Sunday, May 10, 2020



ஜெ. எம். நல்லசாமிப் பிள்ளை

[பத்திரிகாசிரியர்]

இம்மாதம் சைவப் பெரியார் ஜெ. எம். நல்லசாமிப் பிள்ளையவர்கள் பிறந்து நூறு ஆண்டுகள் முடிகின்ற காலம். இவர் மும்முறை சைவ சித்தாந்த சமாஜக் கூட்டத்தில் தலைமை வகித்திருக்கிறார். 1911 ல் சமாஜ ஆண்டு விழா சென்னையில் நடந்தபோது திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் தாம் முதன் முதல் சமாஜத்தில் இவர் தலைமையில் "சைவன் எவன்?'' என்பது பற்றிப் பேசியதாக எழுதியிருக்கிறார். பல ஆண்டுகள் உதவித் தலைவரா யிருந்திருக்கிறார். சைவ சமயத்துக் கென்றே தம் மூச்சுள்ள மட்டும் உழைத்தார். உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணம் செய்தார் என்றால் பொருந்தும். இவர் பிறந்த நூற்றாண்டு நிறைவு தினத்தை சமாஜம் கொண்டாடும் வகையில் இம்மாதச் சித்தாந்த இதழ் இவருடைய நினைவு மலராக வெளியிட வேண்டுமென்ற சமாஜத் தீர்மானத்திற் கிணங்க இவ்விதழ் இவ்விதமே வெளிவருகின்றது.

பிள்ளையவர்கள் திரிசிராப்பள்ளியில் மாணிக்கம் பிள்ளை - செல்லத்தம்மையார் புதல்வராக 24-11-1864ல் பிறந்தார். இளமையில் தமிழ்க் கல்வியும் தேவாரமும் முறையாகப் பயின்றார். ஆங்கிலக் கல்வியும் கற்றுத் தத்துவ சாஸ்திரத்தில் பட்டம் பெற்று, பின் சட்டக் கல்வி கற்று வழக்கறிஞராகி, 1893 முதல் இருபது ஆண்டுகள் ஜில்லா முனிசீபாக உத்தியோகம் பார்த்தார். தம் ஐம்பத்தாறாம் வயதில் 11-8-1920 ல் காலமானார்.

இவர் தமது 30 - வது வயதில் (1894) சிவஞான போதம் பயிலத் தொடங்கி அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1895 ல் வெளியிட்டார். இவருக்கு முன், ஹொய்சிங் டன் என்ற பாதிரியார், சிவஞான போதத்தை மொழி பெயர்த்து வெளியிட்டிருந்தார். கிரால் என்ற பாதிரியார் சிவஞான சித்தியாரை மொழி பெயரத்து வெளியிட்டிருந்தார் எனினும், இம்மொழி பெயர்ப்புக்கள் அதிகப் பிரசாரம் பெறவில்லை. பிள்ளையவர்களுடைய மொழி பெயர்ப்பு வெளியான பிறகே இந்நூலின் அருமை ஆங்கிலம் படித்தவர்களிடையேயும் ஆங்கிலேயர்களிடையேயும் தெரிய வரலாயிற்று. இதனால் அவருக்குப் புகழ் ஏற்பட்டது; சைவ சித்தாந்த நெறிக்கே இவர் ஒரு சிறந்த காவலர் என்ற உறுதியும் மக்களிடையே ஏற்படலாயிற்று.

இவருடைய திருவருட்பயன் மொழிபெயர்ப்பு 1897 ல் வெளியாயிற்று. அதற்குமுன் இச்சிறு சாஸ்திரத்தை டாக்டர் போப்பும், கொப்பன் என்ற பாதிரியாரும் தனித் தனியே ஆங்கிலப்படுத்தி வெளியிடுவதற்குச் சித்தம் செய்து வைத்திருந்தார்கள்; ஆயினும் அவர்கள் இவருடைய மொழி பெயர்ப்பின் சிறப்பையும் இவரிடம் தாங்கள் பூண்டிருந்த பெருமதிப்பையும் கருதி, அப்போது தங்கள் மொழி பெயர்ப்பை வெளியிடவில்லை. பின்னர் 1900 இல் போப் தம்முடைய திருவாசக மொழிபெயர்ப்பை அதன் குறிப்புகளோடு சேர்த்து வெளியிட்டார்.

1897 - இலேயே இவர் சிறப்பாகச் சைவ சித்தாந்தத்துக்குப் பாடுபடுவதற்கென்றே சித்தாந்த தீபிகை'' என்ற பெயரில் ஓர் ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினார். இதற்குத் தாமே ஆசிரியராயிருந்து, முழுமையும் தம் பொறுப்பிலும் செலவிலும் இதை நடத்தி வந்தார். இப் பத்திரிகை 1914 வரையில் நடைபெற்றுப் பிறகு நின்று போயிற்று. இதனுள் பிள்ளையவர்களின் மெய்கண்ட -சாத்திர மொழி பெயர்ப்பான உண்மை விளக்கம், சிவ ஞான சித்தியார், சிவப்பிரகாசம், இருபா இருபது, வினா வெண்பா, கொடிக்கவி, உண்மை நெறி விளக்கம் என்பன வெளிவந்தன. சித்தாந்த சாத்திரங்கள் யாவையும் தம் ஆயுளில் மொழி பெயர்த்து வெளியிட்டு விடுவது என்று இவர் உறுதி பூண்டிருந்தார். காலன் குறுக்கிட்டமையால் இக்கருத்து நிறைவேறவில்லை என்று தெரிகிறது. இன்னும் பத்து, இருபது ஆண்டுகள் இவர் உயிரோடிருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக எவ்வளவோ செய்திருப்பார். தாயுமானவர் கூறியபடி "மௌனமோலி அயர்வறச் சென்னியில் வைத்து ராசாங்கத்தில் அமர்ந்தது வைதீக சைவம்" என்ற நிலை உதித்திருக்கும்.

சைவ சமயம் உலகமெங்கும் பயில வேண்டும் என்பதே இவருடைய ஆசை. அதுபற்றியே ஆங்கிலத்தில் எழுதினார். இவருடைய உதவியால் நீலகண்ட சிவச்சாரியாருடைய பிரம்ம சூத்திர பாஷ்ய மொழிபெயர்ப்பு பத்திரிகையில் வெளிவந்து 1901 இல் பூர்த்தி ஆயிற்று. அழுத்த மான சைவப் பற்றுக்கொண்ட பெரும் பண்டிதர்களான டாக்டர் ரமண சாஸ்திரிகள், அரியநாயகிபுரம் அனந்த கிருஷ்ண சாஸ்திரிகள் போன்றோர் பல நூல்களை மொழி பெயர்த்தும் சைவ சித்தாந்த பரமான கட்டுரைகள் எழு தியும் தீபிகையை வளர்த்து வந்தார்கள். இதன் தொண்டு காரணமாக இவரிடமும் சைவ சித்தாந்தத்திடமும் பற்றுக் கொண்ட ஆங்கிலேய அறிஞர் மிகப் பலர். பிரேஸர், பார்னெட் போன்ற பேராசிரியர்களும் போப், கௌடி, ஷொமெரஸ், குட்வில், கொப்பன் போன்ற பாதிரிமாரும் சைவ சித்தாந்த சமயக் கொள்கைகளையும் இலக்கியங்களை யும் ஆராய்ந்து வந்தார்கள்.

இவர் சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்ததோடு, அதற்கு அரண் செய்யும் வகையில் சமயங்களையும் பயின்றிருந்தார். சித்தியார் பரபக்கம் சுபக்கம் இரண்டையும் மொழி பெயர்த்திருந்தார். ஆங்கிலப் பெயர்ப்புக்கு இவர் எழுதிய முன்னுரை ராயல் அளவில் 40 பக்கம் கொண்டது. இது இவருடைய கல்வியின் ஆழத்துக்கும் ஆராய்ச்சித் திறனுக் கும் சிறந்த எடுத்துக் காட்டு. அக்காலக் கொள்கைப்படிதமிழ்ச் சிவஞானபோதம் வடமொழி ரௌரவாகமத்தின் பகுதியின் மொழி பெயர்ப்பு என்று சிலர் நம்பினர். இதை ஆராய இவர் முற்படவில்லை. சைவ சித்தாந்தத்தை ஆக மாந்தம் என்று இவர் வழங்குவார்.
"வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன்'' என்பது உமாபதி சிவம் கூற்று. இதுவே ஆகமாந்தம் என்பர் சிலர். எனவே, ஆகமத்துள் சிவஞான போதம் கூறப்படுதல் சிறப்பு என்று கருதினார். அக்காலம் சமய நூலறிவும், தமிழ் நூலறிவும், கால வரையறையும் வீளக் கம் பெறாத காலம் என்பதை நாம் மறக்கக்கூடாது. அப் படிப்பட்ட காலத்தில் சிலர் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த பற்றும் தெளிவும் வைராக்கியமும், இன்றும் நமக்கு வியப் பூட்டுவன. நீலகண்ட சிவாச்சாரியர் சங்கரருக்கு முற் பட்டவர். இவர் எழுதிய பிரம்ம சூத்திர பாஷ்யம் சைவ சித்தாந்தத்துக்குரிய ஆதார நூல்களில் ஒன்று என்பது இவர் கருத்து. வடமொழி நூல்களை நன்கு பயின்று வேண்டும் போதெல்லாம், உபநிடதம் முதலியவற்றிலிருந்து மிகுதியான மேற்கோள் எடுத்துக் காட்டுவார்.

மேற்கோள் தமிழாயினும் வடமொழியாயினும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறுவார். இவர் வடமொழியைத் தூஷிப்பவர் அல்லர். சைவம் வட மொழியின் துணையும் கொண்டே இயங்க வேண்டும் என் பது இவர் கருத்து. வேதத்தின் அந்தமாகிய உபநிடத மும் நமக்கு உடன்பாடு; அதுவும் நம் ஆதார நூல்களுள் ஒன்று என்பது இவர் கொள்கை. சித்தாந்த தீபிகையில் இவர் எழுதிய கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து " சைவ சித்தாந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள்'' என்ற பெய ரில் தனி நூலாக ராயல் 360 பக்கங்களில் 1911 - இல் வெளி யிட்டார். இதற்கு ரமண சாஸ்திரிகள் சிறப்பான ஒரு சிறுமுகவுரை எழுதியிருக்கிறார். இவற்றுள், கடவுளின் சொரூபம், கடவுளும் உலகும், திருக்குறள் வீட்டின்பால், சரியாதி நான்கு மார்க்கங்கள், சுவேதாசுவதர உபநிட தம், தத்துவங்களும் அவற்றுக்கு அப்பாலும், சைவ சித் தாந்த பரமான அத்வைதம் என்பன சிறப்பான சில கட டுரைகள். இவற்றுள் சில அக்காலத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, சமாஜ வெளியீடாகிய சித்தாந்தம் பத்தி ரிகையிலும் வெளிவந்தன. (முதல் கட்டுரையாகிய கட வுளின் சொரூபம் என்பது பிற்காலத்தில் மறைமலையடி கள் என்ற பெயரோடு வழங்கிய சுவாமி வேதாசலத்தால் தமிழாக்கப்பட்டு 1912 ஜனவரி மாதம் முதல் சித்தாந்தம் இதழில் வெளியாயிற்று. அது இவ்விதழில் வேறோரிடத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.)

சைவ சித்தாந்த இலக்கிய வரலாற்றிலும், கருத்து வளர்ச்சியிலும், இவருடைய ஆராய்ச்சிகள் புதியவை. பிறர் யாவரும் கிளிப்பிள்ளை போல் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லி வர, இவர் ஒருவரே புதிதாகச் சிந்தித்துப் பிற சமயங்களோடு தொடர்புபடுத்தி, மூல ஆதாரங்களைத் தேடி, முந்தையோர் கருத்துக்கு முரணில்லாமல் அரண் செய்யும் வகையில் தம்சமயக் கோட்பாட்டை விளக்கியுரைத்தார். வேதம் பசு, அதன்பால் மெய்யாகமம், நால்வர் ஓதும் தமிழ் அதன் உள்ளுறு நெய், நெய்யின் உறுசுவை சிவஞான போதம் என்று பழம் பாடல் தெரிவிக்கின்றது. ஒருவகையில் இது சைவ சித்தாந்தக் கருத்து வளர்ச்சியைக் காட்டும். உமாபதியார் காலத்துக் குப்பின் 14 ஆம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகளும் 15 - ஆம் நூற்றாண்டில் அவர் மாணாக்கர் பலரும், 16 - இல் மறைஞான தேசிகர், சிவாக்கிரயோகி முதலிய பெரியோ ரும் தம் நூல்களாலும், உரைகளாலும் சைவ சித்தாந்தக் கருத்துக்களை வளர்த்தார்கள். பின்னும் 18 - ஆம் நூற் றாண்டில், சிவஞான சுவாமிகள் சிவாக்கிர பாஷ்யத்தை நன்கு பயின்று சிவஞான பாஷ்யம் எழுதி சித்தாந்தத்தை மேலும் வளர்த்தார் : புதிய உருவமும், புதிய உயிரும் கொடுத்தார். சமயக் கொள்கைகள் இவற்றால் உறுதியும் விளக்கமும் பெற்றன.

இக்காலத்தின் பின், பிற மக்களின் தொடர்பு தமிழ் நாட்டில் ஏற்பட்டது. பிற சமய, மொழி மோதல்களைத் தாங்கும் ஆற்றல் உடையதாகச் செய்தவர் நல்லசாமிப் பிள்ளையவர்கள். பாதிரிமார் சைவ சமயத்தைப் பயின்ற போது அதில்கண்ட புதுமை ஓரளவு அவர்களை ஈர்த்த போதிலும், இவருடைய நூல்களாலேயே அவர்களுக்கும்தெளிவு பிறந்தது. ஆண்டவன், உயிர்களாகிய நாம், ஏனைய பகுதிகளாகிய உலகம் - ஆகியவற்றின் தன்மை இன்னது, தொடர்பு இன்னது, முடிவு இன்னது என்று சாத்திர விரோதமில்லாமல், பிறரோடு அவசியமின்றி மோதுதல் இல்லாமல், நம் சமயக் கொள்கையை வட மொழி தென்மொழி ஆதாரங்களோடு வரையறை செய்து நிறுவியவர் இவரே. இந்த அளவு தெளிவு செய்தவர்கள் பிறர் யாருமிலர். தூஷணமே இன்றித் தம்மதம் நிறுவிய பெருமை இவருடையது. ஆங்கிலம் கற்ற வழக்கறிஞரா யும் ஒரு பாற்கோடாத நீதிபதியாயும் இவர் விளங்கிய மையால், இவர் சொல்லுக்குத் திட்டமான உருவம் உண் டாகியது. கேட்போர் கொள்ளத் தக்கனவற்றை மறுத்த லுக் கிடமிலாமல் திரட்டிக் கூறும் ஆற்றல் பிறந்தது.

இவருடைய கருத்து, சைவ சமயம் உலகம் முழுமையும் கொள்ளக் கூடிய தனிச் சமயம் என்பது. ஆகவே இவர் தம் கருத்துக்களை அகில உலகமும் அறியக் கூடிய ஆங்கில மொழியில் எழுதினார். அதிலேயே பத்திரிகையும் நடத்தினார். ''மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. திறமான புலமை யெனில் பிறநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்ற பாரதியார் பாட்டை இவர் கேட்டதில்லை. ஆனால் பாரதியாருக்கு முன்னமே இவர் இக்கருத்தைச் செயலில் செய்து காட்டினார்.

இவருடைய கட்டுரைகளைப் படிக்குந் தோறும் சைவ சமயம் எப்படி உலக சமயமாகும் என்று காட்டுவதில் இவருக்குள்ள பேரார்வம் யாருடைய நெஞ்சையும் உருக் காமல் இராது. யாரையும் இவர் கண்டனம் செய்ததில்லை. ஆனால் "மெய்யுடை யொருவன் சொலமாட்டாமையால் பொய் போலும்மே பொய் போலும்மே" என்ற மொழிப் படி, சைவர்கள் தங்கள் சமயச் சிறப்பைத் தாங்கள் உணராமலும் பிறருக்கு உணர்த்த அறியாமலும் இருக்கிறார்களே என்ற வருத்தம் இவர் எழுத்தெங்கும் தொனிக்கக் காண்கிறோம். தாம் ஆங்கிலத்தில் எழுதியதன் காரணத்தையும் இவர் கூறுகிறார். தென்னிந்திய மக்கள் அனை வரும் தம்மை ஹிந்துக்கள் என்று கூறிக்கொண்டுசங்கரரையும் வணங்கிக் கொண்டிருந்த காரணத்தால், மேலை நாட்டு ஆராய்ச்சியாளர், இவர்களையும் சங்கர அத்வைதம் கடைப்பிடிக்கும் வேதாந்திகள் என்று கருதி, தனியே இவர்களுக்கு ஒரு மதம் உண்டென்று கொண்டதில்லை. உண்மைநிலை இன்னது என்று அவர்களுக்கும் சைவர்களுக்கும் உணர்த்தவே இவர் அரும்பாடு பட்டார். இவர் ஒருவரால் தான் சைவ சித்தாந்தத்துக்கு மீண்டும் உலகச் சமய அரங்கில் அங்கீகாரம் ஏற்பட்டதென்றால் பொருந்தும்.
பிள்ளையவர்கள் சைவப் பொலிவுடையவர். எந்நேரமும் திருநீறும் சந்தனப் பொட்டும் அணிந்திருப்பார். சைவ ஒழுக்கமுடையவர்.

இக்காலத்தில் அனேகர் தமிழாராய்ச்சியும் சமய ஆராய்ச்சியுமே தம்வாழ்க்கைத் தொழிலாக - உத்தியோகமாகக் கொண்டிருக்கிறார். இருந்தும் அவர்கள் சாதித்தது மிகவும் குறைவு. அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள் என்பது உண்மை. அவர்களால் தமிழோ, சைவமோ வளர்ந்ததோ என்றால் இல்லை என்று தான் வருத்தத்தோடு குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஆனால் இவரோ வாழ்க்கையில் வேறு தொழிலினர் : முதலில் வழக்கறிஞர்; பின்னர் நீதிபதித் தொழில். இத்தொழிலுக் கிடையே கிடைத்த ஓய்வு நேரத்தில்தான் இவ்வளவு சமயப் பணி செய்தார். இதை எண்ணிப் பார்க்கும்போது இவரது சாதனை மிகவும் ஆச்சரியகரமான தென்றே நாம் எண்ணவேண்டும். வருங் காலத்தில், இன்னும் சில நூறு ஆண்டுகளேனும், இவ ருடைய ஆராய்ச்சிப்பணி சைவமக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து மேலும் மேலும் ஆக்கப் பணியில் ஊக்கந் தந்து கொண்டிருக்கும்.

நல்லசாமிப் பிள்ளையவர்கள் நாமம் வாழ்வதாக!

சித்தாந்தம் – 1964 ௵ - நவம்பர் ௴


No comments:

Post a Comment