Sunday, May 10, 2020



வழிபாடு
[திருமதி. சு. ராஜேஸ்வரி அம்மையார்]

இறைவனை அடைவதற்கு உயிர்கள் கடைப்பிடித்து ஒழுகும் ஓர் அறவழியே வழிபாடாகும். வழிபாட்டின் மூலம் அழியாத பேரின்பத்தை அடைவதே மக்கள் நோக்க மாக அமைகின்றது.

பழந்தமிழர் வழிபாடு:

ஆதிமனிதர் குகைகளிலும் மலைகளிலும் வசித்த போது பல இன்னல்களுக்குட்பட்டனர். வசதிகள் மிகக் குறைந்த காலம் அது. ஆக இயற்கையின் அல்லல்கள் அவர்களைத் துன்புறுத்தின. காற்று, மழை, இடி, இவற்றைக் கண்டு அஞ்சினர். பின்னர் அவற்றையே வழிபடவும் நேர்ந்தனர். பின் அவற்றால் பெறும் சில நன்மைகளைக் கருதித் தாம் செய்வது சரி எனவும் நினைக்கலாயினர். சூரியன் 'இருள்' என்ற அச்சத்தைப் போக்கி நிம்மதி அளித்தது - நெருப்பு, கொடிய மிருகங்களினின்றும் அவர்களைக் காப்பாற்றியது - உணவு வகைகளைப் பாகப்படுத்தியது. மழை பல வகைகளில் உதவி புரிந்து தமக்கு உதவியாக இருந்தது. சூலம், வேல், போன்ற கருவிகளையும் போற்றி வாழ்ந்தனர். நாளடைவில் அறிவும் அனுபவமும் வளர ஆரம்பித்தன. வழிபாட்டு வகைகளிலும் இவாகள் முற்போக் கடைந்தனர். கேளிக்கைகள், திருவிழாக்கள் ஆரம்பமாயின. தொல் காப்பியம், சங்க நூல்கள் ஆகியவற்றில் நால்வகை நிலங்களில் மக்கள் வாழ்ந்து அதற்குரிய வழிபாட்டுத் தெய்வங்களைப் போற்றிய செய்திகளைக் காண்கின்றோம். மிகப் பழைய ஆலயங்கள் மண்சுவர்களோடு கூரை வேயப் பெற்றிருந்தன. நாளடைவில் சுட்ட செங்கற்கள் உபயோகத்திற்கு வந்தன. பின்னரே கருங்கற்றிருப்பணிகள் நடைபெற்றன என்பதை வரலாறு தெரிவிக்கின்றது.

மிகப்பழங்காலத்திலிருந்தே ஒவ்வொரு வகையாக வழிபாடு நடைபெற்று வந்திருக்கின்றது. அவரவர் அறி விற்கும், பக்திக்கும், நம்பிக்கைக்கும், அனுபவத்திற்கும் ஏற்ப வழிபாடு நிகழ்ந்து வந்துள்ளது. சாதாரண உயிர்ப்பலி கொடுத்து வழிபடும் நிகழ்ச்சிகள் இன்று கூட சிற்சில இடங்களில் இருப்பதைக் காண்கிறோம் - இது முதல் பெரிய மகான்கள் அமைதியாக ஆழ்ந்த யோகத்தமர்ந்து அடியவர்க்காக வாழும் வாழ்க்கை வரை வழிபாட்டில் இடம் பெறுகின்றது.

வழிபாடு யாரால் எப்போது செய்யப்படுகின்றது?

துன்பம் வரும்போது மட்டும் சிலர் வழிபடுகின்றனர். எப்பொழுதுமே வழிபாடாற்று கின்றனர். உலகில் எத்தனை கோடி மக்கள் உள்ளனரோ அத்தனை கோடிவகையாக வழி பாடு நடைபெறுகின்ற தென ஒரு பெரியவர் கூறியுள்ளார்.

There are as many different ways of praying as there are different individuals”

எல்லோருமே ஏதாவது ஒரு சமயத்தில் கட்டாயம் ஆண்டவனை வழிபட்டே ஆக வேண்டும். இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர், என்ற பாகுபாடில்லை - பேராசிரியர் வில்லியம் ஜேம்ஸ் என்பவர் கருத்தில் "வேறு ஒன்றும் செய்யத் தெரியாதவன் கூட ஆண்டவனிடம் முறையிடும் முறையை அறிந்துள்ளான்'' எனக் கூறுகின்றார். காலரிட்ஜ் என்ற போறிஞர் மனிதன் அறிவு வளர்ந்து கொண்டே வரும் போது அதன் சக்தி இறுதியாக அவனை வழிபாட்டில் கொண்டு அழுத்துகின்றது" என உரைக்கின்றார். கார்லைல் என்பவர் ''மனிதசுபாவமே வழிபாடு செய்வதிலேயே அமைந்துள்ளது. ஆக தனிமுயற்சியின்றி நடை பெறும் ஒரு செயலாகவே அதைக் கருத வேண்டும் என்கின்றார். வழிபாடு பலவகையாகச் செய்யப்பட்டு வருவதை நாம் காண் கின்றோம். மிகுந்த ஆரவாரத்துடன், உரக்கச் சத்தமிட்டுப் பாடல்களைப் பாடிப்பரவசப்படுபவரும் உண்டு. அமைதியாக ஒருவருக்கும் தெரியாமல் ஒரு புறமிருந்து வழிபடுபவரு முண்டு. கடவுள் சம்பந்தப்பட்ட பொருள்களைப் பார்க்கும் போது அந்த ஞாபகத்துடனிருப்பவரும் உண்டு உதாரணமாக ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ பிரயாணம் செய்யும் போது கோபுரத்தைக் காணும் போது ஒரு கும்பிடு போட்டு விட்டு அடுத்த நிமிஷமே வீண்விதண்டாவாதங்களில் இறங்குபவர் பலரைப் பார்க்கிறோம். உண்மையான வழிபாடு, எவ்வளவு குறுகிய காலமாயிருப்பினும் ஆண்டவனோடு கலந்து உணரும் நிலையை அடைய முயற்சிப்பதே யாகும். பலமணி காலம் பலவித கிரியைகளோடு சிவபூசை செய்தும் ஒரு வினாடிகூட ஆண்டவனுடன் கலந்து கொள்ள முடியாத நிலையைவிட, சில நிமிஷங்களாவது மனத்தை அடக்கி ஆண்டவனுடன் உறவு கொள்வதே சிறந்த வழிபாடாகும். இதைக் கூறுவது மிக எளிதாகும். நடைமுறையில் செயலாற்றி உணர்வு பெறுவது நமது பூர்வபுண்ணியப் பயனே யாகும் என ஒரு ஆங்கில அறிஞர் அழகாகக் கூறுகிறார். "It is lip work and not heart work''

வழிபாடு அவசியமா?

ஒருவனுக்கு மூச்சுவிடுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் வழிபாடு செய்வதாகும். உயிரை உடலோடு பிணைக்க மூச்சு அவசியமாகிறது. அங்ஙனமே உயிரை இறைவனோடு பிணைக்க வழிபாடு வேண்டப்படுகின்றது.

வழிபாட்டிற்கு நம்மை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டியதாகிறது. இதற்கு மூன்று இன்றியமையாதவையா கின்றன. அவை தூய உள்ளம் (Pure Heart) உயர்ந்த வாழ்க்கை (Noble life) அறவழி (Moral Conduct) இதைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்துள்ளார் வள்ளுவப் பெருந்தகையார் "பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்" எனவும் "ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்'' எனவும் கூறியுள்ளார்.

வழிபாட்டிற்கு அடிப்படையாக வேண்டியது நம்பிக்கை. மனித வாழ்க்கையே நம்பிக்கையைக் கொண்டு தான் நடக்க வேண்டியுள்ளது. நம்பெரியவர்கள் அல்லது முன்னோர்கள் சில வழிகளில் நடந்து பல நன்மைகளைப் பெற்றனர் என்பதை உணர்ந்த நாமும் அதே வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டாமா? வழிபாட்டின் மூலம் சாதிக்க முடியாத சாதனைகளைப் பெற்ற பலாது வாழ்க்கை நம் உணர்வுக்கு வருங்கால் நாமும் அதை அடைய முயற்சிக்க வேண்டாமா?

டென்னிசன் என்ற ஆங்கிலக்கவிஞர் கூறுகிறார். More things are wrought by prayer than this world dreams of”

இத்தகைய நம்பிக்கையை நாம் பெறுவதற்கு இறைவன் அருள் வேண்டும். இதைத்தான் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனவும் "அவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படியன் இந்திறத்தன் இவ்வண்ணத்ததன் இவன் இறைவன் என்றெழுதிக் சாட்டொணாதே" எனவுங் கூறப் பட்டுள்ளன. ஒளவையார் குறள்.
"எல்லாப் பொருளும் முழக்கலாம் ஈசன் தன்
தொல்லை அருள் பெற்றக் கால்            எனக்கூறுகின்றது.

நம்சைவ சமயத்தில் வழிபாட்டை நான்கு மார்க்கங்கள் மூலம் நம் சமயாசாரியர்கள் நடத்திக்காட்டியுள்ளனர். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதாகும். சுருங்கக் கூறின் சரியை உடம்பும் உடம்பினால் செய்யும் தொண்டும்;
கிரியை உடம்பும் மனமும் சேர்ந்து வழி பாடாற்றுவது. யோகநிலை கடவுளைத் தம் அகக்கண்ணால் கண்டுவக்கும் காட்சியாகும். இம்மூன்று நிலையுங் கடந்த பின்னர் அடையும் பேறே ஞானமாகும். இந்நான்கு மார்க்கங் களில் திருநாவுக்கரசர் தாசமார்க்கத்தையும், திருஞான சம்பந்தர் சற்புத்திரமார்க்கத்தையும், சுந்தரமூர்த்திநாயனார் சகமார்க்கத்தையும், மணிவாசகர் சன்மார்க்கத்தையும் நிலை நாட்டினர் எனக் கூறுவதுண்டு.

வழிபாட்டைத் தனியே செய்து தனக்கு நன்மை தேடிக் கொள்வார் பலர். கூட்டமாக வழிபாடாற்றிப் பலருக்கும் நன்மை பயக்குமளவில் நடத்து பவருமுண்டு. கிருத்தவ, முகம்மதிய மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி ஒழுங்காக வழிபாடு நடத்துவதை நாம் பார்க்கிறோம். நம் மக்களும் நடராஜர் தெரிசனம் அண்ணாமலையார் தீபம் போன்ற விழாக்களில் பலலட்சக்கணக்காகக்கூடினாலும் ஒழுங்காகவும் அமைதியாகவும் வழிபட இன்று அறிந்து கொள்ளவில்லை. இது நடை பெற்றால் வழிபாட்டின் பலன் இன்னும் அதிக மாகும். தோத்திர ரூபமாகப் பல ஆசாரியப் பெருமக்களி யற்றி உபகரித்துள்ள பாடல்களைப் பாடி வழிபடலாம். மந்தி ரங்களை ஜெபித்து அதனால் பலனுறலாம். "உரு ஏற உரு ஏறத்திரு ஏறும்''  என்ற பழையமொழி ஒன்றுண்டு. வழி பாட்டிற்கு ஏதுவாக இருப்பது தியானிக்கப்படும் உருவம், பின்னர் அதற்குரிய மந்திரம், பாடல்கள். மூன்றாவதாக அடியார்கள் கூட்டுறவாகும்.

உரிய காலத்தில் அதற்கு வேண்டிய நியம நிஷ்டைகளுடன் ஒருவன் தன் வழிபடு தெய்வத்தின் உருவத்தை மந்திரங்களுடனும் தோத்திரப் பாக்களாலும் வழிபாடு செய்து வருவானேயாகில், நிச்சயமாக ஆண்டவன் அருளுக்குப் பாத்திரமாவான். வழிபாட்டின் சக்தி ஒன்றே மகாத்மா காந்தியைக் கண்டு அஞ்சவேண்டிய நிலையை உலகப்பெரும் சாம்ராஜ்யமாகிய பிரிட்டனுக்கு அளித்தது.

வழிபாட்டின் பலனாகப் பல நோய்கள் குணமடைந்துள்ளன. இன்றும் பத்திரிகைகளில் இத்தகைய செய்திகள் வந்து கொண்டுள்ளன. சமயவாழ்க்கையை நடத்தினால் தான் அதன் உண்மைகளைக் கண்டு உணர்ந்து அநுபவிக்க முடியுமே பொழிய அதைப் படிப்பதால் மட்டும் தெரிந்து கொள்ள முடியாது. வழிபாட்டின் மூலம் கடவுளை நம்மிடமே அழைத்துக் கொள்ள முடிகின்றது. அகஸ்டின் என்ற பாதிரியார் "Give me thine own self, எனவும் கெம்பிஸ் என்பவர் "Bestow on me thy self'' எனவுங் கூறியுள்ளமை மணிவாசகாது,

"தந்தது உன் தன்னைக் கொண்டது
தன்னைச் சங்கரா யார் கொலோ சதுரர் என்"

என்ற உண்மை வாசகத்தை உறுதிப்படுத்துகின்றதல்லவா!

தொண்டரஞ்சுகளிறும் அடக்கிச் சுரும் பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால்
வண்டு பாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனை நீல மொட்டலருங் கேதாரமே''

சித்தாந்தம் – 1962 ௵ - ஜுன் ௴


No comments:

Post a Comment