Sunday, May 10, 2020



வேதாந்த சித்தாந்த சமரசம்.

வேதாந்த சித்தாந்த மென்னும் இத்தொடர் மொழி உம்மைத் தொகைத் தொடர் மொழியாம். தொகையை விரித்துக் கூறுமிடத்து வேதாந்தமுஞ் சித்தாந்தமு மெனவிரியும். சமரசம் என்பது ஒற்றுமையான சுவை எனப்பெறும். ஆகவே வேதாந்தமுஞ் சித்தாத்தமும் ஒற்றுமையான சுவையுடையன் என்பது சொற் பொருளாம். ஈண்டுச் சுவையென்பது,
"பலகலையாகம் வேதம் யாவையினுங் கருத்து பதிபசுபாசந் தெரித்தல்".
என்றருளிச் செய்த உமாபதி சிவாச்சாரியார் திருவாக்கின்படி கடவுள், உயிர், பாசம் என்னு முப் பொருள்களின் இருப்பு, இலக்கணம், சாதனம், பயன் என்னு மிவற்றை ஐயவிபரீதக் குற்ற மறக் கூறுதல்.
இனி வேதாந்த மாவது யாது? சித்தாந்தமாவதுயாது? அவற்றுள் முப்பொருள்களைப் பற்றி எவ்வாறு கூறப்படுகின்றன? என்பனவற்றை முறையே ஆராய் வாம்.
வேதாந்தம்: - உயிர்கள் உய்தற் பொருட்டு இறைவனாலருளிச் செய்யப்பட்டன வேதமும் ஆகமுமாம், அவற்றுள் வேதம் கர்மகாண்டம். ஞானகாண்டம், மென இருவகைப்படும். கர்மகாண்டம். ஆன்மாபகைவரை வெல்லுதற்கும் போக மனுபவித்தற்கும் உபாயங் கூறும். ஞான காண்டம்பொருளாராய்ச்சியால் ஆன்மா பாசத்தினின்றும் விடுதலை எய்திதன்னையுந்தலை உனையு மறிந்து தலை வனாய் நின்று இன்புறு தற்கு உபாயங் கூறும். இது வேதத்தின் உத்தரபாக (மேற் பாக) மான தால் வேதாந்தம் எனப்பட்டது இதனை.
                ''அனாதி சீவனைம் மலமற்றப் பாலா
       யனாதி யடக்கித்தனைக் கண்டரனாய்த்
       சனாதி மலங் கெடத்தத்துவா தீதம்
       வினவு நீர் பாலா தல் வேதாந்த நன்மையே".
என்னும் திருமூலர் திருமந்திரத்தாற் றெளிக.  
சித்தாந்தம்: -  ஆகமம் தந்திரகலை, மந்திரகலை உபதேசகலை என முத்திரப்படும். அவற்றுள் தந்திரகலை சிவாலயம் அமைத்தல், வழிபடுதல் முதலாகிய சரியை யினையும், மந்திரகலை சிவப்பிரதிட்டை செய்தல், சிவபூசை செய்தல் முதலாகிய கிரியை சிவனைக் கூடுதலாகிய யோகம் ஆகிய இரண்டனையும், உபதேச கலை ஆன்மா சிவனை யடைந்து இரண்டறக் கலத்தலாகிய ஞானத்தினையுங் கூறும். இவ்வுபதேசகலையே சித்தாந்தமாம். இதனை.
      "நித்தம் பரனோடுயிருற்று நீண் மனஞ்
      சத்த முதலைந்து தத்துவத் தானிங்கிச்
      சுத்த மசுத்தந்துடராவகை நினைக்
      தத்தன் பரன் பாலடைதல் சித்தாந்தமே''.
என்னும் திருமந்திரத்தாற் றெளிக.
வேதம் பகைவரை வெல்லவும் போகமனுபவிக்கவும் எண்ணுபவராகிய உலகருக்கும் முத்தியடைய எண்ணுபவாாகிய ஞானாதிகாரிகட்கும் உரித்தாதலிற்பொதுவும், ஆகமம் ஞானாதிகாரிகட்கே யுரித்தாகலிற் சிறப்புமாம். தந்திரகலை, பந்திரகலைகளும் உபதேசகலைக்குச் சாதனமா தலால் மூன்றுகலைகளும் ஞானாதிகாரிகட்கே யுரித்தென்றல் இழுக்காது. வேதம் பொதுவும் ஆகமம்கிறப்புமா மென்பதனை.
      "வேதமோடாகம மெய்யா மிறைவனூ
      லோதும் பொதுவுஞ் சிறப்புமென்றுன்னுக"
என்னும் திருமந்திரத்தாற் றெளிக. இதனை ''ஆரணனூல் பொது சைவ மருஞ் சிறப்பு நூலாம்" என்றருளிய சித்தியார் திருவாக் கானுந் தெளிக.
வேதாந்தம் பொருளா ராய்ச்சி செய்யுமுறைமையைக் கூறுவ தொன்றாயினும், ஒரு பொருளை பூர்வபக்கம் பண்ணுவதற்குப் பிறி தொரு பொருளைச் சித்தாந்தமென நாட்டிச் செல்லுமுறைமையில், பலசித்தாந்தங் காண்ப்படுமாதலின், அவற்றுள் யாது சித்தாந்த மென மலையாமைப் பொருட்டு மேல் பூர்வபக்கம் பண்ணப்படாத வேதாந்தப் பொருளைத் தனித்தெடுத்து, ஆகமத்தின் உபதேசகலை கூறுவதால் இக்கலை சித்தாந்த மெனப்படுவதாயிற்று. இதுபற்றியே “ சிவாகமம் சித்தாந்தம்'எனச் சிவஞான சித்தியாரிலும் " வேதாந்தத் தெளிவாஞ் சைவசித்தாந்தத் திறன்'' எனச் சிவப்பிரகாசத்திலும் " ஒரும் வேதாந்த மென்றுச்சியிற் பழுத்த, ஆராவின்ப வருங்கனி பிழிந்த, சாரங் கொண்ட சைவசித்தாந்தம் " எனக்குமர குருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டினும் அனுபவமுடைய தேசிகர்களருளிச் செய்வார்களாயினர். இத்திருவாக்குகளுக் கிவ்வாறு உண்மைப் பொருள் கொள்ள அறியாதார் வேதாந்தம் சாமான்ய மென்றும் சித்தாந்தம் உயர் வென்றும் தத்தமக்கு வேண்டிய வாறே பொருள் கொண்டிடற் படுவர். நிற்க. -
பொருளாராய்ச்சியில். முப்பொருள்களினிருப்பு: - வேதாந்தத்தில்தத்துவமசி மகாவாக்கியமே பதி, பசு, பாசமென்னு முப்பொருள் களினிருப்பை யுணர்த்துகின்றது. எவ்வாறெனில் தொம்பதம் பசுவையும் தத்பதம் பதியையும் அசிபதம் சிவனையுமுணர்த்தும். இறைவன் தடத்த இலக்கணமாய் பதியெனவும் சொரூப இலக்கணமாய் சிவம் எனவும் விளங்கும் உண்மையை யுணர்த்துதற்கு தற்பத அசிபதங்களும் பாசத்தோடு கூடிய பசவையுணர்த்து தற்குத் தொம்பதமும் எழுந்தன வாதலின் முப்பொருளுண்மை யுணர்த்துதல் காண்க. இதனை;
       ''உயிரைப் பரனை யுயர்சிவன் றன்னை
        யயர் வற்றறி தொந்தத்த சியதனாற்”
எனவும்,
வேதாந்த தொம்பதமேவும் பசுவென்ப
      நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
      போதாந்த தற்பதம் போயிரண்டயிக்கஞ்
      சாதாரணஞ் சிவசாயுச்சியமாமே''
எனவும் அருளிய திருமூலர் திருவாக்காற் றெளிக.
அன்றியு மேலெடுத்துக் காட்டிய ''அனாதி சீவனைம்மலமற்றப் பாலாயனாதியடக்கித்தனைக் கண்டரனாய்" என்ற திருமந்திரத்தானும் சீவன், மலம், கடவுள் என்னுமுப்பொருளுண்மைகாண்க.
சித்தாந்தத்தில் மேற் கூறிய “நித்தம் பரனோடுயிருந்து என்ற திருமந்திரத்தால் முப்பொருளுண்மையறிக. அனாதி என்றதனாலும் நித்தம் என்றதனாலும் முப்பொருள்களும் அனாதி நித்த மென்பது வேதாந்த சித்தாந்தங்களின் கருத்தாம்.
இலக்கணம்: - அவ்விரு திருவாக்குகளும் அனாதியே மலத்தைப் பற்றாது நிற்றல் இறைவனுக் கிலக்கணமாம் எனவும் அனாதியே மலத்தைப்பற்றுதல் ஆன்மாவிற் கிலக்கணமா மெனவும் அனாதியே ஆன்மாவைக் கட்டுதல் மலத்தினிலக்கண மாமெனவும் முப்பொருள்களுக் கிலக்கணமுங் கூறியவாறாம்.
சாதனம்: -  வேதாந்தத்தில் அனாதியே மலத்தில் கட்டுப் பட்டிருக்குமான்மா அவற்றினின்றும் நீங்குவதற்கு சிவம் நான் என உபாசிக்கச்சொல்லும், சித்தாந்தத்தில் அச்சிவோகம் பாவனையே கூறி அங்கனம் பாவித்தற்குரிய இயல்பும் பாவிக்கு மாறும் கூறும். இதனை,
''மன்னிய சோகமா மறையாளர்தஞ்
      சென்னிய தானேசிவோகமா மீதென்ன
      வன்னது சித்தாந்த மாமறையாய் பொரு
டுன்னிய வாகமதூலெனத் தோன்று மே''

என்னும் திருமந்திரத்தாலறிக. "பண்டைமறைகளுமது நானானே ளென்று பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே'' என்னும் சிவஞான சித்தித்திருவாக்கும் இக்கருத்தினை வலியுறுத்தும்.
பயன்: - வேதாந்தத்தில் நீர் பாலுடன் கூடிடாலாதல் போல ஆன்மா இறைவனுடன் கூடி இறைவனாய் வியமென்றும் சித்தாந்தத்தில் ஆன்மா இறைவனைக் கூடு மென்றும் கூறும். இவற்றை " வினாவு நீர் டாலாதல் வேதாந்த வுண்மையே " எனவும் “அத்தன் பரன் பாலடைதல் சித்தாந்தம்'' எனவும்" தானான வேதாந்தம் தானெனுஞ் சித்தாந்தம்'' எனவுமருளிய திருமந்திரங்களாலறிக.
இக்ஙனங் கூறும் பயனாகிய முத்திகிலை சொல்லால் வேற்றுமைடோலத்தோன் றினும் பொருளால் வேற்றுமையின்றாம். எவ்வாறெனில் பாலுடன்சேர்ந்த நீர் வேறு காணப்படு மாறின்மையின் நீர் பாலாதல் போல முத்தியில் ஆன்மாவாக்ய தான் இறைவனாதல் என வேதாந்தமும் பாலைச்சேரும் வரைநீர் காணப்பட்டு சேர்ந்தபின் நீர் கெட்டுப் போதலின்மையின் டாலில் நீர் அடங்கி யிருத்தல் போல முத்தியில் ஆன்மாவாகிய தான் உண்டென சித்தாந்தமும் கூறுவன வாதலி னென்க.
தானான வேதாந்த மென்றதற்கு தான் (ஆன்மா) அதவான வேதாந்தமென்றும் தானெனுஞ் சித்தாந்த மென்பதற்கு தான் (ஆன்மா) உண்டென்னும் சித்தாந்த மென்றும் பொருள்கோடேலே ஆசிரியர் கருததா மென்பதனை முறையே " தனைக்கண்டரனாய் வினாவு நீர் பாலாதல் வேதாந்தவுண்மையே'' எனவும் " அத்தன் பரன் பாலடைதல் சித்தாந்தம்'எனவும் அருளிய அவர் திருவாக்காலினிது தெளிக.
முத்தியில் ஒன்று என்று வேதாந்தமும் மூன்றென்று சித்தாந்தமும் முரணுறக்கூறுகின்றவே யெனின் கடவுள், ஆன்மா வென்னு மிருபொருள்களிருப்பினும் பிரிக்கமுடியாமை பற்றி ஒன்றென வேதாந்தமும் அவ்விருபொருள்களின் கலப்பிற்கு மல நீக்கமே எதுவா தலின் மூன்றெனக் சித்தாந்தமும் கூறுவன வாதலின் முரணினமையறிக.
     முத்ததனில் மூன்று முதல் மொழியக்கேள்
      சுத்தவது போகத்தைத் துய்தலணு - மெத்தவே
      இன்பங் கொடுத்த லிறையித்தை விளைத்தன் மல
      மன்பனே கண்டு கொளப்பா''

என்னும் உண்மை விளக்க திருப்பாசுரத்தால் சிவானந்தத்தை விளைத்தல் மல மென்று காணப்படவும் மலநீக்க மேது வாமென்ற தெவ்வாறு பொருந்து மெனின், சிவானந்த விளைவெனினும் துன்பமின்மை யெனினும் ஒக்கும். துன்பமின்மை மலமின்மையாற் காணப்படும், சீதமின்மை டனியின்மையாற் காணப்படுவது போல. ஆபவே சிவானந்த விளைவிற்கு மல நீக்க மேது வென்றது பொருந்து மென்க, அங்ஙனமாயினும் இல்பொருளை உள் பொருள்போலக் கூறியது பொருந்து மோயெனின் நூல்வழக்கினும் உலக வழக்கினும் அவ்வாறு வழங்குதலுண்மையாற் பொருந்துமென்க. இதனை,

      கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
      யெடுப்பதூஉ மெல்லமழை''
என்னும் திருக்குறானும் இத்தனை கேட்டிற்கும் மழையே காரணம் என்னும் உலகமொழியானு மறிக.
சித்தாந்திகளிற் சிலர் முத்தியில் மூன்று எண்டென்பதற்கு இவ்வாறு பொருள் கொள்ள அறியாது நித்திரைச் சுகத்துக்குப் படுக்கை யடங்கியிருந்து யே துவாயினாற்டோல முத்திச்சுகத்துக்கு ஆண்டு பல மடங்கியிருந்து ஏது வாகு மென்று கூறி மயங்குவர்.
முத்திநிலை இவ்வாறாயினும் ஒன்றென்று வேதாந்திகளும் இரண்டென்று சித்தாந்திகளும் அனுபவநிலையிற் சிந்திப்பரேல் முத்த ரல்லர். இதுபற்றியே,
''என்னாணை யென்னாணை யென்னாணை யேகமிரண்
      டென்னாமற் சும்மாவிரு வென்று - - சொன்னான்
      திருஞான சம்பந்தன் சீகாழி நாடன்
      அருளாளன் சானலிரோ தன்''
என ஒழிவிலொடுக்கத்தில் கண்ணுடைய வள்ளல் அருளிச் செய்வாராயினர். அங்ஙனமாயின் இவ்வாறாய்ச்சி பயனற்றதோவெனின் அனுபவம் பெறவிரும்பு வோர்க்கு ஐயவிபரீதக் குற்ற மறுத்தற் பொருட்டு வேண்டப் படுதலிற் பயனுடையதே யாமென்க.
வேதாந்திகளிற் சிலர் என்றும் பிரமம் ஒன்றே யுள்ளது. சீவன் மலம் என்பன இல்லை யென்றும் மூன்று நித்தப் பொருள்கள் இருக்கு மேல் அனே காந்தவாத மென்னுங் கு'றமாமென்றும் கூறுவர்.'' தண்டுலத்தோலும் செம்பினிற்களிம்பும் சகசடடாய் தொழில்விசேடத்தால், விண்டுபோமதுபோல் புருடனுமலத்தை மேவியே போக்கு சலியல்பாம் " என்னும் ஞான வாசிட்டத்தோடும் " அகதியாம் சீவரெல்லாம் பொதுவான சுழுத்திபோல பொருந்து மவ்வியத்தந்தனில்'' என்னும் கைவல்யத்தோடும் முரணுதலையும் பூரண வியாபகம், ஏகதேசவியா பகம், சமவியாபகம் என்னும் வேற்றுமையும் சித்துச் சத்து, சித்த சித்துச் சத்து, அசித்துச் சத்து என்னும்  வேற்றுமையு முடைமையால் அனேகாந்த வாசமின்றென்பதனையும் அவர் அறிந்திலர்.
வேதாந்தத்தில் ஆன்மாவே எல்லா மென்றும் அதவே பிரமம் என்றும் சிலவிடங்களிற் கூறுவதால் ஆன்மாவைத் தவிர பிராம் வேறு இல்லை யென வேதாந்திகளும் அந்நூல் பசு நூல் எனச்சித்தாந்திகளுக்கர்.
''மெனுமான்மா பூரணம் ஏகம் அநேகவிதஞ் சீவர்'' எனக்கைவல்யத்தில் கூறியிருப்பதை வேதாந்திகளும் " ஒன்றென மறைகளெலா முரைத்திட உயிர்கள் ஒன்றி, நின்றன னென்று பன்மை நிகழ்த்துவ தென்னையெனின் அன்றவைபதிதானொன் றன்றறையும்'' எனச் சித்தியாறிற் கூறியிருத்தலைச் சித்தாந்திகளும் கவனித்திருப்பரேல் அவ்வாறு கூறமுற்படமாட்டார். ஆன்மசப்தத்திற்கு வேதாந்தத்தில் பரமான்மா வென்றும் சித்தாந்தத்தில் சீவான்மா வென்றும் பொருள் கொள்ளல் வேண்டும்.
வேதாந்தத்தில் பிரமம், ஈசுவரன், கூடஸ்தன், சீவன் என்று நான்கு சித்துப் பொருள்கள் உண்டெனக் கூறுதல் டோல சித்தாந்தத்திலும் சொரூபசிவம், தடத்தசிவம், ஆன்மா, சீவன் என நான்கு பொருள்கள் உண்டென்று கூறும். ஆன்மாபாசத்தோடு கூடிய பொழுது சீவன் என்றும், பாசத்தை விட்டு நீங்கி பதியை யடைந்தின் புறுங்கால் ஆன்மா அல்லது கூடஸ்தசிவம், என்றும், பஞ்சகிருத்தியத்தை நடத்து மூர்த்திமானாய் நிற்குங்கால் தடத்த சிவம் அல்லது ஈசுவர னென்றும், அதீதமாய் நிற்குங்கால் சொரூபசிவம் அல்லது பிரமம் என்று பேர் பெறும்.
இதுகாறுங் கூறியவாற்றால் முப்பொருள்களினிருப்பு, இலக்கணம் சாதனம், பயன் என்னும் நான்கு திறத்தானும் வேதாந்தமும் சித்தாந்தமும் ஒற்றுமையுடையன வென்பது நாட்டப்பட்டது.
அங்கனமாகவும் சித்தாந்தத்தைத் துவிதவா தெமென்று வேதாந்திகளும் வேதாந்தத்தை மாயாவாத மென்றும் சோபான மானசாதன மென்றும் சித்தாந்திகளுங் கூறுவதற்குக் காரணம் என்னையோ வெனின் படிக்குமுறைமையில் படியாமையா லென்க.
படிக்கு முறையாவது சரியை, கிரியை, யோக நூல்கற்று அவ்வாறொழுகி பருவமெய்திய பின்னர் படித்தல். இதுபற்றியே'முன்னர் தீக்கையுற்றுசிவாகமங்களை யோதி அதன் பின்னர் சரியாபாத முதலியவற்றை யாராயு நூல்களை முறையே கேட்டு அவ்வாறொழுகி மனந்தூயராய் நித்தியா நித்தியவுணர்வு தோன்றி பிறவிக்கஞ்சி வீடுபேற்றினவா மிக்குடையராய் வந்த அதிகாரிகட்கு இந் நூலுணர்த்துக'' எனசிவஞான போதத்தினும்.
      "சரியை கிரியா போகப்பதத்தின்முற்றி
      சாதனங்கள் நிறைந்தவர்க்கே சாற்றல் வேண்டு, மென.
ஞானவாசிட்டத்தினும் ஆசிரியர்களருளிச் செய்வார்களாயினர்.
இக்காலத்திலோ சரியை, கிரியை, யோக நூல்களைக் கற்றலும் அனுட்டித்தலுமின்றி வேதாந்தம் அல்லது சித்தாந்தம் படிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். சிறிது படித்த மாத்திரத்தே படிப்பு நிரம்பி விட்டதாக வெண்ணித்தானே தனக்கு வித்வானென்றும் ஆசிரிய னென்றும் பட்டன்சூட்டிக் கொள்ளுகின்றார்கள். இவர்கட் கெவ்வாறுண்மைப் பொருள் தெரியும்?
இது பற்றியே "நாதனுரையவை நாடிலிரண்டந்தம். பேதம தென்பர் பெரியோர்க்க பேதமே'' என்றருளிச்செய்தார் திருமூலநாயனாரும். பெரியராவார் யோகவழி ஒழுகுவோர். "செயற்கரிய செய்வர் பெரியா'' என்னுந் திருக்குறளுக்கு உரையாசிரியர் பரிமேலழகர் செய்தற் கரியவாவது யோகவழி யொழுகுத லெனக் கூறியது மீண்டுக்கவனிக்கத்தக்கது.
      "வேதசிரப் பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றால் சைவத்திறத்தடைவர்.'' என்றதனால் வேதாந்தஞ் சித்தாந்தத்திற்குச் சாதன மாகாதோ வெனின்? ஆசாது. என்னை? வேதாந்தமேற்கூறியவாறு பலபடவிரிந்து கிடத்தலின் அவை யெல்லாம் ஆய்ந்து என்பதற்கு மிகத்தெளிந்து என்றும் அங்ஙனமாயுங் காலொவ் வொன்றுஞ் சித்தாந்தமெனவே காணப்படுமாதலின் மேலாராய்தலருமை நோக்கிச் சென்றாலென்றும் சொல்லில் சிவபரத்துவஞ் சொல்வதாகிய வேதாந்தத்தை யறிந்து அதன் பொருளை விரித்துக்கூறுஞ் சித்தாந்தத்திற் றலைப்படுவர் என்பதுதோன்ற சைவத்திறத்தடைவரென்றும் அங்ஙனமடையினும் சரியை, கிரியை, யோகவழி ஒழுகியே ஞானத்தைப் பெற்று முத்தியடைவ ரென்பது தோன்ற " இதிற் சரியை கிரியாயோகஞ் செலுத்திய பின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர் " என்றும் அருளிச் செய்தமையா லென்க.
இவ்வாறுபொருள் கொள்ளாமல் சரியைக்குந் தாழ்ந்தது வேதாந்தமென்று கூறுபவர் " பண்டை மறைகளுமது நானானேனென்று பாவிக்கச்சொவ்வதிப் பாவகத்தைக் காணே'' என்ற அச்சிவஞானசித்தித் திருவாக்குக் கென்கடவர். முன்னொடுபின் முரணின்றி நூற்பொருள் கொள்ளுதலே பெரியோர் செயலாம்.
"சைவசமயமே சமயம்" என்று ஸ்ரீ தாயுமான சுவாமிகளருளிச் செய்திருக்கின்றமையால் ஏனைச் சமயங்க ளெல்லாந் தாழ்ந்த தென்றும் அவற்றுளொன்று வேதாந்த மென்றும் கூற அமையாதோ வெனின்? அமையாது. என்னை? வேதாந்தமென்பதும் சித்தாந்தமென்பதும் சைவசமயத்தின் பரியாயப் பேர்களே. வேதாந்தத்தில் கூறுந்தெய்வம் பிரமம். சித்தாந்தத்தில் கூறுந்தெய்வம் சிவம். பிரமம் சிவம் என்பன ஒரு பொருட்கிளவி ஆதலின் வேதாந்தம் சித்தாந்த மிரண்டும் ஒரு பொருளையே தெய்வமெனக் கூறுகின்றதால் இரண்டு மொற்றுமையுடையன வென்பது எளிது புலனாமாதலினென்க. இதனை "வேதாந்தஞ் சித்தாந்தம் வேறென்னார்கண்களிக்கும், நாதாந்த மோன நலமே பராபரமே" எனவும் "வேதாந்த சித்தாந்த சமரச சுபாவமிதுவே" எனவுமருளிய அவ்வாசிரியர் திருவாக் கானே தெளிக.
வேதாந்தத்தை மாயாவாதமென்றும் சித்தாந்திகளிற் சிலர் கூறுசின்றனர். அவருக்கு - வேதாந்தமுந் தெரியாது. அம்மட்டோ ! - சித்தாந்தமுந் தெரி பாதென்றே உறுதியாய்ச் சொல்லலாம். என்னை? வேதாந்தத்தை மா யாவாதமென்று கூறுவதற்கேது வென்னையென அவரை வினவின் யுத்தஞ் செய்தற்பொருட்டு சொன்ன பகவத் கீதையை நூலெனக் கொள்ளலாமா வென்று சிவஞானசித்தியார் பரபக்கத்தில் " தேர்த் தனிலிருந்துமாயைசெ ய்துமால் கொல்லச் செப்பும், வார்த்தை நூலாக்கிக் கொண்டாய் புரங்கொ ல் நூல் மதித்திடாயே " எனக்கூறியிருத்தலா - லென்கவென்று விடைதருகி ன்றனர். அப்பர பக்கத்துள் மாயாவாதிமதமும் அதன்மறு தலையுமிருக்கின்றன. அவற்றுளெங்கேனும் பகவத்கீதையைப்பற்றியாவது, ஞானவாசிட்டம் கைவல்யம் முதலிய நூலைப் பற்றியாவது நூற்பெயர்கூறிக் கண்டிக்கப்பட்டிருக்கின்றதா? இல்லையே. பகவத்கீதையைக் கண்டித்தது பாஞ்சராத்திரியின்மறுதலையினன்றோ. பகவத்கீதையை பாஞ்சராத்திரிகள் கண்ணனுக்கு பரத்துவங் கூறுகின்றதாகச் கொள்ளுகின்றார்கள். வேதாந்திகள் பரத்துவமுடைய பொருளின் சாமான்யவடிவம் கண்ணனெனக் கூறுகின்றதாகக் கொள்ளுகின்றார்கள்.. இதனை,
"சங்காளி பயில் கரத்தைமுதலான வங்கஞ்சாமானியந்தான்
மங்காமலடிமுடிவற் றொன்றாயவடிவு பரவடிவமாகும்
இங்கான பிரமமென பரமமென விசைப்பதெலாமிந் தரூபம்
சிங்காமலிது தனை நீதெளிவளவும் நாலுபுயத்தேவையேத்து"

எனக்கூறும் ஞானவாசிட்டச் செய்யுளால் தெளிக. சித்தாந்திகளும் வேதாந்திகள் கொள்வது போலவே கொள்கின்றார்கள். இதனை " இவ்வொற்றுமைபற்றியன்றே அருச்சுனனுக்குக் கீதை நூல் செவியறிவுறுத்திய கண்ணன் யானே யுலகெல்லாமாயினே னென்றதுவும் முதல்வனது விச்வரூபத்தைத்தான் காட்டிய துவும் ஏனையவற்றைக்கைவிட்டு என்னையே வழிபடுக. என்றதுவும் அதனை யுறுதியாகக்கொண்ட அருச்சுனன் அவன் கூறியகருத்து நோக்கி சாங்காறும் சிவபூசை செய்ததுவும் கண்ணன் மேலிட்டபோது கள் முதல்வன்றிருமுடிமேல் கண்டதுவும் என்க'' எனச் சிவஞானபோதச்சிற்றுரையில் மாதவச்சிவஞான யோகிகளருளிய வாக்கியத்தாற்றெளிக. அன்றியும்,
"ஆகின்ற தொண்ணூறோடாறும் பொதுவென்ப.
ராகின்ற வாறாறருஞ் சைவர்தத்துவ
மாகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்
காகின்ற நாலாறையைந்து மாயாவாதிக்கே''

என்னுந் திருமந்திரத்தால் மாயாவாதம் வேறு, வேதாந்தம் வேறு என்பது நன்கு விளங்குகின்றதல்லவா - ஆயினும் வேதாந்தத்துக் குஞ்சித்தாந்தத்திற்குந் தத்துவங்களில் வேற்றுமை காணப்படுகின்றனவே யெனின் அவ்வேற்றுமை ஒன்றிலொன்றடங்குமுறைமையில் சமரசமேயாம். அதனை ஈண்டுவிரிப்பிற்பெருகு மென்றஞ்சி விடுகின்றாம். வேதாந் தமுஞ் சித்தாந்தமு மவ்வாறுசமாசமாகாதிருப்பின் "இரண்டந்தம் பெரியோர்க்கபேதமே'' என்ற அவர் திருவாக்கோடு முரணுமாறு காண்க.
ஆதலின் வேதாந்தம்சித்தாந்த மென்னுமிவ்விரண்டனையும் நன்காராய்ந்து சமரசப்பொருள்கண்டு இன்புறுதலே முறைமை யென என் சிற்றறிவுக் கெட்டியவாறாம்.
முடிவுரை.
வேதாந்த சித்தாந்த சமரசலபன்னுந் தொடர் மொழிக்கு வேதாந்த முஞ்சித்தாந்தமுமொற்றுமையான சுவையுடையன வென்பது பொருளா மென்பதூவும், பதிபசுபாச மென்னுமுப்பொருள்களினிருப்பு, இலக்கணம் சாதனம், பயன் நான்குமே ஈண்டுச்சுவை எனப்படுமென்பதூஉம், உயிர்களு ய்தற்பொருட்டு இறைவனாலருளிச் செய்யப்பட்டன வேதமும் ஆகமமுமா மென்பதூஉம், வேதம் கர்மகாண்டம் ஞானகாண்டமென இருதிறப்படுமெ ன்பதூஉம், ஆகமம் தந்திரகலை, மந்திரகலை, உபதேசகலை என முத்திறப்படுமென்பதூஉம், வேதத்தின் ஞான காண்டம் வேதாந்தமெனவும் ஆமகத்தின் உபதேசகலை சித்தாந்தமெனவும் பெயர்பெறுமென்பதூஉம், வேதம் உலகருக்கு மஞானாதிகாரிக்கு முரித்தாகலின் பொது வென்பதூஉம், ஆகமம் ஞானாதிகாரிக்கே யுரித்தாகலின் சிறப் பென்பதூஉம், ஆகமத்திலுள்ள தந்திரகலை மந்திரகலைகளும் உபதேசகலைக்கே சாதனமாதலின் ஞானதிகாரிக்கே உரித்தென்ற லிழுக்கா தென்பதூஉம், வேதாந்தம் பொருளாராய்ச்சி செய்யுமுறைமையில் ஒன்றைப் பூர்வபக்கம் பண்ணுமிடத்துப் பிறிதொன்றனைச் சித்தாந்தமென நாட்டிச் செல்லுதலின் பல சித்தாந்தங்காணப்படுமாதலின் அவற்றுள் முடிவான சித்தாந்தத்தைத் தனித்தெடுத்து ஆசமத்தின் உபதேசகலையிற்கூறு தலின் சித்தாந்த மெனப்பட்டதென்பதூஉம், வேதாந்தத்தில் தத்துவமசி மகாவாக்கியமும் பிறவும் முப்பொருள்களினிருப்பு, இலக்கணம், சாதனம, பயனிந்தான்கினையுமுணர்த்து மென்பதூஉம், சித்தாந்ததிலுமவ்வாறே யுணர்த்துமென்பதூஉம், பயனாகிய முத்தியில் வேதாந்தம் ஒன்றெனவும் சித்தாந்தம் மூன்றெனவுங் கூறு தலினால் சொல்வேற்றுமையேயன்றி பொருள்வேற்றுமையின் றென்பதூஉம், வேதாந்தத்தில் ஆன்மா சப்தத்திற்குப் பரமான்மா வென்றும் சித்தாந்தத்திலான் மசப்தத்திற்குச் சீவான்மாவென்றும் பொருளாமென்பதூஉம், வேதாந்தத்தை மாயாவாதமென்றலும் சித்தாந்தத்தைத் து விதவாதமென்றலும் பொருந்தாவென்பதும், சரியை, கிரியை, யோகமநுட்டித்தே வேதாந்த சித்தாந்தங்களிற் பிரவேசிக்கவேண்டுமென்பதும், வேதசிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றால் சைவத்திறத்தடைவரென்றதனால் வேதாந்தம் சித்தாந்தத்திற்குச்சாதனமாகாதென்பதும், சைவமயமே சமயமென்று கூறியதால் வேதாந்தம் சித்தாந்தத்தினுத் தாழ்ந்ததாகா தென்பதும், பகவத்கீதையை வேதாந்திகளும் சித்தாந்திகளும் ஒரேகருத்துடைய தாய்க்கொள்ளுகின்றார்களென்பதும், பாஞ்சராத்திரிகள் அவ்வாறு கொள்ளவில்லை யென்பதும், ஆதலின்வேதாந்தமும் சித்தாந்தமும் சமரச மெனக்கண்டு உண்மையறிந்து இன்புறவேண்டு மென்பததும் பிறவுமாம்.
திருச்சிற்றம்பலம்.
                        பொ. முத்தையபிள்ளை
              திருவாவடுதுறையா தீனச் சைவப்பிரசாரகர்
                                  தூத்துக்குடி.

[நம்பிள்ளையவர்கள் எழுதிய அரிய பெரிய விஷயத்தில், சித்தாந்திகள் பலரும் ஆட்சேபிக்கக்கூடிய சில அம்ஸங்கள் காணப்படுகிறது. நம்திருமந்திரக்காரரும், மற்றுமுள்ள சித்தாந்தசீலர்களும் கைக்கொண்டவேதாந்த்தையும் சாதாரணமாய் வேதாந்த மென்று வழங்கி வரும் சங்கர மதத்தையும் ஒன்றென மயங்கிக் கூறியுள்ள தாகவும் காணப்படுகிறது. திருமந்திரக்காரர் கூறியுள்ள ஆனந்தங்களும் ஒருவிதத்தில் ஒற்றுமையுடைத்தேனும், அவ்வவற்றின் தத்துவங்களும் நிற்கும் நிலைகளும் கொஞ்சம் கவனித்தால் வெவ்வேறென விளங்கும். சைவர்களுக்கு 36 தத்துவமாகவும், வேதாந்திகளுக்கு 28 தத்துவமாகவும் மாயாவாதிகளுக்கு 25 ஆகவும் பாஞ்சராத்திரிகளுக்கு 24 ஆகவும் திருமந்திரத்தில் கண்டுள்ளது நம் பிள்ளையவர்களே காட்டியுள்ளார்கள். "தானான வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம்," என்னும் வரியில் ஆன்மா வுண்டு என்று சொல்வதே சித்தாந்தம் என்று சித்தாந்தத்துக்கு மகுடம் சூட்டியது மிகவும் கொண்டாடப் பாலதன்றே! சமரசம் என்ற சொற்றொடரையம் பலரும் பலவாறாக விளக்குகின்றார்கள் இவ் விஷயங்களையெல்லாம் அடுத்த சஞ்சிகையில், 'சமரசம்' என்னும் தலைப்பின் கீழ் விசாரிப்பாம். ப – ர்]
சித்தாந்தம் – 1912 ௵ - மே ௴

No comments:

Post a Comment