Saturday, May 9, 2020



பிரபஞ்ச வாழ்வு
சி. வை. வன்னிய நாதன்,
ஆயுள்வேத வைத்தியர், சுட்டிபுரம், வரணி - இலங்கை.

ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேரும் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளும்
சீரும் சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின்றாள் சதங்கச்சி யேகம்பனே. - பட்டினத்தார்.

மனிதராகப் பிறந்த நாம் இந்தப் பிரபஞ்ச வாழ்வை நித்தியமென்றும், சதமென்றும், சதா நினைத்துக் கொண்டிருக்கிறோம். வீடு மாடு கன்றுகளென்றும்; நன்செய், புன்செய் நிலமென்றும்; மாடமாளிகையென்றும்; மனைவி மக்களென்றும், பணம் பந்தியென்றும், சகோதரங்களென்றும் எப்பொழுதும் எண்ணி மாறி மாறி இப்பிரபஞ்சத்தில் முழுகிக் கிடக்கின்றோம். இந்தச் சரீரம், எப்பொழுதும் நமக்கு உறு துணையென்று நினைத்து, பொன்னான பொழுதையெல்லாம் மண்ணாக்கி விடுகின்றோம். இந்தச் சரீரமானது மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்களாலாயது. இது மாதாவின் உடலில் கருவாக உற்பத்தியாகிப் பிறந்து வளர்ந்து பாலனாய், தருணனாய், விருத்தனாய் மாறுவது. நித்தியம் நோய் குடி கொண்டது. இது ஒரு சோற்றுத் துருத்தியென்று சிலர் கூறுவர். பீழையும் கோழையும் வடிவது, எலும்பும் நம்பும்; தோலும் இறைச்சியும்; இரத்தமும் நகமும்; ஓடும் மயிரும் சேர்த்து உண்டாக்கப்பட்ட ஒரு கொட்டில் வீடு. உயிராகிய பறவை வந்து ஒதுங்கும் வீடு. பறவை பறந்து விட்டால் பிணமாய் விடும். இது இருக்கும் காலம் மிகவும் சொற்பம். இருக்குமளவும் இதனால் அனுபவிக்கும் துன்பம் மிகப்பெரியது.

சரீரத்தை வளர்க்க உணவு வேண்டும். உணவு தேடு வதற்கு அல்லும் பகலும் உழைக்க வேண்டும். பிறஉயிர்களைக் கொன்றோ துன்புறுத்தியோ புசிப்பது, உடம்பை வளர்க்கும் நோக்கத்திற்கேயாகும். உணவு ஒரு நேரமும் குறையக் கூடாது. குறைந்தால் பசி வந்துவிடும். பசிவந்திடப் பத்தும் பறந்திடும். அதாவது, கால் நடவாது; கை வேலை செய்யாது; கண் பார்க்கமாட்டாது; காது கேட்கமாட்டாது; இப்படி எல்லா உறுப்புக்களும் நிலை தளர்ந்து விடும். பசி என்னும் நோய் அதிகரித்தால் தொல்லை கூடிவிடும். உடலில் நோய் குடிகொண்டுவிடும். உயிரும் உடலும் ஒற்றுமைப் படாது. அப்படியானால் உடலைவிட்டு உயிர் ஓட்டமெடுக்கும். அப்போது உடலைப் பிணமென்று ஊரார், உற்றார், உறவினர் எல்லாரும் சேர்ந்து, வீட்டில் பெரிய ஆரவாரம் செய்து, சுடலையிற் கொண்டு போய்ச் சுட்டு எரித்து விடுவார்கள். அது தாயாகிலும் சரி; தந்தையாகிலும் சரி; இது தான் இருவருக்கும் (உடலுக்கும் உயிருக்கும்) உள்ள தொடர்பு. இதை வள்ளுவர் பெருமான்,

"குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு,”    என்கிறார்.
இந்த உயிரானது இன்றைக்கோ, நாளைக்கோ என்றைக்கோ உடலைவிட்டுப் பிரிவது முற்றிலும் உண்மை. ஆனால், அப்படி யாரும் நினைப்பதில்லை ''......பார்மீதில் இன்னம் வெகு நாளிருப்போமென்று பல கோடி நினைவை எண்ணி, அனிதமாய் விருகாவில் மாய்வதே அல்லாமல் அன்பாக நின்பதத்தை அருச்சித்து முத்திபெறல் வேண்டுமென்றெண்ணார்கள் ஆசை வலையிற் சுழலுவார்........'' என்று குமரேசர் சதகத்தில் ஒரு செய்யுள் இருக்கிறது. இந்த உடம்பானது ஒன்பது துவாரங்களைக் கொண்ட ஒரு குடிசை; புழுக்களும், அழுக்கும் நிறைந்த பஞ்சபூதம். "....... புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானமிலா அழுக்குமனத் தடியேன் "......... என்று மணிவாசகப் பெருமான் இரங்குகிறார். உயிரானது பிரிந்து விட்டால், இந்த உடலுக்குச் சொந்தமான, மாடும் மனையும் - வீடும் திரவியமும் - மனைவி மக்களும் - உற்றார் பெற்றா ரும் எதுவரையிலும் சொந்தமாவார்?

அது மட்டுமா! இந்த உயிரானது, இது போல் எத்தனை தடவை வேறு வேறு உடம்புகளைப் பெற்றிருக்குமோ அறியோம். எத்தனையோ உடல்களைப் பெற்ற இந்த உயிருக்குக் கடைசியில், ஒன்று கூடச் சொந்தமாயில்லாதது பற்றி ஆச்சரியமாயிருக்கிறது. மலபந்தத்தில் மூழ்கியிருக்கும் வரை, ஆன்மாவுக்குப் பதிஞானம் புலப்படமாட்டாது.

''பதிபசு பாசம் மூன்றும் பகுத்தறிந்தவரே முத்தர்
பதி ஒன்றைப் பற்றா தாகும் பசுவொன்றைப் பற்றி நிற்கும்
பதிமுகம் தெரிய வண்ணம் மறைப்பது பாச மாகும்
பதிகுரு வான போது நீங்குமப் பாசம் தானே,

என்னும் செய்யுள் இதனை விளங்க வைக்கிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் இந்திரியங்கள் வாயிலாகபாசம் இப்பிரபஞ்சக் காட்சி உட்புகுந்து, அறிவைப் பேதகம் செய்து நம்மை இச்சாகரத்தில் விழுந்து ஆழும்படி செய்யும் நமக்குத் துன்பமாயுள்ள இப்பிரபஞ்சத்தில் மனம் செலுத்தாமல், மனத்தை ஒருவழிப்படுத்தி, பரமசிவனுடைய பாதார விந்தத்தை அடைந்து நித்தியப் பேரின்பப் பெருவாழ்வாகிய முத்தியை அடைய முயல்வோமாக!

சித்தாந்தம் – 1964 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment