Sunday, May 10, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
வேதாந்தமும் மாயாவாதமும்

வேதாந்தத்துக்கு மாயாவாதக் கொள்கை இன்றியமையாத தொன்றென்று கீழ்நாட்டிலும் மேனாட்டிலுமுள்ள தத்துவ சாத்திரிகள் கருது'கின்றார்கள், கேவலம் பரம்பொருளாகிய பிரமமே சத்தியமென்றும் மற்றையகண்டப் பொருள்களெல்லாம் மித்தையென்றுங் கூறுங் கேவலாத்துவித சாத்திரமே வேதாந்த சாத்திரமென்று நினைக்கப்பட்டுவருகின்றது. சித்துத் தன்மையோடுங் கூடிய கேவலமுழுமுதற் சத்துப்பொருளொன்றுண்டு. கண்டப்பொருள்களாகிய ஜீவான் மாக்களோடுங் கூடிய இப்பிரத்தியக்ஷானுபவ உலகமோ ஒருமித்தைப்பொருள், மானதக் காட்சிக்கும் புலனாகும் விடயங்களெல்லாம், கனவு காண்பானுக்குப் புலப்பட்டு அவன் விழித்தமாத்திரையானே சூன்யமாய் விடும் பொய்த்தோற்றங்கள் போல் உள்ளன. மாயையென்பது கண்டமாகிய உலகத்தின் மித்தைத்தன்மையை உணர்த்துவது. இம்மாயாவாதக் கொள்கையை ஸ்ரீமத் சங்கராசாரிய சுவாமிகள், கயிறும் அரவும், இந்திர்சால வித்தைக்காரனும் சாலவித்தையும், பாலையும் பேய்த்தேரும், துயில்வோனும் கனவும் போன்ற உபமானங்களான் விளக்குகின்றார். இக்காலத்திலறியப்பட்ட வேதாந்தத்தின் முக்கிய கொள்கைகள் ‘ பிரமமே நித்தியம், பிரபஞ்சம் பொய், ஆத்மனே பிரமம். வேறன்று,'என்ற வாக்கியங்களில் சுருங்கப்பட்டிருக்கின்றன. மாயாவாதக் கொள்கை வேதாந்தத்துக்கு இன்றியமையாத தொன்றென்று இக்காலத்தில் கருதப்படினும், வேதாந்த சாத்திரத்துக் கும் மாயாவாதக் கொள்கைக்கும் உள்ள சம்பந்தத்தைக் குறித்துக் கீழ் நாட்டுப்பண்டிதர்கள் பலருக்கு அபிப்பிராயபேத முண்டு. ஸ்ரீமான்,கௌ, பண்டிதர் கீல் டி பூசன், பண்டிதர் பிரபுடட்சாஸ்திரி ஆகிய இவர்கள் வேதாந்ததத்துவத்துக்கு மாயாவாதக்கொள்கை உரியதே யென்றறுதி யிட்டிருக்கின்றார்கள். இந்தியாவின் ஆதிகாலத்து இருடிகளுக்கு முதல் முதற்றோன்றியது மாயாவாதக் கொள்கையேயென்று அவர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். “ஞாதுருஞேயங்களின் துவிதபாவனையும், ஆன்மாக் களின் பன்மையும், அவற்றின் அனுபவாதிப் பொருள்கள் பலவும் அநித்தியமென்றுணர்த்தும் மாயாவாதம், ஆதி இந்தியரின் தத்துவ ஞானத்துக்கு உயிர்போன்றது,”  என்றார் ஸ்ரீமான். கௌ. (கௌ,'உபநிடதங்களின் தத்துவம்  'பக்கம். 237) ஆனால் மற்றொரு சாராராகிய ஸ்ரீமான். கோல்புரூக்கும், பண்டிதர் தீபாவும் மாயாவாதக் கொள்கை பிற்காலத்திலுண்டாக்கப்பட்டு இடையே செருகப்பட்டதென்று நம்புகிறார்கள். “ பல் வேறுவகைத்தான இவ்வுலகம் மித்தையென்றும், சாக்கிரத்தில் ஆன்மா வினாலறியப்படும் பலவிடயங்கள் அவனுடைய நினைவுக்குத் தோன்றிய பொய்த்தோற்றங்க ளென்றும், கட்புலனாகும் பொருளொவ் வொன்றும் அநித்தியமென்றும், மற்றுமெல்லாம் மித்தையென்றுங் கூறுவது வேதாந்த சாத்திரத்தின் கொள்கையாகக் காணப்படவில்லை. அக்கொள்கையைத் தழுவிய விஷயமொன்றைக்கூட வியாசசூத்திரத்திலாவது அல்லது சங்கர பாஷியத்திலாவது யான் குறிப்பிட்டதில்லை. ஆனால் அவ்விஷயம் மற்றைய பாஷியங்களிலும், அஃது ஆதிவேதாந்தின் கொள்கையன்றென்று யான் உறுதியாய்க் கூறுகின்றேன். ஆனால் பின் வந்தார் அதை வேறு சாத்திர த்தினின்று மெடுத்து வேதாந்த சாத்திரத்துள் நுழைத்து அவ்விரண்டு சாத்திரங்களையும் குழப்பிவிட்டார்கள், " என்று ஸ்ரீமான் கோல் புரூக் 1820 - ம் வருடத்தில் இராயல் ஏஷியாடிக் சங்கத்தில் வாசித்த வேதாந்த வியாசத்திற் கூறியுள்ளார். மாயாவாதக் கொள்கையைத் தழுவிய விஷயம் யாதொன்றும் சங்கரபாஷியத்திற் காணப்படவில்லை யென்று ஸ்ரீமான் கோல் புரூக் கூறியது தவறான விஷயம். ஆனால் வேதாந்த நூல்களாகிய வேதங்களும், பழைய உபநிடதங்களும், வேதாந்த சூத்திரமும் மாயாவாதக் கொள்கையைக் கொஞ்சமேனும் குறிப்பாகக் கூறவில்லையென்று அவர் கூறின துண்மையே. மற்று. அந்நூல்கள் பிரபஞ்சத்தின் நித்தியத்தையே உணர்த்துகின்றனவென்று நாம்ஸ்தாபிக்கக்கூடும். பௌத்தசமயவாசனை யேற்றத்தனால் சௌபாதர் உபதேசங்களையனுசரித்து மாயாவாதக்கொள் கையை வேதாந்தசாத்திரத்துள் நுழைத்தது ஸ்ரீசங்கராசாரியசுவாமிகளே. பின்தோன்றிய சங்கர வேதாந்தத்துக்கு மாயாவாதக்கொள்கை யின்றி : யமையாததொன்று. ஆனால் பழைய சுத்தாத்துவிதக் கொள்கையையுடைய வேதங்களுக்கும் பழைய உபநிடதங்களுக்கும் அக்கொள்கை புறம்பே. வேதாந்தத்துக்கும் மாயைக்குமுள்ள சம்பந்தத்தைக் குறித்தவாதம் இக்காலத்துக்கே உரியதன்று. இந்திய நாட்டில் விளங்கிய முற்காலத்துத் தத்துவஞானிகள் கூட இம்மாயாவாதக் கொள்கை, உண்மையோ வென்று சந்தேகித்தார்கள். விஞ்ஞானபிக்ஷ என்பவர் மாயாவாதம் பௌத்த சமயத்தின் அந்தரங்கக்கொள்கை யென்று கூறுமொரு பாகத்தைத் தனக்குடன்பாடாகப் பத்மப்ராணத்திலிருந்தெடுத்துக் காட்டுகிறார். 'தேவி! வேதவாக்கியங்களுக்குப் பலராலுங் கண்டிக்கப்படும் விபரீதார்த்தங்களைக் கொடுப்பதும், கிரியாமார்க்கத்தை யொழித்து நிவர்த்தி மார்க்கத்தையே போதிப்பதும், பௌத்தசமயத்தின் அந்தரங்கக் கொள்கையுமாகிய பொய் மாயாவாதக் கொள்கையை, நானே ஓர்பிரமத்தினுருவைத் தாங்கிக் கலியுகத்தில் கூறினேன்.” என்று பரமேஸ்வரன் தன் மனைவியாராகிய பார்வதி யம்மையாருக்குக் கூறின தாகப் பத்மபுராணங் கூறுகின்றது. (மூயிர். 'சமஸ்கிரத நூல்கள்' வாலம் 3 பக்கம் 202.) இங்ஙனம் ஒருசாரார் வேதாந்தத்துக்கு மாயாவாதக்கொள்கை இன்றியமையாத தொன்றென்றும், மற்றொருசாரார் தற்செயலாய் இடையிலே சேர்ந்ததொன்றென்றுங் கருதுகிறார்கள். வேதாந்தத்துக்கும் மாயைக்கும் சம்பந்தமென்னை யென்னும் வினாவை விடுப்பதே இவ்வியாசத்திற் போந்தகருத்து.

வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், பிரமசூத்திரமும், பகவத் கீதையுமே வேதாந்த சாத்திர நூல்களாகும். பின்னிரண்டு நூல்களும் உப நிடதங்களின் சுருக்கங்களாகும் உபநிடதங்களோ வேதங்கள் காரணமா யெழுந்தவை. ஆதலினால் வேதங்களிலும் உபநிடதங்களிலுமுள்ள தத்துவக் கொள்கைகளைச் சுருக்கமாயெடுத்துக்கூறி அவைகள் மாயாவாதக் கொள்கையைக் கொஞ்சமேனுந் தழுவுகின்றனவோ வென்றாராய்வதே நம்முடைய கடமையாகும்.

சாத்திரத்துக்கு மூலம் அதிசயமென்பது பலராலு மாளப்பட்ட தோர் வசனம். பல்வகை நிகழ்ச்சிகளோடு கூடிய இவ்வுலகத்தின் விசித்திர அமைப்பு ஆராயுமறிவுடையார் மனதுக்கோர் எழுச்சியை யுண்டாக்கு கின்றது. செந்நிறப் பசுவினின்று வெண்ணிறப்பால் எங்ஙனம் வருகின்றது? சூரியன் தன்னிலை வழாமல் எங்ஙனம் நிற்கின்றான்? “தாங்குத லொன் றின்றியும், கட்டின் றியும், தன்னிலையினின் றுந் தாழாமல் அஃதெங் ஙனங்கீழ் நோக்கிச் சுற்றிவருகின்றது." (இருக்குவேதம் IV. 13, 5.) ஸ்ரீமான், ஹேகலின் கொள்கை பிரகாரம், சாத்திரமென்பது பதார்த்தங்களின் விசாரணையே, ஆராய்ச்சியினால் பதார்த்தத்தின் நியாயத்தையும், அதன் சிறப்பிலக்கணங்களையும், அதன் சாதித்தன்மையும், சுருங்கச்சொல் லின், அதன் விவரமெல்லா மறிகின்றோம். பிரதியக்ஷானுபவங்களின் கார ணங்களை அறியவேண்டிய ஓர் அவாவினால் வேதசாத்திர முண்டாயிற்று. வாழ்க்கையின் பொதுத்தர்மமாகும் மாறுபாடு பலவற்றிற்கு தோன்றாக் காரணமாயிருக்கும் நித்தியமாய் வொன்றையறியத் தத்துவஞானம் மக்களைத் தூண்டாநின்றது. எப்பொருள்களும் அழிவையடைகின்றன. பின் எஞ்சிநிற்பதெது? யாதேனு மொன்றுண்டோ வில்லையோ? வேதந்தோன்றிய காலத்திலிருந்தோர் இத்தகைய சாத்திரக் கேள்வியை யெழுப்பிக் கொண்டு அதற்கு விடையையும் பகந்தனர். அக்காலத்திலே தான் முதல் முதல் இப்பிரதியக்ஷ வுலகத்தைக் குறித்து விசாரணை உண்டாயிற்று. தமக்குத்தோன்றிய சமய உணர்ச்சிகளை வெளியிடக் கஷ்டப்பட்ட அறிவு முதிரா மக்களால் வேதங்கள் உண்டாக்கப்பட்டன வென்பதை நாம் நன்கு அறிய வேண்டும். நமக்கு அவைகள் சாத்திரங்களாகக் காணப்படவில்லை. காரிய வேதுவைக்கொண்டு வேதகிரந்த கர்த்தாக்கள் இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணம் தேவர்களென்று தீர்மானித்தார்கள். சூரியன் ஏன் ஒவ்வொரு காலையிலுதயமாக வேண்டும்? சந்திரன் ஏன். ஒவ்வொரு மாலையிலுதயமாக வேண்டும்? அவைகளை இயக்கிக்கொண்டிருக்குந் தேவதாசக்திகளன்றி அங்ஙனமுண்டாவதற்குக் காரணம்மற்றென்னை? சோம சூரிய தேவர்களுண்டாயினது இங்ஙனமே. பண்டைக்காலத்து இந்திரியர்கள் மேகத்திலொரு தேவதை வீற்றிருப்பதைக் கண்டார்கள். வாயுவிலொரு தேவதை பேசுவதைக்கேட்டார்கள். இயற்கையுலகம் ஒரு தேவலோகமாயிற்று. ‘ நிலம் நீர் நெருப்புயிர் நீள்விசும்பின் 'பூதசக்திகளே சிறு தேவதைகளாயின. இவைகளுக்க தீதமாய் ஓர் பரம்பொருளுண்டென்னுங் குறிப்புகள் வேதங்களிற் காணப்படினும், அந்நூல்களின் பொதுக் கொள்கை கடவுளர் பலரென்பதே. அக்குறிப்புகளு மருகியிருத்தலின், கடவுளர் பலரென்னும் பொய்க் கொள்கையையுடைய மக்களை உயர்த்துவதற்கு அவைகள் போதியவைகளல்லன. உபநிடதங்களெல்லாம், வேதங்கள் குறிப்பாகக் கூறுமத்து விதத்தையே வற்புறுத்துகின்றன. இவ்விடயத்தை நாம் பின்னர் அறியப்போகின்றோம்.

வேதந் தோன்றிய காலத்து முழுமுதற் பிரபஞ்சம் நித்தியமாகவே கருதப்பட்டது. அக்காலத்துத் தத்துவஞானிகள் அதன் உற்பத்திக்குக் காரண மென்னை யென்பதை மட்டு மாராய்ந்தார்கள். புலப்படாதிருக்கும் முதற்காரணங்களை மற்றவைகளினின்றும் பிரித்தெடுப்பதே அவர்களுக்குச் சாத்திரமாகத் தோன்றிற்று. நித்தியவஸ்துவினுண்மைத் தத்துவத்தையறிய வேண்டிய அவா, பல்வகைத்தாய பொருள்களுக்குக் கர்த்தாக்கள் பலரென்னுங் கொள்கையை ஸ்தாபிக்க அவர்களைத் துண்டிற்று. ஆனால் பிரபஞ்சத்தின் மித்தைத் தன்மையையுணர்த்துங் குறிப்பு யாதொன்றும் வேதங்களிற் காணப்படவில்லை. ஒருவகையாய் இந்த விருடிகள்! நித்தியமாயவஸ்து அனுபவாதீதமாய தொன்றென்று கருதாமல், இப்பிரதி யக்ஷவுலகமே யென்றறிந்தார்கள்.

எஸ். இராதாகிருஷ்ண ஐயர், எம். ஏ. எல். டி.
தத்துவ போதகாசிரியர்
பிரஸிடென்ஸி காலேஜ்
சென்னை.

சித்தாந்தம் – 1916 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment