Saturday, May 9, 2020



திருவாசகத் தலங்கள்

ஆசிரியர்

திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமானால் பெயர் குறிப்பிடப்பட்ட தலங்களின் பட்டியல் ஒன்று 1960 ஆம் வருடம் மே மாதம் சித்தாந்தம் இதழில் (பக்கம் 154 - 155) வெளிவந்தது. அத்தலங்கள் பற்றிய சில கருத்துக்களை இங்கு நினைவு கூர்தல் பொருந்துவதாகும்.

அத்தலங்களுள் தேவாரப் பதிகம் பெற்ற தலங்கள் பின்வருவன ஆகும். அண்ணாமலை, கச்சியேகம்பம், ஐயாறு கடம்பூர், கயிலை, குற்றாலம், சிராப்பள்ளி, தில்லை (கோயில்), துருத்தி, பழனம், பராய்த்துறை, பனையூர், புறம்பயம், பூவணம், மதுரை, வாஞ்சியம், வெண்காடு, அவிநாசி, ஆரூர், ஆனைக்கா, இடைமருது, ஈங்கோய்மலை, கழுக்குன்று, கழுமலம். - ஆக 24.

பழைய ஏட்டுப் பிரதிகளுள் ஒன்றில், "மாணிக்க வாசகர் பாடல் திருப்பதிக் கொத்து'  என்ற தலைப்பில், 15 வரிகள் உடைய ஓர் ஆசிரியப்பா காணப்படுகிறது. இது, ''மூவரும் ஓதிய முதுபதி''  நீங்கலாக, ஏனையவை இருபது என்று எண்ணிக் கூறுகிறது. இப்பாடல் பின்வருவதாகும்.

வாதவூர்          இறைவன்         ஓதிய             மொழிகளுள்
மூவரும்          ஓதிய             முதுபதி           ஒழியத்
தீதிலாப்           பதிமற்று          யாதென           வினவில்
திருப்பெருந்       துறையும்         திருக்கோ         கழியும்
கூர்புகழ்           உத்தர            கோச             மங்கையும்
பட்ட              மங்கை           பாண்டூர்           கூவிளம்
நந்தம்             பாடி             நற்கல்            லாடம்
வீறும்             ஓரியூர்            வேலம்           புத்தூர்
சாந்தம்            புத்தூர்            சந்திர             தீபம்
பாலை            பஞ்சப்            பள்ளி             நகரும்
மந்திர             மாமலை          மயேந்திர          மலையும்
அரிகே            சரியும்            பெரிய            மொக்கணியும்
தேவூர்த்           தென்பால்         திகழ்பொரு       தீவும்
கவித்தல          முடனே           கருதிய            இருப்பதும்
சிவக்கொழுந்      தகலாத்           தெய்வவுளத்       தலமே.

(பாடம் : வெல்லம்புத்தூர், பரிசப் பள்ளி நகர், முக்கணி.)

இங்கு இப்பாடலின் ஆசிரியர் திருப்பெருந்துறையும் திருக்கோகழியும் இரு தனித் தலங்களாகக் கணக்கிடுகிறார். இவர் கூறுகின்ற கூவிளம், கவித்தலம் என்ற இரண்டும், கீர்த்தித் திருவகவல் கூறும் குவைப்பதியும் கவைத்தலையும் போலும். மந்திர மாமலை, மயேந்திரமலை என்ற இரண்டு மலையைத் தனி இருதலங்களாகக் கணக்கிடுகிறார்.

இப்பாடல் திருவாதவூரைச் சேர்த்து எண்ணவில்லை. வாதவூர் மாணிக்க வாசகரால் ஒரே இடத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. "வாதவூரினில் வந்தினிதருளி பாதச் சிலம் பொலி காட்டிய பண்பும்'' என்பது கீர்த்தித் திருவகவல், வரி 52 - 53.

பாலை என்பது திருப்பாலைத் துறை என்ற பாடல் பெற்ற தலமாகச் சொல்வது உண்டு. 'சந்திர தீபத்துச் சாத்திரனாகி'' என்ற தொடரினால் சந்திரதீபம் என்ற ஆகமத்தைக் குறிப்பிட்டதாகக் கொள்வதும் உண்டு. தேவூர் என்ற தலத்தை இவர் திருவாசகத்தில் உள்ள படியே'தேவூர் தென்பால் திகழ் பொருதீவு'என்றே கொண் டிருக்கிறார். இது தேவை (தேவூர்) என்று வழங்குகின்ற இராமேசுவரத்திற்குத் தென் கிழக்கில் உள்ள இலங்கைத் தீவைக் குறிக்குமோ என்று ஐயுறுவதற்கு இடமாகும். கீழ் வேளுருக்கு அருகேயுள்ள சுந்தர மூர்த்தி தேவாரம் பெற்ற திருத்தேவூர் என்பதும் வழக்கு.

இடவை என்பது இடவாய் எனவே பலர் பொருள் கொண்டிருக்கிறார்கள். இது கல்வெட்டின் மூலம் சம்பந்தர் பதிகம் கிடைத்துள்ள இடமாகிய திருவிடைவாய் (இடவை - இடைவாய் - திருவிடைவாய்) ஆகுமோ என்ற ஐயம் எழுவது இயல்பு. கீர்த்தித் திருவகவல் 65 ஆவது வரி குறிப்பிடுகின்ற காடு என்பது தனித்தலமா என்பதும் சிந்தித்தற்குரியது. பூவலம் அவ்விதமே.

இனி பேணு பெருந்துறை, திருவம்மானையில் இருப்பாடல்களில் (10, 19) குறிப்பிடப்பட்டுள்ளது. முதற் பாடல் "பேணு பெருந்துறையில் - கண்ணார் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட - அண்ணாமலையானை'' என்று வருகின்றது. சிவபெருமான் குருமூர்த்தமாக எழுந்தருளி மாணிக்க வாசகரை ஆட்கொண்டதலம் திருப்பெருந்துறை; எனவே பேணு பெருந்துறை இங்கு பெருந்துறையே என்று கருதுகிறோம். எனினும் தேவாரப்பாடல் பெற்ற பேணு பெருந்துறை என்ற மற்றொருதலம் கும்ப கோணத்தின் அருகில் இருப்பது நமக்கு நினைவிருத்தல் வேண்டும்.

பாவநாசம் என்ற தொடர் மூன்று இடங்களில் பயில்கிறது. "பாவ நாசம் ஆக்கிய பரிசு''  என்ற கீர்த்தித் திருவகவல் வரி 57 பாவத்தை நாசமாக்கிய என்ற பொருள் தருகிறது. "பாவநாசா - உன்பாதமே அல்லால் - பற்று நான் மற்றிலேன் கண்டாய்'' என்பது வாழாப் பத்து 9. ஆம் பாடல்.'' பாவநாச, நின்சீர்கள் பாடவே'' என்பது திருச் சதகம் 99 ஆம் பாடல். சிவபெருமானை இங்கு 'பாவநாசா' என்ற பெயரால் விளிக்கிறார். இத்தொடரானது பாவநாசம் என்ற தலப்பெயரை நினைவூட்டுவதா என்பதும் கருதத் தக்கது. பாவநாசம் என்ற பெயருடன் தமிழ் நாட்டில் இரண்டிடங்கள் உள்ளன. "காரார் கடல் நஞ்சை உண்டு கந்த காபாலி" (பூவல்லி 10) என்ற தொடர் திரு மயிலாப்பூரைச் சுட்டும் என்று கொள்வோரும் உளர்.
மொக்கணி பற்றிய வரலாறு மொக்கணீச்சுரம் என்ற கோயிலால் விளங்கும்; இது கொங்கு நாட்டில் உள்ளது.

திருபெருந்துறை - திருகோகழி பற்றிய குறிப்பு இனித் தனியே எழுதுவோம்.

முற்குறித்த பாடல் கூறும் கூவிளம், கவித்தலம் என்ற தலக் கருத்துக்கள் புதியன; ஆராய்தற்குரியனயே

மூவர் தேவாரப் பதிகம் பெற்ற தலங்கள் 274, தேவார வைப்புத்தலங்கள் 249, ஆகத்தலங்கள் 523 என்று, சென்ற நூற்றாண்டில் அச்சிடப்பெற்ற செந்தில்வேல் முதலியார் அடங்கன் முறைப் பதிப்பிலும் ராமசாமிப் பிள்ளை அடங்கன் முறைப் பதிப்பிலும் கணக்கிடப் பட்டுள்ளன. அப்பதிப்புகளிலேயே திருவாசகத்துத் தலங்கள் 2, திருவாசக வைப்புத் தலங்கள் 12, ஆக 14 என்ற கணக்கும் பின்வருமாறு காணப்படுகிறது:

திருவாசகத் தலங்கள் 2:
1. திருவுத்தரகோச மங்கை     
2.திருப்பெருந்துறை

திருவாசக வைப்புத் தலங்கள் 12:
1. கல்லாடம்                         7. மொக்கணி
2. பஞ்சப்பள்ளி                       8. பூவலம்
3. நந்தம்பாடி                         9. பட்டமங்கை
4. வேலம்புத்தூர்                     10. ஓரியூர்
5. தர்ப்பணம்                         11. பாண்டூர்
6. சாந்தம்புத்தூர்                      12. மந்திர மாமலை

இப்பதினான்கினுள், கோகழி (தனி) குவைப்பதி, சந்திர தீபம், பாலை, மயேந்திரமலை, அரிகேசரி, தேவூர்த் தென் பால் திகழ்தரு தீவு, கவைத்தலை என்பன சேர்க்கப் பெற வில்லை. பூவலம், தர்ப்பணம் சேர்க்கப் பெற்றுள்ளன. தர்ப்பணம் என்பது கண்ணாடி; ஒரு தலத்தின் பெயர் அன்று.

சித்தாந்தம் – 1964 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment