Saturday, May 9, 2020



திருவிளையாடற் புராணம்

[நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்]

திருவிளையாடற் புராணம் என்பது மதுரையம்பதியிற் கோயில் கொண்டிருக்கும் பரங்கருணைத் தடங்கடலாகிய சோம சுந்தரக் கடவுளால் அடியார்கள் பொருட்டு நிகழ்த்தி யருளிய அற் புதமான விளையாடல்களை யுணர்த்தும் தமிழ் நூலாகும். மதுரைப் பதியானது செந்தமிழ்ப் பாண்டி நாட்டிலே படைப்புக்காலக் ... பட்டுவரும் பழங்குடியினராகிய பாண்டி வேந்தர் .... வீற்றிருக்கும் தலைநகராயது; பன்னெடுங் ... தமிழாராயப் பெற்ற தகுதிப்பாடுடையது; ... பாண்டிநாட்டுப் பதிலன்கு திருப்பதிகளுள், .... ஆலவாய் முதலிய திருப்பெயர்களையுடையது. அதன்கண் உறையும் இறைவனுடைய அருட்செயல்கள் திரு விளையாடல் எனப்படுவன. வரம்பிலா ஆற்றலுடைய இறைவன் செய்யுஞ் செயலெல்லாம் வருத்தமின்றி இனிதின் முடிதலின் அவற்றை அவன் விளையாட்டுக்கள் என்பர். “காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி" என்னும் திருவாசகமும், "சொன்னவித் தொழில்கள் என்ன காரணம் தோற்ற வென்னின், முன்னவன் விளையாட்டென்று மொழிதலு மாகும்" என்னும் சிவஞானசித்தியும் நோக்குக. ஏனோரும் இங்ஙனம் விளையாட்டென்று கூறுவரென்பது "அலகிலா விளையாட் டுடையார்" என்னும் கம்பநாடர் கூற்றானறிக.

சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடல்களை உணர்த்தும் நூல்கள் பல. அவற்றுள், திருவிளையாடல்கள் பலவற்றையும் விரித்துரைப்பனவாய், திருவிளையாடற் புராணம் என்னும் பெயருடன் திகழ்வன இரண்டு. அவற்றுள் முன்னது செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவரால் இயற்றப் பெற்றது;  திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் எனப்படுவது; வேம்பத்தூரார் திருவிளையாடல் எனவும், பழைய திருவிளையாடல் எனவும் வழங்கப் பெறுவது. பின்னது திருமறைக்காட்டிலே அபிடேகத்தர் மரபிலே தோன்றிய பரஞ்சோதி முனிவரால் இயற்றப் பெற்றது. முன்னதிலும் ஏறக்குறைய இருமடங்கு விரிவுடையது; கற்பனை யலங்காரங் களில் சிறந்தது; சொன்னயம் பொருணயம் மிக்கது; சைவ நன்மக்கள் யாவரானும் பெரிய புராணத்தை யடுத்துப் பாராட்டிப் பயிலப் பெறுவது. "பத்திச்சுவை நனிசொட்டச்சொட்டப் பாடியகவிவலவ" எனவும், “தெய்வ மணக்குஞ் செய்யு ளெலாம்" எனவும் சேக்கிழார் பெருமானையும் பெரிய புராணத்தையும் குறித்து மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கூறியன இந்நூலாசிரியர்க்கும் இந்நூலுக்கும் ஏற்புடையனவே. தான் தோன்றிய பின், பழைய புரா ணத்தை மூலையில் ஒடுங்கிக் கிடக்கச்செய்து, திருவிளையாடற் புரா ணம் என்ற வளவில் தன்னையே நினைவுகூரச் செய்து உலகெங்கும் உலாவி வருதெலொன்றே இதனது பெருமைக்குச் சான்றாகும். சமய நோக்கம் முதலியனவின்றியே இலக்கியவளம் கருதித் தமிழ் மக்கள் யாவரும் விரும்பிப் படிக்கின்ற நூல்கள் நைடதம், திருவிளை யாடற் புராணம், வில்லி பாரதம், கம்பராமாயணம் முதலியவா மென்பது பலரும் அறிந்தது. எனவே, பழைய வரலாறுகளின் வாயிலாக மறைகளின் பொருளை வெளிப்படுத்தலில் பணம் எனப்படும். இந்நூல் பெருங்காப்பிய இலக்கணங்ககையிரா யிருத் தலின் காப்பியம் என்னும் பெயருக்கு முற்றும் ஏற்புடையதே யாகும். தன்னிகரில்லாத தலைவனையுடையதாய், மலை கடல் நாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம் என்ற இனையன புனைந் துரைப்பதாய், நன் மணம் புணர்தல், பொன்முடி கவித்தல், பூம் பொழில் நுகர்தல், புனல் விளையாடல், தேம்பிழி மதுக்களி சிறு வர்ப் பெறுதல் என்றிவை முதலியவற்றையும் மந்திரம் தூது மேற் செலவு போர்வென்றி முதலியவற்றையும் இனிதியம்புவதாய், உறு திப் பொருள் நான்கும் பயப்பதாய், சுவையும் பாவமும் தோன்றச் செய்து விளங்குவது பெருங்காப்பியம் என்ப. இந்நூலகத்து ஆண் டாண்டு இவ்வியல்புகள் அமைந்திருத்தல் கண்கூடு. மற்றும் இந் நூலாசிரியர் இதனை ஓர் காப்பியமாகக் கருதியுள்ளாரென்பது,

தன்னிக ருயர்ச்சி யில்லான் காப்பியத் தலைவனாக
முன்னவர் மொழிந்த தேனோர் தமக்கெலா முகம னன்றோ
அன்னது தனதே யாகும் அண்ணலே பாண்டி வேந்தாய்
இந்நகர்க் கரசனாவான் இக்கவிக் கிறைவ னாவான்.

எனக் கூறுவதனால் விளங்கும். இவ்வாறு புராணமும் காப்பியமுமாகவுள்ள இந்நூல் சைவர்களுக்கு ஒரு சமய நூலும் பத்தி நூலுமாகத் திகழ்கின்றது. இந்நூலாசிரியர் சங்கச் செய்யுட்களிலும், சீவக சிந்தாமணி முதலிய பெருங் காப்பியங்களிலும், பன்னிரு திருமுறைகளிலும், சைவ சித்தாந்த மெய்ந்நூல்களிலும் அழுந்திய பயிற்சியும் புலமையும் உடையார்; பெருமிதமுடைய இனிய நடையுடன் கவிதையியற்றுந் திறன் இயல்பிலே கைவரப் பெற்றவர். இவர் பழைய தமிழ் ஏற்கருத்துக்கள் பலவற்றை இந்நூலில் ஆண்டாண்டு எடுத்தமைத்திருத்தலை இதற்கு யான் எழுதிய உரையில் எனது சிற்றறிவிற்கு எட்டியவாறு புலப்படுத்தியுள்ளேன். எடுத்துக் காட்டாகப் பின்வருவன சில காண்க.

"வையை தன், நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார்,
போர்முற் றொன்றறியாத புரிசைசூழ் புனலூரன்'

என்னும் மருதக்கலியின் கருத்து.

அம்மதில், திரைக்கரந் துழாவி,
அகழவோங்குநீர் வையையா லல்லாது வேற்றுப்
பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே''

என இந்நூலின் மதிற்சிறப் புணர்த்துஞ் செய்யுளில் அமைக்கப் பெற்றுளது.

வஞ்சவினைக் கொள்கலனா முடலைத் தீவாய்
மடுக்கிலேன் வரைபுருண்டு மாய்ப்பே னல்லேன்"

மழக்தேறாச் சிறியனா மொருமதலை கையிற்கொண்ட
      செம்பொன் மணிவள்ளம் போற்றேவர் யார்க்கும்
      அறிவரியாய் சிறியேனை யெளிவந்தாண்ட அருமை யறியேன்"

என்பனவாதியாக வாதவூரடிகள் பரவுக்கூற்றில் வைத்து இவ்வாசிரியர் பாடியிருப்பன அறிந்து மகிழ்தற்குரியன.
  
இனி, தருமிக்குப் பொற்கிழி யளித்த படலத்தில், இளவேனிலின் இயல்பையும், பொழில் விளையாட்டு முதலியவற்றையும் நகைச்சுவை முதலியன தோன்ற விரித்துரைத்திருப்பன இவ்வாசிரியரது கற்பனைத் திறத்தை நன்கு விளக்குவனவாகவுள்ளன.

"மனிதர் வெங்கோடை தீர்க்கும் வசந்தமென் காலும் வேறு
 அனிதவி ரிளங்கால் வேண்டும் சோலையுஞ் சோக வேண்டும்
 புனிதநீர்த் தடமும்வேறு புதுமல ரோடை வேண்டும்
 மனிதரு மதியும் வேறு பான்மதி வேண்டும் காலம்"

என்னும் இளவேனில் வருணனையும்,

''சாடியுள் நறவ முண்டாள் தன்னுரு வேறுபாட்டை
 ஆடிபுள் நோக்கி நானே வல்லனே எனைத்தான் கைக்கொண்
 டோடினர் பிறருமுண்டோ வயிரன்னான் வந்திங் கென்னைத்
 தேடினென் செய்கேன் என்னைத் தேடித்தா சேடி யென்றாள்"

என்னும் உண்டாட்டுப் புனைவும் கற்பாரை இன்புறுத்துச் தகையினவாதல் காண்க.

இவ்வாசிரியர் சிவ சிந்தனை மேலிட்டவராய்த் தெய்வ மணக் கமழ இந்நூலை யாத்தளா ரென்பது, மேகம் தெய்வ நாயகன் நீறணி மேனிபோற் சென்று கடல் நீரைப் பருகி, உமையம்மை மேனிபோற் பசந்து, இறைவன் உயிர்களின் துன்பத்தைப் போக்குதற்கு அருள் சுரத்தல் போல், நீரினைச் சுரந்து எழுந்தது என்றும் அது, பொதியின் மலையின் உச்சியில் மழையைப் பொழிவது  ராமபிரான் சோமசுந்தரக் கடவுளின் திருமுடிமேல் தூய நீரால் திருமஞ்சன மாட்டுதல் போலும்  என்றும், நெற் பயிர்கள், 'அன்புறு பக்த வித ஆர்வரீர் பாய்ச்சுக் கொண்டருக்கு இன்புறுவான வீசன் இன்னருள் விளையுமா போல்' விளைந்தன என்றும் உலகியற் பொருள்களைக் கூறுமிடத்தும் இங்ஙனம் உவமை கூறிச் செல்லுதலால் அறியப்படும். மற்றும் அவர், நீர்ப் பெருக்கின் கலக்கத்திற்கும் தெளிவுக்கும்,

 மறைமுதற் கலைகளெல்லாம் மணிமிடற் றவனே யெங்கும்
 விறைபர மென்றும் பூதி சாதன நெறிவீ டென்றும்
 அறைகுவ தறிந்துந் தேறார் அறிவெனக் கலங்கி அந்த
 முறையின் வீடுணர்ந்தோர் போலத் தெளிந்தது மூரிவெள்ளம்"
 எனவும், அகழியில் வீழ்ந்தோர் கரையேற மாட்டார் என்பதற்கு,

 தெண்ணிலாமதி மிலைந்தவர்க் கொப்பெனச் சிலரை
 எண்ணினா ரிருள் நரக நீத்தேறினும் ஏறார்''

எனவும் உவமை கூறுதல் முதலியன, 'இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டாட்டா தொழிந்து ஈசன் திறமே பேணும்' இவரது உறுதிப்பாட்டைப் புலப்படுத்துவனவாகும். மற்றும் இந்நூலிலே,

மருட்சி செய் காமநோயால் மதிகெடு மாறுபோல"
''கோபமூள மெய்த்தவஞ் சிதையு மாபோல்"
உத்தமகுணங்க ளெல்லாம் உலோபத்தா லழியுமாபோல்"
''செருக்குற வழியுங் கற்ற கல்விபோல்"
 என்றிங்கனம் உவமையாகவும்,

''தையலார் மயலிற்பட்டோர் தமக்கொரு மதியுண்டாமோ'
அறிவிலாத, அற்பரானவர்க்குச்செல்வமல்ல துபகைவேறுண்டோ”

என்றிங்கனம் வேற்றுப் பொருள் வைப்பாகவும் மக்கள் அறிந்து கடைப்பிடிக்க வேண்டிய எத்தனையோ பல நீதிகள் வந்துள்ளன. மற்றும் நவமணி யிலக்கணம், புரவியிலக்கணம், இசை, கூத்து முதலிய கலைகளும், பல சமய நுண் பொருள்களும் இதன்கண் அறியக் கிடக்கின்றன. எல்லாவற்றினுங் காட்டில் இதில் விஞ்சித் தோன்றுவன இறைவனுடைய அருட் பெருக்கைப் புலப்படுத்தி பத்தி நலங்கனியச் செய்யும் செய்யுட்களே. அவற்றிற் சிலவற்றை எடுத்துக் காட்டி இவ்வுரையினை முடிப்போம்.
  
வேதமுதற் கலைகாட்சி முதலளவை விரிஞ்சன்
முதல் விண்ணோர் செய்யும்
சோதனையு ளகப்படாச் சோதியுனைச்
சோதிக்கத் துணிந்தோ னந்தோ

பேதமையே னிடத்தென்ன குணங்கண்டேன்
பிணிதீர்த் தென்பெற்றா யாசை
கோதமிலாய் குற்றமே குணமாகக்
      கொள்வதுநின்குணமோ வையா"
 என்பது வருணனும்,

      நின்னால் மொழிந்தமறை நின்னடிகள் வந்தித்தும்
பன்னா ளருச்சித்தும் பாதந் தலைசுமந்தும்
உன்னாமம் வாசித்தும் உன்னை யறியே னென்று
சொன்னா லடியனேன் சோதனைத்தோ மின்னியல்பே"
என்பது அபிடேக மாறனும் வழுத்திய பாடல்கள்.
    
எழுதரிய மறைச்சிலம்பு கிடந்து
புறத்தலம்ப வன்பரிதய மென்னும்
செழுமலரோடையின் மலர்ந்து சிவானந்தத்
தேன்ற தும்பு தெய்வக் கஞ்சத்
தொழுதகுசிற் றடிப்பெரிய விரல்சுவைத்து
      மைக்கணீர் துளும்ப வாய்விட்
டழுதணையா டையிற்கிடந்தான் அனைத்துயிரு
      மீன்று காத்தழிக்கு மப்பன்"

 என்பது விருத்தனாய்க் குமாரனாய இறைவன் பின் பாலனாயது.

   கடிய கானகம் புகுதவோ கட்டிய விறகை
   முடியி லேற்றவோ முண்டகத் தாள்கணொந் திடவந்
   தடியனேன் பொருட் டடாதசொற் பகரவோ வஞ்சக்
   கொடியனேன் குறை யிரந்தவா விளைந்ததே குற்றம்"

''நெடிய னே முதல் வானவர் நெஞ்சமும் சுருதி
 முடிய னேகமுங் கடந்தகின் முண்டகப் பாதம்
 செடியனேன் பொருட்டாசஇச் சேணிலந் தோய்ந்த
 அடிய னேற்கெளி தாயதோ வையகின் பெருமை "

என்பன பாணபத்திரர் பரவுதல். மற்றும் வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலத்திலுள்ள செய்யுட்கள் அனைத்தும் நெஞ்சை யுருக்கும் நீர்மையன.

"பித்திது வெனப்பிறர் நகைக்கவரு நாலாஞ்
சத்திபதி யத்தமது சத்தறிவு தன்னைப் -
பொத்திய மலத்தினும் வெரீஇச்சுமை பொறுத்தோன்
ஒத்திழி பிணிப்புறு மொருத்தனையு மொத்தார்''

நெருப்பிலிடு வெண்ணெயென நெஞ்சுருக வெள்ளை
உருக்குமித னாலெனை யொளித்தமல வாற்றல்
கருக்குமவ னாகியெனை யாள் கருணை வெள்ளம்
இருக்குமிட னேயிதென வெண்ணிநகர் புக்கார் "

என்பன, அடிகள் திருப்பெருந்துறையை அடைதல். ஆராவன்புடன் செல்லுஞ் செலவைப் பாட்டின் நடையாலும் ஆசிரியர் புலப்படுத்தியிருக்குந் திறன் அறிந்து பாராட்டி மகிழ்தற்குரியது.

[குறிப்பு: - இக்கட்டுரை காலஞ் சென்ற நாட்டாரவர்கள் மதுரையில் நடந்த சமாஜ விழாவில் நிகழ்த்தக் கருதிய சொற்பொழிவின் சுருக்கம். உடல் நல மின்மையால் இச்சொற்பொழிவை  அப்பெரியார் நிகழ்த்த இயலாமற் போயிற்று - பத்திராசிரியர்.]

சித்தாந்தம் – 1944 ௵ - ஜுன் ௴


No comments:

Post a Comment