Sunday, May 10, 2020



வேதாந்த சித்தாந்த சமரசம்.

"வேதாந்தஞ் சித்தாந்தம் வேறென்னார் கண்களிக்கும்
      நாதாந்த மோன நலமே பராபரமே.''
   
1. ஒரே சிவசின்னங்களைத் தரித்துக் கொண்டு ஒரேவித ஆலயத்தில் வழிபடும் நம்மவர்கள் இருவேறு வகுப்பினராய்க் காணப்படுகிறார்கள். அவ்வகுப்பாவன, வேதாந்தவகுப்பு சித்தாந்தவகுப்பு என்பனவாம். இவருள், வேதாந்த வகுப்பினரிற் சிலர், சித்தாந்தம் விவகாரிகதசைக்கே யுரியதென்றுங்கூறி, அதனைத்தாழ்த்துகிறார்கள். சித்தாந்தவகுப்பினரிற் சிலர், ஏகான் மவாத, மாயாவாதங்களே, வேதாந்தமெனப் படுமென்றும், அது. கேவலம் பூர்வபட்ச மென்றுங்கூறி, யதனைத்தாழ்த்துகிறார்கள். இவ்வாறு ஒருவரையொருவர் தாழ்த்திக்கூறுதலோ டொழி யாது, இவர்கள் வாதம், ஒரே காலத்தில் இவர்களுக்குட் பெரும்போரை விளைப்பதாயும் நேர்கிறது. இவ்விருதிறத்தாரும், - உண்மை வேதாந்த மின்னது, உண்மைச் சித்தாந்த மின்னது என்பதை யுணராமையே யிவர்கள் வாதத்திற்குக் காரணமாகின்றது. போலி வேதாந்தத்தை உண்மை வேதாந்தமென்றும், அது சித்தாந்தத்தினோடு முரணுமென்பம் எண்ணுதலினாலேயும், அப்படியே போலிச் சித்தாந்தத்தை உண்மைச் சித்தாந்தமென்றும், அது வேதாந்தத்தினோடு முரணுமென்றும், எண்ணுதலினாலேயும் இவ்வாதம் நிகழ்கின்றது. இவ்விதம் வாதிக்கிறவர்கள் உண்மைச் சித்தாந்தத்தையும் தெரிந்து கொள்வரேல், இவ்வாதத்திற் கிடமில்லை. என்பவே உண்மை வேதாந்தம் எது, உண்மைச்சித்தாந்தம் எது எனத் தேரிய வேண்டுவது மிக அவசியமே. இவற்றுள் உண்மை வேதாந்தத் தினை முதற்கண் ஆராய்ச்சி செய்வாம்.

      2. உபநிடதங்கள் வேதாந்த மென்பதை எல்லா வகுப்பினரும் ஒப்புவார்கள். ஸ்மார்த்தர், சைவர், வைணவர், மாத்வர் முதலிய எல்லாரும் ஒப்புவார். இவ்வுபநிடதங்களை வியாசபகவான் சூத்திர ரூபமாகச் சுருக்கியெழுதினார். இது பிரம மீமாஞ்சை சூத்திரமெனவும், வேதாந்த சூத்திரமெனவும் படும். இச்சூத்திரத்திற்கு நீலகண்டர் சங்கரர், ராமானுஜர் முதலியோர் பாஷ்யங்களியற்றி யுள்ளார்கள். இவ்வொவ்வொரு பாஷ்யமும் வேதாந்த மென்னும் பெயரால் வழங்கப்படும். ஆனால் ஸ்ரீ சங்கர பாஷ்யத்துக் குரியார், அஃதொன்றே உண்மை வேதாந்தமென்கிறார். மற்றைப் பாஷ்யங்களுக்குரியாரும் தத்தம் பாஷ்யத்தையப்படியே கூறுகிறார்கள். அதனோடு நில்லாது, இவ்வொவ்வொரு பாஷ்யத்துக்குரியாரும் தத்தம் பாஷ்யத்தோடு சித்தாந்தம் முரணுவது பற்றி வேதாந்தசித்தாந்தங்கள் ஒன்றோடொன்று முரணுவனவாக எண்ணிவாதிக்கிறார்கள். இவ்வெல்லாப் பாஷ்யங்களுமே உண்மை வேதாந்த மல்லா திருக்கலாம். இவற்றிற்கெல்லா மூலமாகிய வியாச சூத்திரமுமே உண்மை வேதாந்த மல்லா திருக்கலாம். உபநிடதங்கட்கு, இச்சூத்திரத்தைப்போல சிவசூத்திரமொன்றும் அதற்கு ஸ்ரீசுப்பிரமணியர் வார்த்திகமுமிருப்பதாகத் தெரிகிறோம். இவ்வியாச சூத்திர பாஷ்யங்களியாவுமே, பசுக்களால் தத்தமறிவிற்பட்டவாறு இயற்றப்பட்டனவே யன்றிப் பிறிதல்ல. இவற்றை நோக்க பரம்பொருளினாலருளிச் செய்யப்பட்ட உபநிடதங்களே உண்மை வேதாந்தங்களா மென்பதில் யாதோர் தடையுமில்லை. அவற்றை யுண்மை வேதாந்த மென்பதில் எல்லார் சம்மதமுண்டு. அவற்றோடு சித்தாந்த முரணுமானால் மாத்திரம் வேதாந்த சித்தாந்தங்கள் பேதமெனலாமன்றிப் பிறிதில்லை.

      3. இனி உண்மைச் சித்தாந்த மின்னதென்பதை யாராய்வாம். சித்தாந்தமென்றால் முடிந்தமுடிபு என்பது பொருள். வேதாந்தங்களில் அனேக பூர்வபக்ஷங்களிருக்கின்றன. அவைகள், தூலாருந்ததி முறையிற் கூறப்பட்டன. எளிதிற்பார்க்க வராத அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கவிரும்பிய ஒருவனுக்கு, முதற்கண் அந்நட்சத்திரத்தின் பக்கலுள்ள ஒரு தூல நட்சத்திரத்தை யதுவே யெனக்காட்டி அதையவன் தெரிந்த பின்னர், உண்மை அருந்ததி இத்தூல நட்சத்திரமல்லவென்று கூறி இதனினு மிவ்வுண்மை யருந்ததிக்கு அதிகச் சமீபமாயுள்ள வேறுமோர் தூல நட்சத்திரத்தை உண்மை யருந்ததியெனக்காட்டி, அதனையுமல்ல வென்று கழித்து அப்படியே உண்மை யருந்ததியைக்காட்டுமுறைபோல, உபநிடதங்களும், உண்மைப்பரம் பொருளை விளக்குகின்றனவாம். அதாவது, அப்பரம்பொருளினருட்குணங்களிலோர் ஏகதேசம் எளிதில் விளங்கப்பெற்ற பொருள் ஒன்றைப் பரம்பொருளென வேதாந்தங்கள் கூறும். உதாரணமாக பிருதிவியைக் கடவுளென ஓதும். அதனியல்பை யுணர்ந்தானுக்கு, உண்மைப் பரம்பொருள் அதுவல்லவென்று அதனைப் பூர்வபக்ஷமாக்கி, முன்னைய பொருளினும், பரம்பொருளின் குணாதி சயங்கள் அதிகம் விளங்கப்பெற்ற வேறு மோர் பொருளைப் பரம்பொருளெனக் கூறும். உதாரணமாக, அக்கினியே கடவுளென ஓதும். பின்னர் இதனையும் பூர்வபட்சமாக்கி வேறுமோர் பொருளைப் பரம் பொருளெனக் கூறும். இப்படியே ஒன்றை விட்டு ஒன்றாய் வருணன், இந்திரன், பிரமன், விண்டு முதலியோர்களி லொவ்வொருவகைப் பரம்பொருளென ஓதி அவற்றை யெல்லாம் பூர்வபக்ஷமாக்கி, முடிவிற் சிவபரம் பொருளே, உண்மைப் பரம்பொருளென முடித்துக் கூறும். இதுவரை பரம்பொருளினியல்புளாகக் கூறப்பட்டன வெல்லாம் அதற்கும் வேறு வேறு பொருள் கட்கும் பொதுவாயுள்ள வியல்புகளாதலால் அவையாவும் பரம் பொருளின் பொது வியல்புகளாம். இவ்வியல்புகளைக் கூறும் நூலும் பொது நூலெனப்படும். இதுவே வேத வேதாந்த நூல். இனிக் கூறப்படும் இயல்புகள் யாவும் சிவபரம்பொருட்கே உரித்தாமாதலால், சிறப்பியல் பெனப்படும். இவ்வியல்புகளைக் கூறும் நூல், சிறப்பு நூலெனப்படும். இந்நூலே சிவாகம நூலாம். பரம்பொருளின் பொது சிறப்பியல்புகள் ஒரே நூலிற் கூறப்படில் மயக்கத்திற் கேதுவா மென்பது பற்றி இவ்வியல்புகள் வேறு நூலாற் கூறப்பட்டுள்ளது. இந்நூலே வேதாந்த நூலில், பாவித்தை யென்று படிக்கப்பட்டுள்ளநூல். வேதத்திலுள்ள முடிந்த முடிவுப்பொருளாகிய சிவபரம் பொருளினியல்புகளை யுணர்த்துவதால், இந்நூல் சித்தாந்த நூலெனப்பட்டது. இச்சிவாகம நூலிற்குரியார் யாரும் இந்நூல் சித்தாந்த மென்பதை யொப்புவர். இந்நூ லாலுணர்த்தப் படுமியல்புகளையும் பலரும் தத்தந் தவவலிக்கேற்பப் பலவாறுணர்ந்தனர். அவ்வாறுணர்ந்தார் ஆறு வகையினுளடங்குவார். இவரே பாடாணவாதசைவர், சிவாத்துவித சைவர் முதலிய அறுவகைச் சைவர். இவருள் ஒவ்வொருவரும், தாந்தா முணர்ந்துள்ள படிக்கான சைவக் கொள்கைக்கு, வேதாந்தம் முரணுவதாக வெண்ணி, வேதாந்த சித்தாந்தங்கள் முரணுமெனக் கூறுவர். இவ்வறுவகைச் சைவர்களுமே சிவாகமங்களையுள்ளபடியுண ராதாரா யிருக்கலாம். எனவே யிவருள் எவர் கொள்கையினோடும் வேதாந்த முரணுவது பற்றி வேதாந்த சித்தாந்தங்கள் பேதமென்பது தவறாம். இவரெல்லாராலும் ஏனையோராலும் சித்தாந்தமென ஒப்புக்கொள்ளப்படும் சிவாகமங்களோடு, முன்னர் 'உண்மை வேதாந்தமென விளக்கப்பட்ட உபநிடதங்கள் முரணினாலன்றி வேதாந்த சித்தாந்தங்கள் பேதமல்ல அபேதமென்றே கொள்ளல் வேண்டும்.

      4. இனி, மேற்கூறிய உபநிடதங்களும் சிவாகமங்களும் முரணு வனவா வென்பதை ஒரு சிறிது ஆராய்ச்சி செய்வாம். ஜகத்துமித்தை யென்பது வேதவாக்கியம். இவ்வாக்கியத்திற்கு ஜகத்து கேவலத்தோற்றம்; உண்மையில் இல்லாத பொருள் எனப் போலி வேதாந்திகள் பொருள் கொண்டு, 'ஜகத்து உண்மைப் பொருள் என்னும் சிவாகமவாக்கியமும் இவ்வேத வாக்கியமும் முரணுமென்பர். ஆனால் உண்மை வேதாந்திகளும் உண்மைச் சித்தாந்திகளும், மேற்கூறிய வேதவாக்கியத்திற்கு ஜகத்து அநித்தியம், நீண்டகால மிருப்பது போலத் தோன்றி, கணப்பொழுதில் அழிந்து போந் தகைமைத்து என்று பொருள் கொண்டு, அவ்வாறாயினும் அழிந்து போகும் வரை உள்ள பொருளாதலும் தூலவடிவு சூக்கும வடிவாய் மாறுதலே அழிவாதலாலும், அழிந்தபின்னும் அப்பொருள் சூக்குமத்திலுள்ள பொருளே யாதலாலும், சூன்னியமாதல் என்னும் அர்த்தத்தில், எப்பொருட்கும் அழிவு கிடையாதாதலாலும், ஜகத்தைச் சிவாகமத்தில், உள்ள பொருள் என்றதும் இவ்வேதவாக்கியத்திற்குப் பொருத்தமே யென யுணர்வர். “எல்லாம் நின்னிடைத்தோன்றி நின்னிடை யொடுங்கும்'' எனக்கூறியது போல வேதங்கள் ஜகத்தை முதலவனிடத்துத் தோன்றுவதாகக் கூறும்... சிவாகமங்கள் ஜகத்துக்கு மாயையிலுற்பத்திகூறும். இவ்விரண்டும் ஒன்றோடொன்று முரணுவதாக போலி வேதாந்திகளும் போலிச் சித்தாந்திகளும் கூறுவர். தாமரையையுணர்த்தும்'பங்கஜம்'' என்னுஞ் சொ ற்கு சேற்றிலுண்டாகியது என்பது பொருள். பங்கஜம் கிழங்கிலுண்டாவதன்றி சேற்றிலுண்டாவதில்லை. சேற்றை யாதாரமாகப்பெற்ற கிழங்கிலுண்டாகும் தாமரை யைச் சேற்றி லுண்டாவதாகக் கூறுவது போல் மாயையிலுண்டாகிய ஜகத்தை அதனை யாதாரமாகப் பெற்ற முதல்வனிடத்துத் தோன்றியதாக வேதங்களிற் சொல்லப்பட்டிருப்பதால், ஜகத்துற்பத்தி விஷயமாய் வேத சிவாகமவாக்கியங்கள் முரணு தலில்லையென உண்மை வேதாந்திகளும் உண்மைச் சித்தாந்திகளும் உணர்வர். ஆன்மா ஏகம் என்ற வேதவாக்கியத்திற்குப் பரமான்மா ஜீவான்மாக்கள் எல்லா மொன்றேயென போலி வேதாந்திகள் பொருள் கொண்டு, பசுப் பலகோடி யென்னும் சிவாகமவாக்கியத்தோடு முரணுவதாகக் காணுவர். ஆனால் உண்மை வேதாந்திகளும் உண்மைச் சித்தாந்திகளும் மேற்கூறிய வேதவாக்கியத்திலுள்ள ஆன்மசப்தம் பரமான்மாவினையே குறிக்கும் எனவுணர்ந்து அவ்வாக்கியம் சிவா காவாக்கியத்தினோடு முரணு தலில்லை யென்றுந் தெரிவர். இன்னும் பல திருட்டாந்தங்களால், வேத சிவாகமங்கள் ஒன்றோ டொன்று முாணுதலில்லையென விளக்கலாம் என்பவே உபநிடத சிவாகமங்களாகிய வேதாந்த சித்தாந்தங்கள் ஒன்றினோடொன்று அபேதமென்பது பெற்றது.

5. மேற்குறித்த இரண்டு நூல்களும் ஒன்றோடொன்று மூரணுதலில்லை யென்பதே சைவசித்தாந்திகளின் துணிபு. அதுபற்றியே அவர்கள் சித்தாந்தத்தை வைதீகசைவம் என்றும், வேதாகமோக்தசைவசித்தாந்த மென்றும் கூறுகிறார்கள்..

      வேதமோடாகம மெய்யாமிறைவனூல்
      ஓதுவும் பொதுவுஞ் சிறப்பு மென்றுன்னுக
      நாதனுரையிவை நாடிலிரண்டந்தம் 
      பேதமதென்னிற்பெரியோர்க் கபேதமே.''
   
என்னுஞ் சைவத் திருமுறையிலொன்றாகிய திருமந்திரத்தின் கருத்துமிதுவே. அப்படியே சைவசித்தாந்த சாத்திரத்திலொன்றாகிய சித்தியாரிலிலும்,

"வேதநூல் சைவ நூலென் றிரண்டே நூல்கள்
வேறுரைக்கு நூலவற்றின் விரிந்த நூல்கள்
ஆதி நூ லனாதிபம லன்றருநூ லிரண்டு
            மாரண நூல் பொதுச்சைவ மருஞ்சிறப்பு நூலாம்
      நீதியினா லுலகர்க்குஞ் சத்தி பொ தர்க்கும்
            நிகழ்த்தியது நீண்மறைபி னொழிபொருள்வே தாந்தத்
      தீதில்பொருள் கொண்டுரைக்கு நூல்சைவம் பிற நூல்
            திகழ்பூர்வஞ் சிவாகமங்களே சித்தாந்த மாகும்.''
   
என விளக்கப்பட்டிருக்கின்றது. என்பவே வேதாந்த நூல் சித்தாந்த நூலிரண்டும், பரம்பொருளால் அருளிச் செய்யப்பட்ட தென்றும், இரண்டும் அபேதமென்றும், அவற்றுள் ஒன்று பொது, மற்றொன்று சிறப்பென்றும் பெற்றது. ஒரு நூலின் பொதுவியல் அதன் சிறப்பியலோடு முரணாதவாறுபோல, பொது நூலாகிய வேதாந்தமும் சிறப்பு நூலோடு முரணாதாகும். என்றாலும் வேதாந்த நூலில், பல பூர்வபட்சங்களும் சித்தாந்தமொன்று முளவாக, அவற்றிற் சித்தாந்த மொன்றைத் தெளிந்தும் பிரித்தெடுத்துக்கொண்டு, சித்தாந்த நூல்களாகிய சிவாகமங்கள் விளக்குவதால், சித்தாந்தம் வேதாந்தத்தின் தெளிவெனப்பட்டது. இக்கருத்தினையே சைவசந்தான குரவர்கள் ''வேதாந்தத் தெளிவாஞ் சைவசித்தாந்தம்” என்றும், “வேதசிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத்திறத்தடைவர்'' என்றும் விளக்கியிருக்கிறார்கள். இதுபற்றி யிவ்விரண்டும் பேதமெனல் கூடாதாகும். அன்றியும் மேற்குறித்த திருவிருத்தத்தில் வேதம் உலகர்க்கென்றும், சிவாகமங்கள் சத்திநிபாதர்க்கென்றுங் கூறியிருத்தலால், வேதம் சத்திநிபாதர்களால் தள்ளத்தக்கதென்பது மின்றாம். உலகர் என்பது. சத்திநிபாதர்களையும் அடக்கிநிற்கும். என்பவே சிவாகமங்களை யுணர்ந்து அதன்வழி நிற்கும் பெரியோர்கள், வேதாந்த சித்தாந்த மிரண்டும் அபேதமென வுணர்வார்கள். இக்கருத்தினையே தாயு மானாரும் வேதாந்தஞ் சித்தாந்தம் வேறென்னார் கண்களிக்கும் நாதாந்தமோன நலமே பராபரமே''
என்றருளினார்கள்.

6. இனி “வேதாந்தசித்தாந்த சமரசம்'' என்றதனை யாராய்வாம். இச்சொற்றொடரை தாயுமானார் தமது பாசுரங்களின் பல விடங்களிற் பிரயோகித்திருக்கிறார்கள். இதனுண்மைக் கருத்தை யறியாது, பலரும் பலவாறு விளக்க முயலுகிறார்கள். ஈண்டு கவனிக்கவேண்டியது 'சமரசம்' என்னுஞ்சொல். இச்சமரசம் அனுபவத்திலறியற்பாலது. அதுவும் பெரியோர்களாலேயே அறியற்பாலது. அப்பெரியோர்களையே ''வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலை பெற்ற வித்தகச்சித்தர்'' எனத் தாயுமானார் கூறியுள்ளார் கள். இச்சமரச அனுபவம் வேதாந்தத்தின் சாரம்,  சைவசித்தாந்தம் என்பதனோடு மிகப் பொருத்தமே. எவ்வாறெனில் கூறுதும். வேதாந்தத்தைக் சனிக்கும், சித்தாந்தத்தை யதன் சாரத்திற்கும் உவமையாகக் குமரகுருபர சுவாமிகள் ''ஒரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த, ஆராவின்ப வருங்கனிபிழிந்த, சாரங்கொண்ட சைவசித்தாந்தத் தேனமுதருந்தினர் சிலரே'' எனப் பாசுரமருளி யிருக்கிறார்கள். இவ்வுவமையே, ஈண்டு கவனிக்கற்பாலது. ஒரு சிறு குழந்தையிடம் ஒரு கனியைக் கொடுத்தால், அக்குழந்தை அதன் தோல், கொட்டை, சக்கை, சாரம் எல்லாவற்றையுஞ் சேர்த்துத் தின்னும். அக்குழந்தையின் நாவுக்கு, அத்தோலின் ரசம், கொட்டையின் ரசம், சக்கையின் ரசம், சாரத்தின் ரசம், எல்லாரசங்களுந் தட்டுவதாகும். ஆனால் பெரியோர்களோ, அத்தோலை நீக்கி, அக்கொட்டையைக் கழித்து, சக்கையை யுமிழ்ந்துச் சாரமொன்றனை யுட்கொள்வர். அவர் நாவுக்குச் சாரத்தினினிப் பொன்றே தட்டுவதாகும். அவர்க்குக் கனியின் ரசமும், அதனினின்றும் பிரித்தெடுத்துச் சர்ப்பத்தாக்கப்பட்டுள்ள சாரத்தின் ரசமும் ஒன்றே. அவ்விரண்டினையும் சமரசமாகவே காண்பர். அது போலவே பெரியோர்கள், வேதாந்தத்தையறிந்து அதன்பொருளையனுபவிக்கும் போது, அதிலுள்ள பல பூர்வபட்சங்களையுங்களைந்து, அதன் கண்ணுள்ள சித்தாந்தமொன்றனையே யனுபவிப்பார். அதிலுள்ள பூர்வபட்சங்க ளொன்றும் அவரறிவிற் படியாது. அவரறிவிற்கு, வேதாந்தத்தினின்றும் சித்தாந்த அமிர்தமே படிவதாகும், அவரே வேதாந்த சித்தாந்த மிரண்டினையும் சமரசமாகக் காண்பார்கள். இவரையே தாயுமானார் “வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலை பெற்ற வித்தகச்சித்தர்'' என ஓதினார்கள். இவரது அனுபவமே வேதாந்த சித்தாந்த சமரச அனுப்வம். இதுவே இச் சமரசத்தின் உண்மைப்பொருள்.

7. வேதாந்த சித்தாந்தங்களை யிவ்வாறு சமாசமாகக் காணுதல் எவ்வாறு கூடும் என்பது நாம் அடுத்து ஆராயக்கிடப்பது. இவ்வாராய்ச்சி என்போலியர்களாற் செய்யக் கிடப்பதன்றாயினும் இபன்றவளவில் ஆராய்வாம். வேதாந்தத்தில் பரஜீவர்கள் வேறல்லர் என்னும் வாக்கியம் காணப்படும். சிவாகமங்களிலோ பரஜீவர்கள் வெவ்வேறு பொருள்களென்றும், ஆனால் அவைகள் பிரிப்பின்றிக் கலந்து கிடக்கின்றனவென்றும், பரம்பொருளறிவிக்கவே ஜீவப்பொருளறிகிறதென்றும், என்றாலுமறிவித்தாலறிதற்கும், அறிவு வேண்டுமாதலால், ஜீவனுக்குந் தனியறிவுண்டேயென்றும், இவ்விரண்டறிவுகளும் ஒன்றிலொன்று பிரிப்பின்றிக் கிடப்பதால், இவற்றின்றன்மைகளைத் தனித்துக் காணவாராதென்றும், பரஜீவர்களினறி விச்சைசெயல்களு மப்படியே யென்றும் எனவே ஜீவப்பொருளின் றன்மைகளியாவும் பரம்பொருளின்றன்மையில் அடங்கிக்கிடப்பனவாமென்றும், அவைகளின்றன்மைகளுக்குப் பரம்பொருளின்றன்மையே தாரகமாமென்றும், அத்தாரகமின்றேல் ஜீவர்களின் றன்மைகளே யின்றாமென்றும் கூறப்பட்டுள்ளன. இவற்றைச் சமரசமாகக் கொள்ளும் பெரியோர்கள் பரஜீவர்கள் கேவலம் வேறல்லர். ஆனால் எந்தக் காலத்திலும் பரம் பொருளின் றன்மையையின்றி ஜீவப்பொருளின்றன்மையின்ராதலால், அவ்வாறிருக்குமளவில், பரவர்கள் வேறல்லர் என்றும் உணர்வர். இவர் பரஜீவர்கள் ஒரேபொருள் என்னும் பூர்வ பட்சத்தினைத் தன்னனுபவத்திற் காணமாட்டார். இவர்க்குச்சிவாகமங்களும் வேதாந்தங்களும் அனுபவத்தில் ஒரேயுண்மையையுணர்த்துவதாகும். இவ்வாதனுபவித்தலே வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம். இக்கருத்தினையே தாயுமானார்,

      "சந்ததமும் எனது செயல் நினது செயல்''
"யானெனுந் தன்மை நின்னையின்றி யில்லாத தன்மையால்''
வேறலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம்''

என்றருளிச் செய்துள்ளார்கள்.

திருச்சிற்றம்பலம்.
                      V. P. காந்திமதி நாதப்பிள்ளை.

சித்தாந்தம் – 1913 ௵ - பிப்ரவரி ௴


No comments:

Post a Comment