Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
புண்ணியம்.
      சிவம் என்பது வேத சிவாகமங்களாற் பிரதிபாதிக்கப்படும் பரதத்வப்பொருளாம். இதனையே பதியென்று கூறுதலுமாம், இதற்கு வேறாயுள்ளவை அபரவஸ்துக்களாம். அவை பசுபாசங்களென்று சொல்லப்படும். பதி பசு பாசங்களாகிய விம்மூன்றுனுள் பதி நிர்மலசித்தும், பசு மலின சித்தும், பாசம் கேவலம் மலினமாகிய அசித்துமாம். இவற்றுள், அசித்தாகிய பாசநீங்கலாகப் பசுவைக் குறித்துச் செய்யும் புண்ணியம் பசுபுண்ணியமும், பதியைக் குறித்துச் செய்யும் புண்ணியம் பதிபுண்ணியமுமாம். இப்பதிபுண்ணியந் தானே சுவபுண்ணியமென்று பிரசித்தியடையும், பசுபுண்ணியம் – பது புண்ணியம் என்னுமிரண்டினுள் பசு புண்ணியம் சிறுபான்மை செய்யத்தக்கதும், பதி புண்ணியம் பெரும்பான்மை செய்யத்தக்கதுமாம். இனிப்பசுபுண்ணியம், சுமைதாங்கி – திருவாசல் – தடாகம் – கூபம் தண்ணீர்பந்தர் – அன்னசத்திரம் – வித்யாசாலை முதலியனவாம். பதிபுண்ணியமோ வெனில், அத்யயநபாடசாலை – குருபூசைமடம் – பழுதுற்ற தீர்த்தங்களைப் புதுப்பித்தல் – சிவாலயத்திருப்பணி – கும்பாபிஷேகம் சிவாலயத்துக்கு அபிஷேக நிவேதனம் – திரு விளக்கு – மலர்மாலை – கற்பூரக்கட்டளை முதலியனவாம். இவ்விருவித புண்ணியங்களில் பதி புண்ணியமே மிகச்சிறந்ததா மென்றறிக. பசு புண்ணியந்தவறினுமுய்தல் கூடும். பதி புண்ணியந்தவறி னுய்தியில்லதோர் குற்றமாகுமென்றறிக. இதனை “ஆற்றருநோய் மிகுமவனிமழை குன்றும், போற்றருமன்னரும் போர்வலிகுன்றுவர் – கூற்றுதைத்தான் றிருக்கோயில் களானவை – சாற்றிய பூசைகடப்பிடிற்றானே” என்னுந் திருமந்திரவுரையானறிந்தின்புறுக. இவ்வுண்ஐ தேராது நம்மனோர் சிவாலயத்திருப்பணியையும், ஏனைய சிவதருமங்களையுங் கைவிட்டபாவத்தின் பயனாகவன்றோ நாற்பது வருடகாலமாக மழைசெம்மையாய்ப் பெய்யாமலும், அதனால் கொடிய பஞ்சங்களதிகரித்தும், புருஷர்கள் - ஸ்திரீகள் – சிசுகள் – முதலினோர்க்குக் கால்வீக்கம் – விதைவாதம் – தேகரணங்கள் – சுரநோய் – வாந்திபேதி – லசூரி முதலிய நோய்கள் விர்த்தியாகியும், பெருங்காற்று – பெருவெள்ளங்களால் பல பல தேசங்களுண்டாகியும் உலகில் துன்பம் பெருகத்தலைப்பட்டது? இவ்வசம்பாவிதங்கள் தொலைய வேண்டின் பதிபுண்ணிய பரிபாலனமே முக்கிய ஏதுவாம்.

ஓர் சைவன்.

சித்தாந்தம் – 1915 ௵ - டிசம்பர் ௴


No comments:

Post a Comment