Sunday, May 10, 2020



ஜீவகாருண்யவொழுக்கம்.

உலகத்தில் உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பை பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க தலைப்பட்ட ஆன்ம இன்பசுகத்தைக் காலமுள்ள பொழுதே விரைந்து அறிந்து அடையவேண்டும். அந்தத்தலைப்பட்ட ஆன்மவின்பவாழ்வு எத்தனைவகை யென்றறியவேண்டில், இம்மையின்ப வாழ்வு, மறுமையின்பவாழ்வு, பேரின்பவாழ்வு எனமூன்றுவகை யென்று அறிய வேண்டியது.
   
அவற்றுள் சிறியதேக கரணங்களைப் பெற்றுச் சிறியமுயற்சியால் சிறிய விடயங்களைச் சில நாள் அனுபவிக்கப்படுகின்ற இன்பத்தை இம்மையின்பவாழ்வு என்றறிய வேண்டும். இம்மையின் பலாபமாவது மனிதப்பிறப்பில் தேகத்திலும் கரணங்களிலும் புவனத்திலும் போகங்களிலும் குறைவின்றி நல்லறிவு உடையவர்களாய், பசி, பிணி, கொலை, முதலியதடைகளில்லாமல் உறவினர் சிநேகர் அயலார் முதலியருந்தழுவ சந்ததி விளங்கத்தக்க சற்குணமுள்ள மனைவியோடு விடயங்களைச் சில நாள் அனுபவிக்கின்றதை இம்மையின் பலாபமென்றறிய வேண்டும்.
   
மறுமையின்பமாவது யாதெனில், உயர் பிறப்பில் பெரிய தேககரணங்களைப் பெரியமுயற்சியால் பெரிய விஷயங்களைப் பல நாள் அனுபவிக்கின்ற இன்பத்தை மறுமையின்ப வாழ்வு என்றறிய வேண்டும், மறுமையின் பலாபம எது வென்னில் உயர் பிறப்பைப்பெற்று இம்மையின்ப லாபத்தைக் குறிக்கப்பட்ட நற்குணங்களெல்லாம் பொருந்த உயர் நிலையில் சுத்தவிடயங்களைப் பல நாளனுபவிக்கின்ற இன்பலாபத்தை மறுமையின்பலாபமென்றறிய வேண்டும். மறுமையின்ப லாபத்தை யடைந்தவர் பெருமை யாதென்றறிய வேண்டில், அன்பு தயை முதலிய சுபகுணங்களைப் பெற்றுச் சுத்தவிடைய யின்பங்களை எண்ணியபடி தடைபடாமல் முயன்று பல நாளனுபவித்துப் புகழ்பட வாழ்த லென்றறிய வேண்டும்.

பேரின்பமாவது எல்லாத் தேசங்களையும் எல்லாக் கரணங்களையும் எல்லாப்புவனங்களையும் எல்லாப் போகங்களையும் தமது பூரணயியற்கை விளக்கமாகிய அருட்சத்தியின் சந்நிதிவிசேடத்தால் தோன்றிவிளங்க விளக்கஞ் செய்விக்கின்ற பூரணவியல் இயற்கை யுண்மை வடிவினராகிய கடவுளின் பூரணயியற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் தடைபடாமல் அனுபவிக்கப் படுகின்ற ஒப்பற்ற அந்தப் பெரிய இன்பத்தைப் பேரின்ப வாழ்வென்றறிய வேண்டும். பேரின்ப லாபம்யாதெனின் யாவுந்தாமாய் விளங்குவதே.
   
இம்மை இன்பத்தை யடைந்தவர் பெருமை யெது வென்றறியவேண்டில், அன்பு, தபை, ஒழுக்கம் அடக்கம், பெருமை, வாய்மை, தூய்மை, முதலிய சுபகுணங்களைப் பெற்று விடயவின்பங்களை வருந்தி முயன்று அனுபவித்துப் புகழ்ப்பட வாழ்தலென்றறிய வேண்டும்.

    பேரின்பலாபத்தை யடைந்தவர் பெருமை யெதுவென்றறியவேண்டில், தோல், நரம்பு, என்பு, தசை, இரத்தம், சுக்கிலம், முதலிய அசுத்தபூத காரியங்களும் அவற்றின் கரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை மாற்றி மாற்று இவ்வளவு என்றறியப்படாத உயர்ந்த பொன்னாகிய சுத்தபூதகாரிய தேகத்தையும் பொன் வடிவாகத் தோற்றுதல் மாத்திரமே யன்றி ஆகாயம்போல் பரிசிக்கப்படாத சுத்தபூத காரண தேகத்தையும் தோன்றப்படுதலுமின்றி ஆகாயம் போல விளங்குகின்ற ஞான தேகத்தையும் பெற்றவர்களா யிருப்பார்கள். உள்ளே மண்ணினது திண்மையால் தறிக்கப்படார்கள். புறத்தே மண்கல் முதலிய வற்றால் எறியினும் அவை அவர் வடிவில் தாக்குவனவல்ல. உள்ளே நீரினது தண்மையால் குளிரப்படார்கள். புறத்தே நீரிலழுத்தினும் அவர் வடிவம் அழுந்தாது. உள்ளே நெருப்பினது வெம்மையால் சுடப்படார்கள். புறத்தே நெருப்பிற் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடிவும் தோன்று வனவல்ல.

உள்ளே காற்றினது ஊக்கத்தால் அசைக்கப் படார்கள். புறத்தே காற்று அவர் வடிவைப் பரிசித்தசைக்கமாட்டாது, உள்ளே ஆகாயத்தினது. கலப்பினால் அந்தரிக்கப்படார்கள். புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்கமாட்டாது. ஆதாரத்திலன்றி நிராதாரத்திலும் அவர் தேகம் உலாவும், அவரது கண்கள் முதலிய கரணேந்திரியங்களும் வாக்குமுதலிய கர்மேந்திரியங்களும் பார்த்தல் முதலிய விஷயங்களையும் பேசுதல் முதலிய விஷயங்களையும் பற்றுவனவல்ல.
   
தயையினால் விஷயங்களைப் பற்றவேண்டில் கவர், மலைமுதலிய தடைகளும் அவர் கண்களை மறைப்பனவல்ல. அண்டபிண்டங்களில் அகம்புறமுதலிய எவ்விடத்துமுள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்தவிடத்திருந்தே கண்டறியும். அண்டபிண்டங்க ளெவ்விடத் திருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த விடத் திருந்தே கேட்டறியும். எவ்விடத்திலிருக்கின்ற ரசங்களையும் அவர் நா இருந்த விடத்திருந்தே சுவைத்தறியும். எவ்விடத்திருக்கின்ற பரிசங்களையும் அவர்மெய் இருந்தவிடத்திருந்தே பரிசித்தறியும். எவ்விடத்திருக்கின்ற கந்தங்களையும் அவர்மூக்கு இருந்தவிடத்திருந்தே முகந்தறியும். எவ்விடத்திலிருக்கின்றவர்களுக்கும் அவரது கைகள் இருந்தவிடத்திருந்தே கொடுத்தல் கூடும், எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்த விடத்திருந்தே நடத்தல் கூடும். அவரது வாக்கு எவ்விடத்தி லிருக்கின்ற எவ்வெவர்களோடும் இருந்தவிடத்திருந்தே பேசுதல்கூடும். மற்ற இந்திரியங்கள் இருந்தவிடத்திருந்தே எவ்விடத்தும் ஆனந்தித்தல் கூடும். அவரது மனமுதலான காணங்கள் எப்படிப்பட்ட விஷயங்களையும் பற்றுவனவல்ல. தயவினால் பற்றத்தொடங்கில் எல்லாவுயிர்களினது எல்லாச் சங்கற்பவிகற்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒருங்கே நினைத்து விசாரித்து நிச்சயித்துக்கொள்ளும். அவரறிவு ஒன்றையும் சுட்டியறியாது தயவினால் சுட்டியறியத் தொடங்கில் எல்லா அண்டங்களையும் எல்லாவுயிர்களையும் எல்லாப் பண்புகளையும் எல்லாவனுபவங்களையும் எல்லாப் பயன்களையும் ஒருங்கே ஒரு நிமிடத்தில் சுட்டியறியும். அவர்கள் நிர்க்குணத்த ராவார்கள். அல்லது சாத்துவிக தாமச இராசத முதலிய முக்குணங்களாலும் உள்ளே விகாரப்படார்கள். புறத்தே அவரது குணங்கள் கரணங்களைப் பற்று வனவல்ல. உள்ளே பிரகிருதியினால் மூடப்படார்கள். புறத்தே அவரது பிரகிருதிகுணங்களைப் பற்றுவனவல்ல. உள்ளே காலதத்துவத்தால் வேற்றுமைப்படார்கள். புறத்தேகாலத்தால் அவரது திருமேனி தடைபடாது, உள்ளே நியதி அளவால் அளக்கப்படார்கள். புறத்தே நியதியால் அவரது திருமேனியரை படாது. அன்றிக்காலம் வித்தை, ராகம், புருடன் முதலிய மற்றை தத்துவங்களும் தத்துவகாரியங்களும் அவர்களுக்கில்லை. மாயையால் பேதப்படார்கள். சுத்தமகாமாயைக் கடந்து அதன்மேலறிவுருவாக விளங்குவார்கள். ஆகாரம், நித்திரை, மைதுனம், பயம் என்பவைகளால் தடைபடார்கள். அவர்கள் தேகத்திற்குச் சாயை, வியர்வை, அழுக்கு, நரை, திரை, மூப்பு இறப்பு, முதலிய குற்றங்கள் உண்டாவனவல்ல. பனி, மழை, இடி, வெயில் முதலிய வற்றாலும், தேவர் முனிவர் மனிதர், நரகர், மிருகம், பறவை, ஊர்வன, தாபரம், என்பவைகளாலும் எவ்விடத்தும் எக்காலத்தும் அவர் தேகம் வாதிக்கப்படாது. வாள், கத்தி முதலிய கருவிகளாலும் கண்டிக்கப்படாது. எல்லா அண்டங்களும் அணுக்கள் போலச் சிறிதாகத்தோற்றிலும் எல்லா அணுக்களும் அண்டங்கள் போலப் பெரிதாகத் தோற்றிலும் அவர்தேகத்திற்கு உரித்து. இறந்தோரை யெழுப்புதல் வாற்த்தீபரை வாலிபராக்கல் முதலிய கருமசித்திகளும் யோகசித்திகளும் ஞானசித்திகளும் அவர் சந்நிதியில் விளங்கும்.

சிருஷ்டித்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்கிரகித்தல் என்கிற கிருத்தியங்களும் அவர் நினைத்தமாத்திரத்தில் நடக்கும். பஞ்சகர்த்தாக்களும் அவர் கடைக்கண் பார்வையால் தங்கள் தங்கள் தொழில் நடத்துவார்கள். அவர்கள் அறிவு கடவுளறிவாக இருக்கும். அவர்கள் செய்கை கடவுள் செய்கையாக இருக்கும். அவர்கள் அனுபவம் கடவுள் அனுபவமாயிருக்கும். சர்வசத்தியுடையவர்களாய் எக்காலத்தும் அழிவில்லாதவர்களாய், ஆணவம், மாயை, கர்மம் என்னும் மும்மலங்களும் அம்மலவாதனைகளும் இல்லாதவர்களாய் பேரருள் வண்ணமுடையவர்களாய் விளங்குவார்கள். சடமாகிய - ஒரு துரும்பும் அவரது திருநோக்கத்தால் உயிர்பெறும் பஞ்சகிருத்தியங்களும் செய்யும். அவரது பெருமை வேதாந்த, சித்தாந்த, கலாந்த போதாந்த, நாதாந்த, யோகாந்தம் என்கின்ற ஆறந்தங்களிலும் விளங்கும். அவற்றைக்கடந்தும் விளங்கு மென்று அறியவேண்டும். இவைபேரின்பத்தை யடைந்தவர்கள் பெருமை யென்று அறிய வேண்டும்.

இம்மூவகை யின்பலாப வாழ்வையும் எதனால் பெறக்கூடு மென்றறிய வேண்டில், கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளின் ஏகதேசத்தைக் கொண்டும் அருட் பூரணத்தைக் கொண்டும் அடையக்கூடுமென்றறிய வேண்டும். மூவகை யின்பங்களில் அருளின் ஏகதேசத்தைக் கொண்டு அடையத்தக்கவையெவை. அருட்பூரணத்தைக் கொண்டு அடையத்தக்கவையாது என்றறிய வேண்டில், இம்மையின் பலாபம், மறுமையின்பலாபம் என்கின்ற இரண்டையும் அருளின் ஏகதேசத்தைக் கொண்டு அடையக் கூடுமென்றும் பேரின்பலாபமென்கின்ற ஒன்றையும் அருட்பூரணத்தைக் கொண்டு அடையக்கூடு மென்றும் அறிய வேண்டும். கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருள் எந்த வண்ணம் உடையது என்றறிய வேண்டில், சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும் நினைப்பார் நினைக்கும் வண்ணங்களும் அறிவார் அறியும் வண்ணங்களும் அனுபவிப்பார் அனுபவிக்கும் வண்ணங்களும் ஆகிய சர்வசத்தி வண்ணங்களும் தனது ஏகதேசவண்ணங்களாக விளங்க விளக்கி விளங்குகின்ற பூரணவிளக்க வண்ணத்தையுடையது என்று அறியவேண்டும். அந்த அருள் எவ்விடத்து விளங்குகின்ற தென்றறியவேண்டில் நோக்குவார் நோக்குமிடம் நோக்கப்படுமிடம், கேட்பார் கேட்குமிடம் கேட்கப்படுமிடம், சுவைப்பார் சுவைக்குமிடம் சுவைக்கப்படுமிடம், முகருவார் முகருமிடம் முகரப்படு மிடம், பொருந்துவார் பொருந்துமிடம் பொருந்தப்படுமிடம், பேசுவார் பேசுமிடம் பேசப்படுமிடம், செய்வார் செய்யுமிடம் செய்யப்படுமிடம், நடப்பார் நடக்குமிடம் நடக்கப்படுமிடம், விடுவார் விடுமிடம் விடப்படுமிடம், நினைப்பார் நினைக்குமிடம் நினைக்கப்படுமிடம், விசாரிப்பார் விசாரிக்குமிடம் விசாரிக்கப்படுமிடம், துணிவார் துணியுமிடம் துணியப்படுமிடம், தூண்டுவார் தூண்டுமிடம் தூண்டப்படுமிடம், அறிவார் அறியுமிடம் அறியப்படுமிடம், அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம் முதலிய எவ்விடங்களிலும் எக் காலத்தும் விளங்குகின்ற தென்று அறியவேண்டும். அந்த அருளை எதனாற் பெறக்கூடுமென்றறிய வேண்டில் ஜீவகாருண்ய ஒழுக்கத்தினாற் பெறக்கூடு மென்றறிய வேண்டும்.
   
ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் அருளை பெறக்கூடுமென்பது எப்படியென்றறிய வேண்டில் அருள் என்பது கடவுளுடைய இயற்கை விளக்கம் அல்லது கடவுள் தயவு. ஜீவகாருண்யமென்பது ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் அல்லது ஆன்மாக்கள் தயவு. இதனால் ஒருமைக் கரணமாகிய சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப்பெறுதலும் சிறிய தயவைக் கொண்டு பெரியதயவைப் பெறுதலும் கூடும். சிறு நெருப்பைக் கொண்டு பெருநெருப்பைப் பெறுதல் போல வென்றறியவேண்டும். இதனால் சீவகாருண்ய ஒழுக்கமே சன்மார்க்கமென்றறியப்படும். ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும். அதனால் உபகாரசத்தி விளங்கும். அந்த வைவுபகாரசத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும். ஜீவகாருண்யம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும். அதனால் உபகாரசத்தி மறையும். உபகாரசத்திமறையவே எல்லாத்தீமைகளுந் தோன்றும். ஆகலின் புண்ணியமென்பது ஜீவகாருண்யமொன்றே யென்றும், பாவமென்பது ஜீவகாருண்யமில்லாமையொன்றே யென்றும் அறியவேண்டும். அன்றி ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும் அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும் இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பல காலறிந்து அடைந்து அனுபவித்து நிறைவுபெற்ற சாத்திய ஞானிகளே மேற்குறித்த பேரின்பலாபத்தைப் பெற்றவர்களென்றும் அவர்களே கடவுளை அறிவாலறிந்து கடவுள் மயமானவர்களென்றும் சத்தியமாக அறியவேண்டும்.
     
ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் இலக்கணம் என்னவென்று அறியவேண்டில் ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயத்தில் பொதுவாக உண்டாகின்ற ஆன்மவுருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்து வாழ்தல் என்றறிய வேண்டும். ஜீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்வது எப்படியென்றறிய வேண்டில் ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆன்மவுருக்கம் காருண்யம் உண்டாக உண்டாக அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும். அத்திருவருள் விளங்கவே கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும். ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்படுவது எப்படியென்றறிய வேண்டில்தயிருக்கும் கட்டைக்கும் கடைதலால் நெகிட்சி உண்டாக உண்டாக அதன் உள்ளிருக்கின்ற வெண்ணெயும் நெருப்பும் வெளிப்
படுவதுபோல வெளிப்படுமென்றறியவேண்டும். திருவருள் விளங்குவதினால் கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாவது எப்படியென்றறிய வேண்டில் வெண்ணெயும் நெருப்பும் வெளிப்படவே அவற்றின் உண்மைத் தன்மை அனுபவமாகிப் பூரணமாவதுபோல கடவுள் இன்பம் பூரணமாகுமென்றறிய வேண்டும்.

ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது வெளிப்படு மென்றறிய வேண்டில் பசி, கொலை, பிணி, ஆபத்து தாகம், பயம், இன்மை, இச்சை இவைகளால் ஜீவர்கள் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும் கேட்டபோதும் அறிந்த போதும் ஆன்மவுருக்கம் உண்டாகமென்றறியவேண்டும். பசி என்பது ஆகாரம் பெறாமையினால் வயிற்றினுட் பற்றி நின்று தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவிகரணங்களின் தன்மைகளைச்சுடுதல் செய்து அறிவைமெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்து விப்பதற்கு முதற்காரணமாகிய விகற்பமாயா காரியப்பிண்டப்பகுதி. நெருப்பு கொலை என்பது தேகத்தின் அகத்தும் புறத்துமுள்ள கருவிகரணங்களைப் பலவேறு கருவிகரணப் புடைப்பெயர்ச்சிகளால் பதைப்புண்டாகக் கலகஞ்செய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்து வித்தற்கு நிமித்தமாகிய விகற்பபூதகாரிய கொடுந்தொழில். பிணியென்பது வாத பித்த சிலேத்ம விகற்பங்களால் மாறுபட்டு, தேகத்தினகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களை நலிவுசெய்து அறிவைமெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாக நிறை விகற்ப மாயாகாரியப் பிண்டப்பகுதி வேற்றுமை விளைவு.
   
ஆபத்து என்பது அகங்காரத்தாலும் மறதியாலும் கரும வேறுபாட்டாலும் தேகபோக அனுபவங்களைத் தடுக்கின்ற விக்கினங்கள். பயமென்பது தேகமுதலிய கருவிகளுக்கு நட்டஞ் செய்வதாகிய விடயங்கள் நேரிட்டபோது கரணங்களுக்கும் அறிவுக்கும் உண்டாகின்ற நடுக்கம். இன்மையென்பது கல்வி, செல்வம் முதலிய கருவிகளைத் தற்சுதந்தரத்திற் பெறாமை. இச்சையென்பது அடையக்கருதிய விடயங்களில் அருமைக்குறித்து அவற்றை மென்மேலும் கருதச்செய்கின்ற சித்தவிருத்தி என்றறியவேண்டும்.
    இவற்றுள் பசி, கொலை, என்பவை இம்மை இன்பம் மறுமை இன்பம், பேரின்பம் என்கிற மூன்றையும் தடுத்தலால் முதற்பட்ட தடையென்றும், பிணி, பயம், ஆபத்து இன்மை என்பவை இம்மை மறுமை இன்பங்களைச் சிறிது தடுத்தலால் இடைபட்டனவென்று அறியவேண்டும்.

ஜீவகாருண்யத்தின் வல்லபம் யாதென் றறியவேண்டில் பிறவுயிர்களிடத்து பசி, கொலை முதலியவற்றுள் எதனாற் காருண்யந்தோன்றியதோ அதனால் அவ்வுயிர் வருந்தாதபடி அதை நீக்குதற்கு முயல்விப்பது அதன் வல்லபமென்றறிய வேண்டும். ஜீவ காருண்யத்தின்பிரயோஜனம் யாதென்றறியவேண்டில் உயிர்களுக்கு இன்பம் உண்டு பண்ணுவது அதன் பிரயோசனம் என்றறியவேண்டும். இந்த ஜீவகாருண்யத்தின் சொரூப சுபாவ வியாபக முதலியவைகளை மூன்றாவது பிரிவுள் கண்டுகொள்க.
   
ஜீவகாருண்யமாகிய ஆன்ம உருக்கம் உண்டாவதற்கு உரிமையெதுவென் றறியவேண்டில் ஜீவர்களெல்லாம் ஒருதன்மையாகிய கடவுளியற்கை உண்மை ஏகதேசங்களாகி கடவுளருட்சத்தியால் பூதகாரிய தேகங்களில் வருவிக்கப்பட்டபடியால் இச்சீவர்களெல்லாம் ஓருரிமையினத் தவர்களேயாகும். சகோதரருள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுவதைக் கண்டபோதும் கேட்ட போதும் அறிந்தபோதும் அவர் தேகம் தமது சகோதர தேகமென்றும் தெரிந்துக்கொண்ட மற்றொருசகோதரர்களுக்கு உருக்கமுண்டாவது தேகவுரிமையா லென்று அறிவது போல, ஒரு ஜீவன் ஒரு ஆபத்தால் துக்கப்படுவதைக் கண்டபோதும் கேட்டபோதும் அறிந்தபோதும் அந்த ஜீவனைத் தமது ஆன்ம இனமென்று தெரிந்துகொண்ட மற்றொரு ஜீவனுக்கு உருக்க முண்டாவது ஆன்மவுரிமையென்றறிய வேண்டும்.
   
ஜீவர்கள் துக்கப்படுவதைக் கண்டபோதும் சிலர் ஜீவகாருண்ய மில்லாமல் கடினசித்தர்களா யிருக்கின்றார்களே, இவர்களுக்கு ஆன் உரிமையில்லாமற் போவது யென்னென்றறிய வேண்டில் துக்கப்படுகின்றார்களென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என் சின்ற கண்ணானது அஞ்ஞான காசத்தால் மிகவும் ஒளிமழுங்கின படியாலும் அவைகளுக்கு உபகாரமாகக் கொண்ட மனமுதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாசப் பிரதிபலிதமில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்தபடியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று. ஆனால் ஆன்ம உரிமை இருந்தும் ஜீவகாருண்ய மில்லாமல் இருந்ததென் றறியவேண்டும். ஆனால் இந்த ஆன்ம உருக்கம் என்கின்ற ஜீவகாருண்யத்திற்கு ஆற்றலெவ்விடத்து உண்டாகு மென்றறிய வேண்டில், பசி, கொலை, பிணி, முதலிய தடைகளில் எந்தத் தடைப்பற்றி ஜீவகாருண்யந்தோன்றியதோ அந்தத் தடையைநிவர்த்தி செய்கின்ற விடத்து தான் ஜீவகாருண்யத்திற்கு ஆற்ற விருந்ததென்றறிய வேண்டும். இதனால் ஜீவர்களுக்குப் பசி, கொலை, பிணி, முதலியவற்றால் வருந்துன்பங்களெல்லாம், மனம், கண், முதலிய கரணேந்திரிய அனுடவங்களே பல்லது ஆன்ம அனுபவங்களல்ல. ஆகலில் ஜீவ காருண்யத்தால் விசேஷபிரயோசனமில்லையே யென்பார்க்கு உத்தரம் யாதென்றறிய வேண்டில் இந்தத் தேகத்தில் ஆன்மாவும் அறிவுக்கறிவாயிருக்கிற கடவுள் விளக்கமுந் தவிர, கரணம் இந்திரியம் முதலிய மற்றதத்துவங்களெல்லாம் மூடமாகிய கருவிகளேயல்லது அறிவாகிய ஆன்மாக்களல்ல. ஆகலில் சுகதுக்கங்களை அறிவாகிய ஆன்மாக்கள் அனுபவிக்குமேயல்லது மூடமாகிய தத்துவங்கள் அனுபவிக்க அறியாது. மனமுதலான காரணங்களும் கண்முதலிய இந்திரியங்களும் ஜீவர் வாழ்க்கைக்குக் கடவுள் அருளால் கட்டிக் கொடுக்கப்பட்ட சிறியவீட்டின் கருவிகளாகும். இன்பதுன்பங்களை வீட்டிலிருக்கின்றவன் அனுபவிப்பானல்லது வீட்டின் கருவிகளாகிய மண், கல், மரம், கால், தீ, நீர் முதலியவைகளனுபவிக்க அறியமாட்டா.

அன்றியும் காசத்தால் ஒளிமழுங்கப்பட்டு உபநயனங்களாகிய கண்ணாடியால் பார்க்கின்ற கண்கள் துன்பவிஷயங்களைக் கண்டபோது அக்கண்கள் நீர் சொறியுமேயல்லது கண்ணாடி நீர்சொறியாது. ஆகலில் ஆன்மதிருஷ்டிக்கு உபநயனங்களாக விருக்கிற மனமுதலிய கருவிகள் சுகதுக்கங்களை அனுபவிக்க அறியாவென்றறிய வேண்டும். ஒருஜீவனுக்குச் சுகம் நேரிட்டபோது மனம் மகிழ்கின்றது. துக்கம் நேரிட்டபோது மனந்தளர்கின்றது. என்றால் சுகதுக்கங்களையும் மனம் அனுபவிப்பதாக அறியப்படாதோ என்பவர்க்கு உத்தரம் யாதென்றறிய வேண்டில் பளிங்கு வீட்டினுள் இருக்கின்ற வீட்டுத்தலைவனுடைய தேகவிளக்கமும் தேகச்சோர்வும் அந்தவீட்டிற் பிரதிபலித்துப்புறத்தில் தோன்றவது போலவும் கண்களின் மலர்ச்சியுஞ் சோர்வும் அக்கண்களிலிட்ட உபநயனங்களின் பிரதி பலித்துப்புறத்தில் தோன்றுவது போலவும் சுகதுக்கங்களால் ஆன்மாவுக்கு உண்டாகின்ற மகிழ்ச்சியும் தளர்ச்சியும் மனம் கண் முதலிய கரணேந்திரியங்களிற் பிரதிபலித்துப்புறத்தில் தோற்றுகின்றது.
     
அன்றியும் ஒரு வீட்டினுள் வைத்த தீபமானது மிகுந்த விளக்கமுள்ள தாக விளங்குகின்ற போது அந்தவீடும் அந்த வீட்டின் கருவிகளும் மிகவும் விளக்கமுள்ளதாக விளங்குகின்றன. அந்தத் தீபம் விளக்கம் குறையும்போது வீடும் வீட்டினுள்ளவைகளும் விளக்கம் குறைகின்றன. ஆகலில் சுகதுக்கங்கள் மனத்துக்கு அனுபவமல்ல வென்றும் ஆன்மாவுக்கே அனுபவமென்றும் அனுபவத்திற்கு காணேந்திரியங்கள் ஆன்மாவுக்கு உபகார கருவிகளே பிரமாணிப்பதே உத்தமமென்றறிய வேண்டும்.
கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவர்களில் அநேகர், பசி கொலை, பிணி முதலியவற்றால் மிகவுந் துன்பப்படுவது எதனாலென்றறிய வேண்டில் முன்தேகத்தில் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விரும்பாமல் விட்டுக் கட்டின அறிவுள்ளவர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த ஜீவர்களாதலால் கடவுள் விதித்த அருளாக்கினைப்படி பசி, கொலை, பிணி முதலியவற்றால் மிகவுந்துக்கப்படுகின்றார்க ளென் றறியவேண்டும்.
     
முன்தேகம் உண்டென்பது எப்படி யென்றறிய வேண்டில் ஒரு  வீட்டில் குடிக்கூலிக் கொடுத்துக் குடியிருக்க வந்த ஒரு சமுசாரி அதற்கு முன்னும் வேறொரு வீட்டில் குடிக்கூலிக் கொடுத்துக் குடித்தனம் செய்திருந்தானென்றும் வீடில்லாமல் குடித்தனம் செய்யமாட்டானென்றும் பின்வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் திரும்பவேறொரு வீட்டில் குடிபோவானென்றும் தனக்கென்று சுதந்தரமாக ஓர் வீடு கட்டிக்கொண்டால் முன் போல் குடிக்கூலிக் கொடுத்துக் குடி போவதை விடுவானென்றும் அறிவது போல இந்தத்தேகத்தில் ஆகாரக்கூலி கொடுத்துக் குடியிருந்த ஜீவன் இதற்கு முன்னும் வேறொருதேகத்தில் அந்தக்கூலி கொடுத்து ஜீவித்திருந்ததென்றும் தேகமில்லாமல் ஜீவித்திருக்கமாட்டாதென்றும் இந்தத் தேகத்திலும் கலகம் நேரிட்டால் இன்னம் வேறொரு தேகத்திற் குடி போகு மென்றும் தனக்கென்று சுதந்தரமாக நித்தியமாகிய அருட்டேகத்தைப் பெற்றுக்கொண்டால் பின்பு வேறொரு தேகத்தில் குடிபோக மாட்டாதென்றும் அறிய வேண்டும்.
   
சிலர் முன் தேகம் எடுத்தும் பின்தேகம் எடுப்பதும் இல்லை. இப்பொழுது எடுத்ததேகம் அழிந்தால் தேகியும் அழிந்து விடுவா னென்றும் சிலர் முத்தியடைவானென்றும் சிலர் பாவபுண்ணியங்களை எக்காலத்தும் அனுபவிப்பானென்றும் சிலர் தேகம் இல்லாமல் தேகம் அழிந்தவிதத்திருப்பா னென்றும் பலவாறுவாதிப்பது எதனாலென் நறிய வேண்டில், அவரவர்களும் தேகமே ஆன்மா வென்றும் போகமே முத்தியென்றும் கொள்ளப்பட்டவர்களாத
லால் மூடமாகிய தேகத்தில் அறிவாகிய ஆன்மாவொருவன் உண்டென்றும் அவனுக்குப் பந்தமுத்தி உண்டென்றும் முத்தியடைகின்ற பரியந்தம் பந்தவிகற்பத்தால் வேறு வேறு தேகம் எடுப்பானென்றும் பிரத்பட்ச அனு பவமான பிரமாணங்களால் உண்மையை அறிந்து கொள்ளப் பாடாதவர்களென்றும் அவர்கள் கொள்கைக்குப் பிரமாணமும் புத்தியும் அனுபவமும் இல்லை யென்று அறிய வேண்டும்.

ஜீவர்கள் தங்கள் சுதந்தரத்தாலே தேகபோகங்களை யடைகின்றார்களென்றால் தங்கள் இச்சைக்கடுத்த தேகங்களையும் போகங்களையும் அடைய வேண்டும். அப்படியின்றிச் சிலர் இச்சைக்கடுத்த பழுதற்ற அங்கமுள்ளவர்களாகவும் சுகங்களையனுபவிக்கின்றவர்களாகவும் சிலர் இச்சைக்கு அடாத பழுதுள்ள அங்கமுள்ள வர்களாகவும் துக்கங்களை அனுபவிக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆகலில் ஜீவர்கள் தேகபோகங்களைத் தங்களிச்சையால்
அடைந்தவர்களல்லவென்றும்; அப்படியடைவது இயற்கை என்றால் இயற்கை என்பது எக்காலத்தும் வேறுபடாமல் ஒருதன்மையாக இருத்தல் வேண்டுமென்றும்; அப்படி ஒரு தன்மையாக இராமல் பலவேறு வகை படுதலால் இயற்கையல்லவென்றும்; கடவுள் இச்சையென்றால் கடவுள் கருணையும் நீதியும் உடையவராதலில் எல்லாச் சீவர்களுக்கும் ஒரு தன்மையாகச் சுக அனுபவங்களையே அடைவிக்கவேண்டும், அப்படி படைவிக்காமையால் கடவுளிச்சையல்ல வென்றும்; கடவுளருளால் சிருஷ்டித்த முதல் சிருஷ்டியில் தமது இயற்கை அனுபவிக்கும்படி விதித்த விதிகளைப் பழகாமையால் முபற்சி தவறினபடியால் அந்த அநாதிமல வாசனையின் முயற்சி பேதங்களால் பின் பல பல தேகபோகங்கள் இரண்டாவது சிருஷ்டியில் நேரிட்டதென்றும் பிரமாணித்தறிய வேண்டும்.
     
எடுத்துக்கொண்ட தேகம் தவறினால் வேறு தேகம் எடுப்பதில்லையென்றால் முதல் சிருஷ்டித்தொடங்கி இது வரையில் அழிந்த தேகங்களுக்கு அளவில்லை; அப்படியே ஆன்மாக்களுக்கும் அளவில்லை. ஆகவே இனி ஆன்மாக்கள் தேகங்களை எடுக்காமலிருக்கவேண்டும். அப்படியில்லை தேகங்களை எடுததுக் கொண்டே யிருக்கிறார்கள் ஆயின் ஆன்மாக்களை நூதனமாகச் செய்து அது வருவதற்கு நூதன நூதனமாகத் தேகங்களை வருவிப்பதென்றால் நூதன நூதனமாகத் தேகமாத்திரம் செய்யக்கூடும். தேகத்திலிருக்கிற ஆன்மாவை நூதன நூதனமாகச் செய்யப்படாது. ஆன்மா எக்காலத்தும் உள்ள தாய் விளங்கப்பட்டது. அது தோன்றுதலும் அழிதலுமில்லை. அதை ஆக்கவும் அழிக்கவும்படாது. ஆன்மாக்களும் குடத்தைப்போல் செய்யப்படுவதானால் சுகதுக்கங்களை அனுபவிக்கவறியாது புண்ணிய பாவங்களை அடையமாட்டாது. குடம் அழிவது போல் அழிந்து போய்விடும். அழியுமானால் பந்தமுத்திகளுமில்லை. புண்ணிய பாவங்களுமில்லை. ஆதலால் குடம் உடைகின்ற போது குடத்தினுள் இருந்த காற்றும் ஆகாயமும் உடையாமலிருந்தது சிறுவர்களுக்கும் தெரியும். ஆகலில் தேகம் அழியும்போது தேகத்தினுள் இருக்கின்ற ஆன்ம விளக்கமும் கடவுள் விளக்கமும் அழியாதென்றும், ஆன்மாக்கள் முயற்சி பேதத்தால் தேகபோக பேதங்களையடைவது உண்மையென்றும் யுத்தியால் அறியவேண்டும்.
     
ஒரு தாய்தந்தைகளுக்கு ஒரு காலத்தில் இரட்டைப் பிள்ளை பிறக்கின்றது. அவற்றுள் ஒரு பிள்ளை சிவத்தது. ஒரு பிள்ளை கறுத்தது. ஒரு பிள்ளை அங்கப்பழுதுள்ளது. ஒரு பிள்ளை அங்கப்பழுதில்லாதது. ஒரு பிள்ளை பால் குடிக்கின்றது. ஒரு பிள்ளை பால் குடிக்கில் சத்தம் பண்ணுகின்றது. ஒரு பிள்ளை வியாதியுள்ளது. ஒரு பிள்ளை வியாதியில்லாதது. ஒரு பிள்ளை இரண்டுவயதில் பேசுகின்றது. ஒரு பிள்ளை பேசத்தெரியாமலிருக்கின்றது. இந்த இரட்டைப்பிள்ளைகளுக்கு இந்த பேதம் எவ்விடத்தில் யாதொரு ஏதுக்களுமில்லாமல் வந்ததை யூன்றி விசாரிக்கில் முன் பிறப்பில் எடுத்ததேகத்தின் கர்மமாகிய முயற்சி பேதங்களென்றும் இந்த இரட்டைப்பிள்ளைக்கு மூன்று வயதில் விளையாடும் போது தனித்தனி தாய் தந்தைகள் கொடுத்ததின் பண்டங்களை வைத்துத் தின்ற தருணத்தில் இவ்விரண்டு பிள்ளைகளும் தவிர வேறுபிள்ளை யொன்று வந்தால் அதைக்கண்டு இவ்விருவரில் ஒரு பிள்ளை தன் கையிலிருக்கின்ற தின்பண்டத்தைக் கொடுக்கின்றது. மற்றொருபிள்ளை கொடுக்கப்படாதென்று தடுக்கின்றது. ஒரு பிள்ளை புத்தகத்தை எடுத்துச் சிறுவர் படிக்கின்றது போல் படிக்கின்றது. மற்றொருபிள்ளை : புத்தகத்தைப் பிடுங்கி யெறிந்து படிக்கப்படாதென்று அடிக்கின்றது. ஒரு பிள்ளை பயப்படுகின்மது மற்றொருபிள்ளை பயப்படாமலிருக்கின்றது. இப்படியே இந்தப் பிள்ளைகளுக்கு தயை, அன்பு, அறிவு, செய்கை முதலியவைகள் தாய் தந்தையர்கள் கற்பிக்காத காலத்திற்றானே உள்ளதாகவும் இல்லாத தாகவும் எப்படி வந்ததென்று விசாரிக்கத் தொடங்கில், இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் முன்பிறப்பில் எடுத்த தேகத்திலிருந்த வாசனை இந்தப் பிறப்பில் இந்தத் தேகத்தில் கற்பியாமல் வந்ததென்றும் அனுபவத்தால் கருதி யறிய வேண்டும். இப்படியறிந்தால் ஜீவர்களுக்கு முன்னும் பின்னும் தேகமுண்டென்பது நன்றாகத் தெரியும். இப்படியறியமாட்டாமையால் பிறப்பில்லை என்கிறார்களென்றறிய வேண்டும்.
   
அன்றி யிந்தத் தூலதேகம் அழியாமலிருக்கின்ற போதே சொற்பனத்தில் ஆன்மா வேறு வேறு தேகமெடுத்துப் பல பல விசித்திரங்களை யனுபவிக்கின்றதானால் இந்தத் தேகம் நீங்கும் போது வேறுதேக மெடுத்து வாசனைக்கடுத்த அனுபவங்களை அனுபவிக்கு மென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.
   
அன்றி, சித்தி விசேஷத்தால் இந்தத் தேகத்திலிருந்த ஒருவன் இந்ததேகத்தை விட்டு வேறு தேகத்திற்குப் பிரவேசிக்கின்றன் என்றால் இந்த தேகம் அழியும்போது இதிலிருந்த ஆன்மா கன்மபேதத்தால் வேறு தேகத்தில் பிரவேசிக்கு மென்பதைச் சொல்ல வேண்டு வதில்லை.

அன்றி ஒரு பட்சியானது காலவேற்றுமையாலும் குணவேற்றுமையாலும் முன்முட்டை யென்கின்ற ஒருதேகத்திலிருந்து பின்பு குஞ்சு என்கின்ற மற்றொரு தேகத்தினால் வருகிறதானால் ஆன்மாக்கள் கர்மபேதத்தால் இந்தத் தேகத்திலிருந்து வேறு தேகத்தில் வருமென்பது சொல்லவேண்டு வதில்லை.
   
அன்றி ஒரு குளவியால் ஒரு கிருமி புழு வென்கிற தேகத்திலிருந்து குளவியென்கிற தேகத்தில் வருமானால் கருமத்தினால் ஒரு ஆன்மா ஒரு தேகத்திலிருந்து மற்றொரு தேகத்தில் வருமென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.
   
அன்றி ஒரு ஆன்மா ஒரு பிறப்பிற்றானே சிசு தேகத்திலிருந்து பால தேகத்திலும் பால தேகத்திலிருந்து வாலீப தேகத்திலும் வாலீப தேகத்திலிருந்து வார்த்தீப தேகத்திலும் வருமானால் அந்த ஆன்மா கன்ம பேதத்தால் வேறு பிண்ட தேகத்தில் வருமென்பதைச் சொல்லவேண்டுவதில்லை.
   
அன்றி மந்திர தந்திர பேதத்தால் ஒரு பிறப்பிற்றானே பெண் தேகத்திலிருந்து ஆண்தேகத்திலும் ஆண்தேகத்திலிருந்து பெண் தேகத்திலும் ஆன்மாக்கள் வருமானால் கர்மபேதத்தால் வேறு தேகம் எடுக்கும் என்பது சொல்ல வேண்டுவதில்லை.
 
இது வடலூர் இராமலிங்கஸ்வாமிகள் எழுதிவைத்திருந்த குறிப்பினுட் கண்டது.
               
(இன்னும் வரும்)
              காஞ்சி: - நாகலிங்க முதலியார். F.M.T.S.

சித்தாந்தம் – 1913 ௵ - பிப்ரவரி / மார்ச் / ஏப்ரல் ௴


No comments:

Post a Comment