Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
பிரமரகீட நியாயம்.

இவ்வடமொழிச் சொற்றொடர் குளவி புழுவைத் தன்னினமாக்குகிற தென்ற பழைய அபிப்பிராய மேற்கோளாய்க் கொண்டது நியாயமெனினும் நயம் எனினு மொக்கும். இக்கொள்கை, குளவி பக்குவமடைந்த வோர் புழுவைத் தன்கூட்டிற்சேர்த்ததைக் கொட்டுதலாற் புழுவுக்குக் குளவியைப்பற்றிய ஞாபகந்தவிர வேறின்றாகிறது ஆகவே சிலநாளில் புழு தன்னெண்ணத்தின்படி குளவியாய் வெளிவருகிறதென்பது. இதனையே கரன் வதைப்படலத்தில் "அஞ்சிறை யறுபதடைந்த கீடத்தைத், தஞ்செனத் தன்மயமாக்குந் தன்மை போல்'' எனக் கம்பரும், கைவல்லியத்தில் அடங்கிய விருத்தி யானென்ற விந்தபின் செறிந்த மண்ணின், குடம்பையுட் புழு முன்னூதுங் குளவியின் கொள்கை போல்' எனத் தாண்டவமூர்த்தியாருங் கூறியுள்ளார். ஆசிரியர் சிவஞான யோகிகளுஞ் சிவஞானபோதவுரையி லிப்படியே கூறுவதாலிதனைப் பிற்காலத் தோரதிகமாகப் பாராட்டி வந்தனரென்பது தெளிவாகின்றது. சிவஞானசித்தியுரையாசிரியர் ஞானப்பிரகாசரொருவர் மட்டுமே யிதனை யொப்புக் கொள்ளா தொழிந்தார்.

இனியிதனுண்மையை யாராயுங்கால் ஞானப்பிரகாச ரபிப்பிராயமே பொருந்து மெனக் கிருமி யாராய்ச்சி செய்த எவருங்கொள்கின்றனர். குளவியின் முட்டைக்கு முதலில் வெப்பந்தருவதாய்ப் பின் பொரிக்கப்பட்ட குஞ்சுக்குப் புழு இறையாகிற தென்பதே யவர்கள் கோட்பாடு, இப்படியே கிருமி சாஸ்திரவல்லராய லப்பக் என்பவரும் பொருளகராதி யுடையாறுங் கூறுகின்றார்.

இனி, பட்டுப்பூச்சி மீயும்போல் குளவியும் புழுவினின்று பிறக்கக் கூடாதோ என்னு மாசங்கை விடுப்பார்க்கு, அற்றேலிரண்டு மூன்று புழுக்காணுங்கா லொரே குளவிவருவதேனென விடுக்க.

மா. ஜீ.

சித்தாந்தம் – 1915 ௵ - ஆகஸ்டு ௴


No comments:

Post a Comment