Sunday, May 10, 2020



வேலுமயிலும் துணை
சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் றிருவடி வாழ்க
விநாயகர்
[திரு. வ. ம. உருத்திரசாமி ஐயர்,
தலைமை ஆசிரியர், ஸ்ரீமத் ஞானியார் கலாசாலை, புலிசை]

உலகில் தோன்றும் பிறவிகள் எழுவகையின. அவற்றுள் சிறந்தது ஆறு அறிவினையுடைய மக்கட் பிறப்பே 'அம் மக்களும் தம் பரு உடலினையே முற்றும் அறிந்திலர்; தம் உடலின் பின் புறத்தைக் காண இயலாது மயங்குவர்; முன்னுள்ள முகத்தினையும் காணக் கண்ணாடி தேடுவர். இத் தகையோர் உடலுள் இயங்கும் நுண்ணிய உயிரினை எங்கனம் அறிவர். அவ்வுயிரினுள், நுணுக்கரிய நுண்ணுணர்வாயும், உயிர்க் குயிராயும் விளங்கும் இறைவனை இவர் அறிவரோ?அறியார். இத்தகைய அறிவிலிகளாகிய ஏழை ஆன்மாக்களை உய்விக்க வேண்டி கருணை கூர்ந்த இறைவன் தன்னை யாவரும் கண்டு வழிபட்டுய்ய மூர்த்திகளாய் உருக் கொண்டனன். சைவ மக்கள் வணங்கும் மூர்த்திகள் பலருள்ளும், சிறந்தவர் விநாயகர், முருகன், சிவபெருமான், சிவசக்தி, சண்டேசுரர் ஆகிய ஐவர். அவருள் முதன்மை யுற்றவர் விநாயகர். எல் லாரையும் அடக்கி நடத்துபவர் நாயகர் எனப்படுவர். அத்தகைய நாயகர்கட் கெல்லாம் தலைமை பூண்டு, அவர்களை இயக்குபவர் விநாயகரே. அன்றியும் தன்னினும் தலை சிறந்து விளங்கித் தன்னை இயக்குபவர் ஒருவரும் இலர் என நிற்பவர் அநாயகராகிய விநாயகர், என்பர் பெரியோர்.

திருக்கைலாயத்துள் ஓவியச்சாலை ஒன்றுளது. அதனுள் அம்மையப்பராம் இருவரும் ஓர்கால் உலாப் போந்தனர். ஆண்டு பொறிக்கப்பட்ட ஓவியங்களுள், சிவ சத்திகளாகிய ஓங்காரங்கள் இரண்டும் இவ்விருவர் திருமுன், யானை வடிவு கொண்டு மகிழ்ந்தன.

அம் மகிழ்ச்சியில் தோன்றியவர் கஜமுகராம் விநாயகர். இவர் யானைமுகத் தசுரனைத் தாக்க செல்லுங்கால், சேனை களாகத் தன்னைச் சூழ்ந்த சிவகணங்கட்குத் தலைமை பூண்டு நின்றமையால், கணபதி எனும் நாமம் பெற்றனர்; வேறு எத்தகைய படைகளாலும் ஊறு தனக்கு இல்லை எனத் தருக்கி நின்ற அவ்வசுரனைத், தனது ஒரு கொம்பினைக் கொண்டே அழித்தமையின் ஒற்றைக் கொம்பன் - ஏக தந்தன் ஆயினர். இவர், தந்தத்தினால் தனது தொல்லுரு அழிந்து பெருச்சாளி வடிவத்துடன் எதிர்த்தவனை அடக்கி ஊர்தியாகச் செலுத்தினமையால் மூஷிக வாகனர் ஆயினர். இவர் அசுரன் தொலையவே ஆனந்தமும் அன்புங் கொண்டு, தன்னைச் சூழ்ந்து வணங்கும் விண்ணவர்கட்கு அருள் சுரக்கும் இனிய முகத்துடன் இருந்தமையின் சுமுகன் ஆயினர். அக்கொடியவன் எதிரில் தேவர்கள், தாம் செய்தது போலத் தனது திருமுன்னும் தலையில் குட்டிக்கொண்டு தாழ்ந்து எழுந்து கும்பிடலே தனக்கு ஆகும் வணக்கம் எனப் பணித்தனர்.
ஒரு செயல் தொடக்கத்தில், தன்னை நினைப்பவர்க்கு வரும் விக்கினங்களை நீக்கி, நினையாதவருக்கு விக்கினங்களை ஆக்கும் வன்மையாளராகிய விக்கின ராஜர் இவரே. இத் தகைய இயல்பினையுடைய மூர்த்தி, ஆலயங்கள், ஊர்ச் சந்திகள், தீர்த்த க் கரைகள், நந்தவனங்கள், மலைகள் முதலிய புண்ணிய இடங்களில் எழுந்தருளித் தன்னை வணங்கும் அன் பர்கட்கு அருள் செய்வர். இவரது அருள் எங்கும் என்றும் நிலவுக. உலகம் மகிழ்க.

சித்தாந்தம் – 1943 ௵ - மார்ச்சு ௴


No comments:

Post a Comment