Saturday, May 9, 2020



திருவாசகம் - அறுகெடுப்பார்


[ஆசிரியர்]

அறுகெடுத்தல் அல்லது அறுகிடுதல் என்பது, வாழ்த்துதல் (ஆசீர்வாதம் செய்தல்) பூசித்தல் என்பன வாய பல பொருள்களில் இலக்கியத்தில் வழங்கி வந்திருக்கிறது. "தையலார் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவச் சார்ந்தான் (இந்திர ஜித்து)" என்பது கம்பராமாயணம், யுத்த காண்டம் (நாகபாசம் 206) சேக்கிழார் பெரிய புராணம் பாடி முடித்து யானை மீதமர்ந்து வீதியுலா வரும் போது, "ஆரணங்கள் விரித்தோதி, மாமறையோர் எதிர் கொண்டு அறுகெடுப்ப வாழ்த்தெடுத்தார் அரம்பையர்களெல்லாம்'' என்பது திருத்தொண்டர் புராண வரலாறு (88). தீயகனாக் கண்டு மனம் வருந்திய கண்ணகியை எண்ணி தேவந்தி யானவள், சாத்தன கோட்ட மடைந்து அததேவனுக்கு அறுகும், சிறு பூளை மலரும் நெல்லும் தூவிப் பூசித்துக் "கண்ணகி கணவனைப் பெறுக'' என வாழ்த்தினாள் என்று சிலப்பதிகாரம் கூறும்.

“… . …          வாட்டரும் சீர்க்
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை யுண்டென்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் - நண்ணி
அறுகு சிறு பூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனொடு என்றாள்                   (கனாத்திறம் 40 - 44)

குலோத்துங்கனை அரசர் திருவடியில் அறுகிட்டு வணங்கினர் (பூசித்தனர்) என்று கலிங்கத்துப்பரணி (251) கூறுகிறது.

அறை கழல் அரசர் அப்பொழுது
அடிமிசை அறுகெடுத்திட
மறையவர் முடி எடுத்தனர்
மனுநெறி தலையெ டுக்கவே

அறுகிட்டு வாழ்த்துதல், அறுகிட்டு வணங்குதல் என்ற மரபு காலப் போக்கில் அறுகொடு நெல்லும், மலரும் கலந்து இடுதல் என்று மாறிற்று. நெல் அரிசியாகி, அட்சதை இடுதல் என்றும் ஆயிற்று. அறுகும் அட்சதையும், மலரும் கலந்து இட்டு வாழ்த்துதல், அட்சதையிடுதல், அட்சதம் (அக்கதம்) தெளித்தல் என்று உலக வழக்கில் வழங்கக் காண்கிறோம். இவ்வுலக வழக்கை,

திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின் றார்மணப் பந்தலிலே

என்ற தனிப் பாடலில் பாரிமகளிர் திருமணத்தில் அவ்வையார் வாக்காகவும் காண்கிறோம்.

இவ்வழக்கு மணமக்களுக்குப் பொரியிடுதல் என்ற சடங்காக இன்று நடைபெறும் மணங்களிலும் இடம் பேற்றிருக்கிறது,

இனி, அறுகு சிவ்பிரானுக்கு உவப்பான மாலை, " தாளி அறுகாம் உவந்த தார்'' அல்லவா? வெண் தாமரையும், அறுகும் நந்தியும் கலந்து முடித்த கூந்தலோடு பிராமணப் பூதம் தோன்றுகிறது என்று சிலப்பதிகாரம் கூறும். (22; 19 = 20): -

வெண்ணிறத் தாமரை அறுகை நந்தி என்று
இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன்

பார்ப்பனர் மாலையில் அறுகு கலந்து முடிப்பது மரபு போலும்.

மன்னிய பனுவற் பார்ப்பன முதுமகன்,
அந்தணர் ஆவிரை அலரும் அறுகையும்
நந்தி வட்டமும் இடையிடை வலந்த  
கோல மாலை நாற்றி.
என்பது பெருங்கதை (2 : 3 : 30 - 33)

அறுகையும் குவளை யையும் கதிரொடு கலந்து மாலை யாக ஏருக்கும் சூட்டி உழவர் உழத் தொடங்குவர். இது ஏர் மங்கலம் எனப்படும்.

கொழுங் கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டி
ஏரொடு நின்றார் ஏர் மங்கலமும்''
என்பது சிலப்பதிகாரம் (10 : 130 - 5)

நானந் தோய்த்த நறுமலர்க் கூந்தலுள்
ஆனைந்து தெளித்த நீரிடை மூழ்கி
ஆவிரை அலரும் அறுகையும் செரீஇ             ( 1 : 40 : 265 -?)

அறுகம் புல்லைப் பசுவுக்குத் தீனியாகத்தருதல் புண்ணியம்:

பல்லேற்ற பரிகலத்துப் பலியேற்றல் மேலிட்டு
வில்லேற்ற முலைமகளிர் மனமேற்ப வருதிரால்,
வில்லேற்ற முலைமகளிர் மனமேற்ப நீர்வருங்கால்
கொல்லேற்றிற் கறு கிடலும் கொள்ளுமோ கொள்ளாதோ!

என்பது தொல்காப்பிய உரையில் மேற்கோளாக வந்துள்ள ஒரு பெருந்தேவபாணிப் பாட்டின் பகுதி.

இதுவரை அறுகெடுத்தல் பற்றி இலக்கியத்தில் பயின்றுள்ள சில கருத்துக்களைக் கண்டோம்.

- (2) –

திருவாசகத்தில் ஒன்பதாம் பதிகம் திருப்பொற் சுண்ணம். அதன் ஐந்தாம் பாடல் பின்வருமாறு: -

அறுகெடுப்பார் அயனும் அரியும்
அன்றி மற்றிந்திரனோடு அமரர்
நறுமுறு தேவர் கணங்களெல்லாம்
நம்மிற்பின் பல்லது எடுக்க ஒட்டோம்
செறிவுடை மும்மதில் எய்தவில்லி
திரு ஏகம்பன் செம்பொற் கோயில் பாடி
முறுவற் செவ்வாயினீர் முக்கணப் பற்கு
ஆடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே,

இந்தப் பாடலின் தொடக்கமாகிய "அறுகு எடுப்பார்''  என்னும் தொடரின் கருத்து இன்னும் தெளிவு பெறாமலே இருக்கிறது, பலருடைய கருத்தையும் ஆராய்ந்து, இத் தொடரின் பொருள் யாது என்று நாம் ஒருவாறு வரையறை செய்ய முயல்வோம்.

''முறுவலையுடைய சிவந்த இதழ் அமைந்த தோழிப் பெண்களே! பிரமனும், திருமாலும் அல்லாமல் மற்ற இந்திரன் முதலான எல்லாத்தேவர்களும் நம்மீது பொறாமையினாலே நறுமுறித்துக் கொண்டு, அறுகெடுக்க விரும்பி வருகின்றார்கள். ஆனால் அவர்களை நமக்குப் பிந்தச் செய்து நாமே முந்தி அறுகெடுப்போமாக. ஆதலால் முதலாவதாக நாம் இப்போது வலிமை செறிந்த முப்புரங்களை எய்தெரித்த வில்லேந்திய திருவேகம்பப் பெருமானுடைய செம்பொன் வேய்ந்த திருக்கோயிலின் புகழைப் பாடி, நம் முக்கண் அப்பன் ஆகிய இறைவன் நீராடுவதற்குப் பொன்னொத்த சுண்ணத்தை நாம் விரைந்து சென்று இடித்து முடித்து வருவோமாக'' என்பது இப்பாடலின் நேரான பொருள்.

அறுகெடுப்பார் என்பதற்கு முதன் முதலில் (1897) குடவிளக்கேந்துவார் என்றே பட்டினம் வாசுதேவ முதலியார் பதிப்பித்த (1897) சில வித்துவான்களால் இயற்றப் பட்டவுரையிலும் (ரிப்பன் பிரஸ்) காணப் படுகிறது.

பிருங்கி மாநகரம் ராமசாமி முதலியார் பதிப்பித்த உரையில் பிரமனும் திருமாலும் அறுகெடுப்பவராவார். அறுகு குடவிளக்கு முதலாயின'' என்ற உரை காணப் படுகிறது. 1906 - ல் விரிவாகக் குறிப்புரை எழுதிய சோளிங்கபுரம் சிவ - அருணகிரி முதலியாரும், குடவிளக்கு எடுப்பார் என்றே எழுதியுள்ளார். 1907 இல் வெளி வந்தது. நெ. முருகேச முதலியாரிடம் பாடம் கேட்டவாறு பா. மாசிலாமணி முதலியார் எழுதிய உரை. இங்கு குட விளக்கு முதலியன எடுப்பவராவார்; அறுகு - அறுகம் புல்லெனினுமாம் என்பது உரை.

அறுகு - மங்கல விளக்கு, சிங்கம் முதலியன எழுதிய கொடி யென்றும் கூறுப; அறுகம் புல்லெனின் அதுவும் ஒரு மங்கலப் பொருளாக எடுக்கப் படுதல் வேண்டும் என்பது கா. சுப்பிரமணிய பிள்ளை உரை, அறுகு அறுகம் புல்'' என்பது சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் அரும் பொருள் விளக்கம். அறுகு - மங்கல தீபம்'' என்பது தரும் புரம் பதிப்பு."

இறைவனை முழுக்காட்டுகையில், நெய் தோய்ந்த அறுகினைச் சென்னியில் வைத்தற்கு அயன் அரி என்பவர்க்குப் பின்னர் யாம் எடுத்தல்லது இந்திரன் முதலியோரை விடேம் என இடையிலே வஞ்சினம் மூண்ட அவ்வி யைபு கருதி, இப்பாடலை ஐந்தாவது பாடலாகக் கொண் டருளினார்.

"இது தலைமகள், மங்கைமீர் ! தலைவன் முழுக்காடு தற்கு அவன் திருமுடி மேல் நெய் தோய்ந்த அறுகினை எடுத்து வைத்தற்கு அரி பிரமேந்திராதி தேவர்கள் முற் படுவர். அவர் அங்ஙனம் முற்படினும் நமக்குப் பின்னரே அவர்கள் எடுக்குமாறு நாம் முற்படுவோம்'' எனப்பின்னர் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை முன்னரே அறிவுறுத்தி விட்டு இப்போது சுண்ணம் இடிப் போமாக என்கிறது. நான் முகனும் திருமாலும் அறுகெடுத்தற்கு முற்படுவர் முணுமுணுத்துக் கொண்டு நிற்கும் இந்திரனுடன் தேவர்களும் ஆகிய எல்லோரும் நமக்குப் பின்னரே அன்றி முன்னர் அங்ஙனம் எடுக்க ஒட்டோம், அது நிற்க நாம் இப்போழுது...... திரு முழுக்காடுதற்குரிய திருப் பொற் சுண்ணத்தை இடிப் போமாக.

"மங்கல முழுக்காடற் குரியார் சென்னியிலே முதற் கண் அறுகம் புல்லை நெய்யிலே தோய்த்து ஆட வைத்தல் மரபு என்பதை,

நாழியுள் இழுகு நாகு ஆன்
கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து
ஊழிதொறு ஆவும் தோழும்
போன்று உடன் மூக்க என்று
தாழ் இருங் குழலினாளை
நெய்தலைப் பெய்து வாழ்த்தி
மூழைநீர் சொரிந்து மொய்கொள்
ஆய்ச்சியர் ஆட்டினாரே.                             (சிந்தாமணி)

என்பதனாலும் அறிந்து கொள்ளலாம். இக்காலத்துச் சில இடங்களில் அறுகைப் பாலில் தோய்த்துச் சென்னியில் வைப்பர். இங்ஙனம் அறுகு எடுத்தலில் சில நுட்பங்கள் பண்டும் இன்றும் நடைமுறையில் உள்ளன. அதனுள் முதன்மை பலரும் விழைவர். இம் முதன்மையிலே சிலருக்கிடையில் மனவேறுபாடு ஏற்படுதலும் உண்டு. இங்ஙனம் முதன்மை பெறுமாறு அயனும் அரியும் என்பார் அறுகு எடுக்க முற்படுவார்கள் என்க. அதனைக் கண்டு மனம் புழுக்க மெய்திய இந்திராதி தேவர்கள் முணு முணுப்பர் என்க. இந்திராதி தேவர்களினும் அயன் அரி என்பார் முதன்மை பெறற்குரியராகலின் அன்றிமற்று என இடையிற் பிரித்தார் என்க. இனி அயனும் அரியும் அன்றி மற்றிந் திரனோடமரர் நறு முறு தேவர் கணங்களெல்லாம் அறு கெடுப்பார்' எனக் கொண்டு உரைப்பினும் அமையும். அங்ஙனம் கொள்ளின் 'நறுமுறு' என்னும் அடையை அரி, அயன் முதலிய யாவருக்கும் இயைத்து நாமே முதலில், நாமே முதலில் என யாவரும் தம்முள் முணுமுணுப் பார் எனப் பொருள் கொள்க.''

அரி அயன் என்போர் முற்படினும், தேவகணங்கள் நறுமுறுப்பினும், நம்மிற் பின்பு அல்லது முன்பு எடுக்க வொட்டோம் எனத் தலைமகளும், தோழியரும் தம்முள் நிச்சயம் செய்து கொண்டனர் என்க. பின் வரும் நடை முறைகளை முன்னரே கூடி இங்ஙனம் முடிவு செய்தல் மரபாகும்" இப்பகுதி யாழ்ப்பாணம் நவநீத கிருஷ்ண பாரதியார் உரையாகும்.

அறுகு என்பதைக் குடவிளக்கு என்றும், மங்கல விளக்கு என்றும் உரை கூறக் காண்கிறோம், ஏந்துவதற் குரிய எண்வகை மங்கலப் பொருள்கள் கவரி, நிறை குடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கழல் என்பன; அட்டமங்கலம் இவை என்றும் பெயர் பெறும். அறுகு எங்ஙனம் குடவிளக்கு மங்கல விளக்கு ஆகும் என்பது விளங்கவில்லை. அறுகு என்றால் சிங்கம். சிங்க முக விளக்கு, மங்கல விளக்கு என்றும் பொருள் சொல்வர். இனி இங்கு ஏன் மங்கல தீபம் ஏந்த வேண்டும்? பெருமான் நீராடுவதற்கும், மங்கல தீபம் எடுத்தற்கும் என்ன தொடர்பு என்பது கேள்வி. அன்றியும் அட்ட மங்கலங்கள் பல இருக்க, அவற்றுள் விளக்கை மட்டும் குறிப்பிட, அதுவும் சுற்றி வளைத்து, அறுகு என்ற சொல்லால் குறிப்பிடக், காரணம் யாது? இது மற்றொரு கேள்வி. அறுகு சிங்கக் கொடி என்றால் ஏன் சிங்கக் கொடி?

அறுகம் புல் என்று கூறப்பட்ட பொருளை இனி ஆராய்வோம். (சித்தாந்தம் 1963 மே மாதத்தில் வெளி வந்த தாளி அறுகு என்ற எனது கட்டுரையைக் காண்க.) இந்த இடத்தில் அறுகம் புல்லை அயனும் அரியும் எடுக்கும் காரணம் என்ன? இதை யாரும் விளக்கவில்லை. நவநீத கிருஷ்ண பாரதியார் தமது உரையில் ஒரு விளக்கம் கூறுகின்றார். தலைவன் திருமுழுக்காடுவதற்கு அவன் திருமுடி மேல் நெய் தோய்த்த அறுகினை அரியும், பிரமனும் எடுத்து வைப்பார்கள் என்கிறார். இக்கூற்றைத் தலைமகள் தோழியரை நோக்கிக் கூறும் கூற்றாக அவர் சொல்லுகிறார். இவ்வாறு தலையில் அறுகை நெய்யில் தோய்த்து வைத்து ஆடுதல் வழக்கு என்பது சிந்தாமணியே பல இடங்களில் குறிப்பிடுகிறது.  ''மணி நிற அறுகை நெய் தோய்த்து எழிற் குழை திருவில் வீச மகளிர் நெய் யேற்றுகின்றார் (2416)'', ''மணிகிளர் ஒலி ஐம்பால் அரை விளை கலை நல்லார் அறுகின் நெய்யணிந்தாரே (2430)” இதைப் பெருங்கதையிலும் காண்கிறோம்.

"அறுகைப் புல்லினும் வாகைத் தளரினும், நறு நெய் தோய்த்து மறை முதல் நீவி'' பெருங்கதை (2 - 5 - 69 70) இது இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆனால் இங்கு சுண்ணம் இடித்தற்கும் தலையில் அறுகு வைத்தார் என்று சொல்வதற்கும் தொடர்பு காணப்படவில்லை. இதை இவ்வுரைகாரரே உணர்ந்து "அது நிற்க நாம் இப் போழுது என்ற வார்த்தைகளை இடைப் பெய்து உரை கூறியிருக்கின்றார். இவருடைய கருத்தின்படி இப் பாடலின் முற்பாதி, பிற்பாதி இரண்டிற்கும் தொடர்பு இல்லை. இது நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதன்று.

"சிவ பெருமான் திருமுழுக்காடத் தொடங்குங்கால் அவன் திருமுடிக் கண் அறுகம் புல்லை ஆன் நெய்யில் தோய்த்துத் தெளிப்பர். அத்திருத்தொண்டினுக்கு நாமே முற்படும் உரிமை உடையோம். அரியும் அயனும், அவ ரொழிந்த வானவர் கோன் முதலிய விண்ணவர்களும் ஒருவரோடு ஒருவர் முணுமுணுத்துக் கொண்டு முற்பட முனைவர். அவர்களனைவர்களையும் நம்மிற் பின்பு அல்லது எடுத்தல் ஒட்டோம்'' இது சமீப காலத்தில் வெளியான கழக வெளியீடாகிய திருவாசக விளக்கவுரை (ப. இராம் நாதப் பிள்ளை.)

இனி, சென்ற நூற்றாண்டில் திருவாசக அனுபூதி உரை எழுதிய காழித்தாண்டவராயர் என்பவர் இப் பாடல் ஆண்டவனுடைய திருமணக் கோலத்தின் தரிசனத்தைக் கூறுகின்றது என்று எழுதி அதற்கேற்பப்பின் வருமாறு உரை கூறுகின்றார்.

வெள்ளியங்கிரியில் திருமணக் கோலத் திருச்சன்னி தானத்தில் அன்படியார் இன்புறத்தரிசனம் காட்டிப்பரம சிவனும் பார்வதியும் அருளும் காலம் திருமாலும் அயனும், அர்ச்சனைக்கு உகந்த அட்சதை யெடுத்து விதிப் படி அன்பால் லயாங்க, யோகாங்கமாகிச் சிரமுதற் பஞ்சப் பிரம சடங்க பஞ்சாக்கர நாமத்தால் திருமேனி யில் பூசிக்க, மற்றுமுள்ள இந்திராதி, தேவாதி கர்த்தாக் களும், அவர் பகுப்பான நயமுடைய கணங்களும் ஒருவர்க் கொருவர் முன் பின் பிறழ்ந்தாராகத் தடை செய்து தாமே முன்னோடிப் பூசிப்பார்கள். "இங்கு இப்பெரியார் அறுகு என்ற மாத்திரத்தில் அறுகும் அச்சதையும் என்று எண்ணி வீட்டார். அறுகிடுதல் என்பது அறுகும் அட சதையும் தூவி ஆசீர்வதித்தல் என்னும் பொருளுடையது. அறுகையும் சிறு பூளை மலரையும், மஞ்சள் கூட்டிப் பிசைந்த அட்சதையையும் சேர்த்துத் தூவுதலுமாம். இவ்வாறு வாழ்த்தும் மரபைத் தொடக்கத்தில் பார்த்தோம்.

தமிழ் நாட்டுக் கல்யாணங்களில் வழக்கத்தில் உள்ள இம்மரபை எண்ணிக் கொண்டு, பரமேசுவரனுடைய திருக்கல்யாணத்தைத் தரிசனம் செய்ய அனைவரும் வருகின்றனர் என்று இவ்வுரைகாரர் எழுதி விட்டார். இதன் பொருந்தாமை வெளிப்படை. மேலும் பரம் பொருளான சிவபிரானை பிரமாதி தேவர்கள் வந்து தரிசித்துப் பேறு பெறுவர் என்பது பொருந்துமே யன்றி, அறுகும் அட்சதை யும் இட்டு ஆசி கூறுகின்றார்கள் என்பது (ஒரோவழி பல் லாண்டு கூறுதல் என்பது நீங்கலாக) முழுமையும் பொருந்தத்தக்க கருத்தன்று. மாணிக்க வாசகர் இவ்வாறு கூறுகின்றார் என்பது ஒவ்வாதது, இவ்வுரையின் பதிப்பாசிரியர் குடவிளக்கு என்ற கருத்தை அடிக் குறிப்பில் எழுதியுள்ளார்.

இனி, சுந்தர மாணிக்க யோகீசுவரர் என்பார் இப்பாடல் முழுமைக்குமே விசித்திரமான உரை எழுதியிருக்கிறார், " அயனும் திருமாலும் அல்லாமல் மற்றும் இந்திரனோடு தேவர்கள் வழியைத் தடுப்பார்கள். நம்முடைய சுழியாகிய சிவன் வெளிப்படும் பிரணவவுச்சியிலுள்ள பிரமத்துவாரத்தைக் கடந்து பின் முறுமுறுத்துக் கொண்டு தெய்வதத்துவங்களின் கூட்டங்களைப் பல்லெடுக்க விடமாட்டோம். பரமசிவத்திற்கு நடிப்பதற்காக அழகிய அருள் நீற்றைப் பக்குவப் படுத்துவோம். " அறு வழி; கெடுப்பார் - தடுப்பார்கள்; பல்லது எடுக்க வொட்டோம். தெய்வ தத்துவக் கலைகளைத் தடுத்து விடுவோம். நம் இல் - சாதகர் அடைய வேண்டிய பிரமரந்திரம். ஆடப் பொற் சுண்ணம் இடித்தும் - நடிப்பதற்காக அழகிய அருள் நீற்றைப் பக்குவப் படுத்துவோம் - என்பன வெல்லாம் இவருடைய உரைகள். இவை சொற்களைத் தவறாகப் பிரித்தமையாலும் தவறாகப் பொருள் பண்ணினமையாலும் ஏற்பட்ட விபரீதங்கள். இவற்றை நாம் ஆராயவேண்டுவதில்லை.

"அயனும் அரியும் தங்கள் மாலைகளைக் கொணர்கிறார்கள். நமக்குப்பின்பல்லது இந்திரன் முதலானோர் உலக்கை எடுக்க விடமாட்டோம்'' என்ற கருத்துப்பட, டாக்டர் ஜி. யு. போப் இப்பகுதியை மொழி பெயர்த்திருக்கிறார். நம்மவர்களாகிய பெரும்புலவர்களே உரை காணுவதற்கு இடர்ப்படும் போது போப்பையருடைய கருத்தில் நாம் பிழைகாண முற்படுவது முறையாகாது.

இனி, இப்பாடலின் விளக்கம் தான் என்ன? இதன் திரண்ட கருத்து தொடக்கத்தில் சொல்லப்பட்டது. அதைச் சற்று இங்கு விளக்குவோம்.

திருப்பொற்சுண்ணம் சிவபெருமான் திருமுழுக்காடு வதற்காக மஞ்சளும் பிற நறு மணப்பொருள் வகைகளும் சேர்த்துப் பெண்கள் இடித்துச் செய்கின்ற கலவைப் பொடி இங்கு பெணகளாவார் "எங்கை உனக்கு அலலாது எப்பணியும் செய்யற்க'' என்பது முதலான உறுதிபூண்டுள்ள பணிப் பெண்கள்; மெய்யன்பர்களையே பணிப்பெண்களாக்கி, மாணிக்க வாசகர் கூறுகின்றார் என்பதும் பொருந்தும், "மாயையின் வடிவமாகிய தனுகரண புவன போகங்களைப் பொடி செய்து, மலப் பிணிப்பு நீங்கி, சிவனுக்கு ஆளாம் தன்மையை அடை தல், இதனால் பெறப்படும் ஞானப் பொருளாம்" என்று மா. வே - நெல்லையப்ப பிள்ளையவர்கள் திருப் பொற் சுண்ணத்தின் கருத்தாகக் கூறுகிறார்கள்.

திருப்பொற் சுண்ணம் இருபது பாட்டிலும் சுண்ணம் இடிக்கின்றவர்கள் சிவபெருமானுக்கு அடிமைப்பட்ட பணிப்பெண்கள்; பலர்கூடி ஒருவரை ஒருவர் அழைத்துக் கலந்து கூடிச்சுண்ணம் இடிக்கிறார்கள். அவர்கள் பாடுவ தெல்லாம் சிவபெருமான் தங்களை ஆட்கொண்டவண்ணங்களே. சிவபெருமானுக்கு ஆளான பெருமிதத்தினால் பிறரை அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. இவ்வாறு பலர்கூடி பலவிதமாக அவனுடைய கருணைத் திறத்தையும் தங்களுடைய அடிமைத் திறத்தையும் சொல்லிச் சொல்லிப் பாடும்போது, ஒரு பெண் இவ்வாறு கூறுகின்றார்.

"முறுவல் பொருந்திய செவ்வாயினையுடைய தோழியரே ! முக்கண் அப்பனாகிய நம் இறைவன் திருமுழுக்காடு வதற்கு நாம் இப்போது பொற்சுண்ணம் இடிக்கிறோம். இறைவனிடத்திலே நாம் அணுக்கத் தொண்டராய் இருத்தல் பற்றி அயன், அரி, இந்திரன், அமரர் தேவ கணங் கள் எல்லாம் நமக்குள்ள உரிமை தங்களுக்கு இல்லையே என்ற காரணத்தால் நம்மிடத்தில் நறுமுறுத்துக் கொண் டிருக்கிறார்கள், இப்போது நம் இறைவன் திருமஞ்சனத்துக்கு எழுந்தருளப் போகிறான். அவன் செல்கின்றபாதையிலே வீதிமுழுமையும் அறுதம், மலரும் நெல்லும் கலந்து நாம் தூவ வேண்டும். முன் சொன்ன அயன் முதலான தேவர்கள் சிவபெருமான் புறப்பட்ட உடனே நமக்கு முன்பாகச் சென்று அறுகு முதலியன வைத்துள்ள தட்டுக்களைக் கையில் ஏந்திச் சிவபெருமான் செல்லும் வீதியில் சென்று அறுகு முதலியவற்றைத் தூவ எண்ணுகிறார்கள். அவர்கள் எண்ணம் நிறை வேற நாம் விடக்கூடாது. அவர்கள் அனைவரும் நமக்குப் பின்பு வந்து தான் அறுவைத்துள்ள தட்டை எடுக்கலாம். முன்புவந்து அறுகு ஏந்த அவர்களை விடக்கூடாது. ஆகவே, வாருங்கள்; வேகமாய் நாம் இடித்து முடித்துப் பின் விரைந்து சென்று அறுகை முன்னதாக ஏந்திக் கொள்வோம்.'' என்று கூறுகின்றார்.

இதுவே இந்தப் பாட்டின் பாவம். பெண்கள் இவ்வாறு தாங்கள் முந்திக் கொள்ள வேண்டும் தங்கள் முதன்மையை நிலைநாட்ட வேண்டும் என்றெல்லாம் எண்ணுவது இன்றும் உலக இயற்கை.

மாணிக்கவாசகர் திருவாசகம் முழுமையிலும் தம் உள்ளத்திலெழுந்த பக்தி, அடிமைத்திறம், இறையனு பவம், இறையின் கருணைத்திறம் முதலிய பேரின்ப அனுபவ நிலைகளைப் பாடுகிறார் என்பது மட்டுமல்ல, இந்நிலைகளை மிகச்சிறந்த இலக்கிய நயம் பொருந்தவும் பாடுகிறார். சிறந்த கல்விமானாதலால், அவருடைய முயற்சியின்றி இலக்கிய நலங்கள் தாமே வந்து பொருந்துகின்றன. இயல் இசை, நாடகம் என்ற முப்பண்புகளும் பாடல்களில் பொருந்தியுள்ளன. மேலே குறித்த விளக்கமானது சிறந்த நாடகப்பண்பைப் புலப்படுத்துவதாயுள்ளது.

அறுகு எடுத்தல் என்பதற்கு இப்பொழுது நாம் கூறும் பொருள், இறைவன் நீராடச் செல்லும் வீதியிலே அவன் செல்லும் முன்னதாக, அறுகு, மலர் முதலியன கலந்து தூவுதற்காக எடுத்தல் என்பதாகும். இப்படிப்பட்ட செயலுக்கு இன்று உலக வழக்கிலும் ஆதாரம் உண்டு. அரசியல் துறையில், ஜனாதிபதி கவர்னர் போன்ற பெரியார் விஜயம் செய்யும்போது, அவர்கள் செல்கின்ற பாதையிலெல்லாம் கம்பளம் விரிப்பது வழக்கமாக இருக்கிறது. இதற்கு நடை பாவாடை. விரித்தல் என்று சொல் வார்கள். இப்படியே ஆண்டவனோ அல்லது சமயத் தலை வரோ உலாவரும் போதும் பாவாடை விரித்தல் மரபாய் இருக்கிறது. ஆலயத்தினுள் கம்பளம் விரிப்பார்கள்; ஆலயத்தின் வெளியே அறுகும் மலரும் கலந்த புஷ்பப் பாவாடை விரிப்பார்கள்.
இலக்கியத்திலும் இதையே காண்கிறோம். பூம்புகாரில் இந்திர விழா நடைபெற்ற சமயத்தில் மாதவி கடல் விளையாட்டுக் காண்டல் விரும்பினாள். கோவலனும்அதற்கு உடன்பட்டான். இருவரும் ஒரு வையகத்தில் ஏறி மாடங்கள் மலிந்த மறுகினையுடைய பீடிகைத் தெரு வின் கண் தாசியர் மலரையும் அறுகையும், நெல்லையும் மங்கலமாகச் சிந்தி இருமருங்கினிடத்தும் தம்கலன் ஒலிப்பச் சென்று அப்பால் போயினர். மாதவியும் கோவலனும் அவ் வீதியைக் கடந்து சென்றனர்.

மாடமலி மறுகிற் பீடிகைத் தெருவின்
மலரணி விளக்கத்து மணிவிளக் கெடுத்தாங்கு
அலர்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கலத் தாசியர் தங்கலன் ஒலிப்ப
இருபுடை மருங்கினுந் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து.
என்ற கடலாடு காதை வரிகளைக் காண்க.

இதனால் பெறுவது, பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் மக்களுள் சிறந்தோர் விழாக்காலத்து நீராடச் செல்லுகையில், அவர்கள் செல்லும் வீதி நெடுகிலும் பணிப் பெண்கள் அறுகும் நெல்லும் மங்கலமாகச் சிந்துதல் மரபு என்பது. மாணிக்கவாசகரும் இந்த மங்கல நிகழ்ச்சியையே குறிப்பிடுகிறார். அறுகை மங்கலமாகச் சிந்தும் பொருட்டு அயனாதியர் நறுமுறுத்துக் கொண்டு தாங்கள் முதலில் வரச் சித்தம் செய்தனர்; அவர்களுக்கு முன்னதாக, சிவபிரானிடத்துப்பக்தி பூண்ட பெண்கள் விரைந்து சென்று அடுத்து வந்து அறுகு எடுக்கும் பொருட்டு இப்போது வேகமாகச் சுண்ணம் இடித்து முடிக்க முற்படுவார்கள். ஆதலால் மங்கல விளக்கு ஏந்துதல் என்ற கருத்தோ, அடசதை இடுதல் நெய்யிடுதல் என்ற கருத்தோ, இங்குப் பொருந்தாது.

அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு அமரர் (ஆகிய) நறுமுறு தேவர் கணங்களெல்லாம் அறு கெடுப் பார். (அவர்களை) நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம் என்று, அறுகெடுப்பார் எடுக்க ஒட்டோம் என்ற இருவினைகளையும் எல்லோரிடத்தும் கூட்டிப் பொருள் உரைக்க வேண்டும்.

நறுமுறுத்தல், பொறாமையினால் முணுமுணுத்தல். பொறாமைப் படுதல் என்ற பொருளிலேயே இச்சொல்லைப் பிற்காலத்தில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தாம் பாடிய திருநாகைக் காரோணப் புராணத்தில் பாடியிருக்கிறார். கடவுள் வாழ்த்து, அழகவிடங்கர் துதி; "கோறல், பழகு அவ்விடங்கரை மாய்த்தான் மணி மார்பும் நறுமுறுப்பப் பன்னாள் சென்றும், குழகஷ்டம் கரையாது களத்தமைத்தாய்.''

அயனும் அரியும் நமக்கு முன்பு அறுகு எடுக்கட்டும்; ஆனால் ஏனைய இந்திரன் முதலானோர் யாவரும் நமக்குப் பின்னரே எடுக்க வேண்டும் என்று கூறுவதாகச் சிலர் உரை கூறியிருக்கிறார்கள். இதுபிழை என்று முன்னமே கூறிய விளக்கத்தால் தெளிவாகும். அனைவரும் நமக்குப் பிற்படத்தான் வரவேண்டும் என்பதே சுண்ணம் இடிக்கும் பெண்ணின் கருத்து. சிவபெருமானுக்குப் பணிவிடை செய்யும் தங்கள் உரிமைகளில் ஒன்றாகிய அறுகெடுத்து மஞ்சன வீதியில் மங்கலமாகத் தூவும் பணியைத் தாங்களே முதலிடத்திலிருந்து செய்ய வேண்டும் என்பதே இப்பெண்களின் உறுதி. அப்பணிவிடையின் பெருமையைக் கூறுவதே இப்பாட்டின் கருத்து.

சித்தாந்தம் – 1964 ௵ - செப்டம்பர் ௴


No comments:

Post a Comment