Sunday, May 10, 2020



வாய்மையும் தூய்மையும்
மா. ப. தியாகராஜன், B. A.,

"வாய்மையும் தூய்மையும் தந்து நின் திருவடிக் காளாக்குவாய்'' என்று இராமலிங்க சுவாமிகள் சென்னை கந்தகோட்டத்து முருகனை வேண்டிப்பாடுகிறார். இறைவன் திருவடிக்கு நாம் ஆளாக வேண்டின் வாய்மையும் தூய்மையும் ஆகிய இருபண்புகளும் வேண்டற்பாலன என்பது அவருடைய கருத்தாகும். அத்துடன் இதற்கு விளக்கம் போன்று 'உலகிற் சீயென்று பேயென்று நாயென்று பிறர் தமைத் தீங்கு சொல்லாத தெளிவும்" வேண்டுகிறார். திருவள்ளுவரும்

''வாய்மை எனப்படுவது யாது? எனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்”
என்று கூறுகிறார்.

"பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு"
என்றும் மற்றொரு குறளிலுங் கூறுகிறார்.

"ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்" 

என்பது ஒரு குறள். எனவே சொற்கள் இனிமை பயப்பனவும் தீமை பயப்பனவுமாக அமைகின்றன. ஒழுக்க முடையாரும் வாய்மையுடையாரும் தீயபயப்பனவாகிய சொற்களைப் பேசமாட்டார்கள். பெரிய புராணமாகிய பெருங்கா வியத்தில் சேக்கிழார் பெருமான் மிக அச்சத் துடன் தீமையான காரியங்கள் நிகழ்ந்த இடத்தைப் பற்றிக் கூறநேர்ந்த போதும் மங்கலச் சொற்களையே பயன்படுத்துகிறார். மெய்ப்பொருள் நாயனாரை வஞ்சனை யால் சிவவேடம் பூண்டு கொல்லவந்த முத்தநாதன் அவரை ஆகமம் காட்டிக் கொன்றனன் என்று கூறவேண்டிய இடத்து அவன் தான் கொண்ட கருத்தை முடித்தான் என்று கூறுகிறார்.

நாம் போற்றிப்பணியும் அடியார்களுடைய வரலாறுகளை ஆய்ந்து பார்த்தால் ஒவ்வொருவரும் பிறருக்கு நன்மை செய்யும் பணியையே மேற்கொண்டு தாம் கொண்ட கொள்கையில் வழுவாமல் வாய்மையுடன் வாழ்ந்தவர்களே. வாய்மை தவற நேரிடில் உயிர் துறக்கக் துணிந்தவர்களாகி இறைவனருளைப் பெற்றனர்.

திருநீலகண்ட நாயனார் தன் மனைவியார் மொழிந்த "திருநீலகண்டத் திருவாணையைக் கடைப்பிடித்து உறுதியாக நின்றது மன்றி அயலாரறியாது வாழ்ந்தார். அப்படி அவர் வாய்மை பூண்டு தன் மனைவியுடன் வாழ்ந்தமையை மக்களுக்கு எடுத்துக்காட்டாகப் புலப்படுத்தக் கருணை கூர்ந்து இறைவனே அடியவர்கோலம் பூண்டுவந்து அவருக்குத் திருஓடு ஒன்று கொடுத்து அதைக் கேட்கும் போது மீண்டும் தருதல் வேண்டுமென்று பணித்தனர். பின் அவ்வோட்டையும் மறைத்தருளி அந்த நிகழ்ச்சியை மக்கள் முன் மனைவியின் கரம் பிடித்துத் தான் சொல்வது உண்மையெனக் கூறுமாறு செய்து அவர் வாழ்ந்த வாய்மை வாழ்வைப் பலரறியச செய்து போற்றி அருள பாலித்தார் எனக் காண்கிறோம்.

அதே போல் அமர்நீதி நாயனார் அவர் கொடுத்த கோவணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தம்உடல் பொருள் ஆவியையும், மனைவியையும் மகனையும் துலாக்கோல் மேல் அதற்கிணையாக நிறுத்தி அர்ப்பணித்துப் பேறு பெற்றனர்.

காரைக்காலம்மையார் தன் கணவர் கொடுத்தனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றை அடியார்க்கு அளித்து விட, கணவர் சாப்பிடும் போது இரண்டு கனிகளையும் கொடுக்க முடியாமல் வருந்த, இறைவன் அவருடைய வாய்மையைக் காப்பாற்ற மாங்கனி ஒன்று அம்மையார் கையில் வர அருள் புரிகின்றார்.

இவ்வாறாக இறைவன் அடியார்களுக்கருள் புரிதலை நோக்குமிடத்து அவர் வாய்மையுடையவர்களையே ஈடேற்ற எண்ணுகிறார் என்பது பெறப்படுகிறது. சில அடியவர்களுக்கு வாய்மை தவறியதால் பெருந்தண்டனையும் கிடைக்கிறது சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஒற்றியூர் எல்லையைக் கடக்க மாட்டேன் என்று உறுதி அளித்துச் சங்கிலியாரை மணந்தும் அவ்வூரெல்லையை விட்டு அவர் திருவாரூரை நினைந்து வரும்போது அவருடைய கண்ணிரண்டும் பார்வையற்றுப் போகின்றன.

குமரகுருதாசனென்று வழங்கும் பாம்பன் சுவாமிகள் பழனிக்குச் செல்ல உத்தரவு கிடைத்தது என்று தன் நண்பரிடம் விளையாட்டாகச் சொல்ல அந்தப் பொய்க் கூற்றையும் பொறாது முருகன் அவருக்குக் கோர உருவத்துடன் முன்தோன்றி ''என்னுடைய உத்தரவின்றிப் பழனிக்கு நீ வரலாகாது'' என்று கட்டளையிட்டதாகவும் அவர் வாழ்நாள் முழுதும் முருகன் உத்தரவு கிடைக் காததால் பழனிக்குப் போகவில்லையென்றும் அவருடைய சரித்திரம் கூறுகிறது.

இராமகிருஷ்ணரைப் போன்ற பெரியவர்கள் சிறு விஷயத்திலும் தாம் கூறுவது பிழைபடக் கூடாதென்று எண்ணியவர்கள். ஒருநாள் ஒரு நண்பர் வீட்டிற்கு வருவதாக இராமகிருஷ்ணர் வாக்களித்திருந்தார். அன்று விடாது மழை பெய்யவே அவர் இரவு நெடுநேரம் காத்திருந்தும் மழை விடவில்லை. ஆனபடியினால் மழையில் நனைந்து சென்று தான் சொல்லியபடி வந்ததாதக் கூறி விட்டுத் திரும்பி விட்டார் என்று கூறப்படுகிறது.

அபிராமிபட்டர் என்ற பெரியார் தேவிமுன் கோயிலில் மெய்ம்மறந்து வழிபாடு செய்து இருந்த சமயத்தில் சரபோஜி மன்னன் அவரிடம் பேச இச்சை கொண்டு அவரை அணுகி ''இன்று என்ன திதி'' என்று வினவ சந்திரபிம்பம் போன்ற தேவியின் வதனத்தை மனக் கண்ணிணால் பார்த்தபடியே "இன்று பௌர்ணமி” என்று கூறிவிட்டாராம். அன்று அமாவாசையென்று மன்னவனுக்குத் தெரியுமானபடியால் அவரை அன்று மாலை வரவழைத்து பூர்ண சந்திரனைக் காட்டும்படி வினவ அபிராமி அந்தாதிபாடி தேவியை வேண்டி அவர் நிற்க, தேவி தன் கணையாழியை வானத்தில் வீசி பூர்ண சந்திரனைப் போன்று விளங்க அருள்பாலிக்க, அபிராமபட்டரின் வாய்மை காப்பாற்றப்பட்டது. அவர் மெய்ம்மறந்து கூறி விட்டார் என்று அசரீரியாய் மன்னவனுக்குக் கூறலாம். அதுமுறையன்று. அடியார்களின் வாக்குப் பொய்யாகக் கூடாதென்ற தன்மையால் அம்மை அவ்வாறு செய்தார்களென்பது பெறப்படுகிறது.

ஒருவரிடம் கவிபாடும் திறமையும் வாய்மையும், தூய்மையுமிருப்பின் ஆண்டவன் அவர்களுடைய பாடல்களைக் கேட்டு மகிழ்வதோடு சில சமயம் அச்சம் கொள்வதாகவும் தெரியவருகிறது. திரு அருணையில் குகை நமசிவாயர் என்னும் பெரியார் தன்னை அவ்வூர்க் குடிமக்கள் சோதித்திழிவுபடுத்த ஒரு பையனைப் பாடையில் கட்டிப் பிணமெனப் பெயரிட்டு அவர் முன்னிலையில் கொண்டு வந்து முறையிட்டனர். அவர் 'போனது போனது தான்'' என்று கூற, அப்பையன் உயிர் துறந்தான். வந்தவர்கள் மிகவும் வருந்தி மன்னிப்புக் கேட்ட போதிலும் அவர் வாக்கு மீண்டும் மாறாதெனக் கூறி அவர்கள் மேல் வசை பாட எண்ணி

“கோளரிருக்கும் ஊர் கொன்றாலும் கேளா ஊர்
... அழியும் ஊர் அண்ணாமலை

என்று முடிக்க இருந்தமையைத் தடுத்து அண்ணாமலை அண்ணல் " அழியாவூர் அண்ணாமலை" எனப்பாடும்படிச் செய்ததாக அவருடைய வரலாறு கூறுகிறது.

ஆண்டவனருளைப் பெற, வாய்மையும் தூய்மையும் அவரைப் புகழ்ந்து பாடும் திறனும் ஒவ்வொருவரும் பெறல் வேண்டுமென்பது இப்படிப்பட்ட அடியவர்கள் சரித்திரத்தினின்றும் காணக்கிடக்கின்ற பேருண்மையாகும். அப்படியிருக்க "பொய்மையே பெருக்கிப் பொழு தினைச் சுருக்கும்" நம் போன்றவர்களை ஏன் ஆண்டவன் தண்டிப்பதில்லை யென்றால், நாம் பொய்மையே பேசும் வாயால் கூறும் சொற்களுக்குச் சென்று பிறரைத் தாக்கும் ஆற்றலில்லாமல் போகிறது. நாம் ஒருவரைப் பழிப் போமானால் அது நம்மைவிட்டு ஒரு அணுவளவும் விலகாமல் நம்மை அவ்வொலி அலைகள் தாக்கி நம்மையே கெடுக்கும் "தன்னெஞ்சே தன்னைச்சுடும்'' என்றபடி நம் தீய எண்ணங்களும் சொற்களும் நம்மையே கெடுக்கும். விளக்கில் கை வைத்தால் சுடும் என்பது ஆண்டவன் கட்டளை. தண்டனை அல்ல. அது போல் பயனில் சொல் பாராட்டும் வாயால் பேசும் சொற்கள், சொல்பவர்களையே தாக்கு மாதலால் அவைகளால் உலகுக்குத் தீமையில்லையென்பதால் இறைவன் நம்மைத் தண்டிப்பதில்லை. அதே போல் நாம் வாய்மையின்றிய வாயால் விடுக்கும் வேண்டு கோளுக்கும் இறைவன் செவி கொடுப்பதில்லை.

எனவே நாம் உய்யும் வகைதான் என்னே? வாய்மை நெறிபெறும் வழிதான் என்னே? பிழைபட வாழ்ந்த வாய் தூய்மைப்படும் விதம்தான் என்னே? தூயசொற்கள் நாம் பேசவேண்டுமானால் தூயசொற்களைக் கேட்டு நாம் பழக வேண்டும்.

"செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?

என்று வள்ளுவரே வெறுத்துக் கூறுவாராயின் ஆண்டவன் சினத்திற்கு நாம் முன்னிற்க முடியுமா?

சிறியோர் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள்வோம் என்னும் நோக்கு”

என்பது மற்றொரு குறள். எனவே பெரியவர்கள் வாய்மையுடன் வாழ்ந்தவர்களுடைய சொற்களைக் கேட்கக் கேட்கத்தான் நாமும் தூய்மையான சொற்களைப் பேச முடியும். எனவே ஒவ்வொரு நாட்டிலும், சமயத்திலும் பெரியார்களைத் தோற்றுவித்து அவர்களுடைய நல்லுரைகளை மக்கள் கேட்டுய்யும்படி இறைவன் செய்துள்ளான். அப்படிப்பட்ட குருமார்களின் வாக்கை வேதவாக்காக மக்கள் பின்பற்றுகின்றனர். அப்படிப்பட்ட வாய்ப்பு தமிழிலும் சைவத்திலும் கிடைத்திருப்பது போன்று ஏனைய நாட்டிலோ மொழியிலோ மதத்திலோ கிடைத்திலது. தன் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் கண் நோக்கத்தால் இருவினையொப்பு'' ''மலபரிபாகம்'' வரும்படி அருளி அஞ்செழுத்தை ஓதுவித்து முத்திபதம் அருளினார் திருஞான சம்பந்தரென்றால் அவரைப்போன்ற ஆற்றல் பெற்றவர்கள் எங்கும் இதுவரை தோன்றியதாகவே கேட்டதில்லை. அவர் மூவாண்டில் தம் புனித வாயால் மலர்ந்து அழுது பாடிய "தோடுடைய செவியன்' என்ற பதிகம் முதல் திருமுறையில் முதல் பாடலாக அமைந்துள்ளது. அவர் பாடிய பாடல்கள் 1, 2, 3 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. திருநாவுக்கரசர் சமண சமயத்தில் காலத்தைப் போக்கியதால் சூலை நோயால் தண்டிக்கப்பட்டுப் புனிதரானார். அவர் சமண சமயத்தை விடுத்துத் தம் தமக்கையிடம் தீக்ஷை பெற்று சைவநெறி மேற்கொண்டு பாடிய பாக்களே 4, 5, 8 - ஆம் திருமுறைகள். சுந்தரரைத் தடுத்தாட்கொண்டு அடிமைப் பதமருள அவர் பாடியது 7 - ஆம் திருமுறை ஆகும். இறைவனே மனங்கசிந்து எழுதிவைத்திருக்கும் திருவாச கம்'' என்னும் நூல் 8 - ஆம் திருமுறையாகவும் வகுக்கப் பட்டுள்ளது. திருவாசகத்தைப் பாடிய மாணிக்கவாசகரைப் போன்று இறைவனை அனுபவித்து மனம் கசிந்து பாடிப் பேரருள் பெற்றவர் இனி ஒருவரைக் காணப் போகிறோமா?

அப்படிப்பட்ட பாடல்களை நாம் வாயாரப்பாடி இறைவனை மகிழ்விக்க முடியவில்லை யென்றால் நாம் திருஅருள் பெறும் வகைதான் என்னே? நம் பொய்மை வாயைப் புனிதப்படுத்த வழிதான் என்னே?

அவர்களுடைய பாடல்கள் நம்வாக்கைப் புனிதப் படுத்தப் பயன்படவில்லை யானால் அவைகளால் என்ன பயன்? எந்தப் பாடலை நாம் பலமுறைப் பயிலுகிறோமோ அந்தப் பாடலை இயற்றியவரின் அனுபூதி நமக்கும் கிட்டும் என்பது ஓர் உண்மை. இல்லையேல் வயிற்று வலிக்காக அப்பர் பாடியுள்ள பாடலை நாம் பாடுவதால் என்ன பயன்? பூம்பாவையை எழுப்ப திருஞான சம்பந்தர் பாடிய பாடலை நாம் பாடுவதால் என்ன பயன்? கண்ணைப் பெறு வதற்குச் சுந்தரர் பாடிய பாடல்களை நாம் பாடுவதால் என்ன பயன்? ஓரோர் சமயத்தில் ஓரோர் காரியசித்திக்காக அவர்கள் பாடியுள்ள பதிகங்களை நாம் பாடுவதால் நமக்கு அக்காரியங்கள் சித்திக்க வேண்டாமா?  '' பரவை இவள் வாடி வருந்தாமே'' எனப்பாடுகிறார் சுந்தரர். அந்தப் பாடல்களை நாம் பாடுவதால் நமக்கு என்ன பயன் வரும்? எனவே அப்படி நமக்காகப் பெருமக்கள் அப்பாடல்களைத் தொகுத்துத் தந்தது வீண்தானோ? என்றெல்லாம் சிந்திக்குமிடத்து அந்தப் பாக்களில் பொதிந்து கிடக்கும் சொற்றொடர் ஆற்றல்களன்றோ நம்மைத் தூய்மைப்படுத்தி அவர்களுடைய இறை அனுபவங்களை நமக்கும் கிட்டுமாறு செய்விக்கின்றன.

தூங்கி விழித்தெழுந்ததும் பசி உணர்ச்சி நமக்குவர, பல்லைத்துலக்கி வாயை அலம்பிச் சிற்றுண்டியைப் பசி ஆற அருந்துகிறோம். அதேபோல் இறை உணர்ச்சி வந்தவுடன் "இறைவன் ஒருவனுளன் அவனை வழிபட வேண்டும்' என்ற பசி வந்தவுடன் அவனருளைப் பெற வேண்டும் எனும் வேட்கை நமக்கு வருமாயின் அவனைப் ''போற்றி" செய்யப் பன்னிரு திருமுறைகள் மூலம் நாம் பொய்புகலும் வாயைத் தூய்மைப்படுத்திக் கொண்டா லன்றி அவன் கருணையுடன் தரும் அருளைப் பருக முடியாது. அதனால் தான் "தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்'' என்று பாடும் திருவாசகத்தைப் பாடினாலும் நமக்கு இனிமை தட்டுவதில்லை. மனம் கசிவதில்லை.

சைவசமயப் பரமாசாரியர்களைப் போன்று அருள் பெற்றுப் பாடிய பெருமக்கள் வேறு சமயத்தில் இல்லையாதலால் "மேன்மைகொள் சைவநீதி''  யென்று நாம் பெருமையுடன் சைவ சமயத்தைப் பாராட்டுகிறோம். வாய்மையின்மையைப் போக்கிப் புனிதப்படுத்த அந்த அந்த மதகுருக்களின் திருநாமத்தை மனனம் செய்வதையோ, அந்த அந்தத் தெய்வங்களின் நாமத்தை இடையறாது சொல்லுதலையோ புறச்சமயத்தார் மேற்கொள்கின்றனர். எனினும் பிறப்பிறப்பின்றிய பெரும்பேற்றை உயிர்களுக்கு உதவிபுரிய, சைவசமயம் கொள்ளும் முழு முதற் கடவுளும் பிறப்பிலி இறப்பிலி யாகியுமுள்ள சிவ பெருமான் திருவருள் துணை வேண்டும். அதைப் பெறுவதற்கு அவருடைய அடியவர்கள் பாடிய பாடல்களை வாயாரத் தினம் ஓதுதல் வேண்டும். எனவே சிவபெருமானின் அஞ்செழுத்தும் அவர்மேல் பாடப்பட்டுள்ள பன்னிரு திருமுறைகளும் கொண்ட சைவசமயமே மேலான பொதுமைச் சமயம். பன்னிரு திருமுறைகளை ஓதிச் சிவபெருமானைப் போற்றி " போற்றி'' என்று போற்றித் திருத்தாண்டகங்கள் கூறி மலர் தூவி வழிபாடு செய்தாலன்றி மேன்மை கொள் சிவானுபூதி பெறுவது இயலாது என்பதை நன்றாக உணர்தல் வேண்டும். நோய் நீடித் திருப்பின் அதற்குத் தக்க ஆற்றல் படைத்த மருந்தைக் கொடுக்க வேண்டுவது போல், பன்னாள் வாய்மையற்ற வாழ்க்கையில் பயனில் சொற்கள் பல பேசிக் காலத்தைப் போக்கிய மக்களுக்கு நால்வரைப் போன்ற அனுபூதிமான்கள் பாடிய பாடல்களைப் பாடிப்பழகுதல் தான் (பன் னிருதிருமுறைகள்) இன்றியமையாத சாதனையாகும்.

சித்தாந்தம் – 1964 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment