Saturday, May 9, 2020



மலம் உண்டு தொடக்கில்லை
[அ. சம்பந்தம் செட்டியார்]

"ஆணவமல நீக்கமும் ஒடுக்கமும்', என்ற தலைப்பில் புலவர்மணி சித்தாந்த வித்தகர் திரு. இரத்தினம் செட்டியாரவர்கள் (30 - 10, 11, 12. 87 - 2) எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக "அருளாசிரியரும் ஆணவ நீக்கமும் - என்னும் தலைப்பில் புலவர் திரு. பொன் சண்முகனாரவர்கள் (87 -4) எழுதியிருக்கிறார்கள்.

அருளாசிரியருடைய கட்டுரையை உணர்வது அரிது என்றும் மலபரிபாகமுடையார்க்கே அதன் உண்மைப் பொருள் விளங்குமென்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அருளாசிரியருடைய கட்டுரையை உணர்ந்தெழுதும் திரு. சண்முகனாரவர்கள் மலபரிபாகமிக்கார் என ஏனையோர் கருத வேண்டுமென்று எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.

கட்டுரையைத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் திரு. செட்டியாரவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதற்கு மறுப்பெழுதப் புகுந்த திரு. சண்முகனாரவர்கள் கட்டுரைப் பொருளை நிலை நிறுத்தாமல் ஏதேதோ எழுதிச் செட்டியாரவர்கள் திட்ப நுட்பம் நிறைந்த கட்டுரையைப் படித்துள்ள சித்தாந்தம் வாசகர்களை திருப்திப் படுத்த முயன்றிருப்பது வியப்பேயாகும்

"முத்தியில் மலமுண்டு; ஆனால் பந்தமில்லை' என்று செட்டியாரவர்கள் எழுதியிருக்கிறார்கள். மலம் நீங்குகிற தென்றும், மலம் அறுகின்றதென்றும், மலமில்லாமல் போகின்றதென்றும் சித்தாந்த நூல்களில் கூறப்படுகின்ற இடங் களிலெல்லாம் மலபந்தம் நீங்குகிறதென்றும், மலபந்தம் அறுகின்றதென்றும், மலபந்தம் இல்லாமல் போகின்றதென்றும் பொருள் கொள்ளவேண்டுமென்று செட்டியாரவர்கள் கூறியிருக்கிறார்கள்.

''வியாபகப் பொருட்குக் காட்சி விசேடமே நீக்கமாகலான்'' எனச் சிவஞான சுவாமிகள் எழுதுவதை ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். மலத்தைப் பற்றாது ஆன்மா இறைவனைப் பற்றி நிற்பதையே மல நீக்கமென்று சொல்கின்றோமே யன்றி பொருளளவில் ஒன்றைவிட்டு ஒன்று நீங்குவதை நீக்க மெனச் சைவசித்தாந்தம் கொள்ளவில்லை என்பதை மேலே காட்டிய சிவஞானசுவாமிகளது வாக்கு இனிது புலப்படுத்தும்.

"முத்தியில் மலம் நித்தியமாயிருக்க அதன் சத்தியே வலி அழியும்', என்று சிவப்பிரகாசம் செய்யுள் 88 - ல் உமாபதிசிவம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனை முழுதும் உடன்பட்டு சிவஞான சுவாமிகள் சிவ ஞான பாடியம் சூ. 4 அதி. 2 - ல் எழுதியிருக்கிறார்கள்.

"சிவாதித்தமணிதீபிகையுடையாரும் முதலதிகரணத் திறுதியிற் பயன் கூறும் வழி, ஞானபாவமே அஞ்ஞானமென் பாரை மறுத்து, மலந்திரவியமென்றும், அநாதிப் பொருளென்றும், மலசத்திகள் பலவென்றும், முத்தியின் மலசத்திக்குக் கேடன்றி மலத்துக்குக் கேடின்மையின், அநாதியாதற்கிழுக் கில்லை யென்றுங், கடாவிடைகளான் விரித்துக் கூறியவாறாண்டுக் காண்க (சி. பா. சூ. 4 அதி 2)

முத்தியில் மலத்திற்குக் கேடில்லை என சுவாமிகள் கூறியிருப்பதால் முத்தியில் மலமுண்டென்றும் ஆனால் பந்தமில்லை என்றும் புலனாகிறது. இதனைத்தான் செட்டியாரவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

முத்தியில் மலமில்லை என்று சொல்கின்ற திரு. சண்முக னாரவர்கள் சிவஞானசுவாமிகள் வாக்கினை நன்கு சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சிவஞானபாடியம் 6 - ஆம் சூத்திரத்தில் "பெத்தகாலத்து மேற்பட்டிருந்த தனது சத்தி முத்திக்காலத்து மடங்கிச் சூனியம் போனிற்றன் மாத்திரையே பற்றிச் சத்தாகிய ஆணவமலத்தினையும் அசத்தென்றற் கிழுக்கென்னையென்க''
எனக்குறிப்பிட்டிருக்கிறார்கள். இதனால் முத்திக்காலத்து மலம் தனது சத்தி மடங்கி நிற்கிறது என்பது தெளிவு. நிற்கின்ற ஒன்றை எவ்வாறு இல்லை என்று சொல்வது?

உமாபதி சிவாச்சாரியாரும் சிவஞானசுவாமிகளும் முத்தியில் மலம் உண்டென்று கூறுவதால் புலவர் திரு. சண் முகனாரவர்கள் முத்தியில் மலமில்லை எனச்சொல்வது எவ்வாறு பொருந்தும்?

அருளாசிரியரவர்களுடைய கட்டுரையை நிலை நாட்டுவதற்காகவே புலவர் திரு. பொன் சண்முகனாரவர்கள் இந்த மறுப்பை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த அருளாசிரிய ரவர்களோ முதலில் முத்தியில் மலமில்லை என்றெழுதி பின்னர் அதே கட்டுரையில் இருந்தும் இல்லை எனும்படி மலம் திரு வருள் ஒளியுள் அடங்கி நிற்கும் என்று எழுதியிருக்கிறார்கள். ஆகவே அருளாசிரியரவர்களுக்கும் முத்தியில் முலமுண்டு என்னுங் கருத்து உடன்பாடே என்பது புலனாகிறது. இப்படி யிருக்க செட்டியாரவர்களைச் திரு. சண்முகனாரவர்கள் ஏன் மறுக்கப் புகுகின்றார்களென்பது விளங்கவில்லை.

முத்தியில் மலமில்லை என்பது திரு. சண்முகனாரவர்களின் கருத்தாக இருக்குமானால் நாம் மேலே காட்டிய உமாபதி சிவாச்சாரியாரின் திருவாக்கிற்கும் சிவஞானசுவாமிகளின் திருவாக்கிற்கும் தக்கவிடை கூறவேண்டும்.

திருக்கோயிலுள் சிவலிங்கமும் நந்தியும் பலிபீடமும் இருப்பதை எடுத்துக் காட்டி முத்தியில் மலமில்லை என்று திரு. சண்முகனாரவர்கள் கூறுகின்றார்கள். இது வியப்பாகும்.

சிவலிங்கமும் நந்தியும் பலிபீமுடம் இருப்பதே முத்தியில் இறைவனும் ஆன்மாவும் மலமும் உண்டென்பதை மெய்ப்பிக்கின்றது. நந்தியை விட்டு பலிபீடம் விலகியிருப்பதால் முத்தியில் பொருளளவில் ஆன்மாவைவிட்டு மலம் நீங்கி விட்டதென திரு. சண்முகனாவர்கள் கருதியிருக்கிறார்கள் போலும். அப்படியானால் சிவலிங்கத்தைவிட்டு நந்தி விலகியிருப்பதால் முத்தியில் இறைவனை விட்டு ஆன்மா நீங்கியிருப்பதாகப் பொருள் கொள்ளலாமா? ஆகவே திரு. சண்முகனாரவர்கள் கருத்துப் பிழையாகும்.

முத்தி நிலையில் ஆன்மா மலத்தை நோக்காது அதனைப் பின்னிட்டு இறைவனை முன்னிட்டு நிற்குமென்பதை உணர்த்துவதற்காகவே முதலில் சிவலிங்கமும் அடுத்து நந்தியும் அதன்பின் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளன என அறிதல்வேண்டும். முத்தியில் மலமில்லை என்பதற்கு இது சான்றாகாது, மாறாக உண்டென்பதையே அது நிலை நாட்டும்.

ஸ்ரீ நடராசவடிவத்தில் முயலகனைத் திருவடிக்கீழ் அழுத்தி வைத்திருப்பதிலிருந்து முத்தியில் ஆணவமலம் அடக்கப்பட்டிருக்கின்றதே யன்றி இல்லாமற் போகவில்லை என்பது தெளிவு. முத்தியில் மலமுண்டென்பதை ஒப்புக்கொண்டு விட்டால் " இத்தை விளைவித்தல் மலம்' என்பதற்கு "மல நீக்க மென்றோ', 'மலமின்மை" என்றோ பொருள் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதோடு அங்ஙனம் பொருள் கொள்வது செய்யுள் சாதிக்க எழுந்த நோக்கத்தை நிறைவு செய்யாமல் போகின்ற தென்பதையும் ஈண்டு நினைவூட்டுகிறோம்..

இதுகாறும் கூறியவாற்றால் முத்தியில் மலமுண்டு; ஆனால் தொடக்கில்லை எனச் செட்டியாரவர்கள் கூறுவதே சைவசித்தாந்தக் கருத்தாகுமன்றி முத்தியில் மலமில்லை எனக்கூறும் திரு சண்முகனாரவர்களின் கருத்து சைவசித் தாந்தக் கருத்தாகாதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் இனிது விளங்கும்.

சித்தாந்தம் – 1964 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment