Saturday, May 9, 2020



சிவமயம்.
''நான் யார்?

கடவுள், ஆன்மா, கன்மம், அசுத்தமாயை, சுத்தமாயை, ஆணவம் என்னும் ஆறும் அநாதி நித்தியப் பொருள்களாம். இவைகளை பதி, பசு, பாச மென்னு மூன்றனுளடக்கிக் கூறுதலே பெருவழக்காம். பசு மூன்றுவகைப்படும். ஈண்டு சகல வர்கத்தினுட்பட்ட ஓர் ஆன்மா தன்னையே. ''நான் யார்"? என விசாரிக்கப் புகுகின்றான். அவ்விசாரணை எப்பெற்றித்தோ வெனில், நான் முற்றறிவு முதலிய குணங்களையுடைய இறைவனைச் சார்ந்தவனோ, அல்லது அறிவிலாப் பாசத்தைச் சார்ந்தவனோ என்பதாம். சத்தியாகிய பதியினைச் சார்ந் தவனாகில் அசத்தாகிய பாசத்தொகுதியுள் கட்டுணான், அசத்தாகிய பாசத் தொகுதிகளைச் சேர்ந்தவனாகில் அறிவிலா ஜடப்பொருளி லொன்றாகிப்போவன். ஆனாலிவன் பாசப்பிணிப்பால் வந்த சிற்றறிவும் சிறுதொழிலும் தனக்குடமையைக் கருதிப்பேரறிவும் பேராற்றலுமுள்ள ஒருவன் தனக்குத் தலைவனாயிருத்தல் வேண்டுமென, அனுமானித்துணர்கின்றான். ஆதலினால் பதி, பாசங்களுள்வைத் தெண்ணப் படாமல் ஓர் தனிப்பொருளாய் எண்ணப்படுகின்றான்.

வாக்கிற்கும் மனத்திற்கு மெட்டாத சிவத்தின் முன்னர் உணருரு வாகிய அசத்தெல்லாம் பாழாகலின், சத்தாகிய சிவம் அசத்தா கிய பிரபஞ்சத்தையறிதல் செய்யாது, அசத்தாகிய பிரபஞ்சம் ஜட மாகலின் சத்தாகிய சிவத்தையறிதல் செய்யாது. அது பற்றி இவ் வான்மா ஒழிபளவையால் சத்தாதற்றன்மையும் அசத்தாதற்றன்மையுமாகிய இரண்டு மின்றி நின்றதோர் பொருளெனப் பெற்றாம். ஆயினும், ''இருதிறனறிவுள திரண்டலா வான்மா'' என்றார் பெரியோர். இதற்கு உரையாசிரியர்கள் சத்து மசத்துமாகிய இரண்டனையு மறியு மறிவு அறிவிக்கப் படுதலாலும் அறிவித்தாலறியுந் தன்மையாலும் போந்தவறிவு சத்து அசத்து என்னும் இரண்டன்பாலு முள்ள அநுபவ அறிவு எனப்பொருள் விரித்துக் கூறுவாராயினர். இனி ஆன்மா இரண்டு மின்றித் தனியன்றான் என்பதை மேல் விளக்கிக் காட்டுவாம், அது மாயேயங்களில் ஒன்றாகுமோவென ஐயுறுதல். அங்ஙன மாகாமை கூறுவாம்.

1. அவற்றுள் முதற்கண் நிற்பது பஞ்சபூதங்களாம். பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலாவது இம்மானுடயாக்கை, அஃது ஆன் மாவாகுமோ வெனில் சுடு சோற்றின்கண் அவ்வாக்கையின் சினையா கிய கையினை வைத்தபோது, சுடுகிறதென்று கையினை எடுத்தும், பின் ஆறிவிட்டதென அறிந்துண்டு நின்றதும் அவ்வுடம்பல்லவே. அவ்வுடம்புதான் எனக்கூறுவாயாகில் சுடலையின்கண் முருகுந்தானும் பேதமறக்கிடந்து வேம் போது குதித்து ஓடக்காண்கிலமே. காண வில்லையாயினும் பஞ்சபூதங்களி லொன்றாகிய வாயுப்பிரிகையால் அஃதறிந்ததில்லை. அதுவுங் கூடிநிற்கில் அறியுமாற்றலுடையதாமெனில் உறக்கத்தின் கண்ணே அது (வாயு) கலந்து நின்று தீட்டல் மடக்கல் முதலியன உடலின் மாட்டு நிகழ்த்தவும் அவ்வுடல் அறியாத தென்னே? அங்ஙனம் அறியாததால் இவ்வுடல் அறியுமாற்றலுடையதன்று. ஆகவே பஞ்சபூதங்களும் அவைகளின் வழித்தாகிய கருவிகள், 25, நாடிகள் 10, ஏடனை, 3, ஆக 43 கருவிகளும் அறியுமாற்றலுடை யன வல்லவெனக் கூறுக. ஈண்டு நானிவையல்லவென வோர்ந்து தன்னை வேறாகக் காணல் கூடும்.

2. ஐம்பொறிகளும் புலன்களும் ஆன்மாவாகாவோ வெனில், கூறுதும். துவக்கு பரிசத்தையறியும், சட்சுரூபத்தை யறியும், சிங் துவை இரசத்தை யறியும், செவிசத்தத்தைக் கேட்கும், மூக்குக் கந்தத் தை முகரும் இவைகள் தாம் ஞானேந்திரியங்களும் அவற்றின் விடயங்களுமாம், ஞானேந்திரியங்களே விடையங்களை ஆகாய முதலிய பூதங்களிடமாக முன்று அறியுமெனில், அவற்றுள் ஒன்றறிந்த தொன்றறியமாட்டாமை யானும் ஒன்று மற்றொன்றை யறியாமையானும் இவற்றைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று ஒருங்கே யறிவது வேறொன்றுளதாம். ஆதலால் நான் என்பது இந்திரியங்களுமன்று அவற்றின் புலன்களுமன்று என்றுணர்க.

இவ்வாறு உணர்தலால் பொறி, 5, புலன் 5, வாக்காதி 5, வசனாதி 5, ஆக இருபது கருவிகளும் நீங்கும். இவற்றுள் ஒன்றாகாமையுணாவே 63 கருவிகள் நீங்கினவாம்மை

3. இவ்விந்திரிய முதலியன நீங்கிய அளவில் ஒன்றிலேவற்றி நினைப்பதும், நிச்சயிப்பதும் எழுந்திருப்பதும் சிந்திப்பதுமா பிருப் பதுவே நானெனில் அவையாகாவெனக் காட்டுவாம். நினைத்தல் முதலிய தொழில்களுக்குக் கருவிகளாயுள்ளன மனம் புத்தி அகங்காரம் சித்தம் என்பனவாம். இவைகள் தாம் அந்தக்கரணங்க ளென்றழைக்கப் பெறும் இவ்வந்தக் கரணங்கள் நானென நின்று அறியாயோ வெனில் இவையும் ஒன்றறிந்த தொன்றறியாதே இவை நான்கும் நான் காகவறிகின்றமையால் இவைகளைக் கருவிகளாகக்கொண்டு அறிவது வேறொன்றுளதாம். அது அவற்றோடு கூடி இவை தானாயும் இவற்றி ற்கு வேறாயும் நிற்பதாம். ஆதலால் நானென நிற்பது இவ்வந்தக் காண ங்களுக்குப் புறம்பாம். ஈண்டு வாக்கு 4, அந்தக் கரணம் 4, ஆக எட்டுக் கருவிகளும் நீங்கினவாம் ஆக மொத்தம் 71 - கருவிகள் நீங்கினவாம்.

4. இவ்வந்தக் கரணங்கள் நீங்கிய அளவில் இராசதம் தாமதம் சாத்துவிக மென்னும் மூன்று குணங்களும் நானென நில்லாவோ வெனில், ஒருவனைக் குணவானென்றும் மற்றொருவனைக் குணவறிவீனனென்றும் அவனுக்கு அது குணமென்றும் கூறப்படுதலால் குணங்கள் வேறாகநிற்கக் கண்டாம். ஆகையால் நானென நிற்பது குணங்களல்ல வெனவுணர்க.

இனி மேலுமறிய வேண்டுமென்பதோர் ஆசையும் அதன்கண் ஓரறிவும் அதைச் செலுத்துவதுமாகிய ஒரு தொழிலும் நிகழ்கின்ற மையால் அவையே நானென நிற்குமெனில், அவை ஒருவன் செய்திக ளாய் ஆன்மாவிற் குடம்பாய் அசுத்தமாயையில் தோற்றப்பட்டவை களாய் முப்பத்தாறு தத்துவங்களுள் வைத் தெண்ணப் படுவனவாயு ள்ளன, ஆதலால் அவைகள் (காலாதிதத்துவங்கள்) நானெனநிற்றல் பொருந்தாமையுணர்க, காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயை என்னும் தத்துவங்கள் ஏழனுள், புருடன் என்பது தத்து வத்துள்வைத் தெண்ணப்படு தலால் அது நானென நிற்றற்கு உரிய தல்லவாம். ஈண்டுக் குணம், 3, கலாதி 7 - ஆக பத்துக் கருவிகளும் நீங்கு வனவாம். ஆக மொத்தம் 81 கருவிகள் நீங்கினமை காண்க,

5. நானென்பது, இவைகளுள் ஒன்று மல்லவென நிற்குங்கால் மீளவும் ஆராயத்தக்கதாய் உள்ளச்செய்வதொன் றுறுகின்றது. அது நான் ஆகாதோ வெனில், அவ்வாறு உன்னச் செய்வது சுத்த தத்துவமாம். சுத்ததத்துவங்களறியுமாகில் அவை நம்முள் ஒத்து நில்லாது, ஞான மேயாயும், கிரியையேயாயும், கிரியை ஏறி ஞானக்குறைந்தும், ஞானமேறிக் கிரியை குறைந்தும், ஞானமுங் கிரியையு மொத்தும் இவ்வாறு பல திறப்பட்டு நிற்றலால் இச்சுத்த தத்துவங்களறியா வென்றுணர்க, ஈண்டுவாயு 10 சுத்த தத்துவம் 5 ஆகப் பதினைந்து கருவிகள் நீங்கும் ஆக 96 கருவிகள் நீங்கினமை யறிக. சுத்த தத்துவம் வாயுவுடன் கூடி நிற்றலைக்கேட்டு உணர்க.

இதுகாறுங் கூறியவாற்றால் அகக்கருவிகள் 36 - ம் புறக்கருவிகள் 60 - ம் ஆக 96 கருவிகளுள் நான் எனநிற்கு மான்மா ஒன்றாகாமை யறிக, ஆகவே இருவகை மாயைகளினிடத்து நின்று உற்பவித்த தத்துவ தாத்வீகங்களுள் ஒன்றாகாமையால்'' சார் மாயை நீயல்லை'' என்பது பெற்றும். உச்சுவாசம் நிச்சுவாசம் செய்வதும் மிகமேலானது மானபிராணவாயுவும் நான் அல்லவோ வெனில் கூறுதும்.

உயிர், ஆவி, எனவிதந் தழைக்கப் பெற்றதும் மிக மேன்மையுடையதுமாகிய இப்பிராணவாயு எல்லா கருவிகளுக்கு மிக மேலான தென உபநிடதங்கள் கூறுவதுண்மையே எங்கன மெனிற்கூறுவாம்.

வைகரிவாக்கின் வழிவந்த பேச்சு முதலியன தம்முள் தலைமை கருதி இகலி பிரமனிடத்திற்போய் எங்களுள் யார் தலைமையுற்றவர் எனவினவ அவன்'' யாருடைய பிரிவினால் இவ்வுடல் மிகவருந்துமோ அவரே உம்முள் தலைமையுடையராவர் " என்றனன்.

முதற்கண் வாக்கு நீங்கிப்போய் ஒருவருடத்துக்குப் பின் மீண்டு வந்து என்னையன்றி யிலநீவிர் எவ்வாறு ஜீவித்தீர்கள் என்று கேட்க, மூகையர்கள் வாக்கினாற் பேசாமல் உச்சுவாசம் நிச்சுவாசங்கள் செய்தும் கண்ணால் பார்த்தும் காதால் கேட்டும் நெஞ்சால் நினைத்தும் பிள்ளைகள் பெற்றும் வாழுமாப்போல நாங்கள் வாழ்ந்தனம் என்றனர். இது கேட்டு வாக்குமீண்டுந் தேகத்துளுற்றது.

அதன்பின் கண்ணிந்திரியம் நீங்கிப்போய் ஒருவருடங்கழித்து வந்து என்னையன்றி நீங்கள் எவ்வாறு பிழைத்தீர்களெனக் குருடர்கள் எவ்வாறு பிழைப்பார்களோ, அவ்வாது ஜீவித்தோமென்றனர். அது கேட்டு அவ்விந்திரிய முடலிற் போந்தது, பின் சுரோத்திரேந்திரியம் மனம்குறி இவைகளு முறையே நீங்கி மீண்டுவரச்செவிடர் அறிவீனர் நபுஞ்சகர் ஜீவித்தாங்கு ஜீவித்தோமென அவைகளும் உடலினைப் பொருந்தி நின்றன. அதன் பின் சிந்துதேசத்தில் மகிமையும் பெருமையும் வாய்ந்த குதிரை தன்னுடைய குளம்புகளைத் தூக்கி நின்று பாய்வது போல மேற்கூறிய கருவிகளையெல்லாவற்றையும் ஓரசைப் பசைத்து பிராணவாயு வெளியிற் செல்ல நின்றபோது மற்றைய கருவி களெல்லாங்கூடி'' ஓமாட்சிமை பொருந்தியவரே " நீர் பிரிந்துபோக வேண்டாம் உம்மையன்றியில் நாங்கள் எவ்வாறு உய்வோம் என்றனர். அது, நான் அத்தனை பெருமை யுடையவனாகில் எனக்குக் கீழ்ப் படியுங்களென்றது, எல்லாரும் அப்படியே ஆகட்டு மென்று வணங்கி நின்றனர்.

இத்தகைய பெருமை வாய்ந்த அப்பிராணவாயு உறக்கத்தில் கூடிப் பொருந்திக் கலந்து நின்றுயிர்க்கும் போது பாம்பொன்று முகத்திலேறிப்போக ஒன்று மறியாமலிருப்பதேன். போக்குவரத்துள்ள பிராணவாயு கரணங்களுக்கு நாயகமாய் நிற்கில், இராசன் பவனி போம் போது பரிவாரங்களும் உடன் செல்லுமாபோல், பரிவாரம் போன்ற கரணங்கள் தொழிற்படாது அடங்குவானேன். ஆகையால் பிராணவாயு முதலியுமல்ல கரணங்கள் அதன் வழித்துமல்ல. இதுபற்றி பிராணவாயு நானென நிற்பது கூடாதாம். பிராணவாயு நான் அல்லவென உணர்ந்தபின் வேறொன்றுந் தெரியாது நின்ற விடமே சுத்த தத்துவ தூடணம்.

பஞ்சபூதப் பழிப்பு முதல் சுத்ததத்துவ தூடணம் வரை ஐந்து பிரகாரமாக ஆறாறு தத்துவங்களு நீத்தமையுணர்க. அன்றியும், பிரு துவி தத்துவ முதல் நாத மீறான முப்பத்தாறு தத்துவங்களைத் தனக்கு வேறாகக் காண்பது. - தத்துவரூபம்.

அவைகள் தன்னாலறியப்பட்ட சடபதார்த்தங்களென்று தன்னறிவில் விளங்கக் காண்பது. - தத்துவ தரிசனம்.

அவ்வாறு கண்டு நீங்கித்தான் அன்னியனாய் நிறைவாய் நித்திய மாய் அறிவாயுள்ள தன்மையை யறிந்து நிற்பது -- தத்துவசுத்தி எனவறிக.

மண்முதலா நாதாந்த மாய்வந்த தத்துவத்தி
னுண்மை யறிந்தெல்லா மொழிந்தாயே - எண்ணிலிவை
தத்துவாதீதமெனச் சாற்றுங்காண் சைவமறை
யத்துவா வெல்லாமற.

மேற்கூறியாங்கு 36 தத்துவங்களையும் நீத்தபின் ஆணவத்தின் மேலீடு விஞ்சிவரும் அது கேவலமாம், ஈண்டு ஆன்மாவோடு சகச மாய் நின்ற ஆணவம் ஒன்றி நிற்க அதில் ஆன்மா பதிந்து இருளின் கண் விழித்த விழிபோல நிற்கும் எல்லாக் கருவிகளுங் கழன்றபின் னும் இவ்வாணவம் கழலாமல் நின்ற தன்மை என்னோவெனில், - இருடான்,

விடிகைக் கிருண்ட மிகுதிபோன் மாக
மடிகைக் கிருண்டது காண் மற்று.

இவ்வாணவத்திற்கு விகற்ப முதலான எண் குணமும் அதனையடு'த்து வருங் கன்மத்துக்கு இருத்தல் முதலான ஆறுகுணமும் அதனை யடுத்து வரும் மாயைக்கு அஞ்ஞான முதலிய ஏழுகுணமும் உள்ள னவாம்; யாவும் ஆணவ சம்பந்தமாயே யிருக்கும்.

இவ்வாணவம் சிவஞானம் விஞ்சினாரை விட்டு நீங்கும் சத்தியை யுடையதாய் இருளிலு மிருண்டிருப்பதாய் அறிவை மயக்குவதாய் இத்தன்மைய தென்று ஒருவராலுங் காணமுடியாததாய் ஆன்மா வின்குணம் போலிருக்கும் அஃது இன்றளவும் (36 தத்துவங்கள் நீங் கியவழியும்) நிற்பது பொருந்துமோ என்று அறிவது கேவலதரிசனம் இதுவோ மலம் என்று பார்த்தால் கேவலா தீதம் இருளாகிய இவ்வா ணவமலத்தை இருள் என்று அறிந்ததினால் இருளைப் பிரிந்து நின்ற நிலைபெற்றாம். அவ்வறியாமை முன் போலே மறைத்து நின்றால் அவ் விருளாகிய ஆணவத்தை நீ காணமுடியாது பெத்த நிலையிவிருத்தது போலிருத்தல் கூடும்.

அந்த மலமா மறியாமை கண்டாயே
யந்த வறிவு நீ யையனே - தொந்தவிருள்
போனதே யுன்னை விடப் போக்கித் திபோதையரு
ளானதே கண்டா யறி.

மலநீங்கித் தானறியு முறைமையும், தன்னறிவிற் கறிவாய்நிற்கு மிறைவனது ஞானம் உபகரிக்கு முறைமையும் தன்னறிவிலே விளங்கக் காண்பது. ஆன்மபேதம் கண்ணிலிருள் போனால் கண் தன்னைக் காணாதவாறுபோல ஆன்மாவை யறியவொண்ணாதோ வெனில் நீ கண் போற்சடமல்லை, நீ காட்டியதைக் கண்டுணர்ந்த வொண் போதமாக உணர்க.

நான் கருத்தாவல்லனோ வெனில், உனக்கு அயர்ச்சி யுண்டாகி நின்ற தன்மையாலும், கருவிகள் உனக்கு வசப்பட்டு நில்லாததாலும், புண்ணியபாவம் உன்னை வந்து பொருந்தி நீ இன்பதுன்பங்களை யநுபவிப்பதாலும் உன்னையுங் கன்மத்தையுங் கூட்டிவிப்பதற்கு ஒருவன் வேண்டிய திருப்பதினாலும், உள்ளும் புறம்புநின்று கருவிகர ணங்களை வினைக்கீடாக நடத்துதற்கு ஒரு பொருள் வேண்டப்படுதலானும், நீ கருத்தாவன்று. உன்னை உன்னாலறிய முடியவில்லை, அறிவி த்தா லறிகின் றனை, ஆகையால் உனக்கு அறிவித்தற்கு வேறொருவன் வேண்டும் அவனே கருத்தாவாம், ஆகையால் நீ “ தற்பரமுமில்லை.'' இது காறுங் கூறியவாற்றால் தர்ப்பணம்போற் காட்டுருசார்மாயையில்லை; தற்பரமுமல்லை என்பது பெற்றாம். பின்னை நான்யாரெனில்.,

1. இரண்டு மிலாத் தனியன்
2. பாசவறிவும் பதியறிவுமின்றியே, யாசறவேநின்ற வனீயாம்
3. ''நீசத்தசத்தன்று நேரேசதசத்தன்'' என்பன விடைகளாக வறிந்து கொள்க.

இதுகாறுக் கூறியவைகளையும் மேலுள்ள நிலைகளை யுமடக்கி

வான் கெட்டு மாருதமாய்க் தழனீர் மண்கெடினுந்
தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்
கூன் கெட் டுயிர் கெட் டுணர்வுகெட்டெனுள்ளமும் போய்
நான் கெட்டவாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.

என திருவாசகங் கூறுவதை யறிந்துகொள்க.

ஆன்மா தனியனென்பதற்கும் சதசத்தனென்பதற்கும்

மேற் கோள்

திருவாசகம்.

சிந்தனை நின் றனக்காக்கி நாயினேன் றன்
கண்ணினை நின்றிருப்பாதப் போதுக்காக்கி
வந்தனையு மம்மலர்க்கே யாக்கிவாக்குன்
மணிவார்த்தைக் காக்கியையும் புலன்களார
வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்தவிச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையேயுன்னைத்
தந்தனை செந்தாமரைக் காடனைய மேனித்
தனிச்சுடரே யிரண்டுமிலித் தனியனேற்கே.

S. பால்வண்ண முதலியார்
திருநெல்வேலி.

சித்தாந்தம் – 1915 ௵ - ஜனவரி / பிப்ரவரி ௴


No comments:

Post a Comment