Saturday, May 9, 2020



திருவல்லம்

[ந. ரா. முருகவேள்]

[* திருவல்லம் மாதாந்தர வழிபாட்டில் வித்துவான் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் தலைமையிற் பேசியதனைத் தழுவியது. (21 - 10 – 1962)]

தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற தலங்களுள் திருவல்லம் என்பது ஒன்று. இதனை இப்போது திருவலம் என்று மக்கள் வழங்கி வருகின்றனர். விநாயகர் அம்மையப்பரை வலம் வந்து மாங்கனி பெற்ற வரலாற்றை இதனோடு இணைத்துக் கூறி, அதனால் இது திருவலம் எனப் பெயர் பெற்ற தென்றும் சிலர் கூறுவர். இத்தலம் சென்னையில் இருந்து, 75 கல் தொலைவில், சென்னை பெங்களூர் நெடுஞ் சாலையில், பாலாற்றின் கிளை நதியாகிய நுகாவின் மேற்குக் கரையில் அமைந்து விளங்குகின்றது. நுகா நதியினைப் 'பொன்னை' அல்லது நீவா' என்னும் பெயர்களாலும் மக்கள் வழங்குகின்றனர்.

வல்லம் என்ற பெயரால் தமிழ் நாட்டில் ஊர்கள் பல உள்ளன. தமிழிலக்கண நூல்களில்,

வல்லம் எறிந்த நல்லிளங் கோசர் தந்தை
மல்லல் யானைப் பெருவழுதி

என்னும் தொடர் பயின்று வரும். ஆதலின், அது போன்றன வற்றிற் பிரித்து இதனைத் தனியே கிளந்தெடுத்துக் குறிப்பிடுதற்கு, ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் தீக்காலிவல்லம் " என இதனை அடைமொழி புணர்த்து வழங்குவர். தீக்காலி என்னும் அவுணன் இங்கு இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். ஆதலின் இதற்குத் தீக்காலிவல்லம் எனப் பெயர் வழங்குவதாயிற்று. ஆண் மகப்பேறு எய்தாமல் பெண் மக்களையே மிகுதியாகப் பெற்ற அந்தணன் ஒருவன், அப் பெண்மக்கள் சிவத்தொண்டே செய்து உய்யுந்திறம் பெற, இறையருளை வேண்டி வழிபட்ட சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.

தீது நீங்கிடத் தீக்காலி யாம் அவு ணற்கு
நாதர் தாம் அருள் புரிந்தது; நல்வினைப் பயன்செய்
மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்”

என்னும் பெரிய புராணச் செய்யுளால், இச்செய்திகள் விளங்கும். இறைவனுக்கு வல்லநாதர் என்றும் அம்மைக்கு வல்வாம்பிகை என்றும் பெயர் வழங்குகின்றது. தொண்டை நாட்டில் உள்ள மருதத் திணைக்குரிய தலங்களுள், திருவல்லம் திருமாற்பேறு திருப்பாசூர் என்னும் மூன்றினையும் சேக்கிழார் சுவாமிகள் சிறந்கெடுத்து இயம்பியுள்ளனர்.

திருவல்லம் கோயிலுக்கு "ஸ்ரீ இராஜ ராஜேசுவரம்'' என்ற பெயர் வழங்கிய தென்பது கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது. முதலாம் இராஜ ராஜ சோழ னின் (கி. பி. 985 - 1014) 4ஆம் ஆட்சியாண்டில், அவன் கீழ் உயர் அலுவலாளனாக விளங்கியிருந்த ஈராயிரவன் பல்லவராயனால், இக்கோயிலின் கருவறை கட்டப் பெற்றது. சிற்றரசர்களும், படைத்தலைவர் முதலிய உயர் அரசியல் அலு வலாளர்களும், தமக்குத் தலைவனாகத் திகழும் பேரரசனின் பெயரால் அறங்கள் செய்தலும், கோயில்கள் எடுப்பித்தலும் உண்டு. தம்முடைய தலைவனாகிய பேரரசன் பால் தமக்குள்ள அன்பையும் நன்றியையும் காட்டுதற் பொருட்டு இங்ஙனம் அவர்கள் செய்வர். எனவே முதலாம் இராஜராஜ சோழன் எடுப்பித்த தஞ்சைப் பெருவுடையார் (பிருகதீசுவரர்) கோயிலைப் போல, இதற்கும் இராஜராஜேசுவரம் எனப் பெயர் ஏற்படுவதாயிற்று. எனவே திருவல்ல நாதர்க்கு “இராஜ ராஜேசுவரம் உடைய நாயனார்'' எனவும் பெயர் வழங்கும்.

இராஜராஜ சோழனின் பெரிய பாட்டனாரும், பக்தி ஒழுக்கத்திற் சிறந்து பல கோயில்களை எடுப்பித்த செம்பியன்மாதேவி அம்மையாரின் கணவரும், திருவிசைப்பாப் பாடிய ஆசிரியர்களுள் ஒருவரும் ஆகிய சிவஞானகண்டராதித்தரின் புதல்வன் உத்தமசோழன் (கி. பி. 970 - 985) தன் ஆட்சியின் 7ஆம் ஆண்டில் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டான். அப்போது 1000 குடங்களாற் பெருமானுக்குத் திருமுழுக்குச் செய்யப் பெற்றது என்னும் செய்தியும் கல்வெட்டாற் புலனாகின்றது.

இராஜராஜ சோழனின் தமக்கை ஆகிய குந்தவைப் பிராட்டியை மணந்து கொண்ட வல்லவரையன் வந்தியத் தேவன் என்பவர், இவ்வூரைச் சேர்ந்தவர் என அறிஞர்கள் கருதுகின்றனர். (வல்லம் + அரையன் = வல்லவரையன்), இஃது இவ்வூர்ப் பெருமக்கள் பெருமிதத்துடன் நினைத்து மகிழத் தகுந்த செய்தியாகும்.

திருஞான சம்பந்தர் காஞ்சிபுரத்தை வழிபட்டதன் பின்னர், திருமாற்பேறு சென்று இறைஞ்சித் திருவல்லத்திற்கு வந்து வணங்கினார். இங்கிருந்து இலம்பையங் கோட்டூர், திருவிற் கோலம், தக்கோலம் (திருவூறல்) முதலிய தலங்களை வழிபட்டார். சம்பந்தர் பாடிய தேவாரப் பதிகம் இத் தலத்திற்கு உள்ளது. அதன்கண் சுவாமிகள் இவ்வூரினைக் "கற்றவர் திருவல்லம்" என்று பாராட்டியிருப்பதும் நினைத்து மகிழ்தற்குரியது.

திருநாவுக்கரசர் இங்கு வந்ததாகத் தெரியவில்லை. அவரது பாடல் இத்தலத்திற்கு இல்லை. சேக்கிழார் பெருமான், திருநாவுக்கரசர் காஞ்சிபுரத்தில் தங்கிச் சில காலம் தொண்டு செய்து கொண்டிருந்தார் என்றும், அதுபோது திருமாற்பேறு அணைந்து தமிழ் பாடினர் என்றும், காஞ்சி யினின்று திருக்கழுக்குன்றம் திருவான்மியூர் திருமயிலை திருவொற்றியூர் திருப்பாசூர் திருவாலங்காடு முதலிய தலங்களுக்குச் சென்றார் என்றும் தான் கூறியருளுகின்றார். திருவல்லம் பற்றி அவர் குறிப்பிட்டிலர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் காஞ்சிபுரத்திலுள்ள தலங்களை வணங்கிக் கொண்டு, வன்பார்த்தான் பனங்காட்டூரை வழிபட்டுத் திருமாற்பேறு சென்று, திருவல்லம் எய்தி இறைஞ்சினார். இங்கிருந்து திருக்காளத்தி சென்றார். இவ் வழிவகைகளை யெல்லாம் சேக்கிழார் சுவாமிகள் ஏறத்தாழ1000 ஆண்டுகளுக்கு முன்பே மிகத் திட்ப நுட்பமாக ஆராய்ந்து கூறியிருக்கும் திறம், நம்மனோரை வியப்பிலும் விம்மிதத்திலும் ஆழ்த்துகின்றது. சுந்தரரின் தேவாரத் திருப்பதிகம் இத்தலத்திற்கு இருந்திருத்தல் தேண்டும். ஆனால் அஃது இன்று நமக்குக் கிடைக்கப் பெறவில்லை.

ஞானமூர்த்தி என்ற ஒரு துறவியால் இக்கோயிலின் அர்த்த மண்டபம், சகம் 1236 - இல் கட்டப் பெற்றதாகக் கல்வெட்டினால் அறிகின்றோம். இப்பொழுதும் ஸ்ரீ சிவானந்த மௌன சுவாமிகள் அவர்கள், பெருமுயற்சி எடுத்து இரண்டு நூறாயிரம் வெண்பொற் காசுகளுக்கு மேல் மதிப்பிடத் தக்க திருப்பணியைத் திருவருளாற்றலால் செய்து வருவது, நமக்கு மிக்க வியப்பினை அளிக்கின்றது. இந் நாளிலும் திருவருள் ஊற்றுச் சுரந்து கொண்டுதான் இருக் கின்றது; அது வற்றிப் போய்விடவில்லை என்னும் உண் மைபினைச் சுவாமிகள் அவர்களின் மூலம் உணர்ந்து நாம் இன்புறுகின்றோம்.

திருவானைக்கா என்னும் புகழ்பெற்ற சிவத்தலத்தில் இறைவனே ஒரு சித்தராக எழுந்தருளி அங்குள்ள திருமதிலைக் கட்டினர் என்றும், அம்மதில் கட்டுதற்குப் பணிபுரிந்த கூலியாளர்களுக்குத் திருநீற்றையே கூலியாக வழங்கினர் என்றும், அத்திருநீறு அவரவர்கள் செய்த உண்மையான வேலைக்குரிய கூளியளவு பொன்னாக மாறி வந்தது என்றும், அதனால் ஒருவரும் ஏமாற்ற முற்படாமல் ஒழுங்காக வேலை செய்தனர் என்றும், திருநீற்றையே கூலியாகக் கொடுத்துக் கட்டப்பெற்றதாதலின் அதற்குத் 'திரு நீற்றுத் திருமதில்" என்று பெயர் ஏற்பட்டதென்றும் பெரியவர்கள் கூறுவர்.

"எல்லாம் வல்ல தனதியல்பும்,
ஈண்டும் கருமம் தமக்கியைய
எல்லார் தமக்கும் பயன் உதவும்
இயல்பும், விபூதி எனும் பெயரைப்
புல்லா நின்ற திருநீற்றின்
பொலிவும் விளங்கக் கூலிக்கு
நல்லா தரவின் நீறளிப்ப
நயந்தார் நாவர் பெருமானார்"

தெளிக்கும் திரு நீறே. தத்தம்
      செய்கைக் கேற்பச் செழும்பொன்னாய்க்
களிக்கும் வகை செய்து அறன்கடைகள்
கதுவா தொழிக்கும் பெருஞ்சிறப்பால்
வெளிக்கண் ஒருத்தரைப்போல
விளையாட் டயரும் அமுதேசற்கு
ஒளிக்கும் வகை இன் றாய் எவரும்
உறுதி யோடு பணிபுரிவார்"

                                                 - திருவானைக்காப் புராணம்,
                                                 கச்சியப்ப முனிவர்.

திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் போன்ற வேறுபிற அருளாளர்களும், இங்கனமே திருநீற்றைக் கூலியாகக் கொடுத்துத் திருப்பணிகள் செய்தனர் எனக் கேள்வியுறுகின்றோம். ஸ்ரீ சிவானந்த மௌன சுவாமிகள் திருநீறு அளித்து, அன்பர்களுக்கு அவரவர்கள் விரும்பும் நலம் விளைத்து, அவ்வாற்றாற் பொருள் தொகுத்து, இவ்வளவு பெருஞ் செலவில் இந்நாளில் இத்திருப்பணியை இத்துணைச் செம்மையுற இயற்றி வருவது, மிக வியக்கத் தக்க அரும்பெருஞ் செயலேயாகும்.

சுவாமிகள் நாயோடு ஒருங்கிருந்து உண்ணும் செயல் ஒருவகையிற் பத்திரகிரியாரையும், பேய்க் கரும்பு தித்திக்கப் பெற்ற செயல் பட்டினத்தாரையும் நமக்கு நினைவூட்டி நிற்கின்றது. சுவாமிகள் மௌன விரதம் பூண்டு பேசாமல் இருந்தே இவ்வளவு பெருந்திருப்பணியை மிகவிரைவில் செய்து முடித்திருப்பது,  

  ''பேசாமை பெற்றதனில் பேசாமை கண்டனரைப்
  பேசாமை செய்யும் பெரும் பெருமான் - பேசாதே
  எண்ணொன்றும் வண்ணம் இருக்கின்ற யோகிகள் பால்
  உள் நின்றும் போகான் உளன்''

எனவரும் திருக்களிற்றுப்படியார் செய்யுள் போன்ற பல அருள்மொழிகளை, நம்மனோர் நினைவிற்குக் கொணர்கின்றது. மகாதேவ மலையில் திருப்பணி செய்து வரும் இவர் தம் குருவினையும், இன்று காலையில் நாம் வணங்கி மகிழும் பேறு பெற்றோம். ''நீத்தார் பெருமை" என்பதனை இந்நாளிலும் நாம் ஓரளவு உணர இப்பெருமக்கள் நமக்குத் துணை புரிகின்றார்கள்.

  'பாலருடன் உன்மத்தர் பசாசர்குணம் மருவிப்
     பாடலினோ டாடலிவை பயின்றிடினும் பயில்வர்...''

என்பன முதலாகச் சிவஞான சித்தியார் கூறும் சிவஞானியர் இயல்புகள் (சுபக்கம் 284, 285) ஒருசில சுவாமிகள் இடத்தில் காணப்படுகின்றன.

''உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
       அச்சாணி அன்னார் உடைத்து''
என்னும் திருக்குறளைச் சுவாமிகளின் நிலை நமக்கு அறிவுறுத்துகின்றது. அருளாளர்களின் (Saints and mystics) தவஆற்றலினை நம்மனோர் அளவிட்டுரைத்தல் இயலுமோ?

கான யானை தந்த விறகிற்
கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே''
  
      மந்தி சீக்கும் மாதுஞ்சும் முன்றில்
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறிலங்கும் அருவிய மலைகிழ வோனே

      கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
      பரந்திலங்கு அருவியோடு நரந்தம் கனவும்
      ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் "

எனச் சங்க நூல்கள் ஆங்காங்குக் குறிப்பிடுதலும், அப்பகுதிகளுக்கு உரையாசிரியர்கள்,

கான யானை தந்த விறகு என்றது,
இவன் தவ மிகுதியான் அதுவும் ஏவல் செய்தல்'
 
''மந்தி சீத்தலும் மாத் துஞ்சலும் களிறு விறகுதருதலும்
இருடிகள் ஆணையால் நிகழ்ந்தன என்றுணர்க)

"அருவியோடு நரந்தம் கனவும் என்றது, அவ்வாரியர்
ஆணையானே பிறவிலங்காணும் மக்களானும்
வருத்தம் இன்றிப் பகற்காலத்துத் தான்
நுகர்ந்த அருவியையும் நரந்தம்
புல்லையுமே கனவினும் காணும் என்றவாறு)

என விளக்கம் எழுதியிருத்தலும், நாம் சிந்தித்து உணரத்தகுந்த செய்தியாகும்.

சுவாமிகளைப் போன்ற பெருமக்களின் திருப்பணிகளால் சைவமும் தழைத்தினிதோங்கி மறுமலர்ச்சி பெற்று ஒளிவீசித் திகழும் காலம், மிக அண்மையில் உள்ளமை புலனாகின்றது.... வாழ்க சைவம்! வளர்க தமிழ்!

சித்தாந்தம் – 1962 ௵ - நவம்பர் ௴


No comments:

Post a Comment