Sunday, May 10, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்
விருந்தோம்பல்.

இன்று யான் உபந்நியசிக்க மேற்கொண்ட விடயம் "விருந்தோம்பல் என்பது. இது விருந்து ஓம்பல் என இரு மொழிகளாலாயவோர் தொடர்மொழி. “விருந்தினர்களை யுபசரித்தல்'' என்பது இதன் திரண்டபொருளாம்.

இதைப் பின் வருமாறு பிரித்து; அதற்கேற்ப விடை கூறிமுடிப்பதே என்றன் உபந்நியாச மாகும்,

அவையாவன: -
(1) விருந்தாவார்யார்?
(2) விருந்தினரை ஓம்ப வேண் கிவார்யார்?
(3) ஓம்புதல் என்பதின் பொருளும் முறையும் என்ன?
(4) ஓம்புதற்குரிய சாதனங்களெவை?
(5) இதனால் எய்தும் பயன்யாது?
(6) இவ்வறம் புரிந்து பேறு பெற்றவர்யாவர்?

1. விருந்து என்பது புதுமை யெனப் பொருள்படும் - இதுபண் பாகு பெயராய்ப் புதிதாய் வந்த வரையுணர்த்தும், மீண்டும் ஆகு பெயராய் அங்ஙனம் புதிதாய் வந்தவர்க்கு உணவளித்தல் முதலிய உபசாரங்களையுங் குறித்தலால் அப்போது இருமடியாகு பெயராகும். ஆனால் இவன் உணவளித்தல் முதலிய உபசாரங்களைக்குறிக்க "ஓம் புதல்" என்னும் வேறுமொழி வந்திருப்பதால் இங்கு விருந்து' என்பது புதிதாக வந்தவர்" எனவே பொருள்படும், சுற்றத்தாரை விருந்தினர் என்று கொள்ளுதல் எவ்வாற்றானும் பொருந்தாது. சுற்றத்தாரை உபசரிப்பதையே விருந்தினரையுபசரித்ததாக எண்ணுவதும் சொல்லுவதும் சரியல்ல; சுற்றத்தார் வேறு. விருந்தினர் வேறு. சுற்றத்தாராவர் பயன் கருதி நம்மால் உபசரிக்கப்படும் நம்முடைய பந்துக்கள், விருந்தினராவர் பண்டறிவுண்மையிற் குறித்து வந்தாரும், அஃதின்மையிற் குறியாது வந்தவருமாக இருவகையாவார். சுற்றத்தாரும் விருந்தின்ரும் வேறாவார் என்பதை "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கறானென்றாங் கைம்புலத்தாறோம் பறலை" என்தும் திருக்குறள் வலியுறுத்தும். இக்குறளில் இல்வாழ்வான் இவ்வைவரையும் உபசரிக்க வேண்டுமென்றும், அதுவே அவனுக்குரிய தலையாய அறமென்றும், வற்புறுத்தப்பட்டிருக்கிறது. அவ்ஐவராவார்: - தென் புலத்தாராகிய பிதுரரும், தெய்வமாகிய தேவரும், விருந்தாகிய அதிதிகளும் ஒக்கல் என்னும் சுற்றத்காரும், தானும், சுற்றத்தாரெனப் பொருள்படும் ஒக்கல் என்னும் மொழியும், அவர்க்கு வேறாவார் விருந்தினர் என்பதைவிளக்க'' விருந்து'என்னும் வேறு மொழியும் வந்திருப்பதால் விருந்தினர் வேறு, சுற்றத்தார்வேறு என்பது வெள்ளிடைமலைபோல் விசிதமாகும். இங்குத்தன்னை யோம்புதலும் அறனெனப்பட்டது யாதோவெனின், எல்லாவறங்களும் தானுள்னாய் நின்று செய்யவேண்டு தலின் என்க, (“Charity begins at home" ''தன்னைப்பற்றி தர்மம்'' என்னும் பழமொழிகளும் ஈண்டு கருதற்பாலன.) இவ்வகை அறங்கள் ஐந்தையும் இல்வாழ்வான் நடத்தவேண்டுவது பற்றியே அரசனுக்கிறைப் பொருள் ஆறிலொன்றாயிற்று என்பதும் உணரற்பாலது. இனி, இவ்வறங்கள் ஐந்தனுள் விருந் தோம்பலை மட்டும் இவ்வாறு சிறப்பித்துக் கூறுவானேன் எனின், முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன வாசலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கீத லன்மையானும், இடைநின்ற விருந்தோம்பல் சிறப்புடைத்தாய்க் கொள்ளப்பட்டது. ஈண்டு சுற்றத் தாரை ஓம்பல் பிறர்க்கீதலன்மை யென்ற பரிமேலழகியார் வாக்கும் கருதத்தக்கது. இதுகாறும் கூறியவற்றால் நம்மை அறிந்தும் அறியாமலும் நம்மிடம் வரும் பலரும் விருந்தாவார் என்பது பெற்றாம்.

பின்னும் விருந்தாவார் யாரெனின், பிரமச்சாரியும், சந்நியாசியுமாவார்கள். என்னை? பிரமச்சாரி, கிரகஸ்தன், வானப்பிரஸ்தன், சந்தியாசி ஆகிய நால்வகை ஆசிரமத்தவருள், கிரகஸ்தனும், வானப்பிரஸ்தனும் நீங்கலாக, மற்ற இருவரும் தாமே அட்டுண்ணா நிலையிலுள்ள வர்களானதால் அவ்விருவருமே கிரகஸ் தனால் விருந்தாக ஏற்கத்தக்கவர்கள். இல்லறத்தான் இவ்விருவரையும் உபசரியாது தன்னைப்போன்ற கிரகஸ்தனையே உபசரிப்பனேல், அது வீழ்வார்க்கு வீழ்வாரும் சாவார்க்குச் சாவாரும் துணையாமர்றுபோலப் பயனற்றுப் போகுமேயன்றி, தான் இல்லறத்தை மேற்கொண்டதாலாய பயனையடைய வழியாகாது.

“அட்டுண்டு காழ்வார்க் கதிதிகளெஞ் ஞான்றும்
அட்டுண்ணா மாட்சியுடையவர் - ஆட்டுண்டு வாழ்வார்க்கு
வாழ்வார் அதிதிகளென் றுரைத்தல்
வீழ்வார்க்கு விழ்வார் துணை"

என்ற முனைப்பாடியார் திருவாக்கு இதனை வலியுறுத்தும்.

இதனால் மேற்கூறியவர்களோடு, பிரமச்சாரி, சந்நியாசி என்பவர்களும் விருந்தாவார். என்று பெறப்பட்டது.

2. இனி, விருந்தினரை ஓம்ப வேண்டுவார் யார்? என்பதைப்பற்றி ஆராய்வாம். அடைதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற புருஷனா ருவன் எய்தலாவதோர் புருஷார்த்தங்கள் நான்கனுள் பொருளும் இன்பமும் போலாது, அறமானது இம்மை, மறுனம, வீடென்னும் மூன்றனையும் பயத்தலான் அறமே முதற்கண் நிறுத்தப்பட்டு, சிறப்புடைத்தாயது என்பது ஒருதலை. அவ்வறமும் இல்லறம், துறவறம் என இரு பகுதியுடைத்து. எனினும், இல்லறமே முதலாகப் பெற்றது யாதுபற்றிகூறுதும், பாவத்துக்கஞ்சி நல்வழியில் ஈட்டிய பொருளைப் பிரமச்சாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி, துறந்தார், துவ்வாதவர். இறந்தார், தென்புலத்தார் தெய்வம், விருந்து, ஒக்கல் ஆகிய பதின் மருக்கும் பங்கிட்டுக்கொடுத்து, தான் உண்ணுவதே இல்வாழ்வான் கடமையென்றும், அப்பதின்மரிலும் விருந்தினரை ஓம்புதற்காகவே ஒருவன் இல்வாழ்க்கையை மேற்கொள்வதென்றும், விருந்தினரை ஓம்பாவழி, இல்லின் கண்ணிருத்தலும் பொருள் செய்தலும் பயனற் றவையர் மெனவும் வற்புறுத்திக் கூறியிருப்பதால், இல்வாழ்வாரே விருந்தினரை ஓம்பவேண்டியவர் என்பது பெற்றாம். இதை "இருந் தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்னும் வேதமொழி விளக்கும். இல்லறமே நல்லறமென் றதும் இத்தகைய அறங்களை செய்வதனாலென்க. “துறந்தார்க்குத் துப்புரவுவேண்டி மறந்தார்கொன் மற்றையவர் கடவம்'' எனத் துறவற வியலில், தவம் எனம் அதிகாரத்தில் கூறிய செய்யுட்கருத்தையும் இதனுடன் ஒத்துப்பார்க்க.

தொழில் முறையில் பார்க்குமிடத்து, உழவுத்தொழிலுக்குரிய வணிகரும், வேளாளரும், அதனைச் செய்விக்கும் பலரும் ஆதிகாலந் தொட்டு விருந்தினரை யுபசரிக்கும் துறையை மேற்கொண்டொழுகி வந்தார்களென்று நூல்களால் கருதக்கிடக்கிறது. என்னை! உழவுத் தொழிலைச் சிறப்பித்த நம்தெய்வப்புலபைத் திருவள்ளுவநாயனார் கூறிய ''உழுதுண்டு வாழ்வாரேவாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின் செல்பவர்" என்ற குறளில்'' உழுது என்பதற்கு "எல்லோரும் உண்ணும்படி உழுதலைச்செய்து என்று பரிமேலழகர் உரை விளக்கிருப்பதும், 'உழவினார் கைம்மடங்கினில்லை விதைவ தூஉம் விட்டே மென்பார்க்குநிலை'',  "இரவார் இரப்போர்க் கொன்றீவர் கரவாதுகை செதண்மாலையவர்"',  'விருந்தோம்பலுக்குப் பயன் கூறும் முகத்தானே கூறிய  ''வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி எச்சின்மி சைவான் புலம்" என்ற குறள்களும், "வேளாளன் என்பான் விருந்திரு க்க வுண்ணாதான்" "இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும், உழவிடை விளைப்போர்'' என்பது முதலான பெரியார்வாக்கும் ஈண்டுக் கருதற்பாலன.

3. ஓம்பல் என்பதின் பொருள் யாது? என்பது நமது அடுத்த விசாரணையாகும். ஓம்பல் என்பது வழுவாமற்செய்தல், புறந்தருதல், காப்பாற்றல், உபசரித்தல், உண்பித்தல் என்னும் பொருள்களில் வந்திருப்பதால்'' விருந்தினரை ஓம்புதல் என்பது விருந்தினர்க்கு உணவளிப்பது என்று மாத்திரம் பொருள் கொள்ளத்தக்கதல்ல. விருந்தினர் விரும்பும் பல்பொருளையும் அல்லது அவர் வேண்டுவது எத்தகைய உயர்ந்த பொருளாயினும் கொடுத்து, அவர்களுக்கு வருந்துன்பங்களைப் போக்கிக்காத்து உபசரிப்பது என்றும் பொருள்படும், விருந்தினன் எப்பொருளைக் கேட்டாலும் பெரியோர்கள் அப்பொருளைக் கொடுத்து விடுவார்களே தவிர, அவற்றால் தாமடையும் இலாபத்தைக் கரு தார்கள். இதை நோக்கியன்றோ 'மருந்தேயாயிலும் விருந்தோடுண்''  "விருந்து புறத்ததாத்தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று'' என ஆன்றோரும் கூறிப்போந்தனர். இங்கு மருந்து என்றது தேவாமிர்தத்தை, அவரவர் வியாதிக்குத் தக்கவாறு வைத்தியன் கொடுக்கும் கசப்பு மருந்தையல்ல. “தேவாமிர்தமெனும் அதன் சிறப்பைநோக்காது அதையும் விருந்தினர்க்குப் பகிர்ந்து கொடுத்து நீயும் உண்'' என்பதே பொருள். மருந்து தேவாமிர்தமெனப் பொருள்படுவதை "ஏவாமக்கண் மூவா மருந்து" என்பதோடு ஒத்துப்பார்க்க, இதனால் விருந்தோம்பல் என்பது தம்மிடம் வந்தார் யாவரேனும் அவர் தம்முடன் உண்ண இசைவாராயின் அவர்க்கு மட்டும் உணவளிப்பது அல்லவென்றும், "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்க முயிரினுமோம் பப்படும்' என்பதாலும், ஒழுக்க முடைமையானது இல்லறத்தானுக் குரிய அறங்களில் ஒன்றாகையானும், ஒழுக்கமாவது தத்தம் வருணத் திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினையுடையராதல் எனப் பொருள்படுவதாலும், இல்லறத்தான் ஒவ்வொருவனும் தன் வீட்டில் உண்ண இசைந்தவனை உண்பித்தும், அல்லாதானுக்கு வேண்டுவன கொடுத்து உபசரித்தும், மற்றும் அவர் விரும்புவனவற்றைச் செய்தும் அவர்களைக் களிப்பிப்பது என்பதே பொருளாகும்.

உபசரிக்க வேண்டிய முறையாதெனின், கூறுதும்: - விருந்தினரைத் தூரத்தில் கண்ட போதே அவர்கள் முகமலரும்படிதான் குளிர்ந்த பார்வையுடையவனாய் அவர்கள் சற்றுக் கிட்டியவுடன் தைரியமாய் வருமாறு இன்முகங்காட்டி, மிக்க சமீபத்தில் வந்துழி, எதிர் கொண்டழைத்து, மனதார இன்மொழி புகன்று, வீட்டிற்கழைத்துச் சென்று, ஆசனமளித்து, வருணாசிரமத்திற்குத் தக்கபடி தன்னாற்கூடிய வளவு உபசரித்தல் வேண்டும். விருந்தினரைச் சேய்மைக்கண் கண் இழி இன்முகக் காட்டாவிடின் அவர்கள் அங்ஙனேவாடி நீங்குவார்கள். அவர்கள் முகம் அனிச்சமலரினும் மெல்லியதாம். மலர்களெல்லாவற்றுள்ளும் மெல்லியதான அனிச்சமலர் மோந்தால் வாடுந்தன்மையது, விருந்தினரோதம்மை ஏற்பவர் முகம் வேறுபட்டுத் தம்மை நோக்கின் வாடிவிடுவார்கள். "மோப்பக்குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து'  என்னும் அமுதவாக்கின் கருத்தும் இதுவல்லவா! அன்றியும், ஒருமரத்தில் ஒருவன் ஒரு பழத்தையடையக்கருதுவனேல், அம்மரம் முதலில் அரும்புடையதாய், அவ்வரும்பும் உதிர்ந்து போகாமல் மலராய், பின்னர்காயாய், கடைசியில் கனியானாலன்றோ முதலிலிருந்து தான் கருதிய பழத்தை அம்மரத்தினின்றும் அடையலாமென்னும் நம்பிக்கையோடு ஆவலுற்றிருப்பான் அங்ஙனமாகாது, கனிபெறக்கருதியமரம் அரும்பே கொள்ளாமலிருந்தாலும், அல்லது அரும்பு உண்டாய் உதிர்ந்து போனாலும், அல்லது மலராகி, காயாய் வெம்பிப்போனாலும் எங்ஙனம் பழம் கிடைக்குமெ ன்று கருதி மரத்தையடைவான்? அதுபோல ஒருபொருளைப் பெற விரும்பி வரும் விருந்தினனும் வரவேற்பானது குளிர்ந்த பார்வையும் இன்முகமும் வாய்மை இன்மொழியும் கண்டாலொழிய அவனிடம் விரும்பியது கிடைக்குமென்று நம்பி அவனையடையமாட்டான். ஆகையின், முறையே அரும்பு, மலர், காய், கனிகள் போன்ற கண்ணோக்கு, நகைமுகம், இன்மொழியின் வாய்மை, கொடை இவை விருந்தேற்பார்க்கு அவசிய மென்பதாயிற்று. "கண்ணோக்கரும் பாநகை முகமேலாண்மலரா, இன் மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை, பலமா நலங்கனிந்த பண்புடையாரன்றே, சலியா தகற்பதரு", இன்சொல்விளை நிலனாவீதலே வித்தாக, வன்சொற்களை கண்டு வாய்மையெருவட்டி, அன்பு நீர்ப்பாய்ச்சி அறக்கதிரீனவோர், பைங்கூழ் சிறுகாலைச்செய்'' என்ற பெரியார்வாக்குகள் ஈண்டுப்பெரிதும் கவனிக் கற்பாலன. அன்றியும், இவற்றுளெல்லாம் அன்போடு உபசரித்தலே இன்றியமையாதது. அன்போடு செய்யாவழி, இவ்விருந்தோம்பல் யாதொருபயனையுந்தராது, அன்புண்டாயவழியே விருந்தோம்பல் கூடுமென்பது பற்றியே, அன்புடைமைக்குப்பின் இவ்விருந்தோம்பல் அமைக்கப்பட்டிருக்கும் அதிகார முறையானே நன்குbவிளங்கும்.

4. விருந்தோம்புவதற்குரிய சாதனம்: - நன்மனையாளைப் பெற்றிருப்பதே இதற்குப் பெரியதோர் சாதனமாம். மனையாள் கணவனோடு இசைந்து ஒழுகாவழி, எங்ஙனம் இல்லறம் நடைபெறாதோ அங்ஙனமே விருந்தோம்பலும் நடைபெறாது. “இல்லது என் இல்லவள் மாண்பானால் உள்ளது என் இல்லவள் மாணாக்கடை" என்றபடி இல்லவள் இசைந்தால் எப்படிப்பட்ட வறுமைக்காலத்தும் விருந்தோம்பலாம் அவள் இசையாவிடின், குபேரனையொத்த செல்வனாயினும் இனிதோம்பலியலாது. இதனாலன்றோ "மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய், இழைவிளக்கும் நின்றிமைப்பின் என்னாம் விழைதக்க, மாண்டமனையாளை யில்லாதான் இல்லம், காண்டற் கரியதோர்காடு'' என்றும் கூறியுள்ளார். மனையாள் விருப்பமில்லாமல் விருந்தோம்ப விரும்பினவர்கள் பட்டபாடுகளை அநேக கதைகளில் அன்பர் பலரும் கேட்டிருப்பாராகையால் நான் அதனை விரித்துரைக்க வேண்டுவதில்லை. இல்வாழ்வான் செய்யவேண்டிய அறங்கள் பலவற்றிற்கும் இல்லாள் இன்றியமையாத் துணையானது பற்றிதான் இல்லாள் வாழ்க்கைத் துணை எனப்பட்டாள். இத்தகைய சிறப்புவாய்ந்த இல்லாளோடு இனி தமர்ந்து ஒத்த அன்புடையவர்களாய் இவ்வறத்தைப் புரிதல் வேண்டும். எனவே, பொருள் முதலிய பலவற்றினும், நன்மனையாளே முக்கிய சாதனம் என்பதாயிற்று.

5. பயன்: - விருந்தோம்புவதால் இம்மையில் வறுமைநோயால் பீடிக்கப்படாமல், இலட்சுமி கடாக்ஷம் பெற்று, எடுத்தகாரியம் பல வற்றிலும் சித்தியடையலாம். இதை 'வருவிருந்துவைகலுமோம் புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதலின்று'' அகனமர்ந்து செய்யலயாளுறையும் முகனமர்ந்து நல்விருந்தோம்புவானில் "வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி எச்சின் மிசைவான் புலம்''  என்னும் குறள்களால் அறியலாம். ஆனால் இதனால் இம்மைப் பயனையடையலாமே யொழிய மறுமைப்பயனாகிய வானுலகவின்பங் கிட்டுமோ வெனின், “செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு'' என்னும் குறளால் விருந்தோம்புவான் மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளவர்க்கு நல்லவிருந்தாவான் அதாவது வானத்தாராலும் உபசரிக்கப்பட்டு நன்கு மதிப்பை யடைந்து வானவரிலும் மேம்பட்ட சுகத்தை யடைவானென்பது வெளியாயிற்று, இதுமாத்திரமா? இவ்விருந்தோம்பலானது ஐம்பெரும் வேள்வியின் ஒன்றாகலின், இது பெரியோரால் வேள் வியென பழங்கப்பட்டது. ஐம் பெரும் வேள்விகளாவன: -
(1) பிரமயாகம் = வேதமோதல், (2) தேவ யாகம் = ஓமம்வளர்த்தல், (3) மாநுடயாகம் = விருந்தோம்பல், (4) பிதுர்யாகம் = நீர்க்கடனாற்றல், (5) பூதயாகம் = பலியீதல்.

இதனால் விருந்தோம்புவார் வேள்வியினாலாய பயனையும் அடைவாரென்பது ஏற்பட்டது,“ இனைத்துணைத் தென்பதொன்றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப்பயன்'' என்று கட்டளையிட்டிருப்பதால் (எத்துணைச் சிறப் பாக ஒருவன் விருந்தோம்புகிறானோ அத்துணைப்பயன் அடையலாம்) நாம் விருந்தினரை முறைப்படி உபசரித்தால் எய்தலாவதோர் பெரும் பயனை யடையலாமென்பது திண்ணமாயிற்று.

மறைபுலங் கொளவியம்பும் இம்மையம்மை வீடெனு மூன்றி னுள் இம்மையம்மைப் பயன்களை அடையலாமே யொழிய, இவ்விருந் தோம்புதலால் வீடடைதல் கூடுமோ என்பார்க்கு அறுபான் மும் மையடியார்களுள் விருந்தளித்துப் பேறுபெற்றாரே சான்றாவார்.

6. விருந்தோம்பி வீட்டின்பம் பெற்றவர்யார்? நம் அறுபான் மும்மையடியவருள் ஒருவராய் விளங்கிய இளையான் குடிமாற நாயனார் இல்லறத்திலிருந்து, உழுது பயிர்செய்து, நன்மனைவியாய்க்கப் பெற்று, தம்மில்லிற்கு வந்தார் யாவரேனும் அன்போடெதிர் கொண்டழைத்து, அமுதுபடைத்து அழியாமுத்தியையடைய வில்லையா? செல்வமேவிய நாளிலன்றிக் கஷ்டம் வந்த காலத்தும் இவ்வரியபணி யைச் செய்தார்கள். தம்மிடம் ஒன்று மில்லாது வருந்தியிருந்த காலத்தும், தம்மிடம் வந்த விருந்தினரை அன்போடு வரவேற்று இன் மொழிகூறி, செய்யவேண்டும் உபசாரங்களையுஞ் செய்தி பகல் வித்திய செந்நெல் முளையை வாரிக்கொணர்ந்து, மாதர்கை கொடுக்க அவர்கள்அதைக் கொண்டு இன்னமுது செய்தாாகளெனின், விருந்தளிப்பது எத்துணைக் கஷ்ட காலத்தும் அவசிய மென்பதும், மனைவியின் ஒற்றுமை முதலியனவும் முன்னர் காட்டியபடி அவசிய மென்பதும் ஏற்படவில்லையா? இதுமாத்திரமா? அம்மாது சிரோமணி,'' மனைவி யார் கொழுநர் தந்த மனமகிழ் கறிகளாய்ந்து, புனலிடைக் கழுவித்தக்க புனிதபாத்திரத்துக் கைம்மை, வினையினில் வேறுவேறு கறிய முதாக்கிப்பண்டை, நினைவினால் குறையை நேர்ந்து திருவமுதமைத்து நின்று " என்றபடி முன்போல அடியார்க்குச் சிறந்தவுணவு அமைப் பதற்கில்லையே யென்று வருந்தினரே யொழிய, தாம்வறுமையடைந்த தற்காக வருந்தினாரில்லை. இதுவே மேலோர் செய்கையாம். இதைச் சிவ ஞான போத பாஷியகர்த்தரான சிவஞானமுனிகள் பின்வருமாறு விளக்கி யிருக்கிறார்கள்.

''பண்டை நினை வெண்ணிநொந்தார் பாகஞ்செய்மாறராந்
தொண்டர் மனைவியார் சோமேசா - கண்டோம்
நயனுடையான் நல்கூர்ந்தானாதல் செயு தீர
செய்யாதமை கலாவாறு''

இச்சரித்திரத்தால் விருந்தாவர் புதிதாக வருபவர் என்பதும்; இல்லறத்தான் அவரை எப்படிப்பட்ட வறுமைக்காலத்தும் காக்கவேண்டு மென்பதும்; வீட்டுக் கூரையைப் பிரித்து விறகாக உபயோகித்ததையும், பகல் வித்திய நெல்முளையை வாரிக்கொணர்ந்தமையும் நோக்க, விருந்தினரை ஓம்புவதில் தமக்கு நேரிடும் கஷ்ட நஷ்டங்களைப் பெரியோர்கள் கருதார்களென்பதும்; மாரிக்காலத்திரவினில் இல்லமடைத்தபின் வந்தும் அவரை எதிர்கொண்டு ஈரமேனி நீக்கி இடங் கொடுத்து, ஆர இன்னமுதூட்டுதற்கு ஆசைப்பட்டமை முதலியவற்றை நோக்க, உபசரிக்கவேண்டிய முறையின்னதென்பதும்; நாயனார் வருந்திய போது அவர் மனைவியார் செந்நெல் முளை கொணர்ந்தால் வல்லவாறமுதாக்குவே னென்றதும், கொண்டுவந்தபின், வாய்தலினின்று வாங்கி, சிந்தையின் விரும்பி செய்ய வேண்டுவன செய்து வெறுப்பில் இன்னடி சிலாக்கியதும், குழிநிரம் பாதபுன்செய்க்குறும் பயிர்கொண்டுகைம்மை வினையில் வேறுவேறு கறியமுதாக்கியதும், பண்டை நினைவினால் குறையை நேர்ந்து திருவமுதமைத்ததும் நோக்க. நன்மனைவியிருந்தால் எப்படிப்பட்ட கஷ்டகாலத்தும் விருந்தளிக்கக் கூடுமானபடியால் மனைவியே சிறந்தசாதன மென்பதும்; விருந்தினராகவந்த பெருமான் சோதியாகி மறைந்து, பின்னர் இடபாரூடராய் தோன்றி

"அன்பனே யன்பர் பூசை யளித்த நீ யணங்கினோடும்
என்பெருந் தலத்தையெய்தி யிருநிதிக் கிழவன்றானே
முன்பெரு நிதியமேந்தி மொழிவழி யேவல்கேட்ப
இன்பமார்ந் திருக்கவென்றே யருள் செய்தா னெவர்க்குமிக்காள்''

என்றிருப்பதால் விருந்தோம்பியவர்கள் சகல சம்பத்தையும் அடைந்து, சிவசந்நிதியில் சென்று அழியா வின்பத்தையும் அடைவார்களென்பதும் உய்த்துணரத்தக்கது.

ஆனால், இந்நாயனார் செய்தது அடியார் பூசையல்லவா? இவ்வடியார் பூசையை ''விருந்தோம்பல'' என்று சொல்வது எங்ஙனம் பொருந்தும்! என அன்பர் சிலர் ஐயுறலாம். நம்குன்றை முனிகள், நற்ற வத்தவர் வேடமே கொண்டு வந்த சிவபிரானை நாயனார் வரவேற்றதை'' மாரிக்காலத் திரவினில் வைகியோர், தாரிப்பின்றிப் பசித்தலைக்கொ ள்வது, பாரித்தில்லமடைத்த பின் பண்புற, வேரித்தாரான் விருந்தே திர் கொண்டனர் " என்றே கூறியிருப்பதால் அவரை விருந்தாகவே யேற்றனர் என்பது வெளியாகிறது

இந்நாயனார் விருந்தோம்பிய அருமைத்திறத்தை நம்பியாண்டா பிர் நம்பிகள் வியந்து கூறியிருப்பது இங்குகவனிக்கத்தக்கது.

இயலாவிடைச் சென்றமாதவர்க் கின்னமுதாவிதைத்த
வயலார் முளை வித்துவாரி மகனயலக்காலால் வறுத்துச்
செயலார் பயிர் விழுத் தீங்கறியாக்குமவன் செழுநீர்க்
கயலாரிளையான் குடியுடை மாறனெங் கற்பகமே"

சிறுத்தொண்ட நாரனாயர் அரும் புதல்வனையும் அட்டு விருந்திடவில்லையா? விருந்தினர் விழைந்தது அரியபொருளென வெண்ணினரா? மனைவியும் இசையாவிடின் அஃது எங்ஙனம் முடியும்! இவ்வரியகாரியம் செய்தபோது அன்பிற் குறைவுண்டா? இதுவல்லவோ விருந்தின் மாண்பு!'' ஒருகுடிக்கு நல்லசிறுவன் ஒரு மகனை, தாதையரி யதாய் பிடிக்கும் பொழுதிற் றம்மனமுவந்து, தெமின்றிய மைத்தகறி யாமிட்டுண்பதென மொழிய" 

''இனிய மழலைக் கிண்கிணிக்கால் இரண்டும் மடியின் புடையிடுக்கிக்
கனிவாய்மைந்தன் கையிரண்டுங் கையாற்பிடிக்கக் காதலனும்
நனி நீடுவகை யுறுகின்றாரென்று மகிழ்ந்து நகைசெய்ய
தனிமா மகனைத் தாதையார் கருவிகொண்டு தலையரிவார்"

என்றபடி இவ்வரிய பணியைச் செய்து முடிவில் தம்மகனும் உயிர்பெற்றெழுந்து, எல்லோரும் இறைவன்றிருவடியை யடைந்தாரெனில் அடியார்கு விருந்தளிக்கும் மாட்சிமை இத்தன்மைத்தென்று சொல்லவும் வேண்டுமா?

அப்பூதியடிகள் தம்மகனிறந்ததையும் நோக்காது, அடியார்க் கமுதளித்து ஆனாச்சிறப்படைய வில்லையா?

மானக்கஞ்சாறர் ''கலசமுலைக் கன்னிகாதற் புதல்விகமழ்குழலை பஞ்சவடிக்கு நல்கெனலும், அற்றைத்தினம் திருமணநாளா யிருந்தும், அசுபமெனக் கருதாது அவள் கூந்தல் அரிந்தளிக்க வில்லையா!

(இதனால் விருந்தினர் கேட்கும் எப்பொருளையும் கொடுத்தல் அவசிய மென்பது பெறப்பட்டது).

இயற்பகை நாயனார் “செய்தவர் வேண்டியது யாதுங் கொடுப்பச் சிவன் றவனாய்க், கைதவம்பேசி நின்காதலியைத் தருகென்றலுமே மைதிகழ் கண்ணியையீந்தவன்'' என்றபடி மனைவியையும் கொடுத்து உபசரிக்கவில்லையா?

ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் சிவநேசச் செட்டியார் திருக்குமாயத்தியை உயிர்ப்பித்தகாலத்துச் சொல்லியதாகச் சொல்லிய சேக்கிழார் பெருமான் சிறந்தமொழியும் ஈண்டு கருதத்தக்கது.

"மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்
அண்ணலடியார் தமையமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப்பொலிவு கண்டார் தல்
உண்மையாமென உலகர் முன் வருகென வுரைப்பார்.

இதுகாறுங் கூறியவற்றால், “விருந்தாவார் புதிதாக வருபவர், பிரமச்சாரி, சந்நியாசி ஆசிரமத்தவர்களாகிய இவர்கள் தாமென்பதும், விருந்தேற்க வேண்டுபவர் இல்லறத்தானென்பதும், ஓம்புதல் என்றால் அவர்களுக்கு உணவளிப்பது மாத்திரமல்ல, வேண்டுவன பலவும் கொடுத்து உபசரிப்பதென்பதும், இன்முகங்காட்டி இன்சொல்வழங்கி வரவேற்க வேண்டுமென்பதும், அன்புடைய மனையாள் இல்லாவழி விருந்தோம்பல் நடைபெறாதென்பதும், இதனால் இம்மை மறுமை வேள்விப்பயன்கள், வீட்டின்பம் ஆகிய இவற்றையடையலாமென்பதும், வீட்டின்பத்தை இதனால் அடைந்ததற்கு இளையான்குடி மாறநாயனார் முதலியோரே சான்றாமென்பதும் போந்தகருத்தாம்" என்பதை அறிவித்துக் கொள்வதோடு, இவ்வித அரிய அறத்தை அனைவரும் நடத்திப் பரசிவப்பொருளின் பாதாரவிந்தத்தை யடை ந்து, அத்வைத முத்தியெய்துமாறு எல்லாம் வல்லகலையுணர் புலவனான ஸ்ரீ சிவசுப்பிரமணியக் கடவுளது திவ்ய சரணார விந்தங்களை என் மன மொழி மெய்களால் பிரார்த்திக்கிறேன்.

பொன்மார். நடேச முதலியார்.

சித்தாந்தம் – 1915 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment