Saturday, May 9, 2020



திருவாசக உரைப் பதிப்புக்கள்

[பத்திரிகாசிரியர்]

திருவாசகத்துக்குப் பொருள் கூற வேண்டுமென்று அன்பராயினார் மாணிக்கவாசகரைக் கேட்டபோது, அவர் "கனகசபை எதிரே போய்ச் சொல்வேன்" என்று கூறி, அனைவரையும் அழைத்துச் சென்று, "இந்நூலின் பொருள் இவரே'' என்று அம்பலவாணரைக் காட்டிச் சபையில் சென்று மறைந்தார் என்று திருவாதவூரர் புராணம் கூறும். அது முதல் திருவாசகத்துக்குப் பொருள் கூறலாகாது என்று ஒரு மரபும் தமிழ் நாட்டில் வழங்கி வருகிறது. ஆனால் சிவப்பிரகாசர் போன்ற பெரும்புலவர்கள், "திருவாசகம் இங்கு ஒரு கால் ஓதில், கருங்கல் மனமும் கரைந்து உகக், கண்கள் தொடுமணற் கேணியில் சுரந்து நீர்பாய, மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி, அன்பராகுநர் அன்றி, மன்பதை உலகில் மற்றையர் இலர்" என்று கூறுவார்கள். கருத்து, திருவாசகம் பொருள் சொல்லும் அவசியமே இல்லாது, கேட்ட மாத்இரத்தே இதயம் நெகிழவைக்கும் இயல்புடையது என்பதே.

எனினும், சென்ற நூற்றாண்டின் இறுதியிலிருந்து, திருவாசகத்துக்குப் பொருள் கூறும் முயற்சி இருந்து வந்திருக்கிறது. பெரும்பான்மை உரைகள் இலக்கிய நயத்தை மட்டும் உணர்த்துவனவேயன்றி சிவானுபவத்தை எடுத்துரைக்கும் ஆற்றலுடையனவல்ல. அவ்வாறு பலர் எழுதிய உரைகள் அச்சாகின்றன. அவை பற்றிய குறிப்பைக் கீழே காணலாம்.

1. வாசுதேவ முதலியார் உரைப் பதிப்பு:

முதலில் வெளிவந்த உரைப் பதிப்பு, இது என்று தெரிகின்றது. இது "சில வித்துவான்களால் இயற்றப்பட்ட உரையும் புராண வசனமும்" கொண்டது. 1897 (ஏவி ளம்பி) வருஷத்தில் சென்னை ரிப்பன் அச்சுயந்திரசாலையில் தமிழ்ப் பண்டிதர் பட்டாளம் - வாசுதேவ முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. ஐதிகப்படங்கள் சில உள்ளன. கிரவுன் அளவு, 536 பக்கம். நூலின் முற்பகுதியாக, புராண வசனத்தோடு, பழைய திருப்பெருந்துறைப் புராணத்தில் திருவாசகச் சிறப்புக் கூறும் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. பிற்பகுதியாக, "புணர்ப்ப தொக்க'' என்ற திருச்சதகப் பாடலுக்குச் சிதம்பர சுவாமிகள் உரை, திருவெம்பாவைப் பதிகத்தின்விளக்கம், திருப்படையாட்சி முதற்பாட்டு விளக்கம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இப்பதிப்பில் மிகைப் பாடல்கள் இல்லை. இவ்வுரையானது பதவுரை, கருத்துரை, விசேட உரை என்ற மூன்று விரிவான பகுதிகளை உடையது. ஆங்காங்கு திருவாதவூரர் புராண மேற்கோளும் தொடர்பும் சேர்க்கப்பட்டுள்ளன. பிற்பட்டு வந்த உரைகாரர் பலருக்கும் இவ்வுரையே மூலமாகவும் வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறது.

வாசுதேவ முதலியார் வித்தியா விநோதினி என்னும் பெயரால் ஒருமாதச் சஞ்சிகை ஏற்படுத்தி, அதன் வாயிலாகத் தாயுமானவர் பாடல், பட்டினத்தார் பாடல், தனிப் பாடல் முதலிய பல நூல்களை வெளியிட்டதாகவும், பின்னர் தமக்கு உதவியாய் இருந்த சம்பந்த முதலியார் என்பவர் தேகவியோகம் அடைந்ததனால் சஞ்சிகையை நிறுத்தி முழுப்புத்தகமாக வெளியிடக் கருதி, இப்போது திருவாசகவுரை வெளியிட்டதாகவும் கூறுகிறார். அன்றியும் அவர் திருவாசகத்துக்கும் "பழைய உரை ஒன்று ஏட்டில் எழுதப் பட்டுப் பல இடத்தும் உள்ளது'' என்று குறிப்பிட்டிருக்கிறார். இவ்வுரை, சாமிநாதையர் நூல் நிலையத்தார் வெளியிட்ட காழித் தாண்டவராயர் உரையா அல்லது வேற என்பது விளங்கவில்லை,

இப்பதிப்பின் பழைய புத்தகம் ஒன்றில் இவ்வுரை காஞ்சீபுரம் இராமசாமி நாயுடு இயற்றிய உரை' என்று பென்சிலால் எழுதிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது. பெரு நூல்கள் பலவற்றுக்கு உரை எழுதிய இராமசாமி நாயுடுவே இவ்வுரையை எழுதி, அதில் தம் பெயரை வெளிப்படுத்தாமல் இருந்திருத்தல் கூடும்.

2. ராமசாமி முதலியார் உரைப் பதிப்பு:

பிருங்கி மாநகரம் ராமசாமி முதலியார் பதவுரை 1897 இல் (ஏவிளம்பி சிங்கரவி) இந்து யூனியன் அச்சுக் கூடத்தில் வெளியாயிற்று. டெம்மி524 பக்கம். முற்பகுதியில் திருவாசகச் சிறப்பு கொண்டது. மாணிக்க வாசகர் கோயில் முன் நிற்பதாகிய படம் ஒன்று மட்டும் உள்ளது. இதுவும் பதவுரை கருத்துரை, விசேடஉரை என்ற பகுதிகள் அமைந்தது. இவ்வுரை முந்திய உரையைக் கருத்தளவில் அடியொற்றி வந்திருக்கிறது. புத்தகம் நியூஸ் பேப்பர் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. பதிப்பாசிரியர் சுவையான சில செய்திகளைக் கூறுகின்றார் சிதம்பர சுவாமிகள் திருவாசக உரை எழுத ஆரம்பித்து உண்மைக் கருத்து விளங்காமல் நிறுத்தி விட்டனர்; திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயர் சில பாசுரங்கட்கு மாத்திரம் எழுதிய உரை எங்கும் பரவி இருக்கிறது; சில வருடங்களுக்கு முன் தென்னாட்டுப் புலவரொருவர் இத்திருமுறை முழுமைக்கும் ஓருரை எழுதி இச்சென்னையிற் பிரசித்தி யுற்றிருந்த காஞ்சிபுரம் சபாபதி முதலியார், புரசை - அஷ்டாவதானம் - சபாபதி முதலியார், யாழ்ப்பாணத்து நல்லூர் - ஆறுமுக நாவலர் முதலிய வித்துவ சிரோமணிகள் சமூகம் கொண்டு வந்தனரென்பதும், இன்னமும் அவ்வுரை, நாவலரவர்கள் வளவிலிருக்கின்ற தென்பதும் பிரசித்தமே. அதுபோலவே மிகவும் கிலப்பட்டு எடுப்பதற்கும் படிப்பதற்குமே சாத்தியப்படாத நிலைமையினை யடையதோர் பிரதி எனக்குக் கிடைக்க அதை யான் கண்ணுறுமளவில், அத்திருமுறைக்குப் பிரதிபதமமைந்த ஒருரையேனும் இருக்கில் மிகவும் பயனுடைத்தாமெனக் கருதி ஒருவாறு பதவுரையாகத் திருத்துவித்து அச்சிற் பதிப்பித்தனன்."

இவர் பிரசித்தம் என்று குறிப்பிடுகின்ற செய்தி இத்தலை முறையில் யாருக்கும் தெரியாது. அவ்உரை வெளி வரவும் இல்லை. அன்றியும், இவர் ஏட்டில் கண்டதாகக் கூறி அச்சிட்டுள்ள இவ்வுரை எங்கும் ஏட்டில் காணப் உலது. இவ்வுரையும் வாசுதேவ முதலியார் பதிப்போடு நெருங்கிய தொடர்புடையது.

அருணகிரி முதலியார் பதிப்பு:

"ஜகதாசாரிய மூர்த்திகளாகிய மாணிக்கவாசகர் திருவாய்மலர்ந்தருளிய திருவாசகம், திருக்கோவையார் செய்யுட்டிரட்டு 2 ஆகிய இவை சோளங்கிபுரம் சிவ ஸ்ரீ அருணகிரி முதலியாரால் 1906 விசுவாவசுபங்குனியில் குறிப்புரையோடு சென்னை வித்தியா பாஸ்கர அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டன. இதனுள் குறிப்புரையும் சிறப்பான 60 விஷய சூசனங்களும் உள்ளன. இது உரைப்பதிப்பு அல்ல என்றாலும், சூசனமாகிய சிறப்புப் பொருந்தியது. இதன் இரண்டாம் பதிப்பு, அகத்தியர் தேவாரத் திரட்டு முதலியவற்றோடு சேர்ந்து பன்னிரு திருமுறைத்திரட்டுத் தொகுப்பாக 1927 இல் வெளி வந்தது.

3. முருகேச முதலியார் உரைப் பதிப்பு:

இது "நெ. முருகேச முதலியாரிடம் பாடம் கேட்டவாறு பா. மாசிலாமணி முதலியாரால் ஒருவாறு உரை எழுதப்பட்டு'' சென்னை பத்மநாப விலாச அச்சுக்கூடத்தில் 1907 இல் பதிப்பிக்கப்பட்டது. இதனுள் பாட்டும் உரையும் தவிர முற்பகுதி பிற்பகுதி எவையும் இல்லை; உரையானது வாசுதேவ முதலியார் பதிப்பை அடி யொற்றி அமைந்தது. டெம்மி 544 பக்கம்.

கதிரைவேல் பிள்ளை குறிப்புரை (1915)

இவர் தம்முடைய அருட்பாத் தொகுப்பில் திருவாசகம் முழுமையும் அச்சிட்டிருக்கிறார். அன்றி மிகச் சுருங்கிய குறிப்புரை ஒன்றும் எழுதியுள்ளார். மேலும் திரு வெம்பாவை, திருப்படையாட்சி முதற் பாடல் விளக்கம் முதலிய குறிப்புக்களும் இருக்கின்றன.

மறைமலை அடிகள் விரிவுரை:

சிவபுராணம் முதலிய முதல் நான்கு பகுதிகளுக்கு மட்டும் மறைமலை அடிகள் எழுதிய விரிவுரை முதல் 20 பதிப்பு 1923 இலும் (? ஆண்டு குறிப்பிடவில்லை) இரண்டாம் பதிப்பு 1948 இலும் வெளிவந்தது. இதில் எவ்விதமான முன்னுரை பின்னுரை இல்லை. நூல் வெளிவந்த காலத்தில் இதற்கு மிகப் பலவான கண்டனங்கள் எழுந்தன. டெம்மி பக்கம் 382.




4. கா. சுப்பிரமணிய பிள்ளை உரை:

இது சென்னை சைவ சித்தாந்த மகா சமாஜத்தார் 1933 இல் வெளியிட்ட பொழிப்புரை. சுப்பிரமணிய பிள்ளை பெற்றிருந்த கல்விச் சிறப்பிற்கு ஏற்ப உரைச் சிறப்பு இந்நூலுள் இல்லை. பொருட் பிழைகள் உள்ளன. இது பற்றியே பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், வேங்கடசாமி நாட்டார், சரவண முதலியார் போன்றோர் திருத்தங்களை எழுதி உதவினர். இது மறுபதிப்பு இரத்தின நாயகர் கம்பெனியாரால் வெளியிடப் பட்டுள்ளது. கிரவுன் 544 பக்கம், மாணிக்கவாசகர் சரித்திரமும் ஆராய்ச்சிக் குறிப்பும் கொண்டது.

5. சுந்தர மாணிக்கயோகீசுவரர் உரை:

உண்மை ஞான விளக்க உரை, ஈ. சுந்தர மாணிக்க யோகீசுவரர் எழுதிய உரை. பொழிப்புரை, குறிப்புரை, திருமந்திர மேற்கோளும் கொண்டது. சென்னைவேப்பேரி பிரம்ம வித்தியா சங்கத்தார் திருப்பதி ஸ்ரீ மஹந்த் அச்சுக் கூடத்தில் 1939 சுக்கில ஆனி அச்சிட்டது. டெம்மி 918 பக்கம். இவ்வுரைகாரர் - திருவாசகத்தில் அடங்கியுள்ள இரகசியங்களையும் யோக நெறியில் நின்று உணர வேண்டியவற்றையும் காட்டுவதற்காகவே எழுதியதாகக் கூறு கிறார். பெருந்துறை, சிதம்பரம், வெண்காடு, உத்தர கோசமங்கை முதலிய பெயர்கள் தலங்கள் அல்ல, ரகசிய தத்துவங்களை உள்ளடக்கிய குறியீடுகள் என்பார் இவர். யோகசாதனை, ஞான சாதனை ஆகியவற்றை விளக்க முற்பட்டு இருப்பதால் இவர் கொண்டிருக்கும் பதச்சேதமும் சொல்வடிவமும் இலக்கண விதிகளுக்குப் புறம்பாக உள்ளவை. இவருடைய உரையில் திருவாசகம் காணப்படுமா என்பது சந்தேகம்.

சமாஜக் குறிப்புரைப் பதிப்பு:

1939 கிரவுன் பக்கம் 288 அ. சோமசுந்தரம் செட்டியார் எழுதிய அரும்பொருள் விளக்க உரையாகிய குறிப்புரை உடையது.

நெல்லையப்ப பிள்ளை திரட்டு:

"திருவாசக அருள் முறைத் திரட்டு'" என்ற பெய ரில் சிந்து பூந்துறை, பென்ஷன் தாசில்தார், சைவ சித்தாந்தப் பெரும்புலவர் நெல்லையப்ப பிள்ளை தொகுத்து எழுதிய பதவுரை, விளக்க உரை கொண்ட தொகுப்பு 1943 இல் வெளியாயிற்று. இதனுள் 112 பாடல்கள் உள்ளன. ஆராய்ந்து எழுதிய மாணிக்கவாசகர் வரலாறு உள்ளது. கிரவுன் 480 பக்கம். இது ஒரு சித்தாந்த சாஸ்திரக் கருவூலம் எனத்தக்க மிகச் சிறந்த பதிப்பு.



பண்டிதமணி உரை:

கதிரேசஞ் செட்டியார் எழுதிய திருச்சதக உரை, நீத்தல் விண்ணப்ப உரை. திருவெம்பாவை உரை முதலியன 1947 - 50 முதலான ஆண்டுகளில் வெளியாயின. இவர் கருத்துரை, பதவுரை, விளக்க உரையாக எழுதி இருக்கிறார். இலக்கிய நயம்புலப்படுத்தும் உரை; திருச்சதகம் டெம்மி 468 பக்கம், நீத்தல் விண்ணப்பம் டெம்மி 180 பக்கம்.

தருமபுர ஆதீனக் குறிப்புரை:

தண்டபாணி தேசிகர் எழுதிய குறிப்புரையோடு கூடியது. 1947 கிரவுன் பக்கம் 420. நூல் ஆராய்ச்சி முதலியன மட்டும் 134 பக்கம்; உரை திருத்தம் இல்லாதது.

6. நவநீத கிருஷ்ண பாரதியார் உரை:

1956 டெம்மி 1224 பக்கம். இது யாழ்ப்பாணத்துப் பேராசிரியராக உள்ள பண்டிதமணி நவநீத கிருஷ்ண பாரதியார் எழுதி, இலங்கை பத்மா பதிப்புக் கழகத்தார் வெளியிட்டது. ஆசிரியர் திருவாசகம் முழுமையும் அகத்துறை நூல் என்றே வைத்துப் பொருள் எழுதியிருக்கிறார். எல்லா இடங்களிலுமே மிக வலிந்த பொருள்.

திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி விளக்கவுரை:

ரா. சண்முக சுந்தரஞ் செட்டியார் 1960 சைவ சித்தாந்த மகா சமாஜப் பதிப்பு, கிரவுன் 176 பக்கம் பயனு டைய நல்ல உரை.

7. திருவாசக அனுபூதி உரை.

காழித்தாண்டவராயர் என்ற பெரியார் திருவாசகத்துக்கு எழுதிய வியாக்கியான மாகிய இவ்வநுபூதி உரை இரண்டு பாகமாக சாமிநாதய்யர் நூல் நிலையத்தாரால் 1954 இல் வெளியாயிற்று. டெம்மி 1040 பக்கம். இங்கு ஆசிரியர் தம்முடைய அனுபவத்துக்கும் பயிற்சிக்கும் ஏற்ப திருவாசகத்திற்குப் பலவிதத்தில் பொருள் எழுதியிருக் கிறார். காலம் (சகம் 1786) கி. பி. 1834 இதில் சிவபுராண உரையுள் ஆசிரியர், திருக்கோவையார் பேரின்பத்துறை அனுபூதி விளக்கம் எழுதி இருக்கிறார். இந்நூலில் சிறப் பான பொருட் குறிப்பு அகராதி சேர்க்கப்பட்டுள்ளது.

8. மலிவுப் பதிப்பு.

1963 இல் புலியூர்க் கேசிகன் தெளிவுரை என்ற புத்தகம் வெளியாயிற்று. கிரவுன் பக்கம் 614.
9. கழகப் பதிப்பு.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் 1963 இல் சித்தாந்த பண்டிதர் க. இராமநாத பிள்ளை எழுதிய விளக்கவுரை வெளியிட்டனர். கிரவுன் பக்கம் 848 இதனுள் மரபுக்கு முரணான செய்திகளும் சொற்பொருள்களும் காணப்படும்.

ஆங்கிலப் பதிப்பு.

இனி திருவாசக ஆங்கிலப்பதிப்புக்களுள் சிறப்பானது டாக்டர் ஜி. யூ. போப் 1900 இல் மொழி பெயர்த்து வெளியிட்ட ஆங்கிலப் பதிப்பு. பக்கம்540. இதனுள் போப் எழுதியுள்ள முகவுரை, மாணிக்கவாசகர் வரலாறு சில குறிப்புக்கள் ஆகியயாவும் மிகச் சிறப்பானவை. திருவாசகத்தின் யாப்பைப் பற்றியும் நல்ல குறிப்பு எழுதியிருக்கிறார். பக்கந் தோறும் மேல்பாதி தமிழும் கீழ்ப்பாதி ஆங்கிலமுமாக அச்சிடப்பட்டுள்ள. சிறப்பான தமிழ்ச்சொல் அகராதியும் ஆங்கில விஷய சூசிகையும் உள்ளன. திரு வாசக ஆராய்ச்சிக்கு இம்மொழி பெயர்ப்பு மிகச் சிறப்பாகப் பயன் படத்தக்கது. இப்பதிப்பை அப்படியே புகைப்படம் எடுத்து சென்னைச் சர்வகலாசாலையார் மறுபதிப்பு அச்சிட்டு இருக்கிறார்கள்.

சித்தாந்தம் – 1964 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment