Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்
பழஞ்சரித்திரச் சுருக்கம்.

இங்கே பழைமையென்பது இயன்றவரையில் நாகரீகமான காலத்தைக் குறிப்பதாகும்.

இடம்.

பூர்வீகமக்கள் முதல் முதல் வெப்பமிகுந்த நாட்டில், மூங்கிலடர்ந்த குறிஞ்சி நிலத்தில் தான் நெடிதுகாலம் வசித்துக்கொண்டிருந்தார்கள். இந்நாடு சூரியனது மையவரிக்கு உட்பட்ட இடமாகும். பிறப்புண்டாவதற்கு வெப்பம் இன்றியமையாதது.

மொழிநூல் பாயிரவியல் 66 - ம் பக்கம் குறிஞ்சி பார்க்க.

அக்காலத்தில் மழையும் பனியும் குளிரும் மிகுதியானபடியால், அக் காலவியற்கைக்கு மிகுவெயில் ஓர் செல்வமாயிற்று. சூரியனது காட்சி மற்றோர் செல்வமாயிற்று. குறிஞ்சி நிலம் மேடானதால் இவ்விருவகைச் செல்வமும் அதிலேயே சிறப்புடையன வாகும்.

இக்காரணங்களால் பூர்வீகமக்கள் சூரியனிடத்தில் விருப்பம் வைத்து மரியாதைபாராட்டி வந்தார்கள். இம்மரியாதையிலிருந்து தான் அவனுக்கு வணக்கமுண்டாயது.

குறிஞ்சியில் இயல்பாய் மூங்கில் எரிந்து கொண்டிருந்ததனால், மூங் கினெருப்பைத்தான் முதல் முதல் அறிந்தார்கள். சிகிமுகிக்கல் முதலியன பிறகு உண்டாயின. குறிஞ்சியிலிருந்த பூர்வீகமக்கள் கருநிறமுள்ளவர்கள், கோபமிகுந்தவர்கள், மிகநெடியர், சூரர், போரில் விருப்பமுள்ளவர்கள், சுணங்கனென்னும் நாயைத் துணைக் கொண்டவர்கள். விலங்குவகைகளில் மக்களிடத்தில் முதல் முதல் நாய்தான் தானாகவந்து சேர்ந்திருக்க வேண்டும் நாயேனென்னும் வழக்குத் தென்னாட்டில் தான் இருந்து கொண் டிருக்கின்றது.

உணவு முதலியன.

பாலே அனுபவ உணவாதலால் முதல் முதல் பாலும் பழமும் பிறகு மூங்கிலரிசியுமே பூர்வீகமக்களுக்கு உணவுப்பொருளாயின. மலைநெல், சோளம், கம்பு, தினை முதலியன பிறகுண்டாய உணவுப் பொருள்களாம். இம்மலைநெல்லே யவம் என்னும் தானியமாகும். மூங்கிற் குழாய்களே எல்லாப்பாத்திரங்களுமாயின. தானிய அளவுக்குரிய முகத்தலளவைதான் முதல் முதலுண்டாயது. முகத்தலளவைக்கருவிகளும் மூங்கிற்குழாய்களே. வீணைமுதலிய வாச்சியங்களும் மூங்கிலால் தான் முதல் முதல் செய்யப் பட்டன. கட்டில் பாய் சீப்பு தெப்பம் தண்ணீர்க்குழாய் முதலியனவும் மூங்கில்களே. மூங்கில் மடல்களைப்பதம் செய்து வருணங்களினால் எழுதி வந்தார்கள் எழுது தற்கருவி மயிலிறகு.

இங்ஙனம் பூர்வீகமக்களுக்குச் சூரியனும் மூங்கிலுமே சிறந்த செல்வமாயிருந்தன. அவர்கள் நாகரீகமில்லாதகாலத்தில் பேசிக்கொண்டிருந்த இயற்கை யொலிக்குறிமொழியின் வழியாய் உண்டாக்கப்பட்ட வழி மொழிக்கும் சூரியனும் மூங்கிலுமே ஆதாரமாகின்றன. வழிமொழியின் நடையும் அங்ஙனமே அமைந்திருக்கின்றது. மொழிநூற்றிறவுகோல் காண்க.  

வழி.

எங்கும் மூங்கிலடைந்திருந்தபடியாலும், வழி உண்டாக்குவதற்குக் கத்தி முதலிய ஆயுதங்களில்லாத காலமாதலாலும், மூங்கில் இயல்பாய் இருந்து எரிந்து தணிந்துபோன இடமே வழியாகக்கொண்டு பூர்வீகமக்கள் ஓர் குறிஞ்சியிலிருந்து மற்றோர் குறிஞ்சிக்குப் போயிருக்கின்றார்கள் இது தான் முதல்வழி.

நெய்தல்.

குறிஞ்சிபோல் மேடானதாய் வெயில்படும்படியான இடமாய்ச் சூரியனது காட்சிக்கு மிகு அழகியதாய் இருக்கின்றபடியால், பிறகு அவ்வழியாகவே நெய்தனிலத்தில் குடியேறினார்கள். மூங்கிற்புதர் முதலியன உயர்ந்து அடர்ந்திருந்தபடியால் வழியில்லாமையாலும் சூரியனது காட்சி தெரியாதபடி இருண்டிருந்தபடியாலும் மழைமிகுதியால் எங்கும் கசிவும் ஈரமுமாயிருந்தபடியாலும் குறிஞ்சியிலிருந்தவர்கள் அப்பொழுது முல்லை யிலிறங்கிக் குடியேறாமல் போனார்கள். இக்காரணங்களால் நெய்தனிலத் திலேயே நெடிது காலம் வசித்துக் கொண்டுவந்தார்கள்.

குறிஞ்சி நிலமக்கள் இரவில் மூங்கில் எரிவதாலுண்டாய ஒளியால் மகிழ்வதுபோல நெய்தனில மக்கள் இரவில் சந்திரனொளியால் மகிழ்ந்து கொண்டு வந்தார்கள். நெய்தல் மணல் நிலமாதலால் மூங்கில் இல்லை.

நெய்தல் மணல் நிலமாதலாலும் வேனிற்பருவத்தில் நிலாவெளிச்சத்தில் அதுமிக இனிதாதலாலும் விளையாட்டென்பது முதல் முதல் நெய்தலில் தான் உண்டாயது.

வர்த்தகம்.

குறிஞ்சியில் மூங்கிலரிசி முதலியன இயற்கைவிளை பொருளாதலாலும், நெய்தலில் உப்பொன்றே இயற்கை விளைபொருளாதலாலும், நெய்தனில மக்களுக்கு மூங்கிலரிசி முதலியனவும் குறிஞ்சி நிலமக்களுக்கு உப்பும் அவசியம் வேண்டும்படியான காலம் வந்தபடியால், பண்டமாற்றென்னும் வர்த்தகந்தான் முதல் முதலுண்டாயது.

போர்.

குறிஞ்சி நிலமக்களுக்கும் நெய்தனில மக்களுக்கும் பண்டமாற்றுக் காரணமாகப் பகையுண்டான படியால், இவ்விருவர்க்கும் போருண்டாயது. இடமுதலிய வலிவு பெற்றிருந்ததனால் குறிஞ்சி நிலமக்களே வென்றனர்..

அரசாட்சி.

உயிர்கள் வளர்வதற்கேற்ற வெப்பமுதலியன தென் றிசையில் மிகுந் திருந்தபடியால் அரசாட்சியென்பது முதல் தென் றிசையில் குறிஞ்சி நிலத் தில் தான் உண்டாயது.

கோட்டைமாளிகை சிறைச்சாலை பள்ளிக்கூடம் கோயில் முதலியன குறிஞ்சி நிலத்தில் தான் முதல் முதல் கட்டப்பட்டன. குகையில் தான் மந்திராலோசனை நடந்தது. களஞ்சியமுதலியனவும் அதிலேயேயிருந்தன.

குறிஞ்சி நிலமக்கள் நெய்தனிலமக்களை வென்று அரசுபெற்றபடியால் துறைமுகச் சுதந்தரம் பெற்றுச் சுங்கத் தீர்வை வாங்கிவந்தார்கள். முதல் முதல் தான் உப்பு தான் சுங்கத்தீர்வையாயிருந்தது. நெய்தனில மக்கள் தான் கப்பல் யாத்திரையிற் சிறந்தவரானார்கள். கடல்யாத்திரை தான் முதல் முதலுண்டாயது.

முல்லை.

சிறிது மழைவளம் குறைந்தபடியாலும், இடமில்லாமையாலும், குறிஞ்சியிலிருந்தவர்களும் நெய்தலில் இருந்தவர்களும் மெல்லமெல்ல முல்லையிலும் குடியேறத்தொடங்கினார்கள். முல்லையிற் குடியேறின பிறகு தான் அங்கே தும்புகளுண்டாயின. தூம்பு = நுழைவழி நெறிமுதலிய வழிகள். மூங்கிற்காட்டில் மூங்கில் எரிந்ததனாலுண்டாய வழிகளாம். தூம்பு முதலியன மூங்கிலொழிந்த மற்றைய காட்டினுள்ளே உண்டான வழிகளாம். இவ்வழிகளெல்லாம் ஆயுதங்களின்றி இயல்பாயுண்டாயின வாகும். –

மருதம்.

பிறகு முல்லையின் திருத்தம் மருதமாயிற்று. இது செயற்கை நிலம். அதாவது பிறகு உண்டாக்கப்பட்டது. குறிஞ்சி நெய்தல் முல்லை இம்மூன் றும் இயற்கை நிலம். ஆகநிலம் நான்கு ஆதலால் நானிலமென்பர். இம் மருதநிலம் வரவர உயர்ந்து நாகரீகம் அடையத்தலைப்பட்டது. அரசாட்சியும் உண்டாயது. அக்காலவியற்கைக்குக் கப்பல் வர்த்தகமே ஏற்றதாயி ருந்தபடியாலும், மருதநிலத்து அரசனுக்குத் துறைமுகச் சுதந்தரமில்லாத படியாலும், அது காரணமாக மருதநிலத்து அரசனுக்கும் குறிஞ்சி நிலத்தரசன் நெய்தனிலத்தரசனாகிய இருவர்க்கும் போருண்டாயது.

குறிஞ்சியும் நெய்தலும் உயர்ந்த இடமாதலால் மருதநிலத்தரசன் பலமுறையும் தோல்வியடைந்தான். மருதத்தரசனுக்கு உயர்ந்த இடமில் லாதபடியால் அப்பொழுது தான் போர் நிமித்தம் தேர் உண்டாக்கப்பட் டது. மருதநிலத்தரசன் தேர்ப்படை முதலியன மிகுதியாக்கவே குறிஞ்சி நிலத்தரசன் யானைப்படை முதலியனவும் மிகுதியாக்கினான். இருபெரு வேந்தர்க்கும் படைமிகுதிப்பட்டபடியால் பலமுறையும் போர் நடந்து கொண்டேயிருந்தது. கடைசியிற் சமாதானமாய்ச் சம்பந்தமும் செய்து வரலாயினர். சமாதானமான காலத்தில் குறிஞ்சி நிலத்தரசரும் தம்நிலத்திற்குச் சார்பான மருதத்தை உட்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். இவ்விரு பெருவேந்தர்க்கும் நெய்தனிலத்தரசன் முதலோர் உட்பட்டவராயினார்.

ஆயின் வரவரப்பிற்காலத்துச் செயற்கை நிலமாகிய மருதமானது இயற்கை நிலமாகிய குறிஞ்சி நிலத்து உதவியாலும், முல்லை நிலத்து உதவி யாலும் பலவகையிலும் உயர்ச்சிப்பெற்று என்றும் கப்பல் வர்த்தக முத. லியவற்றாலும் சிறந்திருந்ததென்பது பெறப்படுகின்றது. இம்மருத நிலத்து இருந்தவர்கள் தாம் பிறகு பிரிந்து ஆரியராயினர். இதற்குச் சிறந்த காரணங்களும் மேற்கோள்களும் உள்ளன.

குறிஞ்சி நிலத்து அரசர்களுக்கு யானைப்படையும், மருதநிலத்து அர சர்களுக்குத் தேர்ப்படையும் சிறந்தனவாதலால், நால்வகைப் படைகளைக் கூறுமிடத்துக் குறிஞ்சி நிலத்து அரசர் யானையை முற்கூறுவர். மருத நிலத்து அரசர் தேரினை முற்கூறுவர்.

கசரதது ரகபதாதி குறிஞ்சிவழக்கு.
ரதகசதுரகபதாதி மருதவழக்கு. -.

தேர் போர் நிமித்தம் உண்டாக்கப்பட்டதாதலால் இரதோச்சவம் சங்காரகிர்த்திய மென்பர்.'

ஆரியகுச்சரி யென்பது மருதயாழ்த்திறன் வகையுள் ஒன்றாயிருத்தலால் ஆரியர் பூர்வம் மருதநிலமக்களென்பதே துணிவு.

தமிழ்க்குச்சரி குறிஞ்சியாழ்த்திறன் வகையுள் ஒன்று.




பாலை.

பாலையென்பது நால்வகை நிலத்துக்கும் பொதுவாய் இருந்தது. கடலொதுக்கமுண்டான பிறகு அதற்கு நிலமுண்டாயிற்று. பாலை நெய் தல்போல மணல் நிலமாதலால் நெய்தலிலிருந்தவர்கள் தாம் பாலையிற் குடியேறினார்கள். பூர்வீகமக்கள் நெய்தலிற் குடியேறிய பிறகும் அம்பு முதலியன உண்டான பிறகும் தான் புலாலுண்ணும் வழக்குண்டாயது. மருத்துவ நூலும் தத்துவ நூலும் பெருகின பிறகு புலால் மறுப்புண்டாயது.

மாகறல் - கார்த்திகேய முதலியார்.

சித்தாந்தம் – 1916 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment