Sunday, May 10, 2020



வியாசசூத்திரவிசாரம்.

கிருஷ்ண துவைபாயனரென்னும் வியாசர் இயற்றிய பிரமசூத்திரமென்னும் வியாசசூத்திரத்திற்கு முதலில் ஏற்பட்ட வியாக்கியானம் போதாயன முனிவரியற்றிய போதாயன விருத்தியேயாம். இது பின்வந்த பாஷியகாரர்கள் எல்லாராலும் எடுத்தாளப்பட்டதாகத் தெரியவருகிறது. இரண்டாவது பாஸ்கரியம். இது வைஷ்ணவாத்து வித மதத்தின் வழியுள்ளது, மூன்றாவது ஸ்ரீ நீலகண்டசிவாசாரியர் பாஷியம், இது சிவாத்துவைத மதத்தின் வழியுள்ளது. இதில் ''பூர்வாசாரியர்கள் இங்ஙனம் வியாக்கியானங்கள் செய்தார்கள் என்றும்'' ''வியாசசூத்திரம் பூர்வாசாரியர்கள் செய்த உரைகளாற்கலங்கியது பற்றி''  எனவும் கூறியிருத்தலின், போதாயன விருத்திக்கும், பாஸ்கரியத்திற்கும் நீலகண்டபாஷியம் பிந்தியதேயாம். ஸ்ரீவித்தியாரண்ணியரும் வேதபாஷியத்தினுமுந்தியது பாஸ்கரியமென்றனர். நான்காவது ஸ்ரீசங்கராசாரியர் பாஷியம். இது கேவலாத்துவிதமத வழியுள்ளது. ஸ்ரீஅப்பயதீட்சிதரியற்றிய சிவாத்துவித நிர்ணயத்தால் ஸ்ரீநீலகண்ட பாஷியமுந்திய தென்றும் ஸ்ரீசங்கராசாரியர் பாஷியம் பிந்திய தென்றுந் தெரிய வருகிறது. ஐந்தாவது யாதவியம். இது அத்துவிதமரபாயுள்ளது. ஆறாவது ஸ்ரீராமாநுஜபாஷியம். இது வைஷ்ணவ பரமாயுள்ளது. இராமாநுஜர் யாதவப்பிரகாசரிடத்துப் படித்ததாயும் யாதவியத்தைக்கண்டித்திருப்பதாயுந் தெரியவருகிறது. ஏழாவது ஸ்ரீஆனந்ததீர்த்தாசாரியர் பாஷியம். இதில் ஸ்ரீசங்கரபாஷியத்தை முற்றும் கண்டித்து ஸ்ரீராமாநுஜர் பாஷியத்தில் சிலபாக மறுத்து எழுதப்பட்டிருக்கிறது. எட்டாவது ஸ்ரீவல்லபாசாரியர் பாஷியம். ஒன்பதாவது ஸ்ரீசோமநாதாராத்திரியர் பாஷியம். இது வீரசைவம்.
வியாசசூத்திரத்திற்கு இதுகாறுங்கூறிய பாஷியங்கள் ஒன்பது. ஸ்ரீஆனந்ததீர்த்தர் சரித்திரத்தில் இவர் இருபத்தொரு பாஷியங்களைக் கண்டித்ததாகத் தெரியவருகிறது. ஆகவே, வியாசசூத்திரத்திற்குப் பலபாஷியங்களுண்டனெத் தெரியவருகிறது. இவற்றுள் ஸ்ரீநீலகண்டபாஷிய மொன்றுமே சைவபாஷியமெனச் சைவர்பலர் கூறி வருகின்றனர். இது சைவபாஷியமாகவிருக்குமேல், அகச்சமயங்களுள் ஒன்றாக வைத்து ஸ்ரீஉமாபதிசிவாசாரிய சுவாமிகளால் கண்டிக்கப்பட்ட நிமித்தகாரண பரிணாமமாகிய சிவாத்துவித சைவப் பெயபால் இப்பாஷியம் வழங்குவானேன்? ஸ்ரீ நீலகண்டர் தமது பாஷி யத்தில் அனேக உபநிடத பிரமாணங்களைக்காட்டிச் சிவபெருமானே பரம்பொருளென வச்சிரலேபமாக நாட்டியுள்ளார். இது சைவர்கள் யாவராலுங் கொண்டாடத்தக்கதேயாம். இவர் காட்டிய பிரமாண ங்களால் தாபிக்கப்படும் சிவபெருமானாகிய முதல்வனைப் பற்றி ஏதாவது வியாச சூத்திரத்தினுளுளதோவெனவாராயின் சந்தேகத்திற்கு இடமாயிருக்கிறது. சிவசப்தமாவது விஷ்ணுசப்தமாவது வியா சசூத்திரத்திலில்லை. பிரமசப்தமே மலிந்து கிடக்கிறது. அப்பிரமசப்தம் சிவசப்தத்தின் பரியாய வார்த்தையெனக் கொள்ளுவமேயாயின், ஸ்ரீ இராமாநுஜர் கொள்கையின்படி பிரமசப்தம் விஷ்ணுவின் பரியாயநாம மெனக் கூறுவதைத் தடுக்க முடியாதெனத் தெரியவருகிறது. சைவ வைஷ்ணவ பாஷ்யங்களில் எடுத்துக்காட்டியுள்ள உபநிடதப் பிரமாணங்களினாலேயே இவ்வுண்மை வெளிப்படும். அன்றியும் ஏகான்மவாதக் கொள்கைக்கே உரிய பிரமபரிணாமவார்த்தை வியாசசூத்திரத்திலிருக்கக்கண்டு சைவ வைஷ்ணவ பாஷியகாரர்கள் அதனைத் தங்கள் சமயங்கட்கு வெகுகஷ்டத்துடன் திருப்பியருத்தஞ் செய்தி'ருப்பதாகத்தெரிய வருகிறது. இங்ஙனமாக, வியாசசூத்திரத்திற்குள்ளே எந்தபாஷியத்தின் கருத்துப் புகுந்து கொண்டிருக்கிறது எனத் தெரிதற்கிடமில்லை மதாபிமானத்தால் தங்கள் தங்கள் பாஷியமே வியாசசூத்திரத்தின் கருத்தெனச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆனால், வியாசர் சூத்திரத்தை ஒருபுறமொதுக்கி வைத்து, ஸ்ரீநீலகண்ட பாஷ்யத்தில் காட்டப்பட்டுள்ள பலிஷ்டபிரமாணங்களைக் கொண்டு மற்றையர் பாஷியகாரர்களின் கருத்தைப் பூர்வபட்சமாக்கத் தடையில்லை. ஏனெனின் இவர் காட்டிய பிரமாண மனைத்தும் வேதாந்தமேயாகலின், ஈண்டு வேதாந்தமென்றது உபநிடதங்களை.
நிற்க, வடமொழி தென்மொழி கரை கண்டுணர்ந்த மாதவச்சிவ ஞானயோகிகளும், இவருக்கு முந்திய சித்தாந்தப் பிரகாசிகையாசிரியரும் வியாசசூத்திரத்தினை ஏகான்மவாத நூல் என்றதென்னை? சுத்தாத்துவித சித்தாந்த வைதிகசைவர்கள் அனைவராலும் கொண்டாடப் பெற்றுப் போற்றி வரும் திராவிட மகாபாஷிபத்தில், வியாச சூத்திரமாகிய வேதாந்தமானது உரூடப்பெயரால் எடுத்துக்கூறும் ஏகான்ம வாதத்தைச் சாதிக்கும் வியாசநூல் என்றதென்னை? ஆசிரியர் சிவஞானயோகிகள் தமது பாஷியத்தில் ஸ்ரீநீலகண்டபாஷியத்தை மாத்திரம் எடுத்தாண்டு இப்பாஷ்யத்திற்கு மூலமாக விருந்த வியாசசூத்திரத்தை யொதுக்கியதென்னை? வைதிக சைவசித்தாந்தத்திற்கு மூலாதாரமாகப் பதிவாக்காகிய வேதபாஷியமான சிவாகமங்கள் போதாவோ? பசுவாக்காகிய வியாசசூத்திரம் அவசியமோ? ஸ்ரீகண்டசிவாச்சாரியர் நீங்கலாக, மற்றைய பாஷியகாரர்கட்குப் பதிவாக்காகிய சிவாகமங்கள் உடன்பாடன்மையின் பசுவாக்காகிய வியாசநூலை யாதரவாகத் தேடவேண்டுவது அத்தியாவசியமன்றோ? வைதிக சித்தாந்தத்தின் உண்மையினை யறியவும் தாபிக்கவும் வியாசசூத்திரம் அவசியம் வேண்டுமோ? இந்நூலைக்கைவிட்டால் சித்தாந்தத்திற்கு ஏதாவது ஆபத்து விளையுமோ? வியாச சூத்திரத்தையன்றிச் சித்தாந்தத்திற்கு ஆதரவில்லை யென்பதைத் திருக்கைலாய பரம்பரைத்திருவாவடுதுறையாதீனத்து முனிவர் அறியாரோ? வைதிக சைவ சித்தாந்த பாரங்கதர்கள் இவ்விஷயங்களில் சிறிது சிந்திப்பாராக,                
மணவழகு.
சித்தாந்தம் – 1914 ௵ - ஏப்ரல் ௴

No comments:

Post a Comment