Saturday, May 9, 2020



நக்கீரரும்
திருமுருகாற்றுப் படையின் பெருமையும்*
[கொழும்பு - அருள். தியாகராஜா]

* கொழும்பு நகரிலுள்ள சிவாலயமாகிய பொன்னம்பலவாணேசர் திருக்கோயிலில் மகா சிவராத்திரித் திருள்ளன்று நிகழ்த்திய சொற்பொழிவின் சாரமாகும்.

திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை நேரே காணும் பெருந்தவமுடையவரும், அவருடன் சற்றேனும் அஞ்சாது வாது செய்தவரும், அப்பெருமான் எமக்குகந்தளித்த இறை யனார் களவியல் என்னும்'அன்பினைந்திணை யென்றறுபது சூத்திரத்திற்கு'தித்திக்குக் தேனிலும் பாலினுமினிய பொருள் வளஞ் செறிந்த செவ்விய உரையியற்றியவருமான நக்கீரரின் பெருமையும்; கலியுக வரதரும், முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவருமாகிய குன்றமெறிந்த குமா வேளால் விரும்பப்பட்டதும், இவ்வுலகின் கணுள்ளவர்கள் மனமெய் மொழிகளொன்றிப் பேரன்புடன் பாராயணஞ் செய்யின், அவர்கள் வேண்டியவற்றை வேண்டியவாறே உதவுவதுமாகிய திருமுருகாற்றுப்படையின் மாண்பும், எம்மனோரால் அளவிடவல்ல தன்மையவன்று.

தெய்வ நல்லருள் பெற்ற நக்கீரரென்னும் இப்புலவர் பெருமான் மதுரைக் கணக்காயனார் மகனாவர். இவரது இயற் பெயர் கீரனாரென்பது. '' என்பது சிறப்புப் பொருளைத் தருவதோரிடைச் சொல். இவரை ஒருசாரார் சங்கறுக்கும் ஒருவகை வேதியர் குலத்தைச் சார்ந்தவரென்றும், மற்றொரு சாரார் வேளாளர் குலத்தைச் சார்ந்தவரென்றும் கூறுவர். இவரே கடைச்சங்க காலத்திலே சங்கப் பலகையிலே முதலிடம் பெற்றவரென்றும் கூறுப. இவர் பத்துப் பாட்டைச் சேர்ந்த நூலில் திருமுருகாற்றுப்படையும், நெடுகல்வாடையும் இயற்றியுள்ளார். மற்றும் இவர் இயற்றிய பாடல்கள், தொகை நூல்களாகிய நற்றிணையில் 7 - உம், நல்ல குறுந் தொகையில் 8 - உம், அகநானூற்றில் 17 - உம், புறநானூற் றில் 3 - உம் ஆக, மொத்தம் 35 ஆகும். பதினோராம் திரு முறையிலுள்ள கைலைபாதி காளத்திபாதியந்தாதி முதலிய 10 - பிரபந்தங்களையும் இவரே செய்தனரென்று பழைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாவினங்களின் ஒட்ப திட்ப நுட்பங்களை யுணர்ந்த சில புதிய ஆராய்ச்சியாளர்கள், அவற்றை மறுத்து, திருமுருகாற்றுப் படையொழிந்த எனைய பத்துப் பிரபந்தங்களெல்லாம் வேறொரு நக்கீரரால் இயற்றப்பட்டன வென்று அறைகின்றனர். இவர் வடமொழியில் திருக்காளத்தி ஞானப்பூங்கோதை ஸஹஸ்ர காமம் என்ற நூலொன்றைச் செய்ததாகக் கூறுவதும் உண்டு.

இவருடைய வரலாற்றை, திருவிளையாடற் புராணம், சீகாளத்திப் புராணம், திருப்பரங்கிரிப் புராணம் முதலிய புராணங்கள் நுவலுகின்றன. அவை இங்கு விரிப்பிற் பெருகும். இவர், இறையனார் இயற்றித் தருமிக்குக் கொடுத்த கொங்குதேர் வாழ்க்கை " என்று தொடங்கும் செய்யுளுக் குக் குற்றங்கூறி அச்சிவபிரானால் வாது செய்ய முடியாமல் நெற்றிக் கண்ணை திறந்து வெருட்டப்பட்டுப் பின் சபிக்கப் பெற்று, பின் அவ்விறைவனாரின் மொழிப்படியே கைலை நோக்கிப் பயணமாகி, காசி, திருக்கேதாரம் முதலிய பல ஸ்தலங்களையும் தரிசித்து இயைமலைச் சாரலை அடைந்தார். அங்கு ஓர் தடாகக் கரையிலுள்ள ஆலமரத்தடியில் தியானத்திலமர்ந் திருந்தனர். அப்பொழுது ஓராலிலையானது தீர்ந்து ஒரு பாதி கரையிலும் மற்றொருபாதி நீரிலும் பட விழுந்தது. நீரில் விழுந்த பகுதி மீனாயும், கரையில் விழுந்த பகுதி மீனையுண்ணும் பறவையாயும், மீன் சலத்திலும், பறவை நிலத்திலுமாக இழுக்க, அப்புதுமையைப் பார்த்து நக்கீரர் சிவபூசையில் தவறினதால், சிவபூசையில் தவறிய 999 பேரையும் ஓர்மலை முழையில் அடைத்து வைத்திருந்த பூதமானது, இவரையும் அவர்களுடன் எடுத்துக் கொண்டுபோய்ச் சேர்த்து வைத்து விட்டு, உண்ணுதற்கு நீராடப் போயிற்று. அப்பொழுது மற்றைய புலவர்கள் “இவ்வளவு காலமும் நாங்கள் நன்றாய்ச் சுகித்திருந்தோம். இன்று நீர் எங்களுடன் வந்த கால், பூதத்திற்கு இரையாகப் போகின்றோம் " என்று கூறி அமுதார்கள்.

அப்பொழுது நக்கிரன் நீதிக்குள் நின்ற மண்பர்களுக்கு பாவத்தில் அஞ்சல் வெக்னாம். பெரிய முருகப்பெருமானை நீள நினைந்து மனமுருகி இத்திருமுருகாற்றுப்படை யென்னும் பிரபந்தத்தை அருளிச் செய்தார். உடனே முருகப்பிரான் அப்புலவர் பிரானுக்கு முன்னே தோன்றி, அவரை யுண்ண வந்த பூதத்தைக் கொன்று அவர்களனைவோரையுஞ் சிறைவிடுத்துத் திருவருள் சுரந்தன ரென்பதாம்.

திருமுருகாற்றுப்படை யென்பது, முருகக் கடவுளிடத்தே வழிப்படுத்தும் பெருமையுடைய நூல் எனப் பொருள்படும். இது புலவராற்றுப் படை என்றும் வழங்கும். “புலவராற்றுப்படை புத்தேட்கு முரித்தே'' என்பது 'பன்னிரு பாட்டியல்'. இது தொல்காப்பியத்துப் புறத்திணையியலிலுள்ள “ஆற்றிடைக் காட்சியுறழத் தோன்றிப். பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச், சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” என்பதனால் பேறு பெற்றா னொருவன் அதனைப் பெறாத வொருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை ஆற்றுப் படுத்துவது என்பது பற்றிச் செய்த செய்யுள்.

முருகக் கடவுளுடைய திருவருளைப் பெற விரும்பு வோர் இதனை நியமமாக அன்புடன் பாராயணம் பண்ணினால் எண்ணியவை சித்திக்குமென்றும் இது கண்கூடென்றும் பெரியோர் கூறுவர்.

முருகப் பெருமான், திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை முதலிய ஆறுபடை வீடுகளில் எழுந்தருளி அருள் புரியும் செயலை நக்கீரர் அழகாகத் துதிக்கின்றார். இம்முறை வைப்பையே கச்சியப்ப சிவாசாரி யார் தாமருளிச் செய்த கந்தபுராணத்தில் முருகப் பெருமானின் கடவுள் வாழ்த்தில் எடுத்தாண்டிருத்தல் இங்கு இன் புறுதற்குரிய தொன்றாம். குமரகுருபர சுவாமிகளும் தாமி யற்றிய கந்தர் கலிவெண்பாவில்,
"உள்ளமு வந் (து)
ஆறு திருப்பதிகண் டாறெழுத்து மன்பினுடன்
கூறுமவர் சிந்தை குடி கொண்டோனே"
என அருளிச் செய்திருத்தலும் உற்று நோக்குதற்குரியதாம்.

மாணிக்கவாசக சுவாமிகள் திருச்சிற்றம்பலக்கோவை யாரின் கண்ணே,

"பற்றொன்றிலார் பற்றுந் தில்லைப்பரன் குன்றினின்ற
புற்றொன் றரவன் புதல்வ னெனநீ''

என்று திருப்பரங்கிரி முருகனையும், அப்பரடிகள் தேவாரத்தில் "நஞ்செந்தின் மேய வள்ளி மணாளர்க்குத் தாதை கண்டாய்" என்று செந்தூர்க் கந்தனையும் வாழ்த்தியிருத்தலை நினைத்தொறும், நினைத்தொறும், என் உள்ளத்தில் இன்ப ஆற்றானது “வாக்கிறந் தமுதம் மயிர்க்கா றோறும் தேக்கிடு வது" போலவிருக்கின்றது.

திருப்பரங்குன்றில் தம்மைச் சரணடைந்தவர்களைக் காத்தருளும் திருவடிகளை யுடையவரும், பகைவரைத் தேய்த்த கையினையுடையவரும், தெய்வ அறக் கற்பினையுடைய தெய்வயானை மணாளரும் வேற்படையினால் சூரனை அழித்தவருமாகிய முருகன் வீற்றிருக்கின்றார். அங்கு அவருடைய திருவடியை அடையும் நினைவுடன் வழிபடுபவர்கள் அவற்றைப் பெறுவார்கள்.

திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் வள்ளி மணாளனின் ஆறு திருமுகங்களின் தொழிலும் பன்னிரு திருக்கரங்களின் செய்கைகளும் மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் கூறப்பட்டுள்ளன. இதனை ஒவ்வொருவரும் அறிய வேண்டியது அவசியமாகும். குமரகுருபர அடிகள் இவற்றைத்தாமருளிச்செய்த திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பாவில் இனிது விளக்கியிருக்கின்றார்.

திருவாவினன்குடியில், முருகனை வழிபடும் முனிவர்கள் மரவுரி உடுத்த உடையையும், நரைமுடியையும், தூய்மையான வடிவத்தையும், என்பு தெரியும்படி தவவிரதத்தைப் பூண்ட உடம்பினையும், காமம், கடுஞ்சினத்தைக் கடிந்தவர்களாயும், செற்றம் நீக்கிய மனத்தையுடையவர்களாயும், எல்லா நூல்களையும் ஐயந்திரிபறக் கற்று, அதனைக் கற்றவர்களுக்கு எல்லையாயும் இருப்பவர்கள். அவர்களுக்குப் பின் உருத்திரன். திருமால், இந்திரன், கந்தருவ மகளிர்கள், பதினெண் கணங்களும், முப்பத்து மூவர் தேவரும், பிரம்மாவைச் சிறை யினின்று நீக்கும்படி வேண்டுதற் பொருட்டும், தங்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்தற் பொருட்டும் சென்று சேவிப்பார்கள்.

திருவேரகத்தில், ஓதல், ஓதுவித்தல் முதலிய அறு தொழிலைச்செய்யும் அந்தணர் நாற்பத்தெட்டு பிராயமா மட்டும் பிரமசரிய விரதங்காத்து, ஈரமாகிய உடையைப் புலா உடுத்திக்கொண்டு, நாப்புடை பெயரும்படி அவருடைய மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு, அப்பெருமானை வாசனையுள்ள மலர்களால் அர்ச்சிக்கும் முறைமை கூறப்பட்டுள்ளது.

குன்று தோறாடலில், மலைகள் தோறும் விளையாடுதல் அவருக்கு இயல்பு என்று கூறப்பட்டுள்ளது. எமது ஈழ நாட்டின் கண்ணுள்ள ஸ்ரீகதிர்காம க்ஷேத்திரம், இதனைச் சார்ந்ததென்று அறிஞர் கூறுவர். மலைகளில் வேடுவர்கள் முருகன் திருவுளம் மகிழும்படி குரவைக் கூத்தாடுவார்கள். அவர் வேலனானவன் தொடுத்த கண்ணியை அணிந்து, சிவந்த ஆடையை உடுத்து, அசோகந்தளிரைச் சூடிக் கொண்டு வீற்றிருப்பான். முருகனுக்குரிய நிலம் மலை நாடா கும். அவரே இக்குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வமாகும். இதனாலன்றோ தொல்காப்பியத்தின் கண்ணும், "சேயோன் மேய மைவரை உலகம்" எனக் கூறப்பட்டிருக்கின்றது.

அதுவுமன்றி எம்மையாளுடைய நாயகனாகிய முருகனானவன், அன்பர்கள் ஊர்தோறுமெடுக்கும் திருவிழாக்களிலும், அடியவர்கள் விரும்பி வழிபடும் இடங்களிலும், வேலன் வெறியாடுகளத்திலும், காடு, இளமரக்கா, ஆற்றிடைக்குறை, ஆறு, குளம் முதலிய வேறு பல இடங்களிலும் எழுந்தருளியிருப் பார். மற்றும் அவர் அடியவர் வேண்டிய இடங்களிலெல்லாம் எழுந்தருளியிருப்பார். அவ்விடங்களிலெல்லாம் நீ சென்று முருகனை முகமலரத் துதித்து, கையைத் தலைமேல் வைத்து வாழ்த்தி " கார்த்திகேய ! சிவகுமார ! மலைமகள் மகனே, பகைவர்க்கு யமன் போன்றவனே ! கொற்றவை சிறுவ ! நூலறிபுலவ ! வள்ளி தெய்வயானை காந்தனே ! பெரும் பொருளையுடைய முருகனே ! " என்று அவருடைய புகழைத் துதிப்பாயாக. " நின்னுடைய தன்மை யெல்லாம் முற்ற அளவிட்டறிதல் பல்லுயிர்க்கும் அரிதாகையால் நின் னுடைய திருவடிகளைப் பெறவேண்டும் என்று நினைந்து வந் தேன்'' என்று நீ கருதியதைச் சொன்னாயோ இல்லையோ அவ்வளவிற்குள் அவருடைய ஏவலாளர்கள் நின் குறையை முருகப் பெருமானிடம் விண்ணப்பம் செய்வார்கள். அப்பொழுது துகிலைப் போல் நுடங்கி அகிலைச் சுமந்து திரியும் அருவியையுடைய பழமுதிர் சோலைக்கு உரிய முருகவேள் உன் முன் தெய்வத் தன்மையுடைய இளமைக் கோலத்துடன் தோன்றி, "நீ பயப்படாதே, உன்வரவை நான் முன்னமே அறிவேன்" என்று அன்புடைய மொழிகளைக் கூறி மிகச்சிறந்த பரிசிலும், பிறரொருவரால் எய்துதற்கரியம் மான வீடுபேற்றையும் இக்கருளுவார்.

ஸ்ரீகுகப் பெருமானிடத்தில் பேரன்பு பூண்ட சில அடியவர்கள், நக்கீரரையும் திருமுருகாற்றுப் படையையும் பாராட்டிக் கூறிய சிலவற்றை இங்கு தருவாம். 'கந்தர நுபூதி சொற்றுக் கந்தரநுபூதிபெற்ற' அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழிலே முருகப் பெருமானே நக்கீரருக்கு 'உலகமுவப்ப' என்று அடியெடுத்துக் கொடுத்ததாகக் கூறுகின்றார்.

“வளவாய்மை சொற்பிரபந்த முள கீரனுக் குகந்துன்
மலர்வாயிலக் கணங்கள் - இயல்போதி
அடிமோனை சொற்கிலங்க உலகாமுவப்ப என்றும்
அருளாலளித் துகந்த பெரியோனே'
என்றும்

"மலைமுகஞ் சுமந்த புலவர் சொற் கொண்டு
வழிதிறந்த செங்கை - வடிவேலா "

“கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு
கீரரிசைகேட்ட கிருபைவேளே "

என்றும், மற்றும் அவரருளிச்செய்த கந்தாந்தாதியில் “நக்கீரர் சொற்றித்தித்ததே" எனவும் அருளியிருத்தலை நோக்குவோமாக. இதற்கு உரை வகுத்த வில்லிபுத்தூராழ்வார் தெய்வயானை யம்மையாரின் இன்பானுபாவத்திலும் பார்க்க நக்கீரர் பாடல் முருகனுக்கு இனிமையாயிருந்தது என்று உரைக்கின் றார்.
திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழில் 'எர் கொண்ட பொய் கைதனில்.............. சீர் கொண்ட நக்கீரனைச் சிறைவிடுக் தவா" என்றும், திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழில் – எங்கள் கீரன் மொழியும் பசுந்தமிழெனுஞ் சொல் வேதநிலை தெரியலாம்" எனவும், செய்யூர்ப் பிள்ளைத்தமிழில் “தவிராத வெவ்வினை தவிர்க்கு முருகாறுந் தரித்தாறெழுத் தோதலாம்” எனவும், சிதம்பரசுவாமிகள் "அருணையங்கிரி நாதன் தமிழ்மணமு மலைய கீரன் தமிழ் மணமும்" எனக் கூறியிருத்தலையும், கந்தப்ப தேசிகர் தணிகைச் சந்நிதி முறையில் "சந்த முரு காற்றுப்படையநங்கனடுபோரை மாற்றுப் படையாகிவைகு" மென்றும் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர்,

"நக்கீரர் சொன்ன முருகாற்றுப்படைத் தமிழும்
நல்லருணகிரி நாதன் சொல்
புலமையுறு சித்திரச் சந்த ப்ரவாகமும்
புகுதச் செவிக்கு ளார்த்த புகழாள! "

என்று அருளியிருத்தல் எமக்கு அன்பையும் வியப்பையும் ஒருங்கு தருகின்றன.

கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தினிறுதியில் “பொய்யற்ற கீரன் முதலாம் புலவோர் புகழ்ந்த ஐயற்கெனது சிறு சொல்லு மொப்பாகுமிப்பார்'' என்று துதித்திருத்தலை யாமெல்லோரும் கருத்திற் பதித்து  ''உன்னிய வுன்னியாங் கிங் குதவுவதாகிய" திருமுருகாற்றுப் படையைத், திரிகரணசுத்தியுடன் ஓதி உய்யும் வழியைக் கடைப்பிடிப்போமாக. முருகன் இருக்கும்போது இப்போது நடக்கும் உலக மாறுத லொன்றும் எமக்கு ஒரு தீமையும் செய்யாது. அவன் கருணையே திருவுருவமானவனல்லவா?

"முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே யீசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கா லெப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்
சித்தாந்தம் – 1942 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment