Saturday, May 9, 2020



பதிபசுபாசத்தொகை. *

[* குறிப்பு: - இவ்வரிய நூல், ஸ்ரீமான் பால்வண்ண முதலியார் அவர்களால் மதுரை தமிழ்ச்சங்கத்துக்கு அனுப்பப்பட்ட சாத்திரக்கொத்து என்னும் ட்டுப் பிரதியினின்றும் எடுத்து எழுதப்பட்டது. இந்நூலாசிரியர் இன்னாரென்று புலப்படவில்லை. ஆயினும் முப்பொருள் உண்மையை அதிகமாகச் சுருக்கியும் விளக்கியுமுள்ள பெருமையினை உடைத்து இந் நூல். J. M. N.]

பவளநிறத் தானைமுகன் பாத நினைப்பாம்
பவளமறுப் பானவனன் டர்க்கு.                                      (1)

சிவனை நிரஞ்சனனைச் சின்யனைச் சீவன்
பவமுமறுப் பானைநினைப் பாம்.                                     (2)

இரவிக் கொளிபோ லிறையொடுறை வாளைப்
பரவிப் பணிவாம் பதம்.                                             (3)

நந்திபத நந்திமா காளரெழு வர்யாவர்
தந்திருத்தா ளும்பணிவாஞ் சார்ந்து.                                  (4)

பதிபசு பாசந் தொகுத்துப் பகர்வா
மெது கதியென் பார்க்கெளிதிலே.                                     (5)

பல்லுயிர்க்கு மேக னமலன் சிவன் பதியப்
பல்லுயிர்க்கு மீசன் பதி.                                            (6)

உடலொலியின் மூல வொலியுறைதல் போலக்
    கடவுளுயிர் தோறுமுறுங் கான்.                                     (7)

கடவுளுரை'யென்றும் பாடம்.

ஆதாரம் வேர்மரத்துக் கீச னனைத்துயிர்க்கு
மாதாரம் வேர்க்குமர மன்று.                                         (8)

ஆகஞ் சடங்கா ணணுவறியா ‡ திவ்விரண்டின்
யோகஞ் § சிவனாலென் றோர்.                                      (9)

  திவ்விரண்டும்' என்றும் பாடம்.; § சிவன் பான்' என்றும் பாடம். 
கருமஞ் சடம்பலத்தைக் காட்டாது காட்டு
நிருமல னென்றே நினை.                                           (10)

சடமாயை தானே சமையா தணுவுங்
கடவடரு வான்வினையைக் கண்டு,                                  (11)

வருத்தியு நல்லன் மருத்துவனோ * யார்க்கு
நிருத்தனையிவ் வாறுநினை நீ.                                      (12)

* யற்கு' என்றும் பாடம்.

உதவி யிரவி யுலகுக் கிரவிக்
குதவி செயுமோ வுலகு.                                            (13)
                                     
இவை பதிதெரிசனம்.

ஆகஞ் சடந்தா னியங்கா ததனையூர்
பாகன் பசுப்பலன் றுய்ப் பான்.                                       (14)

பொறியுமுயி ரல்லப் பொறையுடலு பல்ல
வறிவே யுயிரொன் றறி.                                            (15)

உறக்கத் துணரா வுடலும் பொறியு
முறக்கமு மோரு முயிர்,                                           (16)

புண்ணியத்தாற் பாவத்தாற் புண்ணியபா வத்தாலு
ண்ணு முயிர்   கீழ் மேல் நடு.                                   (17)

'மேல்கீழ்' என்றும்பாடம்.

இவை பசுதெரிசனம்.

யானென் செருக்கா லிருவினையா மச்செருக்கு
‡ மூனமலத் தானா முயிர்க்கு. -                                     (18)
மூலமலத்' என்றும் பாடம்.

செம்பிற் களிம்பென்னச் சீவனொடுற் றேதிமிர
      § நம்பனைக் காட்டாது நள்.                                         (19)

§ நம்பனைக்காட்டாதுயிரினள்' என்றும் பாடம்.
            
இவை பாசதெரிசனம்.

பரிபாக மாகவிருட் பாசமுடை யூனை
யருவருக்கு மாவிவிருப் பற்று.                                      (20)

அப்பொழுது தேசிகனை யாவேசித் தேயமல்
னப்பழுதை நீக்குமரு ளால்.                                         (21)

    || நீங்கவரு ணீங்காதே நின்றசிவங் கண்டாவி
      யோங்கியபேரின்பத் துறும்.                                          (22)

|| நீங்கவிரு ணீங்காதே நின்ற சிவன் கண்டாவி' என்றும் பாடம்.

இவை யனுக்கிரகம்.

    ஆக்கைசிறை யென்றமலத் தாதரவுற் றார்க்கிந்த
வாக்கை யறைக மதித்து.                                           (23)

ஆக்கை சிறையென்ற மலனாதரவுற்றாற் கிந்த' என்றும் பாடம்.

விடம்பர்க் குரைத்தார் விழுவர்கீழ் மேலா
யடைந்தார் நல் லார்க்கறிவித் தார்.                                  (24)

இது பக்குவாபக்குவம் பார்த்துணர்த்துக வென்றது.

இந்தவியலைத் திரிவு மின்றியுணர்ந் தார்க்கிருண்ட
பந்தமறும் வாய்த்துறுமின் பம்.                                      (25)
          
இது நூலுணர்ந்தார் பலம்.
       
பதிபசுபாசத்தொகை முற்றும்.
                  
 S. பால்வண்ண முதலியார்.

சித்தாந்தம் – 1913 ௵ - ஆகஸ்ட் ௴


No comments:

Post a Comment