Saturday, May 9, 2020



பக்தி
[ஜி. சுந்தரமய்யர்]

"பத்தித் துறையிழிந் தானந்தவாரி படிவதினால்
புத்தித் தரங்கந் தெளிவ தென்னோ"                – கந்தரலங்காரம்

''பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே''                  - திருப்புகழ்

திருநீறும், செபமாலையும், உபதேச மந்திரமும், பேசா அனுபூதியும், சுகப்பேறும் முருகனால் பெற்ற பக்தர் அருண கிரியார் இம்மாதிரி கதறியிருக்கிறார். நமது தமிழ் நாட்டில் பல அடியார்கள் கடவுள் சந்நிதானத்தில் தங்கள் நெஞசு உருகி இதுபோலவே பாடியிருக்கிறார்கள். இப்பாடல்களை நாம் கேட்கும்போது நம்மை அறியாமலே இன்ப வெள்ளத்தில் மூழ்கி நம்மையும் நமக்குள்ள வேறு வேலைகளையும் மறந்து விடுகிறோம். ஆனால் வாசனா தோஷத்தாலோ, கரும வினையின் பயனாலோ, அல்லது படிப்பின் மிகுந்த முதிர்ச்சியாலோ, "பக்தியாவது, முக்தியாவது' என்ற எண்ணங்களும் நம்மைப் பிடித்துக் கொள்ளுகின்றன.

உள்ளவைகளை உண்மையாய்ச் சொல்லும் பேராற்றல் வாய்ந்தவரும் அத்தி முகமாகிய ஆனந்த ரூபம்கொண்ட கணபதிக் கடவுள் வரப் பிரசாதம் பெற்ற ஒளவை மூதாட்டியார் "ஆலயந் தொழுவது சாலவும் நன்று'' என்று எழுதி வைத்துப் போயிருக்கிறார். ஆலயம் போகும் வழக்கம் நின்று போகவில்லை. உள்ளத்திலுள்ள கடவுளை நினைத்துவிட்டால் போதாதோ; கோயில் பூஜை பார்த்து ஆவதென்? என்ற வினாக்களும் கிளம்புகின்றன. நம்பிக்கையற்றதாகவுமில்லை; நம்பிக்கை நிலையாய் நின்றதாகவுமில்லை. கால விநோதம் இப்படியிருக்கிறது! இதுவும் அவன் திருவிளையாடல் தானோ!

தேவாரம் முதலியன அடங்கிய திருமுறைகளை அறியாமலொருவன் பொய்யென்று சொல்லிவிட்டால் கோபம் வந்துவிடுகிறது. நமக்குப் பூரண நம்பிக்கை ஏற்பட்டு விட்டதோ? நாம் நம்மைக் கோபித்துக்கொள்ள வேண் டாமோ? தேவாரம் படிப்பது என்றோ?

நமது நாட்டைக் கரும பூமியென்றும், தரும பூமியென்றும், பக்தர்கள் மலிந்த நாடென்றும், சித்தர்கள் உலாவும் நாடென்றும், முத்தர்கள் விரும்பும் நாடென்றும் பலவிதமாய் நமது நாட்டைக் கவிகள் சிறப்பித்திருக்கிறார்கள்.

வள்ளுவனார் சிறந்த ஞானியாவார். குறள் என்னும் ஒப்பற்ற ஒரே நூலை அருளிச்செய்திருக்கிறார். அதை வேதம் என்று கொண்டாடுகிறோம். அதில் இல்லாதவைகளுமுண்டோ? அவருமா புலவரோடும் பித்தர்களோடும் சேர்ந்துகொண்டு உண்மையல்லாததைச் சொல்லி யிருப்பார். அவர் நமக்குப் புகட்டும் நல்லறிவு யாதெனின்,

கோளில் பொறியில் குணமிலவே யென் குணத்தான்
தாளை வணங்காத் தலை"

நம்மில் சிலர் பெருத்த கல்விமான்களாயிருக்கிறார்கள்.. அவர்கள் ஆராய்ச்சியில் வல்லவர்களாம். ''கடவுள் வாழ்த்தும் இன்னும் சில அதிகாரங்களும் வள்ளுவனா பாடவில்லை அல்லது பாடியிருக்க மாட்டார் என்ற தங்கள் பொன் போன்ற மொழிகளை வெளியிட்டிருக்கிறார்கள். நல்ல வேளை! அவ்வதிகாரங்களை நீக்கிவிட்டுப் புத்தகத்தை வெளியிட ஒருவருக்கும் துணிவு ஏற்படவில்லை. கடவுள் வாழ்த்துதான் மிகவும் பழைய நூல்களுக்கும் ஆரம்பமா.ருப்பதைக் காண்கிறோம். வள்ளுவனார், புது வழக்கம் ஏறபடுத்தக் காரணமென்னவோ?

கடவுள் தானுண்டோ என்கிற விஷயத்திலும் நமக்குச் சந்தேகங்களை உண்டுபண்ணக்கூடிய நூல்களும் மிகவும் பழைய கௌரவமாய் நமது நாட்டில் உலாவுகின்றன. என்ன செய்யலாம்!

பக்தி செய்வதைத் தவிர நமது முக்கியமான கடமை வேறுமுளதோ என்னும் விஷயத்தைப் பற்றி ஒரு சிறு கட்டுரை எழுத முயற்சிக்கிறேன். நல்லதை உட்கொண்டு தவறுகளை ஒதுக்க வேண்டும்.

பக்தி என்பது ஒரு குணவிசேஷம்; ஒருவிதமான பற்று; இன்பம் விளைவிக்கும் ஒருவிதமான ப்ரேமை; பரமப்ரேமை என்னலாம். ஒரு ஜீவன் கடவுளிடத்தில் வைக்கும் இச்சை, பற்று, பிரியம், அவா, ஆசை, காதல் அல்லது அன்பு இவைகளுக்குத்தான் பக்தியெனப் பெயரிட்டிருக்கிறார்கள். தேவுடாலோ அல்லது கடவுள் ஆசையோ முதிர முதிர மனம் பக்குவமடைந்து ஓர் உன்னதமான நிலையிலோ இன்ப வெள்ளத்திலோ மூழ்கி நின்று விடுகிறது. கடவுள் நினைவு விடுவதில்லை; மற்ற எண்ணங்கள் தோன்றுவதில்லை. யாது நேரினும் கவலையாவது பயமாவது பாதிப்பதில்லை. பரிபூரணானந்தக் கடவுளோடு மனம் ஒன்றாய் விடுகிறது.

மனத்தின் நிலைக்குத் தக்கவாறோ அல்லது அன்பன் பக்குவத்திற்குத் தக்கவாறோ படிப்படியாய் ஏற்படும் இன்பப்பெருக்கான நிலைகளுக்கு ஒவ்வொரு பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. பக்திவழியில் செல்வதற்கு விதிகளெல்லாம் விஸ்தாரமாய் நூல்களிற் காண்கிறோம். பலவிதமான பாகுபாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பக்தனும் தனக்கேற்பட்ட உணர்ச்சிகளையும், தான் அடைந்த பயன்களையும், தன்மனம் பக்குவமடைந்த விதத்தையும், தான் அடைந்த ஆனந்த நிலையையும் தெளிவாய் யாவரும் அறியும் வண்ணம் பறைசாற்றியிருக்கிறான். பக்தர்களும் யாவரும் பேரின்ப நிலையை அடைந்ததாகவும் சொல்லப்பட் டிருக்கிறது. இவை யாவும் நேயர்கள் அறிவார்கள். இவ்வளவுமா வெறும் கற்பனையா யிருக்கக்கூடும்.

என்பிலாத ஜீவன்கள் தவிர பாக்கி எல்லா உயிர் களுக்கும் அன்பு என்கிற குணமுண்டென்பது தெளிவு. மனிதனோ உயிர்த்தொகுதியில் உயர்ந்தவன். அவனுக்கன்பில்லை யென்று சொல்வது தவறாகும். அன்பு உள்ளத்தின் கண் உண்டாகும் நிகழ்ச்சி. அதைக் கண்கூடாய்ப் பார்க்க முடியாது. அனுமானித்துக் குறிகளால் அறிய வேண்டும். வள்ளுவனார் குறளில்
"ஆர்வலர் அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ்; புன்கணீர் பூசல் தரும்"
என்றார். இரக்க முள்ளவருக்கு அன்புண்டு. அன்புள்ளவர்கள் நெஞ்சு கசிந்து உருகும். நெஞ்சு நெகிழும் தன்மையுளோர்கள் கண்ணீர் சொட்டுவார்கள். அறையின் கதவு தாழ்ப்பாள் பளீரெனத்தானே உடைபட்டுத் திறக்கப்பட்டது போல், விழிபுனல்கள் குதிபாயவும், மயிர்ப்புறம் பொடித்துத் தேக முழுதும் புளகிதமெழவும், மொழிகள் குழறவும், உடம்பு கம்பலை கொள்ளுதலுமாகிய குறிகளைக்கொண்டுதான் அன்பின் வேகத்தைக் காணமுடியும்.

துன்பம் கண்டுழியும் இன்பம் கண்டுழியும் இக்குறிகள் மனிதனிடத்தில் காண்பது இயல்பாகும்.

இவ்வுலகத்தில் இடைவிடாது தோன்றலும் மறைதலும் ஒழியவேண்டும் என்று தெளிந்த பெரியோர்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டார்கள். மாணிக்க வாசகர் தன்னெஞ்சைக் கடிந்து கொள்ளுகிறார்.

“ஆடுகின்றிலை; கூத்துடையான் கழற்கன் பிலை; என்புருகிப்
பாடுகின் றிலை; பதைப்பதுஞ்செய்கிலை; பனிகிலை; பாதமலர்
சூடுகின்றிலை; சூட்டுகின்றதுமிலை; தணையிலி பிணநெஞ்சே!
தேடுகின்றிலை; தெருவுதோறலரிலை; செய்வதொன் றறியேனே

அருணகிரியாரும் தனக்குப் புத்தி புகட்டிக் கொள்வது போலும் உலகறியும் பொருட்டும், சுவாமிமலைத் தேசிகனை அருள் வேண்டி அழைக்கிறார்.
எந்தத் திசையினு மலையினு முவரியி
னெந்தப் படியினு முகடினு முளபல
எந்தச் சடலமு முயிரிசை பிறவியி                னுழலாதே
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
னம்பொற் கழலிணை களில் மரு மலர்கொடு
என்சித் தமுமன முருகிநல் சுருதியின்             முறையோடே
சந்தித் தரஹா சிவசிவ சரணெனக்
கும்பிட் டிணையடி யவையென் றலைமிசை
தங்கப் புளகித மெழ இரு விழி புனல்              குதிபாயச்
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
னந்தத் திருநட மிகுசர ணழகுற
சந்தச் சபைதனி லென துள முருகவும்             வருவாயே''

இந்த இரண்டு மேற்கோள்களே போதுமானவைகள். அடியார்கள் தன்மையையும், அவர்கள் உயர்ந்த நோக்கங்களையும், அவர்கள் வேண்டும் பேற்றையும் தெளிவாய்க் காட்டும். "போற்றாதே யாற்ற நாள் போக்கினேனே என்றும், 'பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்றும் முடியும் திருமுறையிலடங்கிய சிவதுதிகள் மூர்க்கனைக் கூட நல்வழியில் திருப்பிக் கடவுள் பக்திசெய்யத் தூண்டும்.

பக்தனுக்குப் பக்தி தாய் போன்றவள். அருட் சத்தியின் வடிவே எனினும் மிகையாகாது. பக்தனாகிய குழந்தைக்குப் பக்தியாகிய தாய் செய்வது யாதெனின், ஆனந்தக் கண்ணீரால் புளகாங்கிதமாகக் குளிப்பாட்டுகிறாள்; நிர்மலம் என்னும் ஆடையை உடுத்துகிறாள்; வாக்கென்னும் சங்கத்தால் நாதன் சரித்திரமாகிய பாலைப் பருகச் செய்கிறாள்; ருத்ராக்ஷ விபூதியால் ரக்ஷை செய்கிறாள். கடவுள் நினைவு அல்லது தியானமாகிய தொட்டிலிலிட்டுக் காப்பாற்றுகிறாள். இக்காலத்திய சிறந்த நாகரிகம் - பாழ் நெற்றி, திறந்த மூளிக்கழுத்து, சினிமா பாட்டுக் கேட்கும் பெணம் கண்களுமாகிய இவைகளே உயர்ந்த இன்பந் தருனும் உயர்ந்த நோக்குடையவர்களுக்கு மிகவும் காம்ந்த விண்ணப்பம். காலை காப்பியில் சிறிது விபதியிட்டுச் சாப்பிட்டால் நலன்கள் தானே வரும்.

நாமனைவரும் கடவுளின் அடிமைகள். ஒவ்வொருவனும் இப்புவியில் தோன்றுமுன் ஈசனுக்கு அடிமைச்சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறான்; ''உன்னை என்றும் மறவேன்; உன்பணி செய்து கிடப்பேன்' என்பதே அதன் முக்கிய சாரம். மேலும் கர்ப்ப வாசமாகிய சிறையி லிருக்குங்கால் சீவன் புலம்புகிறது :''என்ன? என்மேல் சந்தேகமா; இது என்ன சோதனையோ; உன்னை மறப் பேனா; விடுதலையிலையோ.” உலகிற் பிறந்து வளர்ந்து விட்டோமானால் எல்லாம் மறந்துபோய் விடுகின்றன. வாக்குப் பிறழ்வதே கொடுங்குற்றம். எழுதிக் கொடுத்துவந்த சீட்டிற்கும் முரண்பட நடந்தால் அதை என்னவென்று சொல்லுவது? சுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரத்தை மறக்கலாமோ? பொய்யெனப் போதிக்கவும் சாதிக்கவும் முடியாது. அவர் பாடிய திருத்தொண்டர்கள் கூட்டத்தைக் கோயில்களில் இன்றும் பார்க்கிறோம்; தொன்று தொட்டு வெகுநாளாய்ப் பார்த்த சாக்ஷிகளுக்கோ கணக் கில்லை. நாயன்மார்களைக் கற்பனைத் தோற்றங்கள் என்று கூறத் துணிந்துவிட்டால் உலகா. சிரிக்கும். அம்முழு மூடனுக்கு ஒருவருமே இரங்கார். சுந்தர மூர்த்தியை ஆவணச் சீட்டு அசலைக் காட்டி ஈசன் ஆட் கொள்ளவில்லையா! பெருத்த ஞானியாகிய தாயுமானவர் வாக்கு யாதெனின் "என்றுநீ அன்றுநான் உன் அடிமை யல்லவோ'' ,  ''நிருப குருபர குமர என்றென்று பத்திகொடு பரவ அருளிய மவுன மந்த்ரந்தனைப் பழைய நினது வழி யடிமையும் விளங்கும் படிக்கினி துணர்த்தி யருள் வாயே', என்றார் அருணகிரியாரும். சரித்திரங்களும் சான்றுகளும் இப்படியிருக்க நாம் நம் மனம்போல் காலத்தை வீணாக்கிக் கொண்டிருப்பது ஒரு விந்தை தான். 'அடாது செய்தால் படாது படுவான்' என்பது பழமொழி. அவனை மறந்தோம்; திண்டாட்டமாகிய இடரில் விழுந்து அலைகிறோம்.

சாதாரணமாக உலகில் இல்லறம் நடாத்துவோர்களே பெரும்பான்மையோர். துறவறத்தை நாடுபவர்கள் மிகவும் சிலரே. கிரஹவாசியாகிய நமக்கு மக்கட் செல்வமும் ஏற்படுகிறது. பெண்களைக் கல்யாணம் செய்து புருஷன் வீட்டிற்கு அனுப்புகிறோம். அப்போது என்ன புத்திமதி சொல்லி அவர்களைப் பிரிகிறோம். ''அம்மா! இதுவரை எங்களோடிருந்தாய்; இனி உன் வீடு புக்ககமாகும். உன் கணவனுக் காதரவாயிருந்து சுகமாய் வாழ்வாயாக. ஏதாவது வேண்டியிருந்தாலோ அல்லது சுகக்கேடு ஏற்பட்டாலோ எங்களுக்குத் தகவல் கொடு; வேண்டியதைச் செய்கிறோம். அது போலவே நம்மைவிட்டு மகன் பிரிய வேண்டிய கால மேற்படும்போது "அப்பா ஜாக்திரதையாய்ப்போய் விட்டுத் திரும்பிவா'' என்று சொல்லி அவனுக்கு அவசியமான வைகளைக் கொடுத்து அனுப்புகிறோ மல்லவா? இது நாம் தெளிவாய் நிதமும் காணும் காட்சியாகும். இவ்வுலகத்திற் கும் ஜீவகோடிகளுக்கும் கடவுள் அன்னையும் அப்பனும் ஆவான். இவ்வுலகமா நம்முடைய நிரந்தரமான இடம். எல்லாம் பிரளயத்தில் ஒடுங்கி விடுகிறதே. நித்தியப் பிரளயமாகிய உறக்கத்தில் நம்மை அறியாது கிடந்தோமே. நம் ஞாபக முண்டா? நமது இடம் என்கிற ஞாபக முண்டா? உலக ஞாபகமுண்டா? பெண்டு பிள்ளைகள் ஞாபக முண்டா? உரிமைகளையும் மறந்தோமே! யாவற்றையும் அவனிடம் தான் ஒப்புவித்துக் கிடந்தோம் என்று கொள்ள வேண்டும். ஆகவே நமது ஸ்திரமான இடமோ வீடோ அவன் பதும் பாதங்களே. அவனிடமே நம்மிடமாகும். நாம் இவ்வுலகம் வரும்போது அதாவது அவனை விட்டுப் பிரியும் போது அவர் நமக்கு வேண்டிய அனைத்தும் அருளி அன்பும் அறிவும் அளித்து ஆசிச் சொற்கள் சொல்லி அனுப்புகிறார். அவைகள் வருமாறு : "உன்னை அறிந்துகொள்; அந்நியத்தை நாடாதே; என்னை விடாதே; அறத்தை நிலைநிறுத்து; என்னை அடையக் கடவாய்.''

நம்மை அறிந்து கொள்ளுவதே ஞானம்; அந்நியத்தை நாடாதிருத்தலே வைராக்கியம்; யோக மதுவே. அவனை விடாதிருத்தலே பக்தி; அறத்தில் நின்றுகாட்டி அதை ஓங்கச் செய்தலே கர்மம். அவனை அடைவதே மோக்ஷம். இவைகள் முற்றும் சரிவர அறிந்து, நேராக வாழ்ந்துஅவனை மறவாமலிருந்து அவனிடமே திரும்பிப் போய்ச்சேர வேண்டுமென்ற பேரவாக் கொண்டவனே பக்தனாவான். ஆகவே பக்தியின் ஆரம்பமே ஞானம்; முடிவே மோக்ஷம்.

அன்பும் அறிவும் தான் நமக்குள்ள சிறந்த செல்வங்கள். கடவுள் தான் நல்லதுணை. இக்கருவிகளைக் கொண்டு தான் அவனை அடைய வேண்டும். வேறுவழியில்லை. இடம் பொருள் ஏவலாலும், புத்தி யுக்தி உபாயங்களாலும் உலகில் நாம் கருதியவற்றைச் சம்பாதித்துக் கொள்வதுபோல் அவனை அடைய முடியாதென்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அவனை அடைந்தவர்களோ நமது நாட்டில் கணக்கில்லை. அவர்கள் என்ன செய்தார்கள்? சற்றுக் கவனிப் போம்.

நம்மிடத்தில் மனமென்று ஒன்றிருக்கிறது. அதற்குப் பலபேர் வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான் நெஞ்சு, உள்ளம், சித்தம், புத்தி, அஞ்ஞானம், அகங்காரம். இவைகளுக்குப் பொருள் வித்தியாசங்களுள. இவ்வித்தியாசங்கள் எல்லாம் நன்றாயும் தெளிவாயும் அறிந்து விட்டால் அவனை அடைந்து விடலாமென்று சொல்வதற்கு முடியாமலிருக்கிறது.

இந்த மனம் சுபாவத்தில் நல்ல வஸ்துதானாம். நல்ல மனம் கெட்ட மனமென்று சொல்வது சரியல்லவாம். இதுவே நாம் படுகுழியில் விழுவதற்கும், உன்னதமான நிலையை அடைவதற்கும் காரணமாம். எண்ணங்களே மனம் என்பார் ஒருவர்; வாசனாதோஷத்தால் மனத்தின் இயற்கை சுபாவம் மாறி, பல சேஷ்டைகள் செய்து விடுகிறதாம். தெய்வ சொரூபங்களாகிய நம்மைக் கெடுத்து விடுகிறதாம். வேறுசிலர் சொல்வது யாதெனின், மனத்தின் சுபாவம் சல னம் அசைவு அல்லது கலக்கம். ஓரிடத்தில் தங்காது. ஓடிக் கொண்டேயிருக்கும். ஒன்றைவிட்டு மற்றொன்றைப் பிடிக்கும். சுகத்தையே நாடி இம்மாதிரி அலைகிறது. ஆதலால் மனம் அடங்கவேண்டும்; மனம் லயப்படவேண்டும்: மனோ நாசத்தையும் கருதவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு நல்லறிவாளி சொல்லுகிறார்.

அலையு மனத்தை யகத்தடக்கு மவனே சரியை கடந்தோனாம்
அலையு மனத்தை யகத்தடக்கு மவனே கிரியை முடிந்தோனாம்
அலையு மனத்தை யகத்தடக்கு மவனே யோக தற்பரனாம்
அலையு மனத்தை யகத்தடக்கு மவனே ஞானி அதிசூரன்''

இக்கருத்தையே மற்றொரு ஆத்மஞானியார் வேறொரு விதத்தில் சொல்லுகிறார்:

“உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த
லதுசன்மம் பத்தியு முந்தீபற
வதுயோக ஞானமு முந்தீபற"
“தடுங்கோள் மனத்தை”

என்பார் ஒருவர். "உன் செ:ரூபத்தில் கிட" என்பார் ஒருவர். மனம்போன போக்கெல்லாம் போகாமல் நேர்வழியில் நிற்க வேண்டு மென்பது பெற்றாம். வழியென்னவோ? கடவுள் நாமத்தைத் தவிர யாவரும் அறியக்கூடியதும், சாதகஞ் செய்யக் கூடியதுமான வேறு சிறந்த வழிகளுமுளவோ! கடவுள் நாமமும் கடவுளும் ஒன்றேயாகும். நம்மை உய்விக்கக் கூடிய ஞான சம்பந்தர் தேவாரங்களில் ஒன்று (வேறும் வேண்டுமோ)

காதலாகிக் கசிந்து கண்ணீ ர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாத னாம நமச்சி வாயவே''

திருமங்கை யாழ்வார் பெரிய திருமொழியில் நாமத்தின் பெருமையை விளக்குகிறார்.

''துஞ்சும் போதுனடியின் துயர்வரில் நினைவன்
துயரிலீர் சொல்லினும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடைய வினைக்கு
நாராயணா வென்னும் நாமம்''

பிரகலாதன் ஒரு சிறந்த பக்தன். தொண்டர்களில் முதன்மையானவன் என்று சொல்வாருமுண்டு. அவன் தன் பிதாவுக்கு நாமத்தின் மகிமையைச் சொல்லுகிறான்.

காமம் யாவையுந் தருவது மப்பதங் கடந்தாற்
சேம வீடுறச் செய்வதுஞ் செந்தழன் முகந்த
வோம வேள்வியி னுறுபத முய்ப்பது மொருவன்
னாம மன்னது கேணமோ நாராயணாய''

தெய்வநாமமே முதற் கருவி. முடிவான கருவியும் அதுவே. வேறு கருவிகள் வேண்டாம் என்று தோன்றுகிறது.

நாமரூபமற்ற கடவுளுக்குப் பல ரூபங்களுண்டு. எந்த உருவத்திலும் வருவான். நினைத்தவண்ணம் காட்சி கொடுப் பான். அவனுடைய நாமங்களும் பல ''பேராயிரம் பரவி வானேரேத்தும் பெம்மானை' என்றார் அப்பர் சுவாமிகள். அவனவன் மனத்தைக் கவரும் தெய்வநாமம் ஒருவனுக்குச் சிறந்தது. இது பொதுவிதி. அவனவன் சமயத்திற்குத் தக்கவாறும், குலவொழுக்கத்திற்குத் தக்கவாறும், பெரியவர்கள் உபதேசங்களுக்குத் தக்கவாறும் வாழ்நாளிலமையும். ஆனாலும் ஆசரணைவாயிலாகவும் அனுபவ ஒழுக்க வழக்க வாயிலாகவும் சிலமஹா மந்திரங்கள் தென்னாட்டில் வழங்கப் பட்டு வருகின்றன. சிவ, முருக, வண்முக, ராம, கிருஷ்ண, நாராயண ஆகியவைகளே. யாவரும் இவைகளைச் சொல்ல லாமெனத் தோன்றுகிறது. நாள், கிழமை, நேரம், வேளை பாக்க வேண்டாம். நடக்கும் போதே சொல்லிக் கொண்டு போகலாம். வேலைகளெல்லாம் முடித்துப் படுத்தவுடன் உறக்கம் வரும்வரை சொல்லலாம். வீண்வார்த்தைகள் சொல்லிக்கொண்டு காலத்தைப்போக்காமல் ஒழிந்த சமயங்களில் சொல்லிப் படிக்கலாம். ஆரம்பத்தில் நியமமே கிடை யாது; வேண்டியது மில்லை. சொல்ல நிச்சயிக்க வேண்டும் தினமும் சொல்லவேண்டும். சொல்ல ஆரம்பித்த நாமத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு வேறொன்றை பிடித்தல் கூடாது. சொல்லவோ நினைக்கவோ மறக்கக்கூடாது. சாக்கிய நாயனார் உண்பதற்கு முன் சமண அரசாட்சிக்குள ஒரு கோயிலருகு சென்று வெளியிலிருந்து கல் எறிந்து வந்தாரல்லவா? ஒருநாள் மறந்துண்ண அமர்ந்தார் - பவீர் என்று ஞாபகம் வந்தது. உடனே எழுந்தார்; கோயி லுக்கு ஓடினார்; மறந்தேனே என்று வருந்தினார்; தன் வழக்க மான பூஜையை முடித்தார். என்ன அடைந்தார்? சிவதரி சனமும் முத்தியும். மறவாமல் நாமத்தைச் சொல்லி வந்தாலேபோதும். இன்னொரு விஷயம் கவனிக்கற்பாலது. நாமவிசேடத்தால் யாவும் கிட்டுமென்கிற உறுதியான நம்பிக்கை மனதில் ஊன்றவேண்டும்.

அனாவசியமாய் வீண் சச்சரவுகளிலும் வாதங்களிலும் நுழையும் வழக்கத்தைவிட வேண்டும். அவனருளன்றி எதைச் செய்யமுடியும். நான் அதைச் செய்து விட்டேன்; இதைச் செய்யப் போகிறேன்; அது என்னால் செய்து முடிக்கப்படும் என்கிற எண்ணங்களை வாழ்நாளில் ஜாஸ்தியாக முதிரும்படி விடுதல் தவறு என்று தோன்றுகிறது. அவனை மறவாமலும் அவனையே நம்பியும் நமது கடமை களையும், வேலைகளையும் செய்து வருவதே ஈசனுக்கு எளிதில் செய்யக்கூடிய பூஜையாகும். அவனை மறந்தோர் தங்களை இழந்தவர்களாவார்கள். ஆத்மாவுக்கு அழிவில்லை யென்று சொல்வதுண்டு. அது அவனை மறந்து விடுமாயின் அது இறந்து போனதாகச் சாத்திரங்கள் சொல்லுகின்றன. நாமனைவரும் தெய்வ நாமத்தைச் சொல்ல எத்தனிக்கத் தடைகளுமுளதோ!

இன்னொரு சிறு விஷயத்தோடு கட்டுரை முடியும். பலன்களை உத்தேசித்துக் கடவுள் நாமத்தைச் சொல்லி வருவதைக் காட்டிலும் பலன்களை லக்ஷியமாகக் கொள்ளாமல் யாவும் கிடைக்குமென்ற ஆற்றலோடு நாமத்தைச் சொல்லி வருதல் சிறப்பாம். ஒரு வேடிக்கையான கதை ஞாபகத்திற்கு வருகிறது. கதை யென்னமோ உண்மை தான். சந்தேகமில்லை. ஒருநாள் ஜகதீசன் நேரங்கழித்து வந்தார். “ ஏன் இவ்வளவு நேரம்' என்று பார்வதி தன் பதியைக் கேட்டாள். “ என் குழந்தைகளாகிய ஜீவ கோடிகளுக்கு அன்னமிட்டு வந்தேன்; நேரமாய் விட்டது'' என்றார் உமாபதி. " அப்படியா நாளைக்கு இதைப் பொய்யாக்கி விடுகிறேன். வீண் காரணமா சொல்கிறீர்கள்', என்று உமை கேலியாய்ப் பதில் சொன்னாள். மறுநாள் வறண்டு உலர்ந்து ஒன்றுமில்லாத தேங்காய்க் குடுக்கைக்குள் ஒரு எறும்பை விட்டுத் துவாரத்தை நன்றாய் மூடிவிட்டுத் தன் ஆடைக்குள் மிகவும் பத்திரமாய்வைத்துக்கொண்டாள். மறு நாள் ஜகதீசன் வழக்கம் போல் சரியாக வந்து சேர்ந்தார். "ஏது இன்று நேரமாகவில்லை; குழந்தைகளுக் கெல்லாம் உணவு அளித்தாய் விட்டதா" என்றாள் அம்பாள். "ஆம்" என்ற இலைக் கேட்டவுடன் தன் புடைவைக்குள் மறைத்து வைத்த குடுக்கையை எடுத்து "இதிலுள்ள எறும்பிற் குமா உணவிட்டாய் விட்டது'என்று சொல்லிக் கொண்டே அடைத்த துவாரத்தைத் திறக்கவே, என்ன ஆச்சரியம் ! தும்பைப்பூ போன்ற ஒரு நொய்யரிசியை கௌவிக் கொண்டு எறும்பு வெளிவருவதைப் பரதேவதை கண்டாள். வெட்கி அகமகிழ்ந்து நாதனருகிலுல்லாசமாய் உட்கார்ந்து மன்னிப்புக் கேட்டாளாம். இது தான் கதை. கல்லினுள் தேரைக்கும் உணவு அளிக்கும் ஈசன் பக்தனை என்றும் வருந்த விடார். அவனுக்குரியதை அளித்தே தீருவார். கவலையே வேண்டாம். வேண்டியவைகள் கிடைத்தே தீரும். உறுதியான நம்பிக்கையும் திடச்சித்தமும்தான் அவசியம். பலன்களை உத்தேசித்துத் தான் தெய்வ நாமத் தைச் சொல்லிவர வேண்டுமென்று கட்டாயமிருப்பின் உணவு வேண்டும்; ஆடை வேண்டும்; இருக்க வீடு வேண் டும்; பொருள் வேண்டும்; இவை போன்றவைகளெல்லாம் வேண்டும் என்று கேட்பதோடு அருணகிரியார் அருள் வேண்டியபடி மறவாமல்,

"சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்த வர்க்கொன்
றீகைக்கெனை விதித்தா யிலையே''

என்ற உத்தமமான பலனையும் வேண்டலாம்.

சித்தாந்தம் – 1942 ௵ - ஜுன் ௴
             

No comments:

Post a Comment