Saturday, May 9, 2020



நன்றியைக் காட்ட நல்ல சமயம்

[ச. தண்டபாணி தேசிகர்]

மெய்ப் பொருள் அறிவு என்றும் இன்பம் பெருக இருக்கும் முறைகளை உணர்த்துவது. விஞ்ஞான அறிவில் சிறப்புற்றாரும் சிந்தையோய மெய்ஞ்ஞானத்தை நாடுகின் றனர். எத்தனை வேடிக்கைகள் காட்டினாலும் மன நிறைவும் ஓய்வும் பயக்கின்ற மெய்ஞ்ஞானம் அவர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றது.

மெய்ஞ்ஞானத்தைப் பயப்பன தத்துவ சாத்திரங்கள். அவை அனுபவ ஞானிகள் அருளிச் செய்தவை அவைகளிற் பல தர்க்கக் குவியலில் மறைந்து அங்குமிங்குமாகச் சிதறிக் கிடக்கும் கருத்து மணிகளையுடையன. அவற்றையறிந்தால் அழகாகப் பலமணி நேரம் வாதிடலாம். எளிதில் மனம் ஓயாது. மகிழ்ச்சி நிலவாது.

உலகியலில் அன்றாடம் அனுபவித்து வரும் காட்சிகளையே புதுப் பெயரிட்டுத் தத்துவம் என்ற பெயரால் அளிப்பன சில. அவற்றால் மனந்திருந்துவதுமில்லை. மீளவும் உலகியலிலேயே உழன்று துன்ப உறையுளாம் நிலை உண்டாகிறது.

கட்டு திட்டக் காவலுக்குள்ளே முள் வேலியின் நடுவிலே வளரும் மணமலர் போல்வதாய், மக்களியல்புக்கு மாறுபட்டதாய் எளிமையில் அனுபவத்திற்கு அவை வராமற் போகின்றன.

மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும், ஏதுக்களாலும் எடுத்துக்காட்டாலும் சோதிக்கத் தக்கதாகவும், உபாயங்களாலும் உண்மை அன்பாலும் எளிமையில் எய்தப் பெறுவதாயும் உள்ள நெறிகள் சில. அவை அனுபவத்திற்கு ஏற்றனவாகின்றன, பாக

இத்தகைய தத்துவ சாத்திரங்களில் இறுதியிற் கூறிய வண்ணம் எளிமையும் இனிமையும் அமைந்தது சைவ சித்தாந்தம் என்பதைச் சமய உலகில் உலாவும் உண்மை ஞானிகள் உணருவர்.

இங்ஙனம் அனுபவத்திற்குரிய சைவ சித்தாந்தம் வேதாகமங்களின் பிழி தேனாக மெய்கண்ட தேவ நாயனாரால் முறைப்படுத்தப் பெற்றது. செந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியிலே சில நிலையங்களாற் போற்றி வளர்க்கப் பெறுவது. 'சைவ சித்தாந்த மென்னும் செந்தமிழ்த் தேன் அருந்தினர் சிலரே.” என்று சிலரால் பயிலப் பெறுவ தாயிற்று.

உலகம் பல மொழிகளைப் பேசும் பலவகைப் பண் பாடுகளைப் பெற்ற மக்கட் சமுதாயம். உலக முழுவதும் ஒரு கொள்கை பரவ வேண்டுமானால் அவரவர் மொழியில் அவ்வப் பண்பாடுகளோடு கலந்து இயங்கினாலன்றி எளிதிற் பரவாது. சைவ சித்தாந்தமோ வடமொழியுந் தென்தமிழுமாகிய இரண்டிலே இடங்கொண்டு, கோயில்களும் - தோத்திரங்களும் - பூசைகளும் ஆகிய கலை யாசா ரங்களிற் கலந்து நின்று விட்டது. இக்கொள்கை உலக மக்கள் உள்ளத்திற் குடிகொள்ளச் செய்ய வேண்டுமா யின் முதலில் அவரவர் மொழியில் உருவெடுக்க வேண்டும். அவரவர் உள்ளத்திற்புகுந்து கோயிலும் வழிபாடும் பயிற்சியும் தெளிவுமாகிய அநுபவ நெறிகளாக அமைய வேண்டும். இந்த முயற்சி யாரிடமும் தோன்றவில்லை.

திருவருள் முதன் முதலாக நல்லசாமியின் வாயிலாகத் தான் தோன்றச் செய்தது. ஜெ. எம். நல்லசாமிப்பிள்ளை யவர்கள் சைவ சித்தாந்தம் உலகெங்கும் வாழ வேண்டும் என்ற கொள்கைக்காகவே தோன்றியவர்கள் எனலாம்.

அவர்கள் 1893 ஆம் ஆண்டில் சிவஞானபோதம் முழுதையும் மூலத்தோடு ஒட்டி மொழி பெயர்த்துத் தந்தனர். பின்னர் 1897-ல் முறையே சிவஞான சித்தியாரும் திரு வருட்பயனும் மொழி பெயர்க்கப் பெற்றன. அவை தமிழ்ப் பேரறிஞர்களும் சித்தாந்தக் கருத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளப் பேருதவியாக இருந்தன எனில் பிற எனநாட்டவர்களுக்கு எங்ஙனம் பயன் தந்திருக்கும் என்ப தைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ!

நூல்கள் வாயிலாகப் பரப்புவது மட்டும் போதாது. பத்திரிகைகள் மக்களுடைய அன்றாட வாழ்வில் தொடர்பு கொள்வன. ஆதலால் அவற்றின் மூலம் மக்களோடு நெருங்கிய சைவ சித்தாந்தத் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்று பிள்ளையவர்கள் கருதினார்கள். 1897 ஆம் - ஆண்டிலே - Siddhanta Deepika' என்ற பத்திரிகை யொன்றை ஆங்கிலத்தில் தொடங்கினார்கள். தமிழிலும் சித்தாந்த தீபிகை என்னும் பெயருடன் நடத்தினார்கள். இரண்டிலும் திருமந்திரம், சைவ சமய நெறி, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம் முதலான நூல்கள் அவ்வம் மொழிகளில் விளக்கங்களுடன் வெளிவந்தன. நீலகண்ட பாஷியமும் ஆங்கில மொழி பெயர்ப்புடன் இப்பத்திரிகையின் வாயிலாக வெளிவந்தது. இம்முயற்சி வெளிநாட்டுப் பேரறிஞர்களின் கருத்தைச் சைவ சித்தாந்தத்தில் ஈடுபடுத்தியது. தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் இப்பத்திரிகை செய்த தொண்டினால் ஆங்கிலேயர் பலரும் சைவ சித்தாந்தத்தின் உயர்வை யுணர்ந்தனர்.

சைவ சித்தாந்த சாத்திரப் பயிற்சி வாழ்விற்கு ஓட்டியதா என்ற ஐயம் அயல்நாட்டுப் பேரறிஞர்களுக்கு இருந்ததாகப் பிள்ளையவர்கள் உணர்ந்தார்கள். அதற்காகப் பெரிய புராணத்தில் பேசப் பெறும் நாயன்மார்களின் வரலாறுகளையும் அவற்றால் உணரப்பெறும் சித்தாந்த உண்மைகளையும் தொகுத்தும், விளக்கியும் Indian Patriat என்ற பெயருடன் சித்தாந்த தீபிகையில் எழுதி வந்தார்கள். அதனால் அயல் நாட்டவர்கள் சாத்திரமாகிய இலக்கணத்தையும் சரித்திரமாகிய இலக்கியத்தையும் இணைத்து அறிந்து இன்புற்றனர்.

இந்திய நாட்டிலேயே வடபகுதியினர் சைவ சித்தாந்த மரபை நன்கு அறிந்து கொள்ள வில்லையே என்ற ஏக்கம். பிள்ளையவர்கட்கு இருந்தது. அதனால் பலமுறை நாடுகளில் நடக்கும் சமய மாநாடுகளிற் பங்கு பற்றிச் சித்தாந்தச் செந்நெறியைப் பரப்பி வந்தனர்.

இவர்களுடைய சமயத்தொண்டு Pro. மாக்ஸ்முல்லர், Dr. G. U. போப் போன்ற பல அறிஞர்களின் மனத்தைக் கவர்ந்தது பிள்ளையவர்கள் மொழி பெயர்த்த திருவுந்தி யார், உண்மை விளக்கம், வினா வெண்பா, கொடிக் கவி, இருபா விருபஃது முதலிய நூல்களையும் படித்து அவர்கள் பாராட்டி எழுதி யிருந்ததாகக் கேள்வி,

சைவ சித்தாந்த மகாசமாசம் தோன்றுவதற்குச் சிறந்த காரணகர்த்தராக இருந்தவர்கள் நமது பிள்ளையவர்களே. சமாசம் மாதம் ஒருமுறையும், ஆண்டுக்கு ஒருமுறையும் கூடிய சித்தாந்தப் பயிற்சியையும், அனுபவங்களையும் உறுப்பினர் ஒவ்வொருவரும் கலந்து பேசியும் இருந்து காட்டியும் நிலையையுயர்த்திக் கொள்ளும் ஒரு சாதனக் கூடமாக விளங்க வேண்டும் என்ற நோக்கு அவர்கட்கு இருந்தது; வெளியீடுகளும் பேச்சுக்களும் அதற்குச் சாதனமாக அமைய வேண்டும் என்ற கொள்கை அவர்கள் அடி மனத் தெண்ணம் என்று அவர்களோடு நெருங்கிப் பழகிய கனக சபாபதி பண்டாரத்தையா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இங்ஙனம் சைவ சித்தாந்தத்திற்கு உயிர்த் துணையாய் இருந்த பிள்ளையவர்கள் முயற்சியே ஓரளவு அயல் நாட்டார் நம் கொள்கைகளை அறிந்துய்யக் காரணமாக இருந்தது. இத்தகைய பெருநன்றியை நம் சைவ மக்களுக்குச் செய்த பிள்ளை யவர்களைச் சைவ உலகம் மறந்துவிடக் கூடாது. நன்றி மறப்பது நன்றல்ல. அவர்கள் தோன் றிய நாளே சைவ சித்தாந்தத்தின் விளக்க நாள். அத னைத் தொடர்ந்து சிந்திக்க வேண்டியது சைவர் கடமை. பிள்ளையவர்கள் 1864-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ஆம் நாள் தோன்றினார்கள். 1964-ஆம் ஆண்டு நவம் பர் 24 நூறாண்டு நிறைவெய்துகிறது. அவர்கள் நினைவை நெஞ்சழுத்த நூற்றாண்டு விழாக் கொண்டாட வேண்டுவது சைவ நன் மக்கள் கடமை.

அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் திருக்கயி லாய பரம்பரை தருமபுரா தீனத்து குருமகா சந்நிதானமாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் பதிப்புரிமையுடன் விலைக்கு வாங்கினார்கள். அவற்றுள் சித்தாந்தத் திரயம். (Studies in Saiva Siddhanta) என்னும் நூல்களும், சிவஞான சித்தி யார் சிவஞான போதங்களும் வெளிவந்தன. சித்தாந்த தீபிகை கட்டுரைகள் பல வெளிவந்தன. ஏனையவும் வெளி வர இப்போது ஞானபீடத்து எழுந்தருளி யிருக்கும் குரு மகா சந்நிதானம் அவர்கள் திருவருள் பாலிக்க வேண்டும். சித்தாந்த சமயம் உலக சமயமாகி ஒளிரத் திருவருள் விளக்கம் வேண்டும்.
பிள்ளையவர்கள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அக்காரியங்கள் நிறைவெய்த ஆனந்தக் கூத்தப்பெருமான் அருள் சுரப்பாராக!

சித்தாந்தம் – 1964 ௵ - டிசம்பர் ௴


No comments:

Post a Comment