Sunday, May 10, 2020



வாழ்க்கையும் சமயமும்
[கா. இராமநாதன் செட்டியார், பி. ஏ., பி. எல்.]

[திரிசிராப்பள்ளியில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் 36 - வது ஆண்டு விழாவில் திருப்பாதிரிப்புலியூர் அருட்திரு ஞானியாரடிகள் தலைமையில் செய்த சொற்பொழிவு.]

இங்கு நமக்குத் தலைவராக எழுந்தருளியிருக்கும் அடிகளார்க்கு வணக்கம்.

தாய்மார்களே! பெரியோர்களே!

கற்றறிந்தோர் கர்ச்சித்த இந்த மண்டபத்தில் யானும் பேச வந்தது விந்தையே. நாடகத்தால் அடியார்போல் நடித்து உங்களிடையே வந்தேன். அன்பு நிறைந்த சிவ நேசர் கள் புறக்கணியா ரென்ற துணிபே இங்கு உங்கள் முன் நிற்கச் செய்தது. இனி விஷயத்திற்குப் போவோம்.

1. கடற்கரை, விடியற்காலம். “கதிரவன் குண திசைச் சிகரம் வந்தணைந்தான். கனையிருளகன்றது காலையம் பொழு தாய்.” கடல் பொங்கியது. அலைகள் பனையளவு உயரம் மேலெ ழுந்து, திடீரெனக் கீழே விழுந்து, விரைவாய்ப் புரண்டு, ஓயாது ஓடியாடி, கரையில் மோதுகின்றன. ஒரே இரைச்சல்; இடையறா இரைச்சல். கரையருகே பல படகுகள் கிடக்கின் றன. எங்கிருந்தோ வந்தாரொருவர். கட்டழகர், கண்ணுக் கினியர். செம்மேனியர். படகருகே சென்றார். அவருடன் வந்த அம்மை பச்சை மேனியள். பவளவாயினள். படகுக் குச் சுக்கானை மாட்டி, அதனை ஆழத்தில் தள்ளி, அதில் ஏறி னர் இருவரும். படகு பொங்கும் கடலுக்குள் புகுந்தது. பட கில் சென்ற மாலுமியின் ஒரு கை சுக்கானில்; மற்றொரு கை பாவையை அணைத்தது. இருவரும் கரையைப் பார்த்த வண்ணம் அழகாக நின்றார்கள். கடலாடியும் படகாடியும் அவர்கள் ஆடவில்லை. வாயில் குமிண் சிரிப்போடும், கண்ணில் பேரருளோடும் நிற்கிறார்கள். எப்படிச் சொல்வது இக்காட்சியை? “பேரருளாளன் பெண்பாலுகந்து"                         
அறு சமயம்
பணிவகை செய்து படவ தேறிப்
பாரொடு விண்ணும் பரவியேத்திப்
பிணிகெட நல்கும்.''

கரையருகில் கூடினர் பலர். காட்சியைக் கண்டனர். அபாயத்தைக் கண்டஞ்சினர். மாலுமியின் சீலமும் திறமுங் கண்டு வியந்தனர். கோலங்கண்டு செயல் மறந்தனர்.

2. கரையிற் கூடியவர்கட்கும் கடலில் போக ஆசை பிறந்தது. “அண்ணே ! அங்கு வரலாமா?'' என மாலுமி யாரைக் கேட்டனர். மாலுமியும் வரக் கண்காட்டினர். ஒரு கிழவர் “எனக்குத் தெரியும் இந்த வித்தை' என்று சொல்லிக்கொண்டு முதலில் புறப்பட்டுப் படகருகே வந்தார். ஆடுஞ் சுக்கான் படகுக்கு அழகில்லை யென்றும், அவசியமில்லை யென்றும், அதனைக் கீழே தள்ளிவிட்டுப் படகிலேறி கடலுக்குள் மாலுமியை நோக்கிச் சென்றார். படகு தத்தளித்துத் தன்னிஷ்டம் போல் செல்லுகிறது. மாலுமி பக்கம் போக வேண்டு மென்றால், அது மற்றொரு பக்கம் போகிறது. என்ன செய்வார் கிழவர்? திகைத்தார், திண்டாடினார். மாலுமி கயிறு போட்டு, கிழவரைக் கரை சேர்த்தார்.

3. யாவற்றையும் பார்த்திருந்த ஜனங்கள் மாலுமியாய் வந்த மகாதேவரைப் பார்த்து, 'தேவரீர் செய்திட்ட வித்தையைக் கண்டு பேருவகை எய்தினோம். கடலில் போவ தெப்படி யென்று நாங்களுமறிய ஒரு வார்த்தை சொல்லவேண்டும்." என்றார்கள். இறைவர் அருளொடுங் கூறுவர்: "உலகம் கடல் போன்றது. இரண்டிலும் அபாயங்கள் பல. அவைகளை வெல்வதே ஆனந்தம். கடலில் நன்கு போக முடியும். அதுபோல் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். படகென்பது வாழ்க்கை. சுக்கானென்பது சமயம். நாம் குறித்த வழியில் படகு செல்ல சுக்கான் தேவை. வாழ்க்கை யும் நல்வழியில் செல்ல சமயந் தேவை. சமயத்தினாலேற் படுவது தூய வாழ்க்கை. வாழ்க்கைக்குத் துணை சமயம். சுக்கானைக் கழற்றி விட்டு கடலுக்குள் சென்ற கிழவன் அறி விலி. தைரியமாகப் படகில் செல்லுங்கள், சுக்கானை ஒரு கையில் பிடியுங்கள், மற்றொரு கையால் என்ன வேலை செய்யி னும் பாதகமில்லை. கையில் சுக்கானை வைத்து, மனத் தில் என்னை வையுங்கள். கடல் பிரயாணம் நன்கு முடியும்." யாவரும் அம்மை அப்பரை வணங்கி நின்று,'பெரு வாழ்வே, வாழ் முதலாகிய பொருளே, வாழ்க்கையின் தனி முதலே, எங்களுக்கு வழிகாட்டியதற்கும், உபதேசம் செய்ததற்கும் செய்யும் சைம்மா றொன்றறியோம். ஆயினும் இந்த நல்வழியை மறவோம்” என்றனர். இறைவனும் இறைவியும் மறைந்தனர்.

4. வாழ்க்கை யென்பது இறைவன் நமக்குத் தந்த சகதிகளை உபயோகப்படுத்தல்; அல்லது நம்மைச்சுற்றி நடக்கும் காரியங்களை யுணர்தல்; அல்லது, உலகில் நடப்ப வற்றிற்கு நம்மில் பதிலெழல். விளக்காமலே வாழ்க்கை யென்பதன் பொருள் நமக்குத் தெரியும். சுருங்கச் சொல்லின், வாழ்க்கை படகில் போதல். ஒருவருக்கு படகு கிடைத்தல்போல, வாழ்க்கை பல ஒன்றன்பின் ஒன்றாய் வரலாம்.

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும்"

பிறக்கலாம். இறைவனைச் சிக்கெனப் பிடிக்கும்வரை இவ்வாறு பலவித பிறப்பில் வாழ்க்கை தொடர்ந்து போகிறது.

5. சமயமென்ப தென்ன? அது விஞ்ஞானமல்ல; தத்துவ சாஸ்திரமல்ல. விஞ்ஞானம் பஞ்சேந்திரியங்களால் அல்லது அவைகளுக்கு ஒத்தாசையான கருவிகளால் உண்மை யென அறிந்தவற்றை ஆராய்வது. தத்துவ சாஸ்திரம் பஞ்சேந்திரியங்களுக் கெட்டாத உண்மைகளை ஆராய்வது. ஆனால் சமயமோ, பஞ்சேந்திரியங்களுக் கெட்டாத உண்மைகளை அனுசரித்து அவைகளுக்கேற்ப வாழ்வது.

6. ஆகையால் சமயம், படித்து முடிக்கும் விஷயமன்று. அது வாழும் வழி. பெரியவர்களும், "கலைஞானம் கற்குஞ் சரக்கன்றுகாண்'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.

7. சமயமும் வாழ்க்கையும் பொருந்த வேண்டும். வாழ்க்கையில்லையானால் சமயம் யாருக்கு? சமயமில்லையானால் வாழ்க்கைக்கு வழியுண்டோ? சமயத்தைப் பற்றிப் படித்தால் போதுமா?
ஓதியாரு மறிவா ரில்லை” - சம்பந்தர்.
"எலும் வேண்டுமோ நுண்ணுணர் வோர்கட்கே” - அப்பர்.

8. வாழ்க்கையொடுபொருந்தாச் சமய அறிவு பிரயோசன மில்லை யென்பதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

ஒரு குங்கும வியாபாரி தன் சரக்கைக் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு போனான். பெரிய கழுதைகள் அதிக பொதி சுமந்து முன்னர்ப் போயின. சிறிய கழுதைகள் பின்னர்ப் போயின. சிறு கழுதையி லொன்று பெரிய கழுதைகளைப் பார்த்து, “கிழட்டுப் பிணங்கள் மெல்லப் போனாலென்ன?'என்று கேட்டது. கிழட்டுக் கழுதை ஒன்றுக்கு அதிக கோபம் வந்துவிட்டது: "அசடே, மரியாதை யில்லாமல் பேசுகிறாய். அறிவு கெட்ட உனக்கு வய தென்ன? எங்கள் வயதென்ன? அதுதான் கிடக்கட்டும். எங்கள் பெருமையையும் அறியவில்லையே. எங்கள் முதுகில் எவ்வளவு குங்குமம்? உன் முதுகில் கொஞ்சந்தானே. உயர்ந்த பொருளை அதிகமாகத் தாங்குகிறோம். மேலும் நாங்கள் முன்னால் போகிறோம். ஜனங்கள் முதலில் எங்களைத்தானே பார்த்துச் சந்தோஷப்படுகிறார்கள். இவ்வளவும் யோசியாமல், மரியாதை யில்லாமல் பேசுவது அடுக்குமா?'' இன்ன கழுதைக்கும் கோபம் வந்து விட்டது. அது சொல்லிற்று : "உங்கள் பெருமை எனக்குத் தெரியாதா? அதனை என்னிடமா அளப்பது? கழுதைக்கு வயதானது போல வென்று மனிதர்கள் சொல்லுவார்களே! வயதானது ஒரு பெருமையா? நிறையச் சுமக்கிறது உயர்வா? பொருள் உங்கள தல்ல; வியாபாரி நினைத்தால் விற்று விடுவான். குங்குமத்தை நெற்றியிலிட்டால் மிக நன்றாக விருக்கும். அது உயர்ந்த பொருளாயிருக்கலாம். நீ இட்டுக் கொண்டாயா? தூக்கித்தானே சுமக்கிறாய்? நாம் இட்டுக் கொள்ளும் ஜாதியில்லையே. தூக்குவதில் என்ன பெருமையோ? ஊரெல்லாம் உன்னைப் பார்த்ததாக நினைக்கிறாய். குங்குமத்தைப் பார்க்கிறார்களே யொழிய, உன்னை யார் பார்க்கிறார்கள்? " பெரிய கழுதை உரத்த குரலில், "அதிகப் பிரசங்கி, உனக்கு முதுகிலே கண்ணு. எங்களிடத்தில் சொன்ன குறை உன்னிடத்திலில்லையா? " என்றது. சிறி கமதை வாயடங்கவில்லை : "நான் உபயோகப்படுத்தாத சுமையைக் கொஞ்சந்தானே தூக்கி வருகிறேன். என் இலட்சணத்தை எல்லாரும் பார்க்கிறார்களென்று ஏமாந்தா விருக்கிறேன்?'' என்றது.

இக்கதையில் தெரிந்து கொள்ளக் கிடக்கும் உண்மைகள் பல. சிலவற்றை மட்டும் கூறுவேன்.

கழுதை குங்குமத்தை முதுகில் சுமக்கிறது; நாம் சமய அறிவை மூளையில் சுமக்கிறோம். குங்குமம் வியாபாரத்திற்காகும்; நம் சமய அறிவை விற்குஞ் சரக்காக்கினோம். கழுதை மேல் குங்குமம் ஒட்டுவதில்லை; நம் சமய அறிவு உள்ளத் திலும் வாழ்க்கையிலும் புகுவதில்லை. குங்குமம் பிறருக்கே பிரயோசனப் படுதல் போல, நம்மறிவும் பிரயோசனப் படலாம். சுமப்பதில் கழுதை கர்வமடைகிறது; கற்ற அறிவும் கர்வம் தருகிறது.

கழுதை குங்குமம் சுமந்தது' என்னும் பழமொழியை சுந்தரமூர்த்தி நாயனாரும் கையாண்டிருக்கிறார்கள். (பக்கம் 117. 1) மேலும் நம்பிகள் சொல்லுகிறார்: -

“பொதியே சுமந்துழல்வீர்
பொதியாவது மறியீர்”. (பக்கம் 152. 9)

9. சமயம் அனுசரிக்கப் படவேண்டியதென ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பலவிடங்களில் சொல்லி யிருக்கிறார்.

“பிணத்தையே நோக்கும் பிராந்துயிர் பரந்தும்
பணத்தையே பார்ப்பன் பண்டிதன் கற்கும்
புத்தகச் சுமையால் சித்தந் தெளியுமோ?
தத்துவப் பொருளைத் தருக்கம் தருமோ?"
(ஸ்ரீ பரமஹம்ஸலீலை: சுத்தானந்த பாரதியார்)

10. வெறும் ஆராய்ச்சிக்கன்று சமயம். அனுசரிப்ப தற்கே. இதனை வற்புறுத்த இன்னொரு உதாரணம். இந்த உதாரணத்தை இரண்டு பெரியார்கள் இரண்டு விதமாகக் கையாண்டனர்.
முதலில் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லியதை ஞாபகப்படுத்துகிறேன்.

'இரண்டு நண்பர்கள் ஒரு மாந்தோப்பிற்குள் போயினர். ஒருவன் மிக்க உலகறிவுள்ளவன். அவன் அத்தோப்பிலுள்ள மாமரங்களை எண்ணினான். ஒவ்வொரு மரத்திலுமுள்ள மாங்கனிகளை எண்ணினான். தோப்பின் விலையை மதித்தான். அவன் நண்பன் தோட்டக்காரனைத் தேடிச் சென்றான். அவன் உறவைச் சம்பாதித்தான். தோட்டக்காரனுடன் ஒரு மரத்திற்குச் சென்று, அவன் அனுமதியுடன் கனிகளைப் பறித்துத் தின்றான். இவ்விருவரில் யார் சமர்த்தர்? மாங்கனியுண்டவனா? மாமெண்ணியவனா? மாம்பழம் தின்றால் பசி தீரும். மரத்தை யெண்ணி, இலையை யெண்ணிக் கணக்குப்போட்டால் வரும் பலன் என்ன? கற்ற வீணன் உலகந்தோன்றிய காரிய காரணங்களை ஆராய்ந்து வாதிடுவன். அறிந்தடங்கியவன், உலகத்தைப் படைத்தவன் நட்பைப்பெற்று அவன் தரும் அருளமுதமுண்டு ஆனந்திக்கிறான்.

11. கனி உவமையைக் கையாண்ட மற்றொருவர் சைவப் பெரியார். அவர் பலரை வலிய அழைத்து நல்லறிவைச் சொல்வது வழக்கம். அவராசைக் கேற்பப் பலர் திருந்தவில்லையே யென்ற கோபமும் அவருக்குண்டு. அவர் சொல்லும் விதத்தைக் கவனிப்போம்.

நாம் ஒருவனைப் பயனற்றவன் என்று சொல்ல வேண்டுமானால், அவனைச் சாப்பாட்டாசாமி என்போம். அதிகமாகச் சொல்ல நினைத்தால் அவன் காதில் விழும்படி அவனையே கூப்பிட்டு,'நீ சோறு போட்டால் சாப்பிடுவாயா? " என்போம்; அல்லது கொஞ்சங்கூட்டி, " நல்ல அல்வா சாப்பிடுகிறாயா? " எனலாம். நிரம்பக் கோபமாகச் சொல்ல வேண்டுமானால் அவனுக்குத் தின்னும் ஆற்றலேயில்லையென்று, நீ அல்வா தின்ன முடியுமா?' என்போழ்., கருணையா லெழுந்த கோபத்தாலே இப்படித்தான் கேட்டார் வுக்கரசர். “ மணிதர்காள்'' என்று எல்லாரையும் அழைத்தார். " இங்கே வம்மின்'' என்று கூப்பிட்டு, கிட்டத்தில் கூட்டி வைத்துக் கொண்டார். “ஒன்று சொல்லுகேன்'' என்று ஆரம்பிக்கிறார். என்ன சொல்லுகிறார்? சந்தோஷமான வார்த்தையா? எல்லாரையும் கெட்டிக்காரனென்றா சொல்லுகிறார்? இல்லவேயில்லை. "கனிதந்தாற் கனி யுண்ணவும் வல்லிரே?” ‘கனி நான் கொண்டு வந்து தருகிறேன். அந்தச் சிரமமும் உங்களுக்கு வேண்டாம். அப்படித் தந்தால் உங்களுக்கு உண்ண ஆற்றலுண்டா? வாயிருக்கா? வண்ணான் சாடியில் வாயைப் போட்டு விட்டீர்களா?'வழியில் போகிறவர்களை நல்லது சொல்வது போல் கூப்பிட்டு, கிட்டத்தில் வைத்துக்கொண்டு கன்னத்தில் பளீரென அறைந்தது போலிருக்கிறது. அடித்திருந்தாலும் பாதகமில்லை. அப்புண் ஆறும். அவர் நாவினாலன்றோ சுட்டுவிட்டார். இப்புண்ணாறுமோ? மெல்லவும் சுடவில்லையே.

மனிதர்காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்.
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லீரே?      - (அப்பர் தேவாரம்; பக்கம் 298, 7)
இப்படி நன்கு சுடவல்லவரா யிருப்பதால், இவருக்கு நாவுக்கரசர் என்ற பெயர் போலும்!

இந்தக் கொடுமையான கேள்வி கேட்டாரென்று நினைத்தேன். அதுமட்டுமல்ல. அக்கேள்வியிலே கனி தின்னவும் ஆற்றலற்றவன் என்றும் சொல்லி விட்டாரே. அவர் சொல்வது அடுக்குமோ? யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வது உண்மைதான். ஆயினும் இப்படியா சொல்வது ஆனால் இப்படிச் சொல்லியும் கனி கொண்டு வந்து தவியும் கனியுண்பதில் மக்களுக்கு  அக்கரையில்லையே! ஆர்வமில்லையே!

12. நமது அப்பர் கனி தின்றவர். ''ஈசனெனுங் கனியை', 'சிற்றம்பலத்தெம் திகழ் கனியை'', பாலில் திகழும் பைங்கனியை','' விருப்பால் விழுங்கியிட்டேனே'' என்கிறார். மனிதர் தின்னாமைக்கு வருந்துகிறார்; தின்ன வற்புறுத்துகிறார்.

13. மற்றொரு அடியார் இறைவனை,

மிக்கார் வேதவிமலர் விழுங்கும்
என் அக்காரக் கனியே'' என்கிறார்.

14. சமயமும் வாழ்க்கையும் சேர்ந்து செல்லவேண்டு மெனக்கண்டோம். இனி சமயமென்றா லென்னவென்றும், அது காட்டும் வழிகள் எவையென்றும் ஆராய வேண்டும்.

15. அண்டத்திலுள்ள பொருள்களை யெல்லாம் மூன்றாகப் பிரிக்கலாம்.
1. நான். 2. அண்டமும். அதிலுள்ள இதர உயிர்களும் பொருள்களும். இவ்வகையை இங்கு பிறர் என்று குறிப்பிடுவோம். 3 ஆண்டவன். என்னோடு பிறருக்கும் இறைவனுக்குமுள்ள தொடர்பை விளக்குகிறது.

16. அச்சமயம் காலத்திற் கேற்றவாறும், தேசத்திற் கேற்றவாறும், மக்களின் அறிவுக்கேற்றவாறும் இதுவரை மாறுபட்டே வந்திருப்பதை நன்கு உணருகிறோம்.

17. பற்பல சமயங்களிருப்பினும், அவைகளை மூன்று பெரும் வழிகளாகப் பிரிக்கலாம். சில சமயங்களில் இரண்டு மூன்று வழிகள் சொல்லப்பட் டிருப்பதுமுண்டு. கலந்து கிடப்பதுமுண்டு.

18. முதல் வழி: "எனக்காகப் பிறர் வாழ்கிறார்கள். நான் உலகத்தில் பெரும் பயன் பெறவேண்டும். என்னைக் காக்கவே கடவுளிருக்கிறார்''  என்று நினைப்பது இதில் தனி நபர் நலம் பெறுவதே முக்கிய நோக்கம்.

இவ்வழிக்கு உதாரணம் பூர்வ மீமாம்சை, வெவ்வேறு : பலன் கருதி யாகங்கள் பல செய்யப்படுகின்றன. காளி கருப்பனை ஆராதிப்போரும், ஊர்க்காவல் தெய்வங்களைக் கொண்டாடுவோரும், சனீஸ்வரனையும் இதர கிரகங்களையும் அதிகமாகப் பூசிப்போரும் அநேகமாக இவ்வழியிலிருப்பவர்கள். (Spiritualism) ஆவிகளை வழிபடும் மேல்நாட்டுக் கொள்கையும் இதன் பாற்படும்.
தான் நல்வழிப் படவேண்டு மென்னும் அவாவால் இவ்வழியேற்படுகிறது.

19. இவ்வழியில் மூன்றுபடி.
முதல்படி.: திருடன் கிரகண புண்ணிய காலத்தில் கன்னக்கோல் காய்ச்சுவதும், நல்ல பொருள்கள் களவில் கிடைக்க இறைவனை வேண்டலும், பல அக்கிரமச் செயல்களுக்கு ஆண்டவன் உதவி நாடலும் இப்படி.
இரண்டாவதுபடி: நன்மையைத் தரும் வரங்களைக் கேட்டு இறைவனிடம் பெறல்,

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.

மூன்றாவதுபடி: உயர்ந்த நிலையாகிய முத்தி வேண்டல்; காடுதேடிக் கடுந்தவம் செய்தல்.

20. இம்மூன்று படியும் சேர்ந்து ஒருவழி. இது ஆதியில் தோன்றிய வழி. மக்கள் நாகரிக மடைவதற்கு முன்னர், அவர்கள் சேர்ந்து வாழத்தெரிந்து கொள்ளு முன்னர்த் தோன்றிய வழி. முதல் படியில் பாவமும் பின்னர் புண்ணியமும் காணலாம். முதல் படியில் ஒழுக்கமின்மையும், பின்னர் ஒழுக்கமும் காணலாம்.

இவ்வழியை அவா வழியென்று சொல்லலாம். இவ்வழியிலுள்ளவர்களும் இறைவனை மறவாமல் நினைக்கிறார்கள். பரம்பொருளை மறந்தவர்களை இவ்வழியில் சேர்ப்பதில்லை. இறைவன் நினைப்பு மேல்படிக்கு இட்டுச் செல்லுகிறது. முதலில் கெட்டவற்றிலாசைவைத்து இறைவன் துணை நாடுகிறார்கள். பின்னர் நல்லவற்றிலாசை யேற்படுகிறது. கடைசியில் உயர்ந்த நிலையிலாசை. தான் முத்தியே சேரவேண்டுமென்று வேண்டலும் தன்னய ஆசையே. ஆகையால் இதனை அவாவழி யென்றோம். இறைவன் துணையால் மூன்று வகைப் பொருள் மூன்று படியில் கிடைக்குமென்று நம்பு கிறோம். 1 கெட்டவை, 2 நல்லவை, 3 உயர்நிலை. முதல் பொருளில் ஆசை மறைய இரண்டாம் பொருளில் ஆசை, இரண்டிலும் ஆசை ஆண்டவனருளால் மறைய மூன்றாம் பொருளிலாசை. பிறப்பிற்கு வித்தாம் ஆசையில் தொடங்கி, ஆண்டவனைக் கடைப் பிடித்த காரணத்தால், அவ்வாசை பிறவாமையே வேண்டும் ஆசையாக மாறுகிறது.

21. இவ்வழியை அநேக பெரியார்கள் கண்டித்திருக் கிறார்கள். ஆயினும் இது நம்மிடை மிகப் பரவி வேரூன்றி யிருக்கிறது. அடியார்க்கு “சுவர்க்கங்கள் பொருளலவே'' என்றார் ஞானச்செல்வர்.

''காமியஞ் செய்து காலங் கழியாதே'' என்றார் அடிகள்.

"நின்புகழில்
வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ
வைகுந்த மென்றருளும் வான்" என்றாரொருவர்.

“உளனோக்கு மின்பம் வேண்டி யுழலாதே'' என்பதும் நோக்குக.

புத்தபிரான் கூறுகிறார்: -

“மண்ணுலகம் ஈடேற இன்னும் ஓர்கால் மனிதவுடல்
தாங்க மனத்தாசை கொண்டென்”

மேலும் வற்புறுத்துகிறார்:

"மீளாத் துயர் கடலில் – உயிரெலாம்
வீழ்ந்து முழுகையிலே
பாழாங் குகை தேடிச் - செயுந்தவம்
பாவமே ஆகு மம்மா!                 - (ஆசிய ஜோதி)

22. இரண்டாவது வழி; “நான் பிறருக்காக வாழ்கிறேன். எனக்காக வாழவில்லை. இறைவன் என்னைப் படைத்தது சேவைக்கு'' என்பது. இதில் பிறர்நல மடைவதே முக்கிய நோக்கம்.

“அன்பர்பணி செய்யவென்னை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபாமே.   - தாயுமானார்

இறைவன் பணியாகப் பல தேசசேவை செய்தலும், இறைவன் பணியாகத் தாய் தன் குழந்தைகளைப் பேணலும்; தரித்திர நாராயணன் சேவையும், அடியார் பணியும், பசுவிற் கொரு வாயுறையும் இவ்வழியே (Positivism) பாசிட்டி விஸம் என்றும் மேனாட்டுக் கொள்கை இவ்வழி ஒத்ததே.

தன்னைப்போல் பிறரைப் பாவித்தலாலும், அன்பு பெருகுதலாலும் இவ்வழி யேற்படுகிறது.

இவ்வழியில் படி மூன்று.

முதல்படி: சுற்றத்தார்களுக்கும் தெரிந்தவர்களுக்குமே அன்பு காட்டுதல்.'Men have enough religion to hate one another but not enough religion to love one another.'- - Dr. Jonathan Swift. அதாவது “ஒருவரை யொருவர் வெறுப்பதற்கு வேண்டிய வேண்டிய அளவு நம்மிடம் சமயமுளது. ஆனால் ஒருவரை யொருவர் நேசிக்கப் போதுமான சமயமில்லை" என்று சொன்னார் டாக்டர் ஜொனாதன் சுவிவ்ட்.

இரண்டாவது படி: ஜாதி வரம்பாலோ, தேசவரம் பாலோ, கொள்கை வரம்பாலோ, சமய வரம்பாலோ, கட்டுண்டு அதற்குள்ளிருப்பவர்களையே நேசித்தலும், அவர்களுக்கே பணி செய்தலும்.

அன்புக்கோர் வரம்பு ஏற்படுத்தக் கூடாதென்று தெரிந்துகொண்டவர் கதையைப் பாருங்கள்.

ஹுக்கர் என்ற பாதிரியாரிருந்தார். அவர் எழுதிய Ecclesiastical Polity என்ற நூலில் கீழ்க்கண்ட அனுபவத்தை எழுதியிருக்கிறார்.

ஒருநாள் ஹுக்கர் தன்னறையில் உட்கார்ந்துகொண்டு ஏசுநாதரை நினைத்துக் கொண்டிருந்தார். இரவு நேரம். பனி கொட்டுகிறது. அத்துடன் இடியும் மழையும். அச் சமயம் ஒரு தொண்டு கிழவன் கதவைத் தட்டினான். ஈனக் குரலில் ''ஐயா” வெனக் கதறினான். ஹுக்கர் கேட்டார். “நீ கிறிஸ்துவனா?", "இல்லை ஐயா, ஆனால், தள்ளாடுங் கிழவன், மழையால் நனைந்து பனியால் நடுங்கி, இடியால் பயந்து பரிதவிக்கும் ஏழை'' என்ற பதில் வந்தது. ஹுக்கர் திறக்க முடியாதென்றார்.

கொஞ்ச நேரம் கழிந்தது. ஏசுநாதர் உருவம் முன்னிற்பதுபோல் தோன்றியது. அது ஹுக்கரைக் கேட்டது, “நீ ஏன் குளிரால் வாடும் ஏழைக் கிரங்காது, இடந்தர மறுத்தனை?'' ஹுக்கர் சொன்னார், "அவன் தங்களடிமையில்லை.” கிறிஸ்து நாதர், ''அவனுக்கு வயது எண்பதிற்கு மேலாகிறது. அவனை நான் இவ்வளவு நாள் உலகத்தில்வைத்துக் காப்பாற்றினேனே. நீ அவனுக்கொருவேளை உதவ மறுத்தனையே என்று அன்போடும் வருத்தத்தோடும் கூறி மறைந்தார். ஹுக்கரும் விரிந்த மனத்தோடு பாக்கியசாலியானார்.

சித்தாந்தம் – 1942 ௵ - செப்டம்பர் / அக்டோபர் ௴


No comments:

Post a Comment