Saturday, May 9, 2020



தோன்றாத் துணை

[பத்திராசிரியர்]

உலகத்தில் மக்கள் ஒருவர்க்கொருவர் துணைபுரிந்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அத் துணை, நிலை பேறாக நிற்பதன்று. அது மாறிமாறிச் செல்வதை நாம் அறிகிறோம். என்றும் இன்பம் பயக்கும் உதவியாக அதைக் கருதுதற்கில்லை. ஆனால், பொதுவாக மன்பதையில் மக்கள் தாமும் உண்டுடுத்து மற்ற வர்கட்கும் உதவிசெய்து வாழ்வதே பெருந்துணை செய்வ காய்க் கருதுகிறார்கள். சிற்றறிவும் சிறு தொழிலும் அடைய உயிர்கள் செயற்கரிய துணை செய்வது ஏலாத தொன்றேயாம். உடலோம்பும் துணையே நம்மால் செய்ய இயலும். உயிராம்பும் துணை புரிய மக்களால் இயலா. உயிருக்குற்றுள்ள பற்றை நீக்கி அதை இடைவிடாது பாதுகாத்து வரித்துன்பமும் அணுகா வண்ணம், இடருறும் போதெல்லாம் உடனின்று உதவி புரிந்து தோன்றாத் துணையாயிருப்பது பரம்பொருள் ஒன்றேயாம். இதனையே அப்பமூர்த்திகள்.

“ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
என்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே "

என்று அருளிச் செய்திருக்கிறார்கள்.

ஈண்டு, தோன்றாத் துணை என்று ஆண்டவனை அப்பர் ஆர்வம்பொங்க அழைக்கிறார். தம்மைக் கல்லோடு பிணைத்துக் கடலில் அமணர் செலுத்தியபோது நாவரசர் அஞ்சாது மகிழ்ச்சி ததும்ப,

"சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே''

என்று வேறொன்றையும் எண்ணாது ஏத்துவோம் இறைவனையே என்று பதிகம் ஓதியருளினர். அப்போதே கல்தெப்பமாக மாறிக் கரைசேர்ந்தது. அவ்விடமே கரையேற விட்ட நகராம். அங்ஙனம் துணை புரிந்த ஆண்டவனைத் தோன்றாத் துணை என்று அப்பர் வியந்து பாடினார். கட்புலனுக் கெட்டாத ஒரு துணையை எங்ஙனங் கண்டு தோன்றாத் துணை என்று கூறினாரெனில், அவர் கருத்தில் கண்கொண்டு அதாவது அகக்கண் கொண்டு அத்துணையைக் கண்டார். ஞானக்கண்ணால் தோன்றாத் துணையாய் நிற்கும் தோன்றலைக் கண்டவர் சிவானந்தத்தில் திளைப்பவராவர். அவ்வானந்தம் இத்தகையதென முகத்தில் கண்கொண்டு பார்க்கின்றவர்கள் கூற இயலாது. இதனை,

முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனம்

என்னும் திருமந்திரத்தால் அறியலாம்.

உள்ளத்தே நின்று உயிர்ப்புளேவரும் கள்ளத் தேவன், தோன்றாத் துணையாய் நின்று அருள் புரிந்த தன்மையால், நாவரசர், அஞ்சா நெஞ்சினராயினார். திருப்பாதிரிப்புலியூரில் அறைந்த மற்றொரு திருப்பாட்டாலும் அவரது இடையறா அன்பின் பெற்றியைக் காணலாம்.

மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோர் திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே"

என்னும் இத்திருப்பாட்டாலும், இதுபோன்ற பல பாடல்களாலும் தாண்டகச் சதுரர் சாற்றும் தன்மையைச் சிந்தித்து அவர் வகுத்த நெறியில் நின்று மன உறுதியோடு, எத்தகைய இடுக்கண்வரினும் அஞ்சல் நெஞ்சே என்று ஆண்டவனுடைய இணையடிகளைச் சிக்கெனப் பிடித்து உரங்கொண்டு நிற்கவேண்டும்.

அங்ஙனம் ஒன்றுபட்ட உள்ளத்தினராய் நிற்பவர் கட்கு எத்தகை இடுக்கண்களும் எதிர் நில்லா. இதனை,

அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினை தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோர் அடிமைபூண்டேனுக்கே 

''அவனன்றி ஓரணுவும் அசையாது' என்ற ஆப்தர் மொழிக்கிணங்க ஆண்டவனது திருவடிக் கன்புபூண்டு அடிமைப்பட்டவர்க்குப் பண்டை வினையும் பறந்து விடும். உண்மை, உறுதி, அஞ்சாமை என்னும் நிலையில் நின்று ஒழுகினவர்களே அறுபான் மும்மை நாயன்மார்கள். இக்காலத்து மக்கள் 'கடவுள் கடவுள் என்று! எண்ணுகிறவர்கட்குத்தான் துன்பம் பெருகுகிறது' என்று எங்கும் பேச நாம் கேட்கிறோம். இன்பம் வந்த காலத்துக் கடவுளைப் புகழ்வதும், துன்பம் வந்தகாலத்துக் கடவுளை இகழ்வதுமாகிய சிற்றறிவுடையவர்கட்கா கடவுள் உதவி கிடைக்கும்? எத்தகை இடுக்க ணறினும் ஏத்துவம் எந்தையையே என்று ஆசிரியன் மார் உணர்த்தியிருக்கிறார். "இடரினும் தளரினும் எனதுறு நோய், தொடரினும் உனகழல் தொழுதெழு வேன்" என்று திருஞானசம்பந்தர் ஓதுகிறார்.

"இறக்கினு மின்றே யிறக்குக என்றும்
இருக்கினு மிருக்குக வேந்தன்
ஒறுக்கினு மொறுக்க வுவகையு முடனே
யூட்டினு மூட்டுக வானிற் சிறக்கினுஞ்
சிறக்க கொடிய தீ நரகஞ்
சேரினுஞ் சேருக சிவனை
மறக்கிலம் பண்டைப் பழவினை விளைந்தால்
மாற்றுவார் யாரென மறுத்தார்''

என்று மணிவாசகனார் உறுதியோடு அஞ்சாமற் பேசுகிறார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் கண்ணிழந்த காலத்தும்  'அடியேன் பிழைப்பனாகிலும் இருவடிப் பிழையேன்" என்று கூறும் அமுத வாக்கும் சிந்தனைக் குரியது.

அருட்டிருமேனியுடைய ஆண்டவனை இடையறாமல் உள்ளன்போடு எதுவரினும் வருக என்று அஞ்சாமல் வழிபடுவோர்க்கு அவன் தோன்றாத் துணையா யிருந்து அருள் புரிவதை இக்காலத்தும் காணலாம். அங்ஙனம் அருள் செய்த வரலாறுகள் பல உள. மெய்யன்பர்கள் பால் கேட்டுத் தெளிக.


No comments:

Post a Comment