Saturday, May 9, 2020



பஞ்சகோசங்கள்.*
[* 1910 ௵ இராமநாதபுரத்தில் கூடிய சைவசித்தாந்த மகாசமாஜக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. ப-ர்]

சிநேசச் செல்வர்களே!

"மருவானந்தம் விஞ்ஞான மனோபிராணன்
அன்னமய முருவாந் தன்மையுண்டாய் முன் ஒன்றுக்கொன்று சூக்குமமாய்
வருமாம் அன்னமயம்பற்றி மாயை முதற்காரணமாகும்
அருவாயான்மா ஐங்கோசத் தார்ப்புண்டு அவற்றினகம்புறமாம்
                                        "
என்னும் சிவஞான சித்தித் திருவாக்கை ஆதாரமாகக்கொண்டு "பஞ்சகோசங்கள்'' என்னும் விஷயத்தை எம் சிற்றறிவிற்கெட்டியவாறு சிறிது கூறத் துணிந்தாம், " பஞ்சகோசங்கள்'' என்பதற்கு “ ஐந்து சரீரங்கள்'' என்று பொருளாம். நம்முடைய ஆன்மா வசிப்பதற்குச் சாதகமாக ஐந்து சரீரங்கள் கடவுளால் அமைக்கப் பட்டிருக்கின்றன. அவைகள் அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமய கோசம், என்பவைகளாம். அவைகள் முறையே
தூலசரீரம், சூக்குமசரீரம், குணசரீரம், கஞ்சுகசரீரம், காரணசரீரம் எனவும்படும். இந்த ஐந்து சரீரங்களைப் பற்றியும், இவைகளுக்கும் ஆன்மாவுக்கு முள்ள சம்பந்தா சம்பந்தங்களைப் பற்றியும் சிறிது கூறவேண்டு மென்பதே இற்றை உபந்நியாசத்தின் முக்கிய நோக்கமாகும்..

அன்னமயகோசம்.

அன்னமயகோசம், என்பதைப்பற்றி முதலில் விசாரிப்பாம். எலும்பு, தோல், நரம்பு, இரத்தம், சுக்கிலம், மூளை, மச்சை, என்னும் சத்த தாதுக்களால் கட்டப்பட்டு நம்முடைய கட்புலனுக்குத் தோன்றுவதாகிய நமது உடம்பே அன்னமய கோசம் அல்லது தூலசரீரம் என்று சொல்லப்பெறும். அன்னம் முதலிய உணவுப் பொருள்களினாலேயே நமது உடம்பு போஷிக்கப்பட்டு வளர்ந்து வருவதால் அது அன்னமய கோச மென்றும், மற்ற நான்கு சரீரங்களைப்போலன்றி நம்முடைய கண்ணுக்கு எளிதில் புலப்படக் கூடியதும் நம்முடைய ஸ்பரிச உணர்ச்சியால் அறியப்படக் கூடியதுமான ஸ்தூல உருவத் தோடு கூடியிருத்தலால் தூலசரீர மென்றும், நமது தேகம் பெயர் பெறுவதாயிற்று. ஜீவான்மா அநாதியிலேயே “ ஆனைவ மலம்'' என்று சொல்லப்படும் அறியாமை வயப்பட்டுத் தனது இயற்கை யறிவை இழந்திருத்தலால் அவ்வறிவை எழுப்பி விடு வதற்கு இந்தத் தூலசரீரம் ஒரு சாதகமாயிருக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஞானேந்திரியங்களும்; சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன் மாத்திரைகளும்; வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்த மென்னும் ஐந்து கன்மேந்திரியங்களும்; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு அந்தக்கரணங்களும், பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்னும் பத்துவாயுக்களும்; வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம் என்னும் ஐந்து கன்மங்களும்; புருடனும் ஆகிய முப்பத்தைந்து கருவி களும் செவ்வையாய் அமையப்பெற்ற தூலதேகத்தில் ஆன்மாவின் அறிவு விளக்கப் பெறுவதே சாக்கிர மெனப்படும். ஆனால் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்க ளின் சேர்க்கையால் ஆக்கப்பட்டிருக்கும் இந்த தூலசரீரம் இப்போது நமது கண்ணுக்கு புலப்பட்டுத் தோன்றும் மொந்தா காரமான உருவத்தையுடையதா யிருந்தபோதிலும் கண்ணுக்குப் புலப்படாத பரமாணுக்கள் ஒன்று சேர்ந்தே இப்படிப்பட்ட உருவம் உண்டாயிருத்தல் வேண்டு மென்பது அணுகி ஆராயும் எல்லோருக்கும் ஒப்ப முடிந்த உண்மைப்  பொருளாம். இந்த ஒவ்வொரு அணுக்களும் பிராண சக்தியோடு கூடியவைகளாயிருக்கின்றன என்று இப்போது மேனாட்டு சாஸ்திரிகள் நுட்ப ஆராய்ச்சி செய்து முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லலாம். நாம் ஆகாரத்தை உட்கொள்ளுகிறோமே தவிர, அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை அறிவதில்லை. அதன் பிறகு நடக்கிற வேலை நமது மனோவுணர்ச்சிக்குப் புலப்படுவதில்லை. ஆனாலும் சரீரத்துக்குள் அமைந்திருக்கும் கருவிகள் தாமே வேலை செய்ய ஆரம்பித்து ஆகாரத்தில் சரீரபோஷணைக்கு அவசியமானவற்றைப் பிரித்துத் தனியாக இரத்தத்தோடு சேர்த்தும், அவசியமில்லர் தவற்றைக் கழித்தும் வருகின்றன. நம்முடைய சரீரத்தில் ஒரு காயம்பட்டால் நாம் (இங்கேநாம் என்றது ஆன்மாவினையும் அதனுடைய மனோ உணர்ச்சியையும்) வலியை மாத்திரம் உணருகிறோம். அப்படி உணருவதும் ஆன்ம உணர்ச்சி ஸ்தூல சரீரத்தில் பிரவர்த்தித் திருக்கும் போது தான். ஆனால் காயம்பட்ட இடத்திலுள்ள பரமாணுக்கள் தாமே ஒன்று சேர முயற்சித்து நாளாவட்டத்தில் ஒன்று சேர்ந்து சரீரத்தில் காயம்படாதபாகம் எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலைக்குக் காயம்பட்ட இடத்தையும் கொண்டு வந்து விடுகின்றன. அப்படி அடைந்ததைத்தான்“ காயம் சொஸ்தமாகி விட்டது'' “ புண் ஆறிவிட்டது'' என்று நாம் சொல்லுகிறோம். நம்முடைய ஆன்ம உணர்ச்சிக்குப் புலப்படாமலே சரீரத்துக்குள் இருக்கும் சில கருவிகள் வேலை செய்து உட்கொண்ட ஆகாரத்தைப் பிரித்து இரத்தத்தோடு கலக்கும் படிச் செய்கிறதென்னும் உண்மையும், நம்முடைய ஆன்ம உணர்ச்சிக்குப் புலப்படாமலே சரீரத்திலுள்ள காயம் அணுக்களின் கூட்டுறவினால் சொஸ்தமடைகிறதென்னும் உண்மையும் ஒவ்வொரு அணுக்களும் பிராண சக்தியுடையன வாயிருக்கின்றன என்பதை ருசுப்படுத்தப்போதிய உதாரணங்களாகும்.

இந்த அணுக்கள் தாமே இவ்விதம் இயங்குவதற்கு அவர்கள் பிராணசக்தியுடையன வா யிருக்கவேண்டு மென்றும், அவைகளுக்கு  ஒருவித உணர்வும் இருக்கவேண்டியது அவசிய மென்றும் மேனாட்டு தேகதத்துவ சாஸ்திரிகள் அபிப்பிராயப்பட்டு அதை (Unconscious memory) என்று சொல்லுகிறார்கள்.
    சரீரத்திலுள்ள அலுக்களே பராண சக்தி உடையனவாயிருந்தால் ஆன்மா பிரிந்தபின், அதாவது ஒருவன் மரணமடைந்தபின் அச்சரீரம் இயங்காததற்குக் காரணமென்ன என்று சிலருக்குச் சந்தேகம் நிகழலாம். இங்கே நுட்பமாகக் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமிருக்கிறது. அதாவது ஆன்மா பிரிந்து விட்டபடியால் சரீரம் இயங்கவில்லையா? அல்லது சரீரம் இயங்காமற்போனதால் அச்சரீரத்தை விட்டு ஆன்மா பிரிந்து விட்டதா? என்பதுதான். இதை விளக்குவதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். நம்முடைய சரீரத்தை ஒரு மாளிகை யென்றும், ஆன்மாவை அம்மாளிகையில் வசிக்கும் ஒரு தனவான் என்றும் வைத்துக்கொள்ளுவோம். மாளிகையானது சுத்தமாயும் பலமாயும் இருக்கிற வரையில் அந்த தனவான் அதில் வசித்து வருகிறான். நாளா வட்டத்தில் வெயிலினால் காய்ந்தும் மழையினால் நனைந்து மாளிகையினுடைய உறுதிகெட்டுப்போய் அ'விழுந்துவிடக் கூடிய தருணத்திலிருந்தால் அந்தக்கன வான் அம்பாளிகையை விடுத்து வேறொரு நல்ல மாளிகைக்குக் குடி போகிறான். அதேமாதிரி தம்முடைய சரீரத்திலுள்ள கருவிகளெல்லாம் நிலைகுலையாமல் சரியான அமைதியுடன் இருக்கும் வரையில் ஆன்மா இந்த சரீரத்தில் வசிக்கிறது. சரீரத்தின் அணுக்கள் ஒழுங்கு தவறி தத்தம் வேலைகளைச்செய்யாமல் மாறுபட்ட நிலைமையை அடைந்தால் இனி இந்தச்சரீரம் பயன்படாதெனக் கருதி ஆன்மா வேறொரு நல்ல சரீரத்தை நாடி இதை விடுத்துச் செல்லுகின்றது. ஆகவே சரீரத்தின் ஒழுங்கான இயக்கம் முதலில் கெட்டுப் போகவே ஆன்மா சரீரத்தை விட்டுப் போய்விடுகிறதென்பதும்,. ஆன்மா போய்விட்டபடியால் சரீரத்தின் ஒழுங்கான இயக்கம் நடைபெறவில்லை என்பது பொருந்தா தென்பதும் புரிந்து போவதைத்தான் “ மரணம்'' என்று சொல்லுகிறோம். " மாணம் " என்பது சரீரத்தினுடைய ஒருவகையான மாறுதலே யன்றி வேறல்ல. ஒருபொருளினுடைய அழிவு வேறொரு பொருளினுடைய சிருஷ்டிக்குக் காரணமாயிருப்பதால் அந்தப் பொருள் அழிந்து விட்டதென்று சொல்லுவதற்கு இடமில்லை; நிலைமாறுதல் என்று தான் சொல்ல முடியும். மண்ணினுடைய நிலைமாறியே குடமாகிற தென்பதும், குடத்தினுடைய இலக்கணம் மாறினால் அது வேறொரு பாண்டமாக ஆக்கப்படலா மென்பதும் யாவரும் அறிந்தவிஷயமன்றோ? அதுபோலவே தான் நமது சரீரமும். மனிதனுடைய இருந்த சாரத்தைக் காற்றுள்ள ஒரு வெளியில் போட்டு வைத்திருந்தால் காற்றும், நீரும், சூரிய உஷ்ணமும், அந்தச் சரீரத்தில் தாக்கத்தாக்க அந்த சரீரம் பலவிதமான மாறுதலை யடைகின்றது. சரீரத்தின் ஒருபாகம் கரிவாயு, அமோனியாக், நீராவி முதலியவைகளாக மாறிஆகாயத்தில் பா வி பின்பு மழை, பெய்யும்போது மழையுடன் கலந்து பூமிக்கு வருகிறது. இப்படி வந்தவைகள் மரம் செடி முதலிய தாவர வஸ்துக்களுக்கு உணவாகி அவைகளை வளரும் படிச் செய்கின்றன. இப்படியே ஒருபாகம் கனபதார்த்தமாகவே பூமியில் சேர்ந்து பயன்படுகிறது; மற்றொருபாகம் திரவ பதார்த்தமாகவே சேர்ந்து பயன்படுகிறது. ஆகவே சரீரம் இறந்து போனால் அது அடியோடு அழிந்து ஒன்றுமில்லாத வெறும் சூனியமாய் விடுகிறதென்று நினைட்பது தவறு. அது ஒரு நிலையைவிட்டு வேறொரு நிலைக்குமாறிப் பயன்படுகிற தென்பதே உண்மை. நம்முடைய சரீரத்திலுள்ள அணுக்கள் பிராணசக்தியோடு கூடியவைகளாய் இருக்கின்றன என்பதற்கு இறந்துபோன சரீரமே போதுமான அத்தாட்சியாகும். ஏனெனில் ஆன்மா பிரிந்து போன பிறகும் அது பலவிதமான மாறுதலுக்கு உட்படுகிறதினாலென்க, காற்று, வெயில், மழை இவைகள் அச்சரீரத்தின்மீது தாக்குவதால் அது மாறுதலடைகிறதென்று முன்னமே கூறியிருக்கிறபடியால் சரீரம் மாறுதலடைவதற்கு அவைகளே காரணம், பிராணசக்தி அவசியமல்ல வென்று கூறக்கூடாதோவெனின்; கூடாதாம். ஏனெனில் அம்மூன்றும் ஒரு கருங்கற் பாறையில் இடைவிடாது தாக்கினி போதிலும் அப்பாறை மாறுதலடையாமல் ஒரே நிலையில் இருக்கக் காண்கின்றே மாதலால் அம்மூன்றனையுந் தவிர வேறொன்றும் அவசியம் வேண்டியிருக்கிற தென்பதும், அதுவே பிரரண சக்தியா மென்பதும், இனிது புலப்படும். ஆகவே நம்முடைய சரீரத்திலுள்ள ஒவ்வொரு அணுக்களும் பிராணனோடு கூடியவைகளா யிருக்கின்றன வென்பது வெள்ளிடை மலைபோல் விளங்கிக்கிடந்த தொன்றாம்.
     
இங்கே கவனிக்கப்படவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கின்றது. அதாவது 'பிராணன்'' என்பதும் " ஆன்மா அல்லது ஜீவன்'' என்பதும் ஒன்றல்ல, இரண்டும் வெவ்வேறு இலக்கணங்களுடையன வென்பது தான். பிராணன் என்பது ஒருவிதமான சக்தி. உஷ்ணம், ஒளி, ஆகருஷணம், மின்சாரம் போன்ற மற்ற சக்திகளைப் போலவே அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் உண்டு. அந்த சக்திகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பிரயோகமாவது போலவே பிராணசக்தியும் பிரயோகமாகிறது. ஆனால் ஆன்மாவோ என்றும் அழியாததும் ஆதியந்த மற்றதுமான சித்துப் பொருள். ஆகவே பலவிதமான மாறுதலுக்கு உள்ளாகிற வெறும் சரீரம் அச்சரீரத்தை இயக்கிப் பலவிதமான மாறுதலுக்கு உட்படுத்துகிற பிராண சக்தியைவிடத் தாழ்ந்ததென்பதும், மின்சாரம் ஆகருஷணம் போன்று ஆரம்பத்தையும் முடிவையு முடையதாயிருக்கும் பிராணசக்தி என்றும் அழிவில்லாத ஆன்மாவை விடத் தாழ்ந்ததென்பதும், ஆதலால் ஆன்மாவே மற்ற இரண்டையும்விடச் சிறந்ததென்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறதன்றோ? பிராண சக்தியை மேனாட்டார் (Life) என்றும், ஆன்மாவை (Soul) என்றும் வழங்குவர்.
   
இனி, எல்லாவற்றிலும் முக்கியமான ஆன்மாவினுடைய அறிவ விளங்கப் பெறுதற்குச் சாதகமாக இந்தத் தூலசரீரம் ஏற்பட்டது. இந்தத் தூலசரீரத்தில் ஆன்ம அறிவு எவ்வளவு தூரம் விளங்குகிற தென்பதைப்பற்றிச் சிறிது ஆராய்வோம், தூலசரீரம் எலும்பு, நரம்பு போன்ற தடிப்பான கனபதார்த்தங்களால் ஆக்கப்படிருக்கிறதென்று முன்னமேயே கூறியுள்ளேம், கனத்தபொருள்களின் சேர்க்கை யாலான எந்த வஸ்துவும் மென்மையான ஆகாயத்திலும் வாயுமண்டலங்களிலும் இயங்கும் இயல்புடையதல்ல. மென்மையான பஞ்சு ஆகாயவெளில் பறப்பதும், கடினமான செங்கல் ஆகாய வெளியில் பறக்காமல் கீழேவிழுந்து விடுவதுமே இவ்வுண்மையை விளக்குதற்கு உறுஞ்சான்றாம். மேனாட்டு பூதபௌதிக சாஸ்திரிகள் இவ் விஷயம் என்றும் மாறாத உண்மையானதொன்றாம் என்பதை அநேக காரணங்கள் காட்டி நிலைநிறுத்தி யிருக்கின்றார்கள். ஆகவே கடினமான தூலசரீரம் இயங்குதற்கும் உலாவுதற்கும் ஏற்றவிதமாய் மண்முதலிய கடின பதார்த்தங்களால் ஆக்கப் பட்டிருக்கும் இந்த மண்ணுலகம் நமக்கு வாய்ந்திருக்கிறது. நிற்க, கடினமான இந்தத் தூலதேகத்தில் ஆன்ம அறிவு இத்தூலதேகத்தின் - அமைப்புக்கு ஏற்கவே விளங்கப்பெறும். சூரியனுடைய வெளிச்சம் ஒரே தன்மையா யிருந்தபோதிலும் நான்குபுறமும் கற்சுவரினால் அமைக்கப்பட்டு சிறு சாளரத்தையுடைய ஒரு அறைக்குள் அவ்வெளிச்சும் சிறிது தோன்றுவதைப்போலவும், நான்குபுறமும் சுத்தமான பளிங்குச் சுவரினால் கட்டப்பட்டிருக்கும் ஒரு அறையில் மிகுந்து தோன்றுவதைப் போலவும் நம்முடைய ஆன்ம அறிவு தூலதேகத்தில் சிறிதே விளங்கப்பெற்று மற்ற சாரங்களில் மிகுந்து விளங்கு மியல் புடையதாம். அதாவது துலதேகத்தில் ஆன்ம அறிவு ஸ்துலமாகவே விளங்கும். மேலும், இந்தத் தூசெரீரம் நாம் விரும்புகிறபடி யெல்லாம் இயங்கவல்லதன்று. ஏனெனில் இத்தூல சரீரத்தினுடைய செய்கைகள் இடத்தினாலும் காலத்தினாலும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இராமனாதபுரத்தில் இச்சமயத்தில் இருக்கிற ஒருவனுடைய சரீரம் இதே சமயத்தில் சென்னையிலாவது மற்றவேறு இடங்களிலாவது இருத்தல் சாத்தியமல்ல. ஆகவே நம்முடைய சரீரம் இடத்தினால் வரையறைப்பட்டிருக்கின்றது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ஒருகாலத்தில் ஒருவிஷயத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவன் அதே காலத்தில் வேறொரு விஷயத்தைக் கவனிக்கச்சக்தியற்றவனா யிருக்கிறான். இதற்கு ஒரு திருஷ்டாந்தம்
கூறுவாம். ஒருவன் கடற்கரையோரமாக நின்று இயற்கை அற்புதங்களை ஊன்றி நோக்கிக் கொண்டிருக்கும்போது காதிருந்தும் அவன் ஒன்றையுங் கேளாதவனாயும், இனிய சங்கீத ஓசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது கண்ணிருந்தும் காணாதவனாயுமிருப்பதை நாம் அனுபவத்தில் காண்கின்றோ மல்லவா? ஏககாலத்தில் இரண்டு விஷயங்களைக் கவனிக்கும் ஆற்றல், ஸ்தூலசரீரத்தில் அமைந்துள்ள கருவிகளைக் கொண்டு ஆன்ம அறிவு விளங்கும் அச்சமயத்தில், ஆன்மாவுக்கு இல்லை யென்பதற்கு மேலே சொன்னதே போதுமான உதாரணமாகும். ஆகவே ஸ்தூலசரீரம் காலத்தினாலும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்தத் தூலசரீரத்துக்கும் ஆன்மாவுக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. ஆன்ம அறிவு விரிந்து பிரகாசித்து இத்தூல சரீரத்தினும் நுட்பமான சரீரங்களில் அவ்வறிவு பிரவர்த்தித்து வேலை செய்ய ஆரம்பிக்கிற வரையில் இந்த சம்பந்தம் இருந்துகொண்டிருக்கும். ஏனெனில் ஆன்மா எப்பொழுதும் ஒருபொருளைச் சார்ந்து நிற்குமே தவிரத் தனித்து நிற்காது. தூலசரீரத்தினுஞ் சிறந்த சரீரங்களில் வசிக்கும்படியான நிலைமையை ஆன்மா அடைகிறவரையில் தூலசரீரத்தில் வசிக்கும். ஆனால் முதிர்ந்த அறிவும், மனோசக்தியும் வாய்ந்திருப்பவர்கள் ஸ்தூல சரீரத்திலிருந்து கொண்டே அநேக அற்புதங்களைச் செய்யவில்லையா என்று சிலர் கேட்கலாம், அவர்கள் செய்கிறார்களென்பது வாஸ்தவமேயாபினும் ஸ்தூலசரீரம் அவர்களுக்குப் பேருக்கு மட்டு மிருக்கிறதே தவிர அவர்களுக்கு உதவியாயிருப்பவை சூக்கும சரீரங்களே, இனி, சூக்கும சரீரத்தைப்பற்றிச் சிறிது சொல்லுவோம்.

பிராணமய கோசம்.
   
தூல சரீரத்துக்கு அடுத்த படியாக உள்ளது சூக்குமசரீரம். மற்ற மூன்று சரீரங்களும் இதைவிட சூக்குமமாக இருந்தபோதிலும் தூல சரீரத்தை நோக்க இதுசூக்குமமாக இருத்தல் பற்றியே சூக்கும சரீரமென இது வழங்கப்படுகிறது. இந்த சூக்கும சரீரமும் அணுக்களின் கூட்டுறவினால் ஆக்கப்பட்டது தான். ஆனால் ஸ்தூல சரீரத்தின் அணுக்களினும் நுண்ணி யவான அணுக்களால் இச்சரீரம் அமைக்கப்பட்டிருத்தலால் இந்தசரீரம் இந்திரிய உணர்ச்சிக்குப் புலப்படாத தாகும். இதனுடைய இயல்பு கனபதார்த்தம், திரவபதார்த்தம், வாயுபதார்த்த ம் (Solid, Liquid, Gas) என்று நாம் சாதாணமாய்ச் சொல்லுகிற மூன்றனுள்ளும் அடங்காமல் நுட்பமான ஒரு தளித்த இலக்கணத்தையுடையதாகும். இந்த சரீரத்தை மேனாட்டார் (Astral Body) என்று கூறுவர். ஹிப்னாடிசம் என்று சொல்லப்படும் யோக நித்திரையும், கிளெர்வாயன்ஸ் என்று சொல்லப்படும் ஆத்மக்காட்சியும், இன்னும் இவைபோன்றவைகளும் இந்த சூக்கும சரீரத்தில் ஆன்ம அறிவு விளங்கும்போது சித்தியாகக்கூடியனவாம். இந்த சூக்கும சரீரத்தில் ஆன்மாவினுடைய அறிவுவிளங்கப்பெறும் அவசரமே சொப்பனம் என்று சொல்லப்படும். சூக்கும சரீரம் பெரும்பாலும் துலசரீரத்தையே ஒத்திருக்கும். இவ்விரண்டு சரீரங்களுக்கும் மிக நெருங்கிய சம்பந்தமுண்டு. சூக்கும சரீரம் தூலசரீரத்தோடு நெருங்கிய சம்பந்த முற்றும் ஸ்தூல சரீரத்தின் தோற்றத்தையே பெரும்பாலும் ஒத்துமிருக்கிறபடியால் தியாசபியார் இதை (Double) என்று கூறுகிறார்கள். இதனால் இவ்விரண்டு சரீரங்களும் எல்லாவகையிலும் ஒத்திருக்கின்றன என்று கருதக் கூடாது. வடிவத்தில் மாத்திரந்தான் ஒத்திருக்கும். தூலசரீரம் ஏற்கெனவே கூறியபடி தடிப்பான அணுக்களால் ஆக்கப்பட்டிருத்தலால் கனமிகவுடைத்தாய் இந்த நிலப்பகுதியில் மாத்திரம் சஞ்சரிக்கும் இயல்புடைய தாயிருக்க, சூக்கும சரீரம் இலேசான நுண்ணிய அணுக்களால் ஆக்கப்பட்டிருத்தலால் கனக்குறைவால் அந்தரத்தில் மாத்திரம் இயங்கவல்லதாயிருக்கிறது. அநேகர் மோகினியைக் கண்டதாகவும், அநேகருக்கு மோகினிபிடித்திருப்பதாகவும் நாம் சொல்லக் கேட்டிருக்கிறோமல்லவா? மோகினிக்குக் கால் தரையில் படுகிறதில்லையென்றும் பலர் சொல்லுகிறார்கள். ஆன்மா சூக்கும சரீரத்தில் இருந்து கொண்டு உலாவுவதைத்தான் நாம் மோகினி என்கின்றோம். பேய், பிசாசு,. என்பவைகள் இம்மாதிரியான சூக்கும சரீரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் துராத்மாக்களே தவிர வேறல்ல. சூக்கும சரீரம் இலேசான பொருளாதலாலும், இலேசான பொருள் அந்தரத்தில் இயங்கும் ஆற்றலுடையதென்பது சாஸ்திரமுடிபான உண்மையாதலாலும் மோகினி முதலியவைகளுக்குக் கால் தரையில் பாவுகிறதில்லை என்று நம்மவர்கள் சொல்லுவது முற்றும் உண்மையேயாம். இந்த சூக்கும சரீரத்தின் நிறம் வெண்மையாகவாவது கறுப்பாகவாவது இருக்கும் ஆன்மாக்களின் பரிசுத்தத்தைப் பொறுத்ததாக இந்த நிறவேறுபாடுகளிருக்கின்றன. நல்ல செய்கையும், பரிசுத்தமான சிந்தனையுமுடைய ஆன்மா சூக்கும சரீரத்தில் வசிக்கும் போது அர்சரீரம் மிகவும் வெண்மையாகத் தோன்றும். "கிறிஸ்தவர்களால் என்ஜல் (Angel) என்று சொல்லப்படும்
தேவதூதனுடைய உருவம் படத்தில் வரையப்பட்டிருப்பதை அநேசர் பார்த்திருக்கலாம். இந்த உருவம் வெண்மை நிறமுடையதாயும் இருபுறங்களிலும் சிறகுகள் உடையதாயும் எழுதப்பட்டிருக்கிறது, எதைக்குறிப்பிடுகிறதன்றால் தேவதூதர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் பரிசுத்தமான ஆன்மாக்கள் என்பதையும், அவர்கள் வசிக்கும் சூக்கும சரீரம் தூய்மையான வெண்ணிறமுடைய தென்பதையும், அப்படத்தின் வெண்மை நிறம் குறிப்பிடுகிறது. இருபுறங்களிலும் சிறகுகள் இருப்பது சூக்கும சரீரம்
ஆகாயத்தில் இயங்கவல்லது என்பதைக் குறிப்பிடுகிறது.'' என்று (Louis Tiguier) என்னும் பிரான்ஸுதேசத்து விற்பன்னர் ஒருவர் தாமெழுதியிருக்கும் (The day after death) என்னும் அருமையான நூலில் கூறுகின்றார். ரம்பை, ஊர்வன், என்று சொல்லப்படும் தெய்வலோ ஸ்திரிகளுக்கு இறகுகள் வைத்து எழுதப்பட்டிருக்கும் படங்களை நாம் பார்த்திருக்கிறோம். இதுவும் மேற்சொன்ன உண்மையைத்தான் வலியுறுத்துகின்றது.
தீய சிந்தனையும், தீயசெயலுமுடைய ஆன்மாவின் சூக்கும சரீரம் கரிய நிறமுடைய தென்பதற்கு ஆவேசங்கள் கருநிறமுடன் உலாவுவதை இறவில்கண்டு அநேகர் பயந்தும், பயந்து உயிர் துறந்துமிருப்பதை நாம் அனுபவத்தில் பார்த்திருப்பதே சான்றாகும். சூக்கும சரீரம் நம்முடைய கட்புலனுக்கு மட்டும் புலப்படக்கூடியதே யன்றி ஸ்பரிச உணர்ச்சிக்கும் புலப்படாது. கையினால் அந்த சரீரத்தைப் பிடிக்கவாவது அல்லது தொட்டு ஸ்பரிசிக்கவாவது ஸ்தூலசரீரக்திலிருக்கும் நம்மால் முடியாது. மனிதர்களுக்கு ஸ்தூல சரீரத்தில் அபிமானம் மிகுந்திருப்பதால் அவ்வபிமானத்தை நிறைவேற்றி வைக்கும் சூக்குமசரீரம், ஸ்தூலசரீரம். இறந்தபின்பும் கூட அதை விட்டுப்பிரிய மனமின்றி அதன் பக்கத்திலேயே வந்து உலாவிக்கொண்டிருக்கும். தற்கொலை செய்து கொண்டோ, அல்லது எதிர்பாராதவிதமாய் திடீரென அடாயம்நேரிட்டோ ஒருவன் இறந்துபோவானேயானால் அவனுடைய இறந்த சரீரம் கிடந்த இடத்தில் ஒரு வரும் சிலகாலம் வரையில் போகக்கூடாதென்றும். அங்கே இரவு முழுவதும் விளக்கு ஏற்றிவைத்திருக்கவேண்டுமென்றும் சாதாரணமாய் நம் வீட்டு ஸ்திரீகள் சொல்லுவதைப் பலமுறையும் கேட்டிருக்கிறோம். என் போகக் கூடாது என்று அவர்களைக் கேட்டால் அந்தப்பிணம் கிடந்த இடத்தில் கால் நிற்கிறது என்று சொல்லுகிறார்கள். கால் என்பதற்கு காற்று என்று பொருள். அதாவது ஆன்மாவுக்கு ஸ்தூல சரீரத்திலுள்ள அபிமானம் போகாமலிருந்தும் தற்செயலாய் அச்சாரம் இறந்து பட்டதால் இறந்த பின்பும் அச்சரீரத்தை விட்டுப்பிரிய மனமில்லாமல் ஆன்யா சூக்கும சரீரத்தில் இருந்தபடியே, முன்பு இறந்துபோன ஸ்தூல சாரம் கிடந்த இடத்தில் வந்து உலாவிக்கொண்டிருக்கும். இப்படி ஆன்மா சூக்கும சரீரத் தோடுவந்து இயங்குவதைத்தான் கால் நிற்கிறது என்கிறார்கள். இறந்து போனவர்களுடைய கல்லறைகளின் மீதும், சமாதிகளின் மீதும் ஊதா நிறமான வெளிச்சமொன்று தோன்றுவதைக் கிளயர்வாயண்ட் அல்லது ஆத்துமக் காட்சிக்காரர்கள் காணக்கூடுமென்றும், இறந்துபோன சரீரத்தில் வசித்த ஆன்மா சூக்கும சரீரத்துடன் அவைகளின் மீது வந்து உலாவுவதே அப்படிக்காணப்படுகிற தென்றும், தியாஸபியார் கூறுகிறார் கள். ஒருவனுடைய ஆன்மா பிரிந்த இடத்திலும் இப்படிக் காணப்படுவ துண்டாம். நம்முடைய இந்துக்கள் இறந்த சரீரத்தைப் புதைப்பதைவிட தகனம் செய்துவிடுவது சிலாக்கிய மென்று கருதுவதற்கு இங்கே ஒரு முக்கிய காரணமிருக்கிறது. இறந்த சரீரத்தைப் புதைத்துவிட்டால் அச்சரீ ரத்தின் அணுக்கள் பிரிந்து தத்தம் நிலைமையை அடைவதற்கு நீண்ட காலம் செல்லும். அப்படிப் பிரிந்து செல்லுகிறவரையில் சூக்கும சரீரம் அவ்விடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கும். அப்படியன்றி சரீரத்தைத் தீயிலிட்டுக் கொளுத்திவிட்டால் சாரத்தின் பாகங்கள் பிரிந்து தத்தம் நிலையை விரைவில் அடைந்து விடும். அதாவது பிருதிவி பூமியுடனும், அப்புநீருடனும், வாயு காற்றுடனும், தேயு நெருப்புடனும் சேர்ந்துவிடும். அதன் பிறகு சூக்கும் சரிரத்துடன் ஆன்மா அந்த இடத்தில் வந்து உலாவ இடமிராது. இக்காரணம் பற்றியேதான் நம்மவர்கள் தகனத்தைச்சிறந்ததாகக் கொள்ளுகிறார்கள். இவ்வுண்மையை உணர்ந்து ஐரோப்பியர்களில் பலரும், அமெரிக்கர்களில் பலரும் இறந்த சரீரத்தைப் புதைப்பதை விடத் தகனம் செய்வதே சிலாக்கியமென்று கொண்டு இப்போது அப்படியே செய்து வருகிறார்கள்,
   
ஸ்தூலசரீரந்தில் ஆன்ம அறிவு ஸ்தூலமாக விளங்கினது போலில்லாமல் இந்த சூக்கும சரீரத்தில் ஆன்ம அறிவு நன்றாயும் தெளிவாயும் விளங்கும். ஒருவன் கற்சுவரின் மூலமாய் மறுபுறத்திலிருக்கும் பொருளைப் பார்க்க முடியாவிட்டாலும் பளிங்குச்சுவர் மூலமாய் பார்க்கக்கூடுமன்றோ? கற்சுவ ருக்கு சமமாக ஆன்மாவுக்கு ஸ்தூலசரீரம் இருக்கிறதென்றும், பளிங்குச் சுவருக்கு சமமாக சூக்கும சரீரம் இருக்கிறதென்றும் நாம் கொள்ளவேண்டும். ஆன்மாவினுடைய சக்தியும் இந்த சரீரத்தில் மிகுந்து தோன்றும், ஸ்தூல சரீரம் தடிப்பாயும் கனமாயு மிருத்தலால் அச்சரீரம் இயங்குவதற்கு இன்றியமையாத கருவி கரணங்கள் பலவாயின. கருவி கரணங்கள் பலவாகவே ஆன்மசக்தி ஸ்தூல சரீரத்தில் பிரவர்த்தித்திருக்கும் போது அந்தப் பலகருவி கரணங்களின் வழியாயும் சென்று வியர்த்தமாகின்றன. ஒரு பெரிய ஆற்றிலிருந்து பல சிறு வாய்க்கால்களை வெட்டினால் ஆற்று ஜலம் அவைகளின் வழியாய்ப் பலபாகத்திலும் பிரிந்து செல்லுகிறது. ஆகவே ஆற்றின் ஜலவோட்டத்தின் வேகம் குறைந்துவிடும். ஆனால் பல கால் வாய்களின் வழியாய்ச் செல்லும் அவ்வளவு ஜலமும் ஆற்றிலேயே சென்றால் ஜல ஓட்டம் எவ்வளவு வேகமாயிருக்கும்? அதுபோலவே ஆன்மசக்தி பஞ்சேந்திரியங்களின் வழியாய்ச் செல்லும்போது ஆற்றல் குறைந்தும், புலன் வழிச்செல்லும் அறிவு ஒடுங்க ஓகிங்க ஆற்றல் மிகுந்தும் தோன்று
மென்பது இங்கு கவனிக்கத்தக்கது. சூக்குமசரீரம் இயற்கையாகவே இலேசாயும் நுண்ணிதாயு மிருந்தால் ஸ்தூல சரீர இயக்கத்துக்குவேண்டிய பல கருவி கரணங்கள் இந்த சூக்கும சரீரத்தின் இயக்கத்துக்கு வேண்டிய அவசியமில்லை. கருவிகரணங்கள் குறையவே ஆன்மாவின் சக்தி  மிகுதிப்படுகிறது.
   
மேலும், ஸ்தூலசரீரத்தைவிட சூக்கும சரீரம் நுட்பமாகவும் இலேசாகவும் இருந்தபோதிலும், ஆற்றல் ஸ்து லசாரத்தை விட சூக்கும சரீரத்துக்கே அதிகம். பொருள்கள் நுட்பமாகச் செல்லச் செல்ல அவைகளின் ஆற்றல் மிகும். கடினமான பனிக்கட்டி பெரிய காரியங்களுக்குப் பயன்படுவ தில்லை. அந்தப் பனிக்கட்டியே உருகி ஜலரூபமாகி அந்த ஜலம் ஆற்றில் ஓடிவரும்போது படகு முதலியவைகளை இழுத்துச்செல்ல அந்தஜலவோட்டம் பயன்படுகிறது. அதே ஜலத்தைக் கொதிக்கவைத்து நீராவியாகமாற்றினால் பெரிய பாரங்களை மிகுந்த வேகத்துடன் நெடுந்தூரம் இழுத்துச் செல்ல அந்தநீராவி பயன்படுகிறது. இதனால் பொருள்கள் நுட்பமாக நுட்பமாக அவைகளின் ஆற்றல் அதிப்படுகிற தென்பது விளங்கவில்லையா? இதைப் போலத்தான் நமது சரீரங்களுள்ளும் தூலசரீரத்தைவிட சூக்குமசரீரம் நுட்பமாயிருத்தலால் சூக்கும சரிரத்தின் சக்தி அதிகப்படுகிற தென்பது இதனால் பெறப்பட்டது. சூக்குமசரீரத்தின் சந்தி அதிகப் படவே, ஸ்தூல சரீரத்தின் உதவியைக்கொண்டு சாதித்துக் கொள்ள முடியாதிருந்த அநேக காரியங்களை இந்த சூக்கும சரீரத்தின் உதவியைக் கொண்டு சாதித்துக்கொள்ளலா மன்றோ? இந்த சூக்கும சரீரத்தின் ஆற்றல் மிகுந்திருப்பதாலும், இதில் வசிக்கும் பரிசுத்தமான ஆன்மாவின் அறிவு நன்றாய்ப் பிரகாசிப்பதாலும், பலதேசத்தில் நிகழும் சம்பவங்களை இருந்த விடத்திலிருந்து அறிதல், பிறருக்குத் துன்பம் நேரிட்டால் நினைத்த அளவில் அத்துன்பத்தை நீக்கல், தூரத்திலுள்ள ஒருவரோடு இருந்த விடத்திலிருந்து சம்பாஷித்தல், இன்னும் இவைபோன்ற பல அற்புதமான காரியங்களை சூக்குமசரீரத்தில் வசிக்கும் ஒருவன் இயற்றும் வல்லமையுடையவனாவான். இப்படிப்பட்ட அற்புதகாரியங்களைச் செய்யும் மகான்கள் பலர் இந்தியாவிலும் மேல் நாட்டிலும் இன்றும் இருந்துவருகிறார்கள். இனி, மனோமய கோசத்தைப்பற்றி இரண்டொரு வார்த்தை சொல்வாம்.

மனோமய கோசம்.

முன்சொன்ன இரண்டு கோசங்களையும் விட இந்த மனோமய கோசமே மிகவும் முக்கியமானது. இந்த மனோமயகோசம் 'குணசரீரம்' என்று நம்முடைய ஆன்றோரால் வழங்கப்பட்டு வருகிறது. ஆன்மாவினுடைய அறிவு நிகழ்ச்சிகளெல்லாம் இந்த மனத்தினுடைய உதவியையே பற்றுக் கோடாகக்கொண்டு நிகழும். ஆன்மா மனோமய கோசத்தில் இயங்கும் போது தான் அதற்கு "நினைத்தல்'' என்னும் தொழில் ஏற்படுகிறது. பிராணமய கோசத்தைவிட இந்தமனோமய கோசம் அதாவது குண சரீரம் மிகவும் நுட்பமுடையது, ஸ்தூலசரீரத்தைக் கற்சுவர்போலவும், சூக்கும் சரீரத்தை பளிங்குச்சுவர்போலவும் கொண்டால், இந்தக் குண சரீரத்தை மெல்லிய வெண்மையான சல்லாத்துணியால் தைக்கப்பட்ட ஒருதிரைக் குச் சமானமாகச் சொல்லலாம். ஆன்ம அறிவு இந்த மனோமய கோசத்தில் இயங்கும் அவசரந்தான் 'சுழுத்தி' என்று சொல்லப்படும். இந்த மனோமய கோசத்தில் மூன்று தத்துவங்கள் ஒன்றோடொன்று இணைபிரியாமல் தொடர்ச்சியாய் இருக்கின்றன. இம்மூன்றும் சேர்ந்து செய்யும் வேலையையே நாம் 'மனோசக்தி' என்று சொல்லுகிறோம். இம்மூன்று
தத்துவங்களாவன : - (I). எண்ணம் அல்லது நினைவு (Thought), (2) ஆகாய ஆற்றல் (Etheric Energy), (3) திடச்சித்தம் (Will). நாம் நினைக்கிற ஒவ்வொரு எண்ணமும் சூக்கும ஆகாயத்தில் ஒருவிதமான அதிர்ச்சியை உண்டாக்குகின்றது. இந்த அதிர்ச்சி மற்ற மனிதர்களின் மூளையில் தாக்குகின்றது. இப்படியாக இருவருடைய எண்ணங்களால் உண்டாக்கப்படும் அதிர்ச்சி ஒன்றுபட்டிருக்குமாகில் இருவருடைய எண்ணங்களும் ஒன்று சேர்ந்து ஒருவருக்குத் தோன்றியபடியே மற்றவருக்குந்தோன்றி ஒரேவித உணர்ச்சியை உண்டாக்குகிறது. நான் வெகு தூரத்திலிருக்கும் என்னுடைய நண்பன் ஒருவனை நினைக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம். என்னுடைய நினைப்பானது மின்சாரம், உஷ்ணம், முதலிய சக்திகளைப்போலவே சூக்கும ஆகாயத்தில் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. அப்படி உண்டாகும் அதிர்ச்சியால் சூக்கும ஆகாயத்தின் அணுக்கள் ஒன்றோடொன்று தாக்கப்பட்டு அந்த நினைவை தூர தேசத்திலிருக்கும் என்னுடைய நண்பனின் மூளையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. உடனே அவன் என்னைப்பற்றி நினைக்கிறான். இப்படி நினைப்பதால் அவனுடைய மூளையில்ஜனிக்கிற சக்தியைத்தான் ஆகாய ஆற்றல் (Etheric Energy) என்று சொல்லுவது. திடச்சித்தம் என்பது நினைவுகளை உண்டாக்கிச் செலுத்திக் காத்துத் தத்தம் இடத்திற்கு வழிகாட்டி நிற்பது. ஆகவே நினைவு திடச்சித்தத்தினால் ஆளப்பட்டும், காக்கப்பட்டும் வருகிறதென்பது பெறப்படுகிறதன்றோ?,

மனோசக்திக்கு இரண்டு விதமான நிலைகள் உண்டு. ஸ்தூலசூக்கும் சரீரங்களின் உதவியைக்கொண்டு நடைபெறும் மனோசக்தி ஒருவிதநிலை. அச்சரீரங்களின் உதவியில்லாமலே நடைபெறுவது மற்றொருநிலை. ஆன்மா அன்னமய, பிராணமய கோசங்களில் அனுபவிக்கும் இன்பதுன்பங் களுக்கு மனோமய கோசத்தின் உதவி வேண்டுமென்பதும், ஆனால் மனோ மய கோசத்தில் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்கு அவ்விரண்டு கோசங் களின் உதவி இருந்தாலுமிருக்கலாம் இல்லாவிட்டாலுமில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஒருவன் ஒரு இனிமையான சங்கீதத்தைக் கேட்டு ஆனந்தமடைகிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். சங்கீதத் தைக் கேட்டல், ஆனந்தமடைதல் என்னும் இரண்டு செய்கைகளுக்கு மத்தியில் எவ்வளவோ அற்புதமான சம்பவங்கள் நேரிடுகின்றன. சங்கீதத்தைக் கேட்ட உடனேயே அவன் ஆனந்தமடையவில்லை. ஓசை என்பது ஒருவித சக்தி என்பது இங்கே ஞாபகத்தில் வைக்கப்படவேண்டும். பாடகனுடைய வாயிலிருந்து சங்கீத ரூபமாக வெளிப்படும் ஓசையானது பாடகனுக்கும் கேட்போனுக்கும் இடையிலுள்ள சூக்கும ஆகாயத்தில் அதிர்ச்சியை உண்டாக்க, அந்த அதிர்ச்சியினால் சூக்கும் ஆகாயத்திலுள்ள அணுக்கள் ஒன்றோடொன்று தாக்கி கேட்போனுடைய ஸ்தூலசரீரத்தில் அமைந்திருக்கும் காது என்னும் கருவியின் வழியாய் அவ்வோசையைச் செலுத்த, அந்த ஓசை சூக்கும சரீரத்தின் கருவி வழியாக மூளையைச்சென்று தாக்க, மூளைக்கும் மனதுக்கும் இடையிலுள்ள கருவியின் வழியாக மூளையை முதலில் சென்று தாக்கிய ஓசை மனதுக்குக் கொண்டுவரப்பட்டு அம்மனத்தின் நினைவை எழுப்பிவிட அந்த மனோசக்தியின் எழுச்சியை ஆன்மா உணர்ந்து அனுபவிக்கிறது. அப்படி அனுபவிக்கும் உணர்வின் அவசரத்திற்றான் " பேஷ் ! திவ்வியமான பாடல் " என்று கேட்போன் சொல்லி ஆனந்தப்படுகிறான். இங்கே மனோமய கோசத்திலிருந்து அனுபவிக்கப்படும் ஆன்ம அனுபவத்துக்கு மற்ற இரண்டு கோசங்களும் உபகரணமாயிருந்தன என்பது புலப்படுகிறதல்லவா? மனோசக்திக்கு இரண்டுவிதமான நிலைகள் உண்டு என்று சற்றுமுன்பு சொன்ன தில் முதல் நிலைமையை விளக்குதற்குச் சொல்லப்பட்டதாகும் மேலே சொன்ன உதாரணம். இதையும், இன்னும் இப்படியே பஞ்சேந்திரியங்களின் உதவி கொண்டு அறியப்படும் மனத்தின் அனுபவங்களையும் தியாஸபியார் " தாழ்ந்த மனோநிலை " (Lower Manas) என்று கூறுகிறார்கள். ஸ்தூலசூட்சும சரீரங்களின் உதவியின்றியே ஆன்மா மனோமய கோசத்தில் இயங்கவும், அதன் அறிவு அங்கே பிரகாசிக்கவும் கூடும் என்று சொன்ன இரண்டாவது நிலைமைக்கு ஒரு சிறு உதாரணங் கூறுவோம். ஒரு போர்வீரன் யுத்தகளத்தில் நின்று தான் எவ்விதத்திலும் ஜெயம்பெறவேண்டு மென்னும் பேரவாவுடன் யுத்தம் புரிகிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். எதிரிகளுடைய குண்டுகள்பட்டு அவனுடைய காலில் பெருங் காயத்தை உண்டாக்கி இரத்தம் ஆறாய்ப் பெருகுகின்றது. அப்படியிருந்தும் அவன் ஒரே ஆவேசத்தோடு பல மாய் யுத்தம் புரிந்துவெற்றிகொள்ளுகிறான். குண்டுபட்டதால் உண்டான காயத்தையும், வலியையும் அவன்யத்தம் செய்தபோது உணர்ந்திலன். வெற்றிபெற்று வீட்டுக்குத் திரும்பிய பின்னரே தன்காலில்பட்ட காயத்தையும் வலியையும் உணருகிறான். இதற்குக் காரணமென்ன? யுத்தம் செய்து வெற்றி பெறவேண்டும் என்னும் ஒரே எண்ணத்தில் அவனுடைய ஆன்ம அறிவுபிரவர்த்தித்திருந்தபடியால் ஸ்தூல சூட்சுமசரீரங்களில் ஆன்ம அறிவு நடைபெறவில்லை. ஆகவே அவன் வலியை உணர்ந்திலன். யுத்தசமயத்தில் அவனுடைய அவாவசப்பட்டு நின்ற ஆன்ம உணர்ச்சி வீட்டுக்குத்திரும்பியவுடன் அந்த நிலையைவிட்டு ஸ்தூல சரீரத்தில் இயங்கிற்று. ஆகவே வலியை உணர்ந்தான். ஆன்மா இப்படியாக ஸ்தூலசரீரத்தின் உதவியை வேண்டாமல் மனோமயகோசத்தில் இயங்கும் அவசரம் பல உண்டு. - இந்த அவசரந்தான் மனத்தின் இரண்டாவது நிலையாகும். இதுபோன்ற மனோநிலையைத் தியாஸபியார்'' மனதின் உயர்நிலை" (Higher Manas) என்று கூறுகிறார்கள். ஆன்மா மற்ற இரண்டுகோசங்களையும் அறவே ஒழித்து இந்த மனோமய கோசத்திலேயே இயங்கினால் தான் அதனுடைய சக்தியும் அறிவும் விரிந்துதோன்றும். ஸ்தூல சரீரத்தின் உதவியின்றியே ஆன்மா மனோமய கோசத்தில் இயங்கக்கூடுமென ஏற்கெனவே விளக்கியிருக்கின்றாம். மற்ற இரண்டு சரீரங்களின் உதவியில்லாமல் ஆன்மா மனோமய கோசத்திலிருந்தபடியே மற்றொருவருடைய எண்ணத்தையும் செய்கையையும் அறியக்கூடுமென்றும், ஸ்தலசரீரத்திலிருந்து செய்யும் வேலையை  விட அதிகவேலையை மனோமயகோசத்திலிருந்து செய்யக்கூடுமென்றும் நம்முடைய சித்தாந்த சாஸ்திரங்கள் கூறுவது மேல் நாட்டின் நாகரிகவயப்பட்ட பலருக்கு நம்பத்தக்கதன் றெனப்படினும் அம்மேனாட்டினர் சொல்லுவதையே எடுத்துச் சொன்னால் அவர்களுக்கு நம்பிக்கை யுண்டாகுமன்றோ? பிரபல ஆன்ம தததுவ சாஸ்திரியாகிய ஸர் ஆலிவர் லாட்ஜ் (Sir Oliver Lodge) பின்வருமாறு கூறுகின்றார்: -.

    We can operate on each other's minds through our  physical envelope, by speech and by writing, and in other   ways, but we can do more. It appears that we call operate   at a distance, by no apparent physical organ or medium; if by mechanism at all, then by mechanism at any rate un
  known to us (i.e). by Telepathy'' என்று கூறி அப்படி நடைபெறுவதை டெலிபதி என்று கூறுகிறார். மேலே நாம் சொன்ன கருத்தையே இவருடைய இந்த வாக்கியங்கள் வெளியிடுகின்றன. இந்த மனோமய கோசம் சூக்கும சரீரத்தைவிட மிகவும் நுண்ணி தாய் வெண்மையான சல்லாத்துணியைப்போலிருந்தாலும், சூக்கும சரீரத்திலுள்ள அத்துணைக் கருவிகள் இல்லாமல் இரண்டு மூன்று கருவிகளே வாய்க்கப்பெற்றிருப்பதாலும் ஆன்மா இந்தக் குணசரீரத்தில் இயங்கும்போது இறைவனுடைய திருவருட் சக்தியானது மிகுந்து தோன்றும். ஆகவே பூதாகாயத்திற்கு மேற்பட்ட பரமாகாயத்தில் தோன்றுபவைகளை ஒருங்கறியவும் ஒருங்கே காணவும் ஆன்மா வல்லதாகும். இறந்தோரைப் பிழைப்பித்தல், நினைத்த மாத்திரத்தில் ஒரு இடத்தைவிட்டு, மற்றொரு இடத்துக்குச் செல்லல், பரகாயப் பிரவேசம் செய்தல் போன்ற அநேக அற்புதங்களைக் குணசரீரத்திலிருக்கும் ஆன்மா செய்யும் ஆற்றலுடையதாகும். இனி விஞ்ஞானமய கோசத் தைப்பற்றிச் சிறிது உரைப்பாம்.

விஞ்ஞானமயகோசம்.
   
இந்த விஞ்ஞானமயகோசம் மற்ற மூன்று கோசங்களையும்விட அதி நுட்பமானது. மனோமயகோசம் மெல்லிய சல்லாத்துணிக்குச் சமமாயிருக்கிறதென்று கொண்டால் விஞ்ஞானமயகோசத்தை பாம்புரிபோல் அதாவது பாம்பு உரித்துப்போட்டிருக்கும் சட்டையைப்போல் கொள்ளலாம் : விஞ்ஞானமய கோச மென்று சொல்லப்படும் இந்தக் கஞ்சுக சரீரத்தில் ஆன்ம அறிவு விளங்கப்பெறும் அவசரமே துரியமென்று சொல்லப்படும். இச்சரீரத்தில் ஆன்மா சுத்தஞான சொரூபமாய் நிற்கும். ஆன்மாவுக்கு உள்ள இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்னும் மூன்றனுள் கீழ் நிலைக்கண்ணவான இச்சாசக்தியும் கிரியாசக்தியும் ஆன்ம இந்த விஞ்ஞான மயகோசத்தில் இயங்கும் போது ஒழிந்து போவதால் ஞானசக்தி ஒன்றே பிரகாசியா நிற்கும். ஞான சக்தியின் விளக்கம் அதிகமிருந்தால் ஆன்மா.வுக்கு மற்றகருவி கரணங்களின் உதவி அனாவசியமாகிறது. ஆகவே ஞானத்தில் படிந்து பாமா காயத்திற்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பேரற்புத நிலைகளை யெல்லாம் உணர்ந்து அனுபவிக்க ஆன்மா வல்லதாகும்.

ஆனந்தமயகோசம்.
   
விஞ்ஞானமயகோசத்தினும் நுட்பமானது ஆநந்தமய கோசம். விஞ்ஞானமயகோசத்தைப் பாம்புரிக்குச் சமானமாகக் கொண்டால் இதைப் பால் நுரைபோன்றதோர் வஸ்துவுக்குச் சமமாகக் கொள்ளலாம். மற்ற எல்லாபோசங்களையும் விட இந்தக் காரண சரீரம் நுட்பமுடையதாயினும் இதுவும் மற்றக்கோசங்களைப்போல மாயையில் திரண்ட சரீரமே யாதலால் இதனுடைய உதவியை வேண்டும் ஆன்ம அறிவு சிறிது அசேதனமாய்த்டக்குறு மாதலின் இதனுடைய தொடர்ச்சியையும் ஆன்மா நீக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் காரண சரீரத்தில் ஆன்ம அறிவு நிகழும் அவசரமே துரியாதீதமெனப்படும். இந்த ஆனந்தமயகோசத்தையும் ஆன்மா கடந்துவிட்டால் நான், எனது என்னும் உணர்ச்சி முழுவதும் அற்று காண்பான், காணப்படும் பொருள், காட், ஆகிய எல்லாம் சுத்த சிவசொ ரூபமாய் விளங்குவதைக்கண்டு அச்சிவானந்தப் பேற்றில் அழந்தி ஒன்று பட்டு. இன்பமனுபவிக்கும். அந்தநிலைமையில் ஆன்மா அவ்வானந்தத்தை அனுபவித்தபோதிலும் அது சிவசத்தியால் விழுங்கப்பட்டு ஏகதேசமாகிய சீவ இலக்கணங்கெட்டு சுத்த சிவ சொரூபமாமவே விளங்கும். இதுவே அத்துவித முத்திநிலையாம். இந்த ஐந்து கோசங்கள் ஆன்மாவுக்கு கொடுக் கப்பட்டிருப்பது கடைசியாக இப்படிப்பட்ட உயர் நிலையை ஆன்மா அடை வதற்காகவே.

முடிவுரை.

என்றிதுகாறுங்கூறிய வாற்றால் பஞ்சகோசங்கள் என்பன அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்துமாம் என்பதும், இவை முறையே ஸ்தூலசரீரம், சூக்குமசரீகம், குணசரீ ரம், கஞ்சுகசரீரம், காரணசரீரம் என்று அழைக்கப்படுமென்பதும், கற்சுவர், பளிங்குச்சுவர், மெல்லிய சல்லாத்துணி, பாம்புரி, பால் நுரைகளைப்போல் ஒன்றுக்கொன்று சூக்குமமாக இவ்வைந்தும் இருக்கின்றன என்பதும், இவைகளில் ஆன்ம அறிவு நிகழும் அவசரத்தினை முறையே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்று சொல்லப்படுமென்பதும், பனிக்கட்டியைவிடத் தண்ணீருக்கும், தண்ணீரைவிட நீராவிக்கும், நீராவியைவிட மின்சாரத்துக்கும், ஆற்றல் மிகுந்து தோன்றும் என்பது, பொருள்கள் நுட்பமாகச் செல்லச் செல்ல அவைகளின் ஆற்றல் அதிகப்படு மென்பதை வலியுறுத்துவதுபோல், ஸ்தூலசரீரத்தைவிட சூக்குமசரீரம் நுட்பமாயிருப்பதும், அதைவிட குணசரீரம் நுட்பமாயிருப்பதும், சரீரங்கள் நுட்பமாக நுட்பமாக அவைகளின் ஆற்றல் அதிகப்படுகிறதென்பதை வலியுறுத்துகிறதென்பதும், நுட்பமானச்சரீரங்களில் ஆன்மா வசிக்க வசிக்க மற்ற சரீரங்கள் அதற்குப் பயனற்றன வாய் ஒழியுமென்பதும், இப்படியே ஒவ்வொரு சரீரத்தையும் ஒழித்துக் கடைசியில் ஆனந்தமய கோசத்தை விடுத்து ஆன்மா சுத்த சிவானந்தத்தில் தோய்ந்து நிற்குமென்பதும், அப்படிப்பட்ட நிலைமையே அத்துவித முத்திநிலை எனப்படு மென்பதும், அப்படிப்பட்ட நிலைமையை ஆன்மா அடைவதற்கு உபக்ரணமாகவே இப்பஞ்சகோசங்கள் ஏற்பட்டன வென்பதும் பிறவும் ஒருவாறு விளக்கப்பட்டன.

சுபம்.

நாகை - கோபாலகிருஷ்ணன்.
சித்தாந்தம் – 1912 ௵- மார்ச் ௴


No comments:

Post a Comment