Saturday, May 9, 2020



பாண்டூர்

[மு. அருணாலம்]

"பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்'' என்பது திருவாசகம் கீர்த்தித்திரு அகவல். இப்பாண்டூர் எது என்பது நிச்சயமாகவில்லை. மாயூரம் தாலுக்காவிலுள்ள பாண்டூரே இவ்வூர் என்பது சிலர் கருத்து. ஊர் பற்றிய குறிப்புக்களைக் கீழே காணலாம்.

இடம்: - இவ்வூர் நீடூர் ரயில் நிலையத்தில் இருந்து வட மேற்கு மூன்று மைல், திருக்குறுக்கைக்குத் தெற்கு, மண் சாலையில் இரண்டு மைல், பாடல் பெற்ற தலமாகிய திரு அன்னியூருக்கு வடக்கு முக்கால் மைல்.

பெயர்: - பாண்டவ சரித்திரத் தொடர்பு உடைமையால் பாண்டூர் என்பர்; பாண்டவபுரம் என்ற பெயரும் உண்டு. பாண்டு மன்னன் நோய் நீக்கியமையால் பாண்டூர். இவ்வூர் வைத்தீசுவரபுரம் என்ற பெயரும் உடையது. ஐந்து வைத்தீசுவரன் கோவில்களில் இதுவும் ஒன்று.

கோயில்: - மிகவும் சிறிய கோயில், கோபுரம் இல்லை; சமீபகாலக் கும்பாபிஷேகம் ஆனது. அம்பாள் கோவில் மட்டும் கல் திருப்பணி. சனிபகவான் கிழக்கு முகமாகத் தனியே இப்பொழுது வைக்கப்பட்டிருக்கிறார். சுவாமி பெயர் வைத்தியநாதர், அம்பாள் பாலாம்பாள்; ஸ்தல விருட்சம் வில்வம். இது பக்கத்தில் உள்ள பஞ்சவில்வாரண்ய ஸ்தலங்கள் ஐந்தில் ஒன்று. ஊருக்குள் நுழையு மிடத்தில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. தலப் பெயருக்கு ஏற்ப திரௌபதி கோயிலும் இவ்வூரில் தனியே உள்ளது.

மூர்த்தி: - உற்சவ மூர்த்திகள் புதிதாகச் செய்து வைக்கப்பட்டுள்ளனர். அம்பாள் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. சாக்தேய வழிபாட்டில் இவ்வூர் முச்ர சாக்தேயம் என்பர்.

வரலாறு: - அப்பர் சுவாமிகள் குறுக்கையைத் தரிசித்து அன்னியூர் போகும் வழியில் இங்குத் தரிசித்துச் சென்றார் என்பது இவ்வூர் வரலாறு. இதற்குப் பெரியபுராணத்தில் ஆதாரம் இலது. அப்பருக்கு நோய் இருந்ததாகவும் அதை நீக்க இங்கு வைத்தியநாதர் தம் ஜடையில் உள்ள கங்கையை ஒரு கிணற்றில் எடுத்து விட்டு, அதில் அப்பரை நீராடச் செய்து நோயைப் போக்கினார் என்றும் கூறுவர். நளன் நீலோத்பல மலரால் பூசித்துத் தன் சுய உருவம் அடைந்தான். அரிச்சந்திரன் பூஜித்துக் கடன் நிவாரணம் பெற்றான்.

பாடல்: - மாணிக்கவாசகர் பாண்டூர் என்ற ஊரைக் குறிப்பிடுகிறார். இவ்வூரானது அவருக்குப் "பாணிக்கிர கணசித்தி அளித்தது” என்ற தொரு பழைய வரலாற்றை ஊரார் சொல்லுகிறார்கள்.

சிறப்பு: - அப்பர் இவ்வழியே சென்றார் என்பது மட்டும் நம்பக் கூடியதாய் உள்ளது. ஊரில் அக்கிரஹாரம் உண்டு. இங்கு திருமால்பாண்டவசகாயன் என்ற பெயரோடு தனியான ஒரு சிறு கோவிலில் அமர்ந்து இருக்கிறார். உபயநாச்சியாரோடு கூடிய மூலவர். அவருக்கு முன்னால் கிருஷ்ணசிலாவிக்கிரகம்; இவருக்கு எதிரில் உற்சவர் ஸ்ரீனிவாசன், அலர்மேல் மங்கைத் தாயார். திரு மலை திருப்பதி, அழகர் கோயில், இவ்வூர் ஆகிய பாண்டூர் என்னும் மூன்று இடங்களிலும் சுவாமி சீனிவாசன் என்ற திருநாமம் உடையவர் என்று சொல்வர். இக்கோயிலைக் கடந்தே சிவாலயத்திற்குச் செல்லவேண்டும்.   

சித்தாந்தம் – 1964 ௵ - ஜுன் ௴


No comments:

Post a Comment