Saturday, May 9, 2020



திருவாசகம் பேசும்
திருத் தொண்டர்கள்
வித்துவான் சுவர்ண காளீச்சுரன்.
திருவையாறு.

சிவராஜயோகத் தவராஜராய்த் தலைமை வகித்தருளும் அருட்டிரு. அடிகளார் அவர்களே! சைவ சித்தாந்தத் தேனமுதருந்தித் திளைக்கும் சிவநேயச் செல்வர்களே! சைவ இளைஞர் பெருமக்களே! தாய்மார்களே! உங்களனை வருக்கும் எனது அன்புகனிந்த கைகூப்பு உரியதாகுக.

இன்றைய மகாநாடு இளைஞர் மகாநாடு. எத்தகைய இளைஞர் மகாகாடு, சைவ இளைஞர் மகாநாடு. சைவம் என்ற சொல்லுக்குச் சிவசம்பந்தம் என்பது பொருளாகும். சைவம் சிவத்தொடு சம்பந்தமென்றான், சைவம் வளர்க்கும் சம்பந்த மூர்த்தி "ஆகவே சிவபெருமானிடத்திலே அப்பெருமான் காட்டிய நெறியிலே தொடர்புடைய இளைஞர் மகாநாடு ஆகும் இது. மேலும் அத்தகைய சிவமும் அன்பும் வேறல்ல. ஆகையால் அன்பே சிவமாவது என ஆணையிட்டருளினார்கள். அன்பென்பது தொடர்புடை யாரிடத்தே உண்டாகுவது. ஆனால் ஏனைய உலகியல் தொடர்புகள் நீடித்ததாக அமையாது. மணிக்கணக்கிலே நாட்கணக்கிலே ஆண்டுக் கணக்கிலே அமைவது. இத்தொடர்புக் கெல்லாம் ஒரு முடிவு உண்டு. இறவாத அன்பு நாயக நாயகிபாவ அன்பு. இவ்வன்பிலும் நமது ஆன்ம நாயகனாகிய சிவபெருமானிடத்திலே காட்டி யருளுகிற அன்பு என்றும் இறவாத பேரன்பாகும். அப் பேரன்பின் வடிவாய்த் திகழ்ந்த பெருமான் நமது மணி வாசகப் பெருமானாவார். இதனை நோக்குங்கால் நமது சைவ இளைஞர் மகாநாடு அப்பெருமான் திருப்பெயர் தாங் கிய பெரியாரது தலைமையில், அப்பெருமான் பிறந்தருளிய நாட்டின் பெயரை முன்னர்த்தாங்கியுள்ள பாண்டிச்சேரியிலே கூடுவது மிகவும் பொருத்தம் என்பதை உணரலாம்.

இனி இத்தகைய மகாநாட்டில் ஒன்றுக்கும் பற்றாத எளியேனை முதன் முதலாகப் பேசச் செய்தார்களே ! அதன் உள் நோக்கத்தை ஆராய்ந்த பொழுது, என்னுடைய உள்ளம் அடைந்த இன்பத்தை எடுத்துச் சொல்ல இயலாது அன்பர்களே!

திருத்தொண்டர்கள் வரலாறுகளிலே, நம்மையாள் சிவபெருமான் இளமைக் கோலத்தோடு காட்சியளித்த நிலை ஒரே இடத்தில் தான் பேசப்படுகிறது. நமது சுந்தரப் பெருந்தகையாரும், சேரமான் பெருமாள் நாயனாரும், இராமேஸ்வர யாத்திரை செய்து, திருச்சுழியல் என்னும் திருத்தலத்தில் தங்கியருளுங்கால், நள்ளிரவில் கனவினிடத்தில் திருக்கானப்பேரூர் என்னும் தலத்திலுள்ள இறை வன், இளமைக் கோலத்தோடு தோன்றி, செங்கையினில் பொற்செண்டு கொண்டு, "நாமிருப்பது காணப்பேரூர். மறந்தனையோ" என அருளி மறைந்தருளினார்.
இதனைக் குறிக்கும் சேக்கிழார் பெருமான்,

''. ... . ... காளையாம் திருவடிவால்
செங்கையினில் பொற் செண்டும் திருமுடியிற் சுழியமுடன்
எங்குமிலாத் திருவேடம் என்புருக முன்காட்டி. "
என அருளிச் செய்தார்.

சுந்தரப் பெருந்தகையாருக்குப் பெருமான் மற்றை எல்லாச் சமயத்தும் கிழவடிவோடேயே காட்சியளித்த படியால், இவ்வேடத்தை எங்குமிலாத் திருவேடம் என்றருளிச் செய்தார். இத்தகைய இளமைக் கோலங் காட்டிய பெருமான் வீற்றிருந்தருளும் இடம் 'காளையார் கோவில்'' என வழங்கும் திருத்தலமாகும். அத்தலத்தில் பிறந்து அப் பெருமான் பெயரைப் பெற்றிருக்கும் ஒரே காரணம் பற்றியே சமாஜத்தினர் என்னை முதலில் பேசச் செய்தார்கள் என்பதை உணர்கின்றேன்.

இனி இத்தகைய மகாநாட்டில் பேசப்படும் பொருள் இளைமை வாய்ந்தாரது பெருமைக்குரியதாக இருக்கவேண்டும். அவர்கள் என்றும் இளையானாகிய முருகப்பெருமானது திருவருளோடும் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும். மேலும் சிவபிரானிடத்து அன்புடையவர்களாகத் திகழவேண்டும். இளமைக்குரிய திண்மை முதலியனவும் உடையவர்களாக இருக்கவேண்டும். இத்தகையோர், மணிவாசகப் பெருந்தகையாரால் பாராட்டப் பட்டவராகவும் இருத்தல் வேண்டுமென்று கருதியே, திருவாசகம் பேசும் திருத்தொண்டர்கள் என்னும் தலைப்பீந்தேன். மணிவாசகப் பெருமான் தனது திருவாசகத்தில் இரண்டு திருத்தொண்டர்களை எடுத்துக் காட்டுகிறார். அவற்றுள் முதல்வர் அன்பின் திருவாகிய கண்ணப்பர். மணிவாசகப் பெருமான், "இறைவா! கண்ணப்பரது அன்பை நோக்க எனது அன்பு குறைந்தது. ஆனாலும் என்னையும் ஒரு பொருட் படுத்தி ஆட்கொண்டாயே! அதுவும் உன்றன் கருணைப் பெருக்கல்லவா?'' எனப் பாராட்டுகின்றார்.

"கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்ப னென்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணை
சுண்ணப்பொன் னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.”

இதனைத் திருக்களிற்றுப்படியார் ஆசிரியர் பின் வருமாறு கூறுகிறார்.

"கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை என்றமையால்
கண்ணப்ப னொப்பதோர் அன்பதனை - கண்ணப்பர்
தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லதுமற்று
யாமறியும் அன்பன்று அது.

ஆகையால்தான் மானிடர்களெல்லாம் வீண்பொழுது போக்குகின்றார்களே என்றும், கண்ணப்பரின் கதையைக் கேட்கவில்லையே என்றும் வருந்துகின்றார் நக்கீரர் பெருந்தகை,

வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கேளார்கொல் அந்தோ கிறிப்பட்டார் கீழாடை
வண்ணருக் கணுக்கராய் காளத்தி முன்னின்ற
கண்ணப்ப ராவார் கதை.

பொத்தப்பி நாட்டிலே வேட அரசனாகிய நாகனுக்கும் தத்தைக்கும் நீண்ட நாள் புத்திரப்பேறு இல்லாமல், பின்பு தங்கள் குலதெய்வமாகிய முருகனை வழிபட்டு அப்பெருமான் அருளாலே ஒரு நற்குழந்தையைப் பெற்றார்கள். அக்குழந்தையைத் தூக்கும் போது திண்மையாக இருந்த காரணத்தால் திண்ணனார் என்று எல்லோரும் அழைத்தனர். உடம்புத் திண்மையோடு உள்ளத்திண்மையும் உடையவராய், சிங்க முதலியவற்றோடும் விளையாடி நன்முறையில் வளர்ந்து, தான் அரசபாரத்தை ஏற்றுக்கொள்ளும் வயதை அடைந்தார் திண்ணனார். அத்தகைய இளமைப் பருவத்தில் கன்னி வேட்டையாடுதற்காக நாகன், காடன் இருவரையும் துணையாக ஏற்று வேட்டை யாடி, முடியும் சமயத்தில் ஒருகாட்டுப் பன்றியை விரட்டி நாகனும் காடனும் மட்டும் உடன்வர ஓடி, பன்றியைக் கொன்று அம்மாமிசத்தை உண்ணத் தண்ணீர் வேண்டி, பொன்முகலியா ற்றை அடைந்தபொழுது, திருக்காளத்தி மலையினுச்சி தென்பட இதனைக்கண்டதோழன், இம் மலையில் குடுமித் தேவர் இருக்கிறார் கும்பிடலாம் என்று கூறிய மாத்திரத்தே திண்ணனாருக்கு உடற்பாரம் குறைந்தது போன்ற உணர்ச்சி நிலை ஏற்பட்டது. பின்பு "பேணுதத் துவங்களெனனும் பெருகு சோபானத்தைக் கடப்பார் போல, மலைப்படி கடந்து காளத்தியப்பரைக்கண்ட போது தன்னை மறந்தார் திண்ணனார். அப்பொழுது நண்பன் இங்கு முன்பு உன் தந்தையோடு வந்திருக்கிறேன். அப்பொழுது ஒருவர் வந்தார். இருக்கின்ற பூக்களை எல்லாம் களைந்தார். ஏதோ முனகிக் கொண்டு புதுப்பூ வைத்தார். ஏதோ கொண்டு வந்து காட்டினார் என்று சொன்னான். இந்த நிலையில் தன்னை மறந்த கன்றைக் கண்ட பசுவைப் போல உளம் நெகிழ்ந்து சிவலிங்கத்தைக் கட்டியணைத்தார். தழுவினார்; உச்சிமோந்தார். இங்கே மணிவாசகப் பெருமான் திருவாக்கு நினைவுக்கு வருகிறது.

"கையால் தொழுதுன் கழற்சே வடிகள், (கழுமத் தழுவிக் கொண்டு
எய்யா தென்றன் தலைமேல் வைத்து (எம்பெருமான் என்று என்றே
ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற்றரசே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே.''

மணிவாசகர் ஆசைப்பட்டார். கழுமத் தழுவிக் கொண்டார் திண்ணனார். பின்பு இறையவருக்கு அமுது படைக்க எண்ணிப் பிரியா மனத்தோடு பிரிந்து பொன் முகலியாற்றை அடைந்தார். அந்நிலையில் கூடவந்ததோழர்களையும் சுற்றத்தையும் மறந்தார்.
"உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் - பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தா நின் குரைகழற்கால்
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.

என்ற திருவாசகத்திற்கு இலக்கியமானார் திண்ணப்பர். உடன் வந்தோர் தாய்தந்தையர்களுக்குத் தெரிவித்து அவர்களும் வந்து பார்த்து பையனுக்குப் பித்துப் பிடித்து விட்டது என்று எண்ணி வருந்தித் தன் இல்லம் சென்றார்கள். இந்நிகழ்ச்சியானது,

"உத்தம னத்தன் உடையான் அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு மாலிவ னென்ன மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊர் ஊர் திரிந்து எவரும்
தத்த மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே.”

என்னும் திருவாசகத்தை நினைவூட்டுகிறது. பின்பு பன்றி மாமிசத்தைச் சுட்டுவாட்டிப்பற்களால் அதுக்கி அதுக்கிப் பார்த்து நல்ல சுவையுள்ள ஊனைத் தேக்கிலையிலே வைத்துப் பூவைத் தலையில் சூடி வாயிலே நீரை நிறைய வைத்துக் கொண்டு (இதனை ஞானசம்பந்தர் பெருமான் 'வாய் கலசமாக' என அருளிச் செய்தார்) செருப்புக் காலோடு வில்லை ஒரு கையிலேந்தி காளத்தியப்பரை யடைந்து செருப்புக்காலால் பழைய பூக்களைக் களைந்து வாய்நீரை உமிழ்ந்து அபிடேகித்து தான் தலையிலே சூடிய பூவைச் சாத்தி மாமிசத்தை வைத்து நிவேதித்தார். இதனைக் காளத்தியார் விருப்புடன் ஏற்று மகிழ்ந்தார்.

இதனை நமது மணிவாசகப் பெருமான்,  

"பொருட் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச்
செருப்புற்ற சீரடி வாய்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்கு
அருட் பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ.”

எனப் பாராட்டுவார். சிவானந்தலஹரியில், ஆதிசங்கரர் இக்கருத்தினை அமைத்துச் சுலோகம் செய்திருக்கிறார். இவ்வாறு பூஜித்து இரவு முழுதும் காத்திருந்து, மறுநாள் முன்பு போல பூஜைக்கு ஆவன கொணரச் செல்லுங்கால் சிவகோசரியார் என்னும் சிவாச்சாரியார் மாமிசம் முதலிய சிதறி இருப்பதைக் கண்டு வருந்திப்புண்ணியாவசனம் செய்து சிவாகம முறைப்படி சிவார்ச்சனை செய்து திரும்புவார்.

இதனைத் திருஞான சம்பந்தர்,

"ஊனொடுண்டல் நன்றொனா ஊனாடுண்டல் தீதெனா:
ஆன தொண்டர் அன்பினால் பேசநின்ற தன்மையான்."
என அருளிச் செய்தார்.

இவ்வாறு ஐந்து நாட்கழிந்து ஆறாம் நாள் சிவகோ சரியார் மிகவும் வருந்த, அவருக்குக் கண்ணப்பரன்பினைப் புலப்படுத்தக் கண்களில் இரத்தம் வரச்செய்ய, அதுகண்ட - கண்ணப்பர், பலபச்சிலைகளை இட்டும் தீராமல் ஊனுக்கு ஊனிடல் வேண்டும் என்பது நினைவுக்கு வர தமது கண்ணினை இடந்து அப்ப, கண்ணில் உதிரம் வடிதல் நின்றது கண்டு மகிழும் போது மற்றொரு கண்ணிலும் உதிரம்வரத் தொடங்க மறு கண்ணையும் தோண்டுதற்கு யத்தனித்து அடையாளம் தெரிவதற்காகச் செருப்புக்காலை உதிரம் வரும் கண்ணின் பக்கத்தே வைத்துத் தோண்டப்புகும் போது காளத்தியப்பர் தனது திருக்கரத்தால் தடுத்து ''நில்லுகண்ணப்ப நில்லு கண்ணப்ப" என அருளிச் செய்து தன்பக்கத்தே இருந்தருளும் பெரும் பேற்றைத் தந்தருளினார். இதனைப் பட்டினத்துப் பிள்ளையார் ''தொண்டு செய்து நாள் ஆறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லன்'' என அருளிச் செய்தார்.

இனி மணிவாசகம் பேசும் திருவாசகத்தில் பேசப்படும் தொண்டர் சண்டேசுரராவார். இவர் முருகப் பெருமானால் தோற்று விக்கப்பட்ட திருச்சேய்ஞலூரிலே அந்தணர் குலத்திலே எச்சதத்தர் பவுத்திரையாகிய இருவருக்கும் புத்திரராகப் பிறந்தருளினார். விசாரசருமர் எனப் பெயர் பெற்றார். இவர் இளமைக் காலத்தில் தனது மரபுக்கேற்ப வேத அத்தியயனம் செய்து வருங்கால் மாலைக்காலத்தில் பசுமேய்ப்போர் ஒருபசுவைத் துன் புறுத்துவதையறிந்து தானே பசுமேய்ப்பதை ஏற்றுக் கொண்டு, மண்ணியாற்றிலே மேய்த்து வருங்கால், வளத்தால் பசுக்கள் பாலைச் சிந்த அப்பொழுது விசாரசருமருக்குச் சிவபூசை நினைவுக்கு வர, அங்கேயே தான் படித்த மறையுணர்ச்சியினால் மணலால் சிவாலயம் அமைத்து, சிவலிங்கம் அமைத்து, மட்கலசம் கொணர்ந்து, பாலைக்கறந்து ஆட்டி வழிபட்டார்.

இதனைக்கண்டோர் பால் வீணாகிறது என்று குறை கூற இதனையறிவதற்காக வந்த எச்சதத்தர் மறைந்திருந்து இதனைக் கண்டு, கோபத்தால் திட்டியும் அடித்தும் கூட விசாரசருமர் தன்னிலை மறந்திருக்க, உடனே கோபித்து பால்வைத்திருந்த கலசத்தைக் காலால் சிதைத் தார். உடனே விசாரசருமர் அருகிருந்த தருப்பையை, தனது பிதாவின் காலிலே போட, அது மழுவாகிப் பிதா வின் காலைச் சிதைத்தது. அதனையும் அறியாமல் பூசனை புரியும் விசாரசருமரது பக்தித்திறத்தைக் கண்டு இடபாரூடராகப் பெருமான் காட்சியளித்தார். சண்டேசுர பதமும் தந்தார். இதனை நமது மணிவாசகம் பேசும் திருவாசகம் பின்வருமாறு கூறுகிறது.

"தீதில்லை மாணிச் சிவகருமம் சிதைத்தானை
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றின வா தோணோக்கம்.”

இனி இத்திருத்தொண்டர்களின் வாழ்வில் ஒற்றுமைகளைக் காண்போம். திண்ணனார் முருகனருளாலே தோன்றியவர். விசாரசருமர் முருகப் பெருமான் அருள் நிலவி இருக்கும் அப்பெருமான் திருத்தலமாகிய திருச்சேய்ஞலூரில் பிறந்தருளினார். திண்ணனார் பொன்முகலியாற்றங் கரையில் திருக்காளத்தி மலையுச்சியினைக் கண்டு மகிழ்ந்த சமயத்தில் சிவலிங்க பக்தி உண்டாயிற்று. அவ்வாறே விசாரசருமருக்கும் மண்ணியாற்றங்கரையில் பசுக்கள் பாலைச் சுரந்த நிகழ்ச்சியானது சிவலிங்கபக்தி தோன்றுவதற்குக் காரணமாயிற்று, சிவலிங்கபக்தியில் ஈடுபட்ட திண்ணனாருக்குத் தனது தாய் தந்தை முதலியோர் வந்த நிகழ்ச்சி எதுவும் தெரியாது. தந்தையையும் மறந்தார். அவ்வாறே விசாரசருமரும் சிவலிங்க பூஜையில் தந்தை வருவதும் அறியாமல் அவர் திட்டியதும் அறியாமல் தன்னை மறந்தார். சிவபிரானுக்குத் தீங்கு வந்தது என்ற பொழுது தன் கண்ணையும் அப்பினார் கண்ணப்பர். சிவ பூசைக்குரிய பொருளை அவமதித்தது தனது தந்தையின் காலேயாயினும் அதனைச் சிதைத்தார் விசாரசருமர்.

இறைவர் காளத்தி வருவோர் கும்பிட்ட பயன் காண என் பக்கத்தே அமர்வாயாக என்று அருளிச் செய்தார் கண்ணப்பருக்கு. இவ்வாறே விசாரசருமருக்கும் என்பக்கத்தே அமர்ந்து எனக்குச் சாத்தும் மாலையும் அமுதும் பெற்று கும்பிட்டபயனைத் தருக என்று இறைவன் சண்டே சுரபதம் தந்தருளினார்.

இவ்வாறு ஒத்த நிலையில் வாழ்வமைந்த இருதொண்டர்களைப் பேசுகிறது திருவாசகம். ஆனால் இருவருக்கும் சமமாக ஒவ்வொருபாடல் அருளிச் செய்யாமல் கண்ணப்பருக்கு இரண்டு பாடலும், சண்டேசுரருக்கு ஒரு பாடலும் அமைத்த நிலையை நோக்கும் போது என் உள்ளத்தில் தோன்றும் கருத்தைச் சொல்லலாமென எண்ணுகின்றேன்.

சண்டேசுரர் நல்லமருத நிலத்திலே உயர்ந்த பண்பாடு நிறைந்த மறையவர் குலத்திலே தோன்றியவர். கண் பணப்பரோ அன்புக்குமாறுபட்ட வன்பையே தனது குலத் தொழிலாகக் கொண்ட வேட்டுவ மரபிலே நாகரீகம் அறியாத மலைப்பகுதியிலே ஒருசிற்றூரிலே தோன்றியவர்.

சண்டேசுரர் இறையுணர்ச்சி வருதற்கும் அப்பெருமான் கருணையைப் பெறுவதற்கும் ஏதுவாகிய வேத அத்தியயனம் செய்தவர். கண்ணப்பரோ வேடர்களுக்குரிய வில், வாள் வித்தை முதலியவன்றி மற்றொன்றும் அறியாதவர்.

சண்டேசுரர் மறையுணர்ந்து அதன் பயனாகிய பசு வேட்டல் முதலிய பதிபுண்ணியத்தைச் செய்பவரானதாலே பாலைக் கண்டவுடன் அவருக்கு சிவலிங்க வழிபாட்டின் நினைவுவந்தது. ஆனால் அத்தகைய சூழ்நிலை ஒரு சிறிதேனும் அறியாதவர் கண்ணப்பர். மேலும் அன்புடையார் என்பதைப் பிறருக்கு அறிவிப்பது கண்களேயாகும். இத்தகைய கண்களையே ஈந்த அன்பு கண்ணப்பரன் பாகும். இதனாலேயே நமது மணிவாசகப் பெருந்தகை "கண்ணப்பனொப்ப தோர் அன்பின்மை'' என எடுத்துப் போற்றியருளினார்.

ஆகையால் சைவ இளைஞர்களாகிய நாம் திண்ணனார் போன்று உடலுறுதி படைத்தவர்களாகவும் திகழககான வேண்டும். அன்பு நெறியில் திளைப்பவர்களாக வாழ வேண்டும். நாம் எந்தச் சூழலில் பிறந்து வளர்ந்தாலும் அன்பு நெறி உடையவர்களாக ஆதல் வேண்டும். அந்த அன்பு நெறியில் தன்னை மறந்து தனக்குத் தனித்தலைவன் உளான் என்ற நிலையை அடைய வேண்டும். அதற்குக் கண்ணைக் கூட ஈதற்குத் தயாராக இருத்தல் வேண்டும். சிவாபராதம் செய்பவர் தனது தந்தையே யாயினும் ஒறுக்கின்ற உறுதி வேண்டும் அதற்கு வேதபுரீசர் திருவருள் வேண்டும். ஆகையால் அப்பெருமான் திருவருளை வேண்டி வாழ்த்தி வணங்கி எனது சிற்றுரையை முடிக்கின்றேன்.

ஒன்றுக்கும் பற்றாத எளியேனையும் பட்டி மண்டபம் ஏற்றுவித்து மூலையில் இருந்த என்னை முற்றத்தில் கொண்டு வந்த சைவ சித்தாந்த சமாஜத்தினருக்கு எனது நன்றியைச் செலுத்துகின்றேன். என்னை யாள் பன்னிருகைப் பெருமான் திருவருள் இத்தகைய நெறியிலேயே என்னை நிறுத்தி அருள் புரிய அவன் திருத்தாள்களை வணங்கி வாழ்த்தி அமைகின்றேன். 

- முருகா –
சித்தாந்தம் – 1964 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment