Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்
பொறுப்பும் ஆற்றலும்.

"அரியவொன் றாகாததில்லை பொய்ச்சாவாக்
கருவியாற் போற்றிச்செயின்.”

ஒரு காரியத்தை அது சிறியகாரியமாயினுஞ்சரி. பெரியகாரியமாயினுஞ்சரி நான் இதனைச் செய்து முடிப்பேன் என்று உறுதிசெய்து கொள்வதால் ஒருவனுக்கு ஆற்றல் மிகுதிப்படுகின்றது. அதனைச் செய்து முடித்துத் தீரவேண்டும் என்னும் தீராத ஆவலால் அவனுள்ளத்தில் சிதறுண்டு கிடக்கும் சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உறுதியளிக்கின்றன. இனி, அவன் அதனைச்செய்து முடிப்பேன் என்று பொறுப்பேற்றுக் கொள்வதாலும் அவனுக்கு ஆற்றல் மிகுதியாகின்றது.

ஒரு காரியத்தைச் செய்து முடித்துத் தீரவேண்டும் என்று ஒருவன் செய்துகொள்ளும் உறுதியான தீர்மானத்தாலும், ஒரு காரியத்தைச் செய்து முடிக்கும் பொறுப்பை ஒருவன் ஏற்றுக்கொள்வதாலும் ஒருவனுக்குச் சக்தி பெருகுகின்றது. பெருங்காரியத்தின் பொறுப்பு ஒருவனுக்கு ஏற்படுவதால் அவனுக்கு அறிவும் ஆற்றலும் பெருகுகின்றது.

லண்டன் நகரத்துக் கோபுரங்களின் மீது ஏறிக் குரங்குபோலக் குந்தியிருந்தும், சாக்கடைகளில் குறுக்கே படுத்து நீரைப் பெருக்கி அதனாற் கடைக்காரருக்கு இடைஞ்சல் விளைத்து அவர்களிடம் சிறுபொருள் பெற்றுச் சிற்றுண்டி வாங்கித்தின்றும், இன்னும்பல சிறுதொழில்கள் புரிந்தும் ஒன்றுக்கும் உதவாத சிறு பயல் என்று பெற்றோரால் வெறுக்கப்பட்டு, இவன் கணக்கில் சேராத பிள்ளை என்று இந்தியாவுக்கு அதிஷ்டம் போல் நடக்கும் என்று அனுப்பப்பட்ட ‘க்ளைவ்' என்னுந் துஷ்டப்பையன் பிற்காலத்தில் இந்தியாவில் மகத்தான பிரிட்டிஷ் இராஜாங்க ஸ்தாபனத்திற்கு மூல புருஷனா யிருந்தமை, ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நம்மால் புறக்கணிக்கப்படும் சிறுவர்களிடம் அமைந்து கிடக்கும் அற்புத அபார சக்தியைக் காட்டுகின்ற தன்றோ? மூன்று பவுன் சம்பளத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக வந்த “ராபர்ட் கிளைவ்” இந்தியாவில் செய்த பெரிய வேலைகள் இன்னும் ஆச்சரியத்துக் குரியனவாயிருக்கின்றனவே. மேசையிலே இருந்தெழுதும் சிறிய குமஸ்தாவாக வந்த ராபர்ட்கிளைவ் லார்ட் கிளைவ் வாகித் தேசாதிபதியாக இங்கிலாந்துக்குத் திரும்பிய சரித்திரத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும், ஒன்றுக்கும் உதவாதவரென்று கருதப்படுஞ் சாதாரண மனிதர்களிடம் எவ்வளவு அபாரமான சக்தி அமைந்து கிடக்கின்ற தென்பதைத் தெளிவாக அறியலாம். ஐரோப்பா முழுமையுங் கலங்குமாறு செய்த நெப்போலியன் சக்கரவர்த்தி சிறிய கார்ச்சிகத் தீவின் சிறுவனன்றி வேறென்ன?

உறுதியான நோக்கமுங் கலங்காத நெஞ்சமும் தளராத முயற்சியும் உலகத்தில் எந்த மகத்தான காரியத்தைத்தான் செய்து முடித்து விடாது? ஒரு காரியத்தை நீ செய்யவேண்டிய சந்தர்ப்பம் நேரும் வரை நீ என்ன செய்யமுடியும், என்பதை நீ அறிய முடியாது. உலகத்திலுள்ள பெரிய மனிதர்களிற்பலர் தங்களுக்குரிய அனைத்தையும் இழந்து அல்லது பெரிய துரதிஷ்டம் அவர்களுக்குச் சம்பவித்த பின், இனி என்ன வழி யென்ற கவலை சேர்ந்த ஆவலால் தங்கள் அபார ஆற்றலை உணர்ந்தனர்.

மிகுந்த அவஸ்யம் நேரிடுவதால் சில காலங்களில் நாம் சாதாரண காலங்களிற் செய்யாத பெருங்காரியங்களைச் செய்து முடித்து விடுகின்றோம். ஒரு பெரும் பேரில் வென்று ஜெயசீலனாய் வரும் போர்வீரனை விட, அளவற்ற சகித்தற்கரிய கஷ்டங்களையும் நிர்வகித்துத் தனது நோக்கத்தை நிறைவேற்றுபவன் பெரிய சுத்த வீரனாவான். கஷ்டங்களைப் பொறுமையுடன் எதிர்ப்பதால் ஆற்றல் பெருகின்றது. சிலரது அபார ஆற்றலும் சாமர்த்தியமும் எதிர்பாராத சம்பவங்கள் நேர்ந்தபொழுது தான் வெளியாகின்றன. ஐரோப்பா யுத்தமும் ஏற்படாமல் ஜர்மனியர் பெல்ஜியத்து மீது படையெடாமலும் இருந்திருப்பின் பெல்ஜிய நாட்டுச்சனங்களின் பெரும்பராக்கிரமம் வெளிப்பட் டிருக்குமா? சந்தர்ப்பமும் சமையமும் கிடையாமையால் குடத்தினுள்வைத்த விளக்குப்போல இருப்போர் நம்மில் அநேகர் போர் நடவாத காலங்களில் யுத்தவீரரின் வீரபராக் கிரமங்கள் வெளிப்படுவதில்லை. அதனால் தீரமிகுந்த போர்வீரர் இல்லை யென்று கொள்ளலாமா? அதுபோலவே ஒவ்வொருவருள்ளும் அபாரமான அற்புதசக்தி அடங்கிக் கிடக்கின்றது. ஆலமரம் வித்துனுள் உறங்குவது போல அண்டங்களை ஆளும் அற்புத மனித சக்தியும் அவனது அகத்தில் அநேகமாய் அவனுக்குத் தெரியாமலே அடங்கிக் கிடக்கின்றது.

அநேகருக்குப் பிறர் உதவி இருக்கும் வரை தங்கள் ஆற்றல் வெளிப்படுவதில்லை. எங்கள் தகப்பனார் இறந்து போனால் எங்கள் குடும்பமே ஒழிந்துபோகும் என்று கூறும் புத்திரர்கள் அவர் மரணகாலத்துக்குப் பின் குடும்பச் சுமையை ஏற்று அறிவாற்றலோடு நடத்தி வரக் காண்கின்றோம் அன்றோ? தாயாற் கவனிக்கப்படாத பறவைக் குஞ்சு விரைவிற் பறக்கத் தொடங்குகின்றது.

எதிர்பாராத சம்பவங்களால், திடீரென்று ஒரு பெரும் பொறுப்பை வகிக்க நேரும் பொழுது பிரதமத்திற் பேய் போல் விழிப்பவர்களில் எத்தனைபேர் பொறுப்பேற்றபின் ஆற்றலுடையவர்களாய் விடுகின்றனர்? அறிவும் ஆண்மையும் பெருகுவதற்குப் பொறுப்பு மிகுதியுந் துணை செய்கின்றது. ஒரு காரியத்தை அவசியஞ் செய்து தீரவேண்டிய பொறுப்பால் அநேகர் ஆற்றலுள்ளவர்களாகின்றனர். பொறுப்பு ஆற்றலை வளர்க்கின்றது. சிலர் எமக்குப் பொறுப்பற்ற சிறிய வேலைகள் வேண்டும் என்கின்றனர். இவர்களுக்கு அறிவும் ஆற்றலும் விர்த்தியாகப் போவதேயில்லை சிறிய முயற்சிகளிலும் பிறரிடந்தாழ்ந்த வேலைகளிலும் உள்ளவர்களுக்கு ஆற்றல் விர்த்தியாவதேயில்லை. அவர்களுக்குத் தங்கள் ஆற்றலைப் பரீட்சிக்குஞ் சம்பவம் நேர்வதேயில்லை. அதனால் அவர்கள் ஆற்றல் வெளிப்படுவதேயில்லை. அவர்கள் எப்பொழுதும் மற்றவர் சொல்வதையே யந்திரங்கள் போலச் செய்து கொண் டிருக்கிறார்கள். தனித்து நிற்கவோ, தாமாக ஒரு காரியத்தைப்பற்றிச் சிந்திக்கவோ, ஒரு காரியத்தை ஸ்வயமாகச் செய்யவோ அவர்கள் படிக்கவில்லை.

நமது அபாரசக்திகளும் ஆற்றல்களும்; பூமியின் வெளியே தோன்றி வளரும் மரங்கள் போலன்றி, கோலாருள் பூமிக்குள் நாள்தோறும் பெருகி வளர்ந்து மறைந்து கிடக்கும் தங்கக்கனிகள்போல, நமது அகத்தில் அபரி மிதமாக மறைந்து கிடக்கின்றன. அவற்றை அடையுமாறு நாம் முயற்சி செய்வதேயில்லை. நமது சித்தம் விரும்பியது எதனையும் பெறுமாறு கடவுள் நமது சித்தத்தில் எல்லாச் சக்திகளையும் அடக்கி அமைத்து வைத்திருக்கின்றார்.

பிறரது அபாரசக்தியைப் பார்த்து ஆச்சரியப்படும் நாம் நம்மிலும் அந்தச் சக்தி அடங்கிக் கிடக்கின்ற தென்பதை அறியவேண்டும். ஒழுங் கான அப்பியாசத்தினால் நாம் நமது ஆற்றல்களை வளர்க்கலாம்.

ஒரு பெரிய காரியத்தின் பொறுப்பு ஒருவனுக்கு ஏற்படும் பொழுது அவனுக்குத் தன்னை வளர்க்கும் முயற்சி ஏற்படுகிறது. அவன் அகத்தில் அடங்கிக் கிடக்கும் ஆற்றல்களெல்லாம் வெளிப்படுகின்றன. “இந்தவேலைக்கு அவர்தான் சரி; என்னால் ஆகாது" என்று கூறும் எனது சகோதரனே, ஒரு பெருங் காரியத்தின் பொறுப்பு உனக்கு ஏற்படும்பொழுது அதனைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்; உனது ஆற்றலை நீ அறிந்து அடைவதற்கு அது தக்க துணையாகும்.

பாரதி.

சித்தாந்தம் – 1916 ௵ - செப்டம்பர் ௴


No comments:

Post a Comment