ணீர்த் தொட்டிகள் கட்டி வைத்திருக்கிறார்கள். கைலாசத்வாரத்தி லிருந்து ஸ்ரீசைலம் கோயில் 2 3/4 மைவிலிருக்கிறது. இடையில் (சரி பாதி வழியில்) சாக்ஷி கணபதி என்ற ஒரு சிறு விநாயகர் ஆலயம் உண்டு. இந்த 2 3/4 மைல் வழியும் மிகச் சுலபமானது.

ஸ்ரீ சைலம் ஸ்ரீ சைலம் திருக்கோயில் 660 அடி நீளமும் 510 அடி அகலமுமான நடுத்தர விஸ்தீரணமுள்ளது. 20 அடி உயர முள்ள திருமதில்களில் புராண வரலாற்றுச் சிற்பங்கள் (puranic panel legends) மிகுந்துள்ளன. கோயிலுக்குள் யாத்ரீகர்கள் தங்குவதற்கு நூற்றுக்கணக்கான அறைகள் வாடகைக்குக் கிடைக்கும். கோயிலுக்கு மேற்கில் ஒரு குளமுண்டு. கோயிலுக்குள் இரண்டு சிறிய தீர்த்தங்களுண்டு. தல விருக்ஷம் அத்தி மரம். வழியெல்லாம் முள் நிரம்பி யிருப்பதால் கோயிலுக்குள்ளும் கருப்பக்கிரகம் வரையில் செருப்பு உபயோகிக்கப்படுகிறது இவ்வூரின் தனிச் சிறப்பு.

மூலஸ்தானத்தில் ஒரு சாண் உயரமுள்ள இலிங்க மூர்த்தியை அனைவரும் தொட்டு வழிபடலாம். அர்ச்சகர் இலிங்கதாரியான ஜங்கமர். மூலஸ்தானத்தின் பின்புறமாக மேற்கில் இரண்டாம் பிரகாரத்தில் பிரமராம்பாள் என்ற அம்பிகை சந்நிதியுண்டு. இங்கே பிராமணர் பூசை. இவ் வம்பிகைக்குச் சிவராத்திரி கழிந்த சில நாட்களில் உயிர்ப்பலி தரப்படுகிறது. முருகவேள் சந்நிதி முதலிய சிறிய சுற்றுக் கோயில்கள் மிகவும் பரிதபிக்கத்தக்க நிலையிலுள்ளன. இவற்றையும் யாத்ரீகர்கட்கு வாடகைக்கு விடுகிறார்கள். முருகவேள் திருவுருவத்தைச் சுற்றிப் பெட்டிகளும் படுக்கைகளும் தூய்மை யொழிந்தன பிறவும் நிரம்பியுள்ளன. சிவராத்திரியை யொட்டிப் பத்து நாட்கள் இரவில் மட்டும் சந்திரசேகரருக்குத் திருவிழா நடக்கிறது. சோமாஸ்கந்தருக்குச் சிவராத்திரியில் திருக்கல்யாணம். இரண்டு நடராஜ விக்ரஹங்க ளுண்டு.

கோயிலிலிருந்து 3 3/4 மைலில் செங்குத்தாக இறங்கும் பாதையிற் சென்றால் பாதாள கங்கை யென்ற கிருஷ்ணா நதியை யடையலாம். இங்கிருந்து நன்னீர் கொணர்ந்து மல்லிகார்ச்சுனராகிய ஸ்ரீ சைலேசருக்கு வழிபாடு செய்கின்றனர்.

நந்தியாலிலிருந்து பத்து மைலில் மகாநந்தி என்ற தல முள்ளது. ஸ்ரீசைலம் செல்ல இயலாதவர்கள் இங்கு சிவராத்திரியைக் கொண்டாடுகின்றனர்.

நல்லாரவர்பலர் வாழ்தரு வயல்நாவல வூரன்
செல்லலுற வரியசிவன் சீடர்ப்பத மலையை
அல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் வல்லார்
ஒல்லைச்செல உயர்வானகம் ஆண்டங் கிருப்பாரே.

சித்தாந்தம் – 1943 ௵ - ஏப்ரல் ௴





No comments:

Post a Comment