Saturday, May 9, 2020



பாவம் தீரும் வழி
[மதுரைத் திருவருள் தவநெறி மன்ற வெளியீடு.]

உலகிலுள்ள எல்லோரும் தெரிந்தோ, தெரியாமலோ பாவகருமங்கள் செய்ததினாலேயே இங்கு வந்து பிறக்கிறோம். குற்றம் செய்யாதவர்கள் சிறைச்சாலைக்குள் சென்று, அங்கு எவ்விதத் தண்டனையும் அனுபவிக்க வேண்டியதில்லை அல்லவா? அதேபோலப் பாவம் செய்யாதவர்கள், தாயார் வயிற்றில் பத்துமாதங்கள் சிறைப்பட்டிருக்கவும், இப்புவியில் பிறந்து துன்பம் யாதும் அனுபவிக்கவும் வேண்டியதில்லை. அதனாலேயே உண்மையை உணர்ந்த பெரியவர்களெல்லாம், திரும்பவும் இப்புவியில் பிறவாதிருக்க வரந்தால் வேண்டும் என்று இறைவனிடம் தவங்கிடந்தும், நோன்பிருந்தும், வேண்டுதல் செய்தும் வந்திருக்கிறார்கள்.

அவர்களில் 81 வயதுவரை வாழ்ந்திருந்த, முதிர்ந்த அனுபவமுடைய திருநாவுக்கரசு சுவாமிகள் துன்பம் தரும் பிறப்பையறுக்கச் சுலபமான வழி இன்னதென்று கீழ்வருமாறு அருளியிருக்கிறார்: -

"திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறம் ஒருகால் பேசா ராகில்
ஒருகாலும் திருக்கோயில் சூழா ராகில்
உணபதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்
அருநோய்கள் கெடவெண்ணீறு அணியாராகில்
அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே."

இத்தேவாரத்தில் பிறவிப் பிணியைப் போக்குவதற்கு நாம் ஐந்து காரியங்கள் செய்ய வேண்டும் என்கிறார். முதலாவது, மனத்தினால் செய்த பாவம் தீர ஆண்டவனது திரு நாமமாகிய திரு ஐந்தெழுத்தைச் சொல்ல வேண்டும்; இரண்டாவது, வாக்கினால் செய்த பாவம்தீர, ஆண்டவனது பெருங் கருணையையும், பேராற்றலையும், பிழை பொறுக்கும் தன்மையையும் விவரிக்கின்ற தேவாரப் பதிகங்களை வாயினால் பாடவேண்டும்; மூன்றாவது, உடம்பினால் செய்த பாவகருமங்கள் தீர ஆண்டவனது திருக்கோயிலை உடல் வருந்தும்படி வலம் வரவேண்டும்; நான்காவது மனம், மொழி, மெய், என்ற மூன்றாலும் செய்யக்கூடிய பூஜையை முடித்த பின்னரே உணவு அருந்த வேண்டும்; (இது அவரவர்களது வீடுகளில் நடைபெற வேண்டிய தாகும்.) ஐந்தாவதாகத் தொத்துநோய்க் கிருமிகளைக் கொன்று வியாதிகளை நீக்கக்கூடியதும் உடல் நாற்றத்தைப் போக்கக்கூடியதும், பாவங்களைத் தீர்க்கக் கூடியதும், அழகைக் கொடுக்கக்கூடியதும், ஞாபக சக்தியைத் தரத்தக்கதுமான திருநீறு அணிய வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் இந்த ஜென்மத்தில் செய்த பாவம் இந்த ஜென்மத்திலேயே பரிகரிக்கப்பெற்று, பிறவியற்ற நிலை எய்தி, பேரின்பப் பெருவாழ்வு வாழலாம்; அவ்வாறு செய்யாதவர்களெல்லாம் பலபெரு நோய்களால் பீடிக்கப் பெற்று இறந்துகொண்டும், பிறந்துகொண்டுமே இருப்'பார்கள் என்று கூறுகிறார்.

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை, வெள்ளிக் கிழமைகளிலும் இரவு 7 - 30 மணிக்கு அம்மன் சந்நிதியிலிருந்து திருநீற்றுப் பதிகத்தையும் திருஐந்தெழுத்துப் பதிகங்களையும் ஓதிக் கொண்டு, நான்கு ஆடிவீதிகளையும் வலமாக வந்து, சுவாமி சந்நிதியில் பிற திருமுறைகளை ஓதியபின் திருப் புகழைப் பாடிக்கொண்டு, திரும்பவும் அம்மன் சந்நிதிக்கு வந்து 9 மணிக்கு அதனைப் பூர்த்தி செய்து, விபூதிப் பிர சாதம் பெற்று அதனை அணிந்து கொள்வதால், அப்பர் பெருமான் அருளிய ஐந்து காரியங்களில், நான்கு காரியங்கள் பூர்த்தியாகிவிடுகின்றன. ஒருவருஷத்தில் (52 வாரங்களில்) வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் 104 நாட்கள் பாடிக்கொண்டே கோயிலை வலம் வந்துவிடுவதால், அது பெரியதோர் பிராயச்சித்தமாக அமைந்துவிடுகிறது. வீடுகளில் பூசை செய்த பின்னரே உணவு அருந்துகின்ற நியதியை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்கள் ஐந்து காரியங்களையும் ஒருசேரச் செய்யப் பெற்றவர்களாகி விடுகின்றனர்,

அவ்வாறு செய்கின்றவர்கள் நூற்றுக்குநூறு மதிப்புள்ள எண்களுடன் பிறவிப் பிணியைத் தவிர்க்கின்ற வர்களாகி விடுகின்றார்கள். அவ்வாறு பூஜை செய்து' உணவு உண்ணும் நியதியில்லாதவர்களும், மேற்கண்ட ஐந்தில் நான்கு காரியங்கள் செய்தவர்களாகி நூற்றுக்கு எண்பது மதிப்புள்ள எண்களுடன், பிறவிப் பிணியைத் தவிர்க்கின்றவர்களாகி விடுகின்றார்கள். திருவள்ளுவரும்

"கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி''

என்று அருளியிருக்கின்றார்.

இதில் "இம்மக்கட்பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அநுபவமுடைய தேசிகர் பால் கேட்டு, அதனால் மெய்ப்பொருளை உணர்ந்தவர் மீண்டும், இப்பிறப் பின்கண் வாராத நெறியைப் பின்பற்றுவர்'' என்கிறார்.

இதனை நடைமுறையில் செய்து வருவதற்காகவே ஞாயிற்றுக் கிழமைகளில் இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும், திங்கட்கிழமைகளில், ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வர சுவாமி கோயிலிலும் புதன், வியாழன், சனி, ஆகிய மூன்று கிழமைகளிலும், மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீன மடாலயத்திலும் கூட்டு வழிபாடுகளும், சமயச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. அவற்றில் ஈடுபட்டுக் கூட்டு வழிபாடாற்றி அனுபவ மொழிகளைக் கேட்கின்றவர்கள், மேலே சொன்ன ஐந்து காரியங்களில் மூன்று காரியங்களைச் செய்தவர்களாகி, நூற்றுக்கு அறுபது மதிப்புள்ள எண்களுடன் பிறவிப் பிணியைப் போக்கக் கூடியவர்களாகி விடுகின்றார்கள்.

இந்த ஜென்மத்தில் எப்பேர்ப்பட்ட பாதகங்களைச் செய்திருந்தாலும் அவற்றைச் செய்தது தவறென்று உணர்ந்து அப்பாவங்களை நீக்கிக்கொள்ள விரும்பினால், அவற்றைச் செய்த அந்த உடலைக் கொண்டே அவற்றிற் குரிய பிராயச் சித்தம் செய்து நீக்கிவிடலாம் என்பது ஆண்டவனது நியதி! மதுரையில் நடந்த 64 திருவிளையாடல்களில் மாபாதகம் தீர்த்தபடலம் அதற்குப் போதிய சான்றாகும்!

ஆதலால் இந்த ஜென்மத்தில் மனத்தால், வாக்கால், உடலால் செய்த எப்பெற்றிப்பட்ட பாவங்களையும், இந்த உடல் அழிவதன் முன்னரே நீக்கிக் கொள்ளவேண்டிய அவசியத்தை உணர்ந்த அறிவுடைய இருபாலாரும், எத்தனை வயதுள்ளவராக இருந்தாலும், ஆடிவீதிப் பாராயணத்திலும் மேலே சொன்ன விபரப்படி ஆலயங்களிலும் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதின மடாலயத்திலும் நடைபெறுகின்ற கூட்டு வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும், தினமும் கலந்து ஈடுபட்டால், திருவருளாலும் குருவருளாலும் பாவ நீக்கம் பெற்றுத் திகழலாம்.

வேறு ஊர்களிலுள்ள சைவ அன்பர்களும் தத்தம் ஊர்களில் உள்ள கோயில்களில், இம்முறைகளைத் தழுவி இறைவனை வழிபட்டு நலம் பெறலாம். நம் சமய வளர்ச்சிக்கும், ஆன்ம ஈடேற்றத்திற்கும் ஆங்காங்கே வார வழிபாடு - கூட்டு வழிபாடு, குடும்ப வழிபாடு ஆகிய முறைகள் பரவ வேண்டு வது மிகமிக இன்றியமையாததாகும்.

சித்தாந்தம் – 1962 ௵ - அக்டோபர் ௴


No comments:

Post a Comment