Saturday, May 9, 2020



பித்தவுலகில் பெருமக்கள் உருவ வழிபாடு
சித்தாந்தச் செல்வர்
அ. தா. ப. திருஞான சம்பந்தன்

உலகில் உருவ வழிபாடு பண்டு தொட்டே நிகழ்ந்து வருகின்ற தென்பதை யாவருமுணர்வர். அங்ஙனமிருப்பினும், எங்கும் நீக்கமற நின்றெழில் பெற்றிலங்கு மாண்டவன், இயற்கை வயத்தனாய் நின்று, உலகியற்காரியங்களுக்குத் துணை நிகழ்த்துகின்றான் என்பது சிற்சிலரின் கூற்று. இறைவன் எல்லாத்தன்மையுடன் விளங்கி நிற்கின்றான். உலகியற் பொருட்களெல்லாந் தோன்ற மூலகாரணனாக விளங்கு மண்ணல் எம்பெருமானே, இறைவன் உருவினனாகவுமுள்ளான்; உருவமற்றவனாகவுமுள்ளான்; உருவமும் அஃதற்ற தன்மையனாகவும் விளங்குவான். அவன் எவ்வழியில் நிற்பினும், அவன் நிகழ்த்தும் செயல்கள் எல்லா வகையானும் உயர்வுடையன. ஒன்று மற்றவொரு பொருளை யெண்ணி யெண்ணி, யேங்க வியலாது. ஒரு பரம்பொருளை உருவ நிலையானுள்ளத்திற் கொண்டாலன்றி, எச்செயலையு முன்னி, நன்னிலைத் தேர்வு பெறுதல் சாலாது.

பல வாண்டுகள் தவங்கிடந்த மூதாளர்கள் - அளப்பரிய தவமியற்றி ஞானப்பேறு பெற்றவர்களும் - உருவ வழிபாடு மக்களினத்திற்கின்றியமையாத தொன்றென்பதை மிகவும் சீராட்டித் தெளிவுறுத்தியுள்ளனர். திரு மூல தேவநாயனாரும் திருமந்திரத்தில் சதாசிவம் நிலையை நலங்கண்டுரைத்த லீண்டெல்லா வகையானும், செம்மையுறக் கண்டு, போற்றி யொழுகுதற்குரியதாகும். உருவமும், உருவமற்றதும், உருவத்தோடுருவற்ற நிலையும் உருவமேயற்ற தன்மையும் பெற்றபழம் பெரும் பொருளான சிவன், மன்பதையில் உயிர் வாழும் அத்துணை மக்கட்கும், குருவின உருவமாக நிற்குங் கொளகையனாகவமைந்தும், கற்பக தருவை யொத்து வேண்டியதை - வேண்டியாங் கீயுந் தேவ தருவை யொத்து - விளங்குகின்றான் சதாசிவன் என் றமெய்ந்நிலையை விளங்கியருள் கின்றார் திருமூல தேவ நாயனார்.

உருவு மருவு முருவோ டருவு
மருவு பரசிவன் மன்பல் லுயிர்க்குங்,
குருவு மெனநிற்குங் கொள்கைய னாகும்,
தருவென நல்குஞ் சதாசிவன் றானே.        - திருமந்திரம் - 1763.

சிவ வணக்கமே சிறப்புடையது. சிவன் உருவினன். அவனிற் பாதியாக வுமையம்மை யமைகின்றாள். அவனையோ, அன்றி அவளையோ, தனித்தோ, வொன்றியோ, வழிபடினும், அஃதும், சிவ வழிபாட்டின் நிலையதேயாகும் என்கின்ற உண்மையுயர் கருத்தைத் திருமூலதேவர் அருளுகின்றார். அளப்பரிய அண்டங்களெல்லாம், கால் கொள்ளுதற்கு முன்னமே தோன்றிய ஆதிபரந் தெய்வமும், அண்டகோளங்கட் கெல்லாம் நற்றெய்வமும், சோதியின் தன்மையனான எம்மானின் அடியார்கள் பின் தொடர்ந்து செல்லும் பெருந்தெய்வமும், நீதிக்குரிய பெருந்தெய்வமும், மலமற்ற வெம் இறைவன் பாதியுள் விளங்கும் தன்மையைப் பெற்றவள் பராசக்தியே! இதனால் அறிவ தென்னையெனின், அடியார்கள் பின் தொடரும் தன்மையனாய்ப் பெருமான் விளங்குகின்ற னென்னின், அவன் உருவங் கொண்ட திரு மேனிய னென்பதை ஈண்டெல்லா வகையாலும் உணர்தல் பாலது.

ஆதிபரந் தெய்வ மண்டத்து நற்றெய்வஞ்
சோதி யடியார் தொடரும் பெருந் தெய்வ
நீதியுள் மாதெய்வ நின் மல னெம்மிறை
பாதியுண் மன்னும் பராசக்தி யாமே..!               -  திருமந்திரம் - 1767.

திருந்திய சீலத்தோடு, திருக்தமிது நீறணிந்து, திக்கெங்கும் போற்றிப் பரவும் நிலைபடைத்த வடியவர்கள், எஞ்ஞான்றும் இறைவனின் தண்ணருணாட்டத்திலேயே திளைப்பவர்கள். அவர்களுக் கிறைவன் உருவக் கோலங் கொண்டு வேண்டியதை நல்குகின்றன. இறைவனுக் குருவுண்டெனின், அவன் மானிட வியல், கொள்ளுங்கால் நடந்து வந்தருளுவது திருப்பாதங்களாலன்றோ? அத்தகைய நடந்து வந்தருள் பாலிக்கும், தண்ணருட் கருணை தோய்ந்த பெருமானின் திருவடிகள் மிகவும் பேறு பெற்றவையே! இப்பேற்றைத் தெளிவிக்குந் திருமந்திரத்தைக் காண்க ! திருவடியே சிவமாகும். ஞான வயத்தான் றெளிந்தால், திருவடியே சிவலோகம். நன்காய்ந்து ஞான நாட்டத்தான் முடிவு கண்டின்புறின், திருவடியே முத்தி நிலைக்குரியதாகும். சிந்தித்துச் சிறப்பாய்ந்து, நோக்கோடு விளம்பின் உள்ளந்தெளிவார்க்குத் திருவடியே தஞ்சம் - புகலிடம் - ஆதரவுமாகும். உள்ளத் தெளிவு தோன்றின் திருவடிப் பேற்றின்பம் பெறல் எளிதினு மெளிதாகும்.

"திருவடியே சிவமாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல்கதியது செப்பிலக்
திருவடியே தஞ்ச முட்டெளி வார்க்கே."             -திருமந்திரம்- 138.

திருமுறையொன்பதில், கண்டராதித்தர் திருவிசைப்பா வொன்பதில், எம்மானின் திருவுருவத்தின் நிலையைக் குறிப்பிடுகின்றார். நெருப்புருவை உருவமெனத் தருக்க முறையில் ஆய்ந்தியம்புகின்றார். நெருப்பு எரியுங் கால் பாலைத் தன்மையில் வளியின் நிலைக்காட்படும், அங்ஙனம் ஆடிட்டுச்சுழன்று சுழன்று செங்குத்தாயும் ஒருபக்கமாயும் வெருண்டு, கீழ்ப்புறம் சாய்ந்து எரியும் நிலையைக் காண்கின்றோம். அஃதும் உருவின் பாற்பட்டதென்றே விளம்புகின்றார். காற்று அடிக்கின்றதென்பதையுணரலாம். உருவங் கற்பிக்க வியலாது. நெருப்பு எரிகின்ற காலை தணலையு முணரலாம். அஃதோடு உருவையுங் காணலாம். எனினும் உருவத்தைக் கையாற் றொட்டுணர்த லியலாது. காணுந் தன்மைய தாய் ஒன்றமையினும் அஃதும் உருவின் பாற்பட்டதாகும் என்ற திருவருட்கருத்தை விளக்குகின்றார். அதனாற்றான், நெருப்புருவும், உருவத்தின் பாற்பட்ட தென்றும், அந்நிலையே இறைவன் பேருருவென்றும் விளம்புமாற்றல் கண்டராதித்தற்குத் தோற்றிற்று.

இறைவன் உருவத்தில் எரியுருவாய் நின்று, பல்லூழிகள் தோறும், யாண்டும் பரவிக் கிடந்த, பிரமனும், திருமாலும், பணிந்தேத்தும் நிலைபெற்றவனாவன் பெருமான். கதிரவனுக்கு நேரே நின்று, இலங்குந்தன்மை பெற்று, மாளிகைகள் சூழ்ந்து மேன்மையைச்செய்விக்கும் அம்பலமே தில்லைக் கூத்தப் பெருமானுக்கு, ஆடும் அரங்க மாயிற்று.

உருவத்து எரியுருவாய் ஊழிதோ றெத்தனையும்,
பரவிக் கிடந்தயனும், மாலும் பணிந் தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகை சூழ்
தரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே!        -திருவிசைப்பா - 9 (193)

கந்தபுராண மென்னும், தன்னேரிலாத முத்தமிழில் தெய்வமான திருமுருகப்பெருமானின் சீர்த்தியைப் போற்ற வந்த கச்சியப்ப சிவாசாரியரும் உருவ வழிபாட்டின் சிறப் பியல்புகளீனும் தன்மைகளைப் பெருவிளக்கமாக வருளுகின்றார். கந்தபுராணம் பின்றைக் காலத்தே கச்சியப்ப முனிவரால் இயற்றப் பெற்ற தெனினும், தத்துவவுருவமா யமைந்த கந்தப் பெருமான் கீர்த்தியைத் தோற்றுவித்த காலம் மிகவும் பழமையதாகும். தத்துவப் பொருளான முருகப் பெருமான், அறிவினுக் கறிவாய், ஆன்ற பேரறிவு பெற்றவர்களுக்கு முழுமுதலாயமைந்தவன். அவன் தோன்றிய வுயர் நிலையைக் கூறவரும் கச்சியப்ப முனிவர், உருவ வழிபாட்டின் சீர்மைசால் நிலையை நன்குணரலா மாறு, விளக்கியருளியுள்ளார்.

உருவ மற்ற தன்மையாயும், உருவம் உள்ள தன்மை யாகவுமாகி, மிகவும் பழமையானதாகவும் பலவாகவும், ஒன்றாகவும், பிரம்மமயமாகவும், நின்ற சோதிப் பிழம் பினதான மேனியாக, கருணைக் கிருப்பிடமாகத் தோய்ந்த ஆறுமுகங்களும், பன்னிருகைகளும் கொண்டு, ஒரு திரு முருகன் உலகம் உய்ய உவந்து தோன்றினான் என்றருளுகின்றார் கச்சியப்ப முனிவர். ஈண்டு, சோதிப் பிழம்பின தான மேனி பெருமானுக் குண்டு வென்பதைக் குறிப்பிடு கின்றார் முனிவர். திருமேனி செந்தழலின் தன்மையை நிகர்க்குங் காலத்தே, சோதியுருவாகின்றது. அங்ஙனம் வாய்க்கப் பெற்றிலங்கும் சோதியுருவமே முருகனின் உருவம் என்று புலனாகின்றது.

அருவமு முருவுமாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்   
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய.
- கந்தபுராணம் - திருவவ - 92.
திருமுருகப் பெருமானின் தோற்றம் எத்தகைய சிறப்பீனும் தன்மை வாய்க்கப் பெற்ற தென்பதை ஈண்டோர் பாடல் மூலம் நன்குணரலாம். வேதங்களின் முடிவாலும், வாக்காலும், மனத்தாலும், அளக்க வொண்ணாத, யாண்டும் நீக்கமற நின்று நிலவி விளையாடும் நிமலமூர்த்தி ஆறு முகங்களைக் கொண்ட உருவாகத் தோன்றி, சரவணப் பொய்கையில், மணங்கமழும் தாமரை மலரின் கண் வீற்றிருந்தருள் பாலித்தான் என்று கச்சியப்ப முனிவர் திருமுருகப் பெருமானின் திருவுருவத்தின் சிறப்பினை எடுத்தியம்புகின்றார். இத்தகைய பெருமானே கலியுக தெய்வம்; அறுவினைகளையும் போக்கி உய்விக்கும் உயர்ந்தோன். முத்தமிழ் வளங் கொழிக்க, எந்நாளு மிடை விடாது, முன்னின்று காக்கும், நற்றெய்வம். இத்தகைய தமிழ் மொழியின் தொன்மைக் குறைவிடமாகி, விளங்கித் தோன்றிய பெருமான் உருவு பெற்றிலங்கினன் என்பது எல்லா வகையானும் கண்டாய்ந்து, நலமடைதற்குரியது. உருவ வழிபாடு தமிழ் நாட்டிற்கு மிகவும் தொன்மையானது. உருவ மற்ற வழிபாட்டைத் தமிழ்ப் பெருமக்கள் என்றும் விரும்பவில்லை. தொன்மைச் சிவநெறியும் உருவ வழிபாட்டிற் றிளைத்ததாகும். பித்தவுலகமே யெனினும், வழிபாடு என்று முண்டு.

மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக் கொணா
நிறைவுடன் யாண்டுமாகி நின்றிடும் நிமல மூர்த்தி
அறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின்,
வெறிகமழ் கமலப் போதின் வீற்றிருந் தருளினானே!
- கந்தபுராணம் - திருவவ - 96.

சித்தாந்தம் – 1964 ௵ - மார்ச்சு ௴






No comments:

Post a Comment