Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
பதி பசு பாச விளக்கம்.

பதி, பசு, பாசம் என்கின்ற பரிபாஷை பிறசமய நூல்களா. லேயுணர்த்தப்பட்ட பர, சீவ, பந்தங்கட்குச் செல்லுமாயினும், பெரும் பான்மையும், சைவசித்தாந்தமாகிய சிவப்பிரணீத சிவாகமங்களினாலே உணர்த்தப்படும் பதார்த்தங்களாகிய பர, சீவ, பந்தங்கட்கே வழங்கிய பரிபாஷை யென்பது நன்கு துணியப்படும், ஆனால் பதி, பசு, பாசவிளக்கமென்பது விசாரிக்கப் புகுந்தால், பதியும், பசுவும், பாசமுமென்னும் மூன்று பொருள்களையும் விளக்கும் விளக்கமென்பது துணியப்படும், படவே, விளக்கமென்பது மறைந்த ஒருபொருளைக் காணவேண்டினவன், ஒரு விளக்கங்கொண்டே, அப்பொருளைக் கண்டுபிடிக்க வேண்டியது, அவசியமன்றோ? அப்படியானால் மேற் கூறிய பதிமுதலிய மறைபொருளைக் கண்டெடுத்தற்குப் பிறசமய நூலுணர்வு என்கின்ற விளக்கங்கள் எல்லாவற்றிலும், சிவப்பிரணீத வேதாசார சித்தாந்த சிவாகம நூலுணர்வு விளக்கே மயக்கமறவிளக்கும் முக்கிய விளக்கம் என்பது, நம்மனோர்களாகிய சைவசித்தாந்தி களாலே கொண்டாடப்படும் சைவ சித்தாந்த தத்துவ ஞானிகளு டைய துணிபு. அந்தத் துணிபு தான் என்னவென்பதைச் சற்று நாம் விசாரித்துப்பார்ப்போம், அங்ஙனம் விசாரிக்கும்போது, பதியென்ப தென்னை? பசுவென்பதென்னை? பாசமென்ப தென்னை? என்று விசாரிக்க வேண்டி வரும் அப்போது பதியாவதென்னை? யென்பதை முதலில் விசாரிக்கப்படும். பதியென்ற சொல்லின் சத்தார்த்தத்தைப் பார்த்தால் காக்கிறவன் என்கிறபொருளைத் தருகின்றது. காக்கிறவனென்றால் எதைக்காக்கிறவன் யாரைக்காக்கிறவன் என்கிற ஆகாங்கிக்ஷைக்கு இடமுண்டாகிறது, உன்டாகவே, தன்னையா: பிறரையா என்று பார்த்தால், பிறரைத்தான் காக்கிறவன் என்கிறது வெளியாகின்றது. அப்படியானால் இப்பொழுது ஒருசக்கிரவர்த்தி முதலியவர்களுக்கும் காக்குந்தன்மையுண்டு, அப்படிப்பட்டவர்களிடத்தில் செல்லட்டுமே யென்றால், இவர்களுக்குச் சிற்சில விடங்களில் மட்டும் காக்குந்தன்மை செல்லுமேயன்றி சர்வலோகங்களிலுமிவர்கள் காவல் செல்லுமென்பது துணிய இடங்கொடாது, பின்னை? சர்வலோகத்தையும் இவர்கள் காக்கக்கூடாதென்றால் இவர்களெல்லாம், சிற்றறிவு, சிறுதொழில், சுதந்த ஹீனமுதலிய உடையபசுக்களென்பது தெளிவாதலால் முற்றறிவு முற்றுத்தொழில், சுதந்தரம் ஆகிய அவைகளை முழுதுமுடைய அப்பரமபதி ஒருவனே காக்கவேண்டுமென்பது வெளியாகும். அப்படிப்பட்ட முற்றறிவு முதலிய இன்றியமையாத இறைமைக் குணங்கள் மூற்று முடையவன் சிவபெருமான் ஒருவரே யென்று தெள்ளிதிற்றுணியப்படும். படவே, பதி யென்பது சிவபெருமான் ஒருவரே! முற்றறிவு முதலிய எண்குணங்களும் முற்றஉடையார் அச்சிவபெருமானே யென்பது சிவாகம நூலுணர்வாகிய விளக்கத்தால் விளங்குகின்றது, பதி யென்பது சோபாதிக நாம மென்பது சிவாகம நூற்றுணிபு.

இனி, பசுவென்பதை விசாரிப்போம். பசு என்பது கட்டுப்பட்டவன் எனப்பொருள் படுகின்றது. எதனாற்கட்டுப் பட்டவனெனிற் பாசத்தாற் கட்டப்பட்டவன். அநாதியே அறிவு தொழில்கள் விளங்காது மறைக்கப்பட்டவன் என்பது தாற்பரியம்.

அப்பசு அப்படிப் பந்திக்கப் பட்டமையால் தற்சொரூபமிழந்து அனாதித்தன்மை முதலியவுற்றுச் சுதந்தரனாகிய பதியினுடைய பேருப காபத்தை அபேக்ஷித்தவனாயினான். அவ்வுபகார அபேக்ஷையென்றது? பசு தன்னுடைய பந்தம் நீங்குதற்கேதுவான சிருஷ்டியாதி பஞ்சகிர் த்யங்களுக் குட்பட்டு அப்பதியினால் பாதுகாக்கப் படுதலை,

பசு, பதி யுபாசனையினால் பாதுகாக்கப் படுதலாவது என்னை? எனில் அப்பசு பிறப்பிறப்பு நீங்கி நிரதிசய பேரின்பம் பெற்றுய்தல். இவ்வகையால் பசுவானவன் அநாதியே பாசபந்த முடைய னென்பதும், அப்பந்தத்தால்வேண்டுதல் வேண்டாமையும் அவற்றால் பிறப்பிறப்பும் உடையனாகின்றா னென்பதும், அப்பிறப்பிறப் புடைமையினாற் பதியினுபகாரத்தை வேண்டியவ னென்பதும், அந்த உபகாரம் அப்பதியின் உபாசனையினாற் பெறற்பாலனென்பதும் ஆகிய இவ்வுண்மைகள் சிவாகம நூலுணர்வாகிய விளக்கத்தால் நன்கு விளங்குகின்றன.

இனிப் பாசத்தை விசாரிப்பாம். பாசமென்பது கட்டுதலுடை யது, அது அநாதியே அப்பசுவினுடைய அறிவு தொழில்களை விளங்காது பந்திப்பது. அதாவது, மறைப்பது. அப்பாசம் இப்பசுவுக்கு அநாதியாகவே யேற்பட்ட தொருவியாதி, இந்தவியாதி தீர்தற்குப் பசுவுக்குப்பதி உபாசனை யென்னும் மருந்தால் தீரத்தக்கது என்பது சிவாகம நூலுணர்வாகிய விளக்கத்தால் இனி துவிளங்குகின்றது. இக்க ருத்து நோக்கியன்றோ (ஸ்ரீவாகீச சுவாமிகள்) பேராயிரம் பரவி, என்னும் திருத்தாண்டகத்தால் நன்குவிளக்கி யிருக்கின்றார்கள். பசு, பாசமென்னும் பெயர்களும் சோபாதிக நாமங்கள் என்பது சிவாகம நூற்றுணிபு.

ஆறாறு தத்துவமு மாணவமும் வல்வினையு
நீறாக முத்திநிலை நிற்போற்குப் - பேறாகப்
பார்விரித்த நுலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே
யோர் விருத்தப் பாதிபோதும்.

என்னை யறிவென்றா னென்னறிவி லானந்தர்
தன்னைச் சிவமென்றான் சந்ததமு - - மென்னையுன்னைப்
பாரா மறைத்ததுவே பாசமென்றானிம் மூன்று
மாராய்ந்தவர் முத்தராம்.

எங்கு மிருக்கு மறிவுநீ யேகமா
யங்கங் குணர்த்து மறிவுநாம் - - பொங்கு
மலமறைத்தன் மாயை மயக்கல் விகாரப்
பலமனைத்துங் கன்மமலம் பார்.

வைத்தீஸ்வரன்கோயில்
சொக்கலிங்கத்தம்பிரான் சுவாமிகள்.

சித்தாந்தம் – 1916 ௵ - ஜனவரி ௴


No comments:

Post a Comment