Saturday, May 9, 2020

பதி இலக்கணம்
[புலவர்மணி - சித்தாந்த வித்தகர்: முரு. பழ. இரத்தினம் செட்டியார்.]
புதுவை மாநாட்டில் பேசியதன் சுருக்கம்

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! பெரியோர்களே!

இங்கே கூட்டம் குறைவாக இருக்கிறதென்று நண்பர்கள் சிலர் சொன்னார்கள். இருக்கிற கூட்டம் கலையாமல் இருந்தால் போதும் என்று நான் நினைக்கிறேன். செய்தித் தாட்கள் பலவற்றிலும் நிகழ்ச்சி நிரலை வெளியிட வேண்டும். அப்படிச் செய்தால் தான் கூட்டம் நிறைய வரும்..

இப்பொழுது நான் பேசஎடுத்துக் கொண்ட பொருள் “பதி இலக்கணம்'' என்பதாகும். எனக்கு முன் பேசிய அன்பர்கள், வேறு தலைப்புகளில் பேசினாலும் இறைவனிடத்துக் கொண்ட பேரன்பால் அவன் சொருப இலக்கணம் பற்றி நிறையக் கூறினார்கள். அவர்கள் கருணை கூர்ந்து எனக்கு விட்டுத் தந்த இறைவனின் தடத்த இலக்கணம் பற்றி இரண்டொன்று சொல்லக் கருது கிறேன்.

இறைவன் தன் நிலையில் நிற்பதைச் "சொருபம்'' என்றும், அவன் பிற பொருட்களோடு தொடர்புற்று நிற்கும் நிலைபைத் தடத்தம்''  என்றும் கூறுவர்.

"ஒன்றாகியும் வேறாகியும் உடனாகியும்" நிற்பது இறைவனின் தடத்த இலக்கணங்களுள் ஒன்றாகும்.

''ஒன்றாகி நிற்கின்றான்" என்றால் அதன் பொருள் என்ன? கலப்பால் ஒன்றாகி நிற்கின்றான் எனச் சாத்திரத்தில் படிக்கிறோம். இறைவன் எங்கும் நிறைந்தவனாதலால் எல்லாப் பொருட்களிலும் நிறைந்து நிற்பதையே ''கலப் பால் ஒன்றாகி' எனச் சாத்திரம் சொல்வதாகச் சிலசமயங் களில் சாதாரணமாகக் கருதிவிடுகின்றோம்.

இருபொருட்கள், அவை தூலமாயினும் சூக்குமமாயினும், ஒரே இடத்தில் இருப்பதென்பது சாத்தியமன்று; ஒரு பொருளினிடத்தே மற்றொரு பொருள் இருந்தால் அந்த அளவுக்கு வியாபகம் குறையவே செய்யும்; பாலும் நீரும் ஒன்றாகக் கலந்து நிற்கிறதே? என்றால் அங்ஙனமே கலக்கும் போது அளவில் கூடிவிடுமாதலால் ஒரே இடத்தில் அவை இரண்டும் இல்லை என்பது தெளிவு; பிரமம் சர்வ வியாபகப் பொருள்; எனவே அதனிடத்தே உயிர்களும், மலங்களும் உண்டென்பது பொருந்தாது; இருப்பது பிரமம் ஒன்றே; ஏனைப் பொருட்கள் வெறும் தோற்றமே அன்றி உண்மை அல்ல" என்பது சங்கரர் வேதாந்தத்தின் கருத்தாகும். வேதாந்தம் இங்ஙனம் கூறுவதாகப் "ப்ரம்ம வித்யா" பத்திரிகை ஆசிரியர், சோம சுந்தரநாயகர் அவர்களை மறுக்கும் கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

வேதாந்த நூற்பயிற்சி மிக்க அந்த ஆசிரியர் இங்ஙனம் கூறுவதால், வேதாந்திகளின் கருத்து இவ்வாறு இருக்குமென்றே நாம் கொள்ள வேண்டியதிருக்கிறது.

"கடவுள் அதிசூக்குமப் பொருள்; அஃது இடம் வேண்டிய பொருள் அன்று; இடம் வேண்டாப் பொருளாகிய கடவுளினிடத்தே இடத்தைக் கற்பித்துப் பேசுவது தவறு; சூக்குமப் பொருட்கள் இடம் வேண்டாமலே தம்முள் நிறைந்து நிற்க முடியும்; இன்னும் இறைவனை நோக்க உயிர்களும் ஏனைப் பொருட்களும் தூலமேயாகும். தூலமாகிய நீரில் சூக்குமமாகிய சூடு எங்ஙனம் நீரின் எல்லாப் பகுதியுள்ளும் நீக்கமற நிறைந்து நிற்கிறதோ அதே போல அதிசூக்குமப் பொருளாகிய கடவுள் ஏனைப் பொருட்களிடத்தே நீக்கமற நிறைந்து நிற்க இயலும், இதனையே உமாபதி சிவம், திருவருட் பயனில்' ''எரியுறு நீர்போல்" எனக் கூறியருளியிருக்கிறார்; இறைவனின் சர்வ வியாபகத்துள் உயிர்களும் ஏனைப்பொருட்களும் வியாப்பியமாயும் வியாத்தியாயும் நிற்றல் சாத்தியமே யாகும்'' என்று நாம் விடைகூறுகின்றோம். இடம் வேண்டாப் பொருளாகிய இறைவனிடத்தே இடத்தைக் குறியாக வைத்துப் பேசுவது தவறேயாகும். ஆனால் இங்கே வேறொரு தடை எழுகிறது; அதனைப் பற்றி நாம் ஆராய வேண்டும்.

நீரில் சூடு நிறையும் பொழுது, தண்ணீர் வெந்நீராகுகிறது; சூடு அதிகரிக்குமானால் தண்ணீர் ஆவியாக மாறி வற்றிப் போகிறது. இறைவன் பேராற்றலும் பேரறிவும் வாய்ந்தவன். அவன் உயிர்களுள்ளும் ஏனைப் பொருட் களுள்ளும் வியாபிக்கும்பொழுது அவையாவும் தம் இயல்பு கெட்டோ, அடங்கியோ நிற்க வேண்டும்; அல்லது நீர்வற்றிப் போவது போல இறைவன் வியாபகத்துள் அவை நிற்க முடியாமல் அழிந்து போக வேண்டும். நறுமணம் மிகுதியும் பரவும் பொழுது, தீ நாற்றம் அடங்கிப் போகின்றது; அங்ஙனம் அடங்கவில்லையேல், நறு மணத்தினும் பார்க்கத் தீ நாற்றத்தின் வலி கூடுதலாக இருக்கிறதென்றே கொள்ள வேண்டியது வரும். பேரறிவுப் பொருளாகிய இறைவன் வியாபித்து நிற்கும் நிலையில் அறியாமையைச் செய்யும் மலமும், பந்த முற்ற உயிர்களும் தம் இயல்பு கெடாமலோ, அடங்காமலோ நின்றால் அவை இறைவனை விட வலிமை மிக்கன என்று கொள்ளவேண்டியது வரும் அன்றோ?'' ஞாயிறு இருந்தும், படல முற்ற கண் ஞாயிற்றை அறியாமை போல, இறைவன் இருந்தும், மலபந்தமுற்ற உயிர் அவனை அறியாது நிற்கின்றது" என்ற கருத்தைக் கொண்டு வந்து இங்கே குழப்பக் கூடாது. உயிர் இறைவனை அறிய முடியாமல் நிற்பதற் குத்தான் இதனைக் கூறலாம். இறைவனின் சர்வ வியாபகத்துள் உயிரும் பாசமும் நிலைபெறுவதற்கு இதனைக் காரணமாகக் கூறமுடியாது. வன்மை மிக்க ஒரு பொருள் பரவும் பொழுது, வன்மை குன்றிய பொருட்களை அழித்தோ, நிலைகெடச் செய்தோ, அடக்கியோ, தான் மீதூர்ந்து நிற்பதே இயற்கையாகும் எனவே உயிர்களும் பாசமும் நிலைகெடாமல் இறைவன் வியாபகத்துள் நிற கின்றன என்பது பொருத்தமாகுமா? இறைவனின் பேராற்றலுக்கும் பரிபூரண வியாபகத்திற்கும் இஃது இழுக்காகாதா? இந்தச் சிக்கலைச் சைவ சித்தாந்தம் எங்ஙனம் தீர்க்கின்றது?

இறைவன் பேராற்றலும் பேரறிவும் வாய்ந்தவன் என்பதோடு அவன் பெருங்கருணையும் உடையவன் என்பதை நாம் மறக்கக் கூடாது. பெருங்கருணை வாய்ந்த இறைவன் உயிர்கள் தன் வியாபகத்துள் நிலைபெறும் பொருட்டு, அவற்றுள் நீக்கமற நிறைந்து நிற்பதோடு அமையாமல் அவையாகவும் நிற்கின்றான். குழந்தைக்கு இருப்பு நல்கும் தாய், குழந்தையால் பற்றப்படும் பொருட்களுக்கும் இருப்பு நல்குவது போல, உயிர்கள் நிலைத்தற் பொருட்டு அவையாகவே நிற்கின்ற இறைவன், அவ்வுயிர்களால் பற்றப்படும் பொருட்களும் நிலைபெறும் பொருட்டு "அதுவதுவாகவும்" நிற்கின்றான். பேராற்றல் வாய்ந்த இறைவனால் மட்டும் தான் இங்ஙனம் நிற்க முடியும். இதனால் தான், "God is all'' -'கடவுளே அனைத்து மாகின்றான்" எனக் கூறுகின்றோம். "All is God”  - “அனைத்தும் கடவுளாகின்றன என்பதுநேர் பொரு ளில் பொருத்தமாகாது. கடவுள் எல்லாமாக நிற்க முடியும்; எல்லாம் கடவுளாக நிற்க முடியாது. முத்தி நிலையிலும் உயிர் சிவமாக நிற்கவில்லை. உயிரைச் சிவமாக்கி இறைவன் நிற்கின்றான்; "சிவமாக்கி எனையாண்ட'' என்னும் திருவாசகம் இதனைத் தெளிவுறுத்தும். எனவே, "ஒன்றாகி" நிற்பதென்பது, இறைவன் எல்லாப் பொருட்களிலும் நிறைந்து நிற்கின்றான் என்பதோடு அந்தந்தப் பொருளாகவும் நிற்கின்றான் என்பதை உணர்த்துகிறது என நாம் அறிந்து கொள்ள வேண்டும். "அவன் இவனாகி நிற்றலால் விடயங்கள் அவனுக்கன்றி இவனுக் காயின'' என இதனையே சிவஞான சுவாமிகள் குறிப் பிடுகின்றார். இறைவன் கருணையால் அவை அவையாகவே நிற்பதால், அவனுடைய வியாபகமும் கெடவில்லை; உயிர்களும், பாசமும் தம் இயல்பு கெடாமல் நிலை பெறவும் முடிகிறது. இதனால் ஒன்றாகி நிற்பதன் மூலம் இறைவன் வியாபகத்துள் எல்லாப் பொருட்களுக்கும் இருப்புக் கிடைக்கின்றது என்பது தெளிவு. இஃது ஒன்றாகி நிற்பதன் பயனாகும்.

அடுத்து, "வேறாகி” நிற்பதை ஆராய்வோம். உயிர்களாகவே இறைவன் நின்றால் அவை பந்தமுற்ற நிலையிலேயே என்றும் இருக்க நேரிடும். இதனால் தான் வேறாகியும் நின்று அறிவிக்க வேண்டியவனாகிறான். முற்றறிவும் எல்லையில ஆற்றலும் உடைய இறைவன் ஒன்றாகி நிற்பதற்காக விகாரம் அடையாது தாக்கற நிற்க முடியும் அன்றோ? எனவே ஒன்றாகி நிற்கின்ற அவன் அதே சமயம் வேறாகவும் நின்று உயிர்களுக்கு அறிவிக்க முடியும்.

உயிர்கள் யாவும் ஒரே தன்மையுடையன அல்ல. இதனால் தான் அவை பலவாக இருக்கின்றன. ஒவ்வோரு யீர்க்கும் அதற்கேயுரிய தனி இயல்புகள் வெவ்வேறு உண்டு.

பத்தும் பதினைந்தும் இருபத்தைந்து என்று ஆசிரியன் தன் நிலையில் உடனே கூறிவிடமுடியும். ஆனால் எல்லா வகுப்புக்களிலும் உள்ள மாணவர்கள் அனைவர்க்கும் உடனே "இருபத்தைந்து'' என்று அறிவித்தால் அவர்கள் புரிந்து கொள்ள முடியுமா? தொடக்க வகுப்பிலுள்ள மாணவன் அறிந்து கொள்ளும் வண்ணம்'' பதினொன்று பன்னிரண்டு "என விரல் விட்டு ஒவ்வொன்றாக எண்ணிக் காட்டியே அறிவிக்க வேண்டும். ஆசிரியர் ஏன் விரல் விட்டு எண்ண வேண்டும்? எல்லாம் தெரிந்த அவர் உடனே சொல்ல வேண்டியது தானே? என்று கேட்பதிற் பொருளில்லை அன்றோ? உயிர்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியாக அறிவித்து உடனடியாக முத்திநிலைக்கு இட்டுச் செல்வது என்பது உயிர்களின் நிலைக்கு ஏற்ற தன்று, அந்தந்த உயிர்களின் தனி இயல்புகள், அனுபவ நிலைகள் ஆகியவற்றிற்கு ஏற்பவே இறைவன் அறிவிக்க வேண்டும். இங்ஙனம் அறிவிப்பதன் மூலம் படிமுறையே ஆன்மாக்கள் அறிவு விளக்கம் பெற்று முன்னேறு கின்றன. "வேறாகி'   நிற்பதால் உயிர்கள் தத்தம் இயல் பிற்கு ஏற்ப அறிவு விளக்கம் பெறமுடிகிறது. இது 'வேறாகி" நிற்பதால் ஏற்படும் பயனாகும்.

இனி “உடனாகி'' நிற்பதைக் கவனிப்போம். அறிவிக்கப்பட்ட பொருட்களைப் பற்றி அனுபவித்தே உயிர்கள் முன்னேற வேண்டும். ''அநுபவித்தல்' என்பது என்ன? உயிர்களின் அறிவு, இச்சை, செயல்கள் இயங்குவதே " அநுபவித்தல்'' என்று கூறப்படும். இறைவன் ஒன்றாகி நிற்பதால், அவனை விடுத்து உயிர்களின் அறிவு, இச்சை, செயல்கள் தனித்து இயங்கவராது. இறைவனின் அறிவு, இச்சை, செயல்கள் இயங்காமல் வாளா இருக்க, உயிர்களின் அறிவு, இச்சை, செயல்கள் இயங்கும் என்றால், ஒன்றாகி நிற்கும் நிலை அடிபட்டுப் போகும். அக்நிலை போய்விட்டால் உயிர்கள் நிலைக்கவே முடியாது. எனவே உயிர்களின் அறிவு, இச்சை, செயல்கள் இயங்கு வதற்காக, இறைவனின் அறிவு, இச்சை, செயல்களும் இயங்க வேண்டியதிருக்கிறது. இறைவனின் அறிவு, இச்சை, செயல்களுக்கு ஏற்றவாறு உயிர்களின் அறிவு, இச்சை, செயல்கள் இயங்கும் ஆற்றல் உடையவை அல்ல. எனவே உயிர்களின் அறிவு, இச்சை, செயல்களுக்கு ஏற்பவே கருணை நிறைந்த இறைவன், தனக்கென எந்த அனுபவமும் வேண்டாதிருந்தும், தன் அறிவு, இச்சை, செயல்களை இயங்கச் செய்கின்றான். அவை அறிதற் பொருட்டுத் தானும் உடன் நின்று அறிகின்றான்; அவை இச்சித்தற் பொருட்டுத் தானும் உடன் நின்று இச்சிக் கின்றான்; அவை செயலாற்றுதற் பொருட்டுத் தானும் சயலாற்றுகின்றான். உயிர்கள் வற்றை, அவை அறிவதற்காகத் தானும் உடன் நின்று அறிவது இறைவனின் அளப்பரும் கருணைக்கும் பெரியதோர் எடுத்துக் காட்டாகும். இதனால் தான் வேறாகி நின்று அறிவிக்கும் உபகாரத்தினும் பார்க்க உடனாகி நின்று அறியும் உபகாரம் பெருஞ் சிறப்புடைய தெனக் கூறப்படுகிறது. இங்ஙனம் உடனாகி நிற்பதன் மூலம் உயிர்கள் அறிந்தும் இச்சித்தும் செயல்புரிந்தும் அனுவம் பெற்று முன்னேறுகின்றன. இஃது உடனாகி நிற்பதன் பயனாகும்.

பேரறிவும், பேராற்றலும், பேரருளும் உடைய இறைவன் இங்ஙனம் ஒரே சமயத்தில் ஒன்றாகியும், வேறாகியும் உடனாகியும் நின்று, உயிர்கள் இருத்தற்கும், அறிதற்கும், அநுபவித்தற்கும் துணை செய்கின்றான். இதனால் இறைவனின் சர்வ வியாபகத்திற்கும், பேரறிவுக்கும், பேராற்றலுக்கும் பேரருளுடைமைக்கும் சிறப்பே அன்றி இழுக்கொன்றும் இல்லை என்பது தெளிவு.

இனி இறைவனின் மற்றொரு தடத்த இலக்கணம் பற்றிச் சிந்திப்போம்.

இறைவன் தன் இயல்பில் அருவமோ, அருவுருவமோ உருவமோ உடையவன் அல்லன். ஆனால் கருணையால் உயிர்கள் முன்னேறும் பொருட்டு அருவம், அருவுருவம், உருவம் ஆகிய மூவகைத் திருமேனிகளையும் கொள்கின்றான். இம் மூவகைத் திருமேனிகளில் உருவத் திருமேனியே நம்மால் எளிதில் தியானிக்கக்கூடியது என்பதைக் கூற வேண்டுவதில்லை. ஆனால் இவ்வுருவத்திருமேனிகள் கற்பிதம் என்றும் நம் மனம் நிலைத்தற் பொருட்டுத் தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கி, இவற்றைப் பெரியோர்கள் அமைத்துத் தந்தனர் என்றும் சிலர் கூறுகின்றனர். எல்லையில் ஆற்றலும் கருணையும் நிறைந்த இறைவன் உருவத் திருமேனி கொள்ள முடியும் என்பதை இவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனர். அப்புறம் ஏன் இவை கற்பிதம் என்றும், தத்துவப் பொருளை உணர்த்து வதற்காக இவற்றைப் பெரியோர்கள் அமைத்துக்கொடுத்தனர் என்றும் கூற வேண்டும்? இறைவனின் கருணை உண்மை என்றால், அவன் கருணையால் கொள்ளும் உருவத்திரு மேனியும் உண்மையேயாகும், இறைவனின் உருவத்திரு மேனிதான் தத்துவங்களுக்கு மூலமாகுமே அன்றி இறைவனின் உருவத் திருமேனிக்குத் தத்துவங்கள் மூலமாக மாட்டா. தத்துவங்களுக்கு முதன்மை நல்கி, இறைவனின் உருவத்திருமேனிக்கு இழுக்கு நேரும் வண்ணம் பேசுவது இறைவன் இருப்பிலும், அவன் கருணையிலும் நம்பிக்கை இன்மையையே காட்டும் என்பதை நாம் உணர வேண்டும். எனவே அன்பர்கள் பொருட்டு, இறைவன் பல்வகை உருவத் திருமேனிகள் கொள்ளுகின்றான் என்றும், அவை உண்மையே என்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கோயிலில் இறைவன் கொண்ட பல்வேறு திருமேனிகள் பிரதிட்டை செய்யப் பெற்றிருக்கின்றன. அவற்றுள்

"இஷ்ட மூர்த்தமாக" ஒன்றை நாம் கொள்ள வேண்டும். கோயிலுக்குச் செல்வது நமக்கேற்ற மணமகனைத் தேர்ந்தெடுப்பதற்கேயாகும். இராமகிருஷ்ண பரமஹம்சர், "கலியாணம் ஆயிற்றா?'' என்று தம்மிடம் வருவோரைப் பார்த்துக் கேட்பாராம். "இஷ்டமூர்த்தி இன்னும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லையானால் உங்களுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை'' என்று அதன் பொருளை விளக்கிக் கூறுவாராம். எனவே நாம் நாள்தோறும் பிரமச்சாரியாகவே 'கோயிலுக்குச் சென்று வருவதில் பயனில்லை.

விருப்பமான ஒரு மூர்த்தியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அம்மூர்த்தி முருகனாக இருக்கலாம்; விநாயகனாக இருக்கலாம்; தில்லைக் கூத்தனாக இருக்கலாம் அம்பிகையாக இருக்கலாம். நமக்கு விருப்பமான எந்த மூர்த்தியையும் எடுத்துக் கொள்ளலாம். மூர்த்திகளுள் உயர்வு, தாழ்வு கருதுவது தவறாகும். ''ஒருவரே பல பேருளர் காண்மினே" என்பது தேவாரம். நாம் எடுத்துக் கொண்ட உபாசனாமூர்த்தியைத் தியானிக்க வேண்டும்; அம்மூர்த்தியின் நாமத்தை இடைவிடாது சொல்லவேண்டும்; ஆசைகளைக் குறைத்து நல்லொழுக்கத்துடன் வாழ முயல வேண்டும். இது போதுமானது. சரியை பெரிதா? கிரியை பெரிதா? யோகம் பெரிதா? ஞானம் பெரிதா? என விவாதிப்பதிற் பயனில்லை. ''ஞான சாதனத்தில் நிற் போரும் மயர் வறுத்தற் பொருட்டுச் சரியை முதலியன செய்தல் வேண்டும்" எனச் சிவஞான பாடியம் சிறப்புப் பாயிரத்தில் சிவஞான சுவாமிகள் எழுதியிருப்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். திருவருள் என்பது சடமன்று. ஒருபடியில் நாம் ஏறி விட்டால் ஏனைப்படிகளுக்கு அது நம்மைத்தானே இட்டுச் செல்லும். நம் உபாசனாமூர்த் தியே பரமசாயுச்சியத்தையும் தருவார் என உறுதி கொள்ள வேண்டும்.''மேற்படியில் நிற்கிறோம்" என்றுகருதினாலே கீழ்ப்படிக்கு நாம் வந்து விட்டோம் என்னும் உண்மையை உணரவேண்டும். நாம் செய்யவேண்டியது உபாசனையே; ஏனையவற்றை உபாசனாமூர்த்தி பார்த்துக் கொள்வார். அந்தக் கவலை நமக்கு வேண்டியதில்லை; கவலைப்படுவதும் தவறாகும்.

இதுகாறும் பொறுமையுடன் செவிமடுத்த உங்களுக்கும், எனக்குப் பேச இடமளித்த சமாஜத்தார்க்கும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வணக்கம்

சித்தாந்தம் – 1964 ௵ - ஜுன் ௴


No comments:

Post a Comment