Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்
பக்தி.

பக்தி? இது பங்கு சேவிக்குதல், பக்தியோகஞ்செய்தல், கருத்து எனப்பல பொருள்படினும், ஈண்டுக்கருத்து என்பதையே பொருளாகக் கொண்டு ஆராய்வோம். இனிக்கருத்து என்பது எண்ணம் எனப்பொருள் படுதலால் நாம் எதனிடத்தேநம் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ அதுவே பக்தியென்று அறிகின்றோம். ஆயினும் இக்கருத்து எதனிடத்தேயும் செல்லுவதேயாயினும் சிறப்பாக ஐங் குரவராய அரசன், தந்தை, தமையன், உபாத்தியாயன், குரு ஆகிய ஐவரிடத்துச் செல்லும் கருத்தாகிய எண்ணமே பக்தியாம். இவ் ஐங்குரவருள்ளும் ஞானாசாரியனாகிய குருவினிடத்துச் செலுத்தும் பக்தியே வீட்டிற்கோர் சிறந்த வித்தாகும். அது எவ்வாறோவெனின் ஞானாசாரியனே எல்லா மாகின்றானென்று மோலோர் பணித்துள் ளார்களாகையால் அவனிடத்துப் பக்தி செலுத்துவதே பரகதியடைவதற்குப் பரமோபாயமாகும். இது கருதியே,

"குரவனே யயனரி குரவனே சிவன்
குரவனே தந்தை தாய் குரவனேயெலாம்
குரவனே யென்று நூற் கூறுமுண்மையைக்
குரவனே யென்னிடையின்று காட்டினாய் "
எனக் கூறிய தாகும்.

ஆதலால் ஐங்குரவர் ஆணை மறவா தொழுகும் நாம் இருமுது குரவராகிய தாய் தந்தையர் நம்மாட்டுச் செய்த நற்செயல்களை யெண்ணி அவர் மாட்டு நீங்காததோர் பக்தியைச் செலுத்தி அவர் ஆணையின் வழி நின்று பின்னர் போதகாசிரியனாகிய குரவனை யடுத்து ஐயந்திரிபு அறப்பன்னூல் கற்று அவனுக்குப் பக்தி செலுத்தி ஞானாசாரியனாகிய குருவைநணுகி அவன் திருநோக்கைப் பெற்று அனலிடைப்பட்ட மெழுகெனவுருகித் தன் வசமழிந்து அவன் வசமாகி அவன் பரிசத்தையும் திகழும் வாக்கையும் பெற்று அனலிற்பட்ட செம்பானது உருகிப் பரிசவேதியினால் களிம்பு நீங்கிப் பத்து மாற்றுத் தங்க மாவது போல் அவன் கொளுத்தும் ஞான அனலால் உருகி, அநாதியே ஆன் மாவைப்பற்றியுள்ள ஆணவமலத்தடிப்பாகிய காளிதம் ஒடுங்கிப் பக்குவராகி அவன் பதமலரடியில் பக்தி செலுத்துதல் வேண்டும். அவ்விதம் பக்தி செலுத்துவோமாயின் அவன் திருவாக்கில் எழுந்ததோர் ஒப்பரிய சொல்

 ''அப்பனீ யம்மைநீ யன்புடைய மாமனும்
மாமியும் நீ
ஒப்பரிய மாதரும் ஒண்பொருளுநீ ஒருகுலமும்
சுற்றமும் ஒரூரு நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையா யென்னுள்ளம் துறப்பிப்பாய் நீ
இப்பொன்னீ இம்மணி நீ இம்முத்து நீ
யேரூர்ந்த செல்வ னீயே.''

என்றபடி எல்லாமாயுள்ள இறைவனாகிய சிவபெருமான் திருவடியில் கருத்துச் செல்ல ஏவும். அவன் திருவடியிற்கருத்துச் செல்லுதலும் உலகிற்காணப்படும் மண் பெண் பொன்னாகிய மூன்றனையும் மறந்து வீட்டின்கண் ஆசையுண்டாகிச் சரியை முதலாகச் சொல்லப்பட்ட நான்கினுள் சரியையிற் சென்று எங்குமுள்ள பரஞ்சுடராய சிவபெருமான், அவனை வணங்கத்தந்த தலையால் அவன் திருவடியை வணங்கி கேட்பதற்களித்த செவியால் அவன் திருப்புகழைக் கேட்டு, வாய்மை கூற அருளியவாயால் அவன் தோத்திரங்களைப் பாடிக் கரங்களோ ரிரண்டும் கொண்டு அவன் திருவடியிற் பலமலர் சிந்திக் காலிரண்டும் கொண்டு அவன் திருக்கோயிலைப் பலமுறை வலம் வந்து, அவன் திருவருளால் அளவிலாது ஓடுகின்ற பக்தியால்கைகொட்டிப் பதம்பெயர்த்தாட நேரும். இவ்விதம் நித்தமும் நாம் பக்தி செலுத்துவோமாயின் யார்க்கும் தந்தையாய சிவபெருமான் நம் பக்தியாகிய வலையில் சிக்கிக்கொள்வதில் சிறிதும் ஐயமின்றாம். இப்பெரியதோர் தகுதியை நாம் அறியவே வாதவூரடிகளாகிய மணிவாசகப் பெருந்தகையும் “பத்திவலையிற் படுவோன்காண்க'' எனப்பரிந்து ஓதினர். இம்முறை பற்றி ஒழுகாது எடுத்த யாக்கையின் அரிய பயனை இழந்து எரிவாய்ச் செல்கின்ற பேதையர்பால் பரிவுற்றே வாகீசப் பெருந்தகையாகிய திருநாவுக்கரையரும்,

''பூக்கைக்கொண்டான் பொன்னடி போற்றிலார்
நாக்கைக்கொண்டானாமம் நவிற்றிலார்
யாக்கைக் கேயிரை தேடியலமந்து
காக்கைக் கேயிரை யாகிக்கழிவயே''

எனப்புத்தி போதித்தனர் என்க.

அன்றியும் நான்முகக்கடவுளாகிய நாயனாரும் இக்கருத்து ஒன்று பற்றியே "சுற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாடொழா ரெனின்" எனக்கடவுள் வாழ்த்திற்கசிந்து கூறினர். ஆதலால் வானத்தில் தோன்றும் வில்லைப் போற்றோன்றி மறையும் இவ்யாக்கையை யாப்புடையதாகக் கருதாது உயிரெனும் பாத்தியில் உணர்வெனும் நீர்ப்பாய்ச்சி உள்ளமாகிய கிழியில் (படத்தில்) அவன் திருவுருவத்தை உருப்பெற வெழுதி அதை விடாது உற்று நோக்கி உடல் புளகித்து அவனைப் பக்தி செய்வதிலும் வேறுபயன் யாதுளது.

அன்றியும் ஆன்மா சார்போதனாக வுள்ளானாகலால் சிவபெரு. மான் திருவடியில் பக்தி செலுத்த நம் கருத்தைச் செலுத்தாவிடின் பயனொன்று மில்லாது முடியும். அது அன்றியும் இப்பிறவியில் மாத்திரம் அல்லாமல் எப்பிறவியை யடைந்த காலத்தும் சிவபெருமான் திருவடியில் பக்தி செலுத்துவதே போந்த பொருள் என்று அறிவதற்கே



''புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவாதிருக்க வரந்தால் வேண்டும் இவ்வையகத்தே"

எனச் சமயாசாரிய சுவாமிகளும்

“வேண்டுவதொன்று தமியனெப்பிறப்பும் வெந்தழல் நரகிடைவிழினும்
காண்டகு சிறப்பின பம்பையர் சூழக்கற்பகநீழல் வைகிடினும்
தூண்டகு சுடரே களாநிழலமர்ந்த சோதியே கருவைநாயகனே
ஆண்டகாய் நினது திருவடிக்கமலத்தன் பெனுமழிவிலாப் பொருளே"

என அரசர் பெருந்தகையாகிய அதிவீரராம பாண்டியரும் அருள் செய்தனர். அன்றியும் எறும்பு முதலாக யானை கடைசியாக உள்ள எல்லா ஆன்மாக்களுக்கும் சிவபரஞ்சுடரிடம் பக்தி செலுத்தியே பரகதியடைந்ததாகப் பத்துப் புராணங்களிற் பரக்கக்காண்கின்றோம். இப்பக்தியொன்றொழிய மற்றைய தீர்த்தங்களிற் றோய்தலும் திரை கடலாடுதலும் திவ்பயாத்திரை செய்தலும் கனலில் நிற்பதும் ஜலத்தில் நடப்பதும் ஆகிய சித்திகளும் வீட்டு நெறியையடை விப்பதற்கு வழியாகாவென நாம் அறிகின்றோம். இதனைப்,


பரவை யாடினும் நதிகளாடினும் படியெல்லாம் நடந்து அடிகள் தேயினும் குரவராயினும் கனவினூடுநின்ற தன் கொதிபொறுக்கினும் கதிகிடைக்குமோ "

என்று மேலோர்வாக்கே நிலைநிறுத்தும்.

இவ்விதம் பக்தி செய்தவர்களில் ஆசாரிய சுவாமிகள் ஒருவரிடம் பக்தி செய்து பரகதியடைந்தநம் பெருமானாகிய அப்பூகியடிகளும் சிவலிங்கப் பெருமானிடத்துப் பக்தி செலுத்தித் தலையீற்றுப் பசு தன கன்றைவிட்டுப் பிரிய வெண்ணாததைப்போல் இரவு பகல் இறை வனைவிட்டுப் பிரியாது தன்கண் இடந்து அப்பி ஆறு தினங்களில் முத்தியடைந்த நம் தெய்வமாகிய கண்ணப்பதேவரையும் எடுத்துக் காட்டலே பொருந்தும் என எண்ணுகின்றேன். இப்பேரருளாளர் இருவவரையும் புகழ்ந்து பேசிய,

''உற்றானலன்ற வந்தீயினின் றானலனூண்புனலா
அற்றானலனுகர் வந்திருநாவுக் கரசெனுமோர்
சொற்றானெழுதியும் கூறியுமே யென்றுந்துன் பில்பதம்
பெற்றானொரு நம்பியப் பூதியென்னும் பெருந்தகையே "


''நிலத்திற்றிகழ் திருக்காளத்தியார் திருநெற்றியின்மே
னலத்திற்பொழிதரு கண்ணிற் குருதிகண்டுண்ணடுங்கி
வலத்திற் கடுங்கணையாற்றன் மலர்க்கண்ணிடந்தப்பினார்
குலத்திற்கிராதனங் கண்ணப்பனாமென்று கூறுவயே"

என்னுந் திருச்செய்யுள்களே விளக்கும்.

ஆதலால் பன்றிக்குட்டிகளுக்கும் பரிந்து முலையூட்டிய பசுபதியாகிய பரமன் திருவடியிற் பக்தி செலுத்தி நாம் எடுத்த யாக்கையாலாய பயனை எய்து வோமாக சுபம்,

கி. குப்புச்சாமி, (களந்தை கிழான்)

சித்தாந்தம் – 1915 ௵ - அக்டோபர் ௴


No comments:

Post a Comment