Sunday, May 10, 2020



விரிமனங் குவியும் வேளை
[வித்துவான் - முத்து. சு. மாணிக்கவாசகனார்]

தாயுமானவர் “விரிந்த மனமொடுங்கும் வேளையினா னாகப் பரந்த அருள்வாழி பதியே பராபரமே'' என்றும், ''எத்தனை விதங்கள் தாம் கற்பினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை'' என்றும், “சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது" - என்றும், “பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ'' என்றும், “ஆடிய கறங்குபோல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் காணிலேன்'' என்றும் பிறவாறும் பலபடியாகப் பாடியருளினார். 'அவர்க்கு மனம் விரிந்து குவியாதிருந்தது. அதனால் அது குவியும் வேளையை வேண்டினார்' என்று முடிவு கட்டித் தம் மனத்தைப் பற்றிக் கவலை கொள்ளாதார் பலர். இவர்கள் மனம், கிருமியைப் போல ஒன்று விட்டு ஒன்று பற்றிப் பாழாவது. இப்பாழ் மனம் கொலை முதலிய ஐம்பெரும் பாவ கங்கட்கும் ஆட்சிக்களமாகும். மனம் விரிந்தும் குவிந்தும் ஒருநிலைப் படாதிருக்கும் வரை இன்ப துன்பம் மாறிமாறி வந்து கொண்டிருக்கும். விரியும்போது துன்பமும் குவியும்போது இன்பமும் உண்டாதல் அதுபவம். இதுவே இன்பதுன்பக் கலப்புடைய வாழ்விற்குக் காரணம். இவ்வின்ப துன்ப நிலையினின்றும் நீங்கி இன்பநிலை ஒன்றே நாடி அது பெருங்கருத்து உயிர்க்கு எளிதில் வாராது. இன்பதுன்பக் கலப்புடைய நிலையிலும் துன்பமேயுள்ள நிலையிலும் அநுபவமுற்ற உயிர்க்கு, இன்பமேயுள்ள தனிப்பெரு நிலையில் வேட்கையுண்டாகும். அப்போதுதான் அவ்வுயிர்கள் தாயுமானவர் அருளியபடி, பின் விரியாத வகையில் மனம் குவியும் வேளையை வேண்டும். இன்ப நிலையைத் தெரிவிக்கும் 'கூடுதலுடன் பிரிதலற்று' என்று தொடங்கும் தாயுமானவர் திருப்பாடலை இங்குக் கருதவேண்டும். அப்பேரின்ப நிலையைப் பெறுதற்கே அறிவு, மறை, சமயம் முதலிய சாதனங்கள் உயிர்க்கு வாய்த்துள்ளன. இச்சாத னங்களிருந்தும் இவற்றைப் பொருளாகக் கொள்ளாமல் உயிர்கள் இன்பதுன்ப நிலையில் என் உழலுகின்றன? வினை எவரைவிட்டது?

வானத் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படுஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியிற் றெளிந்த" வாய்மை யன்றோ?

செய்வினை நல்வினையாயின் அது உயிரைத் துன்ப நிலைக்கும் இன்பதுன்ப நிலைக்கும் கொண்டு செலுத்தாமல் இன்ப நிலைக்கே செலுத்தும். 'வினை விதைத்தவன் வினையறுப்பான்' என்பது இரு வினைக்கும் பொது. நல்வினைப் பிரிவுகளுள் ஒன்றன் சிறப்பைத் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய ஒரு திருப்பாட்டு நன்கு விளக்குகின்றது. அது,

"அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது உந்தமக் கூனமன்றே?
கைவினை செய்துவம் பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீல கண்டம்"

என்பது முற்பிறப்பில் செய்த வினையே இப்பிறப்பில் அனுபவிக்கப்படுகின்றது என்பதை அறிபவர்களே! இவ்வினையின் நீங்கி உய்தி பெற விரும்பாதது குற்றமன்றோ? இவ்வினை எவ்வாறு நீங்கும்? சிவநல்வினையாகிய சிவபூஜை முதலியவற்றைச் செய்தால்தான் நீங்கும். இவ்வுண்மையைத் திருநீலகண்டத்தின் மேல் ஆணை வைத்துக்கூறியருளும் பான்மையை அறிந்து மனங்குவியும் வழியை நார்தல் ஒவ்வோருயிர்க்கும் உற்ற கடமையாகும்.

அத்தகைய உய்தியைப்பெற முதன்முதலாகப் பற்ற வேண்டியது, பொய்யாமை. அதைப் பெற்றால் தவவிரதம், சீலம், இரக்கம், ஈகை. மமதை நீக்கம், அகந்தை யின்மை என்பவை முறையாகத் தாமே வரும். அதன்பின் மனம் குவிந்தேவிடும் மோனநிலை உண்டாகும். பின் விரிவை அடையாது. இம்மனக் குவிவு உண்டாகும் வகையில் கற்றலும் கேட்டலும் உடையவரே பெரியோர். 'கற்றல் கேட்டலுடையார் பெரியார்' என்று இவரையே குறித்தல் காண்க. அகந்தை தொலைய மமதை அகலும், மமதை அகல ஈகை எய்தும், ஈகைஎய்த இரக்கம் இயல்பாகக் காரணமாய் முன்பேதோன்றிவிடும். இரக்கர் தோன்றச் சீலம் சிறந்து விளங்கும். சீலஞ்சிறக்கத் தவ விரதம் தவறாமல் வேண்டும். அவ்விரதம் பொய்யானமயை அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு ஒழுங்காக இல்லாதது பிறர் கேட்கப் போதிக்கவே கற்றதும் கேட்டதுமான கல்வியறிவாய் வெறும் போலியாய்ப் போம், இதனை “எத்தனை விதங்கள் தாம்” எனக் தொடங்கும் பாட்டால் தாயுமானார் விளக்கியருளினார். "அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்குந் தொழும்பர், உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கும்''. "யான் எனது என்றற்ற இடமே திருவடி", "மோன பரானந்தம் முடி'', “கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்' என்பவற்றை இங்கு எண்ணுக.

"இடம்பெறு வீடுமின் னார்சேய் சகமும் இருநிதியும்
உடம்பைவிட் டாருயிர் போம்போது கூடி யுடன் வருமோ
மடம்பெறு மாயை மனமே! இனி இங்கு வாமௌனி
திடம்பெற வைத்த மௌனம் சகாயம் தெரிந்துகொள்ளே"

அற்ப மனமே அகிலவாழ் வித்தனையுஞ்
சொற்பனங்கண் டாய்உண்மை சொன்னேன் நான் - கற்பனை
யொன்றில்லா இடத்தே எனைச்சும்மா வைத்திருக்கக்
கல்லாய் நீ தான்ஓர் கவி"                   - (தாயுமானர் பாடல்கள்)

சித்தாந்தம் – 1944 ௵ - ஜுன் ௴


No comments:

Post a Comment