Saturday, May 9, 2020



திருவாரூரர்

 [P. தியாகராஜப் பிள்ளை]

XXII
ஆரூரரும் இயற்கை விரியும்
பறவைகளும் விலங்குகளும்

வாழ்த்து

பாடினர் எந்தை தன் பைங்கழற் றொண்டின் பழமையினால்
நாடினர் கைலைமா நாயகன் நற்றாளிந் நல்லுடலால்
கூடினர் பெற்றிடக் கோதில் நிலையைக் கொடுத்தருளத்
தேடினர் ஆரூர்த் தியாகரைச் சேர்ந்து சிறந்தனரே.

1. இயற்கை வடிவைத் திருமேனியாகக் கொண்ட சிவபெருமானுடைய திருவடியை ஆங்காங்குச் சென்று பணிந்து வந்த திருவாரூரர், அச்சிறந்த திருவூர்களில் வாழும் விலங்குகளையும் பறவைகளையும் தம் திருப்பாட்டுக்களில் குறிக்கலாயினார். மக்கள் வாழுமிடங்களிலெல்லாம் விலங்கும் பறவையும் அவர்களுக்குத் துணை செயவாழ்கின்றனவன்றோ! இதனையறியார் அவற்றின் உயிரைப் போக்கி உடலை உண வாக்குதல் என்ன கொடுமை!

2. நாரை எனும் பறவை புனனாடு ஆகிய சோணாட்டின் நீர் நிலைகளில் வாழும் சிறந்த பறவை. அதனைப் புலவர்கள் பாவில் பெரும்பாலும் எடுத்துப் பாடியிருக்கின்றார்கள்.செங்கால் நாராய் செங்கால் நாராய்' என்ற ஆன்றோர் செய்யுளைத் தமிழறிஞர் யாவரும் அறிவர். சங்கச்செய்யுட்களில் நாரையின் எடுத்துரை (வர்ணனை) பலவிடங்களில் காணப்படும். திருவாரூரர் நுண்ணிய நோக்குடையவர். தாம் கண்ட பொருள்களின் நுட்பங்களை யெல்லாம் தம்பாடல்களில் பதிவு செய்தனர். திருவாரூரைப் பாடுங்கால் (95)  தினைத்தாள் அன்ன செங்கானாரை சேருந் திருவாரூர்' என்று நாரையினுடைய கால் செந்நிறமான தென்றும் தினையினுடைய தட்டையைப் போன்று அழுத்தமுடைய தென்றும் குறித்தனர். கானாட்டு முள்ளூரில் (40) 'தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத் துறைக்கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட, காவிவாய் வண்டுபல பண் செய்யுங் கழனி கானாட்டு முள்ளூர்' என்று கவலையற்ற பறவையினம் ஆடுவதைத் தீட்டினர். "தூவிவாய் நாரை” என்ற தொடருக்கு "மீன் உண்ணும் வாயையுடைய நாரை'' எனப் பொருள் கொள்கின்றார் திரு. அ. சோமசுந்தரஞ் செட்டியார். ஆனால் திரு. இராமசுவாமி நாயுடு ''சிறகை யுடைய நாரை'' எனப்பொருள் செய்தார்.
பின்னுமோர் திருவாரூர்ப் பதிகத்தில் நாரைகள் உழன்று திரிவதை "சூழுமோடிச் சுழன் றுழலும் வெண்ணா ரைகாள்'' என்றும், "சுற்று முற்றுஞ் சுழன்றுழலும் வெண் ணாரைகாள்'' என்றும் கூறினார். நாரைகள் வெண்ணிறத்தன என்பதை அப்பெயரே விளக்கும். அவைகள் சோலைகளிலும் வாழும் என்பதை "இலைகள் சோலைத் தலையிருக்கும் வெண்ணா ரைகாள்!' என்றும் அதே பதிகத்தின் மற்றொரு பாகத்தில் எடுத்துச் சொன்னார். பழைய ஆராகிய திருவாரூரில் நாரைகளே யன்றி மற்றும் பல குருவிகளும் அச்சமின்றி வாழ்ந்தன. அவைகளுக்கும் திருவாரூரில் பிறந்த சிறப்பும் மேன்மையும் உளவன்றோ!

3. திருவாரூரர் கிள்ளைகளும் பூவைகளும் மெல்லியலாருக்கேயுரிய பறவைகள் என்பதைக் காட்டவும், அவைகள் பேசுமாற்றல் சிறிது அடையக்கூடியன என்பதை காட்டவும் அவைகளைத் தம் உயிர்க் காதலன்பால் வாயா விடுக்கும் மரபில் பறக்குமென் கிள்ளைகாள்!", " பாடுமெம் பூவைகாள்' என அவைகளை விளித்தார். அங்கு சக்ர வாளத்திளம் பேடைகள், சேவல்கள், தேன்வண்டுகள், கொண்டல்கள், வார் மணற் குருகுகள், கூடுமன்னப் பெடைகள் முதலியவும் வாழ்ந்தன. கொடிய பாம்புகளும் தம் கொடுமை நீங்கி மற்றைய உயிர்களோடு வாழ்வதை "குரவ நாறக்குயில் வண்டினம் பாட நின்றரவ மாடும் பொழிலந்தணா ரூர்'' என்ற பாடலில் விளக்கினார்.

4. பலவூர்களிலும் குயிலும் மயிலும் மிகுதியாக வளர்க்கப்பட்டன. திருக்கச்சியை (10) 'கொடிகளிடைக் குயில் கூவுமிடம் மயிலாலு மிடம், பேடைதன் சேவலோடாடு மிடம்'' என்று கொண்டாடினர். பின்னும் 'மயிலார் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்' என்றனர். கலய நல்லூரில் (16) "அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண் பாட அணிமயில்க ணடமாடும்.” மற்றும் அங்கு குருகினமும் அன்புபூண்டு அடியவருடன் எம்பெருமானை வணங்குதலில் ஈடுபட்டிருப்பதை மக்களை விளித்து “சோலைமலி குயில் கூவக் கோலமயிலாலச்
சுரும்பொடு வண்டிசை முரலப் பசுங்கிளி சொற்றுதிக்க, காலையிலும் மாலையிலும்
கடவுள் அடிபணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலய நல்லூர் காணே'' என்று காட்டுகின்றார்.

வண்டுகளே மிகுதியும் பாடல் பெற்றவை. அவற்றின் இசையைப் போற்றாத புலவர்கள் இல்லை. "அஞ்சிறைத் தும்பி” என சிவபெருமானால் அழைக்கப்பட்டது அன்றோ வண்டு! மலர் உள்ளவிடத்தே வண்டின் ஈட்டம் காணாமலிருப்பது அரிது. கோவிலைச்சுற்றிலும் பூஞ்சோலையிருப்பதையும் அங்கு வண்டுகள் இசைபாடுவதையும் ஆரூரர் கண்டனர். "வண்டார் பூம்பொழில் சூழ்மழபாடி" எனவும், “சுரும்புடை மலர்க்கொன்றை... விரும்பிய குருகாவூர்'' எனவும் பாடுகிறார். திருச்சோற்றுத் துறைப்பதிகத்தில் "ஆலு மயிலும் ஆடல ளியும், சோலை தரு நற்சோற்றுத்துறை' எனவும், “திதையும் தாதும் தேனுஞ் ஞிமிறும், துதையும் பொன்னிச் சோற்றுத் துறை" எனவும் கூறினார். திருநாகேச்சுரப் பதிகத்தில் (99) "விரிதரு மல்லிகையும் மலர்சண்பகமு மளைந்து, திரிதரு வண்டு பண்செய் திருநாரையூர்'' என்றும், 'பங்கய மாமலர்மேன் மதுவுண்டு பண்வண் டறையச் செங்கய னின் றுகளுந் திருநாரையூர்'' என்றும், "கொங்கணை வண் டாற்றக் குயிலும் மயிலும் பயிலும் தெங்கணை பூம்பொழிற் சூழ்திரு நாரையூர்'' என்றும், “தேனும் வண்டு மதுவுண்டின் னிசைபாடியே கானமஞ்சை யுறையும் தண்கழுக் குன்றம்'  என்றும் வண்டுகள் சோலைகளிலும் குளங்களிலும் மலர்த் தேனையுண்டு தம் விருப்பப்படி திரிவதைக் கண்டு மகிழ்ந்தார்.

5. 48 - ல் “கொம்பின்மேற் குயில்கூவ மாமயிலாடும் பாண்டிக் கொடுமுடி' எனக் குயில் பாடுவதையும் அதற்கேற்ப மயிலாடுவதையும் பகர்ந்தார். திருப்புனவாயிலில் ஆந்தைக் கட்டம் மிகுதி. அதனைப் 'பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப் புனவாயில்" என்கிறார். அப்படியே 34 - ல் "பொத்தில் ஆந்தைகள் பல பாட்டறாப் புகலூரைப் பாடுமின்'' என்றும்,  புள்ளெலாம் சென்று சேரும் பூம்புகலூர்''  என்றும் பாடினார். (32) திருக்கோடிக்குழகரில் "கூடிப் பொந்தில் ஆந்தை கள் கூகை குழற... கோயில் கொண்டாய்'  எனப் பாடினார். ஆந்தையின் பாட்டிலும் ஆரூரர் ஒருநயங்கண்டனர் போலும். இந்நாளில் அதன்பாட்டு 'அலறல்' எனப்படுகிறது. இப்புன வாயிலில் கானங் கோழிகளும் புறாவும் மிகுதி. அவற்றின் வாழ்க்கையை ஒரு சில பாடல்களில் விரித்துரைத்தனர். “பிறவுகள்ளியின் நீள் கவட்டேறித்தன் பேடையைப் புறவம் கூப்பிடப் பொன்புனஞ் சூழ் புனவாயில்'' எனவும், "கள்ளிவற்றிப் புற்றீந்து வெங்கானங் கழிக்கவே புள்ளி மானினம் புக்கொளிக்கும் புனவாயில்” எனவும், “கற்று கார்க்காட்டிடை மேய்ந்த கார்க்கோழிபோய், புற்றேறிக் கூகூ வென வழைக்கும் புனவாயில்” எனவும் பாடுகின்றார். புறாக்கள் தம் பெடைகளைக் கூப்பிடும் ஒலியையும் உற்று நோக்கியுளார் நமது ஆரூரர் பெருமான். கோழிகள் புற்றின் உச்சியில் ஏறி கூ கூ எனக் கூவுவதைக்கூடத் தம்பாடலில் வரைந்திட்டார்.

6. திருநீடுர்ப் பதிகத்தில் (56); “பாடுமாமறை பாட வல்லானைப் பைம்பொழிற்குயிற் கூவிடமாடே, ஆடுமாமயில் அன்னமோ டாட அலைபுனற் கழனித் திருநீடூர்" என பொழிலில் குயில்கூவ மயில்ஆடக் கண்ட அன்னமும் கூட ஆடுவது சொல்லப்பட்டது. மகளிர்கள் திருநின்றியூரில் (65) மாளிகை தோறும் எவ்வாறு காணப்பட்டனர் என்பதை உவமை கூறுவதின் முகமாக மயில் முதலியவற்றைக் குறிக்கின்றார்.

மேற்சொன்னதைப் பேடை மஞ்சையும் பிணைகளின் கன்றும் பிள்ளைக் கிள்ளையும் எனப் பிறைநுதலார், நீடு மாடங்கள் மாளிகைதோறும் நிலவுதென்றிரு நின்றியூர்'' என்ற இடத்தில் காணலாம். மற்றும் இவ்வூரினைத் “திணை கொள் செந்தமிழ்ப் பைங்கிளி தெரியுஞ் செல்வத்தென்றிரு நின்றியூர்” எனப் பச்சைக் கிளிகள் அகத்தமிழைத் தெரிந்திருந்தன என்கிறார். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்ற பழமொழிக்கிணங்க அங்கு ஆடவர் மகளிர்கள் அகத் தமிழைக்கற்று உரையாடுவதைக் கேட்டுக்கேட்டு அதனைக் கிளிகள் திருப்பிக் கூறின. இதனால் அந்நாளில் மக்கள் அகத் தமிழை எவ்வளவு சிறப்பாகப் போற்றிவந்தனர் என்பது தெரிகிறது. அகத்தமிழ் கற்றிருப்பது ஓர் அரிய செல்வ மாகக் கருதப்பட்டது போலும். திருக்கேதாரத்தில் உள்ள கிளிகள் "வாழை யொண்கனி கீறியுண்ணும்'' யென்பது முன்பே குறிக்கப்பட்டது. சீபர்ப்பதத்தில் கிளிகள் தினைக் கதிரைக் கொய்வதையும் அவைகளைக் குறமகளிர் விரட்டு வதையும் அழகாகப் பாடியுள்ளார். "கன்னிக் கிளிவந்து கவைக்கோலிக் கதிர்கொய்ய, என்னைக்கிளி மதியாதென்று எடுத்துக்கவண் ஒலிப்பத், தென்னற்கிளி திரிந்தேறிய சீபர்ப் பதம்” எனக் கூறினார். மற்றும் “செவ்வாயின கிளிபாடிடும் சீபர்ப்பதம்'' என்று கிளிகள் சிவந்த வாயினையுடையதென்றும் அவைகள் பாடுந்திறம் வாய்ந்தன என்றும் குறிப் பித்தார்.

7. விலங்குகளில் சிறந்தது யானை என்பது தெரிந்த தொரு பண்டம். பண்டையிலும் யானையைப் பெருஞ்செல்வ மாகக் கருதினார். அவைகள் காடுகளிலும் மலைகளிலும் தம் விருப்பமாய் திரிந்து கொண்டிருந்தன. ஆரூரர் மலையின் உச்சியிலுள்ள கோவில்களையாவது அல்லது மலை நாட்டுக் கோவில்களையாவது பாடும் பொழுது யானையின் வாழ்க்கையை மிகவிரித்துக் கூறுகின்றார். திருமுதுகுன்றத்தைப் பாடுகையில் (43) 'வாரிக்கட்சென்று வளைக்கப்பட்டு வருந்திப்போய் மூரிக்களிறு முழக்கறா முதுகுன்று' என்றார். மக்கள் யானைகளைப் பிடிப்பதற்கு வெள்ளத்தில் விரட்டி அவைகளைக் களைக்கச் செய்து பிடிப்பார்கள் போலும். அச்சூழ்ச்சியில் தப்பும் யானைகள் பிளிறிடுதலால் முழக்கம் விடாது முதுகுன்றில் கேட்கப் படுகிறது என்றனர். பின்னும் இப்பதிகத்தில் "மழை வளரும் நெடுங்கோட்டிடை மதயானைகள், முழைவளராளி முழக்கறா முதுகுன்று' என்றார். அங்கு மதயானைகளோடு ஆளிகளும். முழங்கின எனத் தெரிகிறது. யாளி யானையோடு போரிடும் என்பதும் இப்பாடல் தெரிவிக்கின்றது. மற்றுமோர் பாட லில் "குன்றிலிடைக் களிறாளி கொள்ளக்குறத்திகள், முன்றி லிடைப் பிடிகன் றிடும் முதுகுன்று'' என்றார். 'கொள்ள' என்ற சொல் இடரைத் தருகின்றது. திரு. அ. சோமசுந்தரம் செட்டியார் - கொள்ள' என்ற சொற்குக் 'கொல்ல' எனப் பொருள் செய்தார். அது எவ்வாறு பொருந்துமோ தெரிய வில்லை. 'கொல்ல' என்ற பாடத்தையே கொண்டால் தவறுளதோ! குன்றில் களிற்றினை யாளி கொன்றதால் குறவர் வாயிலில் உள்ள பிடி வருந்தின என்கிறார்.

காட்டுயானைகளைப் பற்றிக் கேதாரப்பதிகத்தில் மிக விரிவாகப் பாடுகிறார். ''கம்பக்களிற்றினமாய் சுனைநீர்களைத் தூவி செம்பொற்பொடி சிந்தும்... கேதாரம்” (7S) என்று களிறும் பிடியுமாய்க் களித்து வாழ்வதை எடுத்து இயம்பினார். பின்னும் அவைகளின் வாழ்க்கையை முளைக்கைப்பிடி முகமன் சொலி முதுவேய்களை யிறுத்து, துணைக்கைக் களிற்றினமாய் நின்று சுனைநீர்களைத் தூவி, வளைக்கைப் பொழிமழை கா தர மயின் மான்பிணை நிலத்தைக் கிளைக்க மணி சிந்தும்" (78) என்றும், ''மலைச்சாரலும் பொழிற்சாரலும் புறமே வரு மினங்கண, மலைப்பாற் கொணர்ந் திடித்தூட்டிட மலங் கித்தன களிற்றை அழைத்தோடியும் பிளறீயவை யலமந்து வந்தெய்த்துத் திகைத்தோடித்தன் பிடிதேடிடும் சீபர்ப்பத மலை” (79) என்றும் விவரித்தார். பின்னும் யானைகள் துன்புற்ற போது வேடர்கள் அவைகளுக்கு இரங்கி அவைகளை உண்பிப்பதை ''ஆனைக்குலமிரிந் தோடித்தன்பிடி சூழலிற் றிரி யத், தானப்பிடிசெவி தாழ்த்திட அதற்கு மிக இரங்கி, மானக் குறஅடல் வேடர்களிலையாற் கலைகோலித், தேனைப்பிழிந்தினி தூட்டிடுஞ் சீபர்ப்பதமலை''
என்றனர். யானைகளிடையே காணப்படுமுடலை "மாற்றுக் களிறடைந்தாயென்று மதவேழங் கையெடுத்து, மூற்றிக் கனலுமிழ்ந்து மதம்பொழிந்தும் முகஞ்சுழியத், தூற்றத் தரிக்ககில்லேன் என்று சொல்லி யய லறியத், தேற்றிச் சென்றுபிடி சூழலுறுஞ் சீபர்ப்பத மலையே'' என்ற பாடலில் காட்டியுள்ளார். திருக்கழுக்குன்றிலும் பண்டை நாளில் யானைகள் தன் விருப்பாய்த் திரிந்து கொண்டிருந்தன எனத்தெரிகிறது. இதனை 81 - ம் பதிகத்தில் "பிளிறுதீரப் பெருங்கைப் பெய்ம்மத மூன்றுடைக் களிறி னோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே" என்றும் பாடினார். களிறும் பிடியும் ஒன்றாகவாழ்ந்து கன்றுகளை யீன்று மகிழ்ச்சியாகத் திரிந்தன என்பது தெரிகிறது. கழுக்குன்றில் முன்னாளில் யானைகள் வாழ்தற்கிடமான பெருங்காடு இருந்தது போலும்.

8. பல திருவிடங்களிலும் குரங்குகள் காணப்பட்டன. இராமன் வரலாறு தென்னாட்டில் பரவப்பரவ குரங்குகளின் தெய்வத்தன்மை மிகுதிப்பட்டது போலும். மக்களில் ஒரு சாரார் அவைகளைக் கடவுளின் வேறாக்காது வணங்கினார்கள். விடங்களில் கோயில்களில் வடிவங்களை அமைத்தும் வணங்கினர். உயிர்க்குரங்குகள் கோவில் கண்ட விடங்களில் கூட்டங் கூட்டமாக வாழத்தொடங்கின. அங்கு செல்லாம் மக்கள் கடலையும் பழமும் அவைகளுக்கு உண்ணத் தந்தார்கள். அவைகளைப்பற்றி ஆரூரர் பல பாடல்களில் குறிப்புச் செய்திருக்கின்றார். திருப்பனையூரில் (87) "மரங்கண்மேல் மயிலால மண்டப மாடமாளிகை கோபுரத்தின்மேல், இன் கல்வண்முகவன் புகப்பாய் திருப்பனையூர்''
என்றவிடத்தில் குரங்கு பேசப்பட்டது. குரங்கின் கோணமுகமே அதற்குச் சிறப்புடையது. அதையும் அதன் இயற்கையாயுள்ள பாயுந் தன்மையையும் குறித்திட்டார். ஆகையால் குதித்தாடுவதை ''குரக்கினங் குதிகொள்ளத் தேனுகக் குணருதண்வயற் கெண்டை பாய்தரப் பறக்குந்தண் கழனி பழனத் திருப் பனையூர்''
என்றும், ''மந்திபல மாநட மாடுந்துறையூர்'' என்றும், 92 - ல் "குரங்காடு சோலைக் கோயில் கொண்ட குழைக்காதனே'' என்றும் பாடினர். மற்றொரு பதிகத் தில் "மந்திகடுவனுக் குணப்பழ நாடி மலைப்புறம் சந் திகடோறும் சலபுட்பமிட்டு வழிபட'' என்று அவைகளில் ஆண்குரங்கு பெண்குரங்குக்காகப் பழம் கொண்டுவரச் செல்லுஞ் காட்சியும் நீரும் பூவும் கொண்டு அவைகள் வழி படுங் காட்சியும் விந்தையை விளைக்கும். மற்றுமோர் பாடலில் (43) "மந்திகடுவனுக்கு உண்பழநாடி மலைப்புறம், முந்தியடி தொழ நின்ற சீர்முது குன்றரே” என தெய்வத்தை மந்திகள் தொழுது பின் தம் பெண்டிர்க்காகப் பழத்தைத் தேடிச் செல்லும் என்று தெரிவிக்கிறார். திருக்கோலக்காவில் (62) குரக்கினங் குதிகொண்டு வயல்கள் சூழ்கோலக்கா" எனக் குரங்குகளின் மலிவைக் குறித்தார். திருக்கழுக்குன்றத்தில் இன்று போல் அன்றும் குரங்குகள் இருந்தன என்பதை (81) “முலைகளுண்டு தழுவிக் குட்டியொடு முசுக்கலைகள் பாயும் திருக்கழுக்குன்றம்'' என்றனர்.

9. பலவேறு விலங்குகளையும் ஆங்காங்கு குறிக்கின்றார். 76ல் "தொறு விலானிள வேறு துண்ணென இடிகுரல் வெருவி, செறுவில் வாளைகளோடச் செங்கயல் பங்கயத் தொதுங்க, கறுவிலா மனத்தார் காண்டரு வாஞ்சியம்" என்ற பாடலில் எருதுகளின் முக்காரத்தைக் குறித்தனர். சீபர்ப் பதத்தினில் (79) "மானு மரையினமும் மயிலினமும் கலந் தெங்கும், தாமே மிகமேய்ந்து தடஞ்சுனை நீர்களைப் பருகி, பூமா மரமுரிஞ்சிப் பொழி லூடே சென்று, தேமாம் பொழில் நீழற்றுயிலும்” என்றனர். சிவபெருமான் ஊரும் விடையையும் பலவிடங்களில் அழகாக எடுத்துரைப்பார். 68ல் ''நீரை விடையுடை நள்ளாறனை" என்று அதன் தூய வெண்ணிறத்தைப் புகழ்ந்தார். தாம் கைலைக் கேகுதற்கு இறைவனால் தரப்பட்ட யானையை 'வெஞ்சினயானை' என்றும் சிரமலி யானை' என்றும் மத்தயானை' என்றும் பேசுகிறார். அதன்மேல் ஏறிச்சென்றபோது அதன் விசையை நிலைகெட விண்ணதிர நிலமெங்கும் அதிர்ந்தசைய யானையேறிச் சென்ற தாகப்பாடினர்.

10. பன்றிகளும் கரடிகளும் காடுகளில் காணப்பட்டன. இதனை 79 - ம் பதிகத்தில் "ஏனத்திரள் கிளைக்க வெரி போல் மணிசிதர்த்தி, ஏனல்லவை மலைச்சாரலிற்றிரியுங் காடீ யும், மானும் மரையினமும் மயின் மற்றும் பலவெல்லாம், தேனுண் பொழில் சோலை மிகுசீ பர்ப்பதமலை'' என்னும் பாடலில் கண்டார். 50 - ல் "கொள்ளிவாயின கூரெயிற்றேனங் கிழிக்கவே, தெள்ளிமாமணி தீவிழிக்குமிடம்" திருப்புன வாயில் எனப் பன்றிகள் தம்கொம்பால் நிலத்தைக்கிளர மணிகள் ஒளிக்கும்.

11. இனிக் குளங்களில் காணப்படும் அன்னம் முதலிய வைகளைப் பற்றியும் சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. கானாட்டுமுள்ளூரில் (40) "அரும்புயர்ந்த அரவிந்தத் தனி மலர்கள் ஏறி, அன்னங்கள் விளையாடு மகன்றுறையி னருகே" என்றனர். தாமரை மலர்கள் மேல் அன்னங்கள் ஏறி விளையாடு மாம். ஓரிடத்தில்
அன்னஞ்சேர் வயல்சூழ்பைஞ்சீலி" என்றார். திருநாரையூர்ப் பதிகத்தில் (99) ''பங்கயமா மலர்மேல் மது வுண்டு வண்டேன் முரல, செங்கயல்பால் வயல்சூழ் திரு நாரையூர்'' என்று ஆங்கு கயல்மீன்கள் பாய்வதைக் குறித்தார். மீண்டும் அதே பதிகத்தில் “கோலமலர்க் குவளைக் கழுநீர் வயல் சூழ்கிடங்கில் சேலொடுவாளைகள் பாய்திரு நாகேச்சாத்தான்” எனச் சேல்மீனும், வாளைகளும் வயலைச் சூழ்ந்த கிடங்குகளிலும் காணப்பட்டன. இப்படியே திரு வாஞ்சியத்தில் (76) “தொறுவிலா னிள வேறு துண்ணென இடி குரல் வெருவிச், செறுவில் வாளைகளோடச் செங்கயல் பங்கயத் தொதுங்க” என்று பாடிய பாடலில் வயல்களிலும் வாளைகள் ஓடின என்றும் அதனைக் கண்டு செந்நிறமுடைய கயல்மீன்கள் தாமரையிலையின் கீழ் ஒதுங்கித் தம்மைப் பாது காத்தன வெனவும் தெரிகிறது. திருப்பனையூரில் (37) “செங்கண் மேதிகள் சேடெறிந்து தடம்படி நலின் சேலினத்தொடு, பைங்கண் வாளைகள்பாய் பழன கதையும்”, “வாளை பாய மலங்கினங் கயல்வரிவாலுகளுக் கழனியையும்” உடையதெனச் சொல்கிறார். பலவகை மீன் களும் நீர் நிலைகளிலும் வயல்களிலும் நிறைந்திருந்தன எனத் தெரிகிறது. மற்றோரிடத்தில்'' வாவியிற் கயல்பாய குளக திடை மடைதோறும்... மேவிய குருகாவூர்'” (29) என்று கயல் மீன்கள் பாய்வதைப்பற்றிப் பாடினார். திருவடமுல்லை வாயிலில் (69) வயலிலுள்ள தாமரை மேல் நண்டுகள் உறங்கும் காட்சியை “பொன்னவங்கழனிப் புதுவிரை மாருவிப் பொறி வண்டு வரிவண்டிசை பாட, அந்நலங்கமலக் கவிசின் மேலும் கும் அலவன் வந் துலவிட வள்ளல் செந்நலங்கழனி'' என்று வரைந்தார்.              

XXIII
அம்மை பிள்ளையார் வணக்கம்

மங்கை பங்கனை மயின்மிசை விளங்கும் 
செங்கை வேலனைத் தெருவினில் அடியார்
தங்கி யேற்றிடுந் தழைவயிற் றோனை
எங்குங் கா எமக்கரு ளிறையை
அயரா தேற்றும் ரன்
செயனஞ் செப்ப தீரும் வினையே.

1. அப்பர் சம்பந்தர் சிவபெருமானைத் தவிர மற்ற தேவாகளைப் பாடினதாக எங்கும் காணப்படவில்லை. அவர்கள் அம்மையைச் சிவபெருமானை விட்டுப்பிரியாத ஒரு கூறாகவே பாடினார். அம்மையின் அளக்கரும் பெருமைகளைப் பாடின போதிலும் இறைவனுடன் ஒன்றியிருந்து அழகு செய்வதைப் பற்றித்தான் சிறப்பித்தார்கள். இங்ஙனமே முருகனையும் மூத்தபிள்ளையாரையும் குறிக்கும்போதெல்லாம் அவர்களுக்குச் சிவன் தந்தை என்று மாத்திரம் பேசப்படுகிறார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட வணக்கம் இல்லை. எல்லாரும் சிவனிடத்தில் ஒடுக்கம் என்பதே அவர்கள் கொண்ட கருத்து. அதனை அவர்கள் பாடலில் நிலை நிறுத்தினார்கள். திருவாரூரரும் அவர்கள் கொள்கையையே பின் பற்றினார். இதனைச் சுந்தரர் திருவலிவலப் பதிகத்தில் (67) "நல்லிசை ஞானசம்பந்தரும் நாவினுக் கரசரும் பாடிய நற் றமிழ் மாலை சொல்லியவே சொல்லி, யேத்துகப்பானை... வந்து கண்டேனே'' என்ற பாடலில் குறிப்பித் திருக்கின்றார்.

2. அம்மையைச் சுந்தரர் தந்திருப்பாட்டில் பலவிடங்க ளிலும் சிறப்பித்திருக்கின்றார். அம்மை இறைவனோடு ஒன்றி நிற்கும் காட்சியே அவர்க்குப் பெரும் மகிழ்வை விளைத்தது. 2 - ம் பதிகத்தில் "பஞ்சுண்ட வல்குற் பணை மென் முலையாளொடு, நீரும் ஒன்றாயிருத்தல் ஒழியீர்' என்றனர். அம்மையின் வெளித் தோற்றத்தை விரித்துரைத்தல் மக்களுக்கு இயலாதது என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் உலகில் கண்ணால் காணப்படும் பொருளெல்லாம் அவள் வடிவே யன்றோ! அம்மை அருளின் திரட்சியான படியால் அம்மையைப் பெண்மையால் அழைத்தனர். மக்கள் அவர் கள் அறிவுக்கு எட்டுமாறு அவர்கள் மண்ணில் கண்ட பெண் வடிவங்களில் காணப்படும் உறுப்புகளையும் துணி மணி பூண்டிருப்பதையும் எடுத்துரைப்பது போல அம்மையின் தோற்றத்தை எடுத்துப்பேசுவார்கள் புலவர்கள். அம் முறையைப் பின் பற்றினார் புலவர் தலைவராகிய ஆரூரர் பெருமான், மேற்கண்ட முறையை மனதில் கொண்டுதான் வனித்தார். அம்மை தோற்றத்தைப் பாடிய விடங்களைப் படித்தல் வேண்டும். இல்லாவிட்டால் படிப்போர் இடர்ப்பட நேரிடும்.

3. இறைவியைப் பல வடமொழிப் பெயர்களால் இப்பொழுது அழைக்கின்றார்கள். ஆனால் சுந்தரர் தம் திருப்பாட்டுக்களில் அம்மைக்கு ஒரே ஒரு பெயர்தான் குறிக்கின்றார். அதுதான் ''உமை'' என்பது. பலவிடங்களில் மலைமகள் எனப்படுகிறது. 11 – ல் ''உருவுடையார் உமையாளையோர் பாகம்' என்றும், 23 – ல் ''உமையாளை யோர் கூறுடையாய்' என்றும், 20 - ல் “சொல்லுவ தென்னுனை நான் தொண்டை வாய்மை நங்கையை நீ, புல்கியிடத்தில் வைத்தாய்க்கு ஒரு பசல் செய்தா ருளரோ' என்றும், 39 – ல் ''வார்கொண்ட வனமுலையாள் உமை பங்கன்'' என்றும், 30 – ல் 'உமைவெருவக் கண்டானை'' என்றும், 13 – ல் 'ஆடி யசைந்தடியாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்தப் பொருளெலாம் உமையாளுக்கோ'' என்றும், 41 – ல் ''உமையாள் கனவா எனையாள்வாய்'' என்றும், 59 - ல் உமையாளை யோர்பாகத் தடக்கினானை' என்றும், 56 - ல் "வேய்கொள் தோளுமை பாகனை' என்றும், 52 – ல் 'முகிழ் மென்முலையாள் உமை பங்கா', ''வண்டார்குழலி யுமைநங்கை பங்கா'' என்றும், 49 - ல் “மடவரல் உமைநங்கைதன்னையோர் பாகம் வைத் துகந் தீர்'' என்றும், 61 - ல் “ஏலவார் குழலாளுமை நங்கை என்று மேத்தி வழிபடப்பெற்ற காலகாலன்'' என்றும், 64 - ல் "கருந்தடங் கண்ணிபங்கனை', "உமையோர்கூறனை', "அப்பன் ஒப்பிலாமுலை உமைகோனை'' என்றும், 60 - ல் "கொடி யிடை யுமையவள் காண'' என்றும், 76 - ல் "புணர்முலை புமையவளோடு, மருவனார்'' என்றும், 84 - ல் “சூதனமென் முலையாள் பாகமும்'', ''மாமலை மங்கை யுமைசேர் சுவடும்'' என்றும், 88 – ல் ''தூயநீ ரமுதாய வாறது சொல்லுகென்று உமை கேட்கச் சொல்லினீர்'' என்றும், 99 – ல் ''பிறை யணிவாணுத லாளுமை யாளவள்'' என்றும் வரும் பாடல் களில் உமையென்று அம்மையழைக்கப்படுகின்றாள். உமையெனும் பெயரின் நுண்பொருளைச் சைவ அறிஞர்கள் வாய் மணக்கப் பேசுவார்கள். அம்மையின் ஒவ்வொரு உறுப்புக்களின் அழகையும் புலவர்கள் மண்மகளிரை உவமை கொடுத்துச் சொல்லுவது போலவே சொல்லி யிருக்கிறார். அதனால் அவற்றையிங்கு விரித்து எழுதவில்லை.

4. உமையாள் மலைமகள் என்பதைப் பல பாடல்களில் குறித்தனர். 15 - ல் “பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை பங்கா”, “மட்டார் பூங்குழன் மலைமகள் கணவன்'' என்றும், 10 - ல் “மங்குல் நுழை மலைமங்கையை நங்கையைப் பங்கினிற் றங்க வுவந்தருள் செய்... கையனிடம்' என்றும், 33 - ல் "மலைட் பாவையோர் கூறு தாங்கிய குழகரோ' என்றும், 10 - ல் "தேவி யம்பொன் மலைக்கோமான் தன் பாவையாகத் தன துருவ மொருபாகஞ் சேர்த்து வித்தபெருமான்'' என்றும், 46 – ல் ''வீண் பேசி மடவார்கை வெள் வளைகள் கொண்டால் வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்'' என்றும், 58 - ல் "மலையின் மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை'' என்றும், 41 – ல் 'மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான்மகடன் மணவாளன்'' என்றும், 44 - ல் "இமவான்மகள் கூ றன்றி கூறுவதில்லையோ'', “வேயன தோளி மலைமகளை விரும்பிய, மாயமில் மாமலை நாடன், என்றும், 67 – ல் ''வரையின் பாவை மணாளனை'' என்றும், 73 - ல் “வரையின் மடமகள் கேள்வன்'' என்றும், 77 - ல் “மலைக் கண் மடவாள் ஒரு பாலாய்ப் பற்றி யுலகம் பலிதேர்வாய்'' என்றும், 98 – ல் ''வலங்கிளர் மாதவஞ்செய் மலைமங்கை யோர் பங்கினனாய்'' என்றும் வரும் இடங்களில் அம்மையை மலையின் புதல்வி யென்றே குறிக்கின்றார். தக்கன் புதல்வி என்ற வழக்கு அறவே காணப்படவில்லை அம்மை தொடர்பான இரண்டு மூன்று வரலாற்றுக் குறிப்புக்களையும் அடிக்கடி எடுத்துப் பேசுகின்றார். ஒன்று உமையஞ்ச இறைவன் யானையை உரித்தது. இதனை
9 - ல் "மலைக்கு மகள் அஞ்ச மதகரி யுரித்தீர்'' என்றனர். அம்மை அருள் வடிவுடையவள். ஆதலால் கொடிய செயல் கண்டு இரக்கம் காரணமாக அஞ்சினள் போலும். இச் செயலை மீட்டும் 6 - ல் "பரவு மென் மேற்பழிகள் போக்கீர், பாகமாக மங்கையஞ்சி வெருவவேழஞ் செற்றதென்னே'' என்றும், 17 - ல் “தடுக்கவொண் ணாததோர் வேழத்தினை யுரித்திட் டுமையை, நடுக்கங் கொண்டார்' என்றும், 33 – ல் ''மானைமேவிய கண்ணினாள் மலைமங்கை நங்கை யஞ்ச வோர், ஆனையீருரி போர்ப்பரோ'' என்றும், 41 - ல் மானைப் புரையும் மடமென் னோக்கி மடவாளஞ்ச மறைத்திட்ட, ஆனைத் தோலாம்' என்றும், 44 - ல் "இமவான் மகள், பெரிய மனந்தடுமாற வேண்டிப் பெம்மான் மதக்கரியி னுரியல்ல தில்லையோ? " என்றும்,
87 - ல் "மாவிரி மட நோக்கி யஞ்ச மதகரி யுரிபோர்த் துகந்தவர்'' என்றும் எடுத்துப் பாடியுள்ளார். எம்பெருமான் அம்மையை மற்றோர் முறையும் அஞ்சச் செய்தனர். இராவணன் கைலையைத் தூக்கும்போது இறைவன் முதலில் வாளா இருந்தனன். அதன் ஆட்டத் தினால் உமை அஞ்சி அய்யனைத் தழுவினாள். பின்பு தான் திருவிரலை ஊன்றி அரக்கன் ஆற்றலை அழித்தனன். இப் பெருஞ் செய்தியை அன்பர்கள் எல்லாம் புகழ்ந்து பாடியுள்ளார். திருவாரூரரும் சிற்சிலவிடங்களில் இச்செய்தியைக் குறிப்பிட்டார். 68 - ல் "இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலையெடுப்ப ஆங்கிம வான்மக ளஞ்ச'' என்ற தொடர் இதனை எடுத்துக் காட்டும்.

5. திருக்கண் புதைத்த திருவிளையாடலைப் பற்றியும் ஒரு குறிப்பு உளது. அம்மை இறைவனது திருக்கண்களைப் புதைத்ததை 18 - ல் “மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான் மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா, உலகுடன்றான் மூடவிரு ளோடும்வகை நெற்றி யொற்றைக்கண் படைத்துகந்த உத்தமன்'' என்றனர். அம்மை காஞ்சியில் தவம் செய்ததும் அறம் வளர்த்ததும் ஆரூரர் தம் பாடல்களில் விரித்துக் கூறுகின்றார். 16 - ல் " குறும்பைமுலை மலர்க்குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பனொடுஞ் சென்றவள் தன் குணத்தினை நன்கறிந்து. விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த, விண் ணவர்கோன் " என்றும், 5 – ல் ''வாரிருங்குழன் வாணெடுங் கண் மலைமகண்மது விம்மு கொன்றைத் தாரிருந்தடமார்பு நீங்காத் தையலாளுல குய்யவைத்த, காரிரும் பொழிற் கச்சி மூதூர்க் காமக்கோட்டம்'' என்றும் பகர்ந்தார். பின்னும், 61 - வது பதிகத்தில் அம்மைசெய்த தவத்தினை "எள்கலின்றி இமையவர் கோனை யீசனை வழிபாடு செய்வாள் போல் உள்ளத் துள்கியுகந்துமை நங்கை வழிபடச் சென்று நின் றவா கண்டு, வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி யோடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பன்' என்று மிக விரிவாகச் சொன்னார்.

6. சிவபெருமான் உமைகாண நடஞ்செய்தலையும் சில பாடல்களில் எழுதியுள்ளார். 69 – ல் ''கூடிய விலயம் சதி பிழையாமை கொடியிடை யுமையவள் காண, ஆடிய அழகா'' என்றும், 55 - ல் "கரிகா டரங்காக மானை நோக்கி யோர் மாநடாகி மணிமுழா முழக்க வருள் செய்த தேவ'' என்றும் பாடினார். எங்கும் இறைவனை யம்மையுடனேயே கண்டனர். 20 - வது திருக்கோளிலிப்பதிகத்தில் தாம் பரவை வருத் தம் தீர்க்க நெல்லினை அட்டியில் சேர்க்கவேண்டிப் பாடிய பொழுது "மலை மங்கையை ஒருபங் குடையவனே'' என்று 6 பாடல்களில் குறிப்பாகப் பாடினார். ''வண்ட மருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்" என்றும், 'பாதியோர் பெண்ணை வைத்தாய், படருஞ் சடைக் கங்கை வைத்தாய்'' என்றும், "சொல்லுவ தென்னுனை நான் றொண்டை வாயுமை நங்கையை நீ புல்கியிடத்து வைத தாய்க் கொருபூசல் செய்தாருளரோ'' என்றும், ''முல்லை முறுவலுமை யொருபங்குடைமுக் கண்ணனே' என்றும் உமையம்மை இறைவன்பால் குறைவதை யெடுத்துப் பலகாலும் புகன்று பெண்ணை மகிழ்விக்கத் தெரிந்தவராகை யால் தம் காதலியை மகிழ்விக்க வேண்டியதொன்றை தமக் கும் அருளுமாறு வேண்டினார். கோடிக்குழகரைப் (32) பாடும் போது அங்கு இறைவன் உமையோடு காணப்பட்டதை "மையார் தடங்கண்ணி பங்கா கங்கையாளும் மெய் யாகத் திருந்தனள் வேறிடமில்லை”, “இரவே துணையாயிருந் தாயெம் பிரானே”,  இறைவா தனியே யிருந்தா யெம்பி ரானே என்று உமையோடு தனியே கொடியார்பலர் வேடர் வாழுங் கரைமேல் இருந்ததற்காக மிகவும் வருந்துகிறார். அப்படியே திருமுருகன பூண்டியில் (49) தாம் கொண்டுவந்து பண்டங்களெல்லாம் கொள்ளை போனபோது மிக இரக்க மாக இத்தீயவிடத்தில் ''இடுகு நுண்ணிய மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந்தீ ரெம்பிரானிரே”,“ முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன் பூண்டிமா நகர்வாய்... எத்துக் கிங்கிருந்தீர்'' என்று கூறி இரங்கினார். கூடலை யாற்றூரில் (85) தமக்கு இறைவன் வழிகாட்டிச் சென்று மறைந்தபொழுது முன்பு அவரை இன்னாரென்று தெரிந்திலராய் பின்பு அறிந்ததும் அவரை அம்மையுடன் சேர்த்தே பல பாடல்கள் பாடினார். ''புரிகுழ லுமையோ டும்..... அடிகளிவ் வழிபோந்த அதிசய மறியேனே' , 'பந்தண வும் விரலாள் பாவை யொடும் முடனே அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே" என்றும், “முத்தக வெண் முறுவன் மங்கையொடும் முடனே அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே'' என்றும் பாடல் தோறும் அம்மையுடன் இருந்ததை அழகாகப் பாடினார்.

7. இனி மூத்த பிள்ளையாரைப் பற்றிய குறிப்புகள் ஆரூரர் திருப்பாட்டுக்களில் மிக அரிதாகத்தான் காணப் படுகின்றன. மூத்த பிள்ளையார் வழிபாடு இந்நாளில் பெருகி நிற்பதுபோல அந்நாளில் இல்லை போலும். "விநாயக புராணம்', ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்குள் தான் தமிழில் எழுதப்பட்டது. அதற்குமுன் தமிழ் நாட்டில் பிள்ளையார் வணக்கம் எங்கும் இருந்ததென்று சொல்வதற்கு மிகுந்த சான்றுகள் இல்லை எனலாம். அதனாலே தான் ஆரூரரும் தமது பாடலில் ஒன்றிரண்டுதான் பிள்ளையாரைப் பற்றிப் பேசுகின்றார். திருவோண காந்தன்றளி (5) யைப் பாடுங்கால் ''கணபதியேல் வயிறுதாரி'' என்று அவருடைய பெருமை பொருந்திய வயிற்றினைக் குறிக்கின் றார். அவருக்குக் 'கணபதி' என்ற பெயர் அந்நாளிலிருந்து உண்டு என்பதும் தெரிகிறது. மற்றொரு பதிகத்தில் (46) “'எண்ணிலி யுண்பெரு வயிறன் கணபதியொன் றறி யான்'' என்று அவருக்கு ஒன்றும் தெரியாது' என்று சொல்கிறார். கணபதிக்கு எது தெரியாதோ! சிவபெருமானுக்கு அவர் என்ன குறையுடையாரோ என்பதை எங்கும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

8. ஆனால் முருகனைப் பல பாடல்களில் குறித்திருக்கின்றார். முருகனுடைய திருச்செயல்களை ஆங்காங்கு சிறு குறிப்புக்களால் விளக்கியுள்ளார். முருகன் வணக்கம் தமிழ் நாட்டில் எங்கும் அந்நாளில் நடந்து வந்தது என்பது தெளிவாகத் தெரிகின்றது. மற்றைய தேவர்களைக் கூறு மிடத்தில் (73)  "குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் கள் வணங்கும், அமரன் இருப்பது மாரூர்'' என முருகனையே முன் வைத்துப் பாடினார். 63 - ல் "குமரன் முதற்றே வர் நம்பி' என்று தேவர்களில் முருகனுக்கு முதலிடம் தந்தார். முருகன் சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் திருப்புதல்வன் என்பதைப் பல பாடல்களில் சுட்டுகின்றார். 46 - ல் "மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன்" என்ற விடத்தில் சிறுவனாகிய முருகன் உமையின் புதல்வன் என்றார். 5 - ம் பதிகத்தில் "அங்கை வேலோன் குமரன் பிள்ளை'' என்று வெளிப்படையாகக் குமரன் சிவபெருமான் பிள்ளை என்று கூறினார். முருகன் கையில் வேலைச் சிறப்பாகவுடையவன் என்பதையும் இங்கு குறித்தார். 18 – வது 'மூப்பது மில்லை' என்ற திருப்பதிகத்தில் ''குறவனார் தம்மகள் தம்மகனார் மணவாட்டி'' என்று முருகனுக்குக் குறவன் மகளை மணந்ததையும் எடுத்துச் சொன்னார். ஆரூரர்க்கு முருகனிடத்தில் உள்ள பேரன்பை "மகனார்' என்று பன்மையால் கூறியது தெரிவிக்கும். 68 - ம் பதிகத்தில் ''அமரர் சேனைக்கு நாயகனான குறவர் மங்கை தன் கேள்வனைப் பெற்ற கோனை'' என்றனர். இப்பாடல் முருகப்பிரான் தேவர்களுடைய படைத்தலைவன் என்பதையம் குறமங்கையாகிய வள்ளியம்மையாருடைய கணவன் என்பதையும் சிவபெருமானுக்குப் பிள்ளை என்பதையும் தெரிவிக்கும்.

முருகன் பல அரக்கர்களைத் தொலைத்ததைப் பற்றியும் ஆரூரர் பேசுகின்றார். 83ம் பதிகத்தில் "கடுவரிமாக் கடலுட் காய்ந்தவன் தாதை" என்றவிடத்தில் முருகன் மாமரமாகக் கடலில் வளர்ந்த சூரபதுமனை வெட்டி வீழ்த்திய திருச் செயலைச் சொன்னார். 16 - ம் பதிகத்தில் "பொரும் பலம் துடை யசுரன் தாருகனைப் பொருது பொன்றுவித்த பொரு ளினை முன் படைத்துகந்த புனிதன்" என்று முருகன் தாருகனைக் கொன்ற வரலாற்றையும் பகர்ந்தார். சூரனை யழித்ததை 59 - ல் “கடற்சூர்தடிந்திட்ட செட்டியப்பனை'' என்ற தொடரில் கூறினார். முருகனுக்குச் செட்டி என்ற பெயர் ஆரூரர் நாளையிலிருந்து உளது என்பது அறியப்படு கிறது. அவருக்குச் சேந்தன் என்று மற்றொரு பெயரும் உண்டு என்பதை (58) 'திருத்தினை நகருறை சேந்தனப் பன்' என்ற தொடர் காட்டும். திருவதிகைப் பதிகத் (38) து 5 - வது பாடலில் 'சேந்தர்தாய் மலைமங்கை' எனவருகிறது. இங்கும் சேந்தராகிய முருகனுக்கு உமை தாய் என்பதைக் குறித்திட்டார். முருகன் அம்மையின் புதல்வன் என்பதைப் பின்னும் 62 - ம் பதிகத்தில் "குமரனைப் பயந்த வார்த் தயங் கிய முலை மடமானை வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த தீர்த்தனை'' என்று எடுத்துச் சொனனார். முருகனுக்குக் "குமரன்'' என்ற பெயர் தொன்று தொட்டு வழங்குகிறது என்பதை இப்பாடல் அறிவிக்கிறது. 38 - ல் "பொன்னானை மயி லூர்தி முருகவேள் தாதை'' என்று மயிலை ஊர்தியாக உடையவர் முருகப்பிரான் என்பதைச் சொன்னார். 34 - ல் "கையுலாவிய வேலனே யென்று கழறி னுங் கொடுப்பாரிலை" என்ற அடி முருகனுக்குக் கையில் எப்பொழுதும் வேல் இலங்கும் என்பதைக் காட்டுகின்றது. மேற்குறித்தவைகளிலிருந்து திருவாரூரர் முருகப்பிரான் வரலாற்றை விரிவாகத் தெரிந்திருந்தனர் என்பது அறியக் கிடக்கிறது.

XXIV
சுந்தரரும் பழமொழியும்

போற்றி

முன்னோர் பகர்ந்த மொழிபோற்றும் மூதறிஞன்
தன்னோர் புலவரெனத் தானினைப்பான் - - என்னீர்
திருவாரூ ரன் கழலைச் சிந்தியா சிருந்தீர்
பெருவாழ் வடையவே பின்.

1. மூவர்கள் பாடல்களில் இப்பொழுது இருக்கின்றவற்றுள் சுந்தரர் பாடல்கள் எண்ணிக்கையில் குறைவான போதிலும் அவைகள் இயற்கை இன்பத்தை ஊட்டுவதிலும் பண்டைய வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிடுதலிலும் மேம்பட்டு நிற்கின்றன. அல்லாமல் பல பழமொழிகளையும் எடுத்தாளுகின்றன. அப்பழஞ்சொற்களின் பொருளையும் பாடலில் அவைகளை என்ன கருத்தை விளக்க ஆளப்பட்டன என்பதையும் தெளிவாக அறிவது இப்பொழுது அருமை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் சுந்தரர் இருந்த நாளோ கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு. அதாவது ஓராயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பாகும். அந்நாளில் இவைகள் என்ன பொருளில் வழங்கினவோ என்று திட்டமாய்ச் சொல்லுதல் எளிதன்று. அவருடைய பாடல்களுக்கு முன்னாளில் பேரறிஞர் பலர் இருந்தும் உரை காணாத பெருங் குறை இன்று சைவர்களுக்குப் பெரிதும் இடுக்கண் விளைக்கின்றது. திருமாலடியார்கள் தங்கள் திருமறைக்குப் பல படியாக உரைகள் செய்து அவற்றின் பொருளை ஊன்றி அறிகிறார்கள். சைவர்களுக்கு அவ்விதத் துணையில்லையே!

2. ஆரூரர் முன் சொன்னபடி பல மூதுரைகளைத் தமது பாடல்களினிடையே பெய்திருக்கின்றார். திருநெல்வாயில் திருஅரத்துறைப் (3) பதிகத்தில் ''வாணார் நுதலார் வலைப்பட்டடியேன் பலவின் கனியீந் தது போல் வதன் முன், ஆணோடு பெண்ணா முருவாகி நின்றாய் அடியேனுய்யப் போவதோர் சூழல் சொல்லே” என்றனர். 'ஈந்தது' என்ற சொல் திரு. அ. சோமசுந்தரஞ் செட்டியார் பதிப்பில்  ஈயது' எனக் காணப்படுகிறது. அத்திருத்தம் சிறந்த எளிய பொருளைத் தருவது போலத் தோன்றுகிறது. ஆரூரர் பெருமான் பெண்கள் கண் வலையில் பட்டால், பலாச் சுளையில் அல்லது சக்கையில் உட்கார்ந்த ஈக்கள் அதன் பாலிலுள்ள பசையில் சிக்கி மீளமாட்டாது இறந்து படுவது போல் மீளும் வழியிலாது மீள மீள சிற்றின்ப நோக்கினராய் இழிநெறி அடைய நேரும். ஆதலால் அப்பெண்கள் வலை பிற்படுமுன்னே தம்மை மேனெறி சேர்க்கும் ஒரு சூழலை உரைத்தருள வேண்டும் என்று இரக்கின்றார். 'ஈர்ந்தது' என்றதன் சிதைவாக 'ஈந்தது' என்பதைக் கொண்டால் பலாக்கனியைப் பிளந்து வைத்த பின் அது பின் நீண்ட நாளைக்கு நல்ல நிலையில் இராது கெட்டுப் போவதுபோல் பெண்கள் வலையில் பட்டபின் தம் உடல் நலம் கெட்டு ஆண்டவனை வணங்க வேண்டும் என்ற நல்லெண்ணம் இல்லாமல் போய்விடும். அதற்கு முன் நன்னிலையடையும் சூழலைத் தமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுகிறார் என்ற பொருள் கொளலும் கூடும். 'ஈந்து' என்ற பாடமும் ஒரு பதிப்பில் (1898) காணப்படுகிறது. அதன் பொருள் ஆராய்தற்குரியது. இவ்வாறு சில பாடல்களில் சொற்கள் சிதைந்தும் மாறுபட்டும் காணப்படுவதன் காரணம் நம் முன்னோர் பெருங் கவலையுடன் பாதுகாவாத குறையே.

3. திருப்பரங்குன்றப் பதிகத்தில் (2) 'பிண்டஞ் சமந்தம்மொடுங் கூட மாட்டோம் பெரியாரொடு நட்பினி தென் றிருத்தும்" என்றார். இங்கு 'இருத்தும்' என்பதை வலித்தல் விகாரமாகக் கொண்டால் பொருள் சிறக்கு மென்று தோன்றுகிறது. (திரு. அ. சோமசுந்தரஞ் செட்டியார் இருத்தும் என்னும் சொல்லை விகுதிகாலங் காட்டும் தன்மைப் பன்மை முற்றாகக் கொண்டு இருப்போம் என குறிப்பு எழுதுகின்றார்). பெரியாரோடு நட்புக் கொள்வது இனிமை பயக்கும் என்ற ஆன்றோர் சொல் உளதேநும் பெரியோனாகிய உம்முடன் கூட விருப்பமில்லை. ஏனெனில் உம்முடைய செய்கைகளாகிய தலையணிதல். முதுகாடு உறைதல், பாம்பைக் கழுத்தில் கட்டல், நஞ்சை உண்டல் முதலானவைகள் உமக்கு ஆட்செய அச்சத்தை விளைவிக்கின்றன என்று சிவபெருமானின் வீற்றினைப் புகழ்கின்றார்.

4. திருமுதுகுன்றப் பதிகத்தின் முதல் திருப்பாட்டில் (43)

கஞ்சியிடை யின்று நாளை யென்றும்மை நச்சுவார்
துஞ்சி யிட்டாற் பின்னைச் செய்வதென்னடி கேள்சொலீர்
பஞ்சியிடப் புட்டில் கீறுமோ பணியீர் அருள்
முஞ்சியிடைச் சங்கமார்க்குஞ் சீர்முதுகுன்றரே

என்னுமிடத்தில் "பஞ்சியிடப் புட்டில் கீறுமோ' என்ற வினாவைச் சிவபெருமானுக்கே விடுத்தார். இறைவனை இன்னே போற்றாமல் இன்று நாளை என்று வீணாள் கழிப்பவர் மாண்டுபோயின் என்ன செய்ய வல்லார் சொல்லுவீர் என்ற கேள்விக்குப்பின் "பஞ்சியிடப் புட்டில் கீறுமோ" என்ற மற்றொரு கேள்வியை எழுப்பினார். என்ன கருத்துடன் இதனை எழுப்பினர் என்று தெளிவாகத் தெரியவில்லை. பஞ்சினை உள் செலுத்துவதனால் புட்டில் (பூக் குடலை) கிழிந்து போகுமோ என்கிறார். இவ்வுவமை எந்தப் பொருளை விளக்கக் கொடுத்தனரோ! ஒருகால் சிவ பெருமானை இளமையிலேயே வணங்கினால் தம் புலன்களால் மற்றத் துறைகளில்வரும் உடலின்பத்திற்குக் கேடுநேருமோ என்று தயங்கும் இளைஞர்களை நோக்கிப் பெருமானை வணங் குதலால் மற்றைய நேரிய வழியில்வரும் இன்பமும் கெடாது என்ற குறிப்பினை அடக்கி இத்தொடரைத் திருவாய் மொழிந்தனர் போலும். இதனைப் பின்னும் சைவப் பேரறி ஞர் கூர்ந்து ஆராய்வாராக.

5. 58 - ம் திருக்கழுமலப் பதிகத்தில் "அயலவர் பரவவும் அடியவர் தொழவும், அன்பர்கள் சாயலுளடைய லுற்றிருந்தேன், முயல்பவர்பின் சென்று முயல்வலை யானை படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப் புயலினை... கண்டு கொண்டேனே'' என்ற பாடலில்  'முயல்வலை யானைபடும்''  என்ற வழக்கை யாளுகிறார். இதன் கருத்தின் ஆழத்தை அறிதல் அரிதாக கிடக்கின்றது. சிலர் முயல் பிடிக்க வைத்த வலையில் யானை அகப்படும் என்று சொல்லக் கேட்டு அதனைத் தவறு என்று எண்ணி விடுத்துக் "கழுமல வளநகர் இறைவனைக் கண்டு கொண்டேன்" எனச் சொன்னார் என்பர். ஆனால் இத்திருப்பாட்டின் முதலடியின் கருத்தை இப்பொருளோடு பொருத்திக் காட்டுவது இயலுமோ என்ற ஐயம் எழுகிறது. அதை விடுத்து, ஆரூரர் அன்பர்களுடைய இரக்கத்தைப் பெற்றுத் திரு நெறியில் வீடு தேடி முயல்பவர்களாகிய அவ்வன்பர்கள், 'முயலுக்கு வைத்த வலையில் தற்செயலாய் யானையும் சிக்கும்' என்று சொல்லும் பழமொழியைப் பின்பற்றி மிகுந்த வருத்தமின்றி தான் முயல்பவர் பின்சென்று எளிதில் இறைவனைக் கண்டு கொண்டதைச் சொல்லுகின்றார் எனவும் பொருள் கோடல் தவறன்று எனத் தோன்றுகிறது.

6. "முன்னைச் செய்வினை யிம்மையில் வந்து மூடும்" என்ற ஒரு முதுமொழியைத் திருப்புறம்பயம் பதிகத்தில் (35) ஏழாவது பாடலில் எடுத்தாண்டார்? பண்டையில் செய்தவினையைப் பிற்பிறப்பில் உண்டே தீர்க்கவேண்டும் என்ற அடிப்படையான சைவக் கொள்கையை இங்கு நிலை நாட்டினார். தம் நெஞ்சத்தை விளித்து ''பண்டைவினை யிம் மையில் வந்து சேர்ந்து நற்செய்கையில் செல்லவிடாது மூடிக் கொள்ளும். ஆதலால் அப்பொழுதே புறம்பயம் தொழப் போதும்" என்றழைக்கின்றார். இக்கொள்கைக்கு இவர் முழுதும் உடன்பாடு என்பது மற்றொரு திருப்பதிகத்தினால் தெரிகிறது. திருவிடை மருதூர் (60) - ம் பதிகத்தில் "முந்திச் செய்வினை யிம்மைக்கண் நலிய மூர்க்கனாகிக் கழிந்தன காலம்''  என்று பழவினையின் வாயிற்பட்டுத் தம் வாணாளை வீணாளாகக் கழித்ததற்காக வருந்தி 'எந்தை நீயெனக் குய்வகையருளா யிடைமருதுறை யெந்தை பிரானே'' என்று கூவியழைக்கின்றார். தம்பிரான் றோழனே இப்பழவினைக்கு ஆற்றாது புலம்பினார். ஆனால் மற்றைய எளிய மக்களின் நிலையைப்பற்றி என்ன சொல்வது!!

7. 60 - வது பதிகத்தில் பல மூதுரைகள் காணப்படுகின் றன. முதற்பாடலில் “கழுதை குங்குமந்தான் சுமந்தெய்த் தாற் கைப்பர் பாழ்புக மற்றதுபோலப், பழுது நானுழன் றுள் தடுமாறிப் படுசுழித்தலைப்பட்டன னெந்தாய்" என்று முறையிடுகின்றார். இந்த அடிகள் ஒரு பதிப்பில் சற்று மாறாகக் காணப்படுகிறது. “பாழ்புக, மற்றதுபோல" என்பதற்குப் பதிலாக "பாழ், புகழற்றது, போல'' என அச்சிடப்பட்டுள்ளது. இவ்வரி மாற்றத்தால் பொருளும் மாறுகின்றது. கழுதையானது தனக்கு யாதொரு பயனு மிலாத குங்குமத்தை நடோறும் சுமந்து சுமந்து இளைத்துப் போகுமாயின் அதனை உடையவன் இனிது வேலைக்கு உதவாது என்று வீணே வெறுத்துத் தள்ளி விட்டிடுவர்; அதற்கு யாதொரு ஊதியமுமில்லை; அதைப்போல் நானும் பயனற்றவைகளை மேற்கொண்டு உழன்று தடுமாறி செய்வ தின்னதென்று அறியாது மயக்கமுற்றேன். 'கழுதையின் செயலும் பின்னடைந்த நிலையும் எனக்கும் பொருந்தும்' என்று வருந்துகிறார். இச்செய்யுளிற்கு மற்றொரு பொருளும் கொள்ளலாம். கழுதை குங்குமத்தைச் சுமந்துகொண்டு போட்டுவிட்டால் அதனை உடையவன் பாழ்நிலத்தில் போய் மேய்ந்துவர ஓட்டிவிடுவான். அதனிடத்தில் மிகவும் அன்பு காட்டமாட்டான். தனக்கு வேலை செய்யச் செய்வதோடு சரி; கழுதையின் உழைப்பெல்லாம் பிறர் நன்மைக்காகவே. அதற்கொரு ஊதியமுமில்லை. பாழில் ஓட்டிவிட்டால் அங்கு என் செய்வது என்று தெரியாமல் மயங்கும்; அதுபோல தாமும் பிறர்பொருட்டே உழைத்து உழன்று வருந்தி சுழலில் அகப்பட்டு மயங்கினார். தாம் அப்பயனற்ற நிலையை அடைந்ததற்காக வருந்தி முறையிடுகின்றார்.

8. அதே 60 - ம் பதிகத்தில் "அரைத்த மஞ்சளதாவதை யறிந்தேன்'' என்றனர். மஞ்சளானது பல நாளைக்குக் கெடாமல் இருக்கக்கூடிய ஒரு பொருள். ஆனால் தண்ணீர் விட்டு அரைத்து வைத்துவிட்டால் அது சில நாளைக்குக்கூட இராது. கெடுதல் அடைந்துவிடும் போலும். அரைத்த மஞ்சளைப்போல் விரைந்து கெடக்கூடியது இவ்வுடல் என்பதை அறிந்தேன். இனி யான் "உய்வகை யருளாய்" என வேண்டு கிறார். 3 - வது பாடலில் ''புன்னுனைப்பனி வெங்கதிர் கண்டாற் போலும் வாழ்க்கை பொருளிலை" என்கிறார். இங்கு வெப்பம் பொருந்திய ஞாயிற்றைக் கண்டவுடன் புல் நுனி மேல் தங்கிய சிறு நீர்த்துளி எவ்வாறு நீராவியாகி இருந்த விடம் தெரியாமல் போய் விடுமோ அதுபோல் இவ் வாழ்க்கையானது மிக விரைவில் அழிந்து ஒழிந்து போகக் கூடியது. அதனால் யாதொரு நிலைத்த பொருளுமில்லை என்று மேற்கண்ட உவமையால் விளக்குகின்றார். பின்னும் 9 - வது பாடலில் ''வாழைதான் பழுக்கு நமக்கென்று வஞ்ச வல் வினையுள் வலைப்பட்டு... அறியாத ஏழையேனுக்கு உய்வகை யருளாய்'' என்று பாடுகிறார். இடத்தை நோக்கினால் ஏதோ, பெருநன்மை பயக்கும் என்று காத்திருந்த ஒருவன் பின் னேமாந்திட்டதுபோலத் தாம் வல்வினையில் அகப்பட்டுக் கொண்டனர். வாழை பழுப்பது இயற்கை. யாரும் அதனை எதிர்பார்க்கலாம். பொதுவாக ஏமாற்றமடைவதை, இலவு காத்திட்ட கிளி என்ற உவமையால் விளக்குவர். இலவங்காய் பழுத்து கையாது, முற்றி நெற்றாகிக் கடினநிலை யடையும். கிளிக்குப் பயன் தராது. ஆகையால் ஏமாந்து விடும். ஆனால் வாழை பழுக்கும் என்று எண்ணுதலும் எதிர்பார்த்தலும் இயல்பே. இதில் எதிர்பார்த்து ஏமாறுதல் என்னவென்பது தெரியவில்லை. ஒருகால் பிறர்க்குரிய வாழை பழுத்தால் நாமடையலாம் என்று எண்ணி ஏமாந்து போதலை இங்கு உவமையாகக் கொண்டனர் போலும். இது மேலும் ஆராய்தற்குரித்து.

9. திருவாரூர்ப் பதிகமொன்றில் (95) “கன்று முட்டி யுண்ணச் சுரந்த காலி யவைபோல, என்று முட்டாப்பாடு மடியார் தங்கண் காணாது, குன்றின் முட்டிக் குழியில் வீழ்ந்தால் வாழ்ந்து போதீரே” இங்கு அடியார்களின் அன்பின் நிறைவை ஓர் உவமையால் தெரிவிக்கின்றார். கன்றுமுட்டிப் பாலுண்ணுவதால் பாலானது மடியில் நிறைகின்றது. அதுபோல் அடியார்கள் சிவபெருமானைப் பாடப் பாட அன்பு உள்ளத்தில் பெருகி நிறைகின்றது. அப்படிப்பட்ட அன்பு ததும்பும் அடியார் கண் தெரியாமல் மேட்டில் இடறி பள்ளத்தில் விழப் பார்த்திருப்பது பெருமானது அருளுக்குப் பொருந்தாது. ஆதலால் “இரங்கி யருள வேண்டும்' என்ற குறிப்பை வைத்தனர். இத்திருப்பதிகத்திலேயே மற்றொரு (9 - ம்) பாடலில் 'பேயோடேனும் பிரி வொன்றின்னா தென்பர் பிறரெல்லாம்'  என்று ஒரு பழ மொழியை ஆளுகின்றார்.'பிறரெல்லாம்' என்றதில் எப்புலவரைக் குறித்தனரோ தெரியவில்லை. திருவாரூரருக்குப் பரவையார் காரணமாக முதலில் இரக்கமின்றி இருந்த போது தாம் பெருமானை விளித்து “வாய்தான் திறவீர் திரு வாரூரர் வாழ்ந்து போதீரே'' என்று பாடுகையில் தமக்குப் பரவையின் பிரிவு இன்னா தருகின்றது பேயேயாயினும் அதனிடம் பழகிவிட்டால் அதனினின்றும் பிரிவதும் துன்பத்தைத் தரும் என்று பெரியோர்கள் கூறுகின்றார். அதை நீர் "அறியீரோ'' என்று மன்றாடுகிறார்.

10. திருப்புறம்பயப் பதிகத்தில் (35) திருவாரூரர் தம் நெஞ்சைப் பார்த்து ''படையெலாம் பகடார வாளி லும் பவ்வஞ் சூழ்ந்தர சாளிலும், கடை யெலாம் பிணைத் தேரைவால் கவலா தெழுமட நெஞ்சமே................ புறம்பயம் தொழப் போதுமே” என்று அறிவுறுத்து கின்றார். பல படைகளுக்குத் தலைவனாக ஆண்டபோதிலும் கடல் சூழ்ந்த உலகம் முழுதும் ஆண்டாலும் கடைசியில் எல்லாம் தேரை வால்போல் தேய்ந்துவிடும். அதனால் இம்மைப் பொருள்களுக்கு ஆவல் கொள்ளாமல் எம்பெருமான் கழலை வணங்கப்போவோம் வா என்று நெஞ்சினை யழைத்தார். இவ்வாறு பல முதுச்சொற்களையும் உவமை களையும் ஆழ்ந்த பொருள்கள் விளக்கவேண்டித் தம் பாடல்களில் ஆண்டனர். ஆரூரர் வழங்கியுள்ள மற்றைய உவமை களும் அணிகளும் வேறொரு இதழில் எழுதப்படும்.

XXIV
தோழமைச் சிறப்பு

அறிந்து செல்வ முடையானா மளகைப்
பதியாற் றோழமை கொண்
டுறழ்ந்த கல்வி யுடையானு மொருவன்
வேண்டு மெனவிருந்து
துறந்த முனிவர் தொழும் பரவை
துணைவா நினைத்தோழமை கொண்டான்
சிறந்த வறிவு வடிவமாய்த்
திகழு நுதற்கட் பெருமாளே.    
- சிவப்பிரகாச அடிகள்

ஆரூரர்க்கு இருவர் சிறந்த தோழரானார்கள். அவர்களில் ஒருவர் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானே. அவர்  'தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்" என்று வலிந்து வந்து நண்பரானார் என்பதைத் திருத்தொண்டர் வரலாற்றில் 273 - ம் பாடலில்

வாழிய மாமறைப் புற்றிடங்கொண் மன்னவ
னாரரு ளாலோர் வாக்குத்
தோழமையாக வுனக்கு நம்மைத் தந்தனம்
நாமுன்பு தொண்டு கொண்ட
வேள்வியி லன்று நீ கொண்ட கோலம்
என்றும் புனைந்துநின் வேட்கைதீர
வாழி மண்மேல் விளையாடுவாய் என்று
ஆரூரர்கேட்க எழுந்த தன்றே.

என்று சேக்கிழார் பெருமான் விளக்கினார். சுந்தரரை "அன்று முதல் அடியா ரெல்லாம் தம்பிரான் றோழ ரென்றே அறைந்தனர்.'' பாடலின் இசைக்கும் அறிவின் மேன்மைக்கும் ஆவல் கொண்டு, எம்பெருமான் ஆரூரரைத் தோழமை கொண்டார். இப்படிக் கடவுள் தோழமை பூண்டதனோடு நில்லாமல் அளவு கடந்த அன் புடைய சேரமான் பெருமாளோடும் நட்பாக்கி வைத்தனர். இம்மை இன்பங்க ளெல்லாம் துய்க்க வேண்டுமானால் ஒரு சிறந்த மன்னன் நட்பு போதுமன்றோ? பின்னாளில் ஆரூரர் சேரநாடு சென்றபோது பெருமாணாயனார் அவருக்குச் செய்த சிறப்புக்களின் பெருமைகளைப் பெரியபுராணத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். சிவபெருமான் செல்வத்திற்காக அளகை வேந்தனையும் அறிவிற்காக ஆரூரரையும் தோழராகக் கொண்டதுபோலவே திருவாரூரரும் அம்மைக்காகச் சிவபெருமானையும் இம்மைக்காகச் சேரமான் பெருமானையும் தோழராக் கொண்டார் என்று சொல்வது பொருந்தும்.

2. ஆரூரரது நட்பு இருநிலம் பிளக்க வேரூன்றியது. பிரியின், கன்றைப் பிரிந்த தாயின் நிலையடைவது. பேரரசராயினும் பெருமாணாயனார் திருவாரூரருடன் உயிரும் உடம்புமாக இருந்தனர். பாண்டி நாட்டிலுள்ள பல திருவிடங்களையும் கண்டு வந்தபின் இருவருமாகச் சேரநாடு சேர்ந்தனர். கழறிற்றறிவார் அங்கு ஆரூரர்க்குப் பலவித விருந்துகளை யளித்தனர். ஆரூரரும் அவ்விடம் பலநாள் தங்கினார். இப்படி இருக்கையில் அவருக்குத் திடீரென்று தியாகர் நினைவு, தோன்றி அவரைத் தன் வயமாக்கிற்று. என் செய்வார்? தியாகரும் சேரமானும் தமக்கு அரிய நண்பர்கள். அதனால் இவர்களில் எவரைவிட்டுப் பிரிந்திருப்பது என்ற மனக்குழப்பம் அடைந்தனர். ஆயினும் சுந்தரர் ஆரூரப்பனைத் தோழராக முதல் முதல் கொண்டதனாலும் அவரிடத்தில் நீண்ட நாள் பிணிப்புண்டதாலும் ஆரூர்க்கே மீண்டனர். ஆரூரர் என்ற சொல்லைக் கேட்டாலும் அவர் மின்னேற்றிய பொருள் போலாகி விடுவார்.

சேரமானையும் மறந்தவரில்லை. அதனால் மீண்டும் ஒரு தடவை தமது நண்பனைக் காண மலை நாடு அடைந்தார். அங்இருக்கும் பொழுது இறைவன் திருவாரூரரை வெள்ளை பானையைச் செலுத்தி அழைத்தனர். சேரமான் அதனை முதலில் அறியார். இருந்தும், ஒன்றுபட்ட நெஞ்சுடைய நண்பர்களுக்குள் ஒருவருக்கு நிகழ்வது மற்றவர் எப்படியாவது உணர்ந்து கொள்வது இயற்கையாக இருப்பதால் சேரமானும் தனது உட்புல உணர்ச்சியால் ஆரூசாது செலவினை உணர்ந்து கொண்டு பரிமேல் ஏறித் தமது தெய்வ ஆற்றலினால் வானில் வன்றொண்டருக்கு முன்னே வணங்கிச் சென்றார். இவ்வுலக நீக்கத்திலும் இங்கன்றோ நட்பைத் தொடர்ந்து காண்கிறோம். இதனை நம்பியாண்டார் நம்பி ''ஞான ஆரூரரைச் சேரரை யல்லது நாமறியோம். மானவ யாக்கையொடும் புக்கவரை” என்று பெரிதும் வியந்தார்.

3. இவ்வளவு நெருங்கிய நண்பராயிருந்தும் திருத் தொண்டத் தொகையில் (39. vi) " கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கு மடியேன்' என்று சேரமானின் கொடைத் திறத்தைப் புகழ்ந்ததே யல்லாமல் அவர் தமக்கு இவ்வளவு நெருங்கிய நண்பராயிருந்தனர் என்பதைத் தம் பாடல்களில் வேறெங்கும் குறித்ததாகத் தெரியவில்லை. திருத்தொண்டத் தொகை பாடியது சேரருடன் நட்பு பூணும் முன்னேயாகும். ஆரூரர் சேரமானுடைய கொடைவளத்தைக் காதால் கேட்டிருந்தனர். தாம் அவரை நேரே கண்டு பழகி நட்புக் கொண்ட பின் அவரது தன்மைகளை எடுத்துப் பேசவில்லை. அதுபோலவே தனக்குக் கிடைத்த ஆரூரது அரிய நட்பைப் பற்றிச் சேரமானும் தனது 'பொன்வண்ணத் தந்தாதி திருக்கைலாயவுலா, திருவாரூர் மும்மணிக் கோவை'' ஆகிய சிறந்த நூல்களில் ஒன்றிலேனும் குறிப்பித்ததாகக் காணப் படவில்லை. கைலைக்கு மானவ யாக்கையொடு சென்று சிவ பெருமான் முன்னிலையில் தந்தமிழ் மொழியில் திருக்கைலாயவுலாவை மன்றேற்றும் பெறும் பேறு தனக்குத் திருவாரூரரால் வாய்க்கப் பெற்றும் இதனை ஒருகாலும் சேரமான தனது நூல்களில் ஆரூரர் தோழமையைக் குறிக்காதது வியப்பைத் தருகின்றது. திருவாரூரரும் சேரமான் பெருமாளும் ஒருங்கு வாழ்ந்து கைலை சென்றனர் என்ற செய்தியை முதன் முதன் நம்பியாண்டார் நம்பி தமது கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில் பின் வருமாறு குறிக்கின்றார்.

"இறையும் தெரிகிலர் கண்டும் எழில்தில்லை யம்பலத்துள்
அறையும் புனற்சென்னி யோன் அருளால் அன் றடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூர னும் நிறை தார்ப்பரிமேல்
நறையுங் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே."

4. ஆனால் சிவபெருமான் ஆரூரரோடு தோழமை பூண்! - செய்தி தேவாரத்தில் குறிக்கப்படுகின்றது. அதைப் பற்றி மாத்திரம் சுந்தரர் தமது பாடல்களில் குறிக்காமல் இருக்கமுடியவில்லை. கடவுள் இவருக்குக் காட்டிய நெறிதானும் “நண்புவழி'' அன்றோ. தாம் ஆட்பட்ட திறத்தைப்பற்றி அடியவர்கள் திருப்பாடல்களில் நன்றி காட்டும் பொருட்டுக் குறிக்கவே நேருகின்றது. மற்றைய நட்பெல்லாம் நாரற்றுப் போகக்கூடும். ஆனால் ஆண்டவன் இடத்தில் உண்டாகிய நட்பிற்கு அழிவுண்டோ ! வாய்க்கு மிடங்களிலெல்லாம் தமக்குக் கிடைத்த தோழமையை நினைந்து நன்றி பாராட்டுகிறார். தேனாகிய திருவாசகத்தில் திருவாதவூரரும் இவ்விதமே தம்மை ஆட்கொண்ட திறத் தைப் பலவிடங்களிலும் பாராட்டுகின்றார்.'' போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதென, தாதையார் முனி வுறத் தானெனை யாண்டவன்'' எனக் காழிப்பிரான் திருவாய் மலர்ந்தருளியதும் நோக்கத் தக்கது. அப்பரோ பாழ் அமணப் படுகுழியினின்றும் எடுத்தாண்ட பண்பை நினைந்து நினைந்து உருகிப் பாடினார்.
5. திருவாரூரரது நேயம் தியாகப் பெருமானை பிரிந் திருந்த நாளில் தான் நன்றாக வெளிப்பட்டு நிற்கிறது. திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரோடு சில நாள் வாழ்ந்த போது ஆரூரப்பனை நினைத்துக் கொண்டார். கதறத் தொடங்கிவிட்டார். “எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே; எவ்வணம் நான் பிரிந்திருக்கேன், எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன்; என்செய நான் பிரிந்திருக்கேன்''; என்று புலம்புகிறார். தாம் இந்நிலத்தில் வாழ்வது ஆரூர்ப் பெருமானோடு ஒன்றாய் இருப்பதற்காகத்தான் என்ற முடிவைக் கொண்டனர். திருவொற்றியில் இருந்தபடியே பாடிய திருவாரூர்ப் பதிகத்தில் (51 (x) ] தமக்குச் சிவபெருமான் தோழன் என்பதை “ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய, தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்குடனாகி மாழை யொண்கண் பரவையைத் தந்தாண்டானை" என்று பாடினார். இங்கு ஒருவன் தன் நண்பனானவனுடைய குறைகளைத் தெரிந்து அவைகளைப் பொறுத்துக்கொண்டு அவன் விரும்பியதை நாடித் தரவேண்டும் என்பதைச் சிவபெருமானே நடந்து காட்டினதைப் பாராட்டுகின்றார். திருநள்ளாற்றுப் பதிகத்தில் (63) “அடி யேற் கெளிவந்த தூதனைத் தன்னைத் தோழமை யரு ளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை நள்ளாறனை யமுதை நாயினேன் மறந் தென்னினைக் கேனே''  எனத் தமக்குச் சிவபெருமான் தோழமையருளினதையும் தம் பிழைகளை யெல்லாம் பொறுத்துக் கொள்வதையும் தம்மால் மறக்க முடியாதென்பதை யெடுத்து மொழிந்தார். பின்னும் கானப் பேருறை காளையைப் பாடுகையில் (84) "தூதனை யென்றனையாள் தோழனை நாயகனை" எனத் தமக்குச் சிவ பெருமான் தோழனாக விளங்கினதைக் குறித்தார். தோழமை காரணமாகச் சிவபெருமான் தூதனானமையையும் இப்பாடல்கள் வெளியிடுகின்றன.

6. இப்படித் தோழமையளித்த பின்பு, சுந்தரர் சிவபெரு மானிடத்தில் உண்மை நண்பனாகவே நடந்து கொண்டார். இரண்டு உண்மை நேயர்கள் தம் மனத்திலுள்ளவைகளை ஒருவர்க்கொருவர் மறைக்காது தெரிவித்துக் கொள்வதும் ஒருவர்க்குத் துன்பம் வந்தபொழுது மற்றவர் துணையை நாடுவதும் வழக்கமன்றோ! இங்கு சிவபெருமான் வேண்டு தல் வேண்டாமையிலா னாதலால் அவர் அடியாரிடத்தில் அன்பு ஒன்றை மாத்திரம் வேண்டுவார். தாம் அடியார்க்கு அருள்வதையே விரும்புவார். ஆதலால் திருவாரூரர்க்குப் பெரும் பேறு கிடைத்தது. எல்லாம் வல்ல பெருமானை நண்பராகக் கொண்ட நாவலூரர்க்கும் தங்குறைகளைத் தீர்த்துக் கொள்ளுதல் எவ்வளவு எளிதாகியது. அவர்க்கு எத்தன்மையான துன்பம் நேரிடினும் சிவபெருமானே தோழனாக நின்றும் வாயிலாக நின்றும் தீர்ப்பாராயினார். ஆதாரும் ஆரெனக் குறவமார் ஏறே” என்று சிவபெரு மானையே தமக்கு உற்ற துணையாகக் கொண்டார்.

7. உலகின்கண் மக்களின் விருப்பமெல்லாம் மண், பொன், பெண் என்ற மூவிடங்களில் தான் செல்லுகின்றன. சுந்தரர் மண்ணை விரும்பினதாக வரலாறு இல்லை. ஆனால் பெண்ணும் பொன்னும் தமக்கு வேண்டிய போதெல்லாம் சிவபெருமானிடத்தில் கேட்டும் பெற்றார். பரவையாரும் சங்கிலியாரும் தமக்குக் கிடைத்தது தம் தோழரான சிவபெருமானாலேயே யென்பதை 51 – ல் 'மாழை யொண் கண் பரவையைத் தந்தாண்டானை'  என்றும், "கொய் யேனைப் பொருட்படுத்துச் சங்கிலியோடெனைப் புணர்த்த தத்துவானை” என்றும் எடுத்துக் கூறினார். பொன் வேண்டிய பொழுதும் தம் தோழரிடத்தான் சென்று கேட்டார். தோழர்க்குத்தான் ஒருவருடைய உண்மை நிலை தெரியும். அயலார்க்கு வெளித்தோற்றம் மாத்திரமே புலப்படும். பழ மலையில் சிவபெருமான் பொன்னளித்ததை 25 - ல் 4 “உம்பரும் வானவரும் உடனே நிற்கவே யெனக்குச் செம்பொனைத் தந்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்தீர்” எனக் குறித்தார். திருப்புகலூரில் பொன் பெற்றதை 34 - ம் பதிகத்தில் வெளிப்படையாகக் கூறவில்லை. திருக்கடைக் காப்பில் புகலூர் மேவிய செவ்வனை” என சிவபெருமானைக் குறிப்பதால் பொன் பெற்ற பொழுதில் அதனையுடையானைச் செல்வன் என்றழைத்தனர் போலும். 'இம்மையே தரும் சோறும் கூறையும்... யாதும் ஐயுறவில்லை” எனப் பாடுவதனாலும் பிறரை வாயில் வந்தபடி யெல்லாம் வீணாகப் புகழ்வதைக் காட்டிலும் புகலூரைப் பாடினால் அமருலகம் ஆளலாம் என்பதாலும் ஆரூரர் இங்கு பொருள் பெற்றனர் என்பது உய்த்துணரப்படும். வரலாறும் பொன் பெற்றதாகக் கூறி இதனை உறுதிப்படுத்துகின்றது.

8. சிவபெருமானுடைய தோழமையின் அழுத்தம் சொல்லவொண்ணாதது. சுந்தார்க்கு வேண்டியதைப் பிறர் கொடுப்பதற்குக்கூட மனம் பொறார். சேரமானிடம் ஆரூரர் பல பொருள்களைப் பெற்றுவந்தார். ஆனால் அப்பேரடியல் ரிடங்கூட ஆரூரர் ஒரு பொருளைப் பெறுவதில் சிவபிரானுக்கு விருப்பம் இல்லை. அதனால் சுந்தரர் வழியில் வரும் பொழுது திருமுருகன் பூண்டிக்கருகில் குறளைகளைக் கொண்டு அவைகளைப் பறித்திட்டுப் பின்பு தாமாக எல்லாப் பொருளையும் அளித்தார். இஃது வரலாற்று வழியாக அறியப்படுகின்றது. திருமுருகன் பூண்டிப் பதிகத்திலோ இச்செய்தி விளக்கமாகக் கூறப்படவில்லை. கொடிய ஆறலைப் போர் அங்கு வாழ்கின்றனர் என்பதைப் பற்றிப் பேசுவதனால் அவர்கள் இழைத்த அல்லலில் தாமும் துன்பம் பட்டிருப்பார் என்பதும், அவ் வேடர்களில் சிலர் இவருடைய பொருள்களைக் கவர்ந்து சென்றிருப்பர் என்பதும், அதனால் சிவபெருமானிடம் சென்று இப்பேர்ப்பட்ட கொடிய இடத்தில் அம்மையோடு தங்கியிருப்பது தகுதியன்று என்று பாடினார் என்பதும் 49 - ம் பதிகம் தெரிவிக்கின்றது. இப்பதிகப் பாடல்களின் போக்கு தம் நேயனின் துன்பம் கண்டு வருந்துவது போலக் காணப்படுகிறது. இப்படியே சிவபெருமான் 32 - ல் கோடிகரையில் தனித்து இருப்பதைக்கண்டு "அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே'' என இரக்கமாகப் பாடினார்.

9. சிவபெருமான் தம் நண்பனின் குறைகளையெல்லாம் பொறுத்து, சுந்தரருக்கு இன்ப வாழ்வு அளித்தனர் என்பதைப் பல பாடல்களில் புகன்றுள்ளார். நண்பர்கள் பல படித்தரமாக இருக்கின்றார்கள். அறிவு புகட்டும் நண்பர் சிலர். நெறி தவறினால் இடித்துரைக்கும் நண்பர் சிலர். நண்பனுக்குத் தீங்குநேர்ந்தால் தனக்கு வந்ததுபோல் உடுக்கை இழந்தவன் கைபோல உதவுபவர் சிலர். நண்பன் எதை விரும்பினாலும் அதை செய்துகொடுக்க உடன்படுபவர் சிலர். இவர்கள் தமக்கு ஓர் இழிவு ஏற்படினும் பொருட்படுத்தாது நண்பன் வேண்டுவதைத் தேடித்தருவார். சிவபெருமான் சுந்தரருடைய இனிய பாடல்களாகிய தேனை உண்டு மயங்குபவர். தேனுண்ணும் விருப்பால் தம் நண்பன் விரும்பினதைத் தடையில்லாமல் நிறைவேற்றுகின்றார். ஓர் உண்மை நண்பனைத் தவிர ஓர் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள ஊடலை தீர்க்க உடன்படுபவர் யார் : பரவையாருடைய அளவு கடந்த ஊடலைத் தீர்ப்பான் எம்பெருமானே உடன்பட்டார். இச்செய்தி ஏயர் கோன் கலிக்காமர் போன்ற அடியார்க்கு இடர் விளைத்தது. ஆனால் பிற்றைய நாள் அடியவர்களுக் கெல்லாம் தம் பாடலுக்குப் பொருளாய் நின்றது. ஒவ்வொருவரும் தியாகப் பெருமான், பரவையார் வீட்டிற்கு இரவில் நடந்து சென்ற திருத் தெருவில் ஒரு சிறு மணற்றுளியாய்க் கிடந்தேன் அல்லேனே என்றெல்லாம் பாடத் தொடங்கினார். சிவபெருமான் வேற்றுமையின்றி மண்ணுலக நண்பனைப் போலவே தமது சொல் தவறாமல் ஆரூரருடன் நட்புக் காட்டினார்.

10. பின்னும் நட்புக்காரணமாகத் திருவொற்றியூரில் சில திருவிளையாடல்களைக் காட்டியருளினார். சிவபெருமான் மகிழ மரத்தடியில் இருந்தால் தாம் சங்கிலியார்க்கு உறுதிமொழ கோயிலுள் செய்து விடுகிறேன். அது தனது திருத்தளிச் செலவிற்குத் தடை. செய்யாது என்று வேண்டவும் அதற்கு உடன்பட்டவர் போலக் காட்டிக்கொண்டு சங்கிலியாரிடம் ஆரூரை மகிழடியில் உறுதிமொழி தரவேண்டும் என்று கேட்கச் செய்தனர். இச்செயல்களெல்லாம் நோக்கினால் “மாப்பிள்ளைத் தோழன்" எனக் கூறப்படுவோன், மாப்பிள்ளையைப் பலவகையால் நகையாடுவது போலத் தோன்றும். பின்பு உறுதிமொழி தவறி, திருவொற்றி யெல்லை தாண்டினதும் கண்ணொளி மறைந்து துன்பெய்திப்பாடிய திருவெண்பாக்கப் பதிகத்தில் (89) ''பொன்னவிலுங் கொன்றையினாய் போய் மகிழ்க்கீ ழிருவென்று சொன்னவெனைக் காணாமே சூளறவு மகிழ்கீழே என்னவல்ல பெருமானே'' என்று மகிழடிச் செய்திகளை வெளிப்படுத்தினார். அதற்குமேல் ஊன்று கோலளித்து, காஞ்சியில் ஒரு கண்ணளித்து மற்றைக் கண்ணையும் திருவாரூரில் தந்தருளினார். தம் நண்பன் தீமை செய்தாலும் அறப்படி அதன் பயனை துய்க்கவேண்டும் என்பதை இங்கு உலகினுக்கு எடுத்துக் காட்டினார். ஆரூரரும் தாம் செய்தன சில துரிசுகள் என்பதை ஒப்புக்கொண்டே பாடு கின்றார். தாம் செய்த பிழையை ஒப்புக்கொண்டு விட்டால் எந்த நண்பன் தான் இரக்கங் கொள்ளான். அதிலும் அருள் வடிவாக விளங்கும் எம்பெருமானுக்குச் சொல்லவும் வேண்டுமோ! கண்ணை அளித்ததுடன் நில்லாமல் பரவையார் பிணக்கையும் தீர்த்து வைத்தார்.

11. சிவபெருமானை விளிக்கும்போது வழங்கும் சொற்களும் பலவிடங்களில் ஒரே நேயனிடம் உரை யாடுவது போலவே காணப்படுகின்றது. வழக்கில் உயர்ந்த படியிலுள்ள நண்பர்கள் ஒருவர்க் கொருவர் பேசும்போது 'நீர்',“ உம்மை' என்ற சொற்களை வழங்குவதுண்டு. 5 - ம் பதிகத்தில் “வல்ல தெல்லாம் சொல்லி யும்மை வாழ்த்தினா லும் வாய்திறந்தொன்று, இல்லை யென்னீர் உண்டும் என்னீர் எம்மையாள்வான் இருப்பதென்னீர்'' என்ற அடிகள் ஆரூரர் சிவபெருமானிடத்தில் எவ்வளவு நெருக்கமாகவும் அச்சு மின்றியும் உறவாடிப் பேசுகின்றார் என்பதைக் காட்டும். இன்னும் 14 - ம் பதிகத்தில் 'பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவரலா தில்லை யோ பிரானார்'' என்று துணிந்து கேட்கும் உரிமை ஒரு உயிர்த்தோழனுக்கே புரியதாகும். 18 - ல் "இவரது நடக்கை அறிந்தோமேல் நாம் இவர்க் காட் படோமே" என்று தம்மைக்கூட ஒருபடி உயர்த்திவைத்து பெருமை பேசுகின்றார். காரணம் அறிவு பொருட்டுக் கொண்ட நண்பன் என்ன சொன்னாலும் அதை "மலர் தூவுதல்” போல நினைக்கின்றார். தமக்குத் தோழராகிய சிவபெருமான் உதவிடத்தாழ்த்தால் சுந்தரர் சிலவிடங்களில் சீற்றமும் கொள்கிறார். கண்ணிழந்து வருந்திப் பாடுபடும்போது ஐயன் கண் தாராது ஊன்றுகோல் தந்தபோது மிக வெகுண்டவராய் “ஊன்றுவதோர் கோலருளியுளோம் போகீர் என்றானே " ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம் என்றானே" என ஒருமைப்படவும் பேசத் தொடங்கினார். அதையும் பொறுத்துக் கொள்கின்றார். இன்னும் 'பையரவா விங்கிருந்தாயோ" என்று கூடக்கேட்கலாமா? இவ்வளவு கடுமையாகப் பேசுனால் யார்க்குத்தான் சினம் வராது. அதனால் தான் ஊனறு கோல் மாத்திரம் அருளினார். பின் போகப் போக ஆரூரர் தாம செய்தது சரியன்று என்பதை உணர்ந்து வருந்திப்பாடய பாட, கண்ணொளி அளித்து ஆட்கொண்டு வேண்டியவற்றை யெல்லாம் மகிழ்ந்து அளித்தார். இந்த நட்பைத் தமிழ் உலகம் எடுத்து எடுத்துப் போற்றுகின்றது.

சித்தாந்தம் – 1942 ௵ - மே, ஜூன், ஜூலை, டிசம்பர், ௴


No comments:

Post a Comment