Sunday, May 10, 2020



ஸ்ரீ சிவாக்கிர யோகிகள்
400 ஆம் ஆண்டு நினைவு

[நல் - முருகேச முதலியார்]

"வீழியம் பதியின் மெய்த்தவங் கைவரு
காழி ஞானக் கவுணியன் போலச்
சைவ நன்னெறி தான் தழை வித்துப்
பரவிய சைவ பரிபாலன னென்றும்
உரைதரு சிவாக்கிர யோகி யென்றும்
திரந்தரு கருணைச் சிவக்கொழுந் தென்றும்
வரம்பில் மாதவர் வழுத்தும்
பரம்பரை நாமம் படைத்தவனே!

அளப்பரும் பெருமை வாய்ந்த சிவஞான சித்தியாரின் சிறந்த உரையாசிரியர்களில் ஒருவரும், ஸ்ரீ ஸ்கந்த பரம்பரை வாமதேவ சந்தானம் சூரியனார் கோயில் ஆதீனத்து இரண்டாவது குருமணியுமான ஸ்ரீ சிவாக்கிர யோகிகளது பெருமையைச் சிறிது நினைந்து போற்றுவோம். வல

இவ்வாண்டு 1964. அவர்கள் மறைந்து 400 ஆண்டு நிறைவு என்பது சிந்திக்கற்பாலது. மேனாட்டில் சிறந்த சமய கவி ஆசிரியர்களின் பிறப்பு, இறப்பு நூற்றாண்டு நிறைவுகளை மறதி என்ற கள்வனுக்கு இடங்கொடாமல் சாலப் போற்று கிறார்கள். சைவர்கள் இக்காலத்தில் செய்ந்நன்றிபை மறக்கும் இயல்புடையவர்களாக ஆகிவிட்டோம் என்பது வருந்தத் தக்கது. பல –

தொண்டை நாடு ஸ்ரீ சிவாக்கிர யோகிகளை ஈன்ற பெருமை யுடையது. ஆனால் தொண்டை நாட்டினர் தம் பெருமை தாமறியா மாந்தர்களாகி விட்டனர். யோகிக ளது பிறந்த ஊரைக் கண்டறிய இதுவரை ஓர் ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அவர்கள் அந்தணர் குலத்தில் உதித்த வர். அக்காலத்தில் சூரியனார் கோயில் ஆதினத்தில் வீற்றி ருந்த ஸ்ரீ சிவக்கொழுந்து சிவாசாரியரின் பெருமையைக் கேள்வியுற்று, நமது யோகியர் அவரை அணுகி ஞானோப தேசம் பெற்றார். மாணவரின் பரிபக்குவத்தைக் கண்டு மகிழ்ந்து, ஆசாரியபிடேகஞ் செய்வித்து,'சிவாக்கிர யோகி'என்னும் தீக்ஷாநாமம் சூட்டி தமது ஆதீனத்து துவ தீய குருவாக நியமித்தார். யோகியார் ஆசிரியர் அருளியவாறு சிவானந்த நிட்டையிலே இடையறாது வீற்றிருந்து வர்ணாச் சிரமாதீதராக விளங்கினமையால் அதிவர்ணாச்சிரமசிவாக்கிர யோகியரெனப் புகழ் பெற்றனர். தஞ்சை மன்ன னும் யோகி யர்க்குத் தொண்டனாகி அவர்கள் விரும்பியபடியே திருவீழி மிழலையில் ஓர் மடம் கட்டித் தந்தான். அதில் யோகியார் சைவ பரிபாலனம் செய்து வந்தார். ஒரு சமயம் ஸ்ரீ வைஷ் ணவராகிய மணவாள மாமுனிவரை வாதத்தில் வென்று வெற்றி பெற்றார். திருவீழி மிழலையில் பல சைவ சன்னி யாசிகள் யோகிகட்கு மாணவர்களாகிச் சைவ நெறியில் விளங்கினர்.

=> சிவநெறிப் பிரகாசம். எஸ். அனவரத விநாயகம் பிள்ளை பதிப்பு (1936) பக்கம் v - vii.
=> சிவஞான சித்தியார் சுபக்கம் - திருவாவடுதுறை ஆதீனப் பதிப்பு (1954) முகவுரை - பக்கம் 12.

ஒரு சமயம் நான்கு வருணத்தாருக்கும் சைவ சந்நியா சம் தகுதியா என ஒரு வாதம் வந்தபோது, யோகிகள் உண்டு என்று பலப் பிரமாணங்கள் காட்டி முடிவு செய்து, சைவ சந்நியாச பத்ததி யென்ற ஒரு அரிய நூலை ஆக்கினார். இது எட்டுப் படலங்களையுடையது. இது சந்நியாசிகளுக்கு மட்டுமின்றி, மற்றைய சித்தாந்திகளுக்கும் பயன் படவல்லது. சிவபூசாக்கிரமம், பஞ்சாக்ஷர ஜெபவிதி முதலியனவும் கூறப்பட்டுள்ளன.

=> 'சைவ சந்நியாச பத்ததி'- - தருமபுர ஆதீனப் பதிப்பு (1932) - - படலங்களின் அட்டவணையை இதில் கண்டு கொள்க.

பின் தமது ஞான குருவாகிய ஸ்ரீ சிவக்கொழுந்து சிவாசாரியர் ஆணைப்படி, நமது யோகிகள் வடமொழி சிவ ஞான போத 'சூத்திரங்களுக்கு' சங்கிரக வியாக்கியானம்' என ஒரு சிற்றுரையும், 'சிவாக்கிர பாஷ்யம்' என ஒரு விரிந்த பேருரையும் செய்தனர். இந்தப் பாஷியம் வட மொழியில் ஆக்கப்பட்டு கிரந்தலிபியில் அச்சிடப்பட்டிருப்பதால் இந்த நாளில் கையாளுவோர் ஒருவருமில்லை. இந்தப் பாஷ்யத்தில் சிவ சமவாதத்தை மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர், சிவாக்கிர பாஷியம் கற்கும் மாணாக்கர்கள் சித்தாந்தப் பொருள்களை ஒரு தலையாக உணரச் சுருக்கமாக கத்திய ரூபத்தில் 'சைவ பரிபாஷை'  என்ற ஒரு நூலையும்  ஸ்ரீ சிவாக்கிர யோகிகள் இயற்றியுள்ளார். இது ஸ்ரீ மெய்கண்ட தேவரின் சிவஞான போதத்துக்கு வியாக்கியான மென்றும், ஆசிரியர் ஆகமங்க ளின்ஞானபோதக் கருத்துக்களைத் (முக்கியமாக பௌட்கரம், மிருகேந்திரம்) தழுவியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆசிரியர் சர்வ ஞானோத்தரம், தேவிகா லோத்தரம், அர தத்த சிவாசாரியார் அருளிய சுருதி சுக்திமாலை முதலியவை கட்குத் தமிழுரையும் செய்துள்ளார்.

=> 'சைவ பரிபாஷை', மைசூர் கீழ்நாட்டு ஆராய்ச்சிக் கழகப் பதிப்பு (1950) பதிப்பாளர்கள்: எச். ஆர். ரங்கசாமி அய்யங்காரும், வித்துவான். ஆர். ராமசுவாமியும்

ஆசிரியர் அருளிய தலை சிறந்த நூல் ஸ்ரீ அருணந்தி சிவாசாரியார் அருளிய 'சிவஞான சித்தியாருக்கு'த் தமிழ் உரையாகும். இதில் பரபக்க சுபக்கங்களுக்கு பரமத, சுவ மத பிரமாணங் காட்டியுள்ளது. சில இடங்களில் மணிப் பிரவாளமாக இருந்தாலும், தமிழறிந்தோர் வாசித்துப் பயனடையத்தக்கது. ஆகமப் பிரமாணங்கள் அதிகமுள்ளன. தற்கால விமர்சனங்களில் டாக்டர் வி. ஏ. தேவசேனாபதி யும், டாக்டர் வி. பொன்னையா அவர்களும் இவ்வுரையை வியந்து பேசியுள்ளார்கள். பொன்னையா அவர்கள் சிற்சில இடங்களில் யோகிகள் உரையில் சித்தாந்த சைவத்துக்குச் சம்மதமில்லாத கருத்துக்கள் உள்ளனவென்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னவர் பல விடங்களில் ஸ்ரீ யோகீந்திரர் உரையை மற்ற உரை யாசிரியர் உரைகளுடன் பேதா பேதம் காட்டியுள்ளார். கொன்றைமாநகரம் - சண்முகசுந்தர முதலியார் அறுவர் உரை பதிப்பில் உரையாசிரியர்கள் காட்டியுள்ள மேற்கோள் அட்டவணைகள் தரப்பட்டுள்ளன. யோகீந்திரரின் கருத்து நுட்பமும் தெளிவும் வியக்கத்தக்கன.  

=> யோகிந்திரர் ஆக்கிய 'கிரியா தீபிகை', தாம் பதிப்பித்து வரும் ஆகமங்களில் காணும் நுட்பங்களுக்கு விளக்கம் காண உதவுகிறதென்று புதுவை இந்து - பிரஞ்சு அகாடாமி அதிபர் டாக்டர் - ஜீன் பிலியோசா அடியேனிடம் கூறியுள்ளார்.
=> 'சிவாக்கிர பாஷ்யம் - சூரியனார் கோயில் பதிப்பு (1920)
=> "சைவ சித்தாந்தம்? - டாக்டர் வி. ஏ. தேவசேனாபதி, சென்னைப் பல்கலைக்கழகம். (1960) பக்கம் 10.
=> 'சைவ சித்தாந்த பிரமாண இயல், டாக்டர் வி. பொன்னையா, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

கடைசியாக யோகீந்திரர் சுவாந்த நாச்சியார் என்னும் ஒரு பக்குவியின் பொருட்டு ''சிவநெறிப் பிரகாசம்'' என்ற சித்தாந்த நூலை 215 திருவிருத்தங்களில் செய்தார். இதில் சிவஞான போதம் சித்தியார் முதலிய சாத்திரங்களில் விளங் காத சில பொருள்களுக்கு விளக்கம் கிடைக்கின்றது. பதி பசு பாச இலக்கண மட்டுமின்றி ஞானப் பேற்றிற்கு இன்றி யமையாத தீக்ஷை தத்துவ சோதனை முதலியவைகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இந்நூலுக்கு ஸ்ரீ நந்தி சிவாக் கிரயோகிகள் செய்த உரையில் அது சிவாகமங்களின் சாரத்தைச் சித்தாந்த கொள்கைக்கு வேறாகாதபடி உரைக்கப் பட்டுள்ளது என்பது அறியப் பெறுகிறது.

இத்தகைய ஞானசாரியரின் சரியான காலம் தெரிய வில்லை. சைவ சந்நியாச பத்ததியில் காணக் கிடைக்கும் ஒரு ஸ்லோகத்திலிருந்து அதன் காலம் 1564 என நிச்சயமாகத் தெரிகிறது. அதை அனுஷ்டிப்பதே உத்தமம். ஸ்ரீ யோகீந்திரது ஞான பொக்கிஷம் யாவர்க்கும் உரித்து.

சித்தாந்தம் – 1964 ௵ - டிசம்பர் ௴


No comments:

Post a Comment