Saturday, May 9, 2020



திருவாசகம் - பிஞ்ஞகன்

திரு. மு. அருணாசலம், எம். ஏ.,

திருவாசகத்தில் பிஞ்ஞகன் என்ற சொல் நான்கு இடங்களில் வருகிறது. பிஞ்ஞகன் என்பது, தமிழில் சிவபெரு மானைக் குறிப்பிடும் சொற்களில் ஒன்று; பிங்கல நிகண்டு இச்சொல்லைக் கூறுகிறது. இச்சொல், திருவாசகத்துள் வரும் சந்தர்ப்பங்களையும், பொருளையும் சிறிது ஆராயலாம்.

பிஞ்ஞகன் என்ற சொல் பிஞ்சகன் என்ற வடிவத்தின் திரிபு. திவாகர நிகண்டும், சூடாமணி நிகண்டும் சிவபெரு மானைப் பிஞ்சகன் என்றே குறிப்பிடுகின்றன.

"பெற்ற மேல் கொண்ட தம்பிரானடியார்
பிஞ்சகன் தன்னருள் பெறுவார்''

என்று பெரிய புராணமும் பிஞ்சகன் என்றே குறிப்பிடுகின்றன. (திருமலைச் சிறப்பு. பாட்டு 11.) நாவலர் பதிப்பிலும், ஏட்டுப் பிரதிகளிலும் பிஞ்சகன் என்றே இச் சொல் காணப்படுகிறது; சமாஜப் பதிப்புக்களிலும், சுப்பிரமணிய முதலியார் உரைப்பதிப்பிலும் பிஞ்ஞகன் என்று அச்சிடப்பட்டுள்ளது.

பிஞ்சகன் (பிஞ்ஞகன்) என்ற சொல் வடமொழியின் திரிபு. இதற்கு வடமொழியில் இரண்டு வேர்ச்சொற்கள் உள்ளன. ஒன்று பிச்ச என்பது. இதுவே பிச்சம் என்று தமிழில் மருவிவந்து, மயில் தோகை முதலான பொருள் களைப் பெற்றது. இதனடியாக வந்த பிஞ்ஞகன் என்ற சொல்லின் பொருளாவது, தலைக்கோல முடையவன் என்பது. தலைக்கோலமாவது, மகளிர் தலையில் அணியும் அணிவகைகளில் ஒன்று. இது சிவபெருமானைக் குறிப்பிடும் போது, பிறைச் சந்திரன், கங்கை, பாம்பு, சடாமுடி ஆகியவற்றைப் பெருமான் தலையில் அணிந்துள்ளமையால், தலைக்கோலம் பெருமானுக்கும் பொருந்துவதாகிறது. எனவே, தலைக்கோலமுடைய சிவபெருமான் பிஞ்ஞகன்.

சம்பந்தர் தேவாரத் துள் பிஞ்ஞகன் என்ற சொல்வரும் இரண்டு இடங்களைக் கருதுதல் தகும்.:

''கண்ணுதலான் வெண்ணீற்றா கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பலவுடையான்
என்பது பிரமபுரப் பதிகம். (1. 40, 5.)

பெண்ணமர்ந்தொரு பாகமாகிய பிஞ்ஞகா பிறைசேர் நுதலிடைக்
கண்ணமர்ந்தவனே கலந்தார்க் கருள்வாயே.''
என்பது திருப்புறவார் பனங் காட்டூர்ப் பதிகம். இவ்விரண்டு பாடல்களிலும் பிஞ்ஞகன் என்று குறிப்பிடும் போது, சம்பந்தர் பெண் உருவத்தையும் உடன் குறிப்பிடுகின்றார். இங்கு தலைக்கோலமுடையவன் என்று பொருள் கொள்வது இயல்பாகவும், மிகவும் பொருத்தமாகவும் உள்ளது.

இனி, அப்பர்சுவாமிகள், செவிலி கூற்றாக வரும் அகத்துறைத் தேவாரமாகிய "வனபவளவாய் திறந்து'என்ற திருக் கழிப்பாலைத் தேவாரம் நான்காம் பாடலில், பிஞ்ஞக வேடத்தைக் குறிப்பிடுகிறார்.

“இரும்பார்ந்த சூலத்த னேந்தி யொர்
வெண் மழுவன் என்கின் றாளால்
சுரும்பார் மலர்க் கொன்றைச் சுண்ண வெண்
ணீற்றவனே என்கின்றாளால்
பெரும் பாலனாகி யொர் பிஞ்ஞக
வேடத்தன் என்கின் றாளால்
கரும் பானல் பூக்குங் கழிப் பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ.''

'பெரும்பாலனாகி ஓர் பிஞ்ஞக வேடத்தன்' என்கின்றமையால், தாருகாவனத்து முனி பத்தினிகளுக்கு முன் அவர்கள் விருப்பங்கொள்ளுமாறு சென்ற இளமைத் திருவுருவத்தையும் குறிப்பிட்டதாக நாம் கொள்ளலாம்.

திருவாசகத்தில் ஓரிடத்தில் இப்பொருள் அமையப் பிஞ்ஞகன் என்ற சொல் வருகின்றது.

பேயனாகிலும் பெருநெறி காட்டாய் பிறைகுலாம் சடைப்
பிஞ்ஞகனேயோ

என்பது செத்திலாப்பத்து, ஏழாம்பாடல். அபயம் என்று வந்த சந்திரனுக்கு இடம் அளித்த நிலையை, 'பிறைகுலாம் சடைப் பிஞ்ஞகன்' என்று குறிப்பிட்டு, 'இவ்வியல்பு பொருந்திய நீ, யான் பேயனாகிலும், என்னை ஆட்கொண்டு எனக்குப் பெருநெறி காட்டாய்' என்று வேண்டுகிறார் என்பதே முறை. ஒருபதிப்பில், இங்கு, 'பிஞ்ஞகன் -மயிற் பீலியை அணிந்தவன்' என்று காணப்படும் குறிப்புரை சற்றும் பொருத்த மற்றது, மயிற் பீலிக்குச் சிவபெருமான் சடையில் என்ன இடமோ தெரியவில்லை.

இனி, பிஞ்ஞகன் என்ற சொல்லுக்கு மற்றோர் ஆதாரமும் உண்டு. வடமொழியில் பிஞ்ஜ் என்ற வேர்ச் சொல்லுக்கு அழித்தல் என்பது பொருள். இதிலிருந்து பிறந்த பிஞ்ஞகன் என்ற பெயர்ச்சொல் அழிப்பவன், சங்கரிப்பவன் என்று பொருளுடையது. இச்சொல் தமிழில் பிஞ்ஞகன் என்றாகி, சங்காரக் கடவுளாகிய ருத்திரன் - சிவபெருமானைக் குறிப்பதாகிறது. இந்தப் பொருளில் இச்சொல் வரும் இடங்கள் மூன்று திருவாசகத்துள் காணப்படுகின்றன.
முதலாவது சிவபுராணம்:

வேகங்கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க, பிறப்பறுக்கும்
பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க, புறத்தார்க்குச்
சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க

என்ற இடத்தில்,'பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் 'என்றமையால், பிஞ்ஞகன் சடைமுடியுடையவன் என்றல்லாது, சங்கரிப்பவன் ஆகிய சிவன் என்று கொள்ளுவது நேரிதாகும்.

பிடித்த பத்தில்,

"பிறவி வேர் அறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா
பெரிய எம்பொருளே''

என்ற இடத்தில், பிஞ்ஞகன் என்பது, அங்ஙனமே 'பிறவி வேர் - அறுக்கின்ற சங்காரமூர்த்தி' என்ற பொருளுடையது.

மற்றோரிடம், திருவம் மானை 19 ஆம் பாடல்:

"முன்னானை மூவர்க்கு முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப்
பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின் மன்னானை"

என்று வருவது காண்க, இறைவன்'யாவர்க்கும் முன்னவன், மூவர்க்கும் முடிவாக வுள்ளவன், அனைத் துக்கும் பின்னவன், பிஞ்ஞகன்' என்று உள்ளது. அனைத்துக்கும் பின்னவன் என்பது, யாவும் அழிய இவன்யாவுக்கும் அந்தமாகவும், எல்லாவுயிர்க்கும் ஈறாகவும் உள்ளவன் என்று பொருள்படும். யாவுக்கும் இவன் ஈறுதருபவன் ஆதலால் சங்கரிப்பவன் எனவே, பிஞ்ஞகன் என்ற சொல்லுக்கு இங்கு சங்கரிப்பவன் ஆகிய பெருமான் என்று பொருள் கொள்வது தான் சிறந்தது.

திருவாசக உரைசெய்த கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தலைக்கோல முடையவன் என்று பொருள் கூற, பின் உரைசெய்தார் அனைவரும் அப்பொருளையே கொண்டார்கள்.

சுந்தரமாணிக்க யோகீசுரர் என்பவர் பிஞ்ஞகன் என்பதை, பிஞ்சு + அகன் = பிஞ்சகன் என்று பிரித்து, பிஞ் சாகிய அணுவினுள்ளே அமர்ந்திருப்பவன் என்று பொருள் கொண்டார். இவ்வகைப் பொருள்கள் யாவும் ஆதாரமற்றவை, சிறப்பற்றவை என்பது மேற்கூறிய குறிப்புக்களால் தெளிவாகும்.

எனவே, பிஞ்ஞகன் என்ற சொல்லை மாணிக்கவாசகர், எடுத்தாளும் போது, சந்தர்ப்பம் நோக்கி, அச்சொல், பிறை நதி அரவு சடை ஆகிய தலைக்கோலமுடைய பெருமான் என்றும், சங்கரிப்பவனாகிய பெருமான் என்றும் இருவேறு பொருள் தந்து நிற்பது தெளிவாகும்.

சித்தாந்தம் – 1962 ௵ - மே ௴


No comments:

Post a Comment