Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
பகுத்தறிவு.

பகுத்தறிவென்பது விதிவிலக்குகளை உணரச்செய்யும் அறிவாகும். மனிதன் ஏனைய ஜீவராசிகளினும் மேம்பட்டவனெனப் பெருமையுற்றது பகுத்தறிவினாற்றான். பனிதனை யொழிந்த ஏனைய ஜீவராசிகள் தத்தம் இனத்தின் பொது லட்சணமாயிருக்கும் இயற்கை யறிவிற்கேற்றபடி கருமங்களைச் செய்து வருகின்றன. மனிதனோ தன்னுடைய பகுத்தறிவுக் கேற்றபடி காரியங்களை நிர்வகித்து வருகின்றான். அவரவர்களின் பகுத்தறிவுக் கேற்றவாறு அபிப்பிராயங்களும் அமைகின்றன. பகுத்தறிவை அதிகமா யடையப் பெறாதவர்கள் பெரும்பாலும் கல்வியறிவற்ற மிலேச்சர்களே. அவர்கள் செய்கைகள் யாவும் விலங்குபுள் ஆதியவற்றின் செய்கை களை ஒத்திருக்கும். மனிதனுடைய பகுத்தறிவு அவன் சார்ந்திருக்கும் இனத்துக்கேற்றபடி யிருக்கிறதென்றும், அவனுக்கு இயற்கையில் பகுத்தறி வென்பது கிடையாதென்றும் சில மனோதத்துவ சாஸ்திரிகள் சாதிக்கிறார்கள். அவர்களங்ஙனம் கூறுவது மோட்சவீடடைதற் குரிய மெய்யறிவையே. ஆயின் பகுத்தறிவு வேறு மெய்யறிவு வேறோ வென்னில் சாதாரணமான விடயங்களைப் பாகுபாட்டோடுணர்வது பகுத்தறி வென்றும், மோக்ஷ நிலையை உள்ளபடி உணர்வது மெய்யறிவென்றும் கூறுவது அவர்களியல்பு. இதனை “ஐயறிவறிந்தவை யடங்கினரேனு மெய்யறிவிலாதவர்கள் வீடது பெறாரே'' என்னும் ஆன்றோர் வாக்கானுங் காணலாம். ஆதலால் அவர்களுறைப்பதும் முற்றும் பொருத்தமற்ற தென்றுரைக்கலாகாது. மனிதனுடைய இயற்கையறிவு இனத்துக் கேற்றபடி திருந்துவதாயிருக்கிற தென்பது மாத்திரம் வாஸ்தவமே. இக்காரணம் பற்றியே சீர் படவேண்டிய ஒவ்வொருவரும் சன்மார்க்கசங்கத்தைச் சார வேண்டுமென்றும், நல்லாரோடிணங்க வேண்டு மென்றும், தீயார்சார்பைத் திரஸ்காரம் பண்ணவேண்டுமென்றும் ஆன்றோர் பலருங் கூறியுள்ளார். பகுத்தறிவு பழக்கத்திற் கேற்றபடி திருந்துகிற காரணத்தினாலேயே அத்தகைய அறிவு இயற்கையில் மனிதனிடத்தில்லையென்று சாதிப்பது நியாயவாதத்தில் நிலைக்காது. ஏனெனினில் “இணக்க மறிந்திணங்கு'' என்பது முதலிய சுபோத வசனங்களை யூகித்தறியுமிடத்து மனிதனிடத்தில் இயற்கையிற் பகுத்தறிவமையா திருக்கின் ஆன்றோர்கள் 'அறிந்திணங்கு' என்பது முதலிய கட்டளைகளையிட்டிரார்களே. ஆகையால் ஆன்றோர்கட்கு மனிதரிடத்துப் பகுத்தறிவு இயற்கையிலுண்டென்பதே கொள்கை யென வெள்ளிடைமலை போல் விளங்குகின்றது. அன்றியும் இப்பூவுலகில் ஒவ்வொருவனும் தான் தான் புரியும் சகல கருமங்கட்கும் கடவுளுடைய சந்நிதானத்தில் உத்தரஞ் சொல்ல வேண்டியவனாக விருக்கிறானென்றும், அவ்வொவ்வொருவனும் இவ்வுலகத்திற் புரியும் நற்காரியங்களுக்காகக் கடவுளிடத்திலிருந்து ஓர்வகைப் பரிசு பெறுகிறானென்றும், தீக்காரியங்களுக்காக ஒருவகைத் தண்டனை யடைகிறானென்றும் சர்வ மதவாதிகளும் சம்மதித்துக் கூறுவர். இதனாலும் இயற்கையிற்றானே மனிதனுக்கு நன்மை தீமைகளைப் பாகுபாடு செய்துணரும் பகுத்தறிவைக் கடவுள் படைத்திருக்கிறாரென்பதிற் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் படைத்திரா விட்டால் நன்மைக்காகப் பரிசளிப்பதும் தீமைக்காகத் தண்டிப்பதும் அவர் பட்சத்தில் நீதியற்றனவாய் முடியும்.

ஆயின் அவ்வாறான பகுத்தறி வமையப் பெற்ற மானுடர் யாவரும் நன்மை தீமைகளை நன்றாயுணர்ந்து தீயமார்க்கத்தை யொழித்துச் சன்மார்க்கர்களாகின்றார்களா வென்னில் இப்போது இத்தனை நிமிஷ்ம் இவ்வளவு மணி என்று ஓரிம்மியளவும் பேதப்படுத்தாது தன்னை யுடையவர்கள் கவனியாதிருக்கினும் அழைத்துச் செல்லுவது போல் அப்போதைக் கப்போது அடித்துக் காட்டுகின்ற கடிகாரங்கள் எல்லோரிடத்திலும் மிருக்கினும் அதற்குச் சாவி கொடுக்கவேண்டிய நாட்கணக்சின் படி தவறாது சாவி கொடுத்துக் கொண்டும் சாமான்களைத் துடைக்கவேண்டிய நாட்கணக்கின்படி துடைத்துக் கொண்டும் காப்பாற்றி வருபவர்களுக்கு அக்கடிகாரங்கள் உதவியாவது போல் மேற்கூறிய காரியங்களைச் சற்றுங் கவனியா - தோர்க்கு அக்கடிகாரங்கள் உதவுமா? அப்படியே தத்தமக்கு வாய்ந்துள்ள பகுத்தறி வென்னும் வாளைச் சாத்திர விசாரணைச் சன்மாக்கசங்கச் சார்பு என்னும் சாரணையில் அப்போதைக்கப்போது தீட்டி வந்தால் நாம் சமுசாரமென்னும் காட்டில் காமக்குரோத லோப மோக மதமாச்சரிய மென்னும் மிருகங்கணேர்ந்தபோது அவைகளைத் தக்கபடி துண்டித்து வெற்றி பெற்று நிர்ப்பயமாயுலாவி அக்குடும்பாரண்யானுபவங்களைக் குறை வறக்கைக் கொண்டு குதூகலிக்கலாம். அவ்வாறின்றி அவ்வாளைத் துருப்பிடிக்கச் செய்து வைத்துக் கொண்டிருந்தால் குடும்பாரண்யத்திலுலாவுதல் கூடாது. ஆரண்யத்திலுலாவவே அசாத்தியமான போது அவ்விடத்திற்றானே நிலையாயிருந்து தவம் புரிய நேருமா? நேராது. ஆகவே “இல்லறத்தானல்லேன் இயற்கைத் துறவியல்லேன்'' என்று சொன்னபடி இரண்டுங் கெட்டவராய் உபயப் பிரஷ்டர் என்னும் பட்டஞ்சூடிக் கொள்வோம். ஆகையால் நாம் ஒவ்வொருவரும் நமக்கு வாய்த்துள்ள பகுத்தறிவை அதிக சாக்கிரதையுடனே வெகு விரைவில் மேற்செல்லிய சாணைகளிற்றீட்டிக் கூர்வையுண்டாக்கி வைத்திருக்க வேண்டும் என்பதை உறுதியான வேத வசனமாகக் கடைப்பிடிக்கவேண்டும். ஆயின் சில சமையங்களில் பகுத்தறிவுள்ளவர்களும் நன்மையைத் தீமையாகவும் தீமையை நன்மையாகவும் கொள்ளுகிறார்களேயென்னின், அவ்வாறு மாறுபடக் கொள்வது பகுத்தறிவின் குறைபாடன்று. பகுத்தறிவானது சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் சத்த ஸ்பரிச ரூப ரச கந்தங்களாகிய ஐந்தின் வழியே சென்று தான் பகுத்தறியும். அவ்வைந்துள் எது குறைந்திருக்கின்றதோ அதன் விஷயத்தில் அது பயன்படாது. உதாரணமாக கல்வி கேள்விகளில் மேம்பட்டுச் சாதுசன்மார்க்கப் பழக்க மெய்திய குருடனும் மூக்கடைப்புள்ளவனு மாகிய ஒருவன் அசுத்தமான வஸ்து விருப்பதால் துர்க்கந்தம் வீசும் ஓரிடத்திலுட்கார்ந் திருப்பானாயின் அவனது கேள்விகளையும் சன்மார்க்சங்கப் பழக்கத்தையும் பகுத்தறிவையும் பற்றிப் பழுது கூறுதற் கிடமுண்டோ? இல்லை. ஏனெனில் அங்கு அசுத்த பதார்த்தம் உளதென்பதைக் காண்பதற்குரிய கட்புலனும் துர்வாசம் வருவதென்பதை உணர்தற்குரிய நாசிப்புலனும் இன்மையி னென்க. இதனானன்றோ பிற ஆன்றோரும் "சுவையொளி யூறோசை நாற்ற மென்றைந்தின் வகை தெரிவான் கட்டே யுலகு''  என்றார். ஆதலால் பகுத்தறிவை அதிசாக்கிரதையுடன் கூர்மையாக்கி நம்மிடத்தில் இலைமறை காய்போற் கர்ந்துள்ள துர்க்குணங்களை வேரறக்களைந்து சற்குணங்களைக் கடைப்பிடித் தொழுகுவோமாயின் ஈருலகத்திலும் இதயமகிழ் வெய்தியிருப்பதுடன் கடவுளின் கருணையுடையோராவோ மென்பதற்குச் சந்தேகமில்லை.

இந்துசாதனம்.

சித்தாந்தம் – 1916 ௵ - செப்டம்பர் ௴


No comments:

Post a Comment