Sunday, May 10, 2020



மெய்கண்ட சாத்திரக் கட்டளை

மு. அருணாசலம்

[கட்டளைகளைப் பற்றிய விரிவான குறிப்பை சித்தாந்தம் மலர் 13, இதழ் 8-ல் வெளியான தசக்கிரமக்கட்டளையின் முன்னுரையில் (பக்கம் 353 - 5) காணலாம். கீழே வெளியிடப்படும் கட்டளையானது இதுகாறும் அச்சில் வராதது; பெரும் பான்மையும் திருவாலவாய்க் கட்டளையை ஒத்திருக்கிறது அரசாங்கத்துத் தொன்வால்லயத்திலுள்ள ஒரேட்டிலிருந்து பிரதி செய்யப்பட்டு இங்கே வெளியிடப் பெறுகிறது. ஏட்டில் இதன் பெயர் காணப்படவில்லை. இதனுள் மெய்கண்ட சாத்திரத்தின் மார்க்கம் கூறப்படுவதாக இதன் இறுதி வாக்கியம் உரைப்பதால், மெய்கண்ட சாத்திரக் கட்டளை என்ற பெயர் இதற்கு அமைக்கப்பட்டது.]

முப்பொருள்

சிவாகமஞ் சொல்லும் பொருளாவது, பதி பசு பாசம் மூன்று. இதிற் பதியாவது சிவம்; பசுவாவது ஆன்மா; பாச மாவதுஆணவம் கன்மம் மாயை. ஆக இவை ஐந்து பொருளும் அனாதியாய், நித்தியமாய், தோற்ற நாசமில்லாத தாய், காலம் போல வியாபகமாய்,அருவும் உருவும் அருவுருவு மல்லவாய், வெவ்வேறு சத்தியையுடையதாய், ஒரு வடிவும் ஒரு நிறமும் ஒரு சுடருமில்லாததாய், அப்பிரமேயமா யறிவதாயிருக்கும்.

பதியிலக்கணம்

இதிற் சிவமாவது. ஒன்றாய், சருவ வியாபகமாய், சித்தாய், நின்மலமாய், நிரஞ்சனமாய், மலரகிதமாய், மலவயிரியாய், பொய்ப்பகையாய்,உயிர்க்குயிராய், அறிவுக் கறிவாய், ஒரு குணமுமில்லாததாய், எண்ணிறந்த குண முடையதாய், ஒரு பெயரு மில்லாததாய், எண்ணிறந்த காரணப் பெயருடையதாய், அறிவிற்றோன்றும் பொருளாய், ஆனந்தமயமாய, அளவுபடாததாய, அளவுபடுவதாய் சடசித்து இரண்டினுங் கலப்பாய், சர்வகிருத்தியத்தையும் சர்வானுக்கிரகத்தையு முடையதாய், தனக்குமேலொன்ன மில்லாததாய், எப்பொருட்குந் தாரகமாய், எப்பொருளையும் காரியப்படுத்துவதாய், இரக்கமயமாய், தன்னையடைந்தவர்களுக்குச் சுகத்தைக் கொடுக்கிறதுமாய், தற்பிரயோசன மில்லாததாய், சுத்தமான ஆன்மாவினிடத்திலே விளங்கிக் தோன்றுவதாய், வேதாகமச் சொரூபியாயிருக்கும்.

இந்தப் பரமசிவத்துக்கு. ஆன்மாக்களுக்கு முத்தியைச் செய்விக்கும் பராசக்தியும், பெத்தத்தைச் செய்விக்கும் அதிசக்தியும், கிருபையாய் இச்சையைச் செலுத்துவிக்கும் இச்சாசக்தியும், எல்லாருஞ் செய்யப்பட்ட கன்மத்தை யறியும் ஞானசக்தியும், உலகம் யாவையுஞ் செய்விக்குங் கிரியாசக்தியும் ஆகப் பஞ்சத்திகளாகிய அருளும் பின்னமில்லாமல், சூரியனுங் கிரணமும்போல ஒன்றாயிருக்கும்.

இப்படியிருக்கிற பரமசிவமும் பராசக்தியும், கிருபையினாலே ஆன்மாக்களுடைய மலபெந்தங்களை நீக்குவிக்கும் பொருட்டு, அருவமாகிய சிவம் சத்தி நாதம் விந்து ஆக 4; அருவுருவாகிய சதாசிவம் மனோன்மணி ஆக 2: உருவமாகிய மயேசுரம் மயேசுவரி, உருத்திரன் பார்வதி, விட்டுணு இலக்குமி, பிரும்மா சரசுவதி ஆக 8 ; ஆக 14; இதில் சிவபதம் 7, சத்திபதம் 7; இதில் ஒவ்வொரு மூர்த்தத்தில் பலபல பேதமாகவுந் திருமேனி கொண்டு, * உபாதானத் திரயங்களைக் கொண்டு எல்லா அண்டங்களையும் எல்லா உலகங்களையும் சிருட்டித்து, எல்லா ஆன்மாக்களுக்கும் சிருட்டி, திதி சங்காரம் திரோபவம் அனுக்கிரகங்களைச் செய்து. பக்குவப்பட்ட ஆன்மாக்களை யெல்லாந் தமது சீபாதத்திலே சேர்த்துப் பேரின்பத்தைக் கொடுப்பர்.

* பாதானத்திரயம் - விந்து மோகினி மான் (சுத்தமா அர்த்தமாயை, சத்தார்த்தமாயை) ஆகிய முதற்காரங்கள் மூன்று

அதெப்படிச் செய்வரென்னில், தன்மை முன்னிலை படர்க்கையாக நின்று செய்வர். அவற்றில் தன்மையாவது, பரிபூரணமாய் அறிவுக்கறிவாயிருத்தல்; முன்னிலையாவது, இச்சா ஞானக் கிரியா சத்திகளா யிருத்தல்; படர்க்கையா வது, தனது இச்சா ஞானக் கிரியா சத்திகள் பஞ்ச கர்த்தாக்களைச் செலுத்த, பஞ்ச கர்த்தாக்கள் பஞ்ச அக்கரங்களைச் செலுத்த, இப்படிக் காரியப்படுத்துதல். இப்படிப் பிரபஞ்சத்தைக் காரியப்படுத்துகையிலேயும், பஞ்ச கிருத்திய நிமித்தம் அனந்த வடிவாகத் திருமேனியெடுத்து இரட்சித்தும், உலகத்திலே மூர்த்தி தலம் தீர்த்த வடிவாயிருந்து சிவபுண்ணியத்தைக் கொடுத்தும், அத்துவாவும் அட்ட மூர்த்தமுமாயிருந்தியற்றியும் தானதில் தாக்கற்று நிற்பன். இப்படிப் பதியிலக்கண மறிக.

பசு இலக்கணம்

இனி ஆன்மாவாவது. அனேகமாய், வசிப்பைப் பற்றின வியாபகமாய், அடுத்ததின் தன்மையா யிருப்பதாய், தனித்து நிற்கிற தல்லவாய், சித்தாய், இச்சிப்பித்தால் இச்சிக்கும் இச்சையுடையதாய், அறிவித்தால் அறியும் அறிவையுடையதாய், செய்வித்தாற் செய்யுஞ் செய்தியை யுடையதாய், ஒன்றிலே பெந்தப்படுவதாய், பெத்த முக்தியடைவதாய், எக்காலமுஞ் சீவனத்தையுடைய தாய், சீவனுக்கு இருக்குமிடமாய், ஆன்மா, பசு, சீவன், புரு. டன், புமான், தேகி, கிஞ்சிஞ்ஞன், சுதந்தர ஹீனன், பரதர் திரன், அகர்த்தா, அணு, அறியாதவன், உள்ளம், சைதன் வியன், புத்தி, பிரகிருதி, பிராணன், சதசத்து, நாதுரு, பட்கலன் என்கிற காரணப் பெயரையுடையதாயிருக்கும்.

இந்த ஆன்மாக்கள் விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலரென்று மூன்று விதமாயிருக்கும். இதில் விஞ்ஞானகலராவார், அட்டவித்தியேசுரர் அணுசதாசிவர் சத்தகோடி மகாமந்திரர். இவர்கள் ஆணவ மலமொன்றையு முடைய வர்கள். இவர்களுக்குச் சுத்தமாயா தத்துவம் தனுகரண புவன போகமாயிருக்கும். இவர்களில் பக்குவர்க்கு அனுக் கிரகிக்கும் முறைமை எப்படியென்னில், சிவன் அறிவிலே இன்று திருவருளுதிப்பித்து, மலமொன்றையும் போக்கி மோட்சத்தைக் கொடுப்பர்.

இனி பிரயாகலராவார், நூற்றுப்பதினெட்டு ருத்திரரும் வன கர்த்தாக்களுமா யிருப்பார்கள். இவர்கள் ஆணவம் என்மமாகிய இரண்டு பலத்தையு முடையவர்கள். இவர்களுக்கு அத்தமாயா தத்துவம் தனு கரண புவன போகமா யிருக்கும். இவர்களிற் பக்குவர்க்கு அனுக்கிரகிக்கும் முறைமை எப்படியென்னில், சிவன் மானும் மழுவும் சதுர்ப் புயமும், காளகண்டமும், திரிநேத்திரமுமுடைய திருமேனி கொண்டெழுந்தருளி, இரண்டு மலத்தையும் போக்கி மோட்சத்தைக் கொடுப்பர்.

இனி சகலராவார், விட்டுணு பிரும்மா முதல் கிருமி யீறாக அனேகம் உளர். இவர்கள் ஆணவம் கன்மம் மாயை ஆக மூன்று மலத்தையு முடையவர்கள். இவர்களுக்குப் பிரகிருதிமாயா தத்துவம் தனு கரண புவன போகமா யிருக்கும்.

இதில் தனுவாவது, அண்டசம் சுவேதசம் உற்பீசம் சராயுசம் ஆக நாலுவகைப் பிறப்பினுந் தேவர்கள் பதினொரு நூறாயிரம், மானிடர் ஒன்பது நூறாயிரம், நாற்காலிகள் பத்து நூறாயிரம், பறவை பத்து நூறாயிரம், நீருறைவன பத்து நூறாயிரம், ஊர்வன பதினைந்து நூறாயிரம், தாவரம் பத்தொன்பது நூறாயிரம்; ஆக எழுவகைத்தோற்றத்தினும் எண்பத்துநாலு நூறாயிரம் யோனி. இதில் ஒன்றில் அனேகமாம். இது சத்தப் பரிச ரூப ரசகெந்தம் மனம் புத்தி யாங்காரமாகிய சூக்கும தேகமாகவும், † தோலிரத்தரிறைச்சி மேதையென்பு மச்சை சுவேதநீராகிய ஸ்தூல தேகமாகவும் பூதசாரம் பூதசாரசர்ரம் பூதபரிணாமசரமாகவுமிருக்கும். ஆயுசு, கணிக முதலனேகமுள. [† சித்தியார், பரபக்கம் 56.]

கரணமாவது அந்தந்தத் தத்துவமாயிருக்கும். அவையே தென்னில், தாவரம் ஓரறிவு; நந்து அட்டை ஈரறிவு : எறும்பு முதலிய மூவறிவு; பாம்பு முதலிய நாலறிவு; விலங்கு பட்சி ஐயறிவு; மானிடர் தேவர் ஆற்றிவு. இப்படி விரித்தறிக.

புவனமாவது, இருநூற்றிருபத்து நாலு புவனமாகிய ஊரும் நாடும் தேசமும் உலகமுமான சொர்க்கம் நரகம் பூமி யெனவாகிய அண்டங்கள் எண்ணிறந்தன.

போகமாவது, அவரவர் கன்மத்துக் கேதுவாகவும் அந்தந் தத்தனுவுக் கிணங்கினவாகவும் உண்பன சுவைப்பன குடிப் பன கடிப்பன மெல்வன விழுங்குவன உடுப்பன படுப்பன பணுவன பூசுவன கொடுப்பன வாங்குவன காண்பன கேட்பன நடப்பன கிடப்பன, ஸ்தி பிள்ளை சுற்றம் பொன் பூமி வியா), இது முதலியது, இன்ப துன்பத்துக் கிடமாய், சொர்க்கம் நரகம் பூமி மூன்றினும் சத்தப் பரிச ரூபரச கெந்தமா யிருக்கும்.

இனி, இவர்கள் சூக்கும தேகத்தைப் பொருந்தி, கன்மத்துக் கேதுவாகிய ஸ்தூலதேகத்தையெடுத்து, எடுத்த தேகந்தானாய் நின்று, இன்ப துன்பத்தைப் பொசித்து, நல்வினை தீவினைகளை யார்ச்சித்து, இன்பத்துக்கேதுவான சுவர்க்கத்தனும் துன்பத்திற்கேதுவான நரகத்தினும் இன்ப துன்பத்தற கேதுவான பூமியிலும் போக்கு வரவுடைத்தாயிருப்பார்கள். இவர்கள் மோட்ச மடைவதெப்படி யென்னில், தான் இச்சியாதே வரும் அபுத்தி பூர்வமும், தான் இச்சித்துச் செய்யும் புத்தி பூர்வமும், போகங்களை விரும்பிச் செய்யும் உபாயச் சரியை கிரியா யோக ஞானமும், மோட்சத்தை விரும்பிச் செய்யும் உண்மைச் சரியை கிரியாயோக ஞானமும், ஆகப் பத்து விதமாகிய சிவபுண்ணியத்தால் போட்சத்தை யடைவர். அதெப்படி யென்னில், அபுத்தி பூர்வத் அக்குப் பலன் நல்ல தனுவைக் கொடுக்கும்; புத்தி பூவத் திற்குப் பலன் நல்லறிவு சிறிது கொடுக்கும்; உபாயச் சரியை கிரியா யோக ஞானத்துக்குப் பலன் ஆர்ச்சித்தபடிப் பொசிப்பித்து உண்மையறிவைக் கொடுக்கும்; உண்மைச் சரியை கிரியா யோகஞானத்துக்குப் பலன், சாலோக சாமீப சாரூபமென்னும் பதமுத்திகளையடைவித்து, மலபரிபாகஞ் சத்தினிபாதம் இருவினையொப்பு உண்டாக்கி, நல்ல தலத்திலே நல்ல குலத்திலே பிறப்பித்து, சாத்துவிக குணத்தைக் கொடுத்து, உண்மைஞானமென்னும் மோட்சததை விரும்பப் பண்ணுவிக்கும்.

இப்படி விரும்பின பேர்களுக்கு உண்மை ஞானமென்னும் மோட்சத்தைக் கொடுக்கவும், மற்றும் மூவர்க்கும் அவரவர் பாதத்தை அனுக்கிரகம் பண்ணவும், சதாசிவமாகிய பரமசிவம் தம்முடைய திருமேனியை யொழித்து, மானிடச் சட்டை சாத்தி, இவர்கள் ‡ ஊரும் பேரும் உருவுங் கெடுக்க வேண்டி, ஊரும் பேரும் உருவுங் கொண்டு, மானைக் காட்டி மானைப் பிடித்தாற்போல, ஆசாரிய மூர்த்தமாய்த் திருமேனி கொண்டெழுந்தருளி வந்து, மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என்கிற சத்திநிபாதத் தன்மையை யறிந்து ஞானத்தாலாவது கிரியையாலாவது சமய தீட்சை பண்ணி, மற்ற ஆறு தீட்சையினாலும் ஆறத்துவாவையுஞ் சோதித்து, மல மாயை கன்மங்களாகிய கேவல சகல மிரண்டவத்தையும் போக்கி, சுத்தாவத்தை யென்னும் உண்மை ஞானத்தை அனுக்கிரகித்து, மோட்சத்தைக் கொடுப்பர். இப்படி ஆன்மாவிலக்கண மறிக.

ஊரும் பேரும் உருவுங் கொண்டென் – ஊரும் பேரும் உருவுங் கெடுத்த... சைவ சிகாமணி'': இருபா இருபது, 4.14-17.

பாச இலக்கணம் - ஆணவம்

இனி ஆணவமாவது, ஒன்றாய், வியாபகமாய், சடமாய், பரிபாகத்திலே நீங்குஞ் சத்தியையுடையதாய், மூலமலமாய், இருளும் பிரகாசமென்ன இருண்டதாய், தன்னையும் ஆன்மாவையும் சிவத்தையுந் தெரிய வொட்டாமல் மறைப்பதாய், ஆன்மாக்களுக்கு அனாதியிலே பெந்தமாய், இச்சா ஞானக் கிரியைகளை மறைப்பதாய், மற்ற இரண்டு மலங்களையுந் தன்வசத் தாக்குவதாய், மயக்குந் தன்மையை யுடையதாய், பொய்க்குக் காரணமாய், அருள் பிரகாசித்த விடத்து அப்பிரகாசப்படுவதாய், மலம் பசுத்துவம் அஞ்ஞானம் மூர்ச்சை அவித்தை மம்மர் விருதி(?) மறைப்பு இருள் மாசு குற்றம் என்னும் பெயரையுடையதாயிருக்கும்.

கன்மம்

இனி கன்மமாவது, ஒன்றாய், வியாபகமாய், சடமாய். அந்தந்த அணுக்கள் தோறும் வெவ்வேறு கன்மமாய், மன வாக்குக் காயங்களினாலும் அறிந்தும் அறியாமலும் வருகிறதாய், சுகதுக்கத்தைப் பண்ணுவதாய், இதாவகிதங்களினாலே ஆவதாய், நல்வினை தீவினையாய், புண்ணிய பாவமாய், இன்பதுன்பமாய், அனுபவித்தாலொழிந்து தீராததாய், ஒன்றினா லொன்றழிக்கப்படாததாய், விதிப்படி பரிகாரஞ் செய்தால் நீங்குகிறதுமாய், விலைக்குக் கொணடாற் பலிக்கிறதுமாய், காமிக்கப்படுவதாய், பிரவாகானாம் யாக வருவதாய், பசுபுண்ணியம் பசுத்துரோ சிவபுண்ணியம் சிவத்துரோகமாய், மலத்தோடுங் சிவத்தோடுங் காரியப்படுவதாய், மலத்தை நீக்கும் தன்மையை யுடையதாயிருக்கும். இந்தக் கன்மமாவது, பிராரத்தம் ஆகாமியம் என்று மூன்று விதமாயிருக்கும்

இதிற் சஞ்சிதமாவது, அனாதி தொடுத்துச் சென்னந் தோறும் ஆர்ச்சித்த வினையைப் பொசித்து மிஞ்சியது ஆறத் துவாவிலுங் கட்டுப்பட்டிருக்கிற புண்ணிய பாவமாய் ஆசாரியர் திருநோக்கத் திட்சையினாலே தீருவதாய்  இருக்கும்

பிராரத்மாவது சஞ்சிதத்திற் சிறிது பொசிக்க, பாகப் பட்ட. வினைக்கிடாக எடுத்த தேகத்துக்கடுத்த $ பேறிழ வின்பம் பிணி மூப்பச் சாக்காடுடென்று வந்து பொருந்தும் இன்ப துன்பமாய், சிவாற்புதங் செய்ய நீங்குகிறதுமாயிருக்கும்.

$ பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும் - ஆறும்முன் கருவுட் பட்டது'': சித்தியார் சுபக்கம், 99.

ஆகாமியமாவது, அனாதி தொடுத்து மோட்ச பரியந்தம் ஆன்மாக்களைப் பிராரத்தம் பொசிக்கையிலே வந்து ஏறுகிற இதாவகிதங்களான நல்வினையாய் ஆசாரியர் அனுக்கிர கித்தவிடத்து நீங்குகிறதுமா யிருக்கும்.

மாயை

இனி மாயையாவது, ஒன்றாய், வியாபகமாய், உலகத்துக் குக் காரணமாய், எல்லா ஆன்மாக்களுக்குந் தாரகமாய், வெவ்வேறு நிறங்குறி குணஞ் செயலுடையதாய், சடமம் எல்லா ஆன்மாக்களுக்குங் கன்மத்தை ஆர்ச்சிக்கவும் அனுபவிக்கவும் இடமாய், எண்ணிறந்த தத்துவங்களைத் தோற்று வித்து ஒடுக்குவதாய், அருவும் உருவும் அருவுருவு மாகுந் தன்மையையுடையதாய், ஆன்பாவுக்குமிடமாய், சுத்தம் அகத்தம் சுத்தாசுத்தமுமாகிறதாய், மயக்குந்தன்மையுடையதாய், உலகப் பொருளைத் தெரிவிக்கும் ஒளியாய், பொய்யும் மெய்யுமாகுந் தன்மையையுடையதாய், அழியப்படுவதாய், கர்த்தாவினாலே தொழிற்படுவதாய், சிவபேதஞ் சத்தி பேதத்துக் கிடமாய், மலத்தை நீக்குத்தன்மையுடையதாய் சிவசத்திக்கொரு சத்தியாய், பசுகரணஞ் சிவகரணமாகுந் தன்மையையுடையதா யிருக்கும். இந்த மாயை, சுத்த மாயை அசுத்தமாயை என இரண்டாய், பின்பு அசுத்த மாயையினில் பிரகிருதி மாயையாய், ஆக மூன்று மாயையா யிருக்கும்.

இதிற் சுத்தமாயையாவது, விஞ்ஞானகலருக்குத் தனு கரண புவன போகமாய், பிரளயாகலருக்குச் செலுத்தும் தத்துவமாயிருக்கும்.

அசுத்தமாயையாவது, பிரளயாகலருக்குத் தனு கரண புவன போகமாய், சகலருக்கு அறிவிக்குந் தத்துவமாயிருக்கும்.

பிரகிருதிமாயையாவது, சகலருக்குத் தனு கரண புவன போகமாயிருக்கும்.

த்துவங்களின் தோற்றம், ஒடுக்கம்

இதிற் சகலருக்குத் தனுகரண புவனபோகமாகிய தத்துவமும் அறிவிக்குந் தத்துவமும் பிரேரக தத்துவமும் தோற்றமொடுக்கம் எப்படியென்னில், பரமசிவனுடைய பராசத்தி யருளினாலே சுத்தமாயையிலே நாதமும், நாதத் திலே விந்துவும், விந்துவிலே சாதாக்கியமும், சாதாக்கியத் திலே மயேசுரமும், மயேசுரத்திலே சுத்தவித்தையும் ஆக அஞ்சுந் தோன்றும். முன்சொன்ன விந்துவிலே, நாலுவாக்கும் ஐம்பத்தோரக்கரமும் எண்பத்தொரு பதமும் சத்த கோடி மகாமந்திரமும் வேதாகம புராண சாத்திர முதலிய நூல்களும் சரியை கிரியா யோகத்தினின்றோர்க்குச் சாலோக சாமீப சாரூபமென்னும் பதமுத்திகளும் பஞ்சகலைகளும் தோன்றும்.

அனந்ததேவ நாயனாரருளினாலே அசுத்தமாயையிலே காலமும் நியதியும் கலையும் தோன்றும். கலையிலே வித்தை தோன்றும். வித்தையிலே அராகந் தோன்றும். ஆக இவ்வைந்துங் கூடித் தொழிற்படுமிடத்துப் புருடன் தோன்றும்.

உருத்திரதேவரருளினாலே முன்சொன்ன கலையிலே மூலப்பிரகிருதி தோன்றும். மூலப்பிரகிருதியிலே முக்குணங்களுந் தோன்றும். முக்குணங்களுந் தோன்றாமல் நின்ற இடம் அவ்வியத்தம். அந்த அவ்வியத்தத்திலே சித்தமும் புத்தியும் புத்தியில் ஆங்காரமுந் தோன்றும். அந்த ஆங்காரந்தான் தைசதவாங்காரம் வைகரியாங்காரம் பூதாதியாங்காரமென்று மூன்று விதமாயிருக்கும். தைசதவாங்காரத்லே, சாத்துவிதகுணத்தினையுடைய மனமும் ஞானேந்திரியம் ஐந்தும் தோன்றும். வைகரியாங்காரத்திலே, ராசத குணத்தினையுடைய தன்மாத்திரைகளைந்துந் தோன்றும்; சத்தத்திலே ஆகாசமும், பரிசத்திலே வாயுவும், ரூபத்திலே தேயுவும், ரசத்திலே அப்புவும், கெந்தத்திலே பிருதிவியுமாகப் பூதங்களைந்துந் தோன்றும். பூதங்களாகிய பிருதிவியிலே மயிராதி ஐந்தும் இடைபிங்ககலையாதியாக நாடிகள் பத்தும் ஆகப் பதினைந்தும் தோன்றும்; அப்புவிலே ஓடு நீராதி ஐந்தும், தேயுவிலே ஆகாரமாதி ஐந்தும் தோன்றும். வாயுவிலே ஓடல் முதலாகிய ஐந்தும் பிராணாதியாகிய வாயு பத்தும் ஆகப் பதினைந்தும் தோன்றும் : - ஆகாசத்திலே காமாதி ஐந்தும் தோன்றும். கன்மேந்திரியத்திலே வசனாதிகளைந்துந் தோன்றும்.

ஆக இங்ஙனம் சுத்தமாயையிலே ஒன்பதும், அசுத்த மாயையிலே ஏழும், பிரகிருதி மாயையிலே எண்பதுமாகத் தொண்ணூற்றாறுந் தோற்ற மறிக.

ஒடுக்கம், உட்கருவி முப்பத்தாறும் தோன்றின முறைமையிலே ஒடுங்கும். புறக்கருவிகள் அறுபதும் தோன்றப் பட்டதெல்லாம் அழிந்துபோம்; மற்றது அதன் காரணத்திலே ஒடுங்கும்.

உட்கருவி 36

ஆன்ம தத்துவம்

இந்தத் தத்துவந் தொண்ணூற்றாறுக்கும் வகையே தென்னில், பூதங்களாவன: பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் ஆக ரு; ஞானேந்திரியங்களான : சோத்திரம் தொக்கு சட்சு சிங்கவை ஆக்கிராணம் ஆக ரு; கன்மேந்திரி யங்களாவன : வாக்குப் பாதம் பாணி பாயுரு உபத்தம் ஆக ரு; தன்மாத்திரைகளாவன : சத்தப் பரிச ரூப ரச கெந்தம் ஆக ரு; அந்தக்கரணங்களாவன : மனம் புத்தி ஆங்காரம் சித்தம் ஆக ச; ஆகத் தத்துவம் உச. இவற்றிற்கு ஆன்ம தத்துவமென்றும் அசுத்த தத்துவமென்றும் போக்கியகாண்ட மென்றும் பெயர்.

வித்தியா தத்துவம்

வித்தியாதத்துவங்களாவன : காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயை ஆக எ. இவற்றிற்கு வித்தியாதத்துவமென்றும் சுத்தாசுத்த தத்துவமென்றும் போககாண்ட மென்றும் பெயர்.

சிவதத்துவம்

சிவதத்துவங்களாவன: சுத்தவித்தை ஈசுரம் சாதாக்கியம் சத்தி சிவம் ஆக ரு; இவற்றிற்குச் சிவதத்துவமென்றும் சுத்த தத்துவமென்றும் பிரேரக காண்டமென்றும் பெயர். ஆக உட்கருவி 36.


புறக்கருவி 60

புறக்கருவிகளாவன: பிருதிவியின் கூறு மயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை ஆக 5. அப்புவின் கூறாவன: ஓடுநீர், உதிரம், சுக்கிலம், மூளை, மச்சை பள, மச்சை ஆக 5. தேயுவின் கூறவன: ஆகாரம், நித்திரை, பயம், மைதுனம், சாது ஆக 5. வாயுவின் கூறாவன: ஓடல், இருத்தல், நடத்திய கிடத்தல், நிற்றல் ஆக 5. ஆகாசத்தின் கூறாவன; காமம், குரோதம், லோபம், மோகம், மதம் ஆக 5.

வாயுக்களாவன: பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் ஆக 10. வசனாதிகளாவன: வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம் ஆக 5. நாடிகளாவன: இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிங்ஙுவை, ¶ அலம்புருடன், சங்கினி, வயிரவன், குதன் ஆக 10. வாக்குக்களாவன: சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி ஆக 4. § குணங்களாவன: சாத்துவிகம், ராசதம், தாமதம் ஆக 3. ஆங்காரமாவன: தைசதவாங்காரம், வைகரியாங்காரம், பூதாதி யாங்காரம் ஆக 3. ஆகப் புறக்கருவி 60.
ஆகத் தத்துவம் தொண்ணூற்றாறு.

அலம்புருடன் வயிரவன் குதன் என்பவற்றுக்குப் பதிலாக அலம்புடை, புருடன், குரு எனச் சொல்லுதலுமுண்டு.
§ குணம் மூன்றினுக்கும் பதிலாக, அர்த்த ஏடணை, புத்திர ஏடணை, உலக ஏடணை என மூன்று ஏடணைக் கொள்ளுதலும் உண்டு.

உட்கருவியின் தொழில்: ஆன்மதத்துவங்களின் தொழில்

இதன் தொழிலாவன: பிருதிவிக்கு: வடிவு - நாற் கோணம்; நிறம் - பொன்மை; குணம் - உரத்துத் தரித்தல்;  £ ஆயுதம் - வச்சிரம்; அக்கரம் - லகாரம்; கலை நிவிர்த்தி கலை; தொழில் - சத்தாதி 5; தேவதை பிரமன்; ஆக 8. ஆயுதம் - குறி.]

அப்புவுக்கு: வடிவு - இரு கோணம்; நிறம் - வெள்ளை; குணம் - குளிர்ந்து பதஞ்செய்கை; ஆயுதம் - கோகனகம்; அக்கரம் - வகாரம்; கலை - பிரதிட்டா கலை; தொழில் - சத்தாதி 4; தேவதை - விட்டுணு; ஆக 8.

தேயுவுக்கு: வடிவு - முக்கோணம்; நிறம் - சிவப்பு; குணம் - சுட்டொன்றுவித்தல்; ஆயுதம் - சுவத்திகம்; அக்கரம் - மகாரம்; கலை - வித்தியா கலை; தொழில் - சத்தாதி 3; தேவதை - உருத்திரன்; ஆக 8.

வாயுவுக்கு: வடிவு - அறுகோணம்; நிறம் - கறுப்பு; தணம் - சலித்துத் திரட்டல்; ஆயுதம் - அறுபுள்ளி; அக்கரம் - யகாரம்; கலை - சாந்திகலை; தொழில் - சத்தாதி 2; தேவதை - மயேசுரன்; ஆக 8.
ஆகாசத்துக்கு: வடிவு - வட்டம்; நிறம் - புகை; குணம் நிரந்தரமாய் இடங் கொடுத்தல்; ஆயுதம் - அமுதவிந்து; அக்கரம் - ஹகாரம்; கலை - சாந்தியா தீதகலை; தொழில் - சத்தம் 1; தேவதை - சதாசிவம்; ஆக 8.

ஞானேந்திரியம்: சோத்திரம் ஆகாயத்தினிடமாக நின்று செவியைப் பொருந்திச் சத்தத்தை யறியும். தொக்கு வாயுவினிடமாக நின்று தேகத்தைப் பொருந்திப் பரிசத்தையறியும். சட்சு தேயுவினிடமாக நின்று கண்ணைப் பொருந்தி ரூபத்தை யறியும். சிங்ஙுவை அப்புவினிடமாக நின்று நாவைப் பொருந்தி ரசத்தை யறியும். ஆக்கிராணம் பிருதிவியினிடமாக நின்று மூக்கைப் பொருந்திக் கந்தத்தை யறியும்.

கன்மேந்திரியம்: வாக்கு ஆகாசத்தினிடமாய் நின்று வாயைப் பொருந்தி வசனிக்கும். பாதம் வாயுவினிடமாக நின்று காலைப் பொருந்திக் கெமனிக்கும். பாணி தேயுவினிடமாக நின்று கையைப் பொருந்தி இடுதலு மேற்றலுஞ் செய்யும். பாயுரு அப்புவினிடமாக நின்று குதத்தைப் பொருந்தி பல விசர்க்கத்தைக் கழிப்பிக்கும். உபத்தம் பிருதிவியினிடமாக நின்று கோசத்தைப் பொருந்தி ஆனந்தத்தை விடும்.

தன்மாத்திரைகளைந்தும் சோத்திராதி ஐந்துக்கும் விடயமாக இருக்கும்.

மனம் பற்றும். புத்தி நிச்சயிக்கும். ஆங்காரம் கொண்டெழுப்பி, அகந்தைக்கு வித்தாய், யானெனதென்று விகற்பித்து வரும். சித்தம் சிந்திக்கும். ஆக 4. இந்த அந்தக்கரணங் காரியப்படுகிறதெப்படி யென்னில், இவை நாலையுஞ் சேட்டிப்பிக்கும் உள்ளம் 1. ஆக 5.

இந்த அஞ்சையும், பிரும்மா அகாரத்தை எழுப்ப அகாரம் மனத்தை எழுப்பும்; விட்டுணு உகாரத்தை எழுப்ப உகாரம் புத்தியை எழுப்பும்; உருத்திரன் மகாரத்தை எழுப்ப மகாரம் ஆங்காரத்தை எழுப்பும்; மயேசுரன் விந்துவை எழுப்ப விந்து சித்தத்தை எழுப்பும்; சதாசிவம் நாதத்தை எழுப்ப நாதம் உள்ளத்தை எழுப்பும். இப்படி காரியப்படுமென வறிக.

வித்தியாதத்துவங்களின் தொழில்

காலம், செல்காலமான எல்லையும், நிகழ்காலமான பல மும், எதிர்காலமான புதுமையும் என மூன்றாம். நியதி ராசாக்கினை போலக் கன்மபலத்தை நிச்சயித்து நிறுத்தும். கலை, கேவலக்தை நீக்கிக் கிரியையை எழுப்பும். வித்தை அறிவை யெழுப்பம். அராகம், ஆசையை எழுப்பிப் பெற்றதைச் சிறிதாக்கிப் பொததிலே இச்சை யுண்டாக்கும். புருடன் விடயத்திலே அழுத்துவிக்கும். மாயை, குண ரூபமாய் நின்று, எண்பது கணங்களாலேயும் பேதிப்பித்து, பொய்யை மெய்யென மயக்கும். இந்த வித்தியா தத்துவ மேழுங் கண்டுகொள்க.

சிவதத்துவங்களின் தொழில்

சிவதத்துவங்கள் காரியப்படும் முறைமை எப்படியெனில், சுத்தவிந்தை ஞானமேறிக் கிரியை குறைந்திருக்கும். ஈசுரம் கிரியையேறி ஞானங் குறைந்திக்கும். சாதாக்கியம் ஞானமுங் கிரியையும் ஒத்திருக்கும். சத்தி கிரியையாயிருக்கும். சிவம் ஞானமாயிருக்கும். இந்த சுத்ததத்துவங் காரியப்படுகிற தெப்படி யென்னில், இச்சாசத்தி ஈசுரத்தை யெழுப்பும்; ஞானசத்தி சுத்த வித்தையையுஞ் சிவத்தையு மெழுப்பும்; கிரியாசத்தி சாதாக்கியத்தையுஞ் சத்தியையும் எழுப்பும். இப்படி அறியப்படுமென வறிக.

சிவதத்துவஞ் சிவனுக்கிடம், நாதமென்றும் பெயர். சத்தி தத்துவங் காருண்ணியத்துக்கிடம், விந்துவென்றும் பெயர்; சாதாக்கிய தத்துவம் அனுக்கிரகத்துக்கிடம், சதாசிவமென்றும் பெயர்; ஈசுரதத்துவம் திரோதானத்துக்கிடம், மயேசுரமென்றும் பெயர்; சுத்தவித்தை சங்காரம் திதி சிருஷ்டிக் கிடம், உருத்திர மென்றும் பெயர். ஆகத் தத்துவமைந்தும், ஒன்பது மூர்த்திக்கும் பஞ்ச கிருத்தியத்துக்கும் இடமென வறிக.

ஆக உட்கருவி முப்பத்தாறின் தொழில் அறிக.

புறக்கருவியின் தொழில்

பூதகாரியம்

புறநிலைக் கருவியின் தொழிலாவன : மயிர் வளரும், எலும்பு உரக்கும், தோல் வற்கென்னும், நரம்பு கதித் தோடும், தசை முற்றும்; ஓடுநீர் விழும், உதிரம் பரக்கும், சுக்கிலம் வர்த்திக்கும், மூளை மெத்தென்றிருக்கும், மச்சை நிறைக்கும்; பசி தாகிக்கும், நித்திரை மயக்கும், பயம் அஞ்சு விக்கும், மைதுனம் செலுத்தும், சோம்பு முறிப்பிக்கும்; ஓடல் விரைவிக்கும், நடத்தல் எழுப்பும், நிற்றல் நிற்பிக் கும், இருத்தல் இருப்பிக்கும், கிடத்தல் கிடப்பிக்கும்; காமம் இச்சிப்பிக்கும், மதம் அகங்கரிப்பிக்கும், லோபம் பிசினிப்பிக்கும், மோகம் மயக்கும் குபோகர்கோதிக்கும். ஆகப் பூதகாரியம் 25.

மற்றக் கருவிகள்

பிராணன் மூலாதாரத்திலே தோன்றி, இடை பிங்கலையா லேறி, கபாலத்தளவுஞ் சென்று, நாசியினிடமாய்ப் பன்னிரண்டங்குலம் வெளிப்புறப்பட்டு, நாலங்குலம் வெளியே சென்று, எட்டங்குலம் உள்ளே யடங்கும். அபானன் மலசல விசர்க்கங்களைக் கழிப்பிக்கும். உதானன் வைகரி வாக்கைப் பொருந்தி அக்கரங்களை வசனிக்கும். வியானன் உண்ட அன்னசாரத்தை எழுபத்தீராயிரம் நாடிகளினுங் கலப்பிக்கும். சமானன் எல்லாவற்றையுஞ் சமானம் பண்ணும். நாகன் தும்மல் இருமல் விக்கலை யுண்டாக்கும். கூர்மன் கண்ணேற்றல் செய்யும். கிரிகரன் சோம்பு கொட்டாவி களை யுண்டாக்கும். தேவதத்தன் இமைப்பிக்கும், நகைப்பிக்கும். தனஞ்சயன் உடம்பை வீங்கவும் விரியவுஞ் செய்து, உயிர் நீங்குங் காலத்துக் கபாலத்தை வெடித்துப்போம். ஆக வாயு 10.

வசனாதிகளைந்தும் வாக்காதிகளுக்கு விடயமாயிருக்கும்.

இடை இடது மூக்கிலே நிற்கும். பிங்கலை வலது மூக்கிலே நிற்கும். சுழுமுனை நேரே நிற்கும். காந்தாரி கண்ணிலே நிற்கும். அத்தி உடலெங்கும் நிற்கும். சிங்ஙுவை தாலுவிலே நிற்கும். அலம்புருடன் செவியிலே நிற்கும். சங்கினி களத்திலே நிற்கும். வயிரவன் கோசத்திலே நிற்கும். குதன் குதத்திலே நிற்கும். ஆக நாடி 10.

சாத்துவிகம்: தபசு, க்ஷமை, கிருபை, சந்தோஷம், செவ்வ றிவு, அடக்கமுடைமை, பொறுமை இவை முதலாயின. இராசதம்: கொடுமை, சௌரியம், உற்சாகம், அபிமானம், கிருபையற்றிருக்கை, இடும்பை முதலாயின. தாமதம்: மந்தம், கோட்சொல்லுதல், கவுரவம், நித்திரை, மதம், மாச்சரியம். அறியாமை, சோம்பு முதலாயின.

தைசத வாங்காரம் சாத்துவித குணத்தைப் பற்றி யெழும். வைகரி யாங்காரம் ராசத குணத்தைப் பற்றி யெழும். பூதாதி யாங்காரம் தாமத குணத்தைப் பற்றி யெழும்.

சூக்குமை யென்கிற வாக்கு, வசனங்களைத் தோற்றுவிக்கும் பொருட்டு, ஆன்மாக் கேவலப்பட்டுக் கிடக்கும் அதரத்தில், சோதியாய் நேர்மையாய் ஒரு நாதத்தை யுண்'டாக்கித் துரியத்திலே யாக்கும். பைசந்தி யென்கிற வாக்க உந்தித் தானத்திலே பொருந்தி, வெவ்வேறு அக்கரங்களைப் பொருந்தத்தக்கதாகத் தோன்றுகிற முறைமையிலே மயில் முட்டைச் சலத்திலே பஞ்ச வர்ணங்களுங் கூடி நின்றாற்போல, சித்தத்திலே உணர்வு மாத்திரமாய் நிற்கும். மத்திமை யென்கிற வாக்கு, பிராண வாயுவைக் கூடி வருகிற அக்கரங்களைப் பொருந்தத்தக்ககன்ம ரூபங்களெல்லாவற்றையும் ஒழுங்குடனே நிறுத்தி. செவிக்குட் கேளாமல் இவனுக்குள்ளே கேட்கத்தக்க ஒலியாய், கண்டத் தானத்திலே முழங்காநிற்கும். வைகரி யென்கிற வாக்கு, உதானவாயுவைக் கூடின பிராணவாயுத் தன்னோடுங் கூடி, நாக்கு அண்ணம் உதடு பல் மூக்கு என்கிற ஐந்துத் தானத் திலேயும் புறப்பட்டுச் செவியின் பகுதியிலே கேட்க நினைந்த பொருள்களைச் சொல்லாநிற்கும்.

இந்த நாலு வாக்குங் காரியப்படும் முறைமை எப்படி யென்னில், சுத்த தத்துவத்தினாலே காரியப்படுமென அறிக.

ஆகத் தத்துவந் தொண்ணூற்றாறு. இந்தத் தத்துவம் தொழிற்படும் அவதரத்தில் ஒன்றில் அனேகமாம். இந்தத் தத்துவந் தொண்ணூற்றாறுதோறும் ஆன்மா கன்மத்துக் கீடாகச் சகலாவத்தைப்படும்பொழுது இவையிற்றின் தொழில் விளங்கித் தோன்றுமென அறிக.

அவத்தைகள்

இனி அவத்தையாவன: கேவல சகல சுத்தம் என மூன்று. இதிற் கேவலமாவது, ஆன்மா ஆணவ மலத்துடனே பொருந்தி ஒன்றையும் அறியாதிருத்தல். சகலமாவது, மாயா தேகத்தைப் பொருந்தி, தத்துவங்களுடனே கூடி வினையைப் பொசித்தல். சுத்தமாவது இவையிரண்டும் நீங்கி, அருளைப் பொருந்தி, ஆனந்தத்திலேயே அழுந்துவது.

இந்தக் காரணவவத்தை மூன்றில், கேவலாவத்தையின் காரியமான கீழாலவத்தை 5, சகலத்தின் காரியமான மேலாவைத்தை 5, சுத்தத்தின் காரியமான நின்மலாத்தை 5 ஆகக் காரியவவத்தை 15.

கீழாலவத்தை

இதிற் கேவலத்தின் காரியமான கீழாலவத்தை ஐந்தாவன: கீழாலவத்தைச் சாக்கிரம், கீழாலவத்தைச் சொப்பனம். கீழாலவத்தைச் சுழுத்தி, கீழாலவத்தைத் துரியம், கீழால வத்தைத் துரியாதீதம் ஆக 5. இதற்குத் தத்துவம் 35 அவையேதென்னில், சாக்கிரத்தில் 35. சொப்பனத்தில் 25, சுழுத்தியில் 3, துரியத்தில் 2, துரியாதீதத்தில் 1.

கீழாலவத்தைச் சாக்கிரம்

அது காரியப்படுகிற தெப்படி யென்னில், ஞானேந்திரியங்கள் 5, கன்மேந்திரியங்கள் 5, தன்மாத்திரைகள் 5, அந்தக்கரணங்கள் 4, புருடன் 1, ஆக உட்கருவி 20; புறக்கருவியில் வாயு 10, வசனாதிகள் 5, ஆக 35 கருவிகளுடனே கூடி, மற்ற 61 கருவிகளையும் விட்டு, லலாடத் தானத்திலே அறிவு மயங்கிநின்ற அவத்தை கீழாலவத்தைச் சாக்கிரம்.

கீழாலவத்தைச் சொப்பனம்

ஞானேந்திரியங்கள் 5 ம், கன்மேந்திரியங்கள் 5-ம் ஆகப் பத்தும் லலாடத்தானத்தில் நிற்க, மற்ற 25 கருவிகளுடனே கண்டத்தானத்திலே நின்ற அவதரம் கீழாலவத்தைச் சொப்பனம்.




கீழாலவத்தைச் சுழுத்தி

வசனாதிகள் 5-ம், தன்மாத்திரைகள் 5-ம், சித்தம் நீங்கலாக அந்தக்கரணங்கள் 3-ம், பிராணவாயு நீங்க லாக வாயுக்கள் 9-ம் ஆக 22 கருவிகளுங் கண்டத் தானத்திலே நிற்க, மற்ற மூன்று கருவிகளுடனே இருதயத் தானத்திலே நின்ற அவதரம் கீழாலவத்தைச் சுழுத்தி.

கீழாலவத்தைத் துரியம்

சித்தம் ஒன்றும் இருதயத்தானத்திலே நிற்க, மற்ற * இரண்டு கருவிகளுடனே நாபித்தானத்திலே நின்ற அவதரம் கீழாலவத்தைத் துரியம். [* பிராணவாயுவும் புருடனும்.]

கீழாலவத்தைத் துரியாதீதம்

பிராணவாயு வொன்றும் நாபித்தானத்திலே நிற்க, மற்ற உள்ளம் (புருடன்) ஒன்றும் மூலாதாரத்திலே அடங் கின அவதரம் கீழாலவத்தைத் துரியாதீதம்.

இப்படி கீழாலவத்தை யறிக.

மேலாலவத்தை

இனி, சகலத்தின் காரியமான மேலாலவத்தை ந்தும் எப்படி யென்னில், மேலாலவத்தைச் சாக்கிரம், மேலா லவத்தைச் சொப்பனம், மேலாலவத்தைச் சுழுத்தி, மேலா லவத்தைத் துரியம், மேலாலவத்தைத் துரியாதீதம் ஆக 5. இதற்குத் தத்துவந் தொண்ணூற்றாறு. அவையே தென்னில், சாக்கிரத்தில் 53, சொப்பனத்தில் 20, சுழுத்தியில் 10, துரியத்தில் 3, துரியாதீதத்தில் 7.

இது காரியப்படுகிற தெப்படி என்னில், ஆன்மா கேவலத்தைப் பொருந்தி அதீதப்பட்டுக் கிடக்கு மவதரத் தில், சிவதத்துவமும் சத்திதத்துவமும் ஆன்மாவுக்குள்ள கன்மத்துக்கீடாகச் சூக்குமையைக் காரியப்படுத்தித் துரியத்திலே யாக்கும்; சாதாக்கிய தத்துவம் பைசந்தியைக் காரியப் படுத்தி சுழுத்தியிலே யாக்கும்; ஈசுர தத்துவம் மத்திமையைக் காரியப்படுத்திச் சொப்பனத்திலே யாக்கும்; சுத்த வித்தை வைகரியைக் காரியப்படுத்திச் சாக்கிரத்திலே யாக்கும்.

மேலாலவத்தைத் துரியம்

பின்னும், சத்தி தத்துவம் மேலாலவத்தையில் அதீதத் கிலே காலத்தையும் நியதியையுங் கலையையு மெழுப்பும், கலை தழற்போட நீக்கினாற்போல கேவலத்தை நீக்க, ஆன்மா கலையே வடிவாய் மேலாலவத்தைத் துரியப்படுவன்.
மேலாலவத்தைச் சுழுத்தி

துரியத்திலே பிராணவாயுவைக் கூடி மேலாலவத்தைச் சுழுத்திப்படுவன்.

மேலாலவத்தைச் சொப்பனம்

சுழுத்தியிலே, சுத்தவித்தை வித்தையை யெழுப்ப, வித்தை ஆன்மாவுக்கு அறிவை யெழுப்பும்; ஈசுர தத்துவம் அராகத்தை யெழுப்பும்; அராகம் ஆன்மாவுக்கு இச்சையை யெழுப்பும்; இப்படி ஆன்மா இச்சா ஞானக்கிரியா சொரூப னான விடத்தில், சாதாக்கிய தத்துவம் புருடனை யெழுப்ப, ஆன்மா புருடதத்துவமாம்; அந்த அவதரத்தில் சிவதத்து வம் பிரகிருதியை யெழுப்., பிரகிருதி குணரூபமாய் ஆன்மா வைக்கூட, ஆன்மா முக்குணமே வடிவாய் இச்சித்த தத்து வத்தோடுங் கூடி, உணர்வு மாத்திரமா யிருப்பன்; இவை யிற்றுடனே மேலாலவத்தைச் சொப்பனப்படுவன்.

மேலாலவத்தைச் சாக்கிரம்

சொப்பனத்திலே, சூக்கும தேகமாகிய கருவிகள் 8-ம் வசனாதிகள் 5-ம், வாயுக்கள் 9-ம் ஆக 22 கருவிகளுடனே கூடிப் பருவதேகியாய்ச் சாக்கிரத்திலே பொசிக்குந் தன்மைபோலச் சொப்பனத்திலும் இன்பதுன்பமாகிய கன்மத்தைப் பொசிப்பன். எல்லாக் கருவியுமில்லாமல் எப்படிப் பொசிப்பனென்னில், சகலத்திலே மனாதிகளிலே ஒரு பொருளை நினைத்து, அதை இச்சித்து, அதைக் கிரகித்து, அந்தவிடத்திலே போனதுபோலப் போய், அந்தப் பொருளைக் காண்பது போலக் கண்டு, அங்கே சிறிது வசனித்தது போல் வசனித்து, சிறிது செய்ததுபோலச் செய்து, சிறிது அனுபவித்ததுபோல அனுபவித்து, இப்படிப் பலவாய்ச் சுக துக்கப்படுகிறது போலச் சொப்பனத்திலும். திருவருளானது மனாதிகளிலே பொசிப்புக்குரிய கருவிகளுடனே கன்மத்துக் கேதுவாக மேலாலவத்தைச் சாக்கிரப்படுவன். அப்படிச் சாக்கிரப் பட்ட வீடத்தில், ஞனேந்திரியங்கள் 5-ம், கன்மேந்திரியங்கள் 5-ம், பூதங்கள் 5-ம், புறக்கருவியில் இங்ஙனங் காரியப்பட்டது போகநின்ற 38-ம் ஆக 59 கருவிகளுடனேயுங் கூடி, உருவமாகிய தூலதேகத்தைப் பொருந்திக் கன்மத்தை அனுபவித்தும் ஆர்ச்சித்தும் நிற்பன். அதனால் ஆன்மாச் செனன மரணப்பட்டு வரும்.

இந்த மேலாலவத்தை அஞ்சுக்கும் கருவி நின்ற முறைமை ஏதென்னில், துரியாதீதத்திலே புருடன் 1, சிவம் சத்தி 2, சூக்குமை 1, காலம் நியதி கலை ஆக - 3 ஆக தத்துவம் 7; துரியத்திலே பிராணவாயு 1, சாதாக்கியம் 1, பைசந்தி 1 - ஆக 3; சுழுத்தியிலே சித்தம் 1, சுத்தவித்தை ஈசுரம் 2, மத்திமை 1, வித்தை அராகம் மாயை 3, சாத்து விகம், ராசதம், தாமதம் 3 - ஆக 10; சொப்பனத்திலே வைகரி 1, சத்தாதி 5, தன்மாத்திரை அந்தக்கரணம் 3, வாயுக்கள் 9, வசனாதிகள் 5-ஆக 23; சாக்கிரத்திலே ஞானேந்திரியங்கள் 5, கன்மேந்திரியங்கள் 5, பூதங்கள் ர5, பஞ்சபூதத்தின் காரியங்கள் 25, நாடிகள் 10, ஆங்காரம் 3 ஆக 53. அவத்தை யஞ்சுக்குந் தத்துவம் 96.

மத்தியாலவத்தை

இப்படி மேலாலவத்தைச் சாக்கிரமடைந்த ஆன்மா சாக்கிரத்திலே மத்தியாலவத்தை அடைவன். மத்தியாலவத்தை யேதென்னில், சாக்கிரத்திற் சாக்கிரம், சாக்கிரத்திற் சொப்பனம், சாக்கிரத்திற் சுழுத்தி, சாக்கிரத்தில் துரியம், சாக்கிரத்தில் துரியாதீதம் ஆக 5.

அது காரியப்படுகிற தெப்படி யென்னில், ஒரு பொருளை ஓரிடத்தில் வைத்து அறியாமல் திகைத்து நின்ற அவதரம் சாக்கிரத்தில் துரியாதீதம். சிறிது பிராணவாயு இயங்கி நினைத்தல் சாக்கிரத்தில் துரியம். அந்தப் பதார்த்தத்தை எங்ஙனே வைத்தோமென்று விசாரிக்க வந்தவிடம் சாக்கிரத்திற் சுழுத்தி. அந்தப் பதார்த்தத்தை வைத்த இடம் நினை வெழத் தோன்றல் சாக்கிரத்திற் சொப்பனம். அந்தப் பதார்த்தம் புலப்பட அறியவந்த இடம் சாக்கிரத்திற் சாக்கிரம்.

இப்படி சாக்கிரத்தில் மத்தியாலவத்தை யடைவதே தென்னில், கன்மத்துக்கேதுவாக ஆன்மா ஒரு பொருளையறிய வேண்டில், பொறியிலொன்றும் பூதத்திலொன்றும் அந்தக்கரணங்கள் 4-ம் கலாதிகள் 5-ம் ஆகப் பதினொரு கருவிகளுங் கூடித் திருவருள் அறிவித்தாலொழிந் தறியாதாகையால், அப்படி அவத்தைப்பட்டு வருவதென வறிக. இப்படிச் சகலாவத்தை யறிக.

சுத்தாவத்தை

இனி, சுத்தாவத்தையின் காரியமான நின்மலாவத்தை ஐந்தும் எப்படி யென்னில், நின்மல சாக்கிரம், நின்மல சொப்பனம், நின்மல சுழுத்தி, நின்மல துரியம், நின்மல துரியாதீதம் ஆக 5.

நின்மல சாக்கிரம்

இது காரியப்படுகிற தெப்படியென்னில் மலபரிபாகம் சத்திநிபாதம் இருவினையொப்பு உண்டான அவதரத்தில், ஆசாரியர் நிருவாண தீட்சைபண்ணின விடத்துப் பூதங் களைத் தெரிசிக்கவே, தூலதேகம் நீங்கும்; இந்திரியங்களைத் தெரிசிக்கவே, பூதங்கள் நீங்கும்; அந்தக்கரணங்களைத் தெரிசிக்கவே, இந்திரியங்கள் நீங்கும்; கலாதிகளைத் தெரி சிக்கவே, அந்தக்கரணங்கள் நீங்கும்; சுத்ததத்துவங்களைத் தெரிசிக்கவே, கலாதிகள் நீங்கும்; அருளைத் தெரிசிக்கவே, சுத்ததத்துவங்கள் நீங்கும். இப்படி இங்ஙனஞ் சொல்லப் பட்ட தத்துவங்களின் தொழிலை யறிந்து, இவ்வளவுஞ் சட மென் றறிந்து, நீங்கிய பொறி வேறு நான் வேறு என்று அறிதல் நின்மல சாக்கிரம்.




நின்மல சொப்பனம்

பெத்த முத்தி யிரண்டினும் உபகரிக்கிற திருவருளுடைய சுதந்தரத்தையும் தன்னுடைய சுதந்தர வீனத்தை யும் அறிந்து, சருவ கிருத்தியமுடைய திருவருளே முதன்மை யாக அறிதல் நின்மல சொப்பனம்.

நின்மல சுழுத்தி

திருவருளுடைய சருவகிருத்தியத்தை யானுஞ் செய்வே னென்று கருதுதல் நின்மல சுழுத்தி.

நின்மல துரியம்

கேவலம் நீங்கி, அருளினாலே தன்னையும் கண்டு அருள்வழி நிற்பது நின்மல துரியம்.

நின்மல துரியாதீதம்

அந்த அருளுக்கு முதலாகிய சிவத்திலே அழுந்துவது நின்மல துரியாதீதம்.

இப்படிச் சுத்தாவத்தையை அறிக.

தசகாரியம்

இந்த அவத்தையிலே தசகாரியத்துவம் அடங்கும். தசகாரியங்கள் எவை என்னில், தத்துவரூபம், தத்துவ தெரிசனம், கத்துவ. சுத்தி, ஆன்மரூபம், ஆன்மதெரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதெரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகப்பத்து. இதில் தத்துவரூபமாவது அவையிற்றின் தொழிலை யறிதல். தத்துவதெரிசனமாவது, அவையிற்றைச் சடமென்றறி தல். தத்துவசுத்தியாவது, அவையிற்றைத் தனக்கு அன்னிய மென்றறிந்து நீங்குதல். ஆன்மரூபமாவது இப்படி நீங்கின அறிவை நானே யெனவறிதல். ஆன்மதெரிசனமாவது தற்சுதந் திர வீனத்தை யறிதல். ஆன்மசுத்தியாவது தற்செயலற்று அருளாய் நிற்றல். சிவரூபமாவது மலமாயை கன்மங்களைப் போக்கித் தற்சு தந்தரத்தையும் ஆன்மாவின் சுதந்தரவீனத்தையும் அறிவித்து நிற்கிற அறிவே வடிவென்றறிதல். சிவதெரிசனமாவது, ஆன்மாவின் தற்செயலற்ற விடத்து எவ் விடத்தும் இன்பக் காட்சியாய்த் தோன்றுதல். சிவயோகமாவது, ஆன்மா தோன்றாமல் அருளாய் நிற்றல். சிவபோகமாவது, சிவானந்தத்திலே இரண்டற இருத்தல். இப்படி தசகாரியத்தை யறிக.

இந்தத் தசகாரியம், ஆன்மதெரிசனம் ஆன்மசுத்தி ஆன்மலாபம் ஆக மூன்றில் அடங்கும். இதில் ஆன்மதெரிசன மாவது, மலமாயை கன்மங்களை நீங்கிச் சிவஞானத்திற் பொருந்துதல். ஆன்மசுத்தியாவது, அருளிற் பணியற்று ஒடுங் கல். ஆன்மலாபமாவது, ஆனந்தத்தி லழுந்தல்.

இந்த முறைமையிலே ஆசாரியர் அருளினாலே நிட்டை கூடுக. அது கூடாதாகில், கேட்டல் - சிந்தித்தல் - தெளி தலிலே நிற்க. அதுவுங் கூடாதாகில், உண்மைச் சரியை கிரியாயோகங்களிலே உறைத்து நிற்க. அப்படி நிற்கவே, அந்த நிட்டை வந்து கூடும்.

இங்ஙனஞ் சொல்லப்பட்ட முறைமையினாலே எந்த நிலையிலே நின்றாலும், குருலிங்க சங்கமமாகிய மூர்த்திகளைப் பொருளென வழிபட்டு இம்மூர்த்திகளிருக்குந் தீர்த்தங்க ளிலே ஸ்நானம் பண்ணி, சிவாகமங்களிலே விதித்தலைச் செய்து விலக்குத லொழிந்து, அஞ்ஞான முடையவர்கள் சார்வை விட்டுச் சிவஞான முடையவர்கள் சார்வா யிருக்கக் கடவன்.

இது மெய்கண்ட சாத்திரத்தின் மார்க்கமென அறிக.


No comments:

Post a Comment