Sunday, May 10, 2020



வழிபாடு
சித்தாந்தச் செல்வர்: - [. தா. ப. திருஞான சம்பந்தன்]

இவ்வீர்ங்கண் மாஞாலத்து வாழும் மக்கட்கு, வழிபாடு இன்றியமையாத தொன்றா என்பதே தெளிந்தறிய வேண்டிய தொன்றாகும். கட்டழகு நிறைந்தவோர் நங்கைக்குக் கண்ணுக்கினியவோர் கணவன் வேண்டுமா? இசை நிறைந்த பாடல்களுக்குத் தாளக்கட்டு வேண்டுமா? செழிக்க நீர் பாயும் நிலத்திற்கு மண்வளம் வேண்டுமா? உலகில் அனை வரும் உயிர்வாழ உணவு அவசியமோ? ஆம்! பீழைகள் நிறைந்த பெண்ணென்று பிறந்து விட்டால் பொறுமையும் வேண்டுமா? வேண்டும்! அங்கனமே உலகில் மக்களென்று பிறந்து விட்டால் வழிபாடும் மெத்த அவசியமாகும்.

வழிபாடு என்பது ஆறுபடுதலைக் குறிக்கும். இவ்வாறு படுதலையே ஆற்றுப்படையென வழங்குவர் சங்ககாலப் பெருமக்கள். இறைவனாம் பெருமானை நன்மறைகளோதி, வழிபடு தலையே வழிபாடென்பர். வழிபடு என்னின் வழி நிற்றல் என்பதாம். வழிபாடு என்னின் நெறிநின்று தொழிலியற்றல் என்பதாம். முதற்றொகை வைத்து வணிகம் செய்யுமொருவர் அவ்வணிகத் துறைகளில் சீருறநின்று, அவ்வவற்கேற்ற பாங்கில் பதிலுரைத்து, முடிவில் கனத்த இலாபம் பெறுவதைக் காண்கின்றோம். அங்ஙனே, இறைவன் பால் இடையறா அன்பு கொண்டு, ஆனந்தப்பெருவெள்ளத்தழுந்தி, இன்னமுதத்தூறலன்ன திருமுறைகளையோதி அவன் திருவடிகளிற் றோய்ந்து, முடிவில் பெறுவது அருள் என்னும் பெருமைக்குகந்த இலாபமாகும். அதனால் வழிபாடு இயற்றுவோர் பெறும்பலன் அளவிடற்கரிய தொன்றாம்.

பண்டு தொட்டே, இத்தண் தமிழகத்தில் வாழ்ந்த பெருமக்கள் கடவுட் பற்றும், வழிபாடும் கொண்டிலங்கினர் என்பதற்குத் தொல்காப்பியம் சான்று பகர்கின்றது. தமிழர்கள் மூன்று வழிவகையான் கடவுள் வழிபாடுசெய்து வந்தனர் என்பதைத் தெளிவுறவுணர்கின்றோம்.

1. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு கொடியமைக் கப் பெற்றிருந்தது. அக்கொடியை வாழ்த்திப் பாடுதல் ஒரு மாபு. இதைக் கொடி நிலை யென்பர்.

2. கேட்டையழித்தல்; தன்னேரில்லாத மமதை கொண்ட சூரபன்மனை முருகப்பெருமான் அழித்தது போல கொண்டு வாழ்த்திப் பாடுதல் இன்னொருமாபு. இதைக் கந்தழி என்பர்.

3. வள்ளி நாச்சியாரிடத்தில் முருகப்பெருமான் திரு விளையாடல்கள் நிகழ்த்திய தொத்து, வருநிலைகளைக் கொண்டு வாழ்த்திப் பாடுதல், மற்றொரு மாபு. இதை வள்ளி யென்பர்.

கொடி நிலை கந்தழி வள்ளி யென்றா
வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமேடம் - தொல் பொருள் புறத்திணை

வடுநீங்கு சிறப்பின் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற முதலன மூன்றும் குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய கொடி நிலை முதலாகச் சொல்லப்பட்ட முற்பட்ட மூன்றும், கடவுள் வாழித்தொடு கண்ணிய வரும் பாட்டுடைய தலை மகனைச் சார்ந்து வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும். (இளம்பூரணருரை)

தொல்காப்பியத்தைக் காணுங் காலத்தும், முன்னைய நாட்களில் தமிழர்கள் குறிஞ்சி நிலத் தெய்வமான திரு முருகப் பெருமானுக்குத் தனித்தவோர் சீர்த்தியானவிடத்தை யளித்துள்ளனர் என்பதை மேற்கண்டவற்றால் நன்குணர் கின்றோம். எக்காலத்தில் கடவுள் வழிபாடு மக்களிடம் குடிகொண்டு விளங்கலாயிற்றென்பதை அறுதியிட முடியாமலேயேயுள்ளது. ஆதிமனிதன் பகுத்தறிவு கொண்ட நாட் டொட்டே, கடவுள் வழிபாடு வேர்பெற்றிருக்க வேண்டும் என்று சிந்திக்கவிடமிருக்கின்றது. தமிழகத்தில், சங்ககாலத்தே வாழ்ந்த மக்கள் இறைப்பற்று கொண்டு வழி பாடியற்றிவந்ததனாற்றான் தொல்காப்பியரும் கடவுள் நிலை பற்றிப் பேசுகின்றார். வழக்கிலில்லாத வொன்றை ஆசிரியர் நூலின் கண்ணே தன்னுடைய சுயநினைவிற் புகுத்தியுள்ளார் என்று கொள்ளற்றகாது. காலா காலத்தில் நடை பெற்றவற்றைத்தான் புலவர் பெருமக்களானோர், காவியங்களாகவும், காப்பியங்களாகவும், இலக்கியங்களாகவும் வகுத்தளித்துச் சென்றுள்ளனர். அங்கனே, தொல்காப்பியரும், அவர் காலத்தில் நிகழ்ந்த இறைவழிபாட்டைத் தானியற்றப் புகுந்த இலக்கண நூலிற் புகுத்திச் சென்றார். அக்குறிப்பே இன்று நம்மைத் தெளிய வைக்கின்றது.

சங்க நூல்களில் மிகப் பழமை வாய்ந்ததொரு நூலே ஓங்கு பரிபாடலாகும். பரிபாடலில் பெரும்பாலும் புலவர்கள் தெய்வங்களை வழிபட்டே பாடியுள்ளார்கள். கடுவனிள வெயினனார் என்ற வொரு புலவர் பெருமகன் நீடாழி யுலகத்தை நித்தலும் காத்தற்றொழில் புரியும் திருமாலை வழிபாடியற்றுகின்றார். இதனால்கடவுள் வழிபாடு முற்சங்கம் தொட்டதே யாகுமென்பதையுணர்கின்றோம்.

அழல்புரை குழையையும், நிழலைத் தரும் சினையையு முடைய ஆலும், கடம்பும், யாற்றிடைக் குறையும், குன் றும், பிறவும் ஆகிய அவ்விடங்களைப் பொருந்திய பலதெய்வங்களாக வகுத்துச் சொல்லப்படும் பெயரையுடையோய்! நின் அன்பர் தொழுதகையினது தாழ்ச்சிக்கண் அகப்பட்டோயும் நீ நினைத்தன முடித்தலான், அவரவர் ஏவல செய் வோனும் நீ அறம், பொருள், இன்பம், வீடு, என்று சொல்லப்பட்டவைகளை நிகழ்த்துதற்கும் காரணப்பொரு ளாயிருப்பவனும் நீயே!

"அழல்புரை குழைகொழு நிழறரும் பலசினை,
ஆலமும் கடம்பு நல்லாற்று நடுவும்,
கால்வழக் கறு நிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்!
எவ்வயி னோயு நீயே நின்னார்வலர்
தொழுதகை யமைதியி னமர்ந்தோயு நீயே!  
அவரவ ரேவலாளனு நீயே!
அவரவர் செய்பொருட் காரணமு நீயே!''        - பரிபாடல் (திருமால்) 4.

குன்றன் பூதனார் என்கின்ற பழைய சங்க காலப் புலவர் பரிபாடல் 9ல் திருமுருகப் பெருமானை வாழ்த்துகின்றார். அங்கனம் வாழ்த்தும் புலவர் முருகனின் சீர்த்தியைப் போற்றி, தொல்காப்பியத்தின் வள்ளிநிலை யமைத்துப் பாடியிருக்கின்றார். கற்புப் பொருந்திய நெறியையுடைய தேவியாது அன்பு பொருந்திய அவ்வுடலுரிமையை நயத் தற்கேற்ற பண்பினையுடைய குமா! யாம் நின்னை வணங்கி வாழ்த்தி வேண்டிக் கொள்ளா நின்றேம்; அன்பாற் சிறந்த எம்மடிக்கண் உறைவு நாள்தோறும் பொலிந்து பயன் தருதலோடு சிறக்கவென்று.

கற்பிணை நெறியூ டற்பிணைக் கிமமை.
நயத்தகு மரபின் வியத்தகு குமர,
வாழ்த்தினேம் பரவுதுந் தாழ்த்துத்தலை நினையா,
நயத்தலிற் சிறந்தவெம் மடியுறை
பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே!      - பரிபாடல் 9 (முருகன்)

ஆர்கலியின் வளைவினிலே வாழும் மக்கட்குள்ள ஆசைகள் மிகப்பல. சிலர் பெண் வேண்டுமென்பர்; பொருள் வேண்டுமென்பர்; பொன் வேண்டுமென்பர். அதிலும் ஓர் நற்றமிழ்ப் புலவனாயின் அவன் புரவலனை நாடி வேண்டுவது அவன் வறுமை நீங்க வொரு பரிசிலாகும். ஈண்டு, ஒருசங்க காலப் புலவரான நல்லெழுதியார் என்ற பங்கமிலாப் புலவரைக் காண்போம். இவர் திருமாலைக்கண் குளிரக் காண்கின்றார். அவனை வாழ்த்தி வேண்டுகின்றார். எதை வேண்டுகின்றாா? திருமாலின் திருவடிகளைக் கையாற்றொழுதலையே வேண்டிநிற்கின்றார் என்னின் தமிழ்ப்புலவரின் பெருநோக் குகான் என்னே!

"அன்னையென நினை இ நின்னடி தொழுதனெம்,
பன்மா ணடுக்க விறைஞ்சினெம் வாழ்த்தினெம்,
முன்னு முன்னும்யாஞ் செய்தவப் பயத்தால்,
இன்னு மின்னுமெங் காம மிதுவே.!          - பரிபாடல் - திருமால் - 13.

பண்டும், பண்டும், யாம் செய்த, தவப்பயத்தால் அத்தன்மையை யெனநினைத்து நின்னடியைக் கையாற்றொழுது பல காலும் அடுத்து, இறைஞ்சி வாழ்த்தப் பெற்றோம்; யாம் மேன் மேலும் ஆசைப்படுகின்ற பொருளிது. (பரிமேலழகருரை)

கேசவனார் என்கின்ற தண் தமிழ்ப்புலவர் செவ்வேளைச் சிறப்பு மீதூரப் புகழ்ந்து வாழ்த்துகின்றார். அவர் வாழ்த்தும், நிலையைப் பின் வருமாறு வுணர்வோமாக! சூரபன்மாவைக் குலத்தோ டொழித்தவேற்படையுடையோய் கார்காலத்தில் வெண்மேகம் எழுந்தாற் போன்ற அகில் முதலியவற்றால் புகைத்த தூபத்தை விரும்பினோய் ஆறு திருமுகங்களையும் பன்னிரு தோளையும் கொண்டு, வள்ளியென்ற மலர் போன்ற மகளை விரும்பியோய் ! பிரிந்த தலைவர் வந்து சேர்ந்து பின்பு நீங்காமலிருக்கும் பொருட்டு, மகளிர்யாழை வாசித்துப் பாடும்பாட்டை விரும்பியோய்! திருவவதாரம் செய்தவுடன், இந்திரன் முதலியோர் அஞ்சிய சிறப்புடை யோய் ! இரண்டு பிறப்பையும், அப்பிறப்பால் வந்த இரண்டு பெயரையும், அன்பு பொருந்திய நெஞ்சத்தையுமுடையா யாதலின் நாங்கள் விரும்பி நின்பாற் பொருந்திப் பொருந்தி வழிபாடு செய்கின்றோம். அங்கனம் செய்வதன் பயனாகப் பின்னும், பின்னும், பின்னும், நின்புகழைக் காட்டிலும், பலவாக அவ்வழிபாடுகள் ஆகும்படி அருள்புரிவாயாக! இதனால் வழிபாட்டின் நிலைபேறு எவ்வளவிற்றின தாய மைந்துள்ள தென்பதையுணர்கின்றோம்.

''சூர்மருங் கறுத்த சுடர்படையோயே!
கறையில் கார்மழை பொங்கியன்ன,
நறையி னறும்புகை நனியமர்ந் தோயே !
அறுமுகத் தாறிரு தோளால் வென்றி,
நறுமலர் வள்ளிப் பூ நயத் தோயே !
கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை
எழீ இப் பாடும் பாட்டமர்ந் தோயே !
பிறந்த ஞான்றே நின்னை யுட்குச்
சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே
இருபிறப் பிருபெய ரீர நெஞ்சத்
தொருபெய ரந்தண ரறனமர்ந் தோயோ!
அன்னை யாகலி னமர்ந்தியாம் நின்னைத்
துன்னித் துன்னி வழிபடுவதன் பயம்,
இன்னு மின்னுமவை யாகுக !
தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே!  - பரிபாடல் - 14 - (செவ்வேள்)

இளம்பெருவழுதியார் என்ற தீந்தமிழ்ப் புலவர் திருமாலின் உருவத்தின்பால் திருநோக்கமைத்து, நல்லோ வியங் கண்ட செழுமைப் புலவர் சொல்லோவியங் கொண்டு செழிக்கத் தீட்டி வழிபாட்டின் நீர்மையீ தாமெனவுணர்த் துதல் ஈண்டு கண்டின்புறத் தகுந்தது.

திருமாலே! நீ பசுந்துழாய் மாலையையுடையை; நீல மலையைப் போன்றாய்! மிக்க ஒளியினையுடையை; ஒற்றைக் குழையையுடையை; கருடக் கொடியை உடையை; வளைந்த கலப்பையையுடையை; தண்டு, சங்கு, சக்கரம், வில், அம்பு, பாராவளை, வாள் என்பவற்றை யேந்தினை !

இங்னம் வேதம் அவன் பெருமை ஈதென்றுரைத் தலால், யாமும் அவற்றுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத் துத் திருமால், பலதேவரென்னும் இருவரையும் தொழுது அவ்விருங்குன்றத்தின் அடியில் வாழ்தல் எமக்கு வுண் டாகுக வென்று வாழ்த்தி, வழிபட்டு, வேண்டுவோமாக!

"அன்பது மே யிருங்குன் றத்தான்,
கள்ளணி பசுந்துளவி னவைகருங்குன் றனையவை,
ஒள்ளொளியவை யொருகுழையவை,
புள்ளணி பொலங்கொடியவை
வள்ளணி வளை நாஞ்சிலவை,
சலம்புரி தண்டேந்தினவை
வலம்புரி வயநேமியவை
வரிசிலை வயவம்பினவை
புகரிணர்சூழ் வட்டத்தவை புகர்வாளவை,
என வாங்கு,
நலம்புரீ இயஞ்சீர் நாம வாய்மொழி,
இதுவென வுரைத்தலினெ முள்ளமர்ந் திசைத்திறை
இருங்குன்றத் தடியுறை யியைகெனப்,
பெரும்பெய ரிருவரைப் பரவு துந்தொழுதே! - பரிபாடல் – 14 திருமால்

வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட " என்பது திருமுருகாற்றுப்படை. திரு முருகப் பெருமானை வேண்டியவர்கள் எதை விரும்புகின்றார்களோ, அதைப் பெற்றனர் என்பதையுணர்கின்றோம். திருமுருகாற்றுப் படையில், நக்கீரதேவர். திருவேரகம் பற்றிப்பாட வருகின்ற பொழுது, அருமறை யந்தணர்கள் பெருமானை எந்நிலையில் வழிபட்டனர் என்பதை விளக்குகின்றார். நாற்பத்தியெட்டு வாண்டுகள் முறையே நிரம்பப்பெற்ற, இளமைபூண்ட அந்தணர்கள் அறத்தில் வழுவாத கொள்கையுடையவர்களாய், முத்தீ வளர்க்கும் பெருஞ் சிறப்பினர்களாய், உரிய பொழுதறிந்து, மறைகளை யோதுகின்றவர்களாய் ஒன்பது கொண்ட மூன்று புரி நூல்களை யுடையவர்களாய், உலராத உடையை யுடுத்திக் கொண்டவர்களாய், உச்சிமேல் இருகைகளையும் கூப்பி, ஆறெழுத்துக்களான (சாவணபவ) என்னும் மூலமந்திரத்தை யோதியவர்களாய், நல்ல நறுமணமுள்ள மலர்களை, உவப்புடன் பெருமானுக்கென ஏந்தியவர்களாய் விளங்கின ரோகத் தந்தணர்கள். திருமுருகாற்றுப்படையிலும் வழிபாட்டின் சிறப்பீதாமென வுணர்ந்தோம்! பித்தவுலகமே யெனினும், பேயாட்டம் நீங்கிப் பெருமானின்வழி பாட்டுணர்வு நின்று நிலவியுள்ள தல்லவா?

"இருமூன்று எய்திய இயல்பினின் வழா அது,
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன் நவில் கொள்கை,
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து,
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்,
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நா இயல் மருங்கில் நவிலப் பாடி,
விரை உறு நறுமலர் ஏந்திப் பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்;
அதா அன்று.                              - திரு முருகு - திருவேரகம்.

சித்தாந்தம் – 1964 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment