Saturday, May 9, 2020



திலதைப்பதி

மு. அருசைலம்

இடம்: தஞ்சை ஜில்லாவில் பூந்தோட்டத்திலிருந்து நாச்சியார் கோவில் செல்லும் பஸ் மார்க்கத்தில் அரிசி லாற்றங்கரையில் உள்ள சிற்றூர். சாலைக்கு வடபுறம் ஊருக்கு நேரே சாலையிலிருந்து வயல்வரப்பு வழியே சென்றால் அரை மைலில் கோயிலை அடையலாம். சாலையிலிருந்து வடக்கு நோக்கி அக்கிரகாரத்தின் வழியே சென்று அரிசிலாற்றங்கரை அடைந்து கரையின் வழியே ஒருமைல் மேற்கு நோக்கிச் சென்றால் கோயிலை அடையலாம். நடந்தே செல்ல வேண்டியிருக்கும். கோயில் மட்டும் சில அந்தணர் வீடுகளோடு தனித்துள்ளது.

பெயர்: பேச்சு வழக்கில் இவ்வூர் செதலைப்பதி என்று வழங்குகிறது. வடமொழிப் பெயர் திலதர்ப்பணபுரி; இராமனும் இலக்குவனும், இறந்துபோன தசரத மன்னனுக்காக இங்குத் தர்ப்பணம் செய்த காரணத்தால் இப் பெயர். "பூம்புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி... மதி முத்தமே'' என்றும், "திலதை மதிமுத்தர்'' என்றும் சம்பந்தர் பாடுவதால், இத்தலத்தின் பெயர் திலதைப்பதி என்றும் கோயிலின் பெயர் மதிமுத்தம் என்றும் நாம் அறிகிறோம். சுவாமி முக்தீஸ்வரர் : (இக்காரணத்தால் போலும்) அம்பிகை ஸ்வர்ணவல்லி, பொற்கொடியம்மை தலவிருட்சம், சிவப்பு மந்தாரை. இதுபற்றி சுவாமிக்கு மந்தாரவனேசுவரர் என்ற பெயரும் உண்டு.

கோயில்: சிறிய கோயில்; கோபுரம் இல்லை. நகரத் தார் சமீபகாலத் திருப்பணி; மகா மண்டபத்தில் பலகணி வைத்துத் தூக்கிக் கட்டியிருக்கிறார்கள். வெளிச்சமும் காற்றோட்டமும் நிரம்ப உள்ளன.

மூர்த்தி: இங்கு மூர்த்திகள் மிகவும் திருத்தமாக உள்ளனர். தென்புறக் கோட்டத்தில் நர்த்தன கணபதி.தக்ஷிணாமூர்த்தி அழகான திருவுருவம்; உதடுகளில் சாந்தம் தவழுகிறது. சனகாதி முனிவர்கள் தனியே இருக்கின்றனர்; இருவர் காணவில்லை. பின்புறக் கோட்டத்தில் திருமால், பொதுவை வேலை. திருச்சுற்றில் இராமர் இலக்குமணர் எதிர் எதிராக ஒருகால் மண்டியிட்டு அமர்ந்துள்ளனர். இறந்து போன தசரதமன்னனுக்காக இராமர், இலக்குமணர் இருவரும் இவ்வூரில் திலதர்ப்பணம் செய்தார்கள் என்பது வரலாறு. இவர்கள் கோலம் அந்த வரலாற்றைச் சுட்டுகிறது. இருவருக்கும் இடையே சதுர் லிங்கங்கள். இருவருடைய தோற்றமும் மிகவும் அற்புத மானது. இலக்குமணர் சிறப்பு : இராமர் மீசைவைத் திருக்கிறார். தேவியரோடு உள்ள முருகப் பெருமான் உருவம் அழகியது. மகாலக்ஷ்மி மிகவும் அழகான உருவம், வடபுறக் கோஷ்டங்களில் பிரம்மாவை அடுத்து துர்க்கை சாந்த முகம்; அஷ்டபுஜம்; பின்னால் சிங்கம் நிற்கிறது. சண்டேசுவரரும் முறுவல் பூத்த முகத்தினர். பொதுவாக இச்சிற்பங்கள் யாவும் சிறந்த இன்முகத்தோடு காணப்படு கின்றன. யாவும் பழையவை. ஒரே சிற்பியால் அமைக்கப்பட்டவை என்று தெரிகிறது. நால்வரில் சம்பந்தர் மட்டும் பழைய பெரிய உருவம். சூரிய சந்திரர் பெரிய உருவம், கீழ்ப்புறம் திருச்சுற்றில் பெருமாள் பெரிய உருவி னராய்ப் பூதேவி, சீதேவி சமேதராக அமர்ந்துள்ளார். நடராஜர் முதலான உற்சவ மூர்த்திகள் உள்ளனர்.

விழா: இவ்வூர் திலதர்ப்பணபுரி என்ற பெயருக் கேற்ப சுவாமி அமாவாசை தோறும் ஆற்றுக்குப் புறப் படுகிறார்.

பாடல்; சம்பந்தர் பாடல்; செவ்வழிப் பண் ஒரு பதிக முடையது. அருணகிரிநாதர் இவ்வூருக்கு மூன்று திருப் புகழ்ப் பாடல்கள் பாடி யிருக்கிறார். (231, 981, 1068) செந்நெற் கழனி பொங்கி திமிலக் கமலம் மண்டி செறி நற்கழை திரண்டு வளம்மேவி " என்று அவர் இங்கு பாடு தற்குப் பொருத்தமான சூழ்நிலை உள்ளது.

வரலாறு: இராமர், இலக்குமணர் தசரதனுக்காகத் தர்ப்பணம் செய்த வரலாறு முன்னமே சொல்லப்பட்டது. பிதிர்களுக்காக இவ்வூரில் தர்ப்பணம் செய்வது சிறப்பா னது என்ற வழக்கு இப்பக்கத்தில் இன்றும் நிலவுகிறது. கோயிலுக்கு வெளியே வாயிலுக்கு வடபுறத்தில் மேற்கு முகமாக ஒரு சிறு தனிக் கோயிலில் ஒரு மூர்த்தி இருக்கிறார். ஆதிவிநாயகர் என்று சொல்லுகிறார்கள். யானை முகம் இல்லை. இதன் பொருள் விளங்கவில்லை.

சிறப்பு: கோயிலுக்கு வெளியே ஊரின் அக்னி மூலை யில் தனியான பெருங் கோயிலாக சீதளா தேவி என்ற மாரியம்மன் கோயில் இருக்கிறது. அதற்குத் தனி மானி யங்களும் உள்ளன.

இராமர் இலக்குமணர் உருவங்கள், மகாலக்ஷிமி சிறப்பானவை.

சித்தாந்தம் – 1964 ௵ - டிசம்பர் ௴


No comments:

Post a Comment