Sunday, May 10, 2020



வடமொழிச் சிவஞான போதத்தின் காலம்
[மு. அருணாசலம்]

சிவஞான போதம் தமிழ் முதல் நூலே, மொழி பெயர்ப்பன்று என்பதற்கு 120 காரணங்களைக் காட்டி சைவ சித்தாந்த மகா சமாஜத் தலைவர் காலஞ்சென்ற ம. பாலசுப்பிரமணிய முதலியாரவர்கள், மிகத்திட்டமாக நிறுவியிருக்கிறார்கள். சித்தாந்தம் 1949, பக்கம் 169 195) எல்லாக் கூற்றுக்களையும் மிகத்தெளிவாக அவர்கள் ஆய்ந்து, தம் கருத்தை மறுக்க இடமின்றி ஆணித்தரமாக - நிரூபித்திருக்கிறார்கள். மேலும் இரு காரணங்களைக் கூறி வடமொழி நூலின் காலம் இன்னதென்று வரையறை  செய்வதே இக்குறிப்பின் நோக்கம்.

பின்வருவது வடமொழிச் சிவஞான போதத்தின் பன்னிரண்டாவது சூத்திரம்: -  

முக்த்யை ப்ராப்ய ஸதஸ் தேஷாம்    
பஜேத் வேஷம் சிவாலயம்  
ஏவம் வித்யாத் சிவஜ்ஞான  
போதே சைவார்த்த நிர்ணயம்.

இதன் பொருள் முத்தியின் பொருட்டுச் சத்துக்களையடைந்து அவர்களுடைய திருவேடத்தையும், சிவாலயத்தையும் பஜிப்பானாக; இவ்வாறு சிவஞான போதமென்னும் இந்நூலில் சைவார்த்த நிர்ணயத்தை அறிக என்றவாறு. தமிழ்ச் சிவஞான போதத்தில் சிவஞான போதம் என்ற நூற்பெயர் எவ்விடத்திலும் சொல்லப்படவில்லை. ஆனால் வடமொழி நூலில் இப்பெயர் சொல்லியது மட்டுமின்றி அந்தச் சிவஞான போத நூலில் சைவ ஆகமப் பொருளை நிச்சயித்து அறிக'' என்று குறிப்பிட்டும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்த வடமொழிப் பாடல் தான் வேறொரு மூல நூலைச் சுட்டிக்காட்டி அந்த நூலின் பெயர் சிவஞான போதமென்றும், அதில், சைவார்த்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அது அறியத் தக்கது என்றும் கூறுவதாக நாம் கருதலாம். ஆகவே இவ்வடமொழிப்பாடல் (பன்னிரண்டாம் சூத்திரம்) - தனக்கு மூல நூலாகிய தமிழ்ச் சிவஞான போதத்தைத் தன் சொல்லாலேயே சுட்டுகிறது என்று கருதுவது பொருத்தமாகும்.

இனி, சுமார் கி. பி. 1325 - 1350 இல் செய்யப்பட்ட 'ஞான சரிதை' என்ற தொகுப்பினுள் கண்ட ஐந்து சிறு - நூல்களுள் ஒன்றாகிய ஞான தீட்சா விதியில் காணும் ஒரு பல கருத்து இங்குக் கருதத்தக்கது. இச்சிறு நூல் எட்டுத்திரு விருத்தங்களையுடையது. முதல் விருத்தம் 'ஞான குருவருவான்' என்றும், அடுத்த மூன்று விருத்தங்க இன்ன நாளில், இன்ன இடத்தில் இன்ன விதமாக அவனை மாணாக்கன் இறைஞ்ச வேண்டுமென்றும் கூறி, அடுத்த விருத்தெத்தில் 'இன்ன விதமாகத் திருவடி தீட்சை நிகழ்த்துக' என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர் ஏழாவது விருத்தத்தில் மாணாக்கனுடைய மனம், பொருள் நூலில் சேர்ந்திலதேல், சிவப்பிரகாசத்தின் உண்மை, செம்மையினிற் செலுததுக' என்று கூறுகிறது. பின்வருவது இறுதியாகிய எட்டாம் பாடல்:  

தேசுமிகும் அருட்பயின்ற சிவப்பிரகாசத்தில்  
திருந்து பொதுச் சங்கற்ப நிராகரணந் திருத்தி
ஆசில் அருள் வினாவெண்பாச் சார்பு நூலால் காதல் –
அருள்எளிதிற் குறிகூட அளித்து ஞான
பூசைதக்க காரணமுன் புகன்றதனிற் புகுந்து
புணர்விக்க சிவஞான போதசித்தி வழி நூல்
மாசில்சத மணிக்கோவை முன்னூல் சான்று
மருவுதிரு முறைத்திரட்டு வைத்தனன் மன்னுயிர்க்கே.

இங்குக் கூறுகின்ற பொருளாவது, “பொருள் நூலில் கருத்துச் சேர்ந்திலதேல் அம்மாணாக்கனுக்கு, முதலில் சிவப்பிர காசத்தின் உண்மை அதிகாரத்தை உபதேசிக்க; அதன் பின்னர் அருள் நிறைந்ததாகிய, சிவப்பிரகாசத்தின் பொது அதிகாரத்தையும், சங்கற்ப நிராகரணத்தையும், திருத்தமாக ஐயங்கள் நீங்கும்படிச் சொல்லி, பின்னர் குற்றமில்லாத திருவருட்பயன், வினா வெண்பா, ஆகியவற்றை எளிதில் அருள் கூடும்படியாக உரைத்து, ஞான பூஜை அதற்கு உரிய காரணமும் கூறி அந்தப் பூஜையில் மாணாக்கனுடைய மனத்தை ஒருமைப் படுத்துக; இவ்வாறு செய்தற்கு மன்னுயிர்களுக்கு வைக்கப்பட்ட நூல்கள், சிவஞான போதமும், சிவஞான சித்தியாரும், மாசில் சத மணிக்கோவையும், இவற்றுக் கெல்லாம் முந்திய நூலாகிப் பிரமாணங்கள் நிரம்பியதாகிய (உமாபதி சிவாசாரி யார் தொகுத்தருளிய) திருமுறைத் திரட்டும் ஆகும்.

இக்கருத்து நன்கு ஆராய்தற்குரியது. இறைவன் அருளைக் கொண்டு, மாணாக்கருடைய உள்ளத்திலே மெய்ப்பொருள் நூலை இருத்தும் பொருட்டு, அவனுக்கு அமைக்கப்பட்ட நூல்கள் சிவஞான போதம் முதல் நான் குமாம். இவை நான்கும் தமிழ் நூல்கள் என்பது தெளிவு. தமிழ்ச் சிவஞான போதத்திற்கு முதல் நூலாக வடமொழி நூல் ஒன்று இருந்திருக்குமானால் இப்பாடலைச் செய்தவர், ''இந்நான்கு நூல்களாலும் அருள் கூடாவிட்டால் வடமொழிச் சிவஞான போதத்தைப் பயன்படுத்திக் கொள்க''  என்று கூறியிருப்பார். தமிழினும் பார்க்க வடமொழிக்கு ஏற்றம் கற்பிப்பது அக்காலமரபாக இருந்து வந்திருக்கிறது. அவ்வாறு இங்கு சொல்லப் பெறாமையால் இந்தத் தீட்சா விதி செய்தோர் காலத்தில் வடமொழிச் சிவஞான போதம் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது. இதனாலும் வடமொழிச் சிவஞான போதம் என்பது இந் நூலின் காலமாகிய (1325 - 50) கி. பி. 14 ஆம் நூற் றாண்டிற்குப் பிற்பட்டுத் தான் முதல் முதல் செய்யப்பட் பட்டிருக்க வேண்டுமென்றும் நாம் கொள்ளலாம். இதனால் பெறப்படுவது வடமொழிச் சிவஞான போதம், தமிழ் நூலைப் பார்த்துச் செய்யப்பட்டதேயன்றி, அதற்கு முந்திய தன்று என்பதாகும்.
தமிழ் நூல்களுள் முதன் முதலாக சிவப்பிரகாச உரை செய்த மதுரைச் சிவப்பிரகாசர் சிவஞான போதத்தைப் பிரஸ்தாபிக்கிறார். "பூரணகர்த்தாவான ஸ்ரீகண்ட பரமேசுவரன் தான் அருளிச் செய்த முன்னூலாகிய சிவாகமத்தில் ஞான காண்டமாயிருக்கப்பட்ட பதிபசு பாசத்தின் உண்மையை ஸ்ரீ நந்திதேவதம் பிரானார்க்குக் கடாக்ஷித்தருள, அந்த உபதேசத்தின் பயனாயிருக்கப்பட்ட சிவஞான போதமாகிய மூலக்கிரந்தம் பன்னிரண்டையும், ஸ்ரீ நந்திதேவ தம்பிரானார் சநற்குமார பகவான் முதலாயுள்ள இருடிகளுக்குக் கடாக்ஷித்தருள அந்த சநற்குமார பகவான் சத்தியஞான தரிசினி பரஞ்சோதி மாமுனிகளுக்குக் கடாக்ஷித்தருள, அந்தப்பரஞ்ஜோதி மாமுனிகள், திருவெண்ணெய்நல்லூரே திருப்படை வீடாக உடைய மெய்கண்டதேவ தம்பிரானார்க்குக் கடாக்ஷித்தருள அந்த மெய்கண்ட தேவ தம்பிரானார். அந்தமூலக்கிரந்தம் பன்னிரண்டின் வழியே பன்னிரண்டு சூத்திரமாக வகுத்து, அந்நூற்பெயராலே சிவஞான போதம் என்னும் திருநாமத்தினையும் சாத்தி வழி நூலாகச் செய்தருளித் தமது திருவடியைப் பெற்ற அருணந்தி தேவதம்பிரானாக்குக் கடாக்ஷித்தருள, அவர் அந்நூலை ஆராய்ந்து பார்த்தருளி, அந்நூல் சொற் சுருங்கி, சுத்தம் ஆழ்ந் திருக்கையினாலே அந்நூலின் அத்தத்தை விரித்துச் சிவ ஞான சித்தி என்னும் திருநாமத்தினையும் சாத்தி வழி நூலாகச் செய்தருள, இந்த இரண்டு நூலயுய ள, இந்த இரண்டு நூலையும் கொற்றவன் குடியில் எழுந்தருளிய உமாபதிதேவ தம்பிரானார் திருவுள்ளத்தின் அடைத்தருளி.. " 

இது இவர் கூறும் நூல் வழி. இங்கு வடமொழிச் சிவஞான போதம் என்று கூறவில்லை. மூலக்கிரந்தம் என்று மட்டுமே கூறுகிறார். மூலமாகிய உபதேசவாக்கி பயம் அல்லது கருத்து என்றே இது கொள்ளத்தகுந்தது. ஆகவே இவர் காலத்தில் வடமொழிச் சிவஞான போதம்  இல்லை என்பது தெளிவு. ரௌரவாகமமோ, பாசவிமோசனப்படலமோ, பேச்சே எழுவதற்கில்லை.

மேலும் இவர், சிவாகமம் முன்னூல் (முதனூல்) சிவஞான போதமும், சிவஞான சித்தியும் வழி நூல், சிவப்பிரகாசம் சார்பு நூல் என்று திருப்பித்திருப்பிக் கூறுகிறார். இது நமக்கும் உடன்பாடே. மெய்கண்டார் செய்த நூல் சிவாகமத்தை நோக்க வழி நூலே அன்றி மற்றப்படி சாத்திர முதல் நூலேயாகும்.

வேதம் பசு; அதன்பால் மெய்யாகமம்; நால்வர் –
ஓதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய்;
நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய்மெய்
செய்த தமிழ் நூலின் திறம்.                            - கண்டான்,

என்பது மெய்கண்டார் நூலின் சிறப்புரைக்கும் பழம் பாடல். இதன் காலம் தெரியவில்லை. வேதம், ஆகமம் நால்வர் ஓதும் தமிழ், மெய்கண்டான் செய்த தமிழ் நூல் என்பது இது வைத்துள்ள முறை. ஆகமத்துக்குப்பின் எந்த வடமொழி நூலுக்கும் இடையில் இடம் இல்லாத படியுள்ளது. சிவாகமம் முதனூல், மெய்கண்டாரின் சிவ ஞானபோதம் வழி நூல் என்ற கருத்துக்கு இது பொருந்துவதாகவே அமைந்துள்ளது. எனவே இப்பாடல் தோன்றிய காலத்திலும், மதுரைச் சிவப்பிரகாசர் தம் சிவப்பிரகாசப் பேருரை எழுதிய காலத்திலும் வட மொழிச் சிவஞான போதம் இல்லை.

முதன் முதலாக வடமொழிச் சிவஞான போதம் என்று குறிப்பிடுபவர் சூரியனார் கோயிலா தீனத்தை ஸ்தாபித்த ஸ்ரீ சிவாக்கிர யோகிகள். வடமொழியில் மகா பண்டிதராகிய அவர் வடமொழிச் சிவஞான போதத்திற்கு வடமொழியில் 12 ஆயிரம் சிரந்தமாக சிவாக்கிர பாடியம் என்ற பெரிய பாடியம் செய்தார். வேறுபாடுகள் சில இருப்பினும், இவ்வுரை சைவ சித்தாந்தக் கருவூலமாக இன்னும் விளங்குவது; இது சிவஞான சுவாமிகளுக்குப் பெருந்துணையாக இருந்தது.

எனவே, இங்குக் கூறியவற்றால் வடமொழிச் சிவஞான போதத்துக்குக் காலமுறைப்படி மேல் எல்லையையும், கீழ் எல்லையையும், நாம் காண்கிறோம். மேல் எல்லை மதுரைச் சிவப்பிரகாசர்; அவர் உரை செய்த காலம் கி. பி. 1488 அப்போது வடமொழிச் சிவஞான போதம் இல்லை. கீழ் எல்லை சிவாக்கிரயோகிகள். அவர்காலம் கி பி. 1564 இப் போது வடமொழிச் சிவஞான போதம் ஏற்பட்டு விட்டது. ஆகவே இவ் வடமொழி நூல் ஏற்பட்ட காலம் கி. பி. 1488 - 1564 ஆகிய எல்லைக்குள் அமைந்திருக்கிறது என்று முடிவு செய்தல் பொருந்துவதாகும். சிவாக்கிர யோகிகளே மெய்கண்டாரிட முள்ள பக்கிப் பெருக்கால் அவர் திருவாக்குக்கு ஆதரவாக வடமொழியில் நூல் செய்து வைத்து அதற்கு ஆகமப் பிரமாணமும் காட்டினார் என்று பெரியோர் சொல்வார்கள். இது மெய்யாயினும் கூட, முற்காட்டிய காலவரையறை பழுதாகாது.

எங்ஙனமாயினும் வடமொழிச் சிவஞான போதம் எழுதிச் சேர்க்கப் பெற்ற காலம் கி. பி. 1488 க்கும், 1564க்கும் இடைப்பட்டதாகும் என்பது தெளிவு.

சித்தாந்தம் – 1964 ௵ - மே ௴


No comments:

Post a Comment