Saturday, May 9, 2020



மதுரை மாநாட்டுப் பேருரைச் சுருக்கம்

[பத்திராசிரியர்]

திரு பு. ர. சுவாமிநாதனர் இளைஞர் மாநாட்டுத் தலைமையுரை: -

இந்த இளைஞர் மகாநாட்டிற்கு அடியேனைத் தலைமை வாக்குமாறு பணித்தமைக்கு யான் நன்றியுடையேன். இச்சமா இததைத் தோற்றுவித்து இதற்குத் தாயாய்த் தந்தையாய் இதை உணர்ந்து வந்த என் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ ஞானியார்'சுவாமிகள் பால் சமாஜத்தினர் நன்றி பாராட்டு முகமாக அடியேனுக்கு இப்பணியைத் தந்தருளினர் எனக் கருதி இத்தொண்டை ஏற்றுக்கொண்டேன். அடிகளுடைய ஆசி தோன்றாத் துணையாயிருக்க என்னை நன்னெறியிற் செலுத்தும் என்ற துணிபோடு இச்சேவையை. ஒல்லும் வகை ஆற்றமுற்படுகின்றேன்.

இப்பாண்டி நாடு சைவ இளைஞர்கட்கு ஆதிகாலந் தொட்டு வீரத்தைப் புகுத்தும் பண்புடையது. "என்றும் இளையாய் அழகியாய்! ஏறூர்ந்தான் ஏறே! உளையாய் என் உள்ளத்துறை" என்று புகழப்பட்ட முருகன் தனது ஆறு படைவீடுகளில் நான்கை இந்நாட்டிலேயே அமைத்துக் கொண்டிருக்கிறான். இந்நாட்டிலே. இப்பதியிலே சைவத்தை நிலைநாட்டிய பெருமை ஓர் இளைஞருக்கே கிடைத்தது. மங்கையர்க்கரசியம்மையார் ''இவர் சிறு குழந்தை யாயிற்றே என் செய்வது" என்று எண்ணிய கருத்தை அறிந்த நம் இளைஞர் சம்பந்தப்பெருமான் அவர்களை நோக்கிப் “பானல்வா யொருபாலன் ஈங்கிவன் என்று நீ பரிவெய்திடேல்... ஈனர்கட் கெளியே னலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே” என்று தைரியம் கூறினார். என்ன வீரச்சொற்கள்! நாமும் இத்தகைய வீரம் பெறவேண்டியது இன்றியமையாததாகும். நாம் தற்போது குழுமியுள்ள தலம் திருஆலவாய். இது தமிழுக்கும் சைவத்திற்கும் நிலைக் களமாக இருந்து வருகின்றது. இப்பாண்டி தேசத்தில் முச்சங்கம்கள், மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், விஜயநகர நாயக்கர்கள், சேதுபதிகள் இன்னோரன்ன அரசினர் ஆண்டு சிறப்பாகத் தமிழிற்கும் சைவத்திற்ரும் ஆற்றிய அரும்பணி நம்மனோரால் என்றும் மறக்கற்பால தன்று, பின்னாளிலே பாண்டித்துரைத் தேவரவர்கள் நான்காம் சங்கம் கண்டு, இடைக்காலக் குறையை நிறைவுபடுத்தி யுள்ளார்கள். விவேகாகந்த அடிகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய சிறப்பு பாஸ்கர சேதுபதியவர்க்கேயன்றோ? நல்லிசைப் புலவர் நக்கீரர், பக்திரசப்புலவர் பரஞ்சோதியார் முதலியவர் இத்தலச்தைச் சிறப்பித்துள்ளனர். காவியங்களிற் சிறந்த சிலப்பதிகாரக்திற்கு உரிய நகராக இருந்து, நாட்டிற்கும் மொழிக்கும் சீரையும் சிறப்பையும் இது தந்து கொண்டிருக்கிறது..
நாம் கூடியிருக்கும் காலம் இவ்வுலகம் முழுமையும் ஒரு பெரும் போரில் ஆழ்ந்து கிடக்கும் காலமாகும். புராதன காலத்தில் சமயம் வேறு, பொருளாதாரம் வேறு, அரசியல் வேறு என எண்ணியிருந்தனர். ஆனால் தற்காலத்தில் இவை மிக நெருங்கிப் பிணைபட்டுக் கிடக்கின்றன. சில தினங்கட்குமுன் ஓர் ஆலயம் சென்றேன். அங்கே விமானப்படை யெடுப்புப் பாதகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சில குருக்கள்மார் அதிற்பங் கெடுத்துக்கொள்வதாகவும் கண்டேன். அரசியலும் சமயமும் என் வளவு நெருங்கி விட்டன. இது போன்றே பொருளாதாரமும் சமயத்துடன் நெருங்கிய தொடர்புடைய தொன்றே. மதிநுட்பம் கிறைந்த கேள்விகட்கும் அதிதீவிர முடிவுகட்டும் உலகில் நாம் வாழ்கிறோம். விஞ்ஞானத்துறையில் பிறர் முடிவைக் கொண்டு, அவர் தகுதிக்கேற்ப நாம் அவற்றை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் சமயத் அறையிலோ ஒவ்வொருவரும் தமது சொந்த முயற்சி அநுபவம் கொண்டுதான் முன்னேற முடியும். சமயப்பற்றுள்ளோர் விலகி விருப்பின் சமயம் அறவே மறைந்துவிடுமோ என்ற ஐயமும் ஏற்படுகின்றது. சமயப் பெரியோர் வழிகாட்டிகளாக இருக்கவேண்டும்.

தற்காலத்தில் சமய அறிவு மிகவும் குறைந்து வருவதைக் காண்கிறோம். முக்கியமாக இளைஞர் கட்குச் சமய அறிவு இன்ன தென்பதே தெரியவில்லை. இதற்குக் காரணம் அவர்கட்குச் சமயத்தைப் பற்றி வீட்டில் கூறுவாரில்லை, படிக்கும் பள்ளியிலும் போதிப்பாரில்லை. பல மதத்தினர் அடங்கிய பள்ளியில் இதைப் போதிப்பது முடியாததாக இருக்கலாம். ஆகையால் வீட்டில் சமய அறிவு கட்டாயம் வளர்க்கப்பட வேண்டும். ஆலயங்கள், மடங்கள் இதற்கு மற்ற இடங்களாகும். சமய போதகர்கள் ஆங்காங்கே நியமிக்கப்பட்டுப் போதனைகள் ஒழுங்கான முறையில் வரையறுக்கப்பட்டுத் தினசரி வாழ்க்கைக்குத் தக்கபடி ஏற்படுத்தப்பட வேண்டும். வாழ்க்கைக்கும் சமயத்திற்கும் தொடர்பில்லை என்ற எண்ணம் அறவே இழிந்து, வாழ்க்கையில் எத்துறைக்கும் சமயநிலை அரண் செய்கின்றது என்று திட்டமாகக் கருதும்படி இச்சமய வகுப்புக்கள் பயன்பட வேண்டும். நம் சமாஜம் இத்தகைய வகுப்புக்கட்குரிய கட்டத்தை வகுக்கலாம், இத்திட்டத்தை ஏதாவது ஓர் ஆலயத்தில் கடத்தி அதன் பயனைக் காணலாம். இவ்வகுப்புக்கள் மாணவர்கட்கு ஏற்படும் ஐயங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் நடத்தப்பட வேண்டும்.

இக்கருத்திற்கு அரண்செய்யும் நூற்கள் சில நமக்குத் தேவை.. தரபூர்வமாக ஒப்புக்கொள்ளக்கூடிய வாழ்க்கை வரலாறுகள்; தேவாரம் முதலிய நூல்களில் அடிக்கடி சந்திக்கும் கிளைக் கதைகள் (Allusions) என்னவென்றும், அவற்றின் சமயக் கருத்துக்கள் (Esoteric meaning) என்னவென்றும் தெரிவிக்கக்கூடிய நூல்கள்; நாம் அவ்வப்போது கொண்டாடும் பல விழாக்கள் பண்டிகை ஏன் ஏற்பட்டன. எவ்வாறு கொண்டாடப் படவேண்டும்,அவற்றின் உட்பொதிந்துள்ள சீரிய கருத்துக்கள் எவை என்பதைத் தெளிவாகச் சொல்லக்கூடிய புத்தகங்கள்; ஆகமக் கருத்துக்களைத் தமிழில் விளக்கக் கூடிய உரைநடை நூல்கள் ஆகிய இவை மிகவும் தேவையாயிருக்கின்றன. நம் சகோதர மதத்தினர் எவ்வாறு நூல்களைப் பயன்படுமாறு வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை உங்கட்குக் காட்டுவதற்காகச் சில நூல்களைக் கொண்டுவந்துள்ளேன். சிறுவர் மனதில் பதியும் வண்ணம் அவை இருப்பதால் நாளடைவில் சமய வளர்ச்சி தானே ஏற்படும்.

தேவார திருவாசகங்களிலிருந்து உயர்ந்த கருத்துக்களடங்கிய - பாடல்களைச் சில குறிப்பிட்ட தலையங்கங்கட்குப் பயன்படுத்தலாம். அருச்சனைக்குச் "சங்கரனே பின்பாதம் போற்றி போற்றி" என்ற 'தேவாரத்தையும், முறையீட்டுக்கு "முன்னையென் வினையினாலே" என்ற பாடலையும், பாவ மன்னிப்புக்கு "முந்தித்தானே முளைத்தானை" என்ற பாடலையும் நாம் உபயோகிக்கலாம். சமயத்தைப் பற்றிய எண்ணங்கள் இளங்காலத்தில் மனதிற் பதிந்தால்தான் பிற் கால வாழ்க்கைக்கு அவை பயன்படும். அக்காலம் (Wax to receive and marble to retain) மெழுகுபோல் பதித்துக் கல்லெழுத்துப்போல் நிறுத்திவிடும் காலமாகும். சிறு குழந்தைகள் பெற்றோர்கள் செய்வதைப் போலவே அநேக விஷயங்களைச் செய்கின்றன. தாய் தந்தையர் கடவுளை வணங்கும்போது, அதைப் பார்த்த குழந்தையும் தானும் அதைச் செய்ய முயல்கின்றது. தோத்தரித்தால் குழந்தையும் தோத்தரிக்கும். வெள்ளிக்கிழமை தோறும் ஆலயம் செல்லும் பழக்கமுடைய குடும்பங்களில் குழந்தைகள் எவ்வளவு ஆவலுடன் அந்நாளை  எதிர்பார்க்கின்றன. குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கும் பெரும் பொறுப்பு பெற்றோர்கட்குண்டு. ஆனால் தற்காலத்தில் சமயக் கருத்துக்களை இளைஞர்கட் கூட்டுவதில் தாய் தந்தையர் பொறுப்பற்றவர்களாகவே இருக்கின்றனர். Religion is primarily caught and not taught (சமயம் ஏற்கப்படுவது கற்கப் படுவதன்று) என்று ஆங்கிலத்தில் ஒரு பெரியார் அழகாகக் கூறுகிறார். ஏற்கப்படுவது பெற்றோர்களிடமிருந்தே. திடிரெனப் பாடம் கற்பிப்பது போல் சமய அறிவு கற்பிக்கப்பட முடியாது. ஓர் ஆலயத்தையோ சமய நூலையோ அறிவதற்கு முன் ஒரு சிறுவன் தனது பெற்றோரையே அறிகிறான், அவர்களுடைய நற்செய்கைகளும் நல் வாழ்க்கையும் அவன் மனதில் பதிந்து விடுகின்றன. பின்னரே அவன் கடவுள் எண்ணத்திற்கு நாளடைவில் வருகிறான். பொதுவாக இந்துக்களும் சிறப்பாகச் சைவர்களும் சிறுவர்களை வளர்ப்பதில் சமயக் கல்வியைப்பற்றிக்  கவலை கொள்வதில்லை. சமய அறிவு குறைந்ததே இப்போரிற்கொரு முக்கிய காரணம் என்பதை உணர்ந்த இங்கிலீஷ் கன்ஸர்வெடில் கட்சியினர் சமயபோதனைக்குப் பள்ளிக்கூடங்களில் முக்கிய ஸ்தானம் தரவேண்டுமென்ற தீர்மானத்தைக் கல்வி இலாகா தலைவர் Richard Butler தலைமையில் நிறைவேற்றினர்.

இனி இளைஞர்கள் எளிதில் செய்யக்கூடிய சில காரியங்களைப் பற்றிப் பேச எண்ணுகிறேன். நாயன்மார் சரித்திரங்களில் முக்கிய பகுதிகளை ஒலியங்கள் மூலமாக அவர்கட்குத் தெரிவிக்கலாம். திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி முதலியவற்றின் கருத்துக்களை ஓவியங்கள் மூலமாக வெளிப்படுத்தினால் அவை நன்றாக மன திற் பதியும் "மாதே! வளருதியோ!....... போதாரமளியின் மேல் இன்றும் புரண்டு...... கிடந்தாள்...... எம்பான......... எம்பாவாய்" என்பதைச் சொல்வதை விடப் படத்தின் மூலமாகப் போதிப்பின் அதன் பயன் வேறு தான். சில பழைய ஆபரணங்கள் ஆயுதங்கள் பறவைகள் புஷ்பங்கள் முதலியன பற்றி நமக்கு ஒன்றும் தெரியவேயில்லை.. அன்றில் ஐம்படை அனிச்சம் முதலியன பற்றிய ஆராய்ச்சி தேவை. மாதிரிகள் செய்து ஆலயங்களில் பொருட்காட்சிச் சாலை நிறுவப்படல் வேண்டும். விவிலிய நூலில் வரும் ஆபரணங்கள் ஆயுதங்கள் மரங்கள் பூக்கள் முதலியவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு நூலாக்கியுள்ளனர். நாமும் இவ்வாறு செய்யவேண்டும். சாத்திரங்களை நாம் எளிதிற் படித்துத் தெரிந்து கெள்ள முடியாத நிலையில் அவை இருக்கின்றன. ஆனால் உண்மையிலேயே நாம் அவைகளைப் படிக்க விரும்புகிறோமா என்பதுதான் கேள்வி. அப்படியிருப்பின் எளிய உரை கடைகள் வெளிவந்திருக்கும். வானொலியில் சாத்திரப் பேச்சுக்களும் இடம்பெற நாம் கிளர்ச்சி செய்தல் வேண்டும். - பொங்கல், பிள்ளையார் சதுர்த்தி, கலைமகள் விழா, புது வருடம் போன்ற நாட்களை ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்திக் கொண்டு உயர்ந்த கருத்துக்கள் எழுதப்பட்ட கடிதங்களை மாற்றிக்கொள்ள லாம். பெரிய புராணம் முதலிய வரலாறுகளை உண்மை நோக்கத் கடன் படித்து அடிப்படையான கருத்துக்களை உணர்ந்து அவற்நின்படி நடக்க வேண்டும். சமயப் பற்றுடையவர்கட்குத் தமிழ்க் கல்வி இன்றியமையாதது. பல்கலைக் கழகப் பட்டம் பெற்ற வித்வான்கள் பட்டம் பெற்ற பின்பு மேன்மேலும் கற்பதற்கு மக்கள் கொள்வதில்லை யென்று எனது குருநாதர் அடிக்கடி கூறுவதுண்டு. இந்நிலை இப்போது விரைவில் மாறி வருகிறதென்பதைக் கேட்க அவாவுடையேன். இயல் இசை நாடகம் இலக்கணம் இலக்கியம் சாத்திரம் ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்றில் சிறப்பறிவு பெற வேண்டியது அவசியம். பழைய காலத்தில் ஒவ்வொருவர் ஒரு நூலில் மிக வல்லுநராக இருந்து அந்நூலில் எத்தகைய ஐயத்தையும் நீக்கும் ஆற்றலுடையவராயிருந்தனர் என்று நாம் கேள்விப் படுகிறோம். அத்தகைய பெரியார்கள் தற்காலத்திற்கும் அவசியம். - நம் ஆலயத்தில் விநாயக மூர்த்தம் ஆறுமுக உருவம் நடராஜ விக்கிரகம் சோமாஸ்கந்தமூர்த்தி முதலிய உருவங்கள் ஏன் ஏற்பட்டன அவற்றின் தத்துவங்கள் என்ன என்ற விஷயங்கள் இளைஞர் கட்குக் கட்டாயம் தெரிய வேண்டியதொன்று. சில உருவங்களைப் பற்றிப் பிற நாட்டினர் ஒவ்வாத சில கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அத்தகைய குறைகளைச் சான்றுகளுடன் மறுத்து உண்மையை நிலைநாட்ட வேண்டும்.

சைவப் பெரியார்களுடைய வாழ்க்கை தொண்டின் பாற்பட்ட தாகவே இருக்கின்றது. நமது வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டியதும் தொண்டு. மேலே நாம் செய்யவேண்டிய தொண்டுகளை ஆராய்ந்தோம். பல தீர்மானங்களை நிறைவேற்றி ஒன்றும் செய்யாதிருப்பதைவிட, இரண்டொரு தீர்மானங்களை நிறைவேற்றிச் செயலிலும் நிறைவேற்றி முடித்தல் நலம். நமக்குள் இந்த கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு முயற்சி செய்வோமாக.

மங்கையர் மாநாட்டுத் தலைமையுரை
திரு. ஈ. த. இராஜேசுவரியம்மையார்: -

ஒன்றுக்கும் போதாத என்னை இம்மாதர் மாநாட்டின் தலைமைப் பதவியில் இருத்திய உங்கள் அன்பிற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில ஆண்டுகளாக மாதர் மாநாடு தனியே வேறு கூடும் வழக்கம் நின்று போயிருந்தது. மாதரை மறுபடியும் தனியே வேறு பிரிக்கவேண்டுமா என்ற கேள்வியே முதன் முதலில் எனது மனதில் எழுந்தது. அங்கயம் கண்ணி முதல் மங்கம்மாள் வரையில் பெண்ணரசின் பெருமை வளர்த்த மதுரை மாநகரத்தில் சமாஜம் கூடுவதால் சக்திபீடம் மறு படியும் வீறுபெற்று எழுகிறது போலும்.

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்பது மட்டுமன்று சைவத்தின் பெருமை. பெண்கள் கையில் வளர்ந்த பெருமையும் சைவத்திற்குண்டு. தமிழ்நாட்டிலே சைவத்தைப் பற்றி முதல் முதல் எழுதிய பெரியார் யார்? சமய குரவர்களுக்கு முன்பாகச் சங்க காலத்திலேயே சைவத்தின் உயிர் நிலையான உண்மைகளை உயிர் உருக்கும் பாடல்களாகப் பொழிந்தவர் காரைக்காலம்மையார் அன்றோ? யாப்பருங்கல விருத்தியுரையில் வரும் குறிப்பொன்று அம்மையார் சங்க காலத்தவர் என்பதனை நிலைநாட்டு கின்றது. மூவர் முதலிகளும் பெண்ணருளால் பேறுபெற்றவரே. திலகவதியார் இல்லையானால் திருநாவுக்கரசு நாயனார் எங்கே? " தம்பியார் உளராக வேண்டும் என வைத்ததயா, உம்பருலகணைய் வுறும் நிலை விலக்க... தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்'' என்ற படி தம்பிக்கென வாழ்ந்தவரன்றோ அந்த அம்மையார்? பெற்றோர் உற்றோர் இன்றித் தனியே வாழ்ந்தும், தம்பியாரை அந்நாளைய அறிவுலகின் தலைவராக ஆக்கிய பெருமை அவ்வம்மையாருடையதே யாகும். எந்த தம்பிக்கென வாழ்ந்தாரோ அவரும் இவரைத் தனியே விட்டுச் சென்றார். அப்போதும் மனம் கலங்காமல் செம்மை நலம் திகழும் சிவத்தொண்டே செய்து உடலும் உயிரும் வாழ ஒப்பற்று வளங்கினார். அதுதானோ ''அடியேன்பின் வந்தவனை ஈண்டு வினைப் பரசமயக்குழி நின்றும் எடுத்தாளவேண்டும்" எனக் கடவுளை வேண்டினர். உறுகயிறூசல் போல ஒன்று விட்டொன்று பற்றிய நெஞ்சனராக மருணீக்கியார் சூலை நோயால் வாடினார். தமக்கையார் நினைவு வந்தது. ஏன் வந்தது? ஒரு துணை இல்லாதபோதும் உறுதிப்பாட்டிற் குறையாது உண்மைத்தொண்டாற்றிய அம்மையாரின் அமைதி விளக்கும் திருமுகமும், அமுதம் நிறைந்த சொல்லும், அன்பு நிறைந்த அருந்தவமும் நினைவிற்கு வந்தன. அப்பெண்மணியையே குருவாகக் கொள்ள விதுவிதுப்புற்றார். இரவென்றும் பாராது பொறுத்தற்கரிய நோயிலும் ஓடோடியும் வந்தார். திலகவதியாரும் குருவாகி ஆட்கொண்டார். என்ன தீக்ஷை. சடங்கு, உபதேசம் நடந்தது? திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார் பணிந்தேற்றார்.'' “திலகவதியார் திரு அலகும் திருமெழுக்குத் தோண்டியுங் கொண்டு, ஆறணிந்தார் கோயிலினுள் அடைந்தவரைக் கொடுபுக்கார்''. இவ்வாறு பிறமதத்தினரைச் சைவராக்க நீங்கள் முன்வருவீர்களா? " விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகும்'','. நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே... புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு...'' என்று பல பாடல்களில் இத் தொண்டினை வற்புறுத்திய அப்பர் பெருமான் தம் ஆண்'கோலத் திற்கேற்ப உழவாரப்படைதாங்கி ''என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்று செயலில் காட்டிவந்தார். அப்பரைப் பின்பற்றிய அப்பூதியடிகளும் மேற்கொண்டது உயிர்த் தொண்டாம் சிவத் தொண்டே. சமுதாயத் தொண்டிற்கு இந்துமதத்தில் இடமில்லை என்னும் மேனாட்டின் வாயைப் பூட்டச் சைவத்திற்கு வாயளித்தவர் எங்கள் திலகவதியாரேயன்றே?

மங்கையர்க்கரசியார் இல்லையானால் ஞானசம்பந்தப் பெருந் தகையார் பெருமை எங்கே? இந்தக் குழவிப்பெருமானது சிவம் பெருக்கும் பாடல்களைப் பற்றிக் கேட்டதும் தாயே போல மன முருகி நின்ற சைவ அன்பை இவரிடத்தன்றி வேறெங்கேனும் கதையிலேனும் கேட்டதுண்டா? பெண்ணிற்கு வீடுபேறில்லை என்ற கொள்கை பரவியபோது பெண்ணின் நெஞ்சம் எரியாதா? கடவள் நெறியில் பெண்ணுரிமை தேடி வைத்த பெருமை மங்கை யர்க்கரசியார்க்கே உண்டு. இப்புரட்சியைச் செய்ய முன் வந்தவர் அந்த அம்மையாரேயாம். என்ன புரட்சி? அன்புப் புரட்சி, தன் அகமுடையான் வாழத் தன் அரசு வாழ உலகம் வாழ அன்பினால் செய்த புரட்சியேயாம். இஃதிவ்வாறிருக்க, எண்ணாயிரவர் கழுவேறினர் என்பதெற்றுக்கு? வரலாற்று நூல்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லையே! ஞானசம்பந்தப் பெருந்தகையார் இப்புரட்சி வெற்றிபெறுமாறு செய்து, உளங்குளிர்ந்த போதெல்லாம் உவந்து வந்து பாடி, இயற்கையாம் கோயிலிலே, இன்ப அன்புருவான கடவுளைப் பெண்ணின் பெருவைப்பாகப் பாடி, உலகமுழுதும் குழவிக் கூத்தாடி வந்தார். உலகைத் துறந்து ஓடாமல், உலக வாழ்வையே கடவுள் வாழ்வாக நடத்தும் வழியைத் தனியிளங் குழவியார் மங்கையர்க்கரசியார் வாழ்விலேயே கற்றுத் தெளிந்தார்.'மங்கை யர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்...... தெய்வப்பாவை'' என்று சேக்கிழார் வாயார வாழ்த்துகிறார்.

இம்மதுரையிலே மூர்த்தி நாயனார் ஆண்டார். ப்ளேடோ என்ற கிரேக்க ஞானி அரசனால் உலகம் சீர்படும் எனப் பேசியுள்ளார். அந்த உட்கோளே மூர்த்தி நாயனார் வரலாற்றின் உட்கோளாகும். தூய்மைக்கு அறிகுறியாய் நிலையாமையை வற்புறுத்தி ஒற்றுமைக் காட்சியைத் தந்துதவும் திருநீறும், அன்பின் அறிகுறியாம் சிவமனியும், உண்மை அகத்துறலில் விளைந்த சிவத் தொண்டால் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராம் பெருந்தன்மை சான்ற அந்தணச் செல்வமுமே அரச கோலமாகக் கொண்டவர் மூர்த்தி நாயனார். இவர் அரசர் குடியிற் பிறவாமை ஒன்றே சாதிச் சழக்கை ஒழிக்கின்றது. இவருடைய மும்மைக் கொள்கை அரசியலின் உயிரியல்பை விளக்குகின்றது. இத்தகைய உயரிய உட்கோளை நன்கறிந்தவர் பாண்டிய மன்னர்கள். பழியஞ்சுவது பாண்டி நாட்டியல்பு. கோவலனைக் கொன்ற பழிதீரத் தன்னுயிரையே கொடுத்து வளைந்த கொடுங்கோலைச் செங்கோலாக்கியவன் நெடுஞ்செழியன். தீமை செய்தான் போலச் செங்கை குறைத்தான் பொற்கைப் பாண்டியன். பழியஞ்சின திருவிளையாடலும் பாண்டி நாட்டில் நிகழ்ந்ததே. பாண்டியர் சிறந்த உட்கோளை, பாண்டியர் வாயாற் கேட்கும் பெருமை நம் தமிழ் நாட்டிற்கே உண்டு. “நகுதக் கனரே...... சினங்கெழு வேந்தரை, அருஞ்சமஞ் சிதையத் தாக்கி - முரசமொடு, ஒருங்ககப்படே எனாயிற் பொருந்திய, என்னிழல் வாழ் நர் சென்னிழற் காணாது, கொடியன் எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங்கோலேன் ஆகுக, ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் தலைவனாக, உலகமொடு நிலை இயபலர் புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைக என் நிலவரை"       (புறநானூறு 72) என்ற பாடலைப் பார்க்க.

புராணக் கதையென்றால் பலருக்கும் இந்நாளில் சிரிப்பும் வெறுப்பும் உண்டாகின்றன. கதையின் உட்கோளையே நாம் ஆராய்தல் வேண்டும். கதைகள் பலபல வழியாகப் பலபல தலைமுறையாக வழங்கி வந்தவை. வாய் வழியாக வந்தபோது வேண்டியவர் வேண்டியவாறெல்லாம் திரித்துக் கூறியிருப்பர். புறநிலையை ஆராய்த லாகாது. ''முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள், “முப்புரமாவது மும்மலகாரியம்'' என்று திருமூலர் முன்னரே கூறியுள்ளார். பெரும் புரட்சியாளரான ஷெல்லி முதலிய பாவாணர் எல்லாம் மேனாட்டில் வழங்கும் கிரேக்கக் கதைகளின் உட்கருத்தை மட்டும் பாராட்டிப் பாடுதலைக் காண்க.

மதுரைமா நகரமே ஆண்டவன் அருளிய 64 திருவிளையாடல்களுக்கும் இடந்தந்தது. திருவிளையாடல் முதற்பகுதியில் வானவரோடு தொடர்பு கொள்கின்ற கதைகள் பல வருகின்றன. அருள் அம்மை இங்கு பிறக்க ஆண்டவன் தமிழுலகிலே அவளை மணந்து ஆண்ட இடம் மதுரையேயாம். அருளும் அறிவும் வேர்கொண்டு அனைத்து வகை உலகமுமாய்ப் பரந்து நின்ற உண்மை இங்குப் புலனாகின்றது. தமிழ் மக்கள் உலகத்திற்கு வழிகாட்டிகள் என்பதே இதன் படிப்பினை. இவ்வாறு நாகரிகம் பிறந்த நம் நாடு இன்று பின்னணியில் பீடிழந்து கிடப்பது நமக்குப் பெருமை யாகுமா? தமிழர்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறி விட்டார்கள் என்பதன்றோ இதனால் விளங்குகிறது. ஆண்டவன் அம்மையை மணந்ததும் இயற்றியருளிய திருவிளையாடல் குண்டோதரனுக்கு அன்னமிட்டது. பசியின் வடிவமே குண்டோதரன். பசிப்பிணி ஓட்டுதலே அரசர் முதற் கடமை. Freedom from want என்று ரூஸ்வெல்ட் பெருமகனார் முழங்கவில்லையா? உயிர்களை இறைவன் வீற்றிருக்கும் திருக்கோயில்களாகக் கொண்டு மாகேசுவரபூசை செய்வதினும் சிறந்த சிவத்தொண்டு எது?

எழுகடலழைத்தல், கடல்சுவற வேல்விடல், மேருவைச் செண்டாலடித்தல், கடலைவற்றச் செய்தல், நான் மாடக் கூடலாக் கல் முதலாகப் பின்வரும் திருவிளையாடல்களின் உட்கோள் என்னை? நீர்வளத்தைப் பெருக்கிப் பண்டையோர் நினைவை நிலைநாட்டிப்புதுமையும் பழமையும் தொடர்பாய் விளங்க நாட்டை நன்கு காத்து இந்நாட்டின் இயற்கை எல்லைகளாம் இமயமலைக்கும் கடலுக்கும் இடையே உள்ள உலகை வென்று ஒற்றுமையை நிலை நாட்டி வானளாவ வாழ்ந்து கடல்கோளையும் தடுத்துச் சிறந்த கோட்டையாம் நான்மாடக் கூடலைக் கட்டி அரசாண்ட அரசியற் சிறப்பே அத்திருவிளையாடல்களின் அரிய கருத்தாகும். உடலை வளர்ப்பதோடு உயிரை வளர்க்கும் மெய்யுணர்வை ஊட்டவேண்டி ஆண்டவன் வேதத்திற்குப் பொருள் அருளிச் செய்வதோடு முத்தமிழ் நெறியையும் வளர்த்து உலகை வாழ்விக்கின்றான். வெள்ளி அம்பலக் கூத்தாடிக் கூத்துத் தமிழை வளர்க்கின்றன். இயற்றமிழ் வளர்க்கும் நிலையைப் பிற்பகுதியிற் காண்போம். இசையை வளர்ப்பதும் ஈசன் திருவுள்ளமாம். விறகு விற்றல், திருமுகம் கொடுத்தல், பலகை இடல், இசைவாது வெல்லல் முதலிய திரு விளையாடல்கள் இவ்வுண்மையை வற்புறுத்துகின்றன. தமிழிசை இல்லையானால் தமிழ் நாகரிகம் எங்கே? பாட்டை வளர்த்த பாண் பெரு மக்களைத் தீண்டாதவர்கள் எனத் தெருவில் ஓட்டிய நாளோடு தமிழர்களது கலைவாழ்வு தலைசாய்ந்தது.
இவ்வாறு இறைவன் வளர்க்கும் இயற்கை வாழ்விற்கெதிரே செயற்கை நாகரிகமும் பரவுகிறது. Robot (ரோபோ) என்று ஆங்கிலர் கூறும் யந்திரம் மனிதனைப் போலவே இயங்குகின்றது. Mechanical cows என்ற யந்திரப் பசுக்கள் பால் தருகின்றன. இத்தகைய செயற்கை வாழ்வு அன்பை உறிஞ்சி உலகை யழிக்கும் என்று இன்றைய பெரும்போர் இடித்துரைக்கின்றது. இதை யழிப்பதே அறம். மாயப்பசு, மாயயானை, மாயநாகம் முதலியவற்றை அழிப்பதே இறைவன் திருவிளையாடலாகின்றது. செயற்கை வாழ்வை வெல்லுவதே சைவமாம். செயற்கையாய் வாழ்வோரே இயற்கையை எதிர்ப்போர். இவர்களை அடக்க, இயற்கை உண்மைகளைத் தெள்ளத்தெளிய உணீர்ந்து, இயற்கை யன்னையின் இன்பமடிமீது இளங்குழவிகள் போலத் தவழும் சித்தர் களுக்கே இயலும். இயற்கை வாழ்வு பெண்கள் இரத்தத்தில் ஊறியிருக்கிறது. ஆண்டவன் சித்தனாக வந்து அட்டமாசித்தியைப் பெண்களுக்கே உபதேசித்தான்.

பெண்களெல்லாம் விஞ்ஞானப் புலவராயிருந்தால் இப்பெரும் போர் தோன்றியே யிராது. செயற்கை வாழ்வில் யானை மக்களைக் கொல்ல வருகிறது. இயற்கை வாழ்வில் கல்லானையும் கரும்புண்டு களிக்கின்றது. இயற்கை வாழ்வையும் செயற்கை வாழ்வையும் சைவம் சமணம் என்ற இருவேறு மதங்கள் மேல் வைத்துக் கதை கூறி வருவது ஏனோ அறிகிலோம்.

ஆண்டவன் அருள் அரசர்க்கு மட்டும் பொங்கி வழிவதன்று. ஏழைப் பெண்களுக்கு ஆண்டவன் அருள் புரிவதை மாமனாக வந்து வழக்குரைத்தது, அங்கம் வெட்டினது, வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்தது முதலிய திருவிளையாடல்களிற் காணலாம். இவை பெண்களாகிய நமக்குப் பெரிதும் ஊக்கம் ஊட்டுவனவாம். இரசவாதம் செய்த திருவிளையாடல் உலகிற்கே ஒரு பெரிய நற்செய்தியை அறிவிக்கின்றது. உலக வாழ்க்கையின் நெருக்கடியில் பொது மகளாய்ப் பிறந்த ஒரு பெண், அன்பே உருவாய் ஆண்டவன் வெறிகொண்டு அழகு வழிபாட்டில் தலைப்பட்டு இறைவனைக் கண்டு களிக்கின்றாள்; போலிக் கோலத்தைக் கண்டு மயங்காமல் உண்மை அன்பினைக் கண்டே ஆண்டவன் உவந்து உவந்து அருள் செய்கின்றான். கிறிஸ்து நாதர் ஆட்கொண்டருளிய Mary Magdalene கதையும் இவ்வுண்மையை வற்புறுத்துகின்றது. சாதியும் சமயமும் மாண்டொழிய உண்மைக் கடவுளனுபவம் ஒளி விடுகின்ற இடம் ஈதேயாம்.

மக்கட் கூட்டத்தில் சிலர் தீய வழியிற் புகுவது சமுதாய வாழ்க்கையிலுள்ள சீர்கேட்டினாலாகும். கொள்ளை நோய் பரவிய இடத்தில் தூயராய் வாழ்வோரும் பீடிக்கப்படுகின்றனர். சிறைச் சாலைக்குப் பதிலாக மனோ மருத்துவசாலை வேண்டு மென்று இந்நாளில் வற்புறுத்தப் படுகின்றது. ஆண்டவன் படிப்படியாக உயரிய அனுபவங்களில் நம்மை அழுத்தித் தீமையை மறக்கச் செய்து நல்லவர்களாக்குகின்றான், மனமாற்றத்தை உண்டு பண்ணுகின்றான். "ஏதுபிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கித் தீ துபுரியாத தெய்வத்தின்'. நீது தழைக்கின்ற" ஆறு அது. ஒரு பிறவிலேயே இப்பெருமாற்றம் வரலாம். மாபாதகம் தீர்த்த திருவிளையாடலில் இப்பேருண்மைகள் விளங்குகின்றன.
மக்கள் மட்டுமா இறைவன் பிள்ளைகள்? இயற்கை வளர்ச்சி முறைப்படி பறவைகளும் விலங்குகளும் மூத்த பிள்ளைகளாம். நாரைக்கு முத்தி கொடுத்தது. கரிக்குருவிக்கு உபதேசித்தது, பன்றிக்குட்டிக் கருளியது முதலிய திருவிளையாடல்கள் இறைவனருள் உலகம் முழுவதும் பொங்கி வழிவதை உணர்த்துகின்றன. 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'' என்று பாடும் தமிழர் உயிர்களனைத் தையும் ஒரு குலமாகவே கொண்டனர்.

இயற்றமிழை வளர்ப்பதும் இறைவன் பொறுப்பே என்பது திருவாலவாய்க் காண்டத்தின் உள்ளுறையாம். அநுமன் சீதையிடம் மதுரமொழி ஒன்றிற் பேசியதாக வால்மீகி கூறுகிறார். இம் மதுரமொழியே தமிழ். இம்மதுரம் வளர்ந்த நகரே மதுரை. குருவியும் விலங்கும் மக்களும் கடவுளும் பேரின்பமாகி ஒருங்கு திரண்ட இனிமை, அரச வாழ்வில் மக்கட்கூட்டம் பசிப்பிணி நீங்கி ஆடல் நெறி பாடல் நெறியில் வாழ்ந்து இயற்கையின் போக்கை யெல்லாம் இறைவன் திருவிளையாடலாகக் காணும் இனிமை. அஞ்சா நெஞ்சின் அமைதி நிறைந்த இனிமை. அனைவர்க்குமாய்ப் பொங்கும் அருளமுதின் இனிமை. இவையே தமிழ். இத்தகைய தமிழுக்குத் தனிப்பெருங் கடவுளும் அடிமையாகிறார். உலகைத் தாங்கும் திருமாலின் கதை உடலை வளர்க்கும் கதை; சங்கப் பலகையைத் தாங்கும் சிவபெருமான் கதை அறிவை வளர்க்கும் கதையாகும். தமிழ் என்றால் வெறும் பேச்சன்று, பேச்சின் உள்ளே விளங்கும் பெருங் கருத்தின் ஆழமே தமிழாகும். கருத்தென்றால் காற்றாய் மறைவதன்று, வாழ்க்கையின் விளைவாய் வளர்ந்து திரண்ட மாபெருங் கடவுட் காட்சியே தமிழாம். இத் தகைய தமிழ் எங்கே? அன்றைய உயர்வு என்ன ! இன்றைய தாழ்வு என்ன ! அங்கயற்கண்ணியே அருளல் வேண்டும்.

சிறந்த பாடல்கள் கடவுள் வாக்கே என்ற நம்பிக்கை தொன்று தொட்டு மக்களிடையே பரவி வந்துள்ளது. பாட்டின் உண்மைத் தன்மையை இது நன்கு விளக்குகின்றது. எங்குமாய் நிற்கும் உண்மை அறிவிலே பாவலன் தோய்ந்து பேரின்பமாய் மாறி வருகின்றபோது எழுகின்றனவே உண்மைப் பாடல்களாம். அங்கே ஊற்றெடுத்துப் பொங்குவதெல்லாம் கடவுட் களிப்பேயாம். இறையனார் அகப்பொருளும், 'கொங்கு தேர் வாழ்க்கை'' என்ற பாடலும், கடவுட் பாட்டெனப் பேர் பெறுவது வியப்பன்று. தரு மிக்குப் பொற்கிழி யளித்த திருவிளையாடலின் உட்கோள் என்ன? எளியவனுக்கு நாட்டின் உடைமையைப் பங்கிட்டுக் கொடுத்த வரலாறே இது. வறுமையினின்றும் கலை புலகில் விடுதலை வாங்கித் தர ஆண்டவனே புறப்படுகின்றான். மணிவாசகப் பெருமானும் சௌந்தரசாமந்தனும் பாண்டி நாட்டுப் பணத்தை மக்களிடையே பங்கிட்டுக் கொடுத்து உடலையும் உயிரையும் வளர்த்தனர். நடமாடும் கோயில் படமாடும் கோயில் வழிபாடுகள் இவ்வாறு பல திருவிளை யாடல்களால் வற்புறுத்தப் பெறுகின்றன.

முக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என்பது தமிழனுடைய தனிப் பெரும் வீறு. அறியாமை யாரை விட்டது? தெரியாது தொட்டாலும் தீ சுட்டே தீரும். நக்கீரனார் பின்னே ஆண்டவனருளால் காளத்தி அனுபவமும் கைலை அனுபவமும் பெறுகின்றார். இறையனார் அகப்பொருளுக்கு மெய்யுரை காண்கின்றார்.. இவைக ளெல்லாம் பாட்டுலக உண்மைகள். மெய்யுரை விளக்க வந்தது மூங்கைப் பிள்ளை, விளக்கும் முறை கண்ணீர் வார்ந்து மெய்ம் மயிர் சிலிர்த்து நிற்றல். இதனால் விளங்குவதென்ன? உண்மைய பாடலின் கருத்திலே ஆழ ஆழ நாம் இளங்குழவியாக மாறி, அனு பவத்தில் மூழ்கி, ஊமையாகி, கண்ணீர் வார்ந்து மயிர் சிலிர்த்துப் பேரின்பப் பிழம்பாக நிற்கிறோம். உண்மைக் கவியைத் துய்த துணரும் வழி ஈதே என்பதை இத்திருவிளையாடல் தெளிவுறுத்தி கின்றது.

அறிவு உலகையும் கடந்து மெய்யான உணர்வு உலகில் புகுதல் வேண்டும். மணிவாசகனார் மெய்யுணர்வு பெற்ற மேலோர். ஆநந்த அனுபவத்தில் மூழ்கியவர். தமிழேயானவர். அவரை அவ்வாறாக்கியவர் மதுரையும் அரசனும் ஆண்டவலுரையும் அரசனும் ஆண்டவனுமேயாம். அவர் எதிரே நரியும் பரியாம், சீவன் சிவன் ஆம். அவர்க்குப் பின்னே பரியும் நரியாம். அருள் வெள்ளம் பொங்கும் அன்பர் ஒளியில் அனைத்தும் ஆண்டவனாய் மாறும். எங்கும் சிதம்பரம் பொங்கி வழிகின்ற உண்மை, பிரம்பால் அடித்தது போல் அங்கு அனைவர்க்கும் விளங்கும்.

தனி உயிருக்கு ஒரு சிறப்பு உண்டெனினும், அது உயர்ந்து உய்வது உயிர்களிடையேயாம். சேர்ந்து வாழ்வதிலேயே அதன் அன்பு சிறக்கின்றது. விரிகின்றது. இந்திரன் முதலியோரும் இன்பம் துய்ப்பது வானுலகிலானாலும், தீங்கு நேர்ந்த காலத்தில் தொண்டு புரிய இவ்வுலகிற்கே வரவேண்டி யிருக்கிறது.  ''புவனி யிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்றோம் அவமே... என்று நோக்கி...... திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்...'' என்பது திருவாசகம். இம்மண்ணுலகையே சிவலோகமாகக் கண்டவன் வரகுணபாண்டியன். "ஓடும் பல் நரி ஊளை கேட்டரனைப், பாடின என்று படாம்பல அளித்தும், குவளைப் புனலில் தவளை அரற்ற, ஈசன் தன்னை எத்தின என்று, காசும் பொன்னும் கலந்து தூவியும்........ காம்பவிழ்த் துதிர்ந்த கனி உருக் கண்டு, வேம்புகட்கெல்லாம் விதானம் அமைத்தும்...... பரிவுடன் கொடுத்த, பெரிய அன்பின் வரகுணதேவன்." என்று பட்டினத்துப் பிள்ளையார் புகழ்வதி, அனைத்தையும் சிவமாக்கள் காணும் அவனுடைய பெருமையாலேயாம் .'மாதர்ப்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்பாடீ.... காதல் மடப்பிடியோடும் களிறுவருவன கண்டேன்'' என்பதன்றோ அப்பர் பெருமான் திருவையாற்றிற் கண்ட கைலைக் காட்சி. ஆணையும் பெண்ணையும் அப்பூதும் அம் மையுமாகக் காணுதலன்றோ சைவர்கள் காண விரும்பும் கைலைக் காட்சி,

மக்கள் ஒன்று சேர்ந்து வாழும்போது ஒவ்வொருவரும் தத்தம் கடமையைச் செய்தல் வேண்டும். அல்லாக்கால் மக்கட் கூட்டம் வாழமுடியாது. கடமை தவறினால் கடவுளும் கட்டுக்கு அடங்குதல் வேண்டும். வைகையில் உடைப்பு. கரையை அடைக்கக் கிழவியும் ஒத்துழைக்கிறாள், ஆளை அனுப்புகிறாள். வேலை செய்'' யாத ஆளை அரசன் அடிக்கிறான். ஆண்டவனாகிய ஆள் அடியை ஏற்றுக் கட்டுப்பாட்டுக்குட்படுகின்றான். சைவ சித்தாந்த முத்தி நிலையிலும் சமத்துவம் கொழுந்துவிட்டெரிகிறது.

இவ்வாறு பல பல உண்மைகள் இம்மதுரை மாநகரத்தைப் பற்றி எழுந்த கதைகள் வழியே வளர்ந்து ஓங்கி வந்தன. பாரில் எங்கும் பட்டினியில்லாதபடி பாடுபடுவது பைந்தமிழ் வாழ்க்கை. சிறுமைப்படுத்தும் வறுமையை நீக்குவதே சிவப்பெரு வாழ்க்கை. ஆடல் நெறியும் பாடல் தெறியும் அருந்தமிழ் வாழ்வு. தமிழிசையிற் களிப்பதே தனிச் சிவவாழ்வு. உயிர்த்தொண்டென்பதே சிவத் தொண்டாகும். பெண்ணின் பெருமையே பெருந்தமிழ்ப் பேறு. தண்ணருள் பெறுவதே தகுசிவப்பேறு. பெண்வாழப் பிறந்தது நாம் பேசும் தமிழ்மொழி, பெண்ணொடு திகழ்வது நாம் பேணும் சிவப்பொருள். சைவமும் தமிழும் வளரவேண்டுமானால் இத்தகைய கருத்துக்கள் நம் வாழ்க்கையாகவே வெளியாதல் வேண்டும். தமிழும் சைவமும் நூல்களல்ல. உயரிய வாழ்க்கையின் உண்மை வடிவங்களேயாம். வாழ்க்கைத் துணைவியராயிருக்கும் மாதரே இத்தமிழ் வாழ்க்கையாம் சிவ வாழ்க்கையை உலகில் வாழ்ந்து காட்டி உலகை உய்விக்கவேண்டும்.

சித்தாந்தம் – 1944 ௵ - மார்ச்சு, ஏப்ரல் ௴


No comments:

Post a Comment