Saturday, May 9, 2020



திலகவதி அம்மையார் துதி
ஞானியார் சுவாமிகள்

திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் சுவாமிகள் தம் நகரத்தின் அருகே உள்ள திரு அதிகையிடத்திலும், அதிகையில் வீரட்டேசுவரரால் ஆட்கொள்ளப்பட்ட அப்பர் சுவாமிகளிடத்திலும் நிரம்ப ஈடுபாடுடையவர்கள். மாம்பலத்தில் அவர்கள் அப்பர் சரித்திரப் பிரசங்கம் கேட்கும் புண்ணியம் செய்தவர்கள் இதை நன்குணர்வார்கள். சுவாமிகள் திலகவதியார் தோத்திரமாக ஏழுபாடல்கள் பாடியிருக்கிறார்கள். இதைப் பலர் அறிந்திருக்கமாட்டார்கள். இப்பாடல்கள் 1940 ஆம் ஆண்டு, திருவதிகைக் கும்பாபிஷேகம் நடந்த காலத்தில் வெளியான தலமான்மியப் பதிப்பில் வெளியாகியுள்ளன. திலகவதி அம்மையார் முத்தி அடைந்த திருநாள் தைமாத உத்திர நட்சத்திரம். சமாஜ அன்பர்கள் அறியும் பொருட்டு அப்பாடல்களை இங்கு மீண்டும் வெளி பிடுகிறோம். - ஆ.

திலகவதி அம்மை துதி

உலகமெலாம் திருநீற்றின் ஒளிவிளங்க
மணிவிளங்க உவகையோடும்
பலகலை சொல் ஐந்தெழுத்து விளங்க அரன்
பெயர்விளங்கப் பான்மையோடு
தலம் விளங்க மறைவிளங்க அப்பருக்குத்
திரு நீறு சாற்றித் தந்த
திலகவதி அம்மையார் அடிக்கமலம்
இரண்டினையும் சிரத்திற்சேர்ப்பாம்                             1

நீயிலையேல் சைவமெனும் சமயம் எங்கே
அப்பர் எங்கே நேயம் எங்கே
கோயிலையாம் அடைவது எங்கே குறிக்கோளும்
கொள்வது எங்கே குருதான் எங்கே
காயிலைவேற் பரசினைத்தாங்கு அரன் எங்கே
தேவாரம் கருதல் எங்கே
மாயிருஞா லம்போற்றும் திலகவதி
நின்னடியை வணங்கி வாழ்வாம்                               2

உடன்பிறந்தார் பால் அன்பும் உனைப்போல
யார்க்கு உண்டென்று உலகம்ஓத
உடன்பிறந்த அப்பருக்காச் சுவர்க்கசுகம்
தனை இழந்தாய் உண்மையீதே
உடல் அணியும் அணி நீக்கி எவ்வுயிர்க்கும்
அருள் கொண்டாய் உன்னுங்காலை
மடனொழித்த திலகவதீ நின்னடியைப்
பெரியோர்கள் வணங்கிவாழ்வார்                               3

அப்பருமே நினை அடைந்து மாசுஒழிந்தார்
நோய் ஒழிந்தார் அளவில் சீர்த்திச்
செப்பரும்தே வாரம் சொல் திறம்பெற்றார்
சிவஞானத் திறம்பெற்று உய்ந்தார்
ஒப்பு அதிகம் இல்லதா இறை நாவுக்கு
அரசு என்ன ஓதல்பெற்றார்
எப்பொழுதும் உனை நினைத்துத் திலகவதி
அம்மை நலம் எய்திவாழ்வாம்                                 4

அடியேனை ஆண்டு அருளும் அப்பரையே
எளியேங்கட்கு அளித்தாய்போற்றி
கொடியேனை வாழ்விக்கும் தமிழ்மறையை
யாம் ஓதக் கொடுத்தாய்போற்றி
அடிமுடியும் இல்லாத சிவநெறியை
யாம் பேண அளித்தாய்போற்றி
பொடி ஏறு திருமேனித் திலகவதி
அம்மையே ! போற்றி போற்றி                                 5

வேறு

கதிதனை அடைய வனந்தனை அடைவர்
கடலொடு கலந்து மேம் பட்ட
நதி தனை அடைவர் மலையினை அடைவர்
நானிலம் வலம்வரு வார்கள்
விதி இது என்னப் பலபல செய்வர்
விளங்க நான் இவையெலாம் செய்யேன்
அதிகைவாழ் திலக வதிப்பெயர் அம்மை
அடைவனே நீகதி யாக                                       6

வேறு

திலகவதித் தாயே திருவுளம் இரங்காய்
உலகிற் பிறவா உயர்வை - அலகிலா
இன்பத்தை யான் அடைய இன்றே அருள் செய்வாய்
துன்பம் அகலத் தொலைத்து                                        7

சித்தாந்தம் – 1964 ௵ - மார்ச்சு ௴


No comments:

Post a Comment