Saturday, May 9, 2020



திருவள்ளுவரும் - திருநாவுக்கரசரும்
[இரா. கு. நல்ல குற்றாலம் பிள்ளை]
ஓய்வுறும் வழக்குரைஞர், இராசபாளையம்.

வாலறிவன் - தூய அறிவினனாகிய கடவுளின் தொடர் பினைப் பெருக்கி நற்றாள் தொழா ரெனின் - அவன் பொய் தீர் ஒழுக்க நெறியில் நில்லாரெனின், கற்றதனாலாய பயன் என்கொல்?

தம் கருமம் - கடமையைச் செவ்வனே செய் வார்யா வரும், வள்ளுவத்தவஞ் செய்வாராவர். அத்தவத்தின் கரு பண்புடைமை (Positive basis) யும் தீவினை யச்ச (Negative basis) மும் ஆகும். பண்புடைமை நற்குண நற்செயல்களின் ஊற்றாம் நல்லியல்பாகும்; தீவினையச்சம் பிறர் பழிப்பரென அஞ்சி தீயன நினைத்தலும், சொல்லலும், செய்தலும் தவிர்த்து அவற்றினை ஒழித்தலாகும். தவத்தின் உரு, உற்றநோய் நோன்றலும் உயிர்க்குறு கண் செய்யாமையுமாகும். உற்ற நோய் தோன்றலாவது தம் முடல் இயல்பாலும் தாம் மேற்கொண்டுள்ள விரதம் முதலிய நோன்புகளாலும் அக்கம் பக்கம் வெட்ப தட்பத்தாலும் பிறவற்றாலும் பிறராலும் தாமுறும் இடரினையும் துயரினை யும் தம்பால் சலிப்பின்றியும் பிறர் பால் வெறுப்பின்றியும் பொறுத்துக் கொள்ளலாம். உயிர்க்கு உறுகண் செய்யாமை யாவது பிற உயிர்மேல் - சிற்றுயிர்மேலும் சீறாமையும், அவற்றினை அச்சுறுத்தாமையும், துன்புறுத்தாமையும், கொல்லாமையும், புலாலுண்ணாமையுமாகும். நம் நல்வாழ்க் கைக்கு இன்றியமையாத ஒழுக்கமும், அடக்கமும் (Self Restraint), நேர்மையும் (Justice), இன்சொலும் செய்ந் நன்றியுணர்வும் வள்ளுவத் தவநெறிப் பஞ்ச மூலங் களாகும். தீயனவெல்லாம் தவநெறிப் புறம்பாகும்.

நாம் இவ்வுலகில் பிறர் தொடர்பின்றி தனித்தியங்க, வாழக்கூடுவதில்லை. அத்தொடர்பினுக்கேற்ப, நம் நல்லியல் பாம்பண்புடைமையே தொல்காப்பியரின் தமிழக அன்பாகவும் வள்ளுவரின் புரைதீர்ந்த நன்மை பயக்கும் வாய்மையாகவும் மலரும்; மற்றும் நற்குணங்களெல்லாம் அதன் தாள்களா கவும் நற் செயல்களெல்லாம் அதன் இதழ்களாகவும் அமையும். இந்நிலையில், தீவினையச்சமும் நாணமாக மலரும் : தீயனவற்றிற்குப் பிறர்க்காக அஞசுவது ஒழிந்து, தாமே நாணுவது இந்தாணமாகும். இதனினும் தீயன நினைத்தற்கும் நாணும் மகளிர் நாணமும், பிறர்பழிக்கு நாணும் நாணமும் ஒவ்வொரு வகையில் சிறந்தனவாகும். இம்மூன்றுடன் பிறர் குற்றம் குறைகளைத் தாங்குதலும் பிறர் இடரினையும் துன்புறு நிலையினையும் காணப் பொறுக்காது அவற்றினை நீக்கு தலுமாகிய கண்ணோட்டமும் பிறரெவரும் தம் ஒப்ப நல் வாழ்வு வாழ்வதற்கு உதவுதலும் அது போன்றே கைம்மாறு கருதாது பிறர் பலர் நல்வாழ்விற்கு ஆவன (Social amenities) அமைத்தலுமாம். ஒப்புரவும் சேர்ந்து வள்ளுவ அன்பு நெறிப் பஞ்ச சீலமாகும். இப்பஞ்சசீலம் கைவரப் பெற்றவரே, வள்ளுவப் பெரியார் ஆவர். கண்ணோட்டமும் ஒப்புரவும் மலரின் மணமாகும்.

இவ்வன்பு நெறியே அருள் நெறியாகவும், மிளிர்ந்து நிறைவினையும் பெருக்கும். இந்நிறைவுப் பெருக்கினில் வாழ்பவரே வள்ளுவச் சான்றோராவர். சான்றாண்மை கனியாகும்.

வள்ளுவத் தவநெறி அடியாரேயாயினும், அன்பு நெறிப் பெரியாரேயாயினும் அருள் நெறிச் சான்றோரே யாயினும் தம் முயற்சியால் வந்த அடுபுற்கை சுடுகஞ்சியா யினும் உண்டு வாழ்வரேயன்றி பிறர்பால் இரந்துண்ணார். எவர்க்கும் காவாது ஒன்று ஈவார்; தத்தம் அறநெறியினைப் பெருக்கி மிளிரவும் செய்வர்; பிறரெவரையும் தம் ஒப்ப மதிப்பர்; அன்பு, பெருகப் பெருக தத்தம் அளவில் பிற சோடு பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலும் செய்வர்; முடிவில் வள்ளுவரின் பேரா இயற்கையும் (Eternal bliss) அடைவர்.

இவ்வருள் நெறியினையே, மெய்ம்மையாம் உழவைச் செய்து, விருப்பெனும் - அன்பெனும் வித்தை வித்தி பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப் பாய்ச்சி பழிக்கு நாணி தம்மையும் நோக்கிக் கண்டு (Over introspecting and improving oneself) தகவெனும் (propriety) வேலியிட்டு கண்ணோட்டம் ஒப்புரவெனும் செம்மையுள் நிற்பராகில் சிவகதியாம் சீவன் முத்திவிளையு மெனத்திருநாவுக்கரசரும் போற்றுவாராயினர்.  

சித்தாந்தம் – 1964 ௵ - பிப்ரவரி ௴


No comments:

Post a Comment