Monday, May 11, 2020



கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
திவ்வியாகம கிரந்த சங்கிகை.                 
             
எல்லாஞ் செயற்கு மிடமாகு மென்னெஞ்சே
கல்லார வெற்பன் கழல்.

ஆகமம்: - காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விச யம், நிச்சுவாசம், சுவாயம் புவம், ஆக்கினேயம், - வீரம், ரெளா வம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம்.

இவ்விருபத்தெட்டு ஆகமங்களும் ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் எனத்தனித்தனி நான்கு பாதங்களையு டையனவா யிருக்கும். ஞானபாதம் பதி பசு பாசம் என்னும் திரி பதார்த்த லட்சணத்தையும்; யோகபாதம் பிராணாயாம் முதலிய அங்கங்களோடு கூடிய சிவயோகத்தையும்; கிரியாபாதம் மந்திரங்களோடு கூடிய ஓமத்தையும்; சரிபாடாதம் சமயாசாரத்தையும் விரிவாக எடுத்து விளக்கிப் போதிக்கும்.

ஆகமம் என்பது: - ஆ என்பது பாசம் எனவும், க என்பது பசுஎனவும், ம என்பது பதி எனவும் பொருள்படும். எனவே வேதாந்தத்திலே ஜெகஜீவபாயென்று கூறப்படும் திரிபதார்த்தங்களை விளங்க எடுத்து உணர்த்துமென்ற வாறாயிற்று. இஃதன்றி, ஆ என்பது சிவஞானம் என்றும், க என்பது மோக்ஷமென்றும், ம என்பது மல நாசமென்றும் பொருள் கொண்டு ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணி, சிவஞானத்தை உதிப்பித்து மோக்ஷத்தைக் கொடுக்குமென்று கோடலு மொன்றாம்.

மேற் கூறிப் போந்த சிவாகங்கள் இருபத்தெட்டுடன் உபாகமங்கள் இரு நூற்றேழைபும் கூட்டி அநாதியிலே சதாசிவதேவநாயனார் அகந்தேசுரர்க்குத் திருவாய்மலர்ந்தருளினார். அநந்தேசுரநாயனார் அவ்வாகமங்களைப் பரின்று காமிகாகமத்தை நூறு கோடி கிரந்தங்களாகவும் மற்றைய இருபத்தேழு ஆகமத்தை நூறுகோடி கிரந்தங்களாகவும், இரு நூற்றேழு உபாகமத்தை நூறு கோடி கிரந்தங்களாகவும் வரையறைசெய்து ஸ்ரீ கண்டருக்கு உபதேசித்தருளினார். ஸ்ரீ கண்டதேவ நாயனார் அந்த முந்நூகோடி கிரந்தங்களையும். மனனஞ்செய்து மூன்றுலக்ஷங் கிரந்தங்களாக்கித் துர்வாசராதி மகரிஷிகளுக்கு அனுக்கிரகஞ் செய்தருளினார். அம்முனிவரர் முதலிய பத்ததித்தலைவர் பதினெண்மருக்குப் பிரசாதித் தருளினார். இப்பத்ததித்தலைவர் மேல் மூன்று லக்ஷகிரந்தங்களையும் அனுசந்தானம் பண்ணி அகோரசிவாசாரியர் ஆறாயிரம் கிரந்தங்களும் மற்றைய பதினேழுசிவாசாரியர் தனித்தனி அறு. நூறு கிரந்தங்களும் ஆக உலகிற்கு வழங்கி அருளினார்கள்.
     
இந்த கணக்கின்படி இப்போது வழங்கிவரும் திவ்யா கமகிரந்தசங்கிகை பதினாயிரத்திரு. நூறு என்று வெள்ளிடைமலை போல் விளங்கக்கிடக்கின்றது.

இந்தக்குறிப்பு திருக்கைலாய பரம்பரை மெய்கண்ட சந்தான ஞானபீட ஸ்ரீ காஞ்சி மடாதிபதியாய், வடமொழிகளில் வல்லுநராய் கருணா நோக்கம் பெரிதுடையராய் வீற்றிருந்தருளும் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாசதேசிக சுவாமிகளவர்கள் பரிபாலித்து மிகப் போற்றிவரும் சரஸ்வதி ஞானவிலாச புத்தக நிலயத்தில் கிடைக்கப்பெற்றது.

                  காஞ்சி. நாகலிங்க முதலியார். F. M. T. S.

சித்தாந்தம் – 1912 ௵ - நவம்பர் ௴


No comments:

Post a Comment